கோதாவரி இந்தியாவின் இரண்டாவது நீளமான நதி. கங்கைக்குப் பிறகு இதுதான். 1465 கி.மீ. தூரம் பாய்கிறது. மகாராஷ்டிராவில் பிறந்து, ஆந்திராவை வளப்படுத்தி, தக்காண பீடபூமியை கடந்து வங்கக்கடலை அடைகிறது. கங்கையைப் போலவே இந்துக்களுக்கு இதுவும் புண்ணிய நதி. தென்னிந்தியாவில் ராமர் கோயிலுக்கு புகழ்பெற்ற புண்ணியத்தலமான பத்ராச்சலம் இந்நதியின் கரையில்தான் அமைந்திருக்கிறது.
வேண்டுவதை தருவாள் கோதாவரி. வேண்டாததை செய்தால் அழித்துவிடுவாள் என்றொரு நம்பிக்கை. 1986ல் அழித்துவிட்டாள். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையில் கோதாவரியின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. சென்ற இடமெல்லாம் பெரும் நாசம். ஊருக்குள் புகுந்த வெள்ளம் மொத்தத்தையும் துடைத்துச் சென்றது. உயிரிழந்தோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. உயிர் பிழைத்தோர் அனைத்தையும் இழந்திருந்தனர். மூன்று நாட்களுக்கும் மேலாக சோறு தண்ணியில்லாமல் பத்ராச்சலம் ஸ்ரீசீத்தாராமச்சந்திர சுவாமி கோயிலில் ஒடுங்கிப் போயிருந்தவர்களை காக்க நேவி ஹெலிகாஃப்டர்கள் விரைந்தன. நகர்ப்புறங்களே நாசமென்றால், கிராமங்களின் கதி? மஞ்சள் நதி இம்மாதிரி சீற்றம் கொண்டு சீனாவை பேரழிவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தை ‘சீனாவின் துயரம்’ என்பார்கள். கோதாவரியின் கோபத்தை ‘ஆந்திராவின் துயரம்’ என்றும் சொல்லலாம். இருபத்தேழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்களை நினைத்து மழை பெய்யும் போதெல்லாம் இன்னமும் நடுங்குகிறார்கள்.
கோதாவரி பேரழிவை கவிஞர்கள் கவிதையாக வடித்துத் தள்ளியதைப் போல, எழுத்தாளர்களும் கதைகளாக எழுதித் தள்ளினார்கள். அதில் ஒரு நூல்தான் கோதாவரி கதைலு. பி.வி.எஸ்.ராமராவ் எழுதியிருந்தார். 1989ல் வெளிவந்த இந்த புத்தகம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இதை வாசித்த லட்சுமி மஞ்சுவுக்கு கோதாவரி வெள்ளத்தை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி மோகன்பாபு. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறார். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என்று ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு ’டஃப் ஃபைட்’ கொடுத்தவர். நம்மூர் நாட்டாமை தெலுங்கில் ’பெத்தராயுடு’வாக படமானபோது இவர்தான் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பக்கால நண்பரும் கூட. ரஜினியை மாதிரியே தமிழில் ஆரம்பத்தில் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், தெலுங்குக்கு செட்டில் ஆகி ஹீரோவானார். இவருடைய மூத்த மகள்தான் லட்சுமி மஞ்சு. அடுத்த இரண்டு மகன்களும் கூட ஆந்திராவில் ஹீரோக்கள்தான். குடும்பத்தோடு கலைச்சேவை.
ஆந்திரப் பெற்றோர் என்றாலும் லட்சுமி மஞ்சு சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பார். சினிமா அவருக்கு உயிர். அமெரிக்கா சென்று கலைத்துறையில் பட்டம் பெற்றார். ஏராளமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பெரிய விளம்பரங்களில் தோன்றினார். சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்றவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இருந்தும் தாய்மண் ஆந்திரா அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது.
ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் (வயதும் முப்பத்தைந்து என்பது ஒரு காரணம்) கிடைத்த வித்தியாசமான வேடங்களில் –வில்லியாக கூட- நடிக்க ஆரம்பித்தார். எம்.பி. கார்ப்பரேஷன் என்று புதிய நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரித்தார். தம்பிகள்தான் ஹீரோ. ராம்கோபால் வர்மாவின் ‘தொங்லா முத்து’, ‘அனகனகா ஒரு தீரடு’ போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ‘டிபார்ட்மெண்ட்’ படத்தில் சஞ்சய்தத்தின் மனைவியாக வந்தவர் இவர்தான். சமீபத்தில் நம்முடைய ‘கடல்’ படத்திலும் தமிழில் அறிமுகமானார். தெலுங்கின் மாற்று சினிமா முகமாக லட்சுமி மஞ்சு உருவெடுத்துவிட்டாலும் பெரிய ‘பிரேக்’ ஒன்றுக்காக மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்.
