22 ஜனவரி, 2014

அதிகாரத்துக்கு அலாரம்!

‘ஆம் ஆத்மி’ மீது இப்போது வரை எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் வந்துவிடவில்லை. அன்னாஹசாரே அளவுக்கு இல்லையென்றாலும் கேஜ்ரிவாலும் எனக்கு சொல்லிக்கொள்ளக் கூடியவகையில் எண்டெர்டெயினராகதான் தெரிகிறார். அதிலும் தினகரனில் கேஜ்ரிவால் குறித்த செய்திகளை போடும்போதெல்லாம் குளிருக்கு அவர் தலைக்கு மப்ளர் சுற்றிய படத்தை மட்டுமே பயன்படுத்துவதை பார்க்கும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வருகிறது.

ஆனால், கேஜ்ரிவாலை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். வேறு வழியில்லாமல் ‘நமோ’ கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது குல்லாவுக்கு சலாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். கேஜ்ரிவாலின் படத்தை அட்டையில் போட்டால் பத்திரிகை விற்கிறது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

ஆனால், கேஜ்ரிவால் டில்லியில் போலிசாருக்கு எதிராக நடத்திய ‘தர்ணா’ அவர்மீது எனக்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவமும், காவல்துறையும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டின் அடிப்படைப் பண்புக்கு சவால் விடும் அதிகார கூலிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை எதிர்கொண்ட கட்சிகள் கூட, அதிகாரத்துக்கு வந்ததுமே அத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமலோ, அல்லது மேலும் கூடுதலாக ஆட்டம் போடவே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு திமுகவை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே காவல்துறையால் படுமோசமாக வேட்டையாடப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்து திமுகவினர்தான். இந்தியெதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம், ஜெயலலிதாவின் 91-96, 2001-06 காலக்கட்டங்களில் சராசரி திமுககாரனில் தொடங்கி திமுக தலைவர் வரை மிக மோசமாக மனிதநேயம் சற்றுமின்றி தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சிக்கு வந்த கலைஞரே கூட இத்துறைக்கு கடிவாளம் போடநினைத்ததில்லை என்பதுதான் அரசியல்முரண்.

அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் போது காவல்துறையின் அடக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர் கேஜ்ரிவால். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் போதும் இத்துறை எப்படிப்பட்ட அதிகாரபோதையில் இயங்குகிறது என்பதை நேரடியாகவே அறிந்திருப்பார்.

தொடர்கதையாகி விட்ட டெல்லியின் பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையை எண்ணுகிறார். சட்ட அமைச்சரே களமிறங்கி சிலரை சுட்டிக் காட்டியும் டெல்லி காவல்துறை கையை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில், கேஜ்ரிவால் தன்னுடைய இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தர்ணாவில் குதித்தது இந்திய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க சம்பவமாக எண்ணத் தோன்றுகிறது. முதன்முறையாக ஓர் ஆட்சியாளர் இந்த அதிகாரப் பூனைகளுக்கு மணி கட்ட நினைக்கிறார். அதிகாரத்துக்கு எதிராக அலாரம் அடித்திருக்கிறார். அதிகார ருசி கண்டுவிட்ட காங்கிரஸும், பாஜகவும் பதறுவது இதனால்தான். மீடியாவும் சட்டென்று கேஜ்ரிவாலை விமர்சித்து தலையங்கங்களும், கிண்டலான செய்திகளும் எழுதிக் குவிக்கிறது.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை அறம், ஆட்சியியல், லொட்டு லொசுக்கு காரணங்களை காட்டி ஆயிரம் நொட்டு சொல்லலாம். விளம்பரத்துக்கு செய்கிறார் என்று சுலபமாக விமர்சித்துவிட்டு போகலாம். அதிகாரத்துக்கு வந்த ஒருவர் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார் என்கிறவகையில் இவ்விவகாரத்தில் கேஜ்ரிவாலை ஆதரிப்பதே சாமானிய மனிதர்களுக்கான நல்ல சாய்ஸ். இராணுவம், காவல்துறை போன்றவை ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாலாட்டும் வகையில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும், நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் படவேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் சராசரி குடிமகன் மிலிட்டரிக்காரரையும், போலிஸ்காரரையும் கண்டு அச்சப்படும் நிலை மாறவேண்டும். குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பான கேஜ்ரிவாலின் போராட்டம் முழுவெற்றியை அடையாவிட்டாலும், பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது.

20 ஜனவரி, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.

18 ஜனவரி, 2014

கலாப்ரியா

அப்பா அப்போது ‘சுபமங்களா’ ரெகுலராக வாங்குவார். இதழுக்கு இதழ் அதில் ஏதோ ஒரு வி.ஐ.பி.யின் பேட்டி வரும். அதில்தான் முதலில் ‘கலாப்ரியா’ என்கிற பெயரை வாசித்தேன். அவரது பெயரில் இருந்த கவர்ச்சியால் கவரப்பட்ட நான், அவர் கவிஞர் என்றதுமே லீசில் விட்டு விட்டேன். சுபமங்களா பேட்டிகள் பிற்பாடு கலாப்ரியாவின் பெயரை தாங்கி ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்று புத்தகமாகவே கூட வந்தது.

