6 ஜனவரி, 2014

குற்றம் : நடந்தது என்ன?

பைசாவுக்கும் பிரயோசனப்படாத குப்பை என்று தமிழ்நாட்டின் ஏழு கோடியே நாற்பத்தி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் பேர் கருதும் ஒரு விஷயத்தைதான் தமிழிணையத்திலும், தமிழிலக்கியத்திலும் உயிர்போகும் பிரச்சினையாக விவாதிப்பார்கள். லேட்டஸ்ட் விவாதம், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நூறு கதைகள் பற்றி. தமிழ் வாசகர்களால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைகள் இவையென்று நூறு கதைகளின் பட்டியலை சில காலம் முன்பு எஸ்.ரா பட்டியலிட்டிருந்தார். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக கொண்டுவந்தாலும் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டிருந்தார்.
கமா
எஸ்ரா ‘தொகுத்த’ அப்பட்டியலை வாசித்த ஓர் தீவிர வாசகரான தோழர் சென்ஷிக்கு தீராத இலக்கியத்தாகம் ஏற்பட்டது. அதில் இருக்கும் நூறு கதைகளை வாசித்துவிட வேண்டுமென்று சபதம் எடுத்தார். இணையத்தில் கிடைத்தவை தவிர்த்து, மற்ற கதைகளை நிறைய பேரிடம் தேடி அடைந்தார். இந்த இலக்கியப் பயணத்தில் அவருக்கு வேறொரு எண்ணமும் ஏற்பட்டது. தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெறட்டுமே என்று, தேடி வாசித்த சிறுகதைகளை இரவு பகல் பாராமல் தட்டச்சி ‘அழியாச்சுடர்கள்’ போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றினார். தன்னலம் கருதாத ஒப்பற்ற சேவை. சென்ஷி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான். ஒரு வகையில் பார்க்கப்போனால் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு என்ன செய்தாரோ, அதைதான் சென்ஷியும் செய்திருக்கிறார்.
கமா
தோழர் வேடியப்பன் என்றொரு இளைஞர். பாரதிராஜா ஆகவேண்டும் என்று ஆர்வமாக சென்னைக்கு வந்தவர், சினிமா ஷோக்கில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார். வாழ்க்கை அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கொடுத்தது. கே.கே.நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் என்று புத்தகக்கடை திறந்தார். கடுமையான உழைப்பினால் மிகக்குறுகிய காலத்திலேயே புத்தக விற்பனைத் துறையில் சொல்லிக் கொள்ளும்படியாக பெயர் பெற்றார். இலக்கிய ஆர்வலரான வேடியப்பனுக்கு தாம் வெறும் புத்தக விற்பனையோடு முடிந்துவிடக்கூடாது என்று எண்ணம். தன்னுடைய கடையில் அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள் நிகழ்த்துவார். எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு நடத்துவார். இவ்வகையிலான இலக்கிய நடவடிக்கைகளில் அவருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ரோல்மாடல் ஆகிப்போனார்.
எஸ்ராவின் புத்தகம் எதையாவது தானே பதிப்பிக்க வேண்டுமென்று அவருக்கு ஆவல். ஆனால் எஸ்ராவோ ஏற்கனவே உயிர்மை உள்ளிட்ட நண்பர்களின் பதிப்பகங்களோடு டை-அப்பில் இருக்கிறார். எனவே எஸ்.ரா தொகுத்த நூறு சிறுகதைகளை புத்தகமாகக் கொண்டுவருவது என்று முடிவுசெய்து, அவரிடம் அனுமதி கேட்டார்.
எஸ்.ரா அனுமதித்ததுமே வேலையை தொடங்கினார். நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களை தவிர்த்து, அப்பட்டியலில் மீதியிருக்கும் எழுத்தாளர்களின் நேர்ப்பேச்சிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் அனுமதிகளை பெற்றார். “அந்த கதையோட காப்பி வேணுமா, இல்லேன்னா என்னோட ஃபைலிங் காப்பி ஜெராக்ஸ் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று கேட்ட எழுத்தாளர்களிடம், “சில கதைகளை நெட்டுலே ஏத்தியிருக்காங்க சார், அதை எடுத்துக்கறேன்” என்று சொல்லியிருக்கிறார். புத்தகக்கடை வைத்திருப்பதால், நெட்டில் ஏற்றப்படாத கதைகளையும் சுலபமாக அவரால் தொகுக்க முடிந்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பக்கங்கள். எஸ்.ரா மொத்தமாக படித்து, தேவையான திருத்தங்களை செய்துக் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் சேரவேண்டும் என்கிற அக்கறையில் லாபத்தை குறைத்து அறுநூற்றி ஐம்பது ரூபாய் விலை வைத்திருக்கிறார். முன்பதிவு செய்பவர்களுக்கு நானூற்றி எண்பத்தி ஐந்து ரூபாய் என்று சலுகை விலை.
புத்தக வெளியீடு குறித்து விபரங்களை அவர் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்ததுமே, பிடித்தது சனியன். ஓர் எழுத்தாளரின் இணையத்தளத்தில் இந்த நூறு கதைகள் மொத்தமும் பி.டி.எஃப். தொகுப்பாக பதிவேற்றப்பட்டு, வேண்டுமென்பவர்கள் டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளுங்கள் என்கிற அறிவிப்போடு வந்தது.
டாட்
இந்த விவகாரம்தான் இப்போது கூகிள் ப்ளஸ் மற்றும் ஃபேஸ்புக் இணையத்தளங்களில் மயிர்பிளக்கும் விவாதமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இணையம் என்கிற மூடர்கூடத்தில் நானும் ஒரு கேரக்டர் என்பதால், இது தொடர்பான என்னுடைய கருத்துகள் :
  • அறிவுப் பகிரல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை வீம்புக்கு செய்யக்கூடாது. முழுத்தொகுப்பு புத்தகமாக வரும்போது, அதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக பி.டி.எஃப். தொகுப்பை பதிவேற்றுவது என்பது நாகரிகமானவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.
  • பகிரல்தான் சென்ஷியின் நோக்கமென்றால், தன்னுடைய ஆர்வத்தை அச்சுக்கு கொண்டுவரும் வேடியப்பனின் செயல் குறித்து மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். விஷயம் தெரிந்ததும் வேடியப்பனுக்கு வேண்டிய உதவிகளை தாமாகவே முன்வந்து செய்திருப்பாரேயானால், அவரைவிட மனிதருள் மாணிக்கம் வேறு யாரும் இருக்க முடியாது.
  • இதற்கு ஃபேஸ்புக்கில் வேடியப்பன் அப்படியொரு எதிர்வினையை ஆற்றியிருக்க வேண்டியதில்லை.
  • ஓயாமல் தேடித்தேடி உழைத்த சென்ஷிக்கு நன்றி சொல்லவில்லை என்பதால் இந்த திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் தொகுப்பில் சென்ஷிக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றதுமே அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுத்தார்கள்.
  • தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் சென்ஷியின் பெயர் இடம்பெற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதுபோன்ற புத்தகத் தொகுப்புகளில் மட்டும் அல்ல அய்யா. எல்லா வேலைகளிலுமே ‘சிண்டிகேட்’ செய்பவர்தான் லீடர். உங்கள் லாஜிக்படி பார்த்தால், இதுவரை தமிழில் வந்த தொகுப்புகள் அனைத்திலுமே தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் டி.டி.பி. செய்தவர்களின் பெயர்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ன, பத்திரிகையின் எல்லா பக்கத்தையும் அவரேவா எழுதி, தட்டச்சிடுகிறார். தன் பத்திரிகையில் என்னென்ன வரவேண்டும் என்று தீர்மானிப்பதால்தான் அவர் ஆசிரியர்.
  • சென்ஷியின் உழைப்புதான் பிரதானமானது என்று ஏற்கனவே இலக்கியத்தில் பழம் தின்று கொட்டையை சப்பியவர்கள்கூட போகிறபோக்கில் கமெண்ட் போட்டுவிட்டு செல்வது அதிர்ச்சியளிக்கிறது. நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்? அந்த உழைப்புக்காகதான் அவர் தொகுப்பாசிரியர்.
  • என்னைப் பொறுத்தவரை தேடித்தேடி தட்டச்சி இணையத்தில் பகிர்ந்துக் கொண்டவர் என்பதால் சென்ஷிக்கு டிஸ்கவரி புக் பேலஸில், எஸ்.ரா தலைமையில் பாராட்டுவிழா கூட வேடியப்பன் நடத்தலாம்.
  • அடுத்து பர்மிஷன், ராயல்டி என்றெல்லாம் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் போதிய அனுமதி பெறாமல் தட்டச்சி இணையத்தில் ஏற்றியதுதான் குற்றமே தவிர, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அனுமதி பெற்று அச்சுத் தொகுப்பு ஆக்குவது குற்றமல்ல. வேடியப்பனிடம் பேசியபோது, இத்தொகுப்புக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ராயல்டி வழங்கப்போவதாக சொன்னார்.
  • “இனி டிஸ்கவரியில் புத்தகம் வாங்க மாட்டோம், எஸ்.ராமகிருஷ்ணனின் எந்த எழுத்தையும் படிக்க மாட்டோம்” என்று அடுத்தடுத்து சிலர் இணையத்தில் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கேள்விப்பட்டோம். சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களான மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இனி வேலு மிலிட்டரியிலோ, சாம்கோவிலோ பிரியாணி வாங்கமாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டால் அது எவ்வளவு பெரிய காமெடியோ, அதற்கு இணையான காமெடிதான் இதுவும்.
  • கல்யாண வீட்டுலே மாப்பிள்ளையா இருக்கணும் அல்லது சாவு வீட்டிலே பொணமா இருக்கணும் மற்றும் கும்பலோடு கோயிந்தா போன்ற இணையக் கலாச்சார பண்பாட்டு செயல்பாடுகளில் ஒன்றாகதான் இந்த சர்ச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நாமெல்லாம் டைம் பாஸுக்கு கமெண்டும், லைக்கும் போட்டுக் கொண்டிருக்கிறோம். வேடியப்பனுக்கு இது பொழைப்பு. சில லட்சங்களை இந்த புத்தகத்துக்காக முதலீடு செய்திருக்கிறார். நம்முடைய எண்டெர்டெயின்மெண்டுக்காக அவரது வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா?

