13 ஜூன், 2012

ஷாங்காய்


நான் பிறந்து வளர்ந்த ஊரான மடிப்பாக்கம் குக்கிராமமாக இருந்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். பள்ளிப் புத்தகத்தில் ஒரு பாடம் இருந்தது. எனது ஊருக்கே மேற்கே மலையிருக்கிறது. தெற்கே ஆறு இருக்கிறது என்று வரிகள் இருந்ததாக ஞாபகம். மடிப்பாக்கத்துக்கு மேற்கே மலை இருந்தது. பல்லாவரம் மலை. தெற்கே ‘மடு’ என்று சொல்லப்படக்கூடிய சிற்றாறு இருந்தது. கிழக்கே கழிவுவெளி என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீட்சி. பள்ளிக்குச் செல்லும்போது சாலைகளின் இருபுறமும் சாமந்திப்பூக்கள் பூத்துக் குலுங்கும். என் வீட்டுக்கு எதிரே சுமார் இருநூறு மரங்கள் கொண்ட மாந்தோப்பு கூட இருந்தது. கோடை எங்களை சுட்டெரித்ததில்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குறைந்தது ஒரு வேப்பமரம். வீட்டுக்குப் பின்னால் நிச்சயமாக புளியமரம். கிணறுகளில் பத்தடியில் இளநீர் சுவையோடு குடிநீர். வெயில்காலங்களில் கூட அதிகபட்சம் இருபத்தைந்து அடிகள் வரைதான் தண்ணீர் வற்றும். ஓரிருவரிடம் மட்டுமே ‘பைக்’. வெயில்கால இரவுகளில் காற்றுக்காக சாலைகளுக்கு வந்துகூட பாய்விரித்து படுத்துக் கொள்ளலாம். ஊருக்கே தெற்கே கண்ணில் படக்கூடிய எல்லை வரை பசுமை. எண்ணிக்கையிலடங்கா பாசனக் கிணறுகள். தென்மேற்கில் சவுக்குத்தோப்பு. மிகப்பெரிய பரப்பளவில் ஓர் ஏரி. நிறைய குளங்கள். குட்டைகள். இரவுகளில் சிலவேளைகளில் நரி ஊளையிடும். நினைவுப்படுத்திக் கொண்டே போனால் பட்டியல் ‘பழைய ஏற்பாடு பைபிள்’ அளவுக்கு நீளும்.

இன்று மடிப்பாக்கம் சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டது. அன்றிருந்த விஷயங்களில் இன்று ஓரிரண்டு கூட இல்லை. இந்த ஓரிரண்டில் மனிதர்களும் அடக்கம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன ரெஸ்டாரண்டுகள். குடியிருப்புகள். வீட்டுக்கு ஒரு கார். இரண்டு பைக். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். ஒரு நகரத்துக்குள் என்னென்ன இருக்க வேண்டும் என்கிறார்களோ, எல்லாமே இருக்கிறது. பாதாள சாக்கடை மாதிரி இல்லாத அடிப்படை விஷயங்களைப் பற்றி யாரும் மெனக்கெடுவதில்லை. அப்போது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்குமான வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். ஒரு பூர்விகவாசி என்கிற முறையில் என் இதயத்தில் இம்மாற்றங்கள் எம்மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்றோ, வளர்ச்சி என்றோ பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய சூழலில் நான் இல்லை. இத்தனைக்கும் இங்கே அரசின் சிறப்புத் திட்டம் எதுவோ, புதிய தொழிற்சாலைகளோ எதுவும் அமைக்கப்படாமலேயே அசுர வளர்ச்சி. மடிப்பாக்கத்தில் இடம் மலிவு. குடிநீர் நன்றாக இருக்கும் என்கிற மக்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாக இத்தகைய மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்து மடிப்பாக்கத்து வாசி, இன்று என்னவாக இருக்கிறான் என்பது இங்கே யாரும் கேட்க விரும்பாத, அறிந்துக் கொள்ள விரும்பாத ஒரு கேள்வி.

‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ என்று அறியப்படும் ‘ஷாங்காய்’ திரைப்படம் இப்படியெல்லாம் என்னை வகைதொகையில்லாமல் சிந்திக்க வைக்கிறது. அரசியல் தொடர்பு கொண்டது என்பதற்காக இதை ‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ எனலாமா என்று தெரியவில்லை. ‘நம்முடைய வளமும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கப் படுகிறது’ என்கிற ஒன்லைனரை நெற்றியலடித்தாற்போல பளாரென சுட்டிக் காட்டியிருப்பதுதான் இப்படத்தின் மையம். அவன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டுவான். ஊரில் இருப்பவர்களுக்கு மெக்கானிக் வேலையோ, டிரைவர் வேலையோ தருவான். டீக்கடை டீ ஷாப் ஆகும். சினிமா கொட்டகைகள் ‘சினிப்ளக்ஸ்’ ஆகும்.  இட்லிக்கடை பீட்ஸா கார்னராகும். எல்லாம் முடிந்ததும் வேறு ஊருக்குப் போய் ‘டெண்ட்’ அடிப்பான். அதற்குள் நம்முடைய ஊர் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு பாலைவனமாகி இருக்கும். நேரடியாக சொல்லாமல் ‘ஷாங்காய்’ இந்த மறைமுகக்கதையைதான் பார்வையாளனுக்கு புரியவைக்க முயற்சிக்கிறது.

மஹாராஷ்டிர மாநில அரசு, பாரத் நகர் என்கிற இரண்டாம் கட்ட நகரமொன்றில் ‘இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க்’ என்றொரு சொர்க்கத்தை நிறுவ முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் பரவலான வரவேற்பு. மாநகரமயமாக்கலின் பொருளாதார, அதிகாரப் பலன்களை ஆளும் கட்சி, முதலாளிகளோடு பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்தில் இதை கனவுத்திட்டமாக விளம்பரப் படுத்துகிறார்கள். இது வந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும் என்று உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இம்மாதிரியான வளர்ச்சியின் பாதகங்களை உணர்ந்த சமூகசேவர்கள் சிலர் இதை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்றினை எழுதியவரான டாக்டர் அகமதி இதற்காக பாரத் நகருக்கு வருகிறார். ஆளுங்கட்சி தனது தொண்டர்களின் மூலமாக விபத்து ஒன்றினை உருவாக்கி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைத்து இச்சம்பவத்தை முடக்க நினைக்கிறது அரசு. விசாரணை செய்யும் அதிகாரி கொஞ்சம் நேர்மையானவர் (நம்மூர் சகாயம் மாதிரி). ஏனென்றே தெரியவில்லை. அவர் தமிழ் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்படுகிறார். டாக்டரின் ஆதரவாளரான ஒரு பெண்ணும், உள்ளூர் அஜால் குஜால் போட்டோகிராபர் ஒருவரும் சூழல் கட்டாயங்களின் பேரில் இணைந்து, இது கொலைமுயற்சி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். ஆதாரங்களைப் பெறும் அரசு இயந்திரம் என்ன செய்யும், விளைவுகள் என்னவென்பது ‘க்ளைமேக்ஸ்’.

‘த்ரில்லர்’ என்று சொல்லிக்கொண்டால் படம் பார்ப்பவர்களுக்கு ‘த்ரில்’ இருக்க வேண்டுமில்லையா? அது சுத்தமாக இல்லாத படம். மிக மெதுவாக, விஸ்தாரமாக விரியும் காட்சிகள். ஆவணப்படங்களுக்கான பாணியில் கேமிரா கோணங்கள். பாடல் காட்சிகள் தவிர்த்து, மற்றபடி சினிமாத்தனமற்ற இசை. யதார்த்தத்தை எவ்வகையிலும் மீறிவிடக்கூடாது என்கிற அச்ச உணர்வுடனேயே, ஒவ்வொரு காட்சியையும் மிகக்கவனமாகப் படமாக்கியிருக்கிறார்கள். நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் எப்படியிருக்குமென்ற கேள்விக்கு இப்படத்தை விடையாக சொல்லலாம்.