கலாப்ரியா என்பவர் தமிழில் முக்கியமான கவிஞர். குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடத்துகிறவர் என்கிற சிறியளவிலான அவரது அறிமுகம் மட்டுமே எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ‘காட்சிப்பிழை’ இதழில் கலாப்ரியா எழுதிய ஒரு சினிமா கட்டுரையை வாசித்தேன். பொதுவாக இலக்கியவாதிகள் உள்ளுக்குள் எம்.ஜி.ஆர்/ரஜினி ரசிகர்களாக இருந்தாலும், வெளியே மார்லன் பிராண்டோ/அல்பசீனோ என்று ஃபிலிம் காட்டக்கூடிய பண்பு வாய்ந்தவர்கள். தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக ‘தெகிரியமாக’ கலாப்ரியா வெளிக்காட்டிக் கொள்கிறாரே என்கிற ஆச்சரியத்தில், அவர் ‘கவிதை தவிர்த்து’ வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி, வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவரைப் பற்றி அவரோடு பழகியவர்களிடம் பேசி, அவரைப்பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன். எங்கள் ஆசிரியர் மாலனும், அவரும் ஒருமையில் ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவர்கள்.

மிகக்குறுகிய காலத்திலேயே கலாப்ரியா என்னுடைய அப்பாவுக்கு இணையான அந்தஸ்தை என்னுடைய இதயத்திலே பெற்றுக் கொண்டார். என் அப்பாவும் இலக்கியவாதி ஆகியிருந்தால், கலாப்ரியா மாதிரியேதான் இருந்திருப்பார். எம்.ஜி.ஆர் – திமுக – இந்தித்திணிப்பு எதிர்ப்பு – எமர்ஜென்ஸி என்று அறுபதுகளின்/எழுபதுகளின் இளைஞர்களுடைய அசலான பிரதிநிதி கலாப்ரியா.

கலாப்ரியாவின் எந்த நூலை வாசிக்க வேண்டுமென்று என்னை கேட்டால், கீழ்க்கண்ட அவரது கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்று பரிந்துரைப்பேன் : நினைவின் தாழ்வாரங்கள் (சந்தியா), ஓடும் நதி (அந்திமழை), உருள் பெருந்தேர் (சந்தியா), சுவரொட்டி (கயல் கவின்), காற்றின் பாடல் (புதிய தலைமுறை).

ஒரு கவிஞன், கவிதை தாண்டி உரைநடைக்கு வரும்போது வாசகனுக்கு வாசிப்பு அனுபவத்தின் எல்லைகளை எந்தளவுக்கு விஸ்தரிக்க முடியும் என்பதற்கு கலாப்ரியாவின் மேற்கண்ட நூல்கள் நல்ல சாட்சி.

மிக எளிமையான மொழி. தேவைப்படும் இடங்களில் உவமானங்கள். வாசகனை எந்த இடத்தில் நகைக்கவிட வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும் என்கிற எழுத்து நுட்பத்தை நுணுக்கமாக கையாளுகிறார் கலாப்ரியா. தன்னுடைய சுயம் சொல்லும் சாக்கில் அறுபதாண்டு தமிழகத்தின் வரலாற்றை ஒரு சாமானியனின் பார்வையில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெள்ளைத்தாளின் கருப்பெழுத்துகளில் பதிந்துக்கொண்டே போகிறார். நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்ள அவருக்கு அவருக்கேயான தனித்துவமான ’ஈஸி ஃபார்முலா’ கைகொடுக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்க நினைத்தால், அந்த வருடத்தில் ரிலீஸான எம்.ஜி.ஆர் படத்தை நினைவுக்கு கொண்டுவந்து, அதன் மூலமாக தன்னுடைய மூளையை கூர்மையாக்கிக் கொள்கிறார். தன்னுடைய அப்பா காலமானபோது நடந்த நிகழ்வுகளை கூட ‘நல்ல நேரம்’ வெளியான காலக்கட்டத்தின் பின்னணியில் பகிர்ந்துக் கொள்கிறார்.

தமிழ் சினிமா உதவி இயக்குனர்கள் ‘சீன் சுடுவதற்காக’ ஏராளமான காட்சிகள் கலாப்ரியாவின் வாழ்க்கையில் காணப்படுகிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் வேலை இல்லாதவராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு சரியில்லை போல. அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார். “உங்கண்ணன் காலையிலே போய் குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிக்கிட்டு கொண்டுவந்த அரிசியிலே சமைச்சது” என்று அம்மா வறுமைநிலையை கோடிட்டுக் காட்டுகிறார். அண்ணனுடைய மனைவி தவறி பல காலமாகிறது. சாப்பாட்டுக்காக தேவையே இல்லாமல் கு.க. செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து தலையில் அடித்துக்கொண்டு தெருவுக்கு வந்து அழுகிறார் கலாப்ரியா. தமிழ் சினிமாவில்கூட வறுமையான குடும்பத்தை காட்ட இவ்வளவு நுணுக்கமான காட்சி இதுவரை வந்ததில்லை. ஆனால் கலாப்ரியாவின் வாழ்வில் நிஜத்திலேயே நடந்திருக்கிறது.

