30 அக்டோபர், 2013

சுட்ட கதை

மன்னர் பீமா, அழகி பிந்து, இன்ஸ்பெக்டர் ஆசாத், சம்பல் பள்ளத்தாக்கு, மார்ஷல், ஷெரீப், செவ்விந்தியர், ‘வோ’, டால்டன் பிரதர்ஸ், இரவுக்கழுகு, பழிவாங்கும் பாவை, முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்... இதெல்லாம் உங்களுக்கு பரிச்சயமானவையாக இருக்கிறதா? முதலில் கையைக் கொடுங்கள். உங்களுக்கு ‘சுட்ட கதை’ ரொம்பவும் பிடிக்கும்.

ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. ஒருமாதிரியாக தமிழர் கலாச்சாரத்துக்கு விசுவாசமான படங்களே அவை.
முல்லை தங்கராசன் என்றொருவர் ஒரு காலத்தில் இருந்தார். 1972ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டபோது பதிப்பாசிரியராக இருந்தவர். பின்னர் முத்து காமிக்ஸில் இருந்து விலகி தனியாக நிறைய காமிக்ஸ் இதழ்களை உருவாக்கினார். குழந்தைகளுக்காக இதழியல் துறையில் இரவும் பகலுமாக உழைத்தார். தமிழ் சித்திரக்கதை உலகின் தவிர்க்க முடியாத மனிதரான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. காமிக்ஸ் பாணியில் ஒரு சினிமா. எழுபதுகளின் இறுதியில் பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்தார். ஒரு தயாரிப்பாளரும் அவரை சீண்டவில்லை. மும்பைக்கு டிரெயின் ஏறினார். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்நாள் கனவு நிறைவேறப் போகிறது என்கிற குஷியில் இருந்தபோது, அன்றிரவே ஒரு விபத்தில் அகாலமாக மரணம் அடைந்தார்.

அதன்பிறகு இந்தியாவில் யாருக்கும் காமிக்ஸில் சினிமா இருப்பதாக தோன்றவில்லை. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார். ஸோரோவின் உடை. ராபின்ஹூட்டின் குணநலன்கள் என்று மிக்சராக சில படங்களில் சிரஞ்சீவி தோன்றினார்.
1990ல் வெளியான ‘கொண்டவீட்டி தொங்கா’ தெலுங்கில் உருவான இந்த காமிக்ஸ் தாக்கத்தின் உச்சம். தெலுங்கின் ஆல்டைம் ப்ளாக் பஸ்டரான இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். ‘சுபலேகா ராசுக்குன்னா’வை யூட்யூப்பில் தேடி கேட்டுப் பாருங்கள். ஐஸாக உருகிவிடுவீர்கள். தமிழிலும் இது ‘தங்கமலை திருடன்’ என்று டப்பப்பட்டு, பி & சி தியேட்டர்களில் நல்ல டப்பு பார்த்தது. அதன்பிறகு டோலிவுட் ஹீரோக்களுக்கு இந்த கவுபாய் கெட்டப் மீது பயங்கர மோகம். ஆனாலும் யாரும் சிரஞ்சீவி சாதித்ததில் பாதியை கூட எட்டமுடியவில்லை. 2009ல் ராஜேந்திரபிரசாத் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘குயிக் கன் முருகன்’ ஓரளவுக்கு நல்ல முயற்சி.

தொடர்ச்சியாக 2010ல் தமிழில் வெளிவந்த ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரமாரியாக சக்கைப்போடு போட்டது. தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காமிக்ஸ் ரூட்டை கரெக்ட்டாக பிடித்து, வெற்றி கண்டு சிம்புதேவன் நிரூபித்துவிட்ட பிறகும் கூட நம் இயக்குனர்களுக்கு ஏனோ காமிக்ஸில் ‘கதை’ இருப்பதாக தோன்றவில்லை.

காமிக்ஸ் வெறியரான மிஷ்கின், தன் பால்யகாலத்து ஹீரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘முகமூடி’ என்று தன் படத்துக்கு டைட்டில் வைத்தார். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘முத்து காமிக்ஸ்’ வழங்கும் ‘முகமூடி’ என கிரெடிட் கொடுக்கப் போகிறார் என்றுகூட கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்படம் ஹாலிவுட், சைனீஸ் படங்களின் தாக்கத்தில் இருந்ததே தவிர, காமிக்ஸ் வாசனையற்றதாகவே வந்தது. இத்தனைக்கும் மிஷ்கினின் மற்ற படத்தின் ஷாட்கள், உற்றுப்பார்த்தால் காமிக்ஸ் கட்டங்களின் கோணத்தில்தான் படமாக்கப்படுகிறது என்பதை உணரலாம். இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இந்தியில் சைப்அலிகானின் ‘ஏஜெண்ட் வினோத்’ போன்ற படங்களில் 007 காமிக்ஸ் எஃபெக்ட்டை ஓரளவுக்கு உணரலாம் (அந்தப் படமே கூட காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்தது).
‘சுட்ட கதை’ இந்த வரலாற்றில் முற்றிலும் மாறுபாடான தன்மை கொண்ட திரைப்படம். இதுவரை வந்த படங்களுக்கு காமிக்ஸின் பாதிப்பு இருந்திருக்கிறதே தவிர, இப்படம்தான் முற்றிலும் காமிக்ஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ்களில் வரும் டயலாக் கட்டங்களுக்கும், ப்ளர்ப்புகளுக்கும் பழகியவர்கள் சுட்டகதையில் சுலபமாக நுழையலாம்.