11 கருத்துகள்:

  1. //நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்? //

    100க்கு 100 உண்மை..

    பதிலளிநீக்கு
  2. யுவாவின் கருத்துக்கள் அநேக விசயங்களில் பலமானதாகவே இருக்கின்றது...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வாதங்களை நான் முழுமையாக வழிமொழிகிறேன்..மிக சரியாக சொல்லப்பட்டிருகிறது.

    பதிலளிநீக்கு
  4. யுவா நியாமாகத்தான் படுகிறது....

    பதிலளிநீக்கு
  5. இணையம் ஒரு மூடர் கூடம்' யுவ கிருஷ்ணா!
    சில தமிழ் எழுத்தாளர்களுக்கும் உங்களைப் போன்ற தமிழ்க் காட்டுமிராண்டிகளுக்கும் வேண்டுமானால் அது மூடர் கூடமாயிருக்கலாம்!குரங்கு கையில் பூமாலை போன்று சில தமிழ் எழுத்தாள விளக்குமாறுகளுக்கு பட்டுக் குஞ்சம் போல!
    இணையம் கணிகைப் பொறியாளர்களுக்கு பிழைப்பில்லைய்யா!என்னமோ ஒரு வாணிக முறை dtp பதிப்பாளர்க்கு மட்டும் தான் பிழைக்கிற பிழைப்பா! from the Internet Browsing Centres to all software professionals and even for all other Technologians it is the World wide Nervous system!For you and other some literary Barbarian Tamils it may be an idiocy;but not for the entire Intelligentia world community of publishers
    it is a blessing! Beauty is for the few!BEAUTY IS COSTLY BEYOND MEASURES!

    பதிலளிநீக்கு
  6. அவரது வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா?////பதில் சொல்ல யாரும் முன் வரமாட்டாங்க

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா8:47 AM, ஜனவரி 07, 2014

    Well said Mr.Yuvakrishna....

    பதிலளிநீக்கு
  8. Muruga Das //இப்படி நூறு எழுத்தாளர்களின் உழைப்பை,உரிமையை, எந்தப் பதிப்புரிமையும் இல்லாமல், இலவசமாகத் தரவிறக்கிக் கொள்வது நியாயம் தானா என அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும்- எஸ்ரா.//

    இந்த புத்தகத்தின் முன்னுரையில் எஸ்ராவிற்கு நன்றி சொல்லும் அளவிற்கு மட்டுமே எஸ்ரா பங்கு உண்டு. இந்த புத்தகத்திற்காக என்ன செய்தார் எஸ்ரா? கொஞ்சம் சொல்லுங்கள்? வியாபாரத்த்ர்க்ககவெ இதில் எஸ்ரா பெயர் உள்ளது, ஒவ்வொரு கதையையும் எடுத்து அதை ஏன் தேர்வு செய்தார் என எஸ்ரா எழுதி உள்ளாரா? இந்த புத்தகத்திற்கான எஸ்ரா உழைப்பு என்ன? (அவர் ஆயிரம் கதைகள் படித்தார் என சொல்லாதீர்கள்) இதை டவுன்லோட் செய்யும் வாசகர்களின் மனசாட்சியை கேள்விகேட்கும் எஸ்ரா, இந்த புத்தகத்தின் ராயல்டியை வாங்கும்போது அவரது மனசாட்சி என்ன சொல்லுகிறது என்று கேட்கட்டும். சென்ஷியிடம் இந்த திட்டம் ஆரம்பிக்கபடும் முன் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்று அவரின் உழைப்பு தெரிந்த எஸ்ராவிர்ர்க்கு தோன்ற வில்லை இல்லையா?

    ஆய்யா? இன்னொன்றும் சொல்லுகிறேன் நன்றாக கேட்டு கொள்ளுங்கள் அல்லது உறுதி செய்து கொள்ளுங்கள், இந்த நூறு கதைகளின் எல்லா ஆசிரியர்களிடமும் வேடியப்பன் அனுமதி வாங்கவில்லை. சில எழுத்தாளர்களிடம் நேரிடையாக கேட்டுவிட்டே சொல்லுகிறேன், சில எழுத்தாளர்களுக்கு இப்படி ஒரு புத்தகம் வருகிறது என்றே தெரியவில்லை, நான் சொல்லித்தான் தெரிந்தது. செய்வது நியாயமற்ற உழைப்பு திருடல், இதில் நியாயவான் வேஷம் போடாதீர்கள்.... வியாபாரத்தில் முதல் முதலீடு பெயர்தான். பேர் இழக்கதீர்கள், முதலில் சம்பாதிக்கவேண்டியது பெயர்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆயிரம் pdf வந்தாலும் புத்தகங்கள் வாசிப்பதில் உள்ள பரவசம் அதில் கிடைக்காது. அந்த நூறு கதைகளை நானும் தரவிறக்கம் செய்தேன். முதல் கதையைப் படித்து முடிக்குமுன்னே சலிப்பு தட்டிவிட்டது. எழுத்துப் பிழைகள், font size, வரிகள் ஒழுங்கின்மை, கணினி வழிப்படிப்பதில் ஏற்படும் அலுப்புகள் என்று எல்லாம் சேர்ந்து ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. இதன் மூலம் புத்தக விற்பனைக்கு பாதிப்பு ஏதும் வராது என்பதே எனது கருத்து .

    பதிலளிநீக்கு
  10. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்,
    யார் பக்கம் நியாயம் ....யார் மீது குற்றம் ....? ஒண்ணும் புரியலே ..!
    எஸ் .ரா .என்ன சொல்கிறார் ..என்பது இப்போது மிக முக்கியம் .
    போங்கப்பா நீங்களும் உங்க இலக்கியமும் .

    பதிலளிநீக்கு
  11. Vediappan is a fine young and honourable man. To cast aspirations on his character or his way of doing business, shows only ignorance and stupidity. Good note Yuva. As always.

    பதிலளிநீக்கு