நான் பிறந்து வளர்ந்த ஊரான மடிப்பாக்கம்
குக்கிராமமாக இருந்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். பள்ளிப் புத்தகத்தில்
ஒரு பாடம் இருந்தது. எனது ஊருக்கே மேற்கே மலையிருக்கிறது. தெற்கே ஆறு இருக்கிறது
என்று வரிகள் இருந்ததாக ஞாபகம். மடிப்பாக்கத்துக்கு மேற்கே மலை இருந்தது.
பல்லாவரம் மலை. தெற்கே ‘மடு’ என்று சொல்லப்படக்கூடிய சிற்றாறு இருந்தது. கிழக்கே
கழிவுவெளி என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீட்சி. பள்ளிக்குச்
செல்லும்போது சாலைகளின் இருபுறமும் சாமந்திப்பூக்கள் பூத்துக் குலுங்கும். என்
வீட்டுக்கு எதிரே சுமார் இருநூறு மரங்கள் கொண்ட மாந்தோப்பு கூட இருந்தது. கோடை
எங்களை சுட்டெரித்ததில்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குறைந்தது ஒரு வேப்பமரம்.
வீட்டுக்குப் பின்னால் நிச்சயமாக புளியமரம். கிணறுகளில் பத்தடியில் இளநீர்
சுவையோடு குடிநீர். வெயில்காலங்களில் கூட அதிகபட்சம் இருபத்தைந்து அடிகள் வரைதான்
தண்ணீர் வற்றும். ஓரிருவரிடம் மட்டுமே ‘பைக்’. வெயில்கால இரவுகளில் காற்றுக்காக
சாலைகளுக்கு வந்துகூட பாய்விரித்து படுத்துக் கொள்ளலாம். ஊருக்கே தெற்கே கண்ணில்
படக்கூடிய எல்லை வரை பசுமை. எண்ணிக்கையிலடங்கா பாசனக் கிணறுகள். தென்மேற்கில்
சவுக்குத்தோப்பு. மிகப்பெரிய பரப்பளவில் ஓர் ஏரி. நிறைய குளங்கள். குட்டைகள்.
இரவுகளில் சிலவேளைகளில் நரி ஊளையிடும். நினைவுப்படுத்திக் கொண்டே போனால் பட்டியல்
‘பழைய ஏற்பாடு பைபிள்’ அளவுக்கு நீளும்.
இன்று மடிப்பாக்கம் சென்னை மாநகராட்சிக்குள்
இணைந்துவிட்டது. அன்றிருந்த விஷயங்களில் இன்று ஓரிரண்டு கூட இல்லை. இந்த
ஓரிரண்டில் மனிதர்களும் அடக்கம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன ரெஸ்டாரண்டுகள்.
குடியிருப்புகள். வீட்டுக்கு ஒரு கார். இரண்டு பைக். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ்.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். ஒரு நகரத்துக்குள் என்னென்ன இருக்க வேண்டும் என்கிறார்களோ,
எல்லாமே இருக்கிறது. பாதாள சாக்கடை மாதிரி இல்லாத அடிப்படை விஷயங்களைப் பற்றி
யாரும் மெனக்கெடுவதில்லை. அப்போது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்குமான
வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். ஒரு பூர்விகவாசி என்கிற
முறையில் என் இதயத்தில் இம்மாற்றங்கள் எம்மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது
என்பதை எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த மாற்றத்தை
முன்னேற்றம் என்றோ, வளர்ச்சி என்றோ பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய சூழலில் நான்
இல்லை. இத்தனைக்கும் இங்கே அரசின் சிறப்புத் திட்டம் எதுவோ, புதிய தொழிற்சாலைகளோ
எதுவும் அமைக்கப்படாமலேயே அசுர வளர்ச்சி. மடிப்பாக்கத்தில் இடம் மலிவு. குடிநீர் நன்றாக
இருக்கும் என்கிற மக்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாக இத்தகைய மாற்றம்
சாத்தியமாகியிருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்து மடிப்பாக்கத்து
வாசி, இன்று என்னவாக இருக்கிறான் என்பது இங்கே யாரும் கேட்க விரும்பாத, அறிந்துக்
கொள்ள விரும்பாத ஒரு கேள்வி.
‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ என்று அறியப்படும்
‘ஷாங்காய்’ திரைப்படம் இப்படியெல்லாம் என்னை வகைதொகையில்லாமல் சிந்திக்க
வைக்கிறது. அரசியல் தொடர்பு கொண்டது என்பதற்காக இதை ‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’
எனலாமா என்று தெரியவில்லை. ‘நம்முடைய வளமும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
கூட்டிக் கொடுக்கப் படுகிறது’ என்கிற ஒன்லைனரை நெற்றியலடித்தாற்போல பளாரென
சுட்டிக் காட்டியிருப்பதுதான் இப்படத்தின் மையம். அவன் இங்கே வந்து தொழிற்சாலை
கட்டுவான். ஊரில் இருப்பவர்களுக்கு மெக்கானிக் வேலையோ, டிரைவர் வேலையோ தருவான். டீக்கடை
டீ ஷாப் ஆகும். சினிமா கொட்டகைகள் ‘சினிப்ளக்ஸ்’ ஆகும். இட்லிக்கடை பீட்ஸா கார்னராகும். எல்லாம்
முடிந்ததும் வேறு ஊருக்குப் போய் ‘டெண்ட்’ அடிப்பான். அதற்குள் நம்முடைய ஊர் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு பாலைவனமாகி இருக்கும். நேரடியாக சொல்லாமல் ‘ஷாங்காய்’ இந்த மறைமுகக்கதையைதான்
பார்வையாளனுக்கு புரியவைக்க முயற்சிக்கிறது.
மஹாராஷ்டிர மாநில அரசு, பாரத் நகர் என்கிற
இரண்டாம் கட்ட நகரமொன்றில் ‘இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க்’ என்றொரு சொர்க்கத்தை
நிறுவ முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் பரவலான வரவேற்பு. மாநகரமயமாக்கலின்
பொருளாதார, அதிகாரப் பலன்களை ஆளும் கட்சி, முதலாளிகளோடு பகிர்ந்துக் கொள்ளும்
நோக்கத்தில் இதை கனவுத்திட்டமாக விளம்பரப் படுத்துகிறார்கள். இது வந்துவிட்டால்
எல்லாமே மாறிவிடும் என்று உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இம்மாதிரியான
வளர்ச்சியின் பாதகங்களை உணர்ந்த சமூகசேவர்கள் சிலர் இதை எதிர்த்து மக்களிடம்
பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்றினை எழுதியவரான டாக்டர் அகமதி இதற்காக பாரத் நகருக்கு வருகிறார். ஆளுங்கட்சி தனது தொண்டர்களின் மூலமாக விபத்து ஒன்றினை உருவாக்கி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைத்து இச்சம்பவத்தை முடக்க நினைக்கிறது அரசு. விசாரணை செய்யும் அதிகாரி கொஞ்சம் நேர்மையானவர் (நம்மூர் சகாயம் மாதிரி). ஏனென்றே தெரியவில்லை. அவர் தமிழ் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்படுகிறார். டாக்டரின் ஆதரவாளரான ஒரு பெண்ணும், உள்ளூர் அஜால் குஜால் போட்டோகிராபர் ஒருவரும் சூழல் கட்டாயங்களின் பேரில் இணைந்து, இது கொலைமுயற்சி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். ஆதாரங்களைப் பெறும் அரசு இயந்திரம் என்ன செய்யும், விளைவுகள் என்னவென்பது ‘க்ளைமேக்ஸ்’.
தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்றினை எழுதியவரான டாக்டர் அகமதி இதற்காக பாரத் நகருக்கு வருகிறார். ஆளுங்கட்சி தனது தொண்டர்களின் மூலமாக விபத்து ஒன்றினை உருவாக்கி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைத்து இச்சம்பவத்தை முடக்க நினைக்கிறது அரசு. விசாரணை செய்யும் அதிகாரி கொஞ்சம் நேர்மையானவர் (நம்மூர் சகாயம் மாதிரி). ஏனென்றே தெரியவில்லை. அவர் தமிழ் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்படுகிறார். டாக்டரின் ஆதரவாளரான ஒரு பெண்ணும், உள்ளூர் அஜால் குஜால் போட்டோகிராபர் ஒருவரும் சூழல் கட்டாயங்களின் பேரில் இணைந்து, இது கொலைமுயற்சி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். ஆதாரங்களைப் பெறும் அரசு இயந்திரம் என்ன செய்யும், விளைவுகள் என்னவென்பது ‘க்ளைமேக்ஸ்’.
‘த்ரில்லர்’ என்று சொல்லிக்கொண்டால் படம்
பார்ப்பவர்களுக்கு ‘த்ரில்’ இருக்க வேண்டுமில்லையா? அது சுத்தமாக இல்லாத படம். மிக
மெதுவாக, விஸ்தாரமாக விரியும் காட்சிகள். ஆவணப்படங்களுக்கான பாணியில் கேமிரா
கோணங்கள். பாடல் காட்சிகள் தவிர்த்து, மற்றபடி சினிமாத்தனமற்ற இசை. யதார்த்தத்தை எவ்வகையிலும் மீறிவிடக்கூடாது என்கிற
அச்ச உணர்வுடனேயே, ஒவ்வொரு காட்சியையும் மிகக்கவனமாகப் படமாக்கியிருக்கிறார்கள். நக்ஸல்பாரிகள்
படமெடுத்தால் எப்படியிருக்குமென்ற கேள்விக்கு இப்படத்தை விடையாக சொல்லலாம்.