டைட்டிலே ‘சில் அவுட்’ 2டி அனிமேஷனில் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது (அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.

கோரமலை என்றொரு கற்பனை கிராமம். இங்கே ஆறுவித மக்கள் இருக்கிறார்கள். முதலாம் வகை சோம்பேறி. இரண்டாம் வகை சோம்பேறி. மூன்றாம் வகை சோம்பேறி. நான்காம் வகை சோம்பேறி. ஐந்தாம் வகை சோம்பேறி. ஆறாம் வகை?
அதுவும் சோம்பேறிதான். ரொம்பவும் மொக்கையான காமெடிதான். வெடிச்சிரிப்பெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்தரக காமெடிகளுக்கு sustainable ஆன லைஃப் உண்டு. போதுமான காட்சித் தொடர்ச்சியோ, தர்க்கமோ, குறைந்தபட்ச பொதுப்புத்தியோடு ஒத்துப்போகும் காரணங்களோ இல்லாத இவ்வகை காமெடியை absurd comedy என்பார்கள். சுட்டகதை படம் முழுக்கவே இவ்வகை நகைச்சுவையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உங்களை உடனடியாக சிரிக்கவைக்காது. அக்காட்சிகளை உங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட, கேட்ட காட்சிகளோடு ஹைப்பர்லிங்க் செய்துப் பார்த்தால்தான் சிரிக்க முடியும். இந்த ஞானப்பார்வை வந்துவிட்டால் absurd comedy ரக ஜோக்குகளையோ, காட்சிகளையோ பத்திரிகையிலோ, டிவியிலோ, சினிமாவிலோ பார்க்கும்போது அது கொடுக்கக்கூடிய அனுபவம் அலாதியானது. இதைதான் இலக்கியவாதிகள் ‘சர்ரியலிஸம்’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘தொங்காபுரம் ஜமீன்’. ஜமீனின் பெயருக்கு கீழே ‘ஆண்மை தவறேல்’ என்று எழுதியிருக்கும். சட்டென்று பார்த்தால் இதுவெறும் நேம் போர்ட்தான். உங்களுக்கு ‘அமலாபுரம்’ தெரிந்திருக்க வேண்டும். அதன் சிறப்புகளை அறிந்திருக்கும் பட்சத்தில் ‘ஆண்மை தவறேல்’ ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது புரிந்து புன்னகைப்பீர்கள். தொங்காபுரத்தை எப்படி அமலாபுரத்தோடு ஹைப்பர்லிங்க் செய்யவேண்டுமென்றால் ‘தொங்கா’ என்கிற தெலுங்குவார்த்தைதான் க்ளூ. ஜமீன்களைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிம்பங்களோடு (காமவெறியர்கள் மாதிரி) இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பாரடைஸ் டீ ஸ்டால், ஆங்கிலத்தில் PARADESI TEA STALL என்று ஏன் எழுதியிருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதையெல்லாம் வசனத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டமாட்டார். இப்படியெல்லாம் மூளைக்கு வேலை தர தயாராக இருக்கும் பட்சத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம். இப்படத்தில் சீரியஸாக ஏதோ கதை இருக்குமென்று நம்பிப் பார்த்தால், படத்தில் வரும் மொக்கை கேரக்டர்களில் நீங்களும் ஒரு மொக்கையாக மாறிவிடுவீர்கள். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்டுக்காக படத்துக்கு தொடர்பேயில்லாமல் செருகப்படும் டாக்குமெண்டரி, டிவி நிகழ்ச்சி பாணியிலான காட்சிகளையெல்லாம் என்னவென்று சொல்வது? அபாரம்.

ஹீரோக்களுக்கு ரஞ்சன் காலத்து மீசை. தபாங் ஸ்டைல் கூலிங் க்ளாஸ். உ.பி. போலிஸார் பாணி உடை. ஊரில் இருக்கும் சோம்பேறிகள் எப்பவும் வீட்டில் அடைந்து ‘மெட்டி ஒலி’ பார்க்கிறார்கள். டீ போடுபவனை தவிர்த்து ஒரு உழைப்பாளியையும் பார்க்க முடியாது. ஒட்டகம், சிலந்தி என்று மலைவாழ் பாத்திரங்களுக்கு விசித்திரமான பெயர்கள், பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் விட மேலாக சாம்பசிவம் க்ரைம் காமிக்ஸ்.
‘சுட்டகதை’ ஒட்டுமொத்தமாகவே எனக்கு வசீகரமாக தெரிந்தது. வாசிப்பின்பம் மாதிரி காட்சியின்பத்தை தந்தது. இதே வசீகர அனுபவத்தை முன்பொருமுறை பெற்றிருக்கிறேன். ஒரு நாவலை வாசிக்கும்போது. அது ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’

10 கருத்துகள்:

  1. ”சுபலேகா ராசுக்குன்னா” - எனக்கும் இந்த பாடல் மிகப் பிடிக்கும். ஆனால் நான் இந்தப் பாடலின் ரீமேக்கான நாயக் படத்தில் தான் முதலில் கேட்டேன். பின்னர் ஒரிஜினலைத் தேடி எடுத்துக் கேட்டேன். Super song.

