தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக
போட்டியிடும் வேட்பாளர் ஜே.சி.நந்தகோபாலை அணுகினோம். “ஆளே இல்லாம அவஸ்தை
பட்டுக்கிட்டிருந்தேன் சார். தாராளமா வாங்க” என்று நம் கையைப்பிடித்துக்கொண்டு
பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார். எவ்வளவு நாளைக்குதான் வாக்குச்சாவடிகளின் வெளியே
வெயிலில் நின்றுக்கொண்டு கழுகு மாதிரி அலைவது. பூத்தில் ஏஜெண்டாக அமர்ந்து,
வாக்குப்பதிவை கவனித்தால் என்ன. தேர்தலுக்கு முந்தைய நாள் திடீர் ஐடியா.
நந்தகோபாலின் அனுமதிப்படிவம் கிடைத்தவுடனேயே ஏஜெண்டாக ஒரு வாக்குச்சாவடியில்
அமர்ந்தோம்.
- அதிகாலை ஆறு மணிக்கே வரச்சொல்லியிருந்தார்கள். ஐந்து ஐம்பத்தி ஒன்பது
மணிக்கே அங்கிருந்தோம். கட்சியின் ஏஜெண்டுகள் எல்லாம் சாவகாசமாக ஏழு மணிக்கு
மேல்தான் வந்தார்கள். வாக்குப்பதிவை தொடங்குவதற்கு முன்பாக ஏஜெண்டுகளுக்கு வாக்குப்பதிவு
இயந்திரம் எப்படி செயல்படும். எண்ணும்போது எப்படி எண்ணப்படும் என்று இயந்திரத்தில்
செயல்முறை விளக்கம் செய்துக் காட்டினார்கள். ‘கண்ட்ரோல் பேனல்’ எனப்படும்
இயந்திரத்தில் வாக்குகள் எண்ணிக்கையை எண்ணக்கூடிய பொத்தான்களை அரக்கு கொண்டு
‘சீல்’ வைத்தார்கள். “இனிமேல் வாக்கு மட்டும் பதியப்படும். இதில் வேறெதையும்
செய்யமுடியாது” என்று அதிகாரி உறுதியளித்தபிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
- வேட்பாளர் பெயருக்கு அருகில் இருக்கும் நீலக்கலர் பொத்தானை அழுத்தியதுமே
‘கீய்ங்’ என்று நீண்ட சப்தம் எழுகிறது. அவ்வளவுதான் வாக்குப்பதிவு.
வாக்களிப்பது என்றால் என்னவோ, ஏதோவென்று ஆவலோடு வந்த முதன்முறை
வாக்காளர்களுக்கு இம்முறை ‘சப்’பென்று இருக்கிறது. “அவ்வளவுதானா..
முடிஞ்சிடிச்சா?” என்று சந்தேகமாக ஒன்றுக்கு இருமுறை கேட்டுவிட்டு
அதிருப்தியோடு கிளம்புகிறார்கள்.
- ஃபுல் மேக்கப்பில் வந்த இளம்பெண் ஒருவர், “நெயில் பாலிஷை டிஸ்டர்ப்
பண்ணாமே ‘மை’ வைங்க” என்று கேட்டுக்கொண்டார். குறும்புக்கார தேர்தல் அதிகாரி
வேண்டுமென்றே அவரது விரலில் நீளமாக மையை இழுத்துவிட, “என்னங்க, இப்படி
பண்ணிட்டீங்க. வீட்டுக்குப் போய் அழிச்சிடலாமா. நெயில்பாலிஷ் ரிமூவரை யூஸ்
பண்ணா போயிடுமா?” என்று புலம்பிக்கொண்டே வாக்களித்து விட்டுச் சென்றார்.
- பொதுவாக கணவர் வாக்களிக்கும் வேட்பாளருக்கு, மனைவி வாக்களிப்பதில்லை
போலிருக்கிறது. தம்பதிசமேதரராய் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சண்டை
போட்டுக்கொண்டேதான் வீடு திரும்புகிறார்கள்.
- அம்மா, அப்பாவோடு வாக்களிக்க வரும் குட்டீஸ், தங்கள் விரல்களிலும் ‘மை’
வைக்க வேண்டும். தாங்களும் பொத்தானை அமுக்க அனுமதிக்க வேண்டும் என்று
வாக்குச் சாவடியில் திடீர் கு(ட்)டியுரிமை பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.
அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு
போதும், போதுமென்று ஆகிவிடுகிறது.
- பலமுறை வாக்களித்தவர்களுக்கு கூட இன்னமும் வாக்களிக்கும்போது பதட்டம்
ஏற்படுகிறது. பூத் ஸ்லிப்பை உரிய அதிகாரிகளிடம் காட்டாமல் பூத் ஏஜெண்டு,
முதன்மை அதிகாரி, வீடியோ எடுக்கும் கல்லூரி மாணவர்கள் என்று ஒவ்வொருவரிடமாக
திருவிளையாடல் தருமி மாதிரி காட்டிக்கொண்டே நுழைகிறார்கள்.
- இருபது வயது இளம்பெண் ஒருவர் சிரித்துக்கொண்டே வந்தார். வாக்களித்து
முடித்ததும் நாணத்தால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
வெளியில் இருந்து அவரது தோழிகள் கலாய்த்துக் கொண்டிருக்க, கட்டுக்கடங்காத வெட்கம்
பூத்து புது மணப்பெண் மாதிரி ஓடினார்.
- இன்னொரு இளம்பெண் ஒருவருக்கு அவருக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு ஆயாவின்
போட்டோ வந்துவிட்டது. “நான் நாப்பது வருஷத்துக்கு அப்புறம்
எப்படியிருப்பேன்னு உங்க எலெக்ஷன் கமிஷன் கிராஃபிக்ஸ் பண்ணி போட்டோ
போட்டிருக்காங்க” என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டே, வாக்களித்துவிட்டுச்
சென்றார். பட்டியலில் போட்டோ மாற்றம், பெயர் மாற்றம் என்று ஏகப்பட்ட
குளறுபடிகள். ஒரு தெருமுழுக்க இருந்த வாக்காளர்களுக்கு கணவர் பெயர்/தந்தை
பெயர் பகுதியில் ஒரே ஒருவரின் பெயரே இடம்பெற்றிருந்தது. “இதனாலே வீட்டுலே
பெரிய பிரச்சினைங்க” என்று அவர் மூக்கால் அழுதுக்கொண்டே புகார் சொல்லிவிட்டு
வாக்களித்தார். வாக்காளர் அட்டை இருக்கிறது, ஆனால் வாக்காளர் பட்டியலில்
பெயர் இல்லை மாதிரி ஏகப்பட்ட புகார்கள்.
- எண்பத்தேழு வயது வாக்காளர் ஒருவர் தள்ளாடியபடியே வந்து மனைவியின்
உதவியோடு (அவருக்கும் தள்ளாட்டம்தான்) வாக்களித்தார். “ஐம்பத்தி ஏழுலே
இருந்து ஓட்டு போடறேன். வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி நாலா மடிச்சி
பெட்டியில் போடற முறையிலே இருக்குற திருப்தி இந்த மெஷின் போலிங்க்லே இல்லை”
என்று குறைபட்டுக் கொண்டார்.
- கட்சி வேறுபாடு காரணமாக ஆரம்பத்தில் இறுக்கமாக இருக்கும் பூத்
ஏஜெண்டுகள், கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆகி, ஒருவருக்கொருவர் ஜாலியாக கமெண்டு
அடித்து சிரித்துப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த வாக்காளர் உள்ளே
நுழையும்போது ‘சலாம்’ வைத்துவிட்டு, “இது எங்க ஓட்டு” என்று பக்கத்திலிருப்பவரிடம்
பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். “நீங்க சுயேச்சை ஏஜெண்டா. பாவம். உங்களை
யாரும் பெருசா கவனிக்க மாட்டாங்க. கவலைப்படாதீங்க. எங்களுக்கெல்லாம் பிரியாணி
வரும். எல்லாரும் ‘ஷேர்’ பண்ணி சாப்பிடலாம்” என்று நம்மை ஆறுதல்படுத்தினார்
மனிதாபிமானமிக்க ஏஜெண்டு ஒருவர். தேசியக்கட்சியின் ஏஜெண்டைப் பார்த்து,
மாநிலக் கட்சியின் ஏஜெண்டு சவால் விட்டுக் கொண்டிருந்தார். “இந்த மெஷின்லே
மட்டும் உங்களுக்கு பத்து ஓட்டு விழுந்துடட்டும். நான் ஒரு பக்க மீசையே
எடுத்துக்கறேங்க”. சரியான இடைவெளிகளில் டிஃபன், கூல்டிரிங்க்ஸ், சாப்பாடு,
டீ-யென்று தங்கள் பூத் ஏஜெண்டுகளையும், தேர்தல் அதிகாரிகளையும்,
போலிஸ்காரர்களையும் நல்ல விருந்தோம்பலோடு கவனித்துக் கொண்டார்கள் அரசியல் கட்சியினர்.
- காலையில் கறாராக இருந்த பாதுகாப்புக்கு வந்திருந்த போலிஸார்,
மதியத்துக்குள் ஜாலியாகி விட்டார்கள். “உங்களுக்கெல்லாம் ஆறு மணிக்கே
ட்யூட்டி முடிஞ்சிடும். மெஷினை எல்லாம் பாதுகாப்பா அனுப்பி, மே பதினாறாம்
தேதி வரைக்கும் பாதுகாத்து, வாக்கு எண்ணிக்கை முடியறவரைக்கும்
எங்களுக்கெல்லாம் டென்ஷன்தான். தேர்தல் நல்லா நடந்தா எல்லாரும்,
எல்லாருக்கும் நன்றி சொல்லுவாங்க. எங்களுக்கு மட்டும் இதுவரைக்கும் யாருமே
தேங்க்ஸ் சொன்னதில்லை” என்றார் நம் பூத் வாசலில் நின்ற போலிஸ்காரர்.
- மதியத்துக்கு மேல் கெடுபிடிகள் குறைய கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டை
யூனிஃபார்மில் கட்சிகளின் ‘அல்லக்ஸ் பாண்டியன்கள்’ களமிறங்கினார்கள். ஏன்,
எதற்கு என்று அவர்களுக்கே காரணம் தெரியாமல் ஆங்காங்கே மனம்போன போக்கில் சுற்றிக்
கொண்டிருந்தார்கள். சும்மாவாச்சுக்கும் கையில் ஒரு நோட்பேடை வைத்துக்கொண்டு,
‘எவ்வளவு போலிங்?’ என்று சம்பந்தமில்லாதவர்களிடமெல்லாம் விசாரித்துக்கொண்டு,
எதையோ கிறுக்கிக் கொண்டு நகர்ந்தார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பூத்
ஏஜெண்டுகளிடம் ‘பந்தா’ காட்டுவதற்காக, ரொம்ப அடிப்படையான விஷயங்களை (ஆளை
பார்த்து உள்ளே விடுங்க, வெளியே வர்றப்போ டிக்ளரேஷன் ஃபார்ம் வாங்கிட்டு
வாங்க) அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஓவராக லந்து செய்துக்கொண்டிருந்த
‘அல்லக்ஸ்’ ஒருவரை கழுத்தாமட்டையில் ஒரு போடு போட்டு வெளியே இழுத்துச்
சென்றார் போலிஸ்காரர் ஒருவர்.
- தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் பூத், பூத்தாக உள்ளே
வந்து தேர்தல் எப்படி நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டிருந்தார். கட்சி
வேறுபாடு இல்லாமல் பூத் ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் பார்த்து
“எல்லாரும் சாப்பிட்டீங்களா? எங்க ஆளுங்க நல்லா கவனிச்சுக்கறாங்களா?” என்று
விசாரித்தார். போலவே, திமுகவின் முன்னாள் சென்னை மேயரான மா.சுப்பிரமணியமும்
ஒவ்வொரு பூத்துக்கும் நேரடி விசிட் அடித்துக் கொண்டிருந்தார்.
- சரியாக ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. நாமிருந்த
வாக்குச்சாவடியில் ஐம்பத்தி ஐந்து சதவிகிதம்தான். “படிச்சவங்க அதிகம்
வசிக்கிற பகுதியில்லே? அதனாலேதான் வாக்கு போடணும்னு இவ்வளவு விழிப்புணர்வு!”
என்று சக ஏஜெண்ட் ஒருவர் கிண்டலாக கமெண்ட் அடித்தார். கண்ட்ரோல் மெஷினை இயக்க
முடியாதவாறு அதிகாரிகள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்து, ஒழுங்காக
தேர்தல் நடந்தது என்கிற உறுதிமொழிப்படிவம் வந்து எல்லா ஏஜெண்டுகளிடம்
கையெழுத்து வாங்கினார்கள். ஒரு காப்பியை நமக்கும் தந்தார்கள். உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் என்பது இவ்வளவுதான்.
(நன்றி : புதிய தலைமுறை)