3 அக்டோபர், 2013

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

(நன்றி : புதிய தலைமுறை)

27 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

25 செப்டம்பர், 2013

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

அந்த கதை என்னவென்றால்...?

‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

“தோ வரேன். ரெடியா இரு”

தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

மறுநாளும் போன்.

“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”

“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

“என்ன திடீர்னு”

“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.

24 செப்டம்பர், 2013

யார் குருடர்?

“சிதம்பரத்துலேருந்து ரவிச்சந்திரன் பேசுறேன் சார்” என்றுதான் ஆரம்பிப்பார். புதிய தலைமுறையின் முதல் இதழில் இருந்தே தீவிரமான வாசகர். அவருடைய எண் செல்போனில் ஒளிர்ந்தால், எந்த சூழலிலும் போனை எடுக்கத் தவறியதே இல்லை. ஆரம்பத்தில் சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொள்ள எண்களை கேட்பார். இந்தப் பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட முறையிலும் நண்பர் ஆனார். அவர் வாசிக்கும் பிற பத்திரிகைகள், புத்தகங்களை பற்றி மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தார்.
நீண்ட காலத்துக்கு என்னைப் பற்றி அவரோ, அவரைப் பற்றி நானோ பெயரைத்தவிர வேறெதுவும் கூடுதலாக அறிந்திருக்கவில்லை. நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்கிற அளவுக்குதான் அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதைத்தாண்டி எனக்கு வேறெதுவும் தெரியாது.
பிற்பாடு பேசும்போது தெரிந்தது. அவரது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் தவிர்த்து பத்திரிகைகள் - புத்தகங்கள் வாசிப்பது, இணையத்தில் என்னென்ன தளங்களை பாவிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். பத்திரிகைகளில் வரும் புத்தக அறிமுகங்களை இடைவிடாமல் வாசித்து, அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார். எங்கள் பத்திரிகையின் தலையங்கத்திலோ, கட்டுரைகளிலோ அடிக்கடி ஏதாவது புத்தகத்தை ஆசிரியர்ரெஃபர்செய்வதுண்டு. அதை வாசித்துவிட்டு, அந்த புத்தகம் எந்த பதிப்பகம், என்ன விலை என்றெல்லாம் போன் செய்து விசாரித்து தெரிந்துக் கொள்வார்.
ஒருமுறை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
சீக்கிரமா படிச்சிடுங்க சார். ரொம்ப நல்ல புக்குஎன்றேன்.
ஸ்டூடண்ட்ஸுக்கு எக்ஸாம் லீவு சார். அவங்க வந்துதான் எனக்கு படிச்சி காமிக்கணும்என்றார்.
எனக்கு புரியவில்லை. “நீங்க படிக்கிறதுக்கும், அவங்க லீவுக்கும் என்ன சார் சம்பந்தம்?” என்றேன்.
எனக்கு முற்றிலுமா பார்வை இல்லைங்க. நான் ஏதாவது வாசிக்கணும்னா, மத்தவங்க வாய்விட்டு படிச்சி காமிக்கணும்என்றார்.
அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் மேல்நிலை மாணவர்களுக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர். பார்வையற்ற ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி இருக்க முடியும்?
ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு பார்வை இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பிரச்சினையால் பார்வை போக போக மங்கி முற்றிலுமாக போய்விட்டது. ஆனால், பார்வைக்குறைபாடு தன்னுடைய பணியை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணித்தரமாக நிரூபித்து பணியில் நீடிக்கிறார். பார்வை இருந்தபோது பணிபுரிந்ததைவிட மிகக்கடினமாக இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பத்திரிகையில் எழுதவேண்டும் என்று விரும்பியபோது, நாகரிகமாக மறுத்தார். “சிதம்பரத்துக்கு வாங்க, நண்பரா சந்திப்போம்” என்றார். அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை (கடைசியாக போன் மாற்றியபோது அவருடைய எண், பழைய போனில் மாட்டி அழிந்துவிட்டது. இனி அவராக பேசினால்தான் உண்டு).

கடந்த ஒரு வாரமாக வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராடிக் கொண்டிருப்பதும், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை நடத்திக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது சிதம்பரம் ரவிச்சந்திரன் நினைவுக்கு வருகிறார்.
அவர் மட்டுமல்ல.
விழிகள் பொய்த்தாலும், மனதால் உலகைப் பார்ப்பவர்கள் இவர்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர்?
 “ப்ளையண்ட் எல்லாம் எதுக்கு சார் வேலை கேட்கிறாங்க.. டெலிபோன் பூத்து வைக்கலாம். இல்லைன்னா டிரெயினிலே ரேஷன் கார்ட் கவர் விற்கிறதை தவிர வேறென்ன வேலை அவங்க செஞ்சிட முடியும்?” என்று கொழுப்பெடுத்துப்போய் பஸ்ஸிலும், ரயிலிலும் டைம்பாஸுக்கு பேசும் நாம் குருடர்களா.. தன்னம்பிக்கையோடு, ‘அரசு வேலை கொடுங்கள்.. சிறப்பாக செய்கிறோம்’ என்று தெருவுக்கு வந்து போராடும் இவர்கள் குருடர்களா?

