5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

12 கருத்துகள்:

  1. You have done nicely your part of promoting this movie by writing this essay. it is a good movie. but it is slow. this movie has got no attraction point ( popular actor is missing). in the role of Mysskin, some popular actor could have been roped in and given opportunity to act.

    பதிலளிநீக்கு
  2. தோழர் சரவண செல்வம்,

    இப்படத்துக்காக தன்னுடைய வாழ்க்கையையே அடகு வைத்திருக்கிறார் மிஷ்கின். பொருளாதார நிலைமையில் இப்போது அவர் ஸீரோ. ஒரு பிரபல நடிகரை வைத்து படமெடுக்கும் நிலையில் அவர் படத்தை தொடங்கும்போது இல்லை. பணம் இல்லாமல் படப்பிடிப்பையே தள்ளிவைத்த கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. தானே நடித்தால் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை என்றுதான் மிஷ்கினே நடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல காரியம் செய்கிறீர்கள், யுவா. நீங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  4. நல்ல படம் சார், மிஷ்கின் படம் என்பதற்காக நான் எதிர்பார்த்திருந்து படத்தை பார்த்தேன். படத்தின் உச்சம் என்பது இடுகாட்டில் குழந்தைக்கு சொல்லும் கதை. அப்போது தான் நமக்கும் மீதி புரிகிறது. எளிய மனிதர்களை கண்ணியமாக படைத்திருக்கிறார். நிச்சயம் படம் வெற்றி பெரும்.

    பதிலளிநீக்கு
  5. There are too many logic issues in the movie. Why does Mysskin, invite Sri, knowing very well, that Police will follow him. And Sri not knowing him well, tries to make him surrender to the police till the end. All of these are troubles for the goal of saving a family, and in the end as expected everyone dies. What is the use? If you want to show the police, public as bad, there are other ways. The steps taken by the character runs quiet opposite to what he is trying to do. Individual shots are ok, but as a collection of such shots, to make a story, its a big fail.

    பதிலளிநீக்கு
  6. யுவா சார் எங்கே தமிழ் திரையுலக பிரமுகர்கள் (தயாரிப்பாளர்கள்/விநியோகஸ்தர்கள் /இயக்குனர்கள் /நடிகர்கள் ) சக கலைஞன் நல்லதொரு படைப்பு தந்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாமல் கஷ்ட படும் போது அவருக்கு உதவாமல் மௌனமாக இருப்பத்து .ரசிகர்கள் மட்டுமா இன்னொரு ரசிகனை தியட்டருக்கு அழைத்து வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  7. மனசு மிகவும் வலிக்கிறது. நாம் நல்ல படங்களையும் ஆதரிப்பதில்லை. நல்ல அரசியலயும் உறவாக்குவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்
    1) அடிபட்டவனை 108 அல்லது வேறு ஆம்புலன்ஸ் கூப்பிட்டு ஒப்படைத்திருக்கலாம்
    2) தனி ஆளாக பைக்கில் உட்கார வைத்து பின் தான் பைக்கில் உட்கார்ந்து ஓட்டுவது மிகவும் சிரமம்
    3)போலீஸ் சுட்டு குண்டடி பட்டு தப்பித்தவனை நகரம் முழுவதும் போலீஸ் சல்லடை போட்டு துலவிக்கொண்டிருக்கும் .ஆனால் செக்போஸ்டில் சர்வ சாதரணமாக இருப்பது போல் காட்டியிருப்பது மாபெரும் தவறு.
    4)தன்னை காப்பற்றிய மனிதனை போலீஸ் கண்காணிக்கும் என்று தெரிந்தும் இரவு 12 மணிக்கு பார்க்க வர சொல்லுவது ஏன் ?
    5)இரவு 2 மணிக்கு எந்த கோவிலில் பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து பிட்சை எடுப்பார்கள் ?
    6)அதே போல் இரவு 2 மணிக்கு பிள்ளையார் கோவிலில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பது
    7)காலம் நேரம் இல்லாமல் சிறுமி கதை சொல்லு கதை சொல்லு என்று நச்சரிப்பது
    8)சர்வ சாதாரணமாக அனைவரும் துப்பாக்கி யுடன் அலைந்து கொண்டு எதிராளியை சுடுவது
    இது போன்ற கேள்விகளை ராம.நாராயனனிடமோ அல்லது வேறு மசாலா டைரக்டர்களிடமோ எதிர்பார்க்க கூடாது
    ஆனால் மிஷ்கின் ?

    பதிலளிநீக்கு
  9. Mysskin characteril avarey nadithadhu than perfect, vera yarum intha alavuku paniruka mudiyathunu naan ninaikiraen...

    பதிலளிநீக்கு
  10. a simple story of a paid killer trying to be captured by police and the paid killer trying to justify his past acts by saving ???? a family............there are many ways to narrate this but trying to project it as a intellectual stuff is what irritates me..........i agree the directors always underestimate a simple movie fan, they think when they package it differently people will applaud.......but there are always people who get really upset when they realize that they are fooled around by so called techniques.........the above listed logic loop holes are really big in the movie............especially a medical student trying to become a hero on the eve of an exam and the patient running around, fighting, carrying two people on his shoulders within a week of a so called major surgery ................why can't people like mr Myskin try to educate people with right ethics and morals in their movies with all the great techniques.........?

    பதிலளிநீக்கு
  11. Your post tempted me to watch this movie, today I saw it in Satyam. There were too many flaws, but very good to watch, hats off to Myskin.

    பதிலளிநீக்கு
  12. படத்தில் அனைத்து விளிம்பு நிலை மனிதர்களும் பணத்தை புறந்தள்ளுகிறார்கள். மிக அருமை.

    பதிலளிநீக்கு