அரசியல் கட்சி மெக்கானிஸம் – அதுவும் ஆளுங்கட்சியாக இருந்தால் – எப்படி இயங்குமென்பதை துல்லியப்படுத்தி இருக்கிறார்கள். அதிகாரத்துக்கு சோரம் போகும் புரோக்கர்களையும் தெளிவாக அம்பலப்படுத்தப் படுகிறார்கள். இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க எப்படி மத்திய அரசு நிறுவனமான என்.எஃப்.டி.சி. பணம் கொடுத்தது என்பது ஆச்சரியம்தான். தணிக்கைக் குழு அனுமதித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். இப்படத்தை வெளியிட சிலர் உயர்நீதிமன்றத்தில் தடைகோரியதாக தெரிகிறது. கோர்ட் தடைவிதிக்க மறுத்து இருப்பது ஆச்சரியங்களிலும் பெரிய ஆச்சரியம்.

பத்தரை கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், மேல்தட்டுப் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஐந்து நாட்களிலேயே இருபத்தோரு கோடி வசூலித்திருக்கிறது. விமர்சகர்கள் ஒரேகுரலில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு ‘ஐரனி’ என்னவென்றால், இப்படம் சுட்டிக்காட்டும் சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள்தான் இப்படத்தை இப்போது பெரிதும் கொண்டாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எளிய, கீழ்த்தட்டு மக்களுக்கு புரியும்படியான கலைமொழி இப்படத்துக்கில்லை என்றே சொல்லலாம். மற்ற பெரிய இந்திப்படங்களைப் போல மண்டலமொழிகளில் ‘டப்’ செய்யப்படாமல், நேரடியாக திரைக்கு வந்திருப்பதும் பெரிய குறை. இந்தி தெரியாத மாநிலங்களில் வெளியிடும்போது, குறைந்தபட்சம் ‘சப்-டைட்டில்’ ஆவது சேர்க்க முயற்சிக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், ஷாங்காய் இந்திய சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட நேர்மையான முயற்சிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

12 ஜூன், 2012

உலகம் சுற்றும் வாலிபன்


'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
 இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
 * இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
 * தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
 * லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
 * மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
 * சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
 * இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
 * வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
 * படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
 * "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
 * பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
 * தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
 * படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
 * படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
 * கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம் அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.

11 ஜூன், 2012

‘காதலி’ காவ்யா


லெட்டரை நீட்டியவன் ஜொள்ளை துடைத்துக்கொண்டே சொன்னான்.

“உடனே பதில் கொடுக்கணும்னு அவசியமில்லை காவ்யா. என் காதலை ஏத்துக்கிட்டேன்னா நாளைக்கு மஞ்சக்கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வா. புரிஞ்சுக்கறேன்”

மறுநாள் காவ்யா மஞ்சள் சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இவன் இன்னொருவன்.

“காவ்யா ஐ லவ் யூ”

மையமாக நாணத்தோடு சிரித்தவாறே நகர்ந்தாள். ‘எகிறிக் குதித்தேன், வானம் இடித்தது’ என்று பாடிக்கொண்டே துள்ளிக்கொண்டு சென்றான். அடுத்தடுத்து இவனைப் பார்க்கும்போதெல்லாம் அதேமாதிரி சிரித்து வைக்கிறாள். ஆனால் காதலிக்கிறாளா என்பதை மட்டும் சொல்லித் தொலைக்க மாட்டேன் என்கிறாள்.

இது மற்றுமொருவனின் கதை.

“டேய் எனக்கு வண்டி ஓட்டச் சொல்லித் தர்றியாடா...”



