8 அக்டோபர், 2013

அத்தை வீட்டுக்கு என்ன வழி?

பட்டாசான மாஸ் ஹீரோவின் படத்துக்கு இப்படியா டைட்டில் வைப்பார்கள்.. தெலுங்கில் வைக்கிறார்களே? இந்த வருடத் தொடக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ‘சீத்தம்மா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி’. இப்போது பவன் கல்யாணின் முறை. ‘அத்தை வீட்டுக்கு என்ன வழி?’

விசு, டி.பி.கஜேந்திரன், வி.சேகர் மாதிரி இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு குமட்டலாம். ஹீரோவின் மாஸ், சப்ஜெக்டின் க்ளாஸ் என்று டோலிவுட் இந்த ட்ரெண்டில் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறது.

கப்பார் சிங்கில் தொடங்கியது பவன் கல்யாணுக்கு வசூல் மழை. அடுத்து ‘கேமிராமேன் கங்காதோ ராம்பாபு’. ஏழெட்டு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பொறுப்பை ஒட்டுமொத்தமாக இயக்குனர் த்ரிவிக்ரத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
த்ரிவிக்ரம் லேசுப்பட்ட ஆளில்லை. சிறந்த வசனகர்த்தாவுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை வாங்கியவர். அணு இயற்பியலில் தங்கமெடல் வாங்கியவர் என்றாலும் சினிமாத்துறையில்தான் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார். ஆந்திராவின் காமெடிப் புயலான சுனிலின் கல்லூரித் தோழர் (அவருக்கும் இவருக்கும் கல்யாணம் கூட ஒரே நாளில்தான் நடந்தது). சுனில் மூலமாக டோலிவுட்டில் தொடர்புகள் ஏற்பட உதவி இயக்குனராக ஆனார். இவரது எழுத்துத் திறமையை கண்டுகொண்ட இயக்குனர் விஜயபாஸ்கர் வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்தார். இவர் வசனம் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற, இயக்குனர் வாய்ப்பு கதவைத் தட்டியது. முதல் படமான ‘நுவ்வே நுவ்வே’ மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிட். படம் பார்த்த மகேஷ்பாபுவுக்கு இவரோடு பணியாற்ற ஆசை. மகேஷ்பாபு – த்ரிவிக்ரம் காம்பினேஷனில் வந்த ‘அத்தடு’ டோலிவுட்டின் எவர்க்ரீன் மூவி. தமிழ், மலையாளம், இந்தியில் எல்லாம் டப் ஆகி ‘டப்பு’ பார்த்தது போக, போலிஷ் மொழியிலும் போலந்தில் வெளியானது. இப்படத்தின் காட்சி ஒன்று பிற்பாடு அப்படியே சுடப்பட்டு, ஹாலிவுட் படமான ‘தி இண்டர்நேஷனலில்’ வந்தது. பொதுவாக ஹாலிவுட் படங்களைதான் நம்மாட்கள் சுடுவார்கள். மாறாக த்ரிவிக்ரம் உருவாக்கிய காட்சியை ஹாலிவுட்காரர்கள் சுட்டிருக்கிறார்கள் என்றால் இவரது திறமையை உணர்ந்துக் கொள்ளலாம். டோலிவுட்டை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றவேண்டும் என்கிற கனவோடு உழைக்கும் மகேஷ்பாபுவுக்கு த்ரிவிக்ரத்தை பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. மகேஷ்பாபு நடித்த ’தம்ஸ் அப்’ டெலிவிஷன் கமர்சியலை இயக்கியதும் கூட இவர்தான். ராம்சரண் தேஜா மற்றும் தோனி தோன்றும் பெப்ஸி விளம்பரம், விராத்கோலி மற்றும் தமன்னாவின் செல்கான் விளம்பரம் எல்லாம் இவரது கைவண்ணம்தான்.

அடுத்து பவன் கல்யாணுக்கு ‘ஜல்சா’. ஹிட்டே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த பவனுக்கு பம்பர்ஹிட்டாக அமைந்த படம். போக்கிரிக்கு பிறகு அதை மிஞ்சும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்று மகேஷ்பாபுவுக்கு ஆசை வந்ததும், த்ரிவிக்ரத்தைதான் அணுகினார். ‘கலேஜா’, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம் ஓபனிங்கில் பின்னி பெடல் எடுத்தாலும், மட்டமான படமென்று விமர்சிக்கப்பட்டு சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கியது. “கொஞ்சம் அசட்டையா இருந்தாலும் ஊத்திக்கும் போலிருக்கே?” என்று சட்டென்று ஃபார்முக்கு வந்து ‘ஜுலாயி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார். ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ இயக்குனராக த்ரிவிக்ரமுக்கு ஆறாவது படம்.

