16 அக்டோபர், 2014

காமிக்ஸ் பெண் மீனு!

நான் யாருக்கும் குறைந்தவள் அல்ல. தெருமுனைகளில் சுற்றிக் கொண்டும், குட்டிச்சுவர்களில் அமர்ந்துக் கொண்டும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்யும் விடலைப் பையன்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்காகவும், என்னைப் போன்று டெல்லியில் வசிக்கும் மற்ற இளம்பெண்களுக்காகவும் உரத்து குரல் கொடுக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. டெல்லி, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும் என்றால் நாங்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த நிலைமை வரும் வரை நாங்களேதான் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும்” என்கிறார் டெல்லியில் வசிக்கும் இருபத்தோரு வயதான இளம்பெண் மீனு ராவத்.


நிர்பயா சம்பவம் நடந்த டெல்லியில் இம்மாதிரி குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. சமூகவலைத்தளங்களில் முணுமுணுப்பான ஸ்டேட்டஸ்களாக தொடங்கிய இந்த பெண்ணியச் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக வலுபெறத் தொடங்கியிருக்கிறது.

உலகெங்கும் வாழும் பெண்களின் பிரச்சினைகளை அவர்கள் எப்படி கடந்துவர முடியும் என்கிற விழிப்புணர்வுக்காக ‘கிராஸ்ரூட்ஸ் கேர்ள்ஸ் புக் கிளப்’ என்கிற திட்டத்தை ஒரு தன்னார்வ அமைப்பு முன்னெடுத்தது. அந்த திட்டத்தில் வேறு வேறு ஆறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கதைகளை காமிக்ஸ் வடிவில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து எழுதியிருப்பவர் மீனு ராவத்.

நிர்பயா சம்பவம் போன்ற தேசிய அவமானங்களால் பெண்கள் வாழ தகுதியற்ற நகரம் என்று டெல்லியின் மானம், சர்வதேச அளவில் கப்பல் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் மீனுவின் காமிக்ஸ் இந்தியப் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மீனு எதிர்கால கனவுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்திய இளம்பெண்களின் பிரதிநிதி. தன்னுடைய கனவுகளை எப்படி நனவாக்குவது என்பது குறித்த குழப்பம் அவருக்கு இருந்தது. ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி என்கிற டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தை அணுகிய பிறகு அவரது மனோபாவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. தன்னுடைய கனவுகளை நிஜமாக்க என்னென்ன திறமைகளை தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவினைப் பெற்றார். தான் தன்னம்பிக்கை பெற்ற கதையைதான் ‘எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் கேர்ள் ஃபவர் இன் இண்டியா : மீனு’ என்கிற தலைப்பில் காமிக்ஸாக எழுதினார்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான மர்ஜானே சத்ரபி ஈரானில் நிகழ்ந்த தன்னுடைய சிறுவயது அனுபவங்களை ‘பெர்ஸேபோலிஸ்’ என்கிற பெயரில் கிராஃபிக்நாவலாக எழுதினார். பிரெஞ்சில் வெளியான இந்த சித்திரநாவல், பின்னர் பல்வேறு மொழிகளிலும் (தமிழிலும்கூட) வெளியிடப்பட்டு வாசகர்களின் பரவலான கவனத்தை பெற்றது. மீனுவின் காமிக்ஸும் கூட அத்தகைய ஒரு முயற்சிதான்.

“நான் இப்போது தன்னம்பிக்கை மிகுந்தவளாக இருக்கிறேன். ஆனாலும் டெல்லியிலும், இந்தியா முழுக்கவும் பெண்கள் நான் ஒரு காலத்தில் இருந்ததை போல பயந்தாங் கொள்ளிகளாகதான் பெரும்பாலும் இருக்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர்தான் உதவிக் கொள்ள வேண்டும். நமக்கு உதவ விண்ணிலிருந்தா தேவதை வரப்போகிறாள்?” என்று தன்னுடைய கதையை எழுதியதற்கான நியாயத்தை சொல்கிறார் மீனு.

மீனுவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை திடீரென மரணித்தார். மீனுவோடு சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள். நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள். அப்பா அரசு ஊழியராக இருந்ததால், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த வீட்டில் தொடர்ந்து வசித்தார்கள். உறவினர்களின் உதவி எதுவும் கிடைக்காத நிலையில் சொற்ப சம்பளத்துக்கு மீனுவின் அம்மா வேலைக்கு போனார். ஆனால் உபதேசம் செய்ய மட்டும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள்.

“இரண்டு பையன்களை மட்டும் படிக்கவை, போதும். அடுப்பு ஊதப்போகும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? அவர்களுக்கு வரதட்சணை கொடுப்பதற்கு நீ பணம் சேர்ப்பதே அதிகம். அப்படியிருக்க படிப்புக்கு வேறு வீணாக செலவழிக்கப் போகிறாயா?” என்று அடிக்கடி மந்திரம் ஓதிவிட்டு போவார்கள்.

அப்போதுதான் மீனு ஆறாவது வகுப்பில் சேர்ந்திருந்தார். பள்ளியை விட்டு அவரை நிறுத்தும்படி உறவினர்கள் நச்சரிக்கத் தொடங்கினார்கள். ஆனால் மீனுவின் அம்மா உறுதியாக இருந்தார். அவர்களிடம் சொன்னார்.

“நிச்சயமாக பெண்களுக்கு கல்வி தேவை. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு சொற்ப சம்பளத்துக்கு நான் மாடாய் உழைக்கவேண்டிய நிலைமை, எனக்கு கல்வி இல்லாததால்தான். என்னுடைய பெண்களுக்கு நல்ல கல்வியை தருவேன். சொந்த காலில் எப்படி நிற்பது என்பதை அவர்களே கற்றுக் கொள்வார்கள்”

படிக்காதவராக இருந்த போதிலும் அம்மா எடுத்த தைரியமான, முற்போக்கான இந்த முடிவால் மீனு தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார். குழந்தை நிலையிலிருந்து டீனேஜில் நுழைந்தபோதுதான் உலகம் தான் நினைத்த மாதிரி இல்லை என்பது மீனுவுக்கு புரிந்தது. பள்ளியிலும், தெருக்களிலும் பெண்களை கிண்டல் செய்யவும், சீண்டவுமே ஏராளமான போக்கிரிகள் திரிகிறார்கள் என்பது தெரிந்தது. எனவே முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்த்தார். பக்கத்தில் இருந்த கடைக்கு போவதாக இருந்தால்கூட தம்பிகளைதான் அனுப்புவார். அல்லது அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். தனியாக போவது என்றாலே அவ்வளவு பயம். பள்ளிக்கு போகும்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அவருக்கு இந்த அளவுகடந்த பயம் தோன்றியது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபிறகு பயம் பன்மடங்காக அதிகரித்தது. எப்போதும் முகத்தில் அச்சத்தை சுமந்துத் திரியும் தன்னுடைய மகளைப் பார்த்து வருத்தப்படத் தொடங்கினார் அம்மா.

இந்த கட்டத்தில்தான் ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி (FAT) அமைப்பின் அறிமுகம் மீனுவுக்கு கிடைத்தது. அந்த அமைப்பில் பெண்களுக்காக நடத்தப்படும் ஆறுமாத இலவச கம்ப்யூட்டர் வகுப்பில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து தூரமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பதால் சேருவதற்கு அஞ்சினார்.

அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. “எவ்வளவு நாளைக்குதான் தனியாக போக பயந்து பயந்து சாவாய்? கூட யாராவது ஒரு தோழியையும் சேர்த்துக்கொண்டு போய்விட்டுதான் வாயேன்” என்றார். இப்படியாகதான் கம்ப்யூட்டர் வகுப்புக்கு கொஞ்சம் அச்சமான மனநிலையில் போய் சேர்ந்தார் மீனு. 

கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் மீனுவுக்கு கொடுத்த சுதந்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. வகுப்புக்கு வந்த வேறு வேறு பகுதியைச் சேர்ந்த சக தோழிகள் மூலமாக டெல்லி எவ்வளவு பெரியது என்று அவருக்கு புரிந்தது. பயந்துப்போய் வீட்டோடு முடங்கிக் கிடந்தால், எதிர்காலத்தில் இப்பெரு நகரத்தில் எப்படி வாழமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். FAT அமைப்பு கம்ப்யூட்டரை மட்டும் அப்பெண்களுக்கு கற்றுத்தரவில்லை. இந்திய சமூக அமைப்பில் பெண்களின் நிலை, அவர்கள் மீது விதிக்கப்படும் தடைகளும், அழுத்தங்களும், அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வது என்பதையும் சொல்லித் தந்தது.

சனிக்கிழமைகளில் அனைவரும் திரைப்படவிழா போன்ற நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்கள். டெல்லியின் சேரிகளில் நாடகம் மாதிரியான கலைநிகழ்ச்சிகள் மூலமாக குழந்தை திருமணம், சிறுவயது கர்ப்பம், ஈவ்டீசிங், பெண்களுக்கான கல்வி குறித்த அவசியம் என்று பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இவை எல்லாவற்றிலும் மீனுவும் பங்குபெற்றார். இவற்றில் ஈடுபட அவரது அம்மாவும் மீனுவை ஊக்கப்படுத்தினார். இதன் மூலமாக குடும்பம் தவிர்த்து வெளிவட்டத்தில் பழக அவருக்கு இருந்த சங்கோஜமும், அச்சமும் சுத்தமாக அகன்றது.

மீனுவுக்கு படிப்பும் முடிந்தது. வேலை தேடத் தொடங்கினார். பத்திரிகையாளர், மாடல், ஒரு கிரிக்கெட் வீரரின் மனைவி என்று அவரது சிறுவயது கனவுகளின் ஆசைகள் ஏராளம். ஆனாலும் மீனு இப்போது யதார்த்தத்தை உணர்ந்த பெண். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ள தெரிந்த பெண். டெலிமார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்வாக நல்ல சம்பளத்தில் கிடைத்த பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தபிறகு அவருக்கு கிடைத்த வெளியுலக அனுபவங்கள் அத்தனையும் அவரை புடம் போட்டது. கூடுதலாக கிடைத்த பொருளாதார சுதந்திரம் மீனுவின் / அவரது குடும்பத்தாரின் வாழ்க்கைநிலையையும் உயர்த்தியது. தன்னுடைய சகோதரிக்கு ஊரும் உறவினரும் மெச்ச நல்லமுறையில் திருமணமும் நடத்தி காண்பித்தார். எந்த மீனுவை படிக்க வைக்க வேண்டாம் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்களோ, அதே மீனுவே குடும்பத்தை தாங்குமளவுக்கு உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்கள். 

இதுதான் மீனுவின் வெற்றிக்கதை. இந்த கதையைதான் அவர் எழுதி, சித்திரங்கள் வரைந்து காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தன்னுடைய கதையை சொல்லும்போதே, இடையிடையே ‘மானே தேனே’வென்று இந்தியப் பெண்களின் சமூகநிலை என்னவென்றும் சர்வதேச சமூகத்துக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் மீனு ராவத்.

உங்களிடமும் மீனுவிடம் இருப்பது மாதிரியான ஒரு வெற்றிக்கதை இருக்குமானால், இந்த கட்டுரையை வாசிக்கும் பெண்கள் யாரும் தங்களுடைய கதையையும் இம்மாதிரி பதிப்பிக்கலாம். நீங்கள் டேப்ளட் பயன்படுத்துபவராக இருந்தால் ‘காமிக் புக்’ அப்ளிகேஷனை நிறுவியோ அல்லது வெள்ளைப் பேப்பரில் ஓவியமாக வரைந்தோ உங்கள் சொந்தவாழ்க்கையை காமிக்ஸ் ஆக்கலாம். போட்டோக்களையும் பயன்படுத்தலாம்.

grassrootsgirls.tumblr.com என்கிற இணையத்தள முகவரியில் மேற்கொண்டு விவரங்களை பெறலாம். இதே இணையத்தளத்தில்தான் மீனு உள்ளிட்ட உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஆறு பெண்களின் வெற்றிக்கதைகள் மின்புத்தகமாக பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த கதைகளை வாசிக்க விரும்பினால் நீங்கள் இணையத்திலேயே இலவசமாகவும் வாசிக்க முடியும்.

