18 ஜனவரி, 2014

கலாப்ரியா

அப்பா அப்போது ‘சுபமங்களா’ ரெகுலராக வாங்குவார். இதழுக்கு இதழ் அதில் ஏதோ ஒரு வி.ஐ.பி.யின் பேட்டி வரும். அதில்தான் முதலில் ‘கலாப்ரியா’ என்கிற பெயரை வாசித்தேன். அவரது பெயரில் இருந்த கவர்ச்சியால் கவரப்பட்ட நான், அவர் கவிஞர் என்றதுமே லீசில் விட்டு விட்டேன். சுபமங்களா பேட்டிகள் பிற்பாடு கலாப்ரியாவின் பெயரை தாங்கி ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்று புத்தகமாகவே கூட வந்தது.

கலாப்ரியா என்பவர் தமிழில் முக்கியமான கவிஞர். குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடத்துகிறவர் என்கிற சிறியளவிலான அவரது அறிமுகம் மட்டுமே எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ‘காட்சிப்பிழை’ இதழில் கலாப்ரியா எழுதிய ஒரு சினிமா கட்டுரையை வாசித்தேன். பொதுவாக இலக்கியவாதிகள் உள்ளுக்குள் எம்.ஜி.ஆர்/ரஜினி ரசிகர்களாக இருந்தாலும், வெளியே மார்லன் பிராண்டோ/அல்பசீனோ என்று ஃபிலிம் காட்டக்கூடிய பண்பு வாய்ந்தவர்கள். தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக ‘தெகிரியமாக’ கலாப்ரியா வெளிக்காட்டிக் கொள்கிறாரே என்கிற ஆச்சரியத்தில், அவர் ‘கவிதை தவிர்த்து’ வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி, வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவரைப் பற்றி அவரோடு பழகியவர்களிடம் பேசி, அவரைப்பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன். எங்கள் ஆசிரியர் மாலனும், அவரும் ஒருமையில் ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவர்கள்.

மிகக்குறுகிய காலத்திலேயே கலாப்ரியா என்னுடைய அப்பாவுக்கு இணையான அந்தஸ்தை என்னுடைய இதயத்திலே பெற்றுக் கொண்டார். என் அப்பாவும் இலக்கியவாதி ஆகியிருந்தால், கலாப்ரியா மாதிரியேதான் இருந்திருப்பார். எம்.ஜி.ஆர் – திமுக – இந்தித்திணிப்பு எதிர்ப்பு – எமர்ஜென்ஸி என்று அறுபதுகளின்/எழுபதுகளின் இளைஞர்களுடைய அசலான பிரதிநிதி கலாப்ரியா.

கலாப்ரியாவின் எந்த நூலை வாசிக்க வேண்டுமென்று என்னை கேட்டால், கீழ்க்கண்ட அவரது கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்று பரிந்துரைப்பேன் : நினைவின் தாழ்வாரங்கள் (சந்தியா), ஓடும் நதி (அந்திமழை), உருள் பெருந்தேர் (சந்தியா), சுவரொட்டி (கயல் கவின்), காற்றின் பாடல் (புதிய தலைமுறை).

ஒரு கவிஞன், கவிதை தாண்டி உரைநடைக்கு வரும்போது வாசகனுக்கு வாசிப்பு அனுபவத்தின் எல்லைகளை எந்தளவுக்கு விஸ்தரிக்க முடியும் என்பதற்கு கலாப்ரியாவின் மேற்கண்ட நூல்கள் நல்ல சாட்சி.

மிக எளிமையான மொழி. தேவைப்படும் இடங்களில் உவமானங்கள். வாசகனை எந்த இடத்தில் நகைக்கவிட வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும் என்கிற எழுத்து நுட்பத்தை நுணுக்கமாக கையாளுகிறார் கலாப்ரியா. தன்னுடைய சுயம் சொல்லும் சாக்கில் அறுபதாண்டு தமிழகத்தின் வரலாற்றை ஒரு சாமானியனின் பார்வையில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெள்ளைத்தாளின் கருப்பெழுத்துகளில் பதிந்துக்கொண்டே போகிறார். நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்ள அவருக்கு அவருக்கேயான தனித்துவமான ’ஈஸி ஃபார்முலா’ கைகொடுக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்க நினைத்தால், அந்த வருடத்தில் ரிலீஸான எம்.ஜி.ஆர் படத்தை நினைவுக்கு கொண்டுவந்து, அதன் மூலமாக தன்னுடைய மூளையை கூர்மையாக்கிக் கொள்கிறார். தன்னுடைய அப்பா காலமானபோது நடந்த நிகழ்வுகளை கூட ‘நல்ல நேரம்’ வெளியான காலக்கட்டத்தின் பின்னணியில் பகிர்ந்துக் கொள்கிறார்.

