1992. மார்ச் மாத தொடக்கத்தில் தினத்தந்தியில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஜினி ஸ்டில்லோடு கவிதாலயாவின் அண்ணாமலை படம் பற்றிய அறிவிப்பு. இயக்கம் வசந்த்.
சல்மான்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மார்ச் 9 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. அங்கே காத்திருந்த கவிதாலயா மேனேஜர், நேராக அவரை பாலச்சந்தரிடம் அழைத்துச் செல்கிறார்.
“வசந்த் விலகிட்டான். அண்ணாமலையை நீ பண்ணு” பாலச்சந்தர் சொன்னபோது சுரேஷ்கிருஷ்ணாவால் நம்பவே முடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். ரஜினி ரசிகராக இருந்தாலும் முன்பாக அவர் இரண்டு கமல் படங்களைதான் இயக்கியிருந்தார். தன்னை ஏன் எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.
“ஜூன் ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தனிப்பட்ட காரணங்களாலே வசந்த் விலகிட்டான். கவிதாலயாவோட மானம் காப்பாத்தப் படணும். நாளை மறுநாள் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. போயஸ் கார்டன் போய் ரஜினியை பார்த்து பேசிடு”
தானாக வந்து பொறியில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் அவருக்கு புலப்படுகிறது. சூப்பர் ஸ்டாரை முதன்முதலாக இயக்கப் போகிறோம். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கியாக வேண்டும். எதையும் பேசவிடாமல் நூற்றி ஒன்பது ரூபாய் அட்வான்ஸை கையில் திணித்துவிட்டார் குருநாதர் கே.பி. அவரிடம் பதினாலு படங்கள் வேலை செய்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா.
“என்னாலே முடியும் சார். நான் செய்யறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு, ரஜினியை காண கிளம்பினார்.
இது அண்ணாமலையின் கதை மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சாதனை சிகரமான ‘பாட்ஷா’வுக்கும் ‘அ’ன்னா போடப்பட்டது இங்கேதான். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் நடிகர் ஒருவரை, கிட்டத்தில் பார்த்து பேசி அவரை புரிந்துகொண்டு அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை பாட்ஷாவின் திரைக்கதை வேகத்தில் எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரோடு மூத்தப் பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மு.மாறனின் தமிழாக்கத்தில் ‘பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.
மூன்று மாத கால குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் அண்ணாமலையின் தரம் என்னவென்பதை இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இன்றும் உணரமுடிகிறது. நம்மை இன்றும் வசீகரிக்கும் பல காட்சிகளின் பின்னணியை விலாவரியாக விவரித்திருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.
குறிப்பாக அண்ணாமலையின் ‘கடவுளே கடவுளே’ பாம்பு காட்சி. ரஜினியின் மீது ஏறிய பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லையாம். இது படப்பிடிப்பில் ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா யாருக்குமே தெரியாது. பாம்பை கொண்டுவந்தவரின் கவனக்குறைவால் இது நேர்ந்திருக்கிறது.
சரத்பாபுவிடமும், ராதாரவியிடமும் சவால் விட்டு தொடை தட்டும் காட்சிக்கு வித்தியாசமான டிராலிஷாட் அமைத்திருந்தார். பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி இது எப்படி திரையில் தெரியப்போகிறது என்பது தெரியாது. ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து சாதனை படைத்த காட்சி இது. கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பல படிகள் நாம் முன்னேறிவிட்டாலும் இன்றும் இந்த காட்சி தரும் அனுபவம் அலாதியானது.
அண்ணாமலை தயாரானபோதே சுரேஷ்கிருஷ்ணாவோடு அடுத்தும் படம் செய்யவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதுதான் ‘பாட்ஷா’. அவர் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் அதிரடியான அண்ணாமலையை செய்துவிட்டு, அதற்கடுத்து அதைவிட அதிரடியான ‘பாட்ஷா’ என்று இருவரின் கூட்டணியில் வந்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைக்கிறார். dilute செய்வதற்காக ஒரு படம் நாம பண்ணலாம் என்று காமெடி சப்ஜெக்டாக வீராவை கொண்டுவருகிறார். தன்னுடைய படங்கள் என்னமாதிரி வரிசையில் அமையவேண்டும் என்று ரஜினி மெனக்கெட்டிருக்கிறார்.
அண்ணாமலை மாதிரியில்லாமல் வீரா செய்யும்போது ரஜினியோடு சில கருத்துவேறுபாடுகள் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு கதையே பிடிக்கவில்லை. தெலுங்கு ‘அல்லரி மொகுடு’வை தமிழுக்கு கொண்டுவந்தால் சரியாக வராது என்று நினைக்கிறார். ரஜினிக்கு அந்த ஸ்க்ரிப்டில் முழு நம்பிக்கை இருந்தது. இளையராஜா முதலில் போட்ட ட்யூன்களில் ஏதோ குறைகிறது என்பதில் தொடங்கி, பாடல் காட்சிகளுக்கு யோசித்த ஐடியா வரை சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நிறைய சங்கடங்கள். அதையெல்லாம் எப்படி ரஜினியின் உதவியோடு தாண்டி வெற்றிப்படமாக எடுத்தார் என்பதை எந்த ‘சென்சாரும்’ இல்லாமல், திறந்த புத்தகமாய் எழுதியிருக்கிறார்.