“சொல்லிக் கொடுக்கறேன். ஆனா நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கணும்”

இதற்கும் அதே நாணச்சிரிப்பு.

இப்போதெல்லாம் காவ்யா ஹோண்டா ஆக்டிவாவில் அசுரவேகத்தில் பறக்கிறாள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தவனோ, இவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பது தெரியாமல், கிருக்கல் அடித்துப்போய் ஃபாலோ செய்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் எத்தனை காதல் கடிதம் வந்திருக்கும்? ஐந்து, பத்து, ஐம்பது.. ஒரு எண்ணிக்கைக்கு நூறு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். வயதுக்கு வந்த முதல் நாளிலிருந்து, தனது இருபத்தைந்தாவது பிறந்தநாள் வரை காவ்யாவுக்கு வந்த காதல் கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே நாலாயிரத்து எழுநூற்றி நாற்பத்தி ஐந்து. வாய்மொழியாக சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’க்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. சரியான தரவுகளோடு கூடிய ஆதாரங்கள் இல்லாததால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு காவ்யாவின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அவளுக்கு முதன்முதலாக காதல் கடிதம் கொடுத்தவன் அருணகிரி. விஜயகாந்த் ரசிகனான அவனது கடிதம் இவ்வாறு தொடங்கியது. ‘வானத்தைப் போல’ மனம் படைத்த ‘சின்னக் கவுண்டரான’ ‘ஹானஸ்ட் ராஜ்’ நான். உன் ‘ஊமை விழிகள்’ பேசும் காதல்மொழியால் ’சக்கரை தேவன்’ ஆனேன். ‘தர்ம தேவதை’யும் ‘நவக்கிரக நாயகி’யும் ஆன உன்னை...” – இப்படியே அச்சுபிச்சுவென ஏதோ எழுதித் தொலைத்திருந்தான். கடிதத்தைப் படித்ததுமே ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பை தனது காதலுக்கான பச்சைக்கொடியாக அவன் எடுத்துக் கொண்டான்.

கோணைமூஞ்சி அருணகிரியின் கடிதத்துக்கே எந்த மறுப்பையும் காவ்யா சொல்லவில்லை என்கிற தைரியத்தில் பள்ளியில் படித்த அத்தனை பேரும் அவளுக்கு இதே ரீதியில் கடிதம் கொடுக்கத் தொடங்கினார்கள். அவளைவிட வயது குறைந்த பயல்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


எந்தக் காதலையும் காவ்யா வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நேரடி மறுப்பையும் யாருக்கும் சொன்னதில்லை. நம் காதலர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. கடிதம் கொடுத்தால் குறைந்தபட்சம் செருப்படியோ, கன்னத்தில் அறையோ இவளிடம் கிடைப்பதில்லை.

அவள் கல்லூரிக்கு சென்றபோதும், பிற்பாடு அலுவலகத்துக்குப் போனபோதும் கூட இதே ‘ட்ரெண்ட்’ தொடர்ந்தது. அவளுடன் பழகும் ஒவ்வொரு ஆணுமே, தன்னை காதலிப்பதாக உணர்த்தும் வகையில் தன் இயல்பை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டாள். நூற்றுக்கணக்கானோரை தன்னை சின்சியராக காதலிக்க வைத்த காவ்யாவுக்கு ஏனோ ஒருவனை கூட திருப்பிக் காதலிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் வந்ததேயில்லை.

போனவாரம் காவ்யாவுக்கு திருமணம் நடந்தது. ஜாதகம், பெயர் ராசி என்று எல்லாப் பொருத்தமும் சோதித்து வீட்டில் பார்த்து வைத்த ‘அரேஞ்ஜ்டு மேரேஜ்’. இப்போது ஊரில் குறைந்தது ஆயிரம் காதலர்களாவது ‘காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல ‘ங்கை... ங்கை...’ என்று தலையில் குத்திக்கொண்டே சேது மாதிரி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

9 ஜூன், 2012

ஆபரேஷன் ப்ளாக்‌ஷீப்


“கமாண்டோ”

“யெஸ் கேப்டன்”

“முடிச்சிட்டியா?”