* உங்கள் கதையை உருவாக்குவதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

* உங்கள் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் என்னென்ன?

* நீங்கள் அந்த சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

* பெண்கள் இம்மாதிரி சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக ஏதேனும் தன்னார்வ அமைப்புகள் உங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்களா?

* நீங்கள் அடைந்த தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மற்ற பெண்களுக்கும் கற்றுத்தர நீங்கள் என்ன செய்தீர்கள்?


இவ்வளவு போதும். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கதை உண்டு. அதை கேட்க உலகம் தயாராகதான் இருக்கிறது. நீங்கள் சொல்ல தயாரா?

(நன்றி : தினகரன் வசந்தம்)

14 அக்டோபர், 2014

மெட்ராஸ் சாதி

‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வளர்ந்ததெல்லாம் தென்சென்னைதான் என்றாலும், ஒட்டுமொத்த மெட்ராஸின் சுற்றளவே நூறு கி.மீ.க்குள்தான் எனும்போது மத்திய சென்னை, வடசென்னை எல்லாம் அந்நியமெல்லாம் இல்லை. கல்யாணம், காதுகுத்து, சாவு, எழவு என்று மேடவாக்கம் டூ திருவொற்றியூர் வரை நம் கால் படாத இடமேயில்லை.

இத்தனை ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி மெட்ராஸை விட்டு வெளியே சென்று தங்கியதே இல்லை. அதிகபட்சம் ஒருவாரம் ஒரே ஒரு முறை செம்மொழி மாநாட்டுக்காக கோயமுத்தூரில் தங்கியிருக்கிறேன். 1996 சட்டமன்றத் தேர்தலின் போது, சென்னையிலிருந்து மதுரைக்கு நண்பரோடு பைக்கில் சென்றேன். தேர்தல் எப்படி நடக்கிறது, மக்களின் மனோபாவம் என்ன என்பதை நேரிடையாக தெரிந்துக் கொள்ளும் பொருட்டு. முதன்முதலாக “நீங்க என்ன ஆளுங்க?” என்கிற கேள்வியை மேலூரில் ஒரு பெண்ணிடம் எதிர்கொண்டபோதுதான் தெரிந்தது, மெட்ராஸ் சாதீயத்தை எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்பது.

மெட்ராஸில் சாதி என்பது இல்லவே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ரொம்ப நுணுக்கமாக கவனித்தால் தெரியும். ஆனால், இங்கே பெரும்பாலும் பிளாக் & ஒயிட் மட்டும்தான். அதாவது ஒன்று நீங்கள் அய்யிரு (அய்யங்காரும் இங்கே அய்யிருதான்). அல்லது வேறு ஏதோ ஒரு சாதி.

நான் தேவரு, நான் பிள்ளைமாரு, நான் வன்னியரு, நான் நாயுடு என்றெல்லாம் சூத்திரசாதிகளில் தலித்துகளுக்கு மேற்பட்ட உயர்நிலை சாதியென்று நீங்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது. பூணூல் இருந்தால் கொஞ்சம் உசரம். அது இல்லையென்றால் எல்லா சாதியும் ஒரே சாதிதான். நேரடியாக சாதிப்பெயரை சொல்லி திட்டுவது, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, கவுரவக் கொலை, தீண்டாமைச் சுவர், செருப்பில்லாமல் நடக்க வேண்டும் என்று தமிழகத்தின் மற்றைய மாவட்டங்களின் சாதிப்பாகுபாடு சென்னையில் நேரடியாக தெரியாது. மதமும் கூட இப்படித்தான். பாபர் மசூதி இடிப்பு, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவப் பாதிரிமார் எரிப்பு மாதிரி சம்பவங்களின் போது இந்தியா முழுக்கவே கணகணவென்று மதநெருப்பு பற்றியெரிந்தபோதெல்லாம், சென்னை தேமேவென்றுதான் கிடந்தது.