இந்தித்திணிப்பு காலத்தில் கலாப்ரியா ஏரியாவில் ஒரு டீக்கரைக்காரரோ அல்லது சைக்கிள்கடைக்காரரோ தீவிரமான திமுககாரர் இருந்திருக்கிறார். அவர் வைத்த இந்தி ஒழிக பேனருக்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரைப் பற்றியும், அவர் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது பற்றியும் கொஞ்சம் காமெடியாகதான் கட்டுரை போகிறது. கடைசி காட்சி காவல் நிலையத்துக்குள் அவர் சித்திரவதை செய்யப்பட்டு வெளியே குரல் கேட்கிறது. “தமிழ் வாழ்க”. காவல் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கலாப்ரியா உள்ளிட்ட மாணவர்களுக்கு ‘ஜிவ்வென்றிருந்தது’ என்று கட்டுரை முடிகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக கலாப்ரியா பெற்ற அதே ‘ஜிவ்’வை வாசிக்கும்போது நானும் பெற்றேன்.

நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெருந்தேர் நூல்கள் மூன்றையுமே டிரையாலஜி எனலாம். கலாப்ரியாவின் பயோக்ராஃபி. சுவரொட்டி சினிமா தொடர்பான அவரது கட்டுரைகளை கொண்டது. கருப்பு வெள்ளை, வண்ணம், சினிமாஸ்கோப் என்று தமிழ் சினிமாவின் காலமாற்றங்களை கடைக்கோடி ரசிகனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆச்சரியமான விஷயம் சாதாரண ரசிகன் காணத்தவறிய பல கோணங்களை (குறிப்பாக நடிகரல்லாத மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரணைகள்) துல்லியமாக எழுதியிருக்கிறார். புதிய தலைமுறை இதழில் தொடராக வெளிவந்த ‘காற்றின் பாடல்’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வாயிலாக சமூகத்தை, மனிதர்களை பதிவுசெய்யும் ஆவணம்.

இதுவரை கலாப்ரியாவை நான் நேரில் கண்டதில்லை. நாளை சென்னை புத்தகக் காட்சியில் நவீனக் கவிதைகள் குறித்து வாசகர்களோடு உரையாடப் போகிறாராம். இதுகுறித்து அவரோடு உரையாட, கவிதை பாமரனான எனக்கு எதுவுமில்லை. வெறுமனே அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போகிறேன்.

இன்னொருவனின் கனவு

’அந்திமழை’ என்பது வெறும் பெயரோ, பத்திரிகையோ, இணையத்தளமோ மட்டுமல்ல. அது ஓர் இயக்கம்.

கால் நூற்றாண்டுக்கு முன்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ‘அந்திமழை’ என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார்கள். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே அந்த பேட்ச், தன்னுடைய கல்லூரிக்கால செயல்பாடுகளை சராசரி வாழ்வின் அழுத்தம் காரணமாக கைவிடுவதுதான் இயல்பானது. ‘அந்திமழை’க்கு அந்த அவலம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்து வந்த கல்லூரித் தலைமுறைகளுக்கு அப்படியே அந்திமழை கடத்தப்பட்டு கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து அச்சுப் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. வெகுஜனத் தளத்தில் இயங்கும் இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும், இடைநிலை இதழ்களுக்கும் சவால் விடும் வண்ணமாக ஒரு கல்லூரிப் பத்திரிகையான அந்திமழை செயல்பட்டது. இளங்கோவன், அசோகன், கவுதமன், குமரகுருபரன் என்று ஏராளமான இதழாளர்களை அந்திமழை பிரசவித்தது.

’முடிவில்லாத கனவு’ என்று அந்திமழையை ஒரு வரியில் வர்ணிக்கலாம்.

அந்திமழையின் தொடக்கமான இளங்கோவனுக்கு அதை வெகுஜனத் தளத்தில் பரவலாக கொண்டுவரவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஓரளவுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் அதை இணையத்தளம் ஆக்கினார். தம்பிகள் தோள் கொடுத்தனர். இணையத்தளத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு அதை அச்சிதழாக தரமேற்றியது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, பின் தொடரும் நிழலாகவே இன்றுவரை அந்தகால மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்திமழையை ஆராதிக்கிறார்கள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற அந்திமழையின் ஒரு துளிதான் குமரகுருபரன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வாகி, வெர்டினரி டாக்டர் என்கிற சமூகத்தின் கவுரமான அந்தஸ்தை உதறி முழுநேரப் பத்திரிகையாளர் ஆனார். வார இதழ், தினசரி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று ஊடகத்தின் அத்தனை பரிமாணங்களிலும் போதுமான அனுபவம் பெற்றார்.

இளங்கோவன் அழைத்து, “ஏதாவது அந்திமழைக்கு எழுதேன்” என்று கட்டளையிட்டவுடன் அவர் எழுதிய தொடர்தான் “இன்னொருவனின் கனவு”. சினிமாவின் காதலரான குமரகுருபரன் சினிமாவைப் பற்றி எழுதுவது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு ஆச்சரியம் தருவது அவர் எழுத எடுத்துக்கொண்ட களம்தான். சினிமா என்றாலே விமர்சனம் எழுதுவார்கள். கலைஞர்களை பற்றிய ஃப்ரொபைல் கட்டுரையோ, பேட்டியோ எழுதுவார்கள். குமரகுருபரன் தன்னுடைய கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற ரிஷிமூலத்தை தேடிப் பயணித்து எழுதியிருக்கிறார்.