‘பாட்ஷா’ எடுத்தபோது, சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் வைத்து அடிக்கும் காட்சிக்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினியை வைத்துதான் இந்தப் பிரச்சினையையும் இயக்குனர் கன்வின்ஸ் செய்திருக்கிறார். படம் எடுக்கும்போதே ரஜினிக்கும், சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் தெரிந்துவிட்டது. இதுதான் தங்கள் வாழ்க்கையின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று. பாட்ஷா தயாரிப்பில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருவரும் ‘பாட்ஷா’வாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
பல சிரமங்களை தாண்டி படம் தயார். அன்று மாலை ஆர்.எம்.வீ பார்க்க இருக்கிறார். அதற்கு முன்பாக காலையில் ரஜினி பார்க்கிறார். இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்று ரஜினிக்கு தோன்றுகிறது. கையைப் பிசைந்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தார் சுரேஷ்கிருஷ்ணா. அவசர அவசரமாக இரண்டாம் பாதியில் பல காட்சிகளை வெட்டி, சில எஃபெக்ட்டுகளை சேர்த்து ஆர்.எம்.வீ.க்கு போட்டு காட்டுகிறார். எடிட்டிங் டேபிளில் தயாரான படம் பாட்ஷா என்கிறார் அதன் இயக்குனர். புத்தகத்தின் க்ளைமேக்ஸான இந்த பகுதி பாட்ஷாவின் க்ளைமேக்ஸுக்கு நிகரான பரபரப்பு கொண்டது.
சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இயக்குனரில் தொடங்கி மேக்கப் அசிஸ்டண்டுகள், லைட்டிங் பாய்கள் அனைவரோடும் பேசி தயாராகி நடிக்கும் ரஜினியின் பண்பினை பல பக்கங்களில் விவரித்திருக்கிறார். ரஜினி ஓய்வுக்கு கேரவன் பயன்படுத்துவதில்லையாம். காட்சி இடைவேளைகளில் ஏதாவது பெஞ்சில் படுத்தபடியே, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணியை போட்டு (வெளிச்சம் பாதிக்காமல் இருக்க) அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு மனதுக்குள்ளாகவே ரிகர்சல் பார்ப்பாராம். ரஜினியின் ஒர்க்ஸ்டைல் என்னவென்பதை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கிறார்.
பொதுவாக ரஜினியை பற்றி மக்களிடம் இப்படியொரு எண்ணம் இருக்கிறது. அவர் நடிப்பைத் தவிர்த்து வேறெதிலும் ஆர்வம் காட்ட மாட்டார். மாறாக கமல் ஒரு படத்தின் அத்தனை நிலைகளிலும் உழைப்பார் என்று. சுரேஷ்கிருஷ்ணாவின் இந்த புத்தகம் அதற்கு நேரெதிரான பிம்பத்தை உருவாக்குகிறது. படத்தின் ஒன்லைனரில் தொடங்கி பாடல்கள், இசை, காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துக்குமே ரஜினி மெனக்கெடுகிறார். படப்பிடிப்பில் காட்சியின் தாக்கத்தை மனதில் கொண்டு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஐடியாவும் கொடுப்பதுண்டு. கதைக்கு மாறாக காட்சிகள் எடுக்கப்பட்டால் அது ஏன், எதற்கென்று கேட்டு தனக்கு திருப்தி தராவிட்டால் அதுகுறித்த ஆட்சேபணைகளையும் தெரிவிப்பார். ஷூட்டிங் தாமதப்பட்டு தயாரிப்பாளருக்கு பணநஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இதனால் பகலில் பாடல் காட்சிகள், இரவில் சண்டைக் காட்சிகள் என்று இருபத்து நான்கு மணி நேரம் உழைக்கவும் அவர் எப்போதும் தயாராகதான் இருந்திருக்கிறார்.
நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.
தன்னோடு பணியாற்றிய ஒரு நடிகரை குறித்து இம்மாதிரி ஓர் இயக்குனர் புத்தகம் எழுதுவது அற்புதமான விஷயம். முன்பு தமிழில் இருந்த இந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் எப்படி உருவானது என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் இயக்குனர்கள் சிலர் (ப.நீலகண்டன் மாதிரியானவர்கள்) அவரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். சிவாஜி பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது (ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை). சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இதேபோல பேசும்படம், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் படங்களையொட்டி கமலைப்பற்றி சிங்கீதம் எழுதினால் நன்றாக இருக்கும். கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.
பாட்ஷாவும் நானும் : புனைவுக்கு நிகரான சாகஸம்!
