16 மார்ச், 2013

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவி

ஈழத்தமிழரின் இன்னலை தீர்க்க புரட்சித்தலைவி அறிக்கை விடும்போதெல்லாம் மூத்த திம்மி ஒரு தந்திரம் செய்வார். “1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அம்மையார் விடுத்த அறிக்கை” என்று ஓர் அறிக்கையை காப்பி & பேஸ்ட் செய்வார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த காலத்திலேயோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபடியும் சொல்லிக் காட்டுவார். மூத்த திம்மிக்கு மட்டுமல்ல, அண்டோமேனியா அரசின் அல்லக்கைகளான இன்றைய திம்மிகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம். ‘அது போன நூற்றாண்டு. இது இந்த நூற்றாண்டு’

இந்த நூற்றாண்டில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி செவ்வாய் கிரகம், புதன் கிரகம் ஆகியவற்றில் வசிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் உரிமைக்குரல் கொடுக்கும் தமிழின சுனாமி நெடுமாறன் அய்யா, பொடாவை போடா என்று புறந்தள்ளிய இனமான புரட்சிப்புயல் வைகோ, தமிழை டம்ப்ளரில் ஊற்றி தமிழனுக்கு இன உணர்வை ஊட்டி வளர்க்கும் ‘வீ டம்ப்ளர்ஸ்’ ஸ்ரீமான் சீமான், வாழும் காரல்மார்க்ஸாகவும் புரட்சித்தலைவியை வசைபாடுபவர்களுக்கு காராசேவாகவும் திகழும் அய்யா தான்னா பான்னா போன்றோர் ஈழத்தாயாக-தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவியாக ஒப்புக்கொள்ளும் நம் புரட்சித்தலைவியை, இவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சங்கத்தமிழ் மறவர்கள் மட்டுமின்றி சொர்க்கம், நரகம் உள்ளிட்ட ஈரேழு உலகிங்கிலும் வாழும் தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ, க்யூசி ஓக்கே உள்ளிட்ட ஏராளமான தரச்சான்றுகள் பெற்ற ஒரே தலைவி புரட்சித்தலைவி பொன்னியின் செல்வி காவிரி தந்த கலைத்தாய் தங்கத்தாரகை மட்டுமே.

புலிகளின் மீது பாசமின்றியா புலிகளுக்கு பெயர் சூட்டுவார் புரட்சித்தலைவி என்று நாம் கேட்கவில்லை. திராவிட திம்மிகளை நோக்கி மக்கள் கேட்கிறார்கள். நியாயமாகப் பார்க்கப் போனால் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி லெவலுக்கு பத்திரிகைகளில் எழுதும் ஊடகத் தோழர்களின் பெயரைதான் புலிகளுக்கு சூட்டியிருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மக்கள் மனதில் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் இன்னமும் அமரர் எஸ்.எஸ்.சந்திரன் அளவுக்கு புனிதமடையாத காரணத்தால்தான் புலிகளுக்கு தற்காலிகமாக வேறு பெயர்களை சூட்டியிருக்கிறார் புரட்சித்தலைவி. இந்த நெருக்கடியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழினத் தலைவர்கள், ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளப் போராளிகளும் கூட எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைத்த புரட்சித்தலைவியின் பஜனைமட பக்தகோடிகளாகவே இருக்கிறார்கள். சாவுக்கு டாட்டு நொட்டில் தொடங்கி, முந்தாநாள் ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்தவர் வரை வலது கையில் ரெட்டை குதுர றெக்கை பச்சை குத்தியவராகவே வாய்த்திருப்பது இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புரட்சிகளுள் ஒன்றாக உலகத் தமிழின வரலாற்றில் பொறிக்கப்படும்.

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவிக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தி புண்ணியம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு நாம் டம்பளர்களுக்கா, மட்டையடி திமுகவின் வைகோவுக்கா, தமிழர் டான் நெடுமாறனுக்கா, கலக்கல் காம்ரேட் தாபாவுக்கா, அல்லது பத்திரிகைகளில் பாமாலை பாடப்போகும் ஊடகத்தோழர்களுக்கா என்பதுதான் இப்போது மக்களுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

புண்ணியப் பூமியாம் பாரதம் புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப் பார்வையில் புனிதம் அடைகிறது. அம்மாவின் வழிகாட்டுதலில் பாரதம் வல்லரசாகி, உலகின் நெம்பர் ஒன் நாடாக ஆகப்போகும் காலம் வெகுவிரைவில். பாவ உலகில் பிறந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள நாமும் பாடுவோம் புரட்சித்தலைவியின் புனித கோவிந்தத்தை.

ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
புரட்சி அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வ மங்களம் கூடும்


(இந்த பாடலை தினமும் 1008 முறை பாராயணம் செய்பவர்களுக்கு அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு நூற்றியெட்டு லைக்கு வாங்குபவர்களுக்கு அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று வேதமார்க சன்மார்க்க போஷித நீடாமங்கல சோதிடர் வ.சுப்பிரமணிய அய்யர் கணிக்கிறார்)

14 மார்ச், 2013

குண்டெல்லோ கோதாரி!


கோதாவரி இந்தியாவின் இரண்டாவது நீளமான நதி. கங்கைக்குப் பிறகு இதுதான். 1465 கி.மீ. தூரம் பாய்கிறது. மகாராஷ்டிராவில் பிறந்து, ஆந்திராவை வளப்படுத்தி, தக்காண பீடபூமியை கடந்து வங்கக்கடலை அடைகிறது. கங்கையைப் போலவே இந்துக்களுக்கு இதுவும் புண்ணிய நதி. தென்னிந்தியாவில் ராமர் கோயிலுக்கு புகழ்பெற்ற புண்ணியத்தலமான பத்ராச்சலம் இந்நதியின் கரையில்தான் அமைந்திருக்கிறது.

வேண்டுவதை தருவாள் கோதாவரி. வேண்டாததை செய்தால் அழித்துவிடுவாள் என்றொரு நம்பிக்கை. 1986ல் அழித்துவிட்டாள். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையில் கோதாவரியின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. சென்ற இடமெல்லாம் பெரும் நாசம். ஊருக்குள் புகுந்த வெள்ளம் மொத்தத்தையும் துடைத்துச் சென்றது. உயிரிழந்தோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. உயிர் பிழைத்தோர் அனைத்தையும் இழந்திருந்தனர். மூன்று நாட்களுக்கும் மேலாக சோறு தண்ணியில்லாமல் பத்ராச்சலம் ஸ்ரீசீத்தாராமச்சந்திர சுவாமி கோயிலில் ஒடுங்கிப் போயிருந்தவர்களை காக்க நேவி ஹெலிகாஃப்டர்கள் விரைந்தன. நகர்ப்புறங்களே நாசமென்றால், கிராமங்களின் கதி? மஞ்சள் நதி இம்மாதிரி சீற்றம் கொண்டு சீனாவை பேரழிவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தை ‘சீனாவின் துயரம்’ என்பார்கள். கோதாவரியின் கோபத்தை ‘ஆந்திராவின் துயரம்’ என்றும் சொல்லலாம். இருபத்தேழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்களை நினைத்து மழை பெய்யும் போதெல்லாம் இன்னமும் நடுங்குகிறார்கள்.

கோதாவரி பேரழிவை கவிஞர்கள் கவிதையாக வடித்துத் தள்ளியதைப் போல, எழுத்தாளர்களும் கதைகளாக எழுதித் தள்ளினார்கள். அதில் ஒரு நூல்தான் கோதாவரி கதைலு. பி.வி.எஸ்.ராமராவ் எழுதியிருந்தார். 1989ல் வெளிவந்த இந்த புத்தகம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இதை வாசித்த லட்சுமி மஞ்சுவுக்கு கோதாவரி வெள்ளத்தை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
                 
ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி மோகன்பாபு. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறார். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என்று ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு ’டஃப் ஃபைட்’ கொடுத்தவர். நம்மூர் நாட்டாமை தெலுங்கில் ’பெத்தராயுடு’வாக படமானபோது இவர்தான் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பக்கால நண்பரும் கூட. ரஜினியை மாதிரியே தமிழில் ஆரம்பத்தில் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், தெலுங்குக்கு செட்டில் ஆகி ஹீரோவானார். இவருடைய மூத்த மகள்தான் லட்சுமி மஞ்சு. அடுத்த இரண்டு மகன்களும் கூட ஆந்திராவில் ஹீரோக்கள்தான். குடும்பத்தோடு கலைச்சேவை.

Boss Rajini

ஆந்திரப் பெற்றோர் என்றாலும் லட்சுமி மஞ்சு சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பார். சினிமா அவருக்கு உயிர். அமெரிக்கா சென்று கலைத்துறையில் பட்டம் பெற்றார். ஏராளமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பெரிய விளம்பரங்களில் தோன்றினார். சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்றவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இருந்தும் தாய்மண் ஆந்திரா அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது.

ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் (வயதும் முப்பத்தைந்து என்பது ஒரு காரணம்) கிடைத்த வித்தியாசமான வேடங்களில் –வில்லியாக கூட- நடிக்க ஆரம்பித்தார். எம்.பி. கார்ப்பரேஷன் என்று புதிய நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரித்தார். தம்பிகள்தான் ஹீரோ. ராம்கோபால் வர்மாவின் ‘தொங்லா முத்து’, ‘அனகனகா ஒரு தீரடு’ போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ‘டிபார்ட்மெண்ட்’ படத்தில் சஞ்சய்தத்தின் மனைவியாக வந்தவர் இவர்தான். சமீபத்தில் நம்முடைய ‘கடல்’ படத்திலும் தமிழில் அறிமுகமானார். தெலுங்கின் மாற்று சினிமா முகமாக லட்சுமி மஞ்சு உருவெடுத்துவிட்டாலும் பெரிய ‘பிரேக்’ ஒன்றுக்காக மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்.