அரசியல் கட்சி மெக்கானிஸம் – அதுவும் ஆளுங்கட்சியாக
இருந்தால் – எப்படி இயங்குமென்பதை துல்லியப்படுத்தி இருக்கிறார்கள். அதிகாரத்துக்கு
சோரம் போகும் புரோக்கர்களையும் தெளிவாக அம்பலப்படுத்தப் படுகிறார்கள்.
இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க எப்படி மத்திய அரசு நிறுவனமான என்.எஃப்.டி.சி. பணம்
கொடுத்தது என்பது ஆச்சரியம்தான். தணிக்கைக் குழு அனுமதித்திருப்பது மற்றொரு
ஆச்சரியம். இப்படத்தை வெளியிட சிலர் உயர்நீதிமன்றத்தில் தடைகோரியதாக தெரிகிறது.
கோர்ட் தடைவிதிக்க மறுத்து இருப்பது ஆச்சரியங்களிலும் பெரிய ஆச்சரியம்.
பத்தரை கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட
இத்திரைப்படம், மேல்தட்டுப் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஐந்து
நாட்களிலேயே இருபத்தோரு கோடி வசூலித்திருக்கிறது. விமர்சகர்கள் ஒரேகுரலில்
தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
ஒரு ‘ஐரனி’ என்னவென்றால், இப்படம்
சுட்டிக்காட்டும் சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள்தான் இப்படத்தை இப்போது பெரிதும்
கொண்டாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எளிய, கீழ்த்தட்டு மக்களுக்கு
புரியும்படியான கலைமொழி இப்படத்துக்கில்லை என்றே சொல்லலாம். மற்ற பெரிய
இந்திப்படங்களைப் போல மண்டலமொழிகளில் ‘டப்’ செய்யப்படாமல், நேரடியாக திரைக்கு
வந்திருப்பதும் பெரிய குறை. இந்தி தெரியாத மாநிலங்களில் வெளியிடும்போது,
குறைந்தபட்சம் ‘சப்-டைட்டில்’ ஆவது சேர்க்க முயற்சிக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், ஷாங்காய் இந்திய சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட நேர்மையான முயற்சிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
எது எப்படியிருந்தாலும், ஷாங்காய் இந்திய சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட நேர்மையான முயற்சிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
நல்ல விமர்சனம்
பதிலளிநீக்குமுன்பகுதியில் உங்கள் ஏக்கத்தை நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்.
என்னுடைய புக் லிஸ்டில் இந்த படம் இருந்தது. இம்பரசிவான இயக்குனர் என்பது மட்டுமில்லாமல் அனுராக் காஷ்யப் இவருடைய திறமையை ட்விட்டர் மூலம் கன்பர்ம் செய்ததால் சாலிடான,கிரெடிபிலிட்டி உடன் இந்த படத்திற்கு சென்றேன்.
பதிலளிநீக்குகண்ட்ரோல்டான மேக்கிங் இருந்தாலும், சில இடங்களில் லெதார்ஜிக்காக இருண்டது. அதே சமயம் ஹேண்டஹெல்ட் கேமரா மூலமே இந்த படம் இயக்கப்பட்டிருப்பது ஒரு புதிய விஷயம். சில அரசியல் நுணுக்கங்களை ஆப்டாய் இன்சர்ட் செய்து செகண்ட் ஹாப்ஃஐ பெப்பாக மாற்றி படத்தையே லைட்டினிங் ஸ்பீட் உடன் நகர்த்தியது சிறப்பு.
படம் நல்லா இருக்குன்னு சொல்லலை, ஆனால் நல்லா இருந்திருந்தா நல்லா இருக்குமே என்றுதான் நினைக்கிறேன்.
நல்ல விமர்சனம். யுவா:உங்களுக்கு இந்தி தெரியுமா? சப் டைட்டில் இல்லாமல் இந்தி படம் பார்த்தால் எனக்கு
பதிலளிநீக்குபுரிவதில்லை
//நுணுக்கங்களை ஆப்டாய் இன்சர்ட் செய்து செகண்ட் ஹாப்ஃஐ பெப்பாக மாற்றி படத்தையே லைட்டினிங் ஸ்பீட் உடன் நகர்த்தியது சிறப்பு.//
கேபிள் மாறியே எழுதும் லேபில் சங்கர் யாருங்க? அதிஷாவோன்னு டவுட்டா இருக்கு :))
த்ரில் இல்லாத த்ரில்லரா, ஆச்சரியம்தான்..
பதிலளிநீக்குநல்ல அலசல் சார் !
பதிலளிநீக்கு