தமிழகத்தில் அகதிமுகாம்களின் நிலை பற்றிய
வர்ணனைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதாக தெரியவில்லை. லீனாமணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’
ஆவணப்படம் விதிவிலக்கு. ஓரளவுக்கு நந்தா, ராமேஸ்வரம் படங்களில் காட்சியாக்க
முயற்சித்திருக்கிறார்கள் (வேறு சில படங்களும் இருக்கலாம், இவை நான் பார்த்தவை
மட்டுமே). கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சபரி’யில்தான் அகதிமுகாம்களில் நம்
அதிகாரிகளின் அத்துமீறல் நேரடியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதுவும்
கேப்டனின் ஹீரோயிஸத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சியாகவே அமைந்தது.
படத்தின் தொடக்கத்தில் இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் பில்லா-2வில் இது
வலுவாக காட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைதான்
காட்டியிருக்கிறார்கள். அகதிகளை நம் அதிகாரவர்க்கம் எதற்காகவெல்லாம்
பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரநெடி ஏதுமின்றி இயல்பான முறையில்
காட்டியிருக்கிறார்கள்.
இதற்காக பில்லா-2வை ஈழப்பிரச்சாரத்
திரைப்படமாகவெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தைய அஜீத்தின்
படவெளியீட்டின்போது ஈழத்தமிழர்களோடு அவருக்கு நேர்ந்த பிரச்னைக்கு பரிகாரமாககூட
பார்க்கலாம். ஆனாலும், ‘சென்ஸாரில் தட்டிவிடுவார்களோ?’ என்றெல்லாம் அச்சப்படாமல்
நேரடியாக சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். ஒருவகையில்
எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2
பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
படத்தை முதல் நாள் முதல் காட்சி ப்ரீமியர்
ரேட்டில் பார்த்த அணில் ரசிகர்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர்,
பிலாக், மொட்டைக் கடிதாசி என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி, ‘படம் மொக்கை’
என்று பிரச்சாரம் செய்து, தம் கடமையை முடித்துக் கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் வழக்கமாக அஜித்தின் எல்லாப்
படங்களுக்கும் செய்யப்படுவதுதான். பில்லா-2 நிச்சயமாக ‘சுறா’வோ, ‘வில்லு’வோ அல்ல.
அதே நேரம் பில்லா-1, மங்காத்தா அளவுக்கு கெத்துமில்லை. ஓரிருமுறை பார்க்கக்கூடிய
படம்தான். அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எந்த முன்முடிவுமின்றி
பார்ப்பவர்களுக்கும் நல்ல படம் என்றே தோன்றும். சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத்
தெரியவில்லை என்பவர்கள், தமிழில் இதற்கு முன்பாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள்
என்று எதை கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழின் ஒரு சராசரி இயக்குனரால்
இப்படத்தின் தரத்தில் பாதியைக் கூட எட்டமுடியாது என்பதுதான் நிஜம். ப்ரீக்குவல் என்பதால் ஒருவேளை
பில்லா-1ஐ விட அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்திருக்கலாம்.
ரசிகர்களும் கூட பில்லா-1க்கு முன்பாக நடக்கும் கதை என்கிற உணர்விலேயே படம் பார்த்தால்,
எவ்வளவு சுவாரஸ்யமாக முன்கதைச் சுருக்கத்தை சொல்கிறார்கள் என்பதை உணரலாம். அடுத்ததாக ஒருவேளை பில்லாவின் சீக்குவல் எடுக்கப்பட்டால்
பங்களா கட்டி புகுந்து விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.
இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களுக்கு க்ரைம் அளவுக்கு செக்ஸும் ஒரு முக்கியமான அம்சம். பில்லா-1ல் நயன்தாரா, நமீதா என்று
இந்த மேட்டர் அமர்க்களம். ஆனால் ஏனோ இப்படத்தில் ஏனோ ரொம்ப சைவமாக இருந்திருக்கிறார்கள்.
ஓங்குதாங்காக ரேஸ் குதிரை மாதிரி ப்ரூனோ அப்துல்லா இருக்கிறார். செம கட்டை என்று சொல்லமுடியாவிட்டாலும்,
சொல்லிக் கொள்ளும்படியாக ஓமணக் குட்டி இருக்கிறார். இருவரையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
மாதிரிதான் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த பாலியல் விடுதி பாடல் காட்சியும்
ஆகா, ஓகோவென்று இல்லை. ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்கிற திரைப்படத்தில் அபாரமாக எடுக்கப்பட்ட
பாடல்காட்சி ஒன்றின், சுமார் பிரதியாகவே அப்பாட்டும் அமைந்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் பில்டப் பாடல் நிச்சயமாக
இதுவரை தமிழில் படமாக்கப்பட்ட மிகச்சிறப்பான பாடல் என்று சொல்லலாம். முழுக்க கிராஃபிக்ஸ்,
யுவன்ஷங்கரின் அதிரடி மியூசிக், நா.முத்துக்குமாரின் ஷார்ப் லிரிக்ஸ், அல்டிமேட் ஸ்டாரின்
அதிரடி ஸ்டைல் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் பாட்டு இது. பில்லா-வின்
தீம் மியூசிக் படத்தின் தொடக்கத்தில் எங்கும் வந்துவிடாத அளவுக்கு யுவன்ஷங்கர்ராஜா
மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். டேவிட் பில்லா, டான் ஆகும் இடைவேளைக் காட்சியில்தான்
(அதுவும் மெல்லியதாக) அந்த இசையைக் கொண்டு வருகிறார். அதுபோலவே பில்லா-1ல் வரும் இண்டர்போல்
ஆபிஸர், ப்ரீக்குவலிலும் ஒரு காட்சியில் பில்லா சாதா ஆளாக இருக்கும்போது அவருக்கு அறிமுகமாகிறார்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் தொடர்ச்சி கெடாதவகையில், முன்கதையை கையாளுவது சாதாரணமான
விஷயமல்ல. பில்லா-2 அவ்வகையில் பர்ஸ்ட் க்ளாஸில் தேறுகிறது.
படத்தின் வசனங்கள் ‘ஷார்ப்’ என்றாலும், ஓவர் புத்திசாலித்தனமோ
என்றுகூட ஒருக்கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. பில்லாவின் உலகம் முட்டாள்கள் அற்றது
என்று தோன்றுகிறது. ‘தல’ எதைப் பேசினாலும், அது ‘பஞ்ச்’ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று
இயக்குனர், வசனகர்த்தாவிடம் கேட்டுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அக்கா செத்துப்
போகும்போது சுடுகாட்டுக்கு வந்தும், ‘தல’ ஏதாவது பஞ்ச் வைத்துவிடுவாரோ என்று மனசு பதறுகிறது.
“இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள்
செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள்,
இதற்கு முன்பாக ஏதாவது சினிமா பார்த்திருக்கிறார்களா என்றே சந்தேகம் வருகிறது. திரைக்கதை
கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் படமாக்கம், நடிகர்களின் ஃபெர்பாமன்ஸ், கேமிரா, எடிட்டிங்
என்று தொழில்நுட்பரீதியாக சிறப்பான விருந்து பில்லா-2.
படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.
படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.
அஜீத் ரசிகர்களுக்கு அட்டகாசம். ஆக்ஷன் பிரியர்களுக்கு
விஷூவல் ட்ரீட். இந்த இரண்டு கேட்டகிரியிலும் இல்லாதவர்கள் பவர்ஸ்டாரின் ‘ஆனந்தத் தொல்லை’
ஆகஸ்ட்டில் வெளியாகும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான்.