நூல் : பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்
எழுதியவர்கள் : சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்
பக்கங்கள் : 264
விலை : ரூ.125
வெளியீடு : வெஸ்ட்லேண்ட் லிமிடெட்
இணையத்தில் வாங்க : டிஸ்கவரி புக் பேலஸ் இணையத்தளம்
//கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.//
பதிலளிநீக்குஇதில் ஏதோ உள்குத்து இருக்கு...
பாட்ஷா கதை சத்யா மூவீஸ் கதை இலகான்னு டைட்டில். இந்திப்பட ரீமேக்னு வேற (Hum) சொல்றாங்க.. எது உண்மையோ!!!
பதிலளிநீக்குகார்க்கி, சத்யா மூவிஸின் படங்கள் பெரும்பாலானவற்றில் கதை : சத்யா மூவிஸ் கதை இலாகா என்றுதான் போட்டிருக்கும். இதனுடைய ஒன்லைனர் சுரேஷ்கிருஷ்ணாவுடையது. ‘ஹம்’ திரைப்படம் ரஜினிக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதையும் தழுவியிருந்தார்கள். குறிப்பாக கல்லூரி முதல்வரிடம் கண்ணாடி அறைக்குள் ரஜினி பேசும் காட்சி. ஹம் படத்தில் இம்மாதிரி காட்சி அமிதாப் நடித்து படமாக்கப்பட்டு, பிற்பாடு நீளம் காரணமாக வெட்டப்பட்டது. ரஜினிக்கு மிகவும் பிடித்த அந்த காட்சியை பாட்ஷாவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாட்ஷாவைப் பொறுத்தவரை சத்யாமூவிஸ் கதை இலாகா என்பது சுரேஷ்கிருஷ்ணா, ரஜினி, ஆர்.எம்.வீ மற்றும் வசனகர்த்தா பாலகுமாரன் உள்ளிட்ட நிறைய பேர்.
பதிலளிநீக்கு\\நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.
பதிலளிநீக்கு//
Thalaipil baatscha enra vaarthai rajiniyai kurikirathu, baatscha padathai alla.
ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி படம் ரீலிஸ் ஆனதுப்போல....!?
பதிலளிநீக்குஅப்படியென்றால் ‘பாபா’ அனுபவங்களையும் சுரேஷ் எழுதியிருக்கணுமே முத்து123?
பதிலளிநீக்குரஜினிகாந்த் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார்.
பதிலளிநீக்குதமிழ் திரையுலகில் முண்ணனி மூன்று நடிகர்களை வைத்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா மட்டுமே.., அது எம்.கேடி, பியூசி....... எம்ஜியார் சிவாஜி ஜெமினி என்று இயக்கியவர்கள் யாரும் இருக்கிறார்களாஎன்று தெரியவில்லை. ஆனால் ரஜினி, கமல், விஜய்காந்த் வைத்து, பாபா, ஆளவ்ந்தான், கஜேந்திரா இயக்கியவர் இவர் மட்டும்தான். அந்த அனுபவங்களையும் எழுதினால் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்கு//பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. // இது போன்ற முக்கோண வடிவ காட்சி நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. எம். என். ராஜம் அவர்களிடம் எம்ஜியார் தன்னிலை அளிக்கும் ஒரு நீண்ட காட்சியில் இதுபோன்று படம் பிடிக்கப் பட்டுள்ளது.
பதிலளிநீக்குSuper.
பதிலளிநீக்குபுக்கு பட்டாசோ இல்லையோ, புக் ரிவ்யூ பட்டாசு..அரும்பு மீசை ஆரம்பித்த மன்னனில் ரஜினி ரசிகனாக ஃபார்ம் ஆகிவிட்டு, அண்ணாமலையில் ரஜினியை வியக்க ஆரம்பித்து, பாட்ஷா,முத்துவில் டாப்பில் போன என் போன்ற ரசிகர்களுக்கு ஜிவ்வுன்னு ஏறுது படிக்கிறப்பவே..
பதிலளிநீக்குரஜினியிடமும் attention to details உண்டு. சிவாஜி,எந்திரன் வரையிலும். சிவாஜியில் ஒரு காட்சியில், பின்னால் நிற்கும் விவேக் தன் கூலர்சை விலுக்கென்று நெத்தியிலிருந்து கண்ணுக்கு கொண்டு வருவார். ரஜினி அவருக்கு முன்னால் நிற்கிறார். இருந்தாலும் ஷாட் முடிந்து அதை ரஜினி சரியாக நோட் செய்து ”இதெப்ப நடந்துச்சு” என குறுகுறுவென விவேக்கிடம் கேட்டதாக விவேக் சொல்லியிருக்கிறார்..
பாட்ஷாவை பொறுத்தவரை, அதன் ஃபர்ஸ்ட் ஹாஃப் பில்ட்-அப் சீன்களே அதன் பலம். அது ஒவ்வொன்றிலும் சுவாரசியமாய் ‘சீன் சொன்ன’ பாலகுமாரனின் பங்கு அளப்பரியது.
பதிலளிநீக்கு