’கோதாவரி கதைலு’க்கு முறைப்படி பேசி சினிமாவாக்க உரிமை பெற்றார். சினிமாவுக்கு ஏற்றவகையில் கதை மாற்றப்பட்டது. புதுமுக இயக்குனரான குமார் நாகேந்திராவுக்கு வாய்ப்பளித்தார். “அமெரிக்காவில் என்னுடைய திறமைக்காகதான் வாய்ப்புகள் கிடைத்தது. மோகன்பாபுவின் மகள் என்பதற்காக அல்ல. நானும் ஒரு திறமையாளருக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறே” என்றுகூறி குமார்நாகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். இவர் விளம்பரப்பட இயக்குனர். இவரது சில விளம்பரங்கள் மஞ்சுவை அசத்தியிருந்ததாலேயே இந்த அரிய வாய்ப்பு வீடு தேடி வந்தது.
2011 ஜனவரியில் இந்த படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார் மஞ்சு. இளையராஜாவின் தீவிர ரசிகையான அவர் ராஜாதான் இப்படத்துக்கு இசையமைத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் கிடந்தார். ஏனெனில் அவரது இசைதான் நதியை அழகாக்கும் என்பது மஞ்சுவின் எண்ணம். நான்கு மாதங்கள் கழித்து ராஜா ஒப்புக்கொண்டார். மூணாறு சென்று பாட்டுக்கு ட்யூன் போட்டார். ராஜாவின் இசை கோதாவரிக்கு ஆக்சிஜென் மாதிரி. அருமையான பாடல்கள் கிடைத்ததுமே படம் மடமடவென்று வளர ஆரம்பித்தது. ராஜா கொடுத்த தெம்பால் தமிழ்/தெலுங்கு இருமொழிகளிலும் படத்தை வெளியிட முடிவெடுத்தார் மஞ்சு. ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று தமிழ் வெர்ஷனுக்கு பெயர் சூட்டப்பட்டது.
40 ஏக்கர் நிலம் மொத்தமாக வாடகைக்கு எடுத்தார்கள். ராஜமுந்திரிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தை புதுசாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கினார். ஆயிரக்கணக்கான லாரி தண்ணீரை பயன்படுத்தி மினி-கோதாவரி நதியை செட்டிங்கிலேயே உருவாக்கினார்கள் (லைஃப் ஆப் படத்தில் கடலையே செட்டு போட்டது போல). காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிக்க மொத்தம் 50 கேமிராக்கள். கிராபிக்ஸுக்கும் வெள்ளமாக செலவழித்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்துக்காக படத்தின் வெளியீடு பல முறை தள்ளி வைக்கப்பட்டது.
படத்தின் கதை என்னவோ சிம்பிள்தான். ஆதி-மஞ்சு இருவருக்கும் திருமணம் ஆகிறது. கோதாவரியில் வெள்ளம் பாய்கிறது. கிராமங்கள் மூழ்குகின்றன. தன்னுடைய முன்னாள் காதலிக்கு என்னானதோ என்று ஆதி அலைபாய்கிறார். மஞ்சுவும் தன்னுடைய முன்னாள் காதலனை நினைத்துப் பார்க்கிறார். ஃப்ளாஷ்பேக்குகளில் காட்சிகள் விரிகின்றன.
இடையில் ஆதி-டாப்ஸி ‘லிப்-லாக்’ காட்சி ஒன்று படத்தில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. என் வாழ்க்கையிலேயே முதல்தடவையாக இப்போதுதான் இவ்வளவு டீப் கிஸ் அடிக்கிறேன் என்று டாப்ஸியும் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டார். இந்த ஒரு காட்சிக்காகவே படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவோம் என்று சென்ஸார் பயமுறுத்த, கஷ்டப்பட்டு எடுத்த அக்காட்சியை நீக்கி யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இது வெறும் படமல்ல. மஞ்சுவின் கனவு. தன்னை நிரூபிக்க பயன்படும் வாய்ப்பாக இப்படத்தை நினைக்கிறார். அதனால்தான் என்னவோ உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8க்கு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் தமிழ் டப்பிங் பணிகள் சரியாக முடியாததால், தமிழ் வெளியீடான ‘மறந்தேன், மன்னித்தேன்’ கொஞ்சம் தள்ளிப் போகிறது.
முதல் பார்வையில் ‘குண்டெல்லோ கோதாரி’ பாஸ்மார்க்தான் வாங்கியிருக்கிறது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார் லட்சுமி மஞ்சு. ஆணாதிக்க சினிமாவில் ஒரு பெண் ஜெயித்துதான் காட்டட்டுமே?
(நன்றி : cinemobita.com)
(நன்றி : cinemobita.com)