சினிமா ஏன் ஒரு பார்வையாளனை வசீகரிக்கிறது?

அதை தன்னுடைய கனவின் நீட்சியாக கருதுகிறான். கனவு கருப்பு வெள்ளைதான். அதற்கு டி.டி.எஸ்., க்யூப் மாதிரி நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு இல்லை. ஆனால் வெள்ளித்திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, துல்லியமான ஒலியோடு காட்டும் ஆச்சரியமான அறிவியல் சாதனத்தை தன்னுடைய வாழ்வுக்கு நெருக்கமான விஷயமாக மனிதன் கருதுவது இயல்பானதுதான். பார்வையாளனுக்கு இப்படியான கனவு என்றால், படைப்பாளிக்கு அது வேறு மாதிரியான கனவு. அவனுக்கு லட்சியம், கனவு, இத்யாதி இத்யாதியெல்லாம் சினிமாதான். பார்வையாளன், படைப்பாளி மற்றும் விமர்சகன் என்று சினிமாவின் நுகர்வோரை சுலபமான மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். புதியதாக நான்காம் பிரிவு ஒன்றை உருவாக்க முயல்கிறார் குமரகுருபரன். அதாவது இந்த தொடர்ச்சியை எட்ட நின்று பார்த்து, என்ன நடந்தது என்பதை அழகாக ‘ரிப்போர்ட்டிங்’ செய்யும் வேலையை ‘இன்னொருவனின் கனவு’ மூலமாக சாத்தியமாக்கி இருக்கிறார்.

அந்திமழை பதிப்பகத்தின் (போன் : 9443224834, 43514540) வெளியீடாக ‘இன்னொருவனின் கனவு’ கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் 320 பக்க நூலாகியிருக்கிறது. விலை ரூ.220/-

நூலுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரை ‘மீறல்களின் கனவு’ அட்டகாசமான அறிமுகத்தை தருகிறது (எனக்குள் எப்போது ஒரு ஜெயமோகன் வாசகன் உருவானான் என்று கடுப்போடு தேடிக்கொண்டே இருக்கிறேன்). நிழலுலகம் குறித்த திரைப்படங்கள் பற்றிய பார்வையை நறுக்காக தருகிறார் ஜெமோ. நிஜமான நிழலுகத்தை சினிமாவில் சித்தரிக்கவே முடியாது என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார். ஜெயமோகன் கொடுக்கும் அணிந்துரையின் துள்ளலான சுவாரஸ்யம், அவர் குமரகுருபரனின் நூலை வாசித்து சிலாகித்திருப்பதின் தொடர்ச்சியாக கிடைத்திருக்கும் பொக்கிஷம்.

சினிமா குறித்த நூல் என்பதால் சினிமா ஆர்வலர்களுக்கானது என்று தனியாக ‘இடஒதுக்கீடு’ செய்திட வேண்டாம். புனைவு தரும் கேளிக்கையையும், தீவிர சிந்தனைகளையும், நுண்ணுனர்வுகளையும் கலந்து மிக்ஸராக ‘இன்னொருவனின் கனவு’ கொடுக்கிறது. இந்நூலுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட, கூடுதலான விஷயங்களை நிச்சயம் கண்டடைவீர்கள் என்று மட்டும் உறுதி கூறுகிறேன். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்த புத்தகம்தான் குமரகுருபரனின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் அந்திமழை ஸ்டாலில் இந்நூல் கிடைக்கிறது.

வாழ்த்துகள் குமரகுருபன் சார். அடுத்த ஆண்டு சினிமா நூலுக்கான தேசிய விருதை மீண்டும் தமிழில் நாம் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

16 ஜனவரி, 2014

மிஸ்டர் பர்ஃபெக்ட்!

1995. இந்திய வருமானவரித் துறையில் இருபத்தேழு வயது அர்விந்த் கெஜ்ரிவால் பணிக்குச் சேர்ந்த முதல் நாள்...மூத்த அதிகாரி இவருக்கு சொன்ன முதல் ஆலோசனையே,‘எப்படி சம்பாதிக்கலாம்?’ என்பதுதான். லட்சியக் கனவுகளோடு சிவில் சர்வீஸ் பணிக்கு வந்த அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். ஊழலை ஒழிப்பதுதான் தன் முதல் பணி என்று அன்றே சபதம் எடுத்தார்.
கொல்கத்தா நகரில் அன்னை தெரசாவை சந்திக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். இவருடைய முறை வந்தது.

‘அம்மா! நான் உங்களோடு சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்’

கெஜ்ரிவாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு, புன்னகை தவழும் முகத்தோடு சொன்னார் அன்னை தெரசா: ‘காளிகாட் இல்லத்துக்குப் போய். வேலையைப் பார்’அன்னை தெரசாவின் இல்லத்தில் இரண்டு மாதங்கள் இருந்தார். இந்தியாவைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்போதுதான் கிடைத்தது. முன்பாக போடோலேண்ட் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதிகளில் இலக்கில்லாத பயணங்களை மேற்கொண்டிருந்தார். அன்னை தெரசாவின் ஆசி அவருக்கு மானிட குலத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளுக்கு கண் திறப்பாக அமைந்தது. ராமகிருஷ்ண மடத்தில் சில நாள் இருந்தார். நேரு யுவகேந்திரா மூலமாக ஹரியானா முழுக்க சுற்றினார். இந்திய அரசு அவரை நேர்முகத் தேர்வுக்காக அழைத்தது. வீடு திரும்பினார். ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டம்தான் என் பார்வையை மாற்றியது. வாழ்க்கையைப் போதித்தது. எல்லாத் தரப்பு மக்களையும் புரிந்துகொள்ள உதவியது" என்கிறார் கெஜ்ரிவால்.

ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்கிற ஊரில் ஜூன் 16, 1968-இல் பிறந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அப்பா கோபிந்த்ராம் கெஜ்ரிவால் ஓர் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். அம்மா கீதா தேவி. ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. பள்ளிப் படிப்பில் படுசுட்டி. ஹிசார் நகரில் இருக்கும் பிரபலமான கேம்பஸ் பள்ளியில் படித்தார் (பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெஹ்வாலும் இதே பள்ளி மாணவிதான்).

முதல் முயற்சியிலேயே ஐ.ஐ.டி. கோரக்பூரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1985-இல் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் அவருக்கு பெரிய சமூக உணர்வோ, அரசியல் சிந்தனைகளோ இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை என்று சகமாணவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐ.ஐ.டி.யில் அவரோடு படித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அரசுப் பணியை துறந்து சமூகப் பணிக்குத் தன்னை கெஜ்ரிவால் அர்ப்பணித்துக் கொண்டபோது, அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவரை பொருளாதார ரீதியாக ஆதரித்தார்கள்.

அயல்நாட்டில் வேலை பார்க்கும் ஆசை கெஜ்ரிவாலுக்கு இருந்ததே இல்லை. பி.டெக். (மெக்கானிக்கல்) முடித்தபிறகு 1989-இல் ஜாம்ஷெட்பூர் நகரில் இருக்கும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்து நிர்வாகம் படிக்க ஆசைப்பட்டார். அது முடியவில்லை. ஆனால் அதே நேரம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அவரால் மிக எளிதாக வெற்றிபெற முடிந்தது. முசோரி நகரின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் நிர்வாகப் பயிற்சி பெற்றார். மற்றவர்களைக் காட்டிலும் கெஜ்ரிவால் அப்போது கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு இருந்தார், எப்போதும் ஊழல் ஒழிப்பு குறித்தே அவரது அக்கறை இருந்தது என்று அவரது பயிற்சியாளர் ஹர்ஷ் மண்டேர் சொல்கிறார்.

1992-இல் தில்லியில் துணை வரி ஆணையராக பணி அமர்த்தப்பட்டார்.

தினமும் காலை அலுவலகம் வந்து, மாலை வீட்டுக்குத் திரும்புவது என்கிற வழக்கமான அலுவலக வாழ்க்கை கெஜ்ரிவாலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. 1999-இல், ‘பரிவர்த்தன்’ என்றொரு அரசுசாரா சமூக சேவை அமைப்பை நண்பர்களோடு தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தோ, பெரிய நிறுவனங்களிடமிருந்தோ நிதி பெறாமல் கைக்காசைப் போட்டு சமூகப் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் சேகர்சிங் என்கிற நண்பர் கெஜ்ரிவாலுக்கு அறிமுகம் ஆகிறார். மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரக் குழுவில் (NCPR) செயற்குழு உறுப்பினராக இருந்தவர் இவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிரசாந்த் பூஷனெல்லாம் கெஜ்ரிவாலுக்கு நெருக்கம் ஆனது இந்தக் காலக் கட்டத்தில்தான்.

நாடு முழுக்க ஏராளமான சமூகப் போராளிகள் இருந்தாலும் கெஜ்ரிவால் இவர்களிடமிருந்து வேறுபட்டவர். இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகளை முன்வைத்தே மற்றவர்களின் போராட்டம் இருக்கும். கெஜ்ரிவாலோ போராட்டம் என்று இறங்கிவிட்டால், ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் பேசியாகவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

தகவல் உரிமைச் சட்டத்துக்காகப் போராட்டத்தில் குதித்தவர், ‘மக்கள் பிரச்சினைகள் ஆய்வு அமைப்பு’ (PCRF) என்கிற புதிய அமைப்பை தோற்றுவித்தார். வெளிப்படையான, நாணயமான, மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புக் கொண்ட அரசாட்சியை இந்த அமைப்பு வலியுறுத்தியது. தகவல் உரிமை அறியும் சட்டம் வந்தால் இந்நிலையை ஏற்படுத்த முடியுமென்று கெஜ்ரிவால் உறுதியாக நம்பினார்.

தகவல் உரிமை குறித்த இவர்களது பிரச்சாரத்துக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லை. ஆனால் கெஜ்ரிவால் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். 2006-இல் இந்தக் காரணத்துக்காகவே கெஜ்ரிவால் மற்றும் அவருடன் போராடிய நண்பர்களான மணிஷ் சிசோடியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோருக்கும் சர்வதேச உயர் விருதான, ‘ரமோன் மகசேசே’ அறிவிக்கப்பட்டது. விருதுப் பணம் மொத்தத்தையும் போராடிய தன்னுடைய அமைப்புக்கே தந்து விட்டார் கெஜ்ரிவால். சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் அவ்வருடத்துக்கான இந்தியர் என்கிற விருதை வழங்கி கவுரவித்தது. இவ்விருதே நாடு முழுக்க கெஜ்ரிவாலை பிரபலப்படுத்தியது.

