3 அக்டோபர், 2013

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

(நன்றி : புதிய தலைமுறை)

22 கருத்துகள்:

  1. கண்டிப்பாக நாம் யோசிக்க வேண்டிய விஷயம்... நமக்கே தெரியாமல் நமது எண்ணங்களில் பதிந்து விடுகிறது.... எதோ சிரித்து விட்டு போய்விடுகிறோம் நாம்... ஆனால் உள்ளார்ந்த எண்ணங்களில் சிந்திக்க மறந்து விடுகிறோம்.. சிந்திக்க வைத்த பதிவு...

    பதிலளிநீக்கு
  2. யுவா அற்புதமான கட்டுரை. அவசியமானதும் கூட. இந்த வகை படங்கள் எனக்கும் பிடிப்பதில்லை. நோக்கமற்ற உழைக்கமறுக்கும் பொறுப்பில்லாத இளைஞர்கள் தான் கதாநாயகர்கள் என்றால் கேவலமாகதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பத்திரிகையாளரான உங்களுக்கு மொதல்ல சமூக பொறுப்பு இருக்கா? Blog/Facebook/G+/Twitter ல எல்லாம் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாம கவர்ச்சி படம் போட வேண்டியது..ஆபாச ஜோக் அடிக்க வேண்டியது... உதாரணம்: http://www.luckylookonline.com/2013/09/blog-post_25.html
    படத்துக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?

    பதிலளிநீக்கு
  4. தோழர் கார்த்திக்,

    //படத்துக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?//

    நகரம் மறுபக்கம் திரைப்படம் குறித்த தகவல் அக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. அந்த படம் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி.

    பதிலளிநீக்கு
  5. நம் மக்களிடம் உள்ள மிகப் பெரிய குறையே சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொள்வதுதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதிலிருந்து இன்றைக்கு ஜெ. விஜயகாந்த் வரை சினிமாவும் அரசியலும் கலக்கக் காரணம் நம் பாமர மக்கள் திரை நடிப்பை நிஜ வாழ்க்கையாக நம்புவதுதான். சினிமாவில் காட்டப்படுகிற கதை கற்பனையானது. அந்த ஹீரோ மிக நல்லவர். அந்த வில்லன் மிகக் கெட்டவர். ஆனால் நிஜத்தில் அவர்கள் அப்படி இல்லை என்கிற உண்மை மூளைக்கு எட்டினாலும் மனசுக்கு எட்டுவதில்லை. மனசு ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. இதே மாதிரிதான் காலம் காலமாக காதல் என்பதைப் பற்றி சினிமாக்கள் நல்ல விதமாகவே காட்டி வருகின்றன. சினிமா கதை என்பது ஹீரோ (அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும்) ஹீரோயினை காதலித்தால் அந்தக் காதல் வெற்றி பெற வேண்டும். அப்படித்தான் கதைகள் பின்னப்படுகின்றன. நிஜ வாழ்க்கையை ஒட்டி எந்தக் கதையும் சொல்லப் படுவது கிடையாது. நிஜ வாழ்க்கையில் காதல் என்பது பல காரணிகள் (சாதி, மதம், அந்தஸ்து, வசதி, அழகு etc , etc ) இவற்றின் அடிப்படையிலேயே வெற்றியடைகிறது. இதில் ஏதேனும் வேறுபாடு வந்தால் பெரும்பாலும் அப்படிப் பட்ட காதல்கள் வெற்றியடைவதில்லை. இதுதான் நிஜம். சினிமாவில் காதல் வெற்றியடைய ஒரு திருப்புமுனை போதும். ஒரு சண்டை போதும். ஒரு பாடல் போதும். ஒரு மரணம் போதும். கதையாசிரியரின் ஒரு காரணம் போதும். ஆனால் நிஜம் அப்படியில்லை. நம் இளைஞர்களும் இளைஞிகளும் யதார்த்தம் புரியாமல் சினிமாவைப் பார்த்து காதலைப் பற்றி ஏற்படுத்திக் கொண்ட பிம்பங்கள், அதன் அடிப்படையில் ஏற்படும் காதல்கள், நிஜம் வேறாக இருக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் (இந்த நிஜங்கள் சினிமாவில் காட்டப் படுவதில்லை) இவையே இன்றைய சமூக அவலங்களுக்கு காரணம். இளவரசன்களும் திவ்யாக்களும், சேரன் மகள்களும் (பெயர் மறந்து விட்டது) மாற வேண்டும். சேரன்களும் காதலை பெரிதாகக் காட்டும் போக்கை கை விட வேண்டும். ஆனால் சினிமாவில் நிஜத்தைக் காட்டினால் அந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாது. அவர்களுக்கு காசு பார்க்க வேண்டும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்கிற உண்மை புரியாத வரை வருத்தப் படாத வாலிபர் சங்கத்தினை பார்த்து விட்டு அதே பாணியை பின்பற்றி பின் வருத்தப் படப் போகிற வாலிபர்கள் வாலிபிகள் வரத்தான் போகிறர்கள். நீங்களும் இதே போல் பதிவு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.

