24 ஜனவரி, 2013

அலெக்ஸ் பாண்டியன்

ஒண்ணில்லே.. ரெண்டில்லே.. மூணு லட்டு. மொத்தமா அலெக்ஸ் பாண்டியனுக்குதான்.

சினைக்காக தன்னுடைய காளையை பசுக்களுக்கு கூட்டிக் கொடுக்கும் கவுரவமான வேலையை செய்து அமைதியாக கிராமத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். லட்டு மாதிரி அவருக்கு மூன்று தங்கைகள். தூரத்து சொந்தக்காரனாக வீட்டுக்கு வரும் அலெக்ஸ் பாண்டியன் லட்டுகளை கடித்துவிடாமல் எப்படி சந்தானம் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் என்பதுதான் இடைவேளை வரை கதை.

ஆதித்யா சேனல் பார்த்துக்கொண்டே திரைக்கதை எழுதியிருக்கிறார் சுராஜ். கவுண்டமணியின் சினிமா கேரியரில் வந்த அத்தனை காமெடிகளையும் திரும்ப ரீபூட் செய்திருக்கிறார். அட்வான்ஸ் வாங்கியாச்சி, ஏதாவது கதை சொல்லணுமே என்று கார்த்தியிடம் ப்ரெஷ்ஷாக ஒரு கதையை சொல்லியிருப்பார் போல. டைட்டில் சீன் முரட்டுக்காளையின் க்ளைமேக்ஸில் இருந்து உருவியது. செகண்ட் ஹாஃப் சென்ற ஆண்டின் மெகா ஃப்ளாப்பான மாற்றானில் இருந்து உருவியது. இடையில் சந்தானத்தையும், கவர்ச்சிகரமான அவரது தங்கைகளையும் இட்டு நிரப்பி மானே, தேனே போட்டிருக்கிறார்.

இடையில் மக்கள் கட்சி என்று ஒரு கட்சியின் உள்கட்சிப் பிரச்ச்னையை ஏன் காட்டுகிறார் என்றே புரியவில்லை. சரவணன் ஒரு ஆளை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறார். அவருடைய தம்பிக்கு கார்த்தி மொட்டை போடுகிறார். சரவணன் பெயிலில் வந்ததுமே அவரை சித்தப்பூ என்று கட்டிக் கொள்கிறார். பிறகு சரவணனையும் காணோம். மொட்டைத் தம்பியையும் காணோம். படம் பார்த்தவனுக்கு கொட்டைதான் மிச்சம். ஐ மீன் ருத்திராசக் கொட்டை.

மொக்கையாக இருந்தாலும் பர்ஸ்ட் ஹாஃப் செம மஜா. சந்தானத்தின் மூன்று தங்கைகளும் நைட்டியோடு அலெக்ஸிடம் கதை கேட்கிறார்கள். கய் எல்லாம் அப்பட்டமாக தெரிகிறது. ஸ்லீவ்லெஸ் என்பதால். கேரம்போர்ட் ஆடுகிறார்கள். அலெக்ஸை பார்த்து மூன்று பேரும் இந்த காயை அடிங்க மாமா, அந்த காயை அடிங்க மாமா என்று கொஞ்சுகிறார்கள். இந்த காட்சிகளை பார்க்கும் நமக்கே அலெக்ஸை நாலு அப்பு அப்பவேண்டும் என்று தோன்றும்போது, லட்டுகளின் அண்ணன் சந்தானத்துக்கு எப்படி இருக்கும்?

”உங்க தங்கச்சிகளை நான் பாதுகாப்பா பார்த்துக்கறேன் மச்சான்” - அலெக்ஸ்

"டேய் பாலுக்கு பூனை காவலா?” - சந்தானம்

“என்னை பால்னு சொல்றீங்களா மச்சான்?”

”நீ பால் இல்லைடா.. பூ.. பூ.. பூ... பூனை”

எப்பூடி?