இடையில் அரசுப் பணியையும், சமூகப் பணியையும் மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 1999-இல் இரண்டு வருட விடுப்பு எடுத்துக்கொண்டே, ‘பரிவர்த்தன்’ அமைப்பைத் தொடங்கி, நடத்தினார். 2003-இல் மீண்டும் பணிக்குச் சேர்ந்து, சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் வழக்கமான வேலை வெறுத்துவிட... தன்னை முழுக்க சமூகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருமானவரித் துறை, தில்லி மாநகராட்சி, பொது விநியோக அமைப்பு, தில்லி மின்சாரத் துறை போன்ற துறை ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சாரத்தை நாடு முழுக்க நண்பர்களோடு சேர்ந்து செய்யத் தொடங்கினார்.

2011-இல் அன்னா ஹசாரே, ‘ஜன் லோக்பால்’ வேண்டுமென்கிற போராட்டங்களைத் தொடங்கியபோது, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சார்பில் அன்னாவின் கரங்களை வலுப்படுத்தினார். தில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருக்க, அந்தப் போராட்டத்தை இந்திய நகரங்களில் விரிவுபடுத்தும் பணியை கெஜ்ரிவால் எடுத்துக் கொண்டார். இதற்கான பயணப்பட்டபோது, ஒரு ரயில்நிலையத்தில் மக்களோடு மக்களாக அவர் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் ஊடகங்களில் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுக்க மக்கள் தன்னார்வமாக முன்வந்து இப்போராட்டங்களில் பங்குபெற, வேறு வழியில்லாமல் நாடாளுமன்றமே இவர்களுக்கு காது கொடுக்க வேண்டியிருந்தது. லோக்பால் மசோதாவைத் திருத்தும் குழுவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாக கெஜ்ரிவாலையும் மத்திய அரசு நியமித்தது.

ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள அரசியலில் குதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்குத் தோன்றியது. அன்னா ஹசாரே இக்கருத்தில் வேறுபட்டார். போராட்டங்களின் வாயிலாகவே அரசைப் பணியவைக்க முடியும் என்பது ஹசாரேவின் நம்பிக்கை. கெஜ்ரிவாலோ அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு பெற்றுத் தருவதின் மூலம், தாங்கள் விரும்பும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த முடியுமென்று நினைத்தார்.கெஜ்ரிவால் சுயாட்சிக் கொள்கையை அடிநாதமாக முன்வைத்து (பெட்டிச் செய்தி காண்க), ‘ஆம் ஆத்மி’ கட்சியை 26 நவம்பர், 2012 அன்று துவக்கினார். முன்னதாக கட்சியை தொடங்கலாமா என்று, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு மூலமாக மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தினார். மக்கள் ஆதரவின் அடிப்படையிலேயே, ‘ஆம் ஆத்மி’ உருவானது. ஆம் ஆத்மி என்கிற சொல்லுக்கு சாமானிய மனிதன் என்று பொருள்.

ஜன் லோக்பால், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைப் பிடிக்காவிட்டால் மக்களே நிராகரிக்கும் உரிமை, அரசியல் அதிகாரங்களை மக்களுக்கும் பரவலாக்குதல் என்கிற கோஷங்களை, ‘ஆம் ஆத்மி’ முன்வைத்தது. கட்சி தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் தில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மெக்கானிக்கல் என்ஜினீயரான கெஜ்ரிவால் முதல்வர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் இருந்ததைக் காட்டிலும் கூடுதல் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பெற்றிருக்கிறேன்" என்கிறார் கெஜ்ரிவால்.

மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவது, ஜனநாயகம் மீது இவர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார். இந்திய இளைஞர்களின் குரலாக கெஜ்ரிவாலைக் காண்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எனவேதான் தில்லியில் படித்த இளைஞர்களும், உழைக்கும் வாலிபர்களும் பெருந்திரளாகத் திரண்டுவந்து ஆம் ஆத்மியின், ‘துடைப்பம்’ சின்னத்துக்கு வாக்களித்தார்கள்.

இதற்கு முன்பாக இந்திய அரசியலில் காணாத காட்சிகளை இன்று தலைநகரம்தில்லி கண்டுகொண்டிருக்கிறது. சாமானியனின் சக்தி என்னவென்பதை அரசியல்வாதிகளுக்கும், அதிகார மேல்மட்டத்தினருக்கும் உணர்த்திக் காட்டியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.


ஆம் ஆத்மியின் சாதனை

கட்சி தொடங்கி ஓராண்டிலேயே முதன்முதலாக தில்லி சட்டமன்றத் தேர்தலில் குதித்த, ‘ஆம் ஆத்மி’ கட்சி, இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. எழுபது இடங்களில் இருபத்தெட்டு இடங்களை இக்கட்சி வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவோடு அரியணை ஏறியிருக்கிறது. ஆம் ஆத்மி. கட்சியின் சாதனையில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட சாதனையும் அடங்கும். மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை அவரது தொகுதியிலேயே இருபத்தைந்தாயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால்.

