ஓகில்வி & மாதர் (ஓ & எம்) என்பது ஓர் உலகளாவிய விளம்பர நிறுவனம். உலகம் முழுக்க 450 அலுவலகங்கள்.
120 நாடுகளில் இயங்குகிறது. சுமார் இருபதாயிரம் ஊழியர்கள். விளம்பரம் என்றாலே
உங்களுக்கு நினைவு வரும் விளம்பரங்கள் பத்து என்றால், அதில் குறைந்தபட்சம்
ஐந்தாவது ஓ & எம் நிறுவனம் எடுத்தவையாகதான் இருக்கும். நம்மூரிலேயே ஃபெவிகால்,
ஹட்ச் என்று பேசப்பட்ட அவர்களது விளம்பரங்கள் ஏராளம். சினிமாவில் ‘வார்னர்
பிரதர்ஸ்’ எப்படியோ, விளம்பரத்துறையில் இவர்கள் அப்படி என்று வைத்துக்
கொள்ளுங்களேன். இந்த நிறுவனம் ஒரு விளம்பரப்படம் இயக்கச் சொல்லி ஒரு இயக்குனரை
கேட்டுக்கொண்டால் அவரால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.
அவ்வாறு மறுக்கக்கூடிய ‘தில்’ இருப்பவர்கள்,
‘அக்கிரகாரத்தில் கழுதை’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்துதான் காலத்தை ஓட்ட முடியும்.
ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இயக்குனராவது, “ரஜினி தமிழனுக்கு
எதுவும் செய்யவில்லை. மைசூரில்தான் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்”
என்கிற கருத்தையையோ, தமிழ்தேசிய-திராவிட-இடதுசாரி-லொட்டு-லொசுக்கு கொள்கைகளையோ
முன்வைத்தோ இங்கு மறுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று யாரேனும் நினைக்கிறீர்களா?
நல்லதோ, கெட்டதோ. உலகமயமாக்கல் சூழலில்
யாரும் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. ஆனானப்பட்ட அறிவுப்பேராசான் மார்க்ஸே
கூட ‘பொதுவுடைமை’ எழுதவும், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளை
சிந்திக்கவும் பொருளாதாரரீதியாக ஏங்கெல்ஸ் என்கிற முதலாளிதான் உதவியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள்
சில பார்ப்பனர்களும் அடக்கம். நாமெல்லாம் எம்மாத்திரம்?
ஓரிரு விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கலாம்.
எல்லா இயக்கங்களிலுமே கொள்கை சமரசத்துக்கு துளியும் ஆட்படாதவர்கள் நான்கைந்து
பேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட இது துறவி மனநிலை. துறவியாக வாழ
நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேரால் முடியாது. இதற்காக இந்த தொண்ணூற்றி ஒன்பது
பேரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும்,
அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிகள்தான் எல்லாருமே. இதில் யார் சின்ன
அல்பம், யார் பெரிய அல்பம் என்று பட்டிமன்றம் வைப்பதைவிட அபத்தமான செயல்பாடு
வேறொன்று இருக்க முடியாது.
யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டால்,
ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே
வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம்
செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை
மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு சமரசங்கள் பரவாயில்லை.
பெரிய சமரசம்தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை
நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்?
அடிக்கடி அறிவுஜீவிகள் ‘நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை’, சாதாரண லவுகீக செயல்களில் எல்லாம் கண்டுபிடித்து கிண்டலடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். அறிவுசார் செயல்பாடுகளில் அறிவுஜீவிகளின் நடவடிக்கையும் அச்சு அசலாக நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையோடே இருப்பதை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. நம் சூழலில் செயல்படும் பெரும்பாலான அறிவுஜீவிகள் அல்லது அறிவுஜீவி ஜீப்பில் தாமாக வந்து ஏறிக்கொண்ட கோமாளிகளும் எவ்வகையிலும் நடுத்தர மனப்பான்மையை தாண்ட முடியாதவர்கள் என்பதே உண்மை. நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பொறாமை, பொச்சரிப்பு, புறம் பேசுதல் என்று எல்லா நடவடிக்கைகளையும் கைக்கொள்ளும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்கமுடியும்?
பைபிளை எனக்கு ஏன் பிடிக்குமென்றால்
“உங்களில் யார் யோக்கியரோ, அவர் முதல் கல்லை எறியலாம்” என்கிற வசனத்துக்காக.
நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல்
கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை
எதிர்பார்க்க முடியவில்லை.