எல்லாவற்றையும் மன்னித்து விடலாம் இயக்குனர் சுராஜ் அவர்களே. ஒரே ஒரு காட்சியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏற்கனவே எட்டுநூறு வாட்டி வயசுக்கு வந்துவிட்ட தோற்றத்தில் இருக்கும் சந்தானத்தின் மூன்றாவது தங்கச்சி பூப்படைந்து விட்டதாக ஒரு சீன் வருகிறதே? சின்னத்தம்பியில் பி.வாசு நிகழ்த்திய ரெக்கார்டை இந்த விஷயத்தில் உடைத்திருக்கிறீர்கள் என்று நீங்களும், உங்கள் டீமும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
1947, ஆகஸ்ட் 15 அன்று என்னுடைய தாத்தா காஞ்சிபுரம் சிறுணை நாராயணசாமி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்று எப்படி விடுதலையாக ஃபீல் செய்திருப்பார் என்பதை கடைசியாக உணர்ந்தே விட்டேன். ‘ரிட்டர்ன் & டைரக்டட் பை சுராஜ்’ என்கிற எண்ட் கார்டை பார்த்தபோது.

21 ஜனவரி, 2013

விஸ்வரூபம்

இரா.முருகனை ரொம்பவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுத்துலக வாரிசு இவர்தான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறேன். ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ வந்துக் கொண்டிருந்தபோது, இரா.முருகனை வாசிக்க ஆரம்பித்தேன். கதைகளும் எழுதுவார் என்று பிற்பாடுதான் தெரிந்தது.

நல்ல கட்டுரையாளர்கள் சுமாரான கதைசொல்லிகளாக இருப்பார்கள். சுவாரஸ்யமாக கதை எழுதுபவர்கள் சுமாராக கட்டுரை எழுதுவார்கள். ரெட்டை மாட்டு வண்டியை சிறப்பாக ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மிகக்குறைவானவர்களே. முருகன் இரண்டையும் சிறப்பாக ஓட்டுபவர் என்பதால்தான், அவரை சுஜாதாவின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
இணையத்திலும், நூல்களிலுமாக ஆங்காங்கே வாசித்த இரா.முருகனின் எழுத்து பிடித்துப் போனதால்தான் சிலவருடங்களுக்கு முன்பாக பெரும் பட்ஜெட் செலவில் அவரது முழு கதைகள் தொகுப்பினை வாங்கினேன். முருகனின் கதைகள் பெரும்பாலும் nostalgia தன்மை கொண்டவை. நாம் ஒருவாறாக கற்பனைகூட செய்து பார்த்துவிட முடியாத அறுபதுகளின், எழுபதுகளின் நடுத்தர வாழ்க்கையை முழுவதுமாக அவிழ்த்து நிர்வாணமாக முன்வைப்பவை. அவருடைய புனைவுகளில் ‘நெம்பர் 40, ரெட்டைத்தெரு’ (சாரு அடிக்கடி சொல்லும் பயோஃபிக்‌ஷன் வகை) தான் மாஸ்டர்பீஸாக இருக்க முடியும். பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இணைந்து நடித்த ‘ரெட்டைச் சுழி’ படத்துக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன் என்று படம் வரும்போது பேசப்பட்டது.

அபுனைவுகளில் முருகனின் எளிமையும், துல்லியமும் அசாத்தியமானது. ராயர் காஃபி க்ளப், லண்டன் டயரி இருநூல்களும் இணையத்தில் (ப்ளாக், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு) தமிழில் எழுத விரும்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது. எதை சொல்லலாம், எதை விழுங்கலாம், சொல்ல வேண்டியவற்றை சொல்லவேண்டிய முறை என்றெல்லாம் பாடம் எடுக்கக்கூடிய தகுதிபெற்றவை இந்நூல்கள். பத்திரிகைகளுக்கும், நூல்களுக்கும் இருக்கும் தன்மை இணையத்துக்கு அப்படியே பொருந்தாது என்கிற பிரக்ஞை முருகனுக்கு இருக்கிறது. இணையத்தில் வாசிப்பவர்களின் பல்ஸ் அவருக்கு அத்துப்படி. எனவேதான் அவர் இணையத்தில் எழுதும்போது இணையவாசகர்களின் வாசிப்புமுறையை உணர்ந்து, அதற்கேற்ற மொழிநடையை பயன்படுத்துகிறார்.

ஐ.டி. புரட்சி ஏற்பட்டு எல்லோரும் தீயாய், பேயாய் ஐ.டி. படிக்க காவடி தூக்கியபோது அவர் எழுதிய நாவல் ‘மூன்று விரல்’. சாஃப்ட்வேர் துறை வெறுமனே அதில் பணிபுரிபவர்களுக்கு பணம் காய்க்கும் மரமல்ல, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு.. அரசியலுக்கு இடையே இயங்கிவருகிறது என்பதை வாழைப்பழத்தில் மாத்திரை சொருகி இயல்பாக சொல்லியிருந்தார். இத்துறை குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு இதுவாகத்தான் இருக்கும். 
முருகனின் பணிகளில் பிரமிக்க வைத்தது நிச்சயமாக ‘அரசூர்வம்சம்’தான். புனைவுவழியாக அவரது முந்தையத் தலைமுறைகளுக்கு இடையே பயணிக்கும் முயற்சி அது. ஒருமாதிரி கடாமுடா மொழிநடையில், முன்னுக்கும் பின்னுக்குமாக நான்லீனியராக மாறி, மாறி பயணிக்கும் கதை. வாசிப்பு உழைப்பை வெகுவாக கோரும் நாவல் என்பதால், உள்நுழைய சற்று சிரமமாக கூட இருக்கும். முருகனின் வேவ்லென்த்தை சரியாக கேச் செய்ய முடிந்துவிட்டால், அட்டகாசமான அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிது அரசூர் வம்சம்.

இந்நூல் குறித்து சமகால இலக்கியவாதிகள் பெரிதாக ஏன் சிலாகிக்கவில்லை என்பது எப்போதுமே எனக்கு ஆச்சரியமான ஒன்று. புதிய முறையில் சொல்லப்படும் ஒன்றை வாசகர்கள் புறக்கணிப்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். சக படைப்பாளிகளும் பாராமுகம் காட்டுவதை காணும்போதுதான் நம் தற்போதைய இலக்கியச்சூழலின் அவலத்தை உணரமுடிகிறது. 

அரசூர் வம்சம் அதோடு முடிந்துவிடவில்லை. ஒரு டிரையாலஜி என்கிறார் இரா.முருகன். இதில் இரண்டாம் நூலான ‘விஸ்வரூபம்’ இப்போது கிழக்கு மூலமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. எழுத்துக்காக தேசியவிருது பெற்ற ஓவியர் ஜீவானந்தத்தின் அருமையான ஓவியமுகப்போடு, அட்டகாசமான பேக்கிங்கில் புஷ்டியான புத்தகம். 792 பக்கம். நானூறு ரூபாய் விலை. இவ்வருட முதல் சாய்ஸ் இதுதான். அடுத்த புத்தகக் காட்சிக்குள் வாசித்து முடித்துவிட வேண்டும். அதற்குள் மூன்றாவது மற்றும் இறுதிப்பாகம் வந்துவிடும்.
விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அரசூர் வம்சத்தை வாசித்துப் பிடித்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நானூறு ரூபாய் இன்வெஸ்ட் செய்யலாம். சில அத்தியாயங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்கிற முறையில், இரா.முருகன் ஏமாற்ற மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கலாம். புதியதாக வாசிக்க விரும்புபவர்கள் டிரைலராக அரசூரை முயற்சித்துவிட்டு, விஸ்வரூபத்துக்குள் குதிக்கலாம்.

ஆனால், கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இரா.முருகன்தான் வசனம். அதிலிருந்து தொடர்ச்சியாக கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார். எனவே விஸ்வரூபத்திலும் இரா.முருகனின் பங்களிப்பு நிச்சயமிருக்கும்.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல். கமல் டவுசர் போட்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை இரா.முருகன் சிவகங்கை தெருக்களில் பார்த்திருக்கிறார். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். களத்தூர் கண்ணம்மாவில் நடித்து ஃபேமஸ் ஆகியிருந்த அப்போதைய கமலைப் பார்த்து சற்று பொறாமையாக இருந்ததாககூட முருகன் எழுதியிருக்கிறார்.

இரா.முருகன் என்று கூகிளிட்டு தேடினால், பதிவின் மேலே காணக்கிடைக்கும் படம் கூகிளில் கிடைத்தது. கண்ணுக்கு பசுமையாக தெரிவதால் அதையே படமேற்றிவிட்டேன். இரா.முருகனின் வண்ணப் படத்தை அவருடைய இணையத்தளமான Era.முருகன்.inல் பார்த்துக் கொள்ளலாம்.

17 ஜனவரி, 2013

சமர்

ஒரு கும்பல் சட்டவிரோதமாக காட்டில் மரம் வெட்டுகிறது. டார்ஜான் பாணியில் பாய்ந்துவரும் ஹீரோ அத்தனை பேருக்கும் அல்லு கழண்டிட சுளுக்கெடுக்கிறார். ஓபனிங் பில்டப் சாங்.

அய்யய்யோ இன்னொரு விஷால் ஃபார்முலா படமா என்று நொந்து, தளர்ந்துப் போனால்.. சட்டென்று பாங்காக்குக்கு பைபாஸில் அழைத்துப்போய் சீட்டு நுனிக்கு நகர்ந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். பிறகு க்ளைமேக்ஸ் வரை நிமிர்ந்த முதுகு தளரவேயில்லை. ‘தீராத விளையாட்டுப் பிள்ளைஎன்கிற படாபேஜாரான மொக்கைப்படத்தை எடுத்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர் திருவும், ஹீரோ விஷாலும்,.

படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் கவுதம சித்தார்த்தமன் ஃபேஸ்புக்கில் அட்ராசிட்டி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடையது என்று சொல்லும் கதைக்கும், சமர் படத்தின் கதைக்கும் ஒருவரி ஒற்றுமை இருப்பது உண்மைதான். ஆனால் முன்பாகவே ஹாலிவுட்டில் இதுமாதிரி நிறைய பார்த்திருக்கிறோம். இதே கதையை காமிக்ஸாக கூட படித்திருப்பதாக நினைவு. ‘டெத் ரேஸ்மாதிரியான கேம் சப்ஜெக்ட். நம்மோடு படம் பார்த்த சினிமாப் பத்திரிகையாளர் ஒருவர்அச்சு அசலாக ஒரு கொரியன் படத்தை தழுவியிருக்கிறார்கள்என்றார்.

இந்தப் பஞ்சாயத்தை எல்லாம் தாராளமாக மன்னித்து விடலாம். தரைக்கு நாலடி மேலே மிதந்துக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோவான புரட்சித்தளபதி விஷாலை வைத்து விறுவிறுப்பான, புதுமையான மாஸ் த்ரில்லரை எடுத்திருப்பதால். கதைக்களம் தாய்லாந்து என்பதால், சாக்காகபலானமேட்டரை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தவில்லை. ஃபாரினில் படமெடுக்கிறோம், ஃபாரினில் படமெடுக்கிறோம் என்று கூவிக்கூவி தேவையில்லாமல் ஊர் சுற்றிக் காட்டவில்லை. திரைக்கதைக்கு நேர்மையாக விறுவிறுவென சீன்பிடித்து உழைத்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பட இயக்குனருக்கும், இரண்டாம் நிலை ஹீரோவுக்கும் குருவித்தலையில் பனங்காய் மாதிரி வெயிட்டான சப்ஜெக்ட்தான். ஆக்ச்சுவலி விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்க வேண்டிய அளவுக்கு கூடுதல் கனமான கதையிது. ஆனாலும் குருவிகள் சாமர்த்தியமாக பனங்காயை சுமந்திருக்கின்றன. யுவன்ஷங்கர் ராஜாவின் பலவீனமான இசையைத் தாண்டியும்பக் பக்காட்சிகள் திரையை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. அடுத்தடுத்த ட்விஸ்டுகள் சுனாமியாய் அறைந்து சுவாரஸ்யப்படுத்துகின்றன.

படம் முழுக்க பிரும்மாண்டமாக தெரிந்தாலும், க்ளைமேக்ஸ் எடுக்கும்போது தயாரிப்பாளரின் பேங்க் பேலன்ஸ் தீர்ந்துவிட்டிருக்கலாம். மெரீனா பீச்சிலேயே சிம்பிளாக முடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விஷாலின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வண்ணமாகபஞ்ச்டயலாக் ஃபயர் பற்றிக்கொண்டு எரிகிறது. வில்லன்கள் இருவரையும் அஜீத்தாகவும், விஜய்யாகவும் நினைத்து விஷாலின் ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள்.

இந்தியில் பத்தாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரி கதைகளை கொடுத்து ரசிகர்களை தயார்படுத்தி விட்டார்கள். அவ்வகையில் தமிழுக்குசமர்ஒரு ஓபனர். இயக்குனர் திரு திறந்துவிட்ட இந்த வாசலில் இன்னும் நிறைய இயக்குன இளைஞர்கள் புகுந்து சிந்தித்து, உருவாக்கி வித்தியாசமான களங்களை வணிக சினிமாவில் உருவாக்குவார்கள்.

சமர் : எழுந்து நின்று இருகை தட்டி வரவேற்க வேண்டிய திரைப்படம்!

16 ஜனவரி, 2013

மரியாவின் சவால்

அக்டோபர் 28, 2007. பதினான்கு வயது மரியா செத்துப்போனாள்.
நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவள் மீது கார் மோதியது. காரை ஓட்டிவந்தவன் இருபது வயது இளைஞன். கண்மண் தெரியாத அளவுக்கு குடித்திருந்தான். மரியாவோடு நடந்து வந்த நண்பர்களுக்கும் படுகாயம். மருத்துவமனையில் பல மணி நேரம் வலியோடு துடிதுடிக்க உயிருக்குப் போராடி பரிதாபமாக மரணித்தாள் மரியா.
அமெரிக்காவில் இருக்கும் மாண்டனா ஒரு குடிகார மாகாணம். அந்நாட்டிலேயே அதிக குடிகாரர்கள் வசிக்கும் மாகாணங்கள் முதல் ஐந்தில் மாண்டனாவும் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் பட்டே நகரில்தான் மரியா வசித்தாள். அவளுடைய அகால மரணத்தையடுத்து, குடிப்பழக்கத்துக்கு எதிராக இங்கே கிளம்பிய குரல், இன்று அமெரிக்கா முழுக்க எதிரொலிக்கிறது.
மரியாவின் மரணத்தையடுத்து அவரது தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தவும், அவரது தந்தை மெக்கார்த்தியிடம் துக்கம் விசாரிக்கவும் அவளது வீட்டில் கூடினார்கள். நியாயமாகப் பார்க்கப்போனால் மகள் இறந்த துக்கத்திலிருந்த மெக்கார்த்தி, அவளது அநியாய மரணத்துக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கில் போடவேண்டும் என்றுதான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதானமாக யோசித்தார். குடிபோதையில் கார் ஓட்டிவந்தவனை குடிநோயாளியாகதான் பார்த்தார். நோய்க்கு சிகிச்சைதான் அவசியம். தண்டனையல்ல என்று நினைத்தார்.
மரியா சவப்பெட்டியில் கிடக்க, சக மாணவியின் திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில் பயந்துப்போயிருந்த குழந்தைகளிடம் ஓர் உரை நிகழ்த்தினார் மெக்கார்த்தி.
“குழந்தைகளே! மரியாவின் மரணத்தோடு நம்முடைய நம்பிக்கைகள் முற்றுப்பெற்றுவிடப் போவதில்லை. இந்த அகால மரணத்தின் பின்னணியில் இருக்கும் பிரச்னைகளை நாம் பேசியாகவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
நான்கே நான்கு ஆண்டுகள் மட்டும் நான் சொல்வதை கேளுங்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த சவாலை வெல்பவர்களுக்கு இறுதியில் நான் பணம் தருவேன்”
மரியாவின் குரலாகவே அவரது தந்தையின் குரலை மாணவர்கள் கேட்டார்கள். அவரது சவாலில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் இவைதான்.