மூட்டை தூக்கிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் போகும் கருப்பான ஒருவரை கண்டதுமே ‘தலித்’தென்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அழைத்து விசாரித்துப் பாருங்கள். வந்தவாசி பக்கமாக இருந்து பஞ்சம் பிழைக்கவந்த வன்னியராக கூட இருப்பார். சென்னையின் சாதிகள் வர்க்கமாக பிரிந்திருக்கிறது. அதிகார வர்க்கம், பாட்டாளி வர்க்கம். அதிகார வர்க்கத்தில் தலித்துகளும் உண்டு. பாட்டாளி வர்க்கத்தில் அய்யிருகளும் உண்டு. என்ன அதிகார வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை அய்யிருகளும், பாட்டாளி வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை பார்ப்பனரல்லாதவரும் நிரப்பியிருப்பார்கள். உதிரிப் பாட்டாளிகள் இங்கே ஒரே வர்க்கமாக இணைந்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வலுவான தொழிற்சங்கங்களை சாதிவேறுபாடு இன்றிதான் கட்டமைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அம்பத்தூர், கிண்டி பக்கமெல்லாம் அய்யிரு தொழிலாளர்களும், மற்ற சாதித் தொழிலாளர்களும் தோள் மேல் கைபோட்டு ஒன்றாக சாராயம் குடிக்கச் செல்லும் காட்சியை சகஜமாக காணலாம். இங்கு இயங்கும் அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களை உற்றுநோக்கினால் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதவர்களும் ஒரே சாதியாக (சில சம்பவங்களில், செயல்பாடுகளில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்) தங்களை பாட்டாளிகளாக மட்டுமே உணர்ந்து செயல்பட்டிருப்பது விளங்கும். பார்ப்பனரல்லாதவர்களிலும் தலித் vs இதரசாதியினர் முரண் அவ்வளவாக எழுந்ததில்லை.

இங்கே வெள்ளாள தேனாம்பேட்டை, வன்னிய தேனாம்பேட்டையெல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மெட்ராஸைப் பொறுத்தவரை சாதி இரண்டாம் பட்சம்தான். பணம் இருப்பதும், இல்லாததும்தான் இங்கே முதன்மையான பிரச்சினை. வெள்ளைக்காரன், மெட்ராஸை கோட்டை கட்டி ஆண்டதின் பாசிட்டிவ்வான விளைவுகளில் இதுவொன்று. சென்னையில் பிறந்து வளர்ந்த யாருமே மேற்கண்ட இந்த கருத்துகளோடு எளிதாக ஒத்துப்போக முடியும். சாதியைவிட ஏரியாதான் இங்கே கவுரவப் பிரச்சினை. பிற ஊர்களில் இரண்டு சமூகங்கள் மோதிக்கொள்கிறது என்றால், இங்கே இரண்டு ஏரியாக்கள் மோதிக்கொள்வது வழக்கம். அவ்வப்போது கல்லூரி மாணவர்கள் மோதல் என்று செய்தித்தாள்களில் நீங்கள் வாசிக்கும் செய்திகள் எல்லாம்கூட இம்மாதிரி ஏரியாப்பிரச்சினை தொடர்பானதுதான். இதெல்லாம் பரம்பரை சென்னைக்காரர்களுக்கும், சில தலைமுறைகளுக்கு முன்பாக இங்கே குடியேறியவர்களுக்கும் பொருந்தும்.