    -repeat-http://www.luckylookonline.com/2013/09/blog-post_9.html?spref=fb

    பதிலளிநீக்கு
  6. சினிமா மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் இதே பாதையில் தான் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.. இவன் தவறு செய்கிறான் அவர் தவறு செய்கிறார் என்று ஒலிப்பெருக்கி வைத்து வெறும் பேச்சு பேசுபவர்களை விட, வாழ்க்கையின் பல அழுத்தங்களை எதிர்கொண்டு அதிலிருந்து விடுபட இரண்டரை மணி நேரம் நிஜ உலகை மறந்து சிரித்து விட்டு மீண்டும் தங்கள் உழைக்கும் வாழ்க்கைக்குத் திரும்புபவர்கள் எவ்வளவோ மேல்..
    செயல் வார்த்தைகளைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது..!

    பதிலளிநீக்கு
  7. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் இந்த சினிமாவை பிடித்து கொண்டு தொங்க சொல்கிறீர்கள் தோழர் .
    சினிமா ஒரு தொழில் அதுக்கு அவ்வளவுதான் மரியாதை குடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆதர்ச நாயகனை அதில் தேடும் போக்கு இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் தோழர் . போதும் எம்.ஜி.ஆர், கருணா, ஜெயலலிதா, இன்னும் காத்திருப்போர் பட்டியல் வேண்டுமா விஜயகாந்த், சரத்குமார், நமீதா வரைக்கும் நீளும் ... இப்போதைய இளைஞ்சர்களை பற்றி நல்ல விதமாக எழுதிய உங்களுக்கு அவர்கள் கல்வி அறிவில் நம் முன்னோர்களை விட முன்னேறி இருக்கிறார்கள் என்பதை ஏற்று கொள்வீர்களா . விஜய்சேதுபதி போன்ற நாயகர்கள் ஜெயிப்பதற்கு காரணம் அதுதான் காரணம். சினிமாவில் கருத்து சொல்றேன்னு தயவு செஞ்சி யாரும் கிளம்பிடாதிர்கள் சாமிகளா என்பதுதான் என் போன்றவர்களின் கருத்து...நீ என்ன வேணும்னா சொல்லு பிடிச்சிருந்தால் பாப்போம். கைதட்டுவோம். ரசிப்போம்,அதோடு நம் உறவை முடித்து கொள்வோம் இதுவெறும் சினிமா சினிமாவின் தாக்கம் பொதுவாழ்வில் குறைவதற்காக நான் சந்தோஷ படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மிகமுக்கியமான கருத்து. எம்மை யோசிக்க வைக்கிறது. படங்களை பார்த்த போது இந்த சிந்தனை வரவில்லை.

    பதிலளிநீக்கு
  9. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்ற தமிழன் என்று தமிழை மட்டுமல்ல தன் தாயை பழித்தவனையும் சேர்த்து பழித்தவனுக்கு சிலை வைத்தானோ அன்றே அவனுக்கு மானம் ரோஷம் சொரனை எல்லாம் போச்சு. அது இன்னைக்குத்தான் உங்களுக்கு தெரியுது.

    பதிலளிநீக்கு
  10. i cant belive Yuva saying this. few months/years ago he mentioned that he was not part of arivujeevi group that expects a message in an entertainment flick and what he would want to see in a movie is a full fledged masala (nothing else).
    Anyhow i agree to whatever is said in the above article. Good change from Yuva.