’கோதாவரி கதைலு’க்கு முறைப்படி பேசி சினிமாவாக்க உரிமை பெற்றார். சினிமாவுக்கு ஏற்றவகையில் கதை மாற்றப்பட்டது. புதுமுக இயக்குனரான குமார் நாகேந்திராவுக்கு வாய்ப்பளித்தார். “அமெரிக்காவில் என்னுடைய திறமைக்காகதான் வாய்ப்புகள் கிடைத்தது. மோகன்பாபுவின் மகள் என்பதற்காக அல்ல. நானும் ஒரு திறமையாளருக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறே” என்றுகூறி குமார்நாகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். இவர் விளம்பரப்பட இயக்குனர். இவரது சில விளம்பரங்கள் மஞ்சுவை அசத்தியிருந்ததாலேயே இந்த அரிய வாய்ப்பு வீடு தேடி வந்தது.

gundollo
2011 ஜனவரியில் இந்த படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார் மஞ்சு. இளையராஜாவின் தீவிர ரசிகையான அவர் ராஜாதான் இப்படத்துக்கு இசையமைத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் கிடந்தார். ஏனெனில் அவரது இசைதான் நதியை அழகாக்கும் என்பது மஞ்சுவின் எண்ணம். நான்கு மாதங்கள் கழித்து ராஜா ஒப்புக்கொண்டார். மூணாறு சென்று பாட்டுக்கு ட்யூன் போட்டார். ராஜாவின் இசை கோதாவரிக்கு ஆக்சிஜென் மாதிரி. அருமையான பாடல்கள் கிடைத்ததுமே படம் மடமடவென்று வளர ஆரம்பித்தது. ராஜா கொடுத்த தெம்பால் தமிழ்/தெலுங்கு இருமொழிகளிலும் படத்தை வெளியிட முடிவெடுத்தார் மஞ்சு. ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று தமிழ் வெர்ஷனுக்கு பெயர் சூட்டப்பட்டது.

40 ஏக்கர் நிலம் மொத்தமாக வாடகைக்கு எடுத்தார்கள். ராஜமுந்திரிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தை புதுசாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கினார். ஆயிரக்கணக்கான லாரி தண்ணீரை பயன்படுத்தி மினி-கோதாவரி நதியை செட்டிங்கிலேயே உருவாக்கினார்கள் (லைஃப் ஆப் படத்தில் கடலையே செட்டு போட்டது போல). காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிக்க மொத்தம் 50 கேமிராக்கள். கிராபிக்ஸுக்கும் வெள்ளமாக செலவழித்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்துக்காக படத்தின் வெளியீடு பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் கதை என்னவோ சிம்பிள்தான். ஆதி-மஞ்சு இருவருக்கும் திருமணம் ஆகிறது. கோதாவரியில் வெள்ளம் பாய்கிறது. கிராமங்கள் மூழ்குகின்றன. தன்னுடைய முன்னாள் காதலிக்கு என்னானதோ என்று ஆதி அலைபாய்கிறார். மஞ்சுவும் தன்னுடைய முன்னாள் காதலனை நினைத்துப் பார்க்கிறார். ஃப்ளாஷ்பேக்குகளில் காட்சிகள் விரிகின்றன.
இடையில் ஆதி-டாப்ஸி ‘லிப்-லாக்’ காட்சி ஒன்று படத்தில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. என் வாழ்க்கையிலேயே முதல்தடவையாக இப்போதுதான் இவ்வளவு டீப் கிஸ் அடிக்கிறேன் என்று டாப்ஸியும் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டார். இந்த ஒரு காட்சிக்காகவே படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவோம் என்று சென்ஸார் பயமுறுத்த, கஷ்டப்பட்டு எடுத்த அக்காட்சியை நீக்கி யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
  
இது வெறும் படமல்ல. மஞ்சுவின் கனவு. தன்னை நிரூபிக்க பயன்படும் வாய்ப்பாக இப்படத்தை நினைக்கிறார். அதனால்தான் என்னவோ உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8க்கு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் தமிழ் டப்பிங் பணிகள் சரியாக முடியாததால், தமிழ் வெளியீடான ‘மறந்தேன், மன்னித்தேன்’ கொஞ்சம் தள்ளிப் போகிறது.