தொண்ணூறுகளில் ‘திடுப்’பென்று இந்தியா முழுக்க ஒரு பொருளாதார ‘ஜம்ப்’ நடந்ததில்லையா? அப்போதுதான் சாதியும், மதமும் இம்மாநகருக்குள், வெளிமாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் மூலமாக ஆழமாக ஊடுருவியது. தங்கள் ஊரை மாதிரியேதான் அவர்கள் சென்னையையும் பார்த்தார்கள். சரவணா ஸ்டோர்ஸை நாடார் கடையாக இருபது வருடங்களுக்கு முன்பாக யாருமே பார்த்ததில்லை. ஃபாத்திமா ஜீவல்லர்ஸில்தான் முஸ்லிம்கள் நகை வாங்க வேண்டும் என்று அப்போது யாருக்கும் தோன்றியதில்லை. இந்துக்கள் இந்து கடையில்தான் தீபாவளிக்கு துணிமணி வாங்கவேண்டும் என்கிற பிரச்சாரத்தை எல்லாம் இந்து அமைப்புகள் அப்போது செய்திருந்தால் சுளுக்கெடுக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நடக்காமல், சர்ரென்று ஜெட் வேகத்தில் சமீப வருடங்களில் நடந்திருக்கும் மாற்றம். முன்பெல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் ஸ்டேஷன் எஸ்.ஐ. யாரென்று பெயரைதான் கேட்பார்கள். இப்போதுதான் தேவரா, முஸ்லீமா, கிறிஸ்டினா என்றெல்லாம் கூடுதலாக கேட்கிறார்கள். பரம்பரை சென்னைக்காரர்கள் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சி?” என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய் கிடக்கிறோம்.

கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் பகுத்தறிவை கொடுக்கும் என்கிற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது. அவை முன்பைவிட தீவிரமாக சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடிக்கும் என்பதற்கு இன்றைய சென்னையே அத்தாட்சி. ஒரு பொதுநிகழ்வில் ஓர் இளைஞர் சாதாரணமாக மாட்டுக்கறி சாப்பிடுவதை பற்றி கவுரவக்குறைவு என்பது போன்ற தொனியில் இன்று உரையாடுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு இங்கே அப்படி பேசியிருந்தால் செவுள் எகிறியிருக்கும்.

அப்புறம், மெட்ராஸ் படம் பார்த்துவிட்டு இங்கே குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் தலித்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள் என்பதாக நிறைய பேர் தாங்களாகவே கருதிக்கொண்டு பேசுகிறார்கள். கலைஞரின் பெரியார் நினைவு சமத்துவபுரங்களுக்கெல்லாம் முன்னோடி சென்னையின் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்தான். இங்கே நீங்கள் எல்லா சாதியையும் கலந்துதான் பார்க்க முடியும் (சென்னை 600028 படத்தில் வெங்கட்பிரபு இதை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருந்தார்). போலவே குப்பம் என்பது ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புப் பகுதி என்றொரு மாயையும் இருக்கிறது. ஆதிதிராவிடர்களையும், மீனவர்களையும் போட்டு குழப்பிக் கொள்வதின் விளைவே இது. எல்லா இடத்திலும் எல்லாரும் கலந்திருக்கிறார்கள் என்றாலும் குப்பங்கள் மீனவசமூகத்தினரின் கோட்டை (சமீபமாக ஆந்திர மீனவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்). நீண்டகாலமாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் சாதியை அட்டவணை சாதியாக அறிவிக்கும்படி போராடி வருபவர்கள் இவர்கள். அதுபோலவே ‘கானா’ என்பது தலித்துகளுக்கு மட்டுமேயானது என்று ஒதுக்கிவைக்கப்படுவதும் தவறு. கானா இங்கே பாட்டாளிகளின் கலை. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூலமாக கவுரவத்தை எட்டியது. சென்னையின் கானா பாடகர்கள் எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் உண்டு. எல்லாரும்தானே ஆட்டோ ஓட்டுகிறார்கள் (என்னுடைய அம்மாவழி உறவினர்களின் மரணத்தின்போது கானா கச்சேரி இடம்பெறுவது உண்டு, அப்பாவழி உறவுகளின் மரணத்தின்போது பஜனை மட்டும்தான்).

வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து சென்னையை பார்க்கிறார்கள். அதையே கலை இலக்கியமாகவோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாகவோ எழுதி வரலாறாக மாற்றுகிறார்கள். அதிலும் சென்னை பற்றி யாரோ மதுரைக்காரரோ, கோயமுத்தூர்காரரோ விவரமாக, இதுதான