முதல்வர் என்று ஆனதுமே, தனக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். தானும், தன்னுடைய அமைச்சரவை சகாக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம், மக்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்கக்கூடிய, ‘சைரன் அணிவகுப்பு’ இருக்காது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


குடும்பம்

முசோரியில் தன்னுடன் சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்ற சுனிதாவை திருமணம் செய்துக் கொண்டார் கெஜ்ரிவால். சுனிதா இப்போதும் அரசுப் பணியில்தான் இருக்கிறார். மகள் ஹர்ஷிதா. மகன் புல்கிட். கெஜ்ரிவாலின் பிரபலம் அவரது வீட்டை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. சராசரி மேல் நடுத்தரக் குடும்பமாகவே தொடர்கிறார்கள்.



மிஸ்டர் பர்ஃபெக்ட்

வருமான வரித்துறை பணியில் இருந்தபோதே ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்று பெயரெடுத்தவர் கெஜ்ரிவால். அவருக்கு பியூன் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவரது டேபிளை அவரேதான் சுத்தம் செய்வார். குப்பைகளை அவரே அகற்றுவார். அலுவலகத்தின் அருகில் இருக்கும் டீக்கடையில் டீ சாப்பிடும்போது அவரைப் பார்க்கலாம் அல்லது எப்போதும் மேஜையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கோப்புகளை ஒன்றுக்கு நாலுமுறை சரிபார்த்துக்கொண்டே இருப்பாராம். அவரை கோபமாகப் பார்த்ததே இல்லை என்று அவரது அலுவலக சகாக்கள் சொல்கிறார்கள். கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால், அதிகபட்சமாக டீ சாப்பிடப் போய்விடுவாராம். சொந்தமாக கார் இருந்தும் அலுவலகம் செல்ல மெட்ரோ ரயிலைத்தான் பயன்படுத்துவார். அலுவலகத்தில் பணியாற்றியபோது அவர் கடைபிடித்த எளிமையையும், அர்ப்பணிப்பையும் இன்றுவரை கைவிடவில்லை. ஜன் லோக்பால் மசோதாவை திருப்தி வரும்வரை திருத்திக்கொண்டே இருந்தார்.


ஐஸ் மேன்

கெஜ்ரிவால் ஜாலியாக இருந்தால் எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பார். நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, ‘போன்’ வந்தால் சட்டையே செய்யமாட்டார். பேச்சுக்கு நடுவில் இடையூறு எதுவும் அவருக்கு இருக்கக்கூடாது. விழாக்கள் என்றால் அலர்ஜி. தன்னுடைய பிறந்த நாளையோ, குழந்தைகளின் பிறந்த நாளையோ விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. நேரம் கிடைத்தால் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போய்விடுவார். அமீர்கான் படங்கள் என்றால் கெஜ்ரிவாலுக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வர் ஆகிவிட்டதால், நேரமின்மையின் காரணமாக இன்னமும் அமீர்கானின் லேட்டஸ்ட் ரிலீஸான, ‘தூம்-3’ படத்தைப் பார்க்கவில்லை.


பாக்கெட் மணி

கெஜ்ரிவால் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதிலிருந்து, அவருடைய மாதச்செலவினை நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். ஐ.ஐ.டி. காலத்திலிருந்தே கெஜ்ரிவாலோடு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து அவருக்கு மாதம் 25,000 ரூபாய் தருகிறார்கள். கூடுதல் செலவு ஏற்படும் பட்சத்தில் அதை தன்னுடைய மனைவி சுனிதா பார்த்துக் கொள்கிறார்" என்கிறார் கெஜ்ரிவால்.


கெஜ்ரிவாலின் சுயாட்சி

* கிராமங்களுக்கு அதிகாரம் என்கிற காந்திய சிந்தனை கொண்டவர் கெஜ்ரிவால். ஊழலை ஒழிக்க கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சுயாட்சி அதிகாரம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். சுயாட்சி குறித்த தன்னுடைய சிந்தனைகளை, ‘ஸ்வராஜ்’ எனும் நூலாக இந்தி/ஆங்கில மொழிகளில் எழுதி, கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் இருந்து சில பகுதிகள் :

* இந்தியாவின் சுதந்திரம் என்பது வெறும் அதிகாரபூர்வ அறிவிப்பு. நிர்வாகம்தான் மாறியிருக்கிறது. முன்பு வெள்ளையர்கள், இப்போது இந்தியர்கள். அப்போது லண்டனில் இருந்து ஆண்டார்கள். இப்போது தில்லியிருந்தும், மாநிலத் தலைநகரங்களில் இருந்தும் ஆள்கிறார்கள். நம்முடைய சுதந்திரப் போராட்டம் என்பது நம்மை வெள்ளையர்கள் ஆண்டார்கள் என்பதற்காக மட்டுமல்ல,. மக்களின் சுயாட்சிக்காகவும்தான். சுதந்திர இந்தியாவில் மக்கள்தான் ஆட்சியாளர்கள், மக்கள்தான் நிர்வாகிகள் என்று கனவு கண்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவேயில்லை.

* நம்முடைய ஜனநாயகம் மாறவேண்டும். ஒரு முறை வாக்களித்துவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வென்றவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.

* அரசாங்கத்தின் செயல்பாடு ஒவ்வொன்றும் மக்களைக் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டதாக அமைய வேண்டும். 120 கோடி மக்களின் கருத்துகளையும் கேட்கமுடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியும்.