23 செப்டம்பர், 2013

6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் 2004ஆம் ஆண்டு ‘அடுத்த வீட்டுப் பெண்கள்’ (the girls next door) என்கிற பெயரில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியானது. மனித வணிகம் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டுரை, சினிமாக்காரர்களையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இக்கட்டுரையை தழுவி ‘TRADE’ என்கிற பெயரில் 2007ஆம் ஆண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் முழுநீள சினிமா ஒன்று வெளிவந்தது. கடத்தப்படும் ஒரு பெண். அவளை கடத்திய நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதுதான் படம். விமர்சகர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக கொண்டாடியதாக தெரியவில்லை. ஆனால், வாழ்நாளில் ஒரு படமாவது இந்த கருவில் எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் இருக்கும் திரைப்பட இயக்குனர்களை ஈர்த்தது. விளைவாக நம் தமிழிலும் கூட TRADEஐ அச்சு அசலாக பிரதியெடுத்து ‘விலை’, ‘ஆண்மை தவறேல்’ என்று சில படங்கள் வெளிவந்தன. பெரியதாக ஓடி வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், இப்படங்களை எடுத்த இயக்குனர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
TRADE வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த கதையை, நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். மகாநதி. ஒரு சிறுதவறால் சிதறிவிடுகிறது கமலின் குடும்பம். காணாமல் போன தன்னுடைய மகளை கமல் தேடுவது ஒரு கிளைக்கதையாக விரிகிறது. கமலை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியவரே, அவருடைய மகளையும் விற்றுவிடுகிறார். ‘ரூட்’ பிடித்துப்போய் கமல் தன்னுடைய மகளை கடைசியில் கல்கத்தாவில் மீட்கிறார். கமல்ஹாசன் கில்லாடி. எழுத்தாளர்களை சினிமாவுக்கு எந்தளவுக்கு உறிஞ்சிக்கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு ரகசியமாக உறிஞ்சிக் கொள்வார். வெளியே அவர்களது பெயர் தெரியவே தெரியாது. மகாநதியில் உறிஞ்சப்பட்டவர் ரா.கி.ர., (தேவர்மகனில் ம.வே.சிவக்குமாரின் பங்கு என்னவென்பது யாருக்காவது தெரியுமா என்ன?)
குழந்தைகளை கடத்தும் மனிதவியாபாரிகள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஒன்று; பெண்குழந்தையாக இருந்தால் பாலியல் அடிமைகளாக மாற்றி, அத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இரண்டு; ஆண் குழந்தையாக இருந்தால் பிச்சையெடுக்க வைக்கிறார்கள், அடியாட்களாக, அல்லக்கைகளாக மாற்றுகிறார்கள். மூன்று; ஆணோ, பெண்ணொ.. அவர்களை சிகப்புச் சந்தையின் கச்சாப்பொருள் ஆக்குகிறார்கள் (இதைப்பற்றி விரிவாக அறிய புதிய கலாச்சாரம், மார்ச் 2012 இதழில் வெளிவந்த The Redmarket : மனித உடல் உறுப்புகளின் சந்தை’ கட்டுரையை வாசிக்கவும்).
‘6 மெழுகுவர்த்திகள்’ மனித வணிகம் குறித்த விரிவான பதிவினை தமிழில் உருவாக்கியிருக்கிறது. ஆறாவது பிறந்தநாள் அன்று காணாமல் போன மகனை தேடி கண்டுபிடிக்கும் அப்பாவின் உணர்ச்சிப் பயணம். இந்தப் பயணத்தில் நாயகன் உரசிச்செல்லும் நிழல் மனிதர்கள், அவர்களுடைய பின்னணி என்று பார்வையாளனுக்கு அச்சமூட்டும் கலவரம். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இருந்து விழிகளில் நீர் திரையிட, மங்கலாகவே படம் முடியும்வரை காட்சிகள் தெரிகிறது. ஷாம், துரை, ஜெயமோகன் கூட்டணி கண்டிருக்கும் இந்த உச்சம், தமிழ் சினிமாவின் தற்காலப் போக்குக்கு அவசியம்.
‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ராமுடன் பேசியபோது சொன்னார். “ரெண்டு விதமா தமிழில் படம் எடுக்கலாம். முதலாவது ஜனங்களுக்கு உடனே பிடிச்சி நல்லா ஓடுற படம். ஆனா ஓடி முடிச்சதுமே மறந்துடுவாங்க. ரெண்டாவது உடனே அவ்வளவா ஓடாது. ஆனா ஒரு இருவது, இருவத்தஞ்சி வருஷம் கழிச்சியும் அந்தப் படத்தை மக்கள் நினைவுப்படுத்தி பேசிக்கிட்டிருப்பாங்க. எனக்கு முதலாவது டைப்பில் படமெடுக்க தெரியலை. இரண்டாவது வகை படங்களைதான் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”. துரை இயக்கியிருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ இரண்டாவது டைப் படம்தான்.
ஷாம் நடித்த படங்கள் வேண்டுமானால் இதுவரை மொக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர்தான். தன்னை நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்பாக இப்படத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உடல்மொழி, முகபாவங்கள், உடை, ஒப்பனை என்று அதிகபட்சமான தன்னுடைய உழைப்பை செலுத்தியிருக்கிறார். இனிமேல் வெயிட்டான கருவை சுமந்துக்கொண்டு அலையும் புதுமுக இயக்குனர்களுக்கு ஷாம் நல்ல சாய்ஸ்.
இயக்குனர் துரையும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். ‘6’ அவர் தோள்மீது பேயாய் ஏறிக்கொண்டு, இறங்கிக் கொள்ளாமல் அடம் பிடித்திருக்கிறது. பொறுமையாய், காலம் எடுத்துக்கொண்டு (படப்பிடிப்பு மட்டுமே ஒன்றரை வருடங்களாம்) நுணுக்கமாக செதுக்கி, செதுக்கி சிறப்பான கலைப்படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். எத்தனை மனிதர்கள், எத்தனை காட்சிகள், எவ்வளவு ஊர்கள். மீனுக்கு காத்திருக்கும் கொக்காக மாறியிருக்காவிட்டால் இப்படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை.
ஜெயமோகனோடு கூட்டணி அமைத்தது துரையின் சாமர்த்தியம். இந்த நிழலுலக மனிதர்களை சித்தரிப்பதில் அவர் மாஸ்டர். ஏழாவது உலகத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்குலை நடுங்குகிறது. ‘6’-ல் காட்டப்படும் நிழலுகம் ஏழாம் உலகத்திலிருந்து ஓரளவு மாறுபட்டது என்றாலும், அம்மனிதர்களின் குணாதிசயங்களை அசலாக சித்தரிப்பதில் மீண்டும் ஒருமுறை ஜெயமோகன் வெற்றி கண்டிருக்கிறார். வசனம் எழுத பேனாவில் மைக்கு பதிலாக குரூரத்தையும், வன்மத்தையும் ஊற்றியிருக்கிறார். ஜெயமோகனின் பாத்திரங்களில் யாரும் கெட்டவர்கள் அல்ல. அதே நேரம் விக்கிரமன் பட கேரக்டர்களும் இல்லை. அவரவருக்கான நியாய தர்ம, அற விழுமியங்களோடு அவரவர் இருக்கிறார்கள். பிள்ளை பிடித்துக் கொடுக்கும் கடைநிலை பிச்சைக்காரனில் தொடங்கி, போபாலில் வாழும் நெ.1 கடத்தல்காரன் வரை தன்னுடைய வேலையில் இயல்பானவனாக, தன் வேலை குறித்த எவ்விதக் குற்றவுணர்ச்சியோ இல்லாதவனாகவே இருக்கிறார்கள். “பாவம் பண்ணிட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். இனிமே எனக்கு பாவ புண்ணியம் ஏது?” மாதிரி வசனங்கள் போகிறபோக்கில் வந்தாலும், மிகக்கூர்மையான சமூக விமர்சனங்களை கொண்டிருக்கிறது.
‘தொலைஞ்சுப்போன ஒரு பையனுக்காக ஒருத்தன் இவ்ளோதூரம் மெனக்கெடுவானா?’ மாதிரி விமர்சனங்களை இணையத்தில் காணமுடிகிறது. விபத்திலோ, உடல்நலக் குறைவாலோ குழந்தை இறந்துப் போயிருந்தால் கூட அதை ஏதோ ஒருவகையில் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும். தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும்? இதை வெறும் சினிமாவென்று கடந்துப்போய்விட முடிந்தால், நம் இதயம் வெறும் இயந்திரம் என்பதாகி விடும்.

‘6 மெழுகுவர்த்திகள்’ உணர்ச்சிகரமான திகில் பயணம். பார்வையாளனுக்கு அவசியமான அனுபவம். இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி டிரெண்டில் நிற்காமல் தனித்துத் தெரிகிறது. இப்போது வேண்டுமானால் ராஜா ராணிக்களின் அலையில் இது அடித்துக்கொண்டுப் போய்விடலாம். ஆனாலும் தமிழின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படத்துக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.