6 ஜனவரி, 2014

‘நாவல்’பழ சீசன்

மீண்டும் நாவல்களின் காலம். சென்னை புத்தகக் காட்சியின் புண்ணியத்தால் மார்கழி என்பது இனி இசைக்கான மாதம் மட்டுமல்ல. இலக்கியத்துக்கான மாதமும் கூட. புத்தக வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள், வாசகர் சந்திப்பு என்று சென்னை அமளிதுமளிப்படுகிறது. இவ்வாண்டு புதிய எழுத்தாளர்களின் வருகை, பெரிய எழுத்தாளர்களின் சாதனை என்று இலக்கியம், இஞ்சி கடித்தாற்போல சுறுசுறுப்பாகியிருக்கிறது.

பின்வருவது இவ்வருடத்துக்கான நாவல்கள் குறித்த முழுமையான தொகுப்பு அல்ல. வானத்தில் வட்டமிடும் ஏராளமான கழுகுகளை விட்டு விலகி, ரொம்ப உயரத்துக்கு பறக்க பயந்துக்கொண்டு தனியே பறக்கும் ஒரே ஒரு கழுகின் குறுகிய பார்வை.

ஜெயமோகன் ராசியான கை. வெள்ளை யானை மூலமாக பிள்ளையார் சுழி போட்டார். அதிகாரப்பூர்வமான புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே ஐநூறுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று அபார சாதனை புரிந்திருக்கிறது. மற்றவர்களின் போற்றுதலும், தூற்றுதலும் ஜெயமோகனுக்கு புதிதல்ல. வெள்ளை யானையை முடித்த கையோடு என் பணி, பணி செய்து கிடப்பதே என்று அடுத்த அசுர சாதனைக்கு தயாராகி விட்டார். உலக இலக்கிய வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த பத்தாண்டுகளுக்கு தினமும் தன்னை ‘கமிட்’ செய்துக்கொண்ட முதல் எழுத்தாளர் ஜெயமோகன்தான். வருடத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் பத்து பாகங்களில் (சராசரியாக ஐநூறு பக்கங்கள்) மகாபாரதத்தை தினமும் ஒரு அத்தியாயமாக எழுதத் தொடங்கிவிட்டார். ஐம்பத்தி இரண்டு வயதில் இப்படியொரு இமாலயப் பணியை ‘ஜஸ்ட் லைக் தட்’டாக தொடங்கும் தைரியம் வேறு யாருக்குமில்லை. எழுத்துதான் இலட்சியம், வாழ்க்கை, பயணம், புடலங்காய் என்று பேசுபவர்கள் மானசீகமாக அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்து எந்திரன்.

புதிய எழுத்தாளர்களின் வருகை ஓர் அலையாக கிளம்பியிருக்கிறது. தான் பாட்டுக்கு இந்த அலையை ஏற்படுத்திவிட்டு, தினமும் நைட்ஷோ படம் பார்க்கும் மசாலா எண்டெர்டெயினராக மேடை மேடையாக ஏறிக்கொண்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க அறிமுக எழுத்தாளராக விநாயக முருகனை அறிமுகம் செய்திருக்கிறார். ‘ராஜீவ்காந்தி சாலை’ வெளிவருவதற்கு முன்பாகவே சாருவின் கடுமையான விமர்சனம், அந்நாவலின் விற்பனையை சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீக்கடையில் விற்பதைப் போல சூடாக்கியிருக்கிறது. நொடிக்கு நொடி குவியும் ஆன்லைன் ஆர்டர்களும், நேரில் வந்து ஆவலாக கேட்கும் வாசகர்களுக்கும் பதில் சொல்லி விற்பனையாளர்களால் மாளமுடியவில்லை. பிளாக் டிக்கெட் மாதிரி நாவல் இன்னமும் ரெண்டு மூன்று மடங்கு எக்ஸ்ட்ரா ரேட்டுக்கு விற்கப்படாதது ஒன்றுதான் நடக்கவில்லை. “எப்பவுமே பிரெஸ்ஸில் ராஜீவ்காந்தி சாலையையே ஓட்டிக்கிட்டிருந்தா, மத்த புக்குங்களை நான் எப்போதான் பிரிண்ட் பண்ணுறது?” என்று சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன். வழக்கம்போலவே இணையத்தில் புழங்குபவர்கள் நாவலை படிக்காமலேயே நக்கல் அடித்துக் கொண்டிருந்தாலும், ‘ஒரிஜினல்’ வாசகர்கள் ரா.கா.சாலையை கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.