    Original - http://www.youtube.com/watch?v=7ng5QbdtUSU

    Remake - http://www.youtube.com/watch?v=8ZxcNQYlCSQ

    பதிலளிநீக்கு
  2. Excellent !!! yuvakrishna.. But your Brain is more active than us.... So difficult to understand this film.

    பதிலளிநீக்கு
  3. http://www.youtube.com/watch?v=uV0oATnRGhQ

    http://www.youtube.com/watch?v=rP19bhvVL-I

    same tune

    பதிலளிநீக்கு
  4. சுட்ட கதை போன்ற படங்கள் பெங்களூருக்குள் எட்டியாவது பார்க்குமா என்பது பெரிய கேள்விக் குறியே, DVD-யிலாவது பார்க்க வேண்டும்! இந்தப் படத்தில் முத்து காமிக்ஸின் அட்டைப் படங்களும் இடம் பெற்றுள்ளதாமே?!

    முல்லை தங்கராசன் பற்றிய அரிதான தகவலை பகிர்ந்திருக்கிறீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  5. Your brain is so good. And imajinashan power is briliannt. Please give us mora and more vimarsenam lik them. I always study your blog daily and sometimes weekly. Whenever I go I get socks, some new fine blog is there to read and enjoy the tast. First time writing for you and one day you became director in some Tamil telungu cinema. Sure and I appresite. Some talent come by birth, some come by hardworkship. What much we get, we use them for good purpose . My first time writing a blog that is for you. And first time in English. I my friend muthu writing this. Next time I will try to write better. Thank you Anna. Bye .

    பதிலளிநீக்கு
  6. நானும் ஒரு காமிக்ஸ் அபிமானியே என்ற வகையில் இப்படம் எனக்கும் பிடிக்கக்கூடும்! அந்தப் படம் பிடிக்கிறதோ இல்லையோ உங்களின் இப்பதிவு நிறையவே ஆச்சர்யப்படுத்துகிறது!

    அட்டகாசம்!! :)

    பதிலளிநீக்கு
  7. Sutta kadhai - Police constables are our current generation public, nasser and singam are current bureaucracy anglo doctor is english / british or west whose appearance remains same all through irrespective of time and heroine is the person. who is fed up with system. Tribes are eastern outlook who burn currency zamindars are guys who failed to act when british came and Run the film in this background. Surely there is some political under current. All may not exactly matching or correlating but this is my perception of Director s Vision

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:55 PM, நவம்பர் 05, 2013

    முதலில் எங்கள் படத்தைப் பார்த்தமைக்கு நன்றி.

    உங்கள் கண்ணோட்டம் மிகக் கச்சிதம்.

    பார்வையாளர் ரசனையையும் / அடிப்படை அறிவையும் நம்பி/மதித்து எடுத்த முயற்சிக்கு இது போன்ற அலசல்கள் ஊக்க TONIC

    பெரும்பான்மையான COMMENTகளும், படத்தின் நோக்கத்தை ஒத்தனவே

    அடுத்து, இன்னமும் மாறுபட்ட, அதே சமயம் கேளிக்கையூட்டும் ரகத்தில் ஒரு படம் தர முயல்கிறேன்

    இந்த தொழில், சற்றே சூழ்ச்சியும், கடுமையும் மிக்கது. அதை வித்யாசமாக கையாண்டு அடுத்த படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

    மீண்டும் நன்றி
    சுபு

    பதிலளிநீக்கு
  9. எல்லாரும் படம் பாத்துட்டு வந்து செம மொக்க யாரும் போய் பாத்துராதிங்கன்னு சொல்லிட்டு இருக்க நேரத்துல இவ்ளோ பாசிட்டிவான விமர்சனத்த குடுத்துருக்கிங்க. உங்கள மாதிரி இண்டெலெக்ச்சுவல் பீப்புள்ஸ் பாத்தா நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா எல்லாம் பொத்தம் பொதுவா பாக்குறவங்க தான். அதான் அப்படி சொல்கிறார்களோ என்று தோன்றுகிறது ..

    பதிலளிநீக்கு
  10. எந்தவித எதிர்பார்ப்புமின்றி நான் படித்த ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ கதை எனக்கு மிக அழகிய வாசிப்பனுபவத்தைத் தந்தது. அதுவே உங்களுக்கும் என்பதைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி! ‘சுட்ட கதை’ படத்தை பாக்கத் தவறிட்டமேன்னு இப்ப உங்களின் எழுத்தைப் படிச்சதும் தோணுது. நன்றி யுவா... நிச்சயம் பார்க்க முயல்கிறேன்!

    பதிலளிநீக்கு