16 ஜனவரி, 2014

காமிக்ஸ் எப்படி உருவாகிறது?

பாக்கெட் சைஸில் நம்மை பரவசப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஏ-4 அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறார்கள். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் குழந்தைகளின் இணைபிரியா நண்பர்களான முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் குழுமத்தார் கடந்த ஆண்டு புது பரிமாணத்துக்கு மாறியிருக்கிறார்கள். நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தினகரன் வசந்தம் அளவில், வழுவழுப்பான உயர்ரக தாளில், முழுக்க வண்ணத்தில் சித்திரக்கதைகளை அச்சிடுகிறார்கள். இரும்புக்கை மாயாவியை எல்லாம் ஏறக்கட்டி ஆயிற்று. சமகாலத்தில் சர்வதேச அளவுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர்ஹீரோக்களை சுடச்சுட தமிழுக்கு கொண்டு வருகிறார்கள்.

பட்டாசுக்கு பெயர் போன சிவகாசி நகரத்தில், பரபரப்பான மாலை வேளை ஒன்றில் இந்த படைப்பாளிகளை சந்தித்துப் பேசினோம்.
ஆசிரியர் எஸ்.விஜயன்

“ஒரு காமிக்ஸை வாசிப்பது குழந்தைகளுக்கும் எளிதானது. ஆனால் அதன் உருவாக்கம் ஒரு பிரும்மாண்டமான ஹாலிவுட் திரைப்பட உருவாக்கத்துக்கு இணையான உழைப்பை கோரக்கூடியது. ஒவ்வொரு சித்திரக்கதையின் பின்னணியிலும் எவ்வளவு திறமையாளர்கள் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், இது சிறுபிள்ளை விளையாட்டு அல்ல என்பதை புரிந்துக் கொள்வீர்கள்” என்கிறார் முத்து, லயன் காமிக்ஸ்களின் ஆசிரியர் எஸ்.விஜயன். பழைய கிளாசிக் காமிக்ஸ்களை மீண்டும் வாசிக்க விரும்பும் ‘மலரும் நினைவுகள்’ வாசகர்களின் வசதிக்காக ‘சன்ஷைன் காமிக்ஸ்’ என்று புதியதாக ஒரு இதழையும் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.

ஒரு காமிக்ஸ் என்பது முதலில் ஓர் எழுத்தாளரின் மூளையில் மின்னலாக ஒரு வரி கதை வடிவில் பளிச்சிடுகிறது. இந்த கதை எப்படி காமிக்ஸ் ஆகப்போகிறது என்று சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் அந்த எழுத்தாளர் விளக்குகிறார். அடுத்தக்கட்டம் திரைக்கதை எழுதுவது. கடைசியாக வசனம். ஒரு தரமான காமிக்ஸுக்கான கதை, திரைக்கதை, வசனம் எழுத சில எழுத்தாளர்கள் இரண்டு ஆண்டு காலம் கூட எடுத்துக் கொள்வதுண்டு. இலக்கிய எழுத்தாளர்கள் மாதிரியே இதற்கென காமிக்ஸ் எழுத்தாளர்களும் உலகின் பல்வேறு மூலைகளுக்கு சென்று கள ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.

அடுத்து ஓவியர். ஒரு காமிக்ஸின் பிரதான அம்சமே ஓவியம்தான் எனும்போது, இந்த தொடர் தயாரிப்பில் இவர்தான் கதாநாயகன். எழுத்தாளரின் கதையை நன்கு உள்வாங்கிக் கொண்டு காமிக்ஸின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இவர்தான். கதாசிரியர் ஒரு நாட்டிலும், ஓவியர் வேறு நாட்டிலும் இருப்பதெல்லாம் இத்தொழிலில் சகஜம். ஆனால் இருவருக்கும் ஒத்துப்போகும் புரிந்துணர்வு இருப்பது அவசியம்.

ஒவ்வொரு ஓவியரும் தனக்கே தனக்கான ஒவ்வொரு பாணியை கடைப்பிடிக்கிறார்கள். ஐம்பது பக்க அளவு கொண்ட காமிக்ஸ் புத்தகத்தை வரைய ஆறுமாதங்கள் கூட தேவைப்படும். சில சமயங்களில் வருடக்கணக்கிலும் இந்த வேலை நீளும். பதிப்பகங்கள் அவசரப்படுத்துவதில்லை. தயாரிப்பு தரமாக இருக்க வேண்டும் என்பதால் மீனுக்கு காத்திருக்கும் கொக்காக பொறுமை காக்கிறார்கள். ஆரம்பக்கட்ட ஓவியங்கள் கருப்பு வெள்ளையில்தான் உருவாகிறது.

ஓவியங்கள் தயார் ஆனதுமே, அதில் வரையக்கூடிய வசனங்களை வரையும் ‘லெட்டரிங்’ பணிகள் தொடங்கிவிடும். இருப்பதிலேயே கடினமான பணி இதுதான். வசனங்களை ஓவியங்களுக்குள் பொருத்துவது சிற்பம் செதுக்குவதைப் போன்ற உன்னத கலை. ஓவியத்தின் பிரும்மாண்டமும் குறையக்கூடாது. பொருத்தமான வசனத்தையும் பொறுத்தியாக வேண்டும்.

இந்த வேலைகள் முடிந்ததுமே வண்ணம் சேர்க்கும் பணி துவங்கும். கதையின் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப வண்ணக்கலவைகளை சேர்க்க வேண்டும். சில அஷ்டாவதனிகள் ஒருவராகவே இந்த நான்கு வேலையையும் செய்வதும் உண்டு.
ஜூனியர் எடிட்டர் விக்ரம் விஜயன்

இம்மாதிரி உருவாகி, வெளியாகி அயல்நாடுகளில் சக்கைப்போடு போடும் காமிக்ஸ்களைதான் லட்சங்களில் ராயல்டி கொடுத்து தமிழுக்கு கொண்டுவருகிறார் எஸ்.விஜயன். இவரது தந்தை எம்.சவுந்தரபாண்டியன் முத்து காமிக்ஸை தொடங்கினார். தந்தையின் பணியை லயன் காமிக்ஸாக விஜயன் விரிவுபடுத்த, உதவிக்கு தோள் கொடுக்கிறார் தம்பி எஸ்.பிரகாஷ்குமார். மூன்றாவது தலைமுறையாக ‘ஜீனியர் எடிட்டர்’ ஆக கோதாவில் குதித்திருப்பவர் கல்லூரி மாணவரான விக்ரம் விஜயன். இவர் எஸ்.விஜயனின் மகன்.

இவர்கள் மட்டுமின்றி ஒரு பத்திரிகை நடத்துவதற்கான ஒட்டுமொத்த மனித உழைப்பையும் செலுத்தும் ஒரு பெரிய குழு சிவகாசியில் நாற்பதாண்டுகளாக செயல்படுகிறது. ஏராளமான ஓவியர்களும், மொழிபெயர்ப்பாளர்களும், விற்பனையாளர்களும், இதரத்துறை பணியாளர்களும் இக்குழுவில் அடக்கம்.
இணையாசிரியர் பிரகாஷ் & முத்து காமிக்ஸ் நிறுவனர் எம்.சவுந்தரபாண்டியன்

“அயல்மொழி கதைகளை தமிழுக்கு கொண்டுவரும்போது ஆதாரமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவர்களது ரசனையும், நமது ரசனையும் ஒத்துப்போகும் கதைகளை மட்டுமே தமிழில் வெளியிட முடியும். அமெரிக்காவில் பரபரப்பாக விற்பனை ஆன ஒரு கதை, இங்கேயும் வெற்றிபெறுமென்று நிச்சயமாக சொல்ல முடியாது. நம் வாசகர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்குமென்ற நம்முடைய தீர்மானம்தான் காமிக்ஸில் வெற்றி காண்பதற்கான சூத்திரம்” என்கிறார் சவுந்தரபாண்டியன். இரும்புக்கை மாயாவியை தமிழுக்கு ஏற்றவராக கண்டு கொண்டு அறிமுகப்படுத்தியதிலேயே, அவரது திறமையை நாம் கண்டுகொள்ளலாம்.

அயல்நாட்டு கதைகளில் அவர்களது கலாச்சாரம் கொஞ்சம் ‘தாராளமாக’ இருக்கும். அதுபோன்ற சூழல்களில், தயவுதாட்சணியமே பார்க்காமல் கத்திரி போட்டு வெட்டிவிடுகிறார்கள்.

1982ல் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்’ என்கிற பத்திரிகையை வெறும் அறுபது காசுக்கு விற்றதுதான் இவர்களது பெரிய சாதனை. சிறுகதைகள், காமிக்ஸ் தொடர்கதைகள் என்று பக்காவான கலவையாக அதை சவுந்தரபாண்டியன் தயாரித்தார். ஆனாலும் ஒரு வாரப்பத்திரிகைக்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்யாததால், இருபத்தி இரண்டு இதழ்களோடு மட்டுமே அது நின்றுவிட்டது.

தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று 1986 முதல் 89 வரையிலான மூன்றாண்டுகளை சொல்லலாம். இவர்களது குழுமத்தில் இருந்து மட்டுமே ஐந்து இதழ்களை கொண்டுவந்தார்கள். டிவி, கம்ப்யூட்டர், செல்போன், இண்டர்நெட் இடையூறுகள் இல்லாத அக்காலக் கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் காமிக்ஸ் புத்தகங்கள் சக்கைப்போடு போட்டன. எனவே அப்போது இரண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் புத்தகங்களை கொண்டுவர முடிந்தது.

ஆனால் இன்றைய சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை. காமிக்ஸ் வாசிப்பு என்பது சிறுவட்டமாக குறுகிவிட்டது. காமிக்ஸ் வாசிப்பை, பெரும்பாலான வாசகர்கள் ‘சின்னப்பசங்க சமாச்சாரம்’ என்று மூடநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த அபிப்ராயங்களை தவிடுபொடியாக்கும் வண்ணமே முத்து காமிக்ஸ் குழுமம் செயல்படுகிறது.

“அன்றைய டூரிங் டாக்கிஸீல் படம் பார்த்த அனுபவத்துக்கும், இன்றைய மல்ட்டிபிளக்ஸ் அரங்குகளில் படம் பார்க்கும் அனுபவத்துக்குமான வேறுபாட்டை எங்களது இப்போதைய வெளியீடுகளில் நீங்கள் காணலாம். இன்றைய தலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையை கொண்டு வருவதற்காக அயல்நாட்டு ஆர்ட் பேப்பர், அட்டகாசமான வண்ணங்கள், ஆழமான கதைத்தேர்வு என்று மெனக்கெடுகிறோம். காமிக்ஸ் வாசிப்பு என்பது ஒரு அலாதியான அனுபவம். நாங்கள் அடையும் அந்த அனுபவத்தை நீங்களும் அடையவேண்டும் என்பதே எங்கள் குறிக்கொள்” என்கிறார் விஜயன்.

இவர்கள் வெளியிடும் இதழ்களின் விலை மிகக்குறைவாகவே இருக்கிறது. அயல்நாடுகளில் இதே தரத்தில் கடைகளுக்கு வரும் இதழ்களின் விலையோடு ஒப்பிடுகையில் மூன்று, நான்கு மடங்கு குறைவு. காமிக்ஸ் வெளியிடுவது மட்டுமே இந்த சிவகாசிக்காரர்களுக்கு தொழில் அல்ல. ஆர்வம் மட்டும்தான் காரணம். அச்சகம், அச்சு இயந்திரங்கள் இறக்குமதி, தீப்பெட்டி மெஷின்கள் இறக்குமதி என்று அவர்களது தொழிலே வேறு. இது வெறும் ஆர்வத்தின் பேரில் லாபநோக்கின்றி செய்வதுதான்.

முன்புபோல கடைகளில் தொங்கவிட்டு சுலபமாக வாசகர்களுக்கு கிடைப்பதைப் போன்ற முறை இல்லாமல் தங்களது விற்பனை யுக்தியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பழைய வாசகர்களிடம் ஆண்டு சந்தா வசூலித்துவிடுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய புத்தகக் கடைகளில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இணையத்தில் ebay போன்ற தளங்கள் மூலமாக விற்கிறார்கள். சமீபமாக தமிழகத்தில் நடைபெறும் புத்தகக்காட்சிகளில் ஸ்டால் போடுகிறார்கள்.  http://lion-muthucomics.com/ என்கிற இவர்களது இணையத்தளத்தில் சமீபத்திய வெளியீடுகள், காமிக்ஸ் குறித்த சுவையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

2011ல் 852 பக்கங்கள், இருநூறு ரூபாய் விலை என்று இவர்கள் கொண்டுவந்த ‘இரத்தப்படலம்’ என்கிற ஒரே கதையின் முழுமையான தொகுப்புதான் தமிழில் மீண்டும் காமிக்ஸ் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது. பெல்ஜியத்தில் வெளியாகி உலகளவில் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே பரவலான பாராட்டுகளையும், ஏகத்துக்கும் விருதுகளையும் வென்ற இந்த கதைத்தொடரை ஒரே புத்தகமாக உலகிலேயே முதன்முதலாக வெளியிட்டவர்கள் இவர்கள்தான்.

“விஜயன், நீங்கள் வெளியிடும் இதழ்களில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?”

“லக்கிலூக் எனும் காமெடி கவுபாயின் ரசிகன் நான். சமீபமாக நாங்கள் வெளியிட்டு வரும் கதைகள் லார்கோ வின்ச் என்கிற கோடீஸ்வர ப்ளேபாயின் கதைகள். அவரையும் எனக்கு பிடிக்கும்”

ரொம்ப சீரியஸாகவே பேசுகிறார்கள். காமிக்ஸ் என்பது நாம் நினைப்பதைப் போல விளையாட்டு விஷயமல்ல போலிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒருமுறை வாங்கி வாசித்துதான் பார்ப்போமே?

எழுதியவர் : அணில்
நன்றி : தினகரன் வசந்தம்

3 கருத்துகள்:

  1. அற்புதமான கட்டுரையை பலரும் படிக்கும் வண்ணம் இங்கே வழங்கியமைக்கு நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  2. காமிக்ஸ் பற்றிய பல அறியாத தகவல்கள்!

    பதிலளிநீக்கு
  3. நான் என்னோட ஏழாவது வயசில் இருந்து காமிக்ஸ் வாசிக்கிறேன். அது ஒரு தனி அனுபவம். அது சரியாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

    பதிலளிநீக்கு