இருபது ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதியிருந்தாலும், கே.என்.சிவராமன் ஒரு முழுநீளத் தொடரை முதன்முதலாக கடந்த ஆண்டுதான் ‘குங்குமம்’ இதழில் ‘கர்ணனின் கவசமாக’ எழுதி முடித்தார். தொடர் முடிந்த கையோடே அவர்களது இன்-ஹவுஸ் பதிப்பகமான சூரியன் பதிப்பகம் நாவலாக வெளியிட்டுவிட, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது கர்ணனின் கவசம். இந்திரா சவுந்தரராஜனின் கதைக்கருவை சுஜாதா எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்நாவல். ‘சயன்டிஃபிக் த்ரில்லர்’ என்கிற புதிய ஜானரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் சிவராமன். பரபரவென ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வேகத்தில் நகரும் கதை, புதிய தலைமுறை வாசகர்களை பரவலாக ஈர்த்திருக்கிறது.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களாக எழுதப்பட்டு பல்லாயிரக்கணக்கில் லைக்குகளையும், பலநூறுக் கணக்கில் கமெண்டுகளையும் பெற்ற அராத்துவின் ‘தற்கொலை குறுங்கதைகள்’ நாவலாக வெளிவந்திருக்கிறது. இதற்கும் புண்ணியம் கட்டிக்கொண்டது மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம். ராஜீவ்காந்தி சாலையை எந்தளவுக்கு எதிர்த்தாரோ, அதே தீவிரத்தன்மையோடு இந்நாவலை ஆதரித்தார் சாரு. “இந்த வருடம் என்னுடைய நூல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே அராத்துவின் நூலை என்னுடைய நூலாக, என் வாசகர்கள் எடுத்துக் கொள்ளலாம்” எனுமளவுக்கு அவரது பெருந்தன்மை அமைந்தது. ஆனால் இதை என்னால் நாவலாக வாசிக்க முடியவில்லை. சிறுகதை நூல் என்றோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களின் தொகுப்பு என்றோ வந்திருந்தால் இந்த நெருடல் கிடைத்திருக்காது. ஃபேஸ்புக்கில் வந்தபோது பெருமளவு ரசித்த நம்மால், முழுமையாக ஒரே தம்மில் வாசிக்கும்போது நிறைய இடங்கள் ரிபீட் ஆகி, எக்கோ அடித்துக் கொண்டிருப்பதான உணர்வு. முன்னுரையில் digimodernism என்றெல்லாம் முப்பது பக்கத்துக்கு சாரு ஜல்லியடித்திருந்தாலும், அவரே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘ஸீரோ டிகிரி’யின் இன்னோவேட்டிவ் ஃபார்மேட்டை அடித்துக்கொள்ள இன்னும் எவரும் பிறக்கவில்லை. இதையெல்லாம் மீறியும் ‘தற்கொலை குறுங்கதைகள்’ லைட் ரீடிங்குக்கான முக்கியமான ஆக்கம். பெட்ரூமில் காதலி ஃபேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்க, அவளோடு ஃபோர்ப்ளே செய்துக் கொண்டே, கட்டிங் போதையில், மாணிக்சந்தை குதப்பிக்கொண்டு, கையில் சிகரெட் புகைய ஒரு பேரிலக்கியத்தை வாசிக்கும் கிறுகிறுப்பை, போதையை த.கு கொடுக்கிறது. போலவே சாம்நாதனின் ‘களவு, காதல், காமம்’. அட்டகாசமாக வரவேண்டிய நாவலை அவசர அடியாக முடித்திருக்கிறார். ஆனால் எழுத்துநடையில் கவனிக்கப்பட வேண்டியவர். அடுத்து பொறுமையாக ஒரு முழுமையான நாவலை எழுதக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இவர்கள் இருவருமே சாரு வாசகர் வட்டத்தில் இருந்து இவ்வருடம் உருவான எழுத்தாளர்கள். தன் வாசகர்களையும் எழுத்தாளர்களாக வளர்த்தெடுக்கும் விதத்திலும் சாருவே தமிழிலக்கியத்துக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