“பாவமாயிருக்கு”

“இந்த வேலைக்கு வந்துட்டு பாவம் புண்ணியமெல்லாம் பார்க்கணுமா?”

“கத்தற சத்தம் சகிச்சிக்க முடியலை”

“அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துலே முடிஞ்சிடும்”

“எனக்கு ரத்தத்தை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி கேப்டன்”

“யூ ஃபூல். ரத்தத்தை பார்க்குறதுதான் நமக்கு வேலையே”

“ஆனாலும் கேப்டன் கழுத்தை வெட்டினதுமே இளஞ்சூடா, வெளிர்சிவப்பா பீய்ச்சுற ரத்தத்தை பார்க்கும்போதெல்லாம் பீதியாகுது”


யூ பிளடி கமாண்டோ. என்னோட தேர்ட்டி இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் எவ்ளோவாட்டி இதே சீனை பார்த்திருப்பேன் தெரியுமா?”

“தட்ஸ் ஒய் யூ ஆர் கேப்டன். எனிவே, நான் உங்க ஆர்டருக்கு ஒபே பண்ணுறேன்”

“தலையை கெட்டியாப் பிடி”

“பிடிச்சுட்டேன்”

”கத்திய பாய்ச்சுறதுக்கு வாகான இடத்தை கழுத்திலே பார்த்து, ஒரே வெட்டு”

”வெட்டிட்டேன். ஓ காட்”

“கழுத்தை சரசரசரன்னு அறுத்து, தலையை தனியா வையி”

“முடிஞ்சது கேப்டன். ஆனா தலையில்லாத முண்டம் துடிக்குதே?”

“ஆமாம். அப்படித்தான் துடிக்கும் கமாண்டோ. கழுத்திலேருந்து வழியற ரத்தத்தை அப்படியே ஒரு பெரிய பாத்திரத்துலே புடிச்சி வையி”

“டன் கேப்டன்”

“அப்புறம் ரெண்டு காலையும் சேர்த்துப் புடிசி ஒரே சேர வெட்டு. ஒரே வெட்டு ரெண்டு துண்டு”

“முடிஞ்சது கேப்டன். இப்போ உடம்பில் எந்த அசைவுமில்லே”

“கொத்துக்கறி போடத் தெரியுமில்லே? பீஸ் பீஸா போடணும். கத்தியிலே தட்டுப்படற எலும்பையெல்லாம் தனியா பொறுக்கி வை கமாண்டோ”

“டன்டனா டன் கேப்டன்”

“இப்போ மொத்தமா எவ்ளோ கிலோ தேறும்?”

“பேக் பண்ணிட்டு, எடை போட்டுப் பார்க்கிறேன் கேப்டன்”

- படுமொக்கையாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த கதைக்கு முடிவு ஒன்றே ஒன்றுதான். அதுவும் நான்காம் லைனிலெயே நீங்கள் யூகித்துவிட்ட அதே படு த்ராபையான முடிவுதான். தலைப்பும் கூட அதைதான் குறியீடாக உணர்த்துகிறது. கேப்டன் கசாப்புக்கடை முதலாளி. கமாண்டோ கசாப்புக் கடையில் புதுசாக ஆடு வெட்ட சேர்ந்த பையன். ஓக்கே? சுபம்.

வேறு முடிவு ஒன்றையும் பரிசீலித்துப் பார்க்கலாம். இராணுவ கேப்டன், சித்திரவதைக் கூடத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் கமாண்டோவுக்கு தொலைபேசியில் உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறான். வெட்டப்படுவன். எதிரிநாட்டுக்கு இராணுவ இரகசியங்களை விலைக்கு விற்றவன். இப்போது இந்தப் பின்னணியை மனதில் விஷூவலாக்கி ஓட்டிக்கொண்டே கதையைப் படித்துப் பாருங்கள். படுமொக்கையாக இருந்த கதை, ஒருவேளை சுமாரான மொக்கை ஆகியிருக்கலாம்.