முதல் பார்வையில் ‘குண்டெல்லோ கோதாரி’ பாஸ்மார்க்தான் வாங்கியிருக்கிறது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார் லட்சுமி மஞ்சு. ஆணாதிக்க சினிமாவில் ஒரு பெண் ஜெயித்துதான் காட்டட்டுமே?

(நன்றி : cinemobita.com)

13 மார்ச், 2013

வசந்த மாளிகை

அழகாபுரி ஜமீனின் இரண்டாவது வாரிசு ஆனந்த் ஒரு பெரும் குடி மற்றும் காம வெறியர். ஆனால் நல்லவர். வேலை வெட்டியே இல்லாத அவர் தனக்கு ஒரு பி.ஏ.வை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். பி.ஏ.வாக வரும் பெண் ஆனந்தை திருத்துகிறார். திருந்திய ஆனந்த் பி.ஏ.வை காதலிக்கத் தொடங்குகிறார். அந்தஸ்து, சுயமரியாதை மாதிரி சில பிரச்சினைகளால் பிரியும் காதலின் கதி என்ன? – ஹீரோயின் ஹீரோவை திருத்துவது என்று கிட்டத்தட்ட ‘புதிய பாதை’ கதை மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கவுசல்யா தேவி என்பவர் எழுதிய தெலுங்கு நாவலான ‘பிரேமநகர்’ தெலுங்கில் அதே பெயரில் படமாக்கப்பட்டது. டி.ராமாநாயுடு பெரும் பொருட்செலவில் தயாரித்து 1971ல் வெளியானது. நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். இதையடுத்து தமிழிலும் அதே படத்தை ‘வசந்த மாளிகையாக’ உருவாக்கினார் ராமாநாயுடு. தெலுங்கினை இயக்கிய பிரகாஷ்ராவே தமிழிலும் இயக்கினார். நடிகர், தயாரிப்பாளர், கேமிராமேன், இயக்குனர் என்று பிரகாஷ்ராவுக்கு நிறைய முகங்கள் உண்டு. வசந்தமாளிகைக்கு பிறகு சிவாஜிக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’ இயக்கியவரும் இவரே. இவருடைய மகன் ராகவேந்திரராவ் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனை இயக்குனர். தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரையும் இயக்கியவர் (ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா’ இவருடைய இயக்கம்தான்).

தமிழுக்கு ஏற்ப வசந்தமாளிகையில் சில மாற்றங்கள் செய்துக்கொண்டார் பிரகாஷ்ராவ். குறிப்பாக காமராஜரின் பிரச்சார பீரங்கியான சிவாஜிக்காக சில அரசியல் ‘பஞ்ச்’கள் வசனங்களில் இடம்பெற்றது. சிவாஜி குடிகாரராக நடித்தாலும் அப்போது திமுக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு வாபஸை கிண்டலடித்து நாகேஷ் பேசுவார். காமராஜரின் பள்ளிச்சீருடை அறிமுகத்துக்கு ஒரு சின்ன பிரச்சாரத்தையும் சிவாஜி செய்வார் (ஸ்ரீதேவி பள்ளிச்சீருடை அணிந்து கிளம்பும்போது). பாட்டாளிகளுக்கு ஆதரவான வசனங்கள் மூலம் ஆளும் திமுகவுக்கு ஆணி அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்.

பீம்சிங் படங்களில் நடித்து, நடித்து சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர் என்று பெயர் பெற்றுவிட்டார். கலர் படம் என்பதாலோ என்னவோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வசந்தமாளிகைக்கு வழங்கினார். குடிக்கும் காட்சிகளில் அவரது கண்கள் சிவந்து, கால்கள் லேசாக தள்ளாட்டம் போட, நாக்கு குழறி, நடுங்கும் விரல்களில் சிகரெட் புகைத்து.. சர்வதேச தரத்துக்கு சிவாஜியின் நடிப்பு அமைந்தது. படத்தின் கதையோடு இணைந்தவை என்பதால் பாடல் காட்சிகளுக்கு பிரத்யேகமாக மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் பாடலில் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்தே நடித்திருக்கிறார். ஒரே படத்தில் இத்தனை டைட் க்ளோசப் வேறு எந்த நடிகனுக்குமே வைக்க முடியாது. அப்படி வைத்தால் விகாரமாகி விடும். சிவாஜி மட்டுமே குளோசப்பிலும் அழகாக தெரிபவர். லாங் ஷாட்களிலும், ஸ்க்ரீனில் தன்னுடைய இருப்பை எப்படியேனும் தெரியப்படுத்துபவர்.

இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த நடிகரான விளங்கிய சிவாஜிக்கு உரிய கவுரவத்தை நாம் அளிக்கத் தவறிய அவலம் உறைக்கிறது. வசந்தமாளிகை வெளிவந்ததற்கு முந்தைய ஆண்டுதான் ரிக்‌ஷாக்காரனில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டிருந்தது. வாத்யார் ரசிகனாக இருந்தாலும் நடிப்புக்காக அவருக்கு விருது என்பதை நம்மாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதைய இந்திரா காங்கிரஸுடனான திமுக கூட்டணிக்கு கிடைத்த லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசிவரை சிவாஜிக்கு தேசியவிருது கொடுக்காமலேயே அவரை அவமானப்படுத்தி விட்டது இந்திய அரசு. காலமெல்லாம் காங்கிரஸுக்கு தன்னலம் பாராமல் உழைத்த கலைஞனுக்கு கிடைத்த பரிசு இது.

வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள். ‘தர்மம் எங்கே’ தவிர்த்து மீதி ஆறு படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. வசந்தமாளிகை இருநூற்றி எழுபத்தைந்து நாள் ஓடி, வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. தமிழில் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியத்திலேயே பிற்பாடு இந்தியிலும் ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை வைத்து வசந்தமாளிகையை எடுத்தார் ராமாநாயுடு. அங்கே எழுநூற்றி ஐம்பது நாள் ஓடியது.

வசந்தமாளிகையின் ஒரிஜினலான பிரேமநகரில் நாகேஸ்வரராவ் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார். தமிழிலும் அதேமாதிரி இடம்பெற்று, ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை வெளியான நேரத்தில் வசந்தமாளிகை பெற்றதாம். இதனால் தியேட்டர்களில் ஏற்பட்ட வன்முறைச்சூழலை தவிர்க்க, இறுதிக்காட்சியை மீண்டும் மாற்றி சிவாஜி உயிர்பிழைப்பதாக மாற்றப்பட்டதாக ‘பழம்பெருசுகள்’ சிலர் சொல்ல கேள்வி. உண்மையா என்று தெரியவில்லை. இந்தி வெர்ஷனிலும் இதே க்ளைமேக்ஸ்தான்.

72ல் தொடங்கி பலமுறை தியேட்டர்களில் வசந்தமாளிகை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் வசூலை அள்ள தவறுவதேயில்லை. கடந்த ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகி ‘கர்ணன்’ மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசந்தமாளிகையும் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘டிஜிட்டல் ஆக்கியிருக்கிறோம்’ என்று சொல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்கள். ஒளி, ஒலியில் பெரிய துல்லியம் ஏதுமில்லை. டிவிடி ரிப்பில் இருந்து உருவி புரொஜெக்‌ஷன் செய்வதைப் போல மங்கலாக திரையில் தெரிகிறது. எது எப்படியிருந்தாலென்ன வசந்தமாளிகையின் வசீகரம் இதனால் எல்லாம் குறைந்துவிடவில்லை. இம்முறையும் அரங்குகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள். விசில் சத்தம், கைத்தட்டல்களால் தியேட்டர் கூரைகள் அதிர்கிறது.

ஆல்பட் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் கலைக்கோயில் சிவாஜி ரசிகர்மன்றத்துடையதும் ஒன்று. கலைக்கோயில் என்கிற பட்டம்தான் அவருக்கு எத்துணை பொருத்தமானது?

9 மார்ச், 2013

9ன்பதுல குரு

“எம்படத்துலே கதையே இல்லை.. கதையே இல்லைன்னு ஒரு க்ரூப் புரளி கெளப்பிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்றேன்.. கதையே இல்லாம படம் எடுக்க முடியாது”

- ‘ரட்சகன்’ படம் வெளியானபோது இயக்குனர் பிரவீன்காந்த்

பிரவீன்காந்த் ‘ஒன்பதுல குரு’ பார்த்தாரேயானால் தன்னுடைய கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்வார்.

பேச்சுலர்ஸ் பாரடைஸான ஹாலிவுட்டின் ‘ஹேங்க் ஓவர்’ படத்தை சுட்டு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. 1895ல் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக ’சினிமா’ போட்டுக் காட்டிய துண்டுப்படத்தில் இருந்து, இதுவரை வெளிவந்திருக்கும் கோடிக்கணக்கான எல்லா சினிமாப் படங்களையுமே சுட்டு எடுத்திருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் தமிழில் வெளிவந்திருக்கும் ஐயாயிரத்து சொச்சம் படங்களிலிருந்தும் ஓரிரு நொடி காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பு முரளி, மோகன், எஸ்.வி.சேகர் மாதிரி இடைநிலை நாயகர்களை வைத்து இராம.நாராயணன் துணுக்குத் தோரணம் கட்டி சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி ரேஞ்சுக்கு படங்களாக பிரசவித்துத் தள்ளுவார் இல்லையா? இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் இந்த genre கொஞ்சம் கொஞ்சம் அழிந்து குற்றுயிரும் குலையுயிருமாக போய்விட்டது. சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி படங்கள் இவற்றின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வடிவம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு போன்றவை அவற்றின் அச்சு அசலான வடிவம். இந்தப் படங்களால் தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்தை நெருங்க முடியாது. சிறந்த அயல்நாட்டுப் படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படாது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான விஷயம். கல்லா கட்டும். தியேட்டர்களுக்கு பஞ்சமில்லாமல் content கிடைக்கும். இரண்டு பெரிய படங்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் filler ஆக செயல்படும். தியேட்டர் கேண்டீன்களில் சமோசா விற்பனை பெருகும். அச்சகங்களுக்கு போஸ்டர் ஆர்டர் இருந்துகொண்டே இருக்கும். தினத்தந்திக்கும், தினகரனுக்கும் ரெகுலர் விளம்பரம் கிடைக்கும். பிளாக்கர்களுக்கும் ஹிட்ஸ் தேத்த வசதியாக இருக்கும்.