காலச்சுவடின் நாவல்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தரமான உள்ளடக்கம் என்று அவர்களின் ஆசிரியர் குழு சான்று தரும் நூல்களை மட்டுமே வெளியிடுவார்கள். இந்த சீஸனில் அவர்களது பங்கு ஆறு நாவல்கள். யுவன் சந்திரசேகரின் நினைவுதிர் காலம், பெருமாள் முருகனின் பூக்குழி, சுகுமாரனின் வெல்லிங்டன் மூன்றும் முக்கியமானவை. மற்ற மூன்று நூல்கள் குறித்து விமர்சனங்கள் வந்தபிறகு கண்டுகொள்ளலாம் என்றிருக்கிறேன். ‘கொல்வதெழுதல்’, ’உம்மத்’, ‘அஜ்னபி’ என்று தலைப்புகளே டெர்ரராக இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஊட்டி தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தளம். இந்த ஊரை அறியாத தமிழனே இல்லையென்றாலும், தமிழிலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத ஊர் எனும் அடிப்படையில், ஊட்டியை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் ‘வெல்லிங்டன்’ முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட அறுபது வயதை நெருங்கும் சுகுமாரன், இதுவரை கவிதைகள் மற்றும் அவரது மொழிப்பெயர்ப்புகள் வழியாகவே அறியப்பட்டிருக்கிறார். நீண்டகால பத்திரிகையுலக அனுபவமும் கொண்ட சுகுமாரனின் முதல் நாவல் இது.

பொன்னுலகம் வெளியிட்டிருக்கும் ‘தறியுடன்’ குறிப்பிடத்தகுந்த இன்னொரு முக்கியமான நாவல். நக்ஸல்பாரி தோழர்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழிலக்கியத்தில் போதுமான தரவுகள் எதுவுமில்லை. பாரதிநாதன் எழுதியிருக்கும் தறியுடன் அந்த குறையைப் போக்கியிருக்கிறது. தலையணை சைஸ் நாவல்தான். விலை ரூ.650 என்று நினைக்கிறேன். தமிழக அரசின் – காவல்துறையின் தடை மாதிரி சர்ச்சைகள் ஏதுமில்லையென்றால், தறியடி புத்தகக்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.

உயிர்மை வெளியீட்டில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் ‘காலகண்டம்’ இன்னுமொரு முக்கியமான நாவலாக படுகிறது. பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிகம் பேசப்படாத மனிதர்களை, இடங்களை, தொழில்களை குறித்த நாவல்கள் வர ஆரம்பித்திருப்பது, நாவல்களுக்கு பரவலான இடத்தை வாசகர்களிடம் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முந்தைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி என்று ஹாட்ரிக் ஹிட் அடித்த தமிழ்மகனின் நாவல் எதுவும் இந்த வருடம் வரவில்லை என்பது ஏமாற்றமே. வாசகர்களிடையோ, விமர்சகர்களிடையோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ‘கால்கள்’ தமிழின் தனித்துவமான நாவல். உடனடியாக இன்னொரு நாவலை ஆர்.அபிலாஷ் எழுதியிருக்க வேண்டும். தரமான உரைநடையாளரான அவரும் திரும்ப கவிதைக்கு திரும்பிவிட்டது நமக்கு இழப்புதான்.