கப்பார் சிங்கின் ஃபீலிங்கை அப்படியே ரசிகர்களுக்கு தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் ‘சீத்தம்மா’ மாதிரியான குடும்பக்கதையிலும் பவர் ஸ்டாரை நிலைநிறுத்த வேண்டும். இம்முறை ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் த்ரிவிக்ரத்தின் பேனா ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தது. கப்பார்சிங்கில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த, சிந்திக்கவைத்த, சிரிக்கவைத்த காட்சிகளுக்கு மாற்றுக்காட்சிகளை அதே உணர்வுகளோடு எழுதினார். மனசுக்குள் நெடுநாட்களாக புதைத்து வைத்திருந்த உருகவைக்கும், கண்களை குளமாக்கும் குடும்பக் கதைக்குள் கச்சிதமான இடங்களில் அதை செருகினார். அவ்வளவுதான். இப்போது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தங்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒன்றுசேர்ந்து த்ரிவிக்ரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கே கூட்டமில்லை என்று ஊடகங்கள் அலறினாலும் தியேட்டர்களில் மட்டும் திருவிழாக்கோலம்.

‘அத்தாரிண்டிக்கி’ கதை ரொம்ப சிம்பிள்.

எண்பதைத் தொட்ட தாத்தா. காதல் கல்யாணம் செய்துகொண்டதால் மகளை துரத்தியடித்தவர். பின்னர் மனம் வருந்தி கடைசிக் காலத்திலாவது மகளோடு சேரவேண்டும் என்பதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். பேரனின் உதவியை இதற்காக நாடுகிறார். தன்னுடைய அத்தையை எப்படி தாத்தாவோடு மீண்டும் பேரன் இணையவைக்கிறார் என்பதுதான் கதை. யூகித்திருப்பீர்களே.. அதேதான். செம சூப்பர் ஃபிகராக இருக்கும் அத்தை மகள் சமந்தாவை பவன் சைட் டிஷ்ஷாக வளைத்துப் போடுகிறார். சமந்தா பார்வைக்கு சின்னதாக இருந்தாலும் சிலுக்கென்றிருக்கிறார். சுபம்.

கதையை கேட்டால் நான்கு, ஐந்து கோடிகளில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே முடித்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் வாங்கியிருப்பது பவன் கல்யாணின் கால்ஷீட் ஆயிற்றே. எனவே கிளாஸோடு மாஸ்ஸையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலாக கலந்துக் கொடுத்து போதையாக்குகிறார்கள். “புல்லட் அரை அங்குலம்தான். அதுவே ஆறடி உசர மனுஷனை சாய்ச்சிடும். அந்த புல்லட்டே ஆறடி உசரத்துலே இருந்தா...” என்று தாத்தா (பொம்மன் இரானி) ‘இண்ட்ரோ’ கொடுக்க, பேரன் பவன் கல்யாண் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமாகும் ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாம்.
பவனுக்கு அழகான அத்தை. நதியா. அத்தைக்கு அழகான இரண்டு பெண்கள் பிரணிதா, சமந்தா. பிரணிதா ஜோடியில்லை என்றாலும் ஒரு ஜில்பான்ஸான டூயட் பாடுகிறார் பவன். தெலுங்கு சம்பிரதாயத்தின் படி சமந்தாவுடன் ஒரு டூயட், குத்து என்று கும்மாளம்தான். ‘ஆறடி புல்லட்’ ஓபனிங் சாங்கில் தொடங்கி படம் நெடுக தேவிஸ்ரீபிரசாத்தின் இசைவெள்ளம் தாறுமாறாய் ஓடுகிறது. குறிப்பாக கப்பார்சிங்கின் ஃபேபுலஸ் ஹிட்டான ‘கேவ்வூ கேக்கா’ ஐட்டம் சாங்கை, அட்டகாசமான பஜனையாக ரீமேக்கியிருக்கிறார். அதற்கு பவன் போடும் குத்தாட்டமெல்லாம் அநியாயத்துக்கு ஆடம்பரம். ஒரு கிளப் டேன்ஸில் செம ஜில்பான்ஸான ஆண்ட்டியான மும்தாஜ், பவனை பார்த்து கேட்கிறார். “நாம இதுக்கு முன்னாடி எப்பவாவது பார்த்திருக்கோமா?” தியேட்டரே ‘குஷி, குஷி’ என்று ஆர்ப்பரிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு பிரும்மானந்தத்தை வைத்து நான்கைந்து வெர்ஷனில் ‘அகலிகை’ நாடகம் நடத்துகிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்சீட்டில் தலையை இடித்துக்கொண்டு இடியென விழுந்து, விழுந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஒரே ஒரு ஃப்ரேம் கூட போர் அடிக்காதவகையில் பர்ஃபெக்டான செய்நேர்த்தி.