தமிழ் சினிமா உதவி இயக்குனர்கள் ‘சீன் சுடுவதற்காக’ ஏராளமான காட்சிகள் கலாப்ரியாவின் வாழ்க்கையில் காணப்படுகிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் வேலை இல்லாதவராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு சரியில்லை போல. அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார். “உங்கண்ணன் காலையிலே போய் குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிக்கிட்டு கொண்டுவந்த அரிசியிலே சமைச்சது” என்று அம்மா வறுமைநிலையை கோடிட்டுக் காட்டுகிறார். அண்ணனுடைய மனைவி தவறி பல காலமாகிறது. சாப்பாட்டுக்காக தேவையே இல்லாமல் கு.க. செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து தலையில் அடித்துக்கொண்டு தெருவுக்கு வந்து அழுகிறார் கலாப்ரியா. தமிழ் சினிமாவில்கூட வறுமையான குடும்பத்தை காட்ட இவ்வளவு நுணுக்கமான காட்சி இதுவரை வந்ததில்லை. ஆனால் கலாப்ரியாவின் வாழ்வில் நிஜத்திலேயே நடந்திருக்கிறது.

இந்தித்திணிப்பு காலத்தில் கலாப்ரியா ஏரியாவில் ஒரு டீக்கரைக்காரரோ அல்லது சைக்கிள்கடைக்காரரோ தீவிரமான திமுககாரர் இருந்திருக்கிறார். அவர் வைத்த இந்தி ஒழிக பேனருக்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரைப் பற்றியும், அவர் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது பற்றியும் கொஞ்சம் காமெடியாகதான் கட்டுரை போகிறது. கடைசி காட்சி காவல் நிலையத்துக்குள் அவர் சித்திரவதை செய்யப்பட்டு வெளியே குரல் கேட்கிறது. “தமிழ் வாழ்க”. காவல் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கலாப்ரியா உள்ளிட்ட மாணவர்களுக்கு ‘ஜிவ்வென்றிருந்தது’ என்று கட்டுரை முடிகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக கலாப்ரியா பெற்ற அதே ‘ஜிவ்’வை வாசிக்கும்போது நானும் பெற்றேன்.

நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெருந்தேர் நூல்கள் மூன்றையுமே டிரையாலஜி எனலாம். கலாப்ரியாவின் பயோக்ராஃபி. சுவரொட்டி சினிமா தொடர்பான அவரது கட்டுரைகளை கொண்டது. கருப்பு வெள்ளை, வண்ணம், சினிமாஸ்கோப் என்று தமிழ் சினிமாவின் காலமாற்றங்களை கடைக்கோடி ரசிகனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆச்சரியமான விஷயம் சாதாரண ரசிகன் காணத்தவறிய பல கோணங்களை (குறிப்பாக நடிகரல்லாத மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரணைகள்) துல்லியமாக எழுதியிருக்கிறார். புதிய தலைமுறை இதழில் தொடராக வெளிவந்த ‘காற்றின் பாடல்’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வாயிலாக சமூகத்தை, மனிதர்களை பதிவுசெய்யும் ஆவணம்.

இதுவரை கலாப்ரியாவை நான் நேரில் கண்டதில்லை. நாளை சென்னை புத்தகக் காட்சியில் நவீனக் கவிதைகள் குறித்து வாசகர்களோடு உரையாடப் போகிறாராம். இதுகுறித்து அவரோடு உரையாட, கவிதை பாமரனான எனக்கு எதுவுமில்லை. வெறுமனே அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போகிறேன்.

1 கருத்து:

  1. நன்றி யுவா. உங்கள் மன நிலையில்தான் நானும் இருந்தேன்.

    கல்லூரி காலங்களில் சுபமங்களாவின் தீவிர வாசகன் என்பதால், 'கலாப்ரியா ' என்ற பெயர் அறிமுகமாகியிருந்தது. பிற்பாடு சென்னையின் தெரு நாயாக (மார்கெடிங் மனிதனாக) அலைந்ததில் அவர் மறைந்தே போனார். முக நூலில் இருக்கும் அவரை மிகச் சாதாரணமாகத்தான் கடந்து போவேன். இது வரையில் அவரது எழுத்துகளை படித்ததில்லை.

    உங்களது பகிர்வு அவரைப் பற்றி வாசிக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு