11 ஜனவரி, 2014

ப்ரியா கல்யாணராமன்

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன். 

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். இளமையும், காமமும் இணைந்து கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே ப்ரியா கல்யாணராமன் பற்றி மேற்கண்டவாறு முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்.

பத்தொன்பது வயதில் பத்திரிகைத்துறைக்கு வந்த சிக்கல்காரர் (இவருக்கு முன்பு சிக்கலில் ஃபேமஸ் ஆனவர் 'தில்லானா மோகனாம்பாள்' சிக்கல் சண்முகசுந்தரம்). குமுதம் இதழின் ஆரம்பகால தூண்களான ரா.கி.ர., ஜ.ரா.சு., புனிதன் என்று வரிசையாக வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு நாடிக் கொண்டிருந்தார்கள். குமுதத்துக்கு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அப்போது அவர் கண்டெடுத்த முத்துகளில் ப்ரியா கல்யாணராமன், ரஞ்சன், கிருஷ்ணா டாவின்ஸி ஆகியோர் முக்கியமானவர்கள்.

1987ல் பத்திரிகைத்துறைக்குள் நிருபராக நுழைந்த ப்ரியா கல்யாணராமன், கடந்த 2012ல் இத்துறையில் வெள்ளிவிழாவே கண்டுவிட்டார். தற்போது குமுதத்தின் ஆசிரியர். தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் இளைஞர்கள் ஒரு மாதிரியான குழப்பான மனோபாவத்தோடு இருந்தார்கள். உண்மையில் கடந்த நூற்றாண்டுக்கும், இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக அமைந்த பத்தாண்டுகளாக 90 டூ 2000 வருடங்களை சொல்லலாம். ஒரு மாற்றம் வரும்போது முந்தைய லைஃப்ஸ்டைலின் பாதிப்பும், அடுத்து வரவிருக்கும் ட்ரெண்டின் தாக்கமும் கலந்து அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் ஒரு மாதிரியாக எகனைமொகனையாகதான் அத்தலைமுறை இருக்கும். அம்மாதிரியான சூழலின் சமகால பிரச்சினைகளை தனது கதைகளிலும், கட்டுரைகளிலும் அசலாக பிரதிபலித்தவர் ப்ரியா கல்யாணராமன். தொண்ணூறுகளின் இளைஞனுடைய காதல், லட்சியம், கனவு, இத்யாதிகள் எப்படியிருந்தது, அதே நேரம் யதார்த்தம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் எழுதிய தொடர்களை, சிறுகதைகளை (குமுதம் பதிப்பகத்தில் தனித்தனி புத்தகமாக வந்திருக்கிறது) வாசித்தால் ஓரளவுக்கு புரிதல் கிடைக்கும்.

2000ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட சாமியார் மாதிரி ஆகிப்போனார். அவரது எழுத்துகளை பெருமளவு ஆன்மீகம் ஆக்கிரமித்தது. கோயில் சொல்லும் கதைகள், குறைதீர்க்கும் கோயில்கள், ஜெகத்குரு, 108 திருப்பதிகள், சாய்பாபா என்று குமுதம் மற்றும் குமுதம் பக்தி இதழ்களில் எழுதிக் குவித்தார். எழுதுவது ஆன்மீகம் என்றாலும், அதையும் மிகச்சுவையாக பரிமாறுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. நமக்கு ஆகாத ஏரியாதான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவது உண்டு.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நாம் யாரையுமே கொஞ்சம் தாமதமாகதான் கொண்டாடுவோம்.

இப்படியொரு ஏகலைவன் தனக்கு சிஷ்யனாக இருக்கிறான் என்று அந்த பீஷ்மருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை நான் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் யாராவது ஒரு சிலரையாவது கண்மூடித்தனமாக நம்புவதும், ரசிப்பதும், வழிபடுவதும் இல்லையென்றால் அதென்ன வாழ்க்கை?

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை புத்தகக் காட்சியில் ப்ரியா கல்யாணராமனின் சில நூல்கள் வெளியிடப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம். இவர் எழுதி நூல்வடிவம் பெற்ற அத்தனை நூல்களுமே குமுதம் ஸ்டாலில் கிடைக்கும்.

8 கருத்துகள்:

  1. I remember that story in Kumudam. People used to read that and other kumudam stories for the sexual contents in 90s. I have stopped reading Kumudam nowadays, its only about Cinema and Actors.

