நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.
பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?
ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.
மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.
மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.
மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.
மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.
கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