பொதுவாக தயாரிப்பாளரின் கையை கடிக்காது. சில சமயங்களில் ஜாக்பாட்டும் அடிக்கும். அப்படியே தோற்றாலும் தயாரிப்பாளர் வடபழனி கோயில் வாசலில் தேங்காய் பொறுக்க வேண்டிய நிலைமை வராது. எனவே ஒன்பதுல குருக்களை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

படத்தில் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களை லூஸில் விட்டுவிடலாம். ஹீரோயின் லட்சுமிராய். இவரை அரபுக்குதிரை என்று குமுதங்களும், சினிக்கூத்துகளும் வர்ணிக்கின்றன. எனக்கென்னவோ கட்டுக்கடங்காத காட்டுக்குதிரையாக தெரிகிறார். ஒரு காட்சியில் ஸ்விம்மிங் பூலில் இருந்து எழுகிறார். அவரது நெஞ்சுரத்தை கண்டு வியந்து நமது நெஞ்சு உரமேறுகிறது. அசுரத்தனமான உடல் வளர்ச்சி என்றாலும் அவரது முகம் மட்டும் எட்டாம் க்ளாஸ் படிக்கும் பாப்பா மாதிரி இருப்பது அதிசயம்தான்.

சமகால ஹீரோக்கள், இயக்குனர்கள் அத்தனை பேரின் டவுசரையும் எந்தவித கூச்சநாச்சமுமின்றி கயட்டுகிறார்கள். குறிப்பாக மணிரத்னமும், பாரதிராஜாவும் படத்தைப் பார்த்தால் சினிமாவுக்கு துறவறம் பூண்டுவிடுவார்கள். சினிமாக்காரர்களைதான் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பார்த்தால் கலைஞரையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் விவேகானந்தரை கூட விட்டு அடிக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். laugh riot.

பச்சை பச்சையாக டயலாக்குகள். கரும்பச்சை நிற காட்சிகள். இந்தப் படத்துக்கு தடை கோரவேண்டுமானால் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தத்தில் தொடங்கி உலகின் எல்லா மதக்காரர்களும், எல்லா சாதிக்காரர்களும், சினிமா, அரசியல், பத்திரிகை என்று எல்லா துறையினரும் தடைகோர வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தொடங்கி சீனா, அமெரிக்க அரசுகள் வரை தடை விதிக்க வேண்டும். நியாயமாகப் பார்க்கப் போனால் சென்ஸார் இப்படத்துக்கு ‘த்ரிபிள் ஏ’ சர்ட்டிஃபிகேட் தந்திருக்க வேண்டும்.

நாடி, நரம்பு, மூளை, புத்தி, நெஞ்சு, பஞ்சு என்று உடலின் சகல பாகங்களிலும் கட்டுக்கடங்காத காமவெறி கரைபுரண்டு ஓடும் ஒரு மனிதரால் மட்டுமே இத்தகைய படைப்பை வழங்கியிருக்க முடியும்.

கலாச்சாரப் போலிஸாருக்கும், சென்ஸாருக்கும் நடுவிரலை தூக்கிக் காட்டிய தைரியத்துக்கு இயக்குனர் பி.டி.செல்வகுமாருக்கு அட்டென்ஷனில் அடிக்கலாம் ஒரு சல்யூட்!

8 மார்ச், 2013

கனவை ஏற்று விதியை மாற்று

“நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. சராசரி குடும்பப் பெண்ணுக்கு இந்த கனவு சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எப்பாடு பட்டாவது இந்த சராசரி வாழ்விலிருந்து தப்பிக்க நினைத்தேன்” 

பதினேழு வயது சந்தாவுக்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்கள். இதில் விருப்பமில்லாத அவர் நாட்டை விட்டே வெளியேறினார். முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது சந்தா சவேரி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?