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ‘பலுபு’ புதுசாக ஒரு ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இனிமேல் இது தமிழ், இந்தி என்று தேசியமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொடூரமான இரத்த வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்திய ஆக்‌ஷன் சினிமா இனி க்ளைமேக்ஸில் காமெடிப் பந்துகளை உருட்டியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த ட்ரெண்ட். ‘அத்தாரிக்கி’ அதை அப்படியே கேட்ச் செய்துக்கொண்டது. பவர்ஸ்டாரை அடிக்க இறுதிக்காட்சியில் ஒரு ஊரே கிளம்பி வருகிறது. அவர் ஒரே ஒருவனைதான் போட்டு நையப்புடைக்கிறார். அவன் வாங்கும் அடியைக் கண்டு, அடிக்க வந்தவர்கள் ‘டர்’ராகி அப்படி, அப்படியே செட்டில் ஆகிறார்கள். பீட்டர்ஹெய்ன் அமைத்திருக்கும் இந்த சண்டைக்காட்சி ஆக்‌ஷன் காட்சிகளின் எண்டெர்டெயின்மெண்ட் லெவலை பலபடிகள் முன்னேற்றியிருக்கிறது.

கடைசியில் ஒரே ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்தப் படத்தையும் அஸ்திவாரமாக தாங்கி நிற்கிறது. ‘அத்தாரிண்டிக்கி’ நூறுகோடி எல்லையை அனாயசமாக தாண்ட, இந்த ‘ட்விஸ்ட்’தான் அடிப்படையான காரணம். த்ரிவிக்ரம் எவ்வளவு சிறப்பான சினிமா எழுத்தாளர் என்பதற்கும் இதுதான் சிறந்த உதாரணம்.

அத்தாரிண்டிக்கி தாரேதி - அன்லிமிட்டெட் மீல்ஸ்

9 கருத்துகள்:

  1. Are you telugu speaking. I am seeing lot of telugu film reviews in your blog.

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் கொஞ்சம் மாட்லாட்துனு. தெலுகு மட்டுமில்லே கன்னடம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, பெங்காலி படங்கள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நேபாளி படம் கூட தியேட்டருக்கு போய் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணா, படத்தோட ரிவியூ இருக்கட்டும்! இந்த மாதிரி வேறு மொழி திரையுலகில் நடந்த,நடக்கும் சம்பவங்களின் கோர்வை அபாரம். வெறும் கூகுள் சர்ச் எல்லாம் இதற்கு உதவியிராது. அதையும் தாண்டிய உழைப்பும், ஆர்வமும் தேவைப் பட்டிருக்கும்.
    தமிழில், தகவலுக்காகக் கடுமையாக உழைக்கும் பத்திரிக்கையாளர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தெலுங்கு சினிமா ரிவியூவையும் தாண்டி இன்னும் பல தளங்களில் எழுதுங்கள்.
    வாழ்த்துகள் யுவா.
    எஸ்கேபி கருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yappa....yethunadhu podhumya...director pathi indha yuva ezhudhunadhu ellame googledhanya...ada raamaa....yengerndhudhan vaaranungalo...

      நீக்கு
  4. I like also trivikram narration especially in Athadu and Julayi. I see this movie today, a worth able mass hit movie. Now i am thinking why this type of films not coming in Tamil industry. Thanks for the good review.

    பதிலளிநீக்கு
  5. பின்னிப்பெடல் யுவா..ஒவ்வொரு வரியும் பட்டாசு..என்னன்னா, இதுமாதிரி படம்லாம் ரிவ்யூ படிச்சு ஆசையா பார்க்க உக்காந்து மரண அடி வாங்கிருக்கேன்..இப்டித்தான் பிருந்தாவனம் ஃபேமிலி + மாஸ்ன்னாய்ங்க..பேயறை வாங்கினேன் :(

    பதிலளிநீக்கு
  6. சிந்திப்பவன்9:23 PM, அக்டோபர் 10, 2013

    திருவிளையாடல் படத்தில் நக்கீரனைப்பார்த்து தருமி சொல்வார்;
    "குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே பிறந்த புலவரய்யா நீர்!"
    அதேபோல நான் சொல்கிறேன்.
    "விமரிசனம் எழுதுவதற்கென்றே பிறந்த bloggeரய்யா நீர்!"

    பதிலளிநீக்கு
  7. Its very normal masala/ brainless movie. Its worst and not deserve to be a hit. Bad taste..Yuva I disappointed abt ur taste. Now I'm thinking that should i give importance to your reviews?..Bcoz of this review..

    பதிலளிநீக்கு