    பதிலளிநீக்கு
  11. சினிமாவைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவுக்கு தமிழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை. எத்தனையோ கொடூர ஹாரர் மூவிகளைக் கண்ட ஹாலிவுட் ரசிகர்கள் அனைவரும் கொலைகாரர்களாகவும், தெருவில் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு கொலைசெய்யவும் முற்பட்டார்களா என்ன? ஊடகத்துறையிலிருந்து கோடிகளைத் தொட்ட சிவகார்த்திகேயன் மேல் அதே ஊடகத்துறையில் இருந்து அப்படியே இருக்கும் யுவகிருஷ்ணாவுக்கு ஒரு வெறுப்பு - அதை பதிவில் பிரதிபலிக்கிறீர்கள். நாளைக்கே உங்களுக்கு ஒரு ஹீரோவாக ஒரு படத்தில் சான்ஸ் கிடைத்தால் நீங்களும் இப்படித்தான் நடிப்பீர்கள் - இது சத்தியம். சினிமாவைப் பார்த்து அதேபோல காதலிக்கிறோமா நாங்கள் எல்லாம்? ஒரே பாடலில் பல்வேறு தேசத்திற்கும் பறந்து சென்று திரிகிறார்கள் ஹீரோ,ஹீரோயின்ஸ். நாங்கள் அதற்காக ஆசைப்பட்டோமா என்ன? எத்தனையோ மொக்கைப் படங்களைப் பார்த்துத் தள்ளியிருக்கிறோம். ஆர் ஜே பாலாஜி சொல்வதைப் போல் படம் பார்த்தோமா கொஞ்ச நேரம் ஜாலியா இருந்தோமா, அடுத்து பிழைப்பைப் பார்த்தோமா என்றுதான் இருக்கிறோம். அதை விடுத்து திரையாராட்சியில் நாங்கள் இறங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. தோழர் கார்த்திக்,

    //படத்துக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?//

    //நகரம் மறுபக்கம் திரைப்படம் குறித்த தகவல் அக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. அந்த படம் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி.//

    அந்த பதிவில் வடிவேலு மற்றும் சுந்தரின் காட்சிகளை பற்றி பேசும் போது ஏன் சம்பந்தமே இல்லாத பெண்ணின் படம். அதற்கு ஒரு சப்பைக்கட்டு பதில், அவரும் அப்படத்தில் இருந்தாராம். இதே போல் தான் தமிழ் இயக்குனர்களும்.. அவர்களும் இப்படி பட்ட சப்பைக்கட்டு பதில்கள் தந்தால் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவேண்டியது தானே?? ஏன் இப்படி பொங்கறீங்க??

    Saturn730

    பதிலளிநீக்கு
  14. Well said Yuva. You put up the point in the right perspective.
    Let us create some good quality politicians among our youngster through the strong media as cinemas.
    JBS

    பதிலளிநீக்கு
  15. I second Anjaa Singham and Tech Shankar.
    Popcorn is a popcorn as long as you know/realize that.

    பதிலளிநீக்கு
  16. இது மட்டும் தானா, கொஞ்ச நாளா வர படங்களில் கல்யாணத்துக்கு முன்னரே இருவரும் உடலால் இணைவதாக காட்டப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  17. சினிமாவை பார்த்து கெட்டுபோகும் அளவுக்கு இந்த தலைமுறை இளைன்கர்கள் உங்கள் தலைமுறை போலவோ இல்லை அடுத்த எங்கள் தலைமுறை போலவோ மண்ணாந்தைகள் இல்லை "தோழர்"... அவர்களுக்கு சினிமாவெல்லாம் ஒரு விசயமே இல்லை ... அவர்களை கெடுக்க இதை விட மோசமான பல விஷயங்கள் வந்தாகி விட்டது .. இன்னமும் பழைய தலைமுறைதான் சினிமா சினிமா என்று அதை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
  18. நாம் மண்ணாந்தைகள்தான் என்று சில பின்னூட்டங்கள் அழுத்தமாக நிரூபித்திருக்கின்றன.

    சினிமாவைப் பார்த்து இளைஞன் கெட்டுப் போவான் என்பதல்ல கட்டுரை சொல்லவரும் கருத்து. தமிழ் இளைஞன் யாரென்று சமகால சினிமாக்கள் இழிவாக சித்தரிப்பதைப் பற்றிதான் கட்டுரை பேசுகிறது.

    ஒரு முறை கட்டுரையை வாசித்துவிட்டு கருத்துரையிடுவதே நல்ல கருத்தாளருக்கு அழகு :)

    பதிலளிநீக்கு
  19. தோழர் அவர்களே மண்ணாந்ததை என்பதன் சரியான அர்த்தம் உங்களின் காமென்ட் படித்த்த பிறகுதான் புரிந்தது ... இங்கே பலரும் சொல்லவரும் கருத்த்து சினிமா என்ற ஒன்றை யாரும் சீரியசாக எடுத்த்து கொள்ளாத போது அதில் யாரை எப்படி காட்டினால் என்ன , அதை பற்றி கவலைப்படும் அளவுக்கு இன்றைய தலமுறை நம்மை போல சினிமா அடிமைகள் இல்லை என்பதைத்தான் ...

    பதிலளிநீக்கு
  20. எது எப்படி இருந்தாலும் உங்கள் கனவில் ஊதா கலரு ரிப்பன் வரவில்லை என சத்தியம் செய்யுங்கள். உங்களால் முடியாது

    பதிலளிநீக்கு
  21. சினிமாவை சினிமாவா பாருங்க........

    பதிலளிநீக்கு