கல்கத்தாவுக்கு அருகில் கான்குர்கச்சி என்கிற இடத்தில் வசித்த மார்வாரி கூட்டுக் குடும்பம் சந்தா சவேரியுடையது. பதினான்கு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போதெல்லாம் மார்வாரி குடும்பங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். முடிந்தவரை வெகுசீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைத்து தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

வங்காளத்தில் அப்போது கல்வி குறித்த விழிப்புணர்வு மிக அதிகமாக இருந்தது. கல்வி கற்பதை கலாச்சாரமாகவே மாற்றியவர்கள் வங்காளிகள். இந்த போக்கினால் கவரப்பட்டார் சந்தா. எனவே குடும்பத்தில் சண்டை போட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தார். உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார்.

பார்க் தெருவிலிருந்த அமெரிக்கன் லைப்ரரி அவரை கவர்ந்தது. அடிக்கடி நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதுபோல ஒருமுறை சென்றுக் கொண்டிருந்தபோது வெயில் தாங்காமல் (சன் ஸ்ட்ரோக்) ஒரு அமெரிக்கப் பெண் நடுத்தெருவில் மயங்கி விழுவதைக் கண்டார். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலுதவி செய்ய சந்தா உதவினார். அன்றிலிருந்து அந்த அமெரிக்கப் பெண் கேரனும், அவருடைய கணவர் டேவிட்டும் கல்கத்தாவிலிருந்தவரை சந்தாவுக்கு நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.

1984ல் சந்தாவுக்கு வயது பதினேழு. இனியும் பொறுக்க முடியாது என்று அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். நிறைய படிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். படிப்புக்காக ஊரை விட்டு ஓடுவது என்று முடிவெடுக்கிறார் சந்தா. உடனடியாக டேவிட்-கேரன் தம்பதியரின் நினைவுதான் அவருக்கு வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளராத காலம் அது. ஈமெயில் இல்லை. ஃபேக்ஸ் பரவலாகவில்லை. பாஸ்டனில் இருந்த டேவிட்டின் அலுவலகத்துக்கு போன் செய்தார். இவர் பேசுவது டேவிட்டுக்கு சரியாக கேட்கவில்லை. அவர் பேசுவது இவருக்கு சரியாக கேட்கவில்லை. பத்து நிமிட போராட்டத்துக்குப் பிறகு தன்னுடைய நிலைமையை தெரியப்படுத்தினார். இறுதியாக சந்தாவுக்கு அமெரிக்காவிலிருந்த ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பிவைக்க டேவிட் ஒப்புக்கொண்டார்.

அந்த கடிதத்தோடு அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று ‘விசா’ விண்ணப்பித்தார். விசா அதிகாரி சந்தாவைப் பார்த்து சொல்கிறார். “நீ சின்னப் பெண். உன்னால் அமெரிக்காவுக்கு போக முடியாது”.

கடுப்பான சந்தா பதிலளிக்கிறார். “அமெரிக்காவை சொர்க்கம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அங்கே செல்பவர்கள் திரும்பியே வரமாட்டார்கள் என்று நினைப்பா?”

அதிகாரிக்கு இந்த பெண் அங்கே செல்ல ஏதோ முக்கியமான காரணம் இருக்கிறது என்று தோன்றுகிறது. “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஐந்து வருடம் நீ அங்கே தங்கியிருக்க அனுமதிக்கிறேன்” என்று சொல்லி விசாவை தருகிறார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் எடுக்க வேண்டும்? சந்தாவுக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள் அவரது கல்லூரித் தோழர்கள். உடல் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களால் தர இயலும். பணம்? தன்னுடைய வைரத்தோடுகளை விற்றார். டிக்கெட் வாங்கினார். கையில் வேறு பணம் எதுவுமில்லை. கட்டியிருந்த உடையோடு விமானமேறினார்.

“பாஸ்டன் வரையிலான பயணம் முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தேன். ஏனெனில் எனக்கு கல்கத்தாவை அவ்வளவு பிடிக்கும்” என்று சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்தபோது சொன்னார் சந்தா.

விமான நிலையத்தில் சந்தாவை வரவேற்க தவறவில்லை டேவிட்டும், கரேனும். ஏனெனில் அங்கிருந்து தொலைபேச கூட சந்தாவிடம் காசில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.

அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த சந்தாவுக்கு அடுத்து என்னவென்று தெரியவில்லை. செய்தித்தாள்களை மேய்ந்தார். அமெரிக்க முதியோர் பலருக்கும் தாதிக்கள் தேவைப்பட்டார்கள். ஒரு அமெரிக்க மூதாட்டிக்கு உதவ இவர் போய் சேர்ந்தார். தொண்ணூற்றி எட்டு வயது லெஸ்லிக்கு இவரது சேவை மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் கழித்து இவரது கையில் முப்பதாயிரம் டாலர் பணத்தைக் கொடுத்து, “நீ ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். சந்தாவின் ஆசையும் அதுதானே?