* உங்களது வயது இருபத்தி ஒன்றுக்கு கீழே இருந்தால் நீங்கள் மதுபானத்தை தொடவே கூடாது. யாரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனத்தில் ஏறக்கூடாது.

* இருபத்தி ஒன்று வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் குடிப்பதை நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது உங்கள் தேர்வு. ஆனால் குடித்துவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக நீங்கள் திகழ வேண்டும்.

* நீங்கள் மதுபானம் விற்கும் பணியில் இருப்பவரேயானால் குழந்தைகளின் கைக்கு அது கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் இருப்பவரேயானால் நமது சட்டத்தை முழுமையாக பின்பற்றி குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மெக்கார்த்தியால் வெளியிடப்பட்ட ‘மரியாவின் சவால்’, அவள் வயது குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பொருந்தியது. இந்த சவால் விவரம் ஊடகங்களில் வெளியாக, அடுத்த சில நாட்களிலேயே சுற்றுவட்டார மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இச்சவாலை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து மரியாவின் சவால் குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
மெக்கார்த்தி சொல்பேச்சு தவறாதவர். முதல் கட்டமாக சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி கண்ட 140 பேருக்கு தலா ஆயிரம் டாலர் (நம்மூர் பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்) வழங்கினார். மரியா இறந்த விபத்தில் அவளோடு படுகாயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோரும் மெக்கார்த்தியோடு இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த உதவித்தொகை விவரத்தை கேள்விப்பட்ட பல நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மரியாவின் சவாலை ஏற்றுக்கொண்டு வெல்பவர்களுக்கு பணம் தர ஒப்புக் கொண்டது. அமெரிக்காவெங்கும் இப்போது பலரும் இந்தப் பணிக்கு பொருள்ரீதியான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
பீப்பிள் பத்திரிகை மெக்கார்த்தியை நாட்டின் முக்கியமான முப்பது நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராய் புகழாரம் சூட்டியது. ஐம்பத்தி இரண்டு வயதாகும் மெக்கார்த்தி இப்போது அமெரிக்காவின் ஹீரோ.  2012ன் சிறந்த மனிதர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டிருக்கும் முதல் பத்து பேரில் மெக்கார்த்தியும் இடம்பெற்றிருக்கிறார்.
மரியாவின் சவாலை நாமும் எடுத்துக் கொள்ளலாம். http://www.mariahschallenge.com என்கிற இணையத்தள முகவரிக்கு சென்று, இச்சவாலை ஒப்புக்கொள்வதாக ஒப்பந்தம் இடவேண்டும். சவால் காலத்தில் குடி தொடர்பான எந்த குற்றச்சாட்டும் பெறாதவர்கள், சவால் காலம் முடிந்தவுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மரியாவின் சவால் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று 300 வரிகளில் விளக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பவர்களை மெக்கார்த்தியும், அவரோடு இணைந்திருப்பவர்களும் நேர்முகம் காண்பார்கள். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்டு குழந்தைகளும் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் மெக்கார்த்தி அதற்காக மகிழ்ச்சியடைவாரே தவிர, கூடுதல் பரிசு தரவேண்டியிருக்கிறதே என்று சோர்ந்துவிட மாட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் மரியாவின் சவால் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சவாலை வென்று உதவித்தொகை பெற்ற ஜோஷ் என்கிற மாணவர் சொல்கிறார். “பார்ட்டிகளில் குடிப்பதை தவிர உருப்படியான நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன என்பதை மரியாவின் சவால் உணர்த்தியது. இப்போது இரண்டு பகுதிநேர வேலைகளை செய்து, நிறைய பணம் சம்பாதிக்கிறேன். விளையாட்டுகளிலும் ஆர்வமாக பங்கேற்கிறேன். இந்தப் பாதையில் பயணம் செய்ததால் நிறைய பேருக்கு என் மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நிறைய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது”
மாணவப் பருவத்தில் குடியைத் தொடாதவர்கள் பெரும்பாலும் பிற்பாடு அப்பழக்கத்துக்கு அடிமையாவதில்லை. மரியாவின் சவால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தருவதால், அவர்களது எதிர்காலம் குடிநோயில் வீழாமல் பாதுகாப்பானதாக மாறுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் பலரும் கூட இச்சவாலை ஏற்றிருக்கிறார்கள். உதவித்தொகைக்காக அல்ல. குடிப்பது தவறு என்று குழந்தைகளுக்கு போதிக்கும் முன்பாக, தாங்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற தார்மீக உணர்வுக்காக.
“மரியாவை நான் திரும்பப் பெற முடியாது. ஆனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு ஒரு தந்தைக்கு ஏற்படாமல் தடுக்க முடியும்” என்கிறார் மெக்கார்த்தி.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சவால் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய அவசரத்தேவை.