சந்தேகமேயில்லாமல் இந்த வருஷத்தின் ஹீரோ எஸ்.ராமகிருஷ்ணன்தான். தன்னுடைய வழக்கமான ஏரியாவான அகச்சிக்கல், உளவிசாரணையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஃப்ரெஷ்ஷான ஐடியாவோடு ‘நிமித்தம்’ மூலம் களமிறங்கியிருக்கிறார். உயிர்மை வெளியீடு. நாற்பத்தியேழு வயதான தேவராஜுக்கு பகுதிநேரமாக காது கேட்காது. குடும்பத்திலும், சமூகத்திலும் உதவாக்கரையாக முத்திரை குத்தப்படும் அப்பாவி. அப்படி, இப்படியென்று அலைக்கழிக்கப்பட்டு நாற்பத்தேழு வயதில்தான் அவனுக்கு திருமணம் ஆகிறது. வாழ்வில் தன்னை கடந்துச் சென்ற, தனக்கு முக்கியமானவர்களாக பட்ட அனைவருக்கும் திருமணத்துக்கு ‘அழைப்பிதழ்’ வைக்கிறான். யார், யாரெல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு வழிமேல் விழிவைத்து அவன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவுதான் நிமித்தத்தின் மொத்த கதையும். இந்நூலை அறிமுகப்படுத்தி பேசும்போது மனுஷ்யபுத்திரன் லேசாக தழுதழுத்ததாக பட்டது. இவ்வாறாக முன்னெப்போதும் அவர் உணர்ச்சிவசப்பட்டதாக நினைவில்லை. இது தேவராஜின் கதை மட்டுமல்ல. நாற்பத்தேழு ஆண்டுகளாக தேவராஜை சுற்றி நடந்த விஷயங்களின் கதை. மொழிப்போர், எமர்ஜென்ஸி, ஈழம், மண்டல் கமிஷனென்று தேவராஜ் நிமித்தம் இந்த வரலாற்றையே கேப்ஸ்யூலாக்கி தந்திருக்கிறார் எஸ்ரா. நிமித்த நாயகன் தேவராஜைப் போலவே, எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் வயது நாற்பத்தியேழுதான். இது யதேச்சையாக அமைந்ததா அல்லது குறிப்பாக நாற்பத்தியேழுதான் வேண்டுமென்று எழுதினாரா என்று தெரியவில்லை. பரபரப்பான விற்பனை மட்டுமல்ல, ஏராளமான விருதுகளையும் வாங்க இரண்டு கைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் தயாராக வைத்திருக்க வேண்டும்.

7 கருத்துகள்:

  1. ஃபேஸ்புக்கில் கே.என்.சிவராமன் எழுதிய கமெண்ட் :

    siva raman
    12:37 PM
    1

    புத்தக கண்காட்சிக்கு முந்தைய நல்ல அறிமுகம். இதனுடன் ‘தமிழினி’யில் வரவிருக்கும் நாவல்களையும் சேர்க்கலாம். ‘நெடுஞ்சாலை’க்கு பிறகு கண்மணி குணசேகரன் எழுதியிருக்கும் புதிய நாவல் அச்சுக்கு சென்றிருக்கிறது. சு.வேணுகோபாலின் மூன்று குறுநாவல்கள் (ஒவ்வொன்றும் சராசரியாக நூறு பக்கங்கள்) தனித்தனியே வெளியாகின்றன. இதுபோக சூத்திரதாரி என்னும் எம்.கோபாலகிருஷ்ணனின் (’மணல் கடிகை’ புகழ்) நாவலும் வெளியாகிறது.

    பதிலளிநீக்கு
  2. எஸ்.ரா எழுதிய “நிமித்தம்”

    http://www.wecanshopping.com/products/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html

    சிவராமன் எழுதிய கர்ணனின் கவசம்
    http://www.wecanshopping.com/products/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html

    பதிலளிநீக்கு
  3. சிந்திப்பவன்2:38 PM, ஜனவரி 06, 2014

    yuvakrishnan,I do not know about others but you are born for writing reviews and you excel be it cinema or literature.
    Best wishes,

    பதிலளிநீக்கு
  4. கொல்வதெழுதல்’, ’உம்மத்’, ‘அஜ்னபி’ என்று தலைப்புகளே டெர்ரராக இருக்கின்றன///



    காமெடியாத்தானே சொன்னிங்க!!!!முஸ்லிம் எழுத்தாளர்கள்,தலைப்புகள் என்பதால் இல்லையே?????

    பதிலளிநீக்கு
  5. //பொன்னுலகம் வெளியிட்டிருக்கும் ‘தறியடி’ குறிப்பிடத்தகுந்த இன்னொரு முக்கியமான நாவல். ..// இந்த நாவலின் பெயர் ‘தறியடி’ அல்ல....."தறியுடன்...."

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா10:04 AM, ஜனவரி 07, 2014

    நண்பர் யுவகிருஷ்ணாவிற்கு, சின்ன திருத்தம். பாரதிநாதனின் நாவல் ‘தறியடி’ இல்​லை "தறியுடன்..."

    பதிலளிநீக்கு
  7. ’தறியுடன்’ - திருத்திவிட்டேன் தோழர்களே!

    பதிலளிநீக்கு