6 ஜூன், 2012

தடையறத் தாக்க

விளிம்புநிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வை பதிவு செய்யும் உலக சினிமாவெல்லாம் இல்லை. ஹாலிவுட்டுக்கோ, பாலிவுட்டுக்கோ இணையாக தமிழ் திரைப்படங்களை தரமுயர்த்தும் முயற்சியும் நிச்சயமாக இல்லை. படம் பார்ப்பவர்கள் அசந்துப்போய் மூக்கின் மேல் விரலை வைக்கும் பிரும்மாண்ட காட்சிகளும் சத்தியமாக இல்லை. ஆனாலும் மிக முக்கியமான சினிமாவாக பரிணமித்திருக்கிறது தடையறத் தாக்க.

கடைசியாக தமிழில் வெளிவந்த ‘டைரக்டர்ஸ் மூவி’ எதுவென்று பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருங்கே சேர்த்து கசக்கி நினைவுகூர்ந்தாலும் எதுவும் சட்டென்று நினைவுக்கு தோன்றவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்தால் மெளனகுரு, நாடோடி, சுப்பிரமணியபுரம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் சில படங்கள் நினைவுக்கு வருகிறது. தடையறத் தாக்க முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் ஆளுமையை சார்ந்தே வந்திருக்கிறது. சரசரவென்று காட்சிகளையமைத்து பரபர வேகத்தில் தடதடவென பயணிக்கும் தடாலடி த்ரில்லர் எக்ஸ்பிரஸ்.

‘காக்க காக்க’ படத்தில் கவுதமிடம் உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர், கதையின் முக்கியமான விதையை அங்கிருந்தே எடுத்து, ‘தடையறத் தாக்க’வில் விளைச்சல் செய்திருக்கிறார். காக்க காக்க பாண்டியா-வுக்கும், அவருடைய அண்ணனுக்கும் அப்படியென்ன புனிதமான பாசப்பிணைப்பு என்று ஒரு சிறுகதையை எழுதிப் பார்த்திருப்பார் போல. நாயகனுக்கோ, நாயகிக்கோதான் உருக்கமான ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ இருப்பது நம் பண்பாடு. மாறாக வில்லன்களுக்கு அவ்வகையிலான ஓர் ஆச்சரிய ஃப்ளாஷ்பேக்கை முயற்சித்திருக்கிறார். நாயகன் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, அப்பாடக்கர் ஆவதையெல்லாம் அசால்ட்டாக வசனத்திலேயே கடந்துவிடுகிறார். நாயகன் – நாயகி சந்திப்பு, அவர்களுக்கிடையேயான ஊடல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு என்றெல்லாம் ’சீன்’ பண்ணாமல், நேரடியாக அவர்கள் காதலர்கள். நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறான் நாயகன் என்று படாலென்று படம் ஆரம்பிக்கிறது. கந்து வட்டி கொடுமையை எதிர்த்து மெசேஜ் சொல்கிறோம் என்றெல்லாம் கழுத்தறுக்காமல், தன் கதைக்கு தேவைப்பட்டது பயன்படுத்திக் கொண்டேன் என்கிற இயக்குனரின் நேர்மை பாராட்டத்தக்கது. சமூகத்தின் சகலப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வெண் திரையில் எதிர்ப்பார்ப்பதைவிட வேறென்ன பெரிய முட்டாள்த்தனம் இருந்துவிடப் போகிறது?

பதினைந்து, பதினாறு ஆண்டுகளாக அருண்விஜய் நடித்துக் கிழித்தவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி குப்பையில் போடலாம். அவருடைய நிஜமான இன்னிங்ஸ் இப்போதுதான் துவங்குகிறது. இயக்குனரின் நடிகராக மிகச்சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்களின் சப்ஜெக்ட்டை கவனமாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நாளைய திரைவானில் பளிச்சென மின்னும் நட்சத்திரமாகலாம். மாறாக மீண்டும் மசாலா, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று இளையதளபதியாகவோ அல்டிமேட் ஸ்டாராகவோ முயற்சித்தாலோ.. தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்வதாகதான் பொருள்.

முதல் பாதியில் மட்டும் தேவையில்லாமல் இரண்டு பாடல்கள். இன்னமும் பாடல்களின்றி படமெடுக்க நம்மாட்கள் தயங்குவது புரிகிறது. ஒரு சுமாரான டூயட். ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற அளவில் ஒரு குத்துப்பாட்டு. குத்துப்பாட்டில் ஒன்றுக்கு, ரெண்டாக தலைசிறந்த இரண்டு நாட்டுக்கட்டைகளை உருட்டிவிட்டிருந்தாலும், சீக்கிரமா படத்தை காட்டுங்கப்பா என்கிற டென்ஷன்தான் பார்வையாளனுக்கு இருக்கிறது. ‘பெட்டிகோட்’டோடு நாயகியை பார்த்தும் நார்மலாக இருக்கும் நாயகன், அதனால் டென்ஷன் ஆகும் நாயகி. “அப்போ பார்த்தப்போ ஆண்ட்டி மாதிரி பேண்ட்டி போட்டிருந்தே” என்றுகூறி, ஏழு வண்ணங்களில் மாடர்ன் பட்டர்ஃப்ளை பேண்ட்டீஸ் பரிசாக வாங்கித்தரும் நாயகன். பிற்பாடு அவளுக்கு போன் போடும்போது “இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளை?” என்று விசாரிப்பது. தனியாக பெட்ரூமில் இருவரும் இருக்கும்போது, “பதினைஞ்சு நிமிசத்துக்கு யாரும் வரமாட்டாங்க. உனக்கு வேணும்னா அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ” என்று நாயகி, நாயகனிடம் சொல்வது. இவ்வாறாக ‘கல்ச்சுரல் ஷாக்’ காட்சிகள் கொஞ்சம் புதுசு. கொஞ்சம் விரசமாகவே தெரிந்தாலும், இவையெல்லாம் சமகாலத்தில் சகஜம் என்கிற யதார்த்தத்தை ஜீரணித்தே ஆகவேண்டியிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மம்தா நாயகியாக. புற்றுநோயை வென்று உயிர்பிழைத்து, சிறுவயது காதலனை கைப்பிடித்து, கல்யாணத்துக்குப் பிறகு ‘தில்’லாக செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார் என்று அவருடைய பர்சனல் ஸ்டோரியே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனல் சக்ஸஸ் ஸ்டோரியாக இருக்கிறது. மம்தாவின் ப்ரேவ் ஹார்ட்டுக்கு கிரேட் சல்யூட்.

இண்டர்வெல்லுக்கு பிறகு டைரக்டாக க்ளைமேக்ஸ். ரத்தம் தெறிக்கும் ஓவர் வயலன்ஸ்தான் என்றாலும், கதைக்கு தேவைப்படும் அளவிலேயேதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வில்லன்களையும், அடியாட்களையும் எப்படியெல்லாம் போட்டுப் புரட்டியெடுக்கிறார் என்று விலாவரியாக ‘டைம்பாஸ்’ செய்யாமல் சட்டுபுட்டென்று எடிட்டி இருப்பதில் படக்குழுவின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. கடைசிக் காட்சியில் அருண்விஜய் சட்டையைக் கிழித்துக் கொண்டு சிக்ஸ்பேக் காட்டுவாரோ என்கிற அச்சப்பந்து வயிற்றில் இருந்து வேகமாக தொண்டையை நோக்கி எழுகிறது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை. இயல்பாக படமெடுப்பது என்பதே இப்போதெல்லாம் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்துவிட்டது நம் தலைவிதி.

தடையறத் தாக்க தவறாமல் பார்க்க