12 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் காட்சி – சில விளம்பரங்கள்


முத்து காமிக்ஸின் நாற்பதாண்டு பயணநிறைவை கொண்டாடும் வகையில் ‘never before special’ஐ கொண்டு வந்திருக்கிறது. 456 பக்கங்கள். ரூ.400/- விலை. தரமான இந்த வண்ணப் புத்தகத்தின் விலை நியாயமாகப் பார்க்கப் போனால் ஆயிரம் ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

புத்தகக் காட்சியின் முதல் நாள் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் முத்து காமிக்ஸ் ஸ்டால்தான். பயங்கர கூட்டம். முத்துவின் நிறுவனர் சவுந்தரபாண்டியன், ஆசிரியர் எஸ்.விஜயன், விஜயனின் மகன் என்று மூன்று தலைமுறையையும் ஒருங்கே ஸ்டாலில் காணமுடிந்தது. காமிக்ஸ் வாசகர்களோடு அவர்களது உரையாடல் நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியது.

நெவர் பிஃபோர் ஸ்பெஷலைத் தவிர்த்து பழைய லயன்/முத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டால் எண் 343.

ஸ்டால் எண் 300ல் ‘ஸ்டார் காமிக்ஸ்’ விற்பனைக்குக் கிடைக்கிறது. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை இன்னமும் குறைந்த பிரதிகளே மிச்சமிருக்கின்றன. விலை ரூ.100. ஹார்ட்பவுண்ட் அட்டை, கண்ணைப் பறிக்கும் வண்ணமென்று இந்த காமிக்ஸும் பட்டாசுதான்.

இணையத்தில் பிரபலமான நண்பர் நர்சிம்மின் ‘ஒரு வெயில் நேரம்’ சிறுகதைத் தொகுப்பு பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்தில் எழுதிய சில சிறுகதைகள், இதழ்களில் வெளிவந்தவை என்று கலந்துக்கட்டி தொகுப்பாக்கி இருக்கிறார்கள். கதைகளில் ஆர்வமிருக்கும் வாசகர்கள் வாங்கலாம். நிச்சயம் ஏமாற்றாது என்பதற்கு நான் கேரண்டி. நர்சிம்மின் ‘உன்னை அழைத்துப்போக வந்தேன்’ கவிதைத் தொகுப்பும் இதே பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ’கேபிளின் கதை’ நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. நம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போய்விட்ட ‘கேபிள் டிவி’யின் பின்னணியை அறிந்துக்கொள்ள இந்நூல் உதவும்.

சத்ரபதி வெளியீடான ‘சின்மயி விவகாரம் : மறுபக்கம்’ ஒரு முக்கியமான நூலாக படுகிறது. பணத்திமிர் பிடித்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், பிரபலங்களும் சாமானிய மனிதர்களை போட்டுத் தள்ளுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறைதான். அதை ஓர் எழுத்தாளர் தட்டிக்கேட்டு, விவகாரத்தின் முழுமையான பார்வையை ஒரு நூலாக கொண்டுவருவது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. “முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். அவர் எழுத்தாளர்தான் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது. கிழக்கு, காலச்சுவடு ஸ்டால்களில் இந்நூலை வாங்கலாம்.