ஹார்வர்டில் படிப்பு முடியும் காலத்தில் டேவிட் இவருக்கு வேறு ஏற்பாடும் செய்தார். தன்னுடைய மாமனாரையும், மாமியாரையும் சந்தாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் சட்டப்படி தங்களுடைய மகளாய் சந்தாவை தத்தெடுத்துக் கொண்டனர். தத்தெடுத்த பெற்றோர், சந்தாவின் உண்மையான பெற்றோரை சந்திக்க கல்கத்தா வந்தனர். ஆறு வாரங்கள் அவர்களோடு தங்கியிருந்து, சந்தா ஏன் அமெரிக்காவுக்கு வந்தார் என்று விளக்கினர். தங்கள் மகளது உள்ளத்தை அவர்கள் புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவியது.

கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சந்தாவின் மேற்படிப்பு தொடர்ந்தது. பயோகெமிஸ்ட்ரி துறையில் அங்கே ஆய்வுகள் புரிய ஆரம்பித்தார். பேராசிரியராக அங்கே அடிக்கடி வருகை புரிந்தவர் லைனஸ் பாலிங். இவர் வேதியியலுக்காக 1954லும், அமைதிக்காக 1962லும் நோபல் பரிசு வென்றவர். படிப்பு முடிந்தவுடன் பாலிங்கிடம் பணியாற்ற சந்தா விரும்பினார். பாலிங்குக்கு அப்போது வயது தொண்ணூறுக்கும் மேலே.

தன்னுடைய பிரத்யேக ஆய்வகத்தில் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த பாலிங்கை சந்தித்தார் சந்தா. தன்னுடைய பல்கலைக்கழக ஆய்வுத்தகுதிகளையும், பல்கலைக்கழகம் அவருக்குத் தந்திருந்த தர அளவீடுகளையும் சொன்னார். “உங்களிடம் மாணவியாக சேர்ந்து உங்கள் ஆய்வகத்தில் நான் பணிபுரிய இத்தகுதிகள் போதுமா?”

“எனக்கு இப்போது மாணவிகள் தேவையில்லை. மனைவிதான் தேவை” சந்தாவை தவிர்ப்பதற்காக லேசாக புன்முறுவலிட்டுக்கொண்டே சொன்னார் பாலிங்.

“நாம் எப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம்?” எதையும் யோசிக்காமல் சந்தா பதிலுக்கு கடிக்க, வாய்விட்டு சிரித்துவிட்டார் பாலிங்.

“என்னுடைய ஆய்வகத்தில் இப்போது பெரியதாக வேலைகள் எதுவுமில்லை. ஆய்வுக்குடுவைகளை கழுவி வைக்கும் வேலைக்கு மட்டும்தான் ஆள் தேவை”

“பரவாயில்லை. உங்களோடு இருப்பதே எனக்கு மகிழ்ச்சி” பாலிங்கிடம் சந்தா சேர்ந்த கதை இதுதான். அவர் 94 வயதில் மரணிக்கும் வரை அவரோடு வேலை பார்த்தார் சந்தா. அங்கிருந்தபோதுதான் சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வேதியியல் தீர்வுகளை காணும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க க்ரீன்கார்ட் வாங்கியபிறகு ‘ஆக்டிவர்’ என்கிற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ‘இமாமி ஃபேர் & ஹேண்ட்ஸம்’ முகப்பொலிவு க்ரீமின் ஒரிஜினல் ஃபார்முலாவில் கூட சந்தாவின் பங்குண்டு. முகப்பொலிவு, தோல் சுருக்கம் நீக்கம் போன்றவற்றுக்கு பயன்படும் பல்வேறு க்ரீம்களை உருவாக்கினார். எஸ்டீ லாடர், ரெவலான் போன்ற பிரபலமான அழகுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தாவின் ஃபார்முலாவை கொண்டவையே. பி2-ஆக்டிஜென் எனும் ஃபார்முலா இவர் உருவாக்கியதுதான்.

இன்று சந்தாவின் நிறுவனத்தின் பெயர் ஆக்டியோஜென். பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். வருடாவருடம் கொல்கத்தாவுக்கு வருகிறார். சால்ட் லேக் பகுதியில் சொந்தமாக ஒரு வீடும் கட்டியிருக்கிறார். கொல்கத்தாவின் மார்வாரி பெண்கள் இப்போது நிறைய பேர் உயர்கல்வி பயில்வதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார். 


“நான் என்னவாக விரும்பினேனோ, அதுவாக மாறியிருக்கிறேன். நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், அது குறித்த தயக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தால்.. நிச்சயமாக விரும்பியதை அடைவீர்கள்” என்கிறார் சந்தா சவேரி. நோபல் கனவு அவரது கண்களில் இன்னமும் பளிச்சிடுகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)