* அறுபது ஆண்டுகளாக எல்லாக் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தாயிற்று. எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. கட்சிகளையோ, தலைவர்களையோ மாற்றிப் பார்ப்பதில் உபயோகம் எதுவுமில்லை என்பதுதான் இதிலிருந்து புரிகிறது. நாம் வேறு ஏதாவது புதியதாக செய்ய வேண்டும்.

* என்றைக்காவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கமாகப் போயிருக்கிறீர்களா? ஆட்சியரை சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? எப்போதுமே அவரை அங்கு பார்க்க முடியாது. மக்களின் ஊழியர்தானே அவர்? அப்படியிருக்க மக்களிடமே பந்தா காட்டுவது ஏன்? ஆட்சியரை விடுங்கள். ஆட்சியரின் பியூனே கூட எவ்வளவு பந்தா?

* தில்லியில் எந்த அடிப்படையுமற்ற ஒரு சேரிப்பகுதி. குடிக்க நீர் கூட இல்லை. அதற்காக நாங்கள் அரசாங்கத்தை அணுகும்போதெல்லாம் நிதி இல்லை என்பார்கள். ஆனால் அதே பகுதியில் அறுபது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார நீருற்று ஒன்றை அழகுக்காக அமைத்தார்கள். மக்களுக்கு குடிக்க நீரே இல்லை எனும்போது இந்த ஆடம்பரங்கள் அவசியமா? அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. ஆனால் அது அவசியமான தேவைகளுக்கு செலவிடப்படுவதில்லை.

* ஊழல் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் நம்முடைய இயற்கை வளங்கள் சிறைப்பட்டிருக்கின்றன. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால், அவர்கள் கூட்டணி போட்டு நம் நாட்டையே விற்றுவிடுவார்கள். நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், அதிகாரமும் மக்களிடம் இருக்கவேண்டும். தங்கள் பகுதியில் இருக்கும் நீர்வளங்களை கிராம சபை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு போன்ற நீர்நிலைகள் குறித்த முடிவுகளை கிராம சபைகளைக் கலந்தாலோசிக்காமல் அரசு எடுக்கக்கூடாது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் புல்வெளிகள் உண்டு. சென்னை நகரின் குப்பைகளை இங்கே கொட்டுவதற்கு அங்கிருந்த ஆட்சியர் முடிவு செய்தார். அங்கிருப்பவர்கள் எப்படி வசிக்க முடியும்? கிராம மக்களின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் என்னவாகும்? மக்களின் கவனத்துக்கு வராமலேயே அவர்களது பகுதி, ஏதோ ஒரு நகரின் கழிவுகளைக் கொட்ட எப்படி திட்டமிடப்பட்டது? நீதிமன்றத்தில் கூட குத்தம்பாக்கம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

* ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் வாக்களிப்போன். வென்றவர்கள் நம்மை சுரண்டுவதை நாம் வேடிக்கை பார்ப்பது அல்ல. இது மாற வேண்டும். மக்கள் சொல்வதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செயல்படுத்தும் முறைதான் நமக்குத் தேவை. இல்லையெனில் அவர்களை நீக்கும் அதிகாரம் நமக்கு வேண்டும். கிராம சபைகள் மூலமாக மக்களின் எதிர்பார்ப்பை, கருத்தை நம்மால் சேகரிக்க முடியும்.

* தில்லியில் ஒரு ரிக்ஷாக்காரர் மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும் சேரியில் குடும்பம் நடத்த முடியாமல் துன்பப்படுகிறார். ஆனால் இதே பணத்தை கிராமத்தில் சம்பாதித்தால் ஒரு குடும்பமே திருப்தியாக வாழ முடியும். எனவேதான் சொல்கிறேன்... தில்லியில் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வறுமைக்கோட்டை வரையாதீர்கள்.

* மக்களுக்கு அதிகாரம் கிடைத்தால்தான் தீவிரவாதம் முழுமையாக ஒடுக்கப்படும்.

* சோப்பு கம்பெனி, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை மாதிரி தொழில்களை கிராம சபைகளே நடத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும். கிராமங்களின் பொருளாதார நிலையும் உயரும்.

* இன்று மதுக்கடை தொடங்க உள்ளூர் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஒத்துழைத்தால் போதும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடங்குவதற்கு கிராம சபை மற்றும் சமூக அமைப்புகளின் அனுமதி கிடைத்தால்தான் மதுக்கடை தொடங்க முடியும் என்கிற சட்டத் திருத்தம் வந்தால் இஷ்டத்துக்கும் கடைகள் திறக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களின் அனுமதி வேண்டும். மதுப்பழக்கத்தை வேரறுக்க இம்மாதிரி விதிகள் உதவி செய்யும்.

* நல்ல மனிதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது மட்டுமே ஓர் அமைப்பை மொத்தமாக மாற்றி சீர் செய்துவிடாது. சீரழிவின் வேகம் கொஞ்சம் மட்டுப்படும். அவ்வளவுதான்.

* நம்மை ஆள்பவர்களிடம் நாம் உடனே ஒன்றை சொல்ல வேண்டும்: எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி சரிசெய்து கொள்கிறோம். எங்களுடைய தேவை அதிகாரம். 26 ஜனவரி 1950 அன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். தயவுசெய்து அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்."

(நன்றி : புதிய தலைமுறை)