    Major issues in Tamil society is the poor quality of political leadership - KK and JJ have destroyed Governance.
    Its evident on our quality of life - dying water resources, wide spread corruption in all dept, common man harassed in all places, education in the hands of rowdies, real estate destroyed agri,
    media in hands of rich, increase in alcohol addicts among youth, mineral resources being swindled, continuing caste problems.
    All thes issues and what does our writers write about these days - cinema, actors, internal politics and political alliances and every december about carnatic music.

    பதிலளிநீக்கு
  2. லக்கி அவர்களே உண்மைத்தமிழன் பதிவு பக்கம் என்ன ஆச்சு. என் 2 வாராங்களாக முடங்கி கிடக்கின்றது?

    பதிலளிநீக்கு
  3. பிரியா கல்யாணராமன் பற்றிய கட்டுரை அருமையாக எழுதப்பட்டுள்ளது, நன்றி. ஒருகாலத்தில் நாங்கள் படிக்கும் பள்ளி போதும் பின்னர் கல்லூரி நாட்களிலும் ( எண்பதுகளின் இறுதி ) குமுதம் விகடன் பத்திரிக்கைகளை, வெளிவரும் முன்பே காலையில் முதலில் வாங்கும் குரூப், அதற்க்கு பல காரணங்கள் உண்டென்றாலும், அதில் நாங்கள் எழுதியனுப்பிய வாசகர் கடிதம் மற்றும் கேள்வி பதில்கள் வந்திருக்கிறதா! என்று பார்பதும், அந்த வாரத்திற்கு முதலின் கடித எழுதவும், பிடித்த எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும் எண்ணமும் முக்கிய காரணங்கள், எழுத்தாளர்களில் சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோர் மிக முக்கிய காரணமாகும், அப்போதுதான் பிரியா கலயானராமன் குமுதத்தில் எழுத ஆரம்பித்த நேரம், அவரின் ஒரு பக்க கதைகளை படிக்க மிக மிக ஆர்வமாகி போனோம், நானும் என்னுடைய நண்பர்களும், காரணம் கதைகளை தாண்டி, அட இவர் நம்ம ஊரை மையமாக வைத்து எழுதுகிறாரே என்று எண்ணம், முக்கியமாக யாருமே நாகை மற்றும் சிக்கலை மையமாக கதைகளை எழுதாதபோது, இவரின் அந்த ஒருபக்க கதைகள் பெரும்பாலும் அப்பகுதியை பற்றியே இருக்கும் ,கதை நடக்கும் இடங்கள நமக்கும் மிக பரிச்சயம் என்பதால் இவர் எங்களால் கவனிக்க தக்கவராகி போனார், பின்னர் அதிலிருந்து மாறி ,முன்னேறி குமுதத்தின் முக்கிய நபராகி போனதில் மிக்க மகிழ்ச்சி, அதிலும் திரு பரணிதரனுக்கு பிறகு அவரின் இடத்தை இவர் நிரப்பினார் என்பதும் முக்கிய நிகழ்வுகள், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை பற்றிய கட்டுரை, அவர் பற்றிய பின்னணியோடு, எங்களின் நினைவுகளை அசைபோடவும் உதவியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:27 PM, ஜனவரி 15, 2014

    Ariya Mayayil sikki vittergal.Pls come out.Arvind

    பதிலளிநீக்கு
  5. "இப்படியொரு ஏகலைவன் தனக்கு சிஷ்யனாக இருக்கிறான் என்று அந்த பீஷ்மருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை."

    இதிலிருந்து உங்களுக்கு ஏகலைவனையும் தெரியவில்லை, பீஷ்மரையும் தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மாற்றுங்கள் துரோணர் என்று.

    பதிலளிநீக்கு
  6. சமீபத்தில் பிரியா கல்யாணராமன் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் எழுதுவது அத்தகைய வாய்ப்பு உருவாகக் காரணமாக அமைந்தது புதியவன் என்ற வேறுபாடு இல்லாமல் சகஜமாக பேசினார், திறமைகளை தேடி வெளிப் படுத்தும் பண்புடையவர் என்பதை அறிந்து கொண்டேன். அவரது பார்வையில் நான் படும் வாய்ப்பு எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது , என்னுடைய கதை ஒன்று 30.04.2014 குமுதத்தில் பிரசுரம் செய்யப்பட்டது.

    இந்தக் கட்டுரை பற்றியும் அவரிடம் தெரிவித்தேன்.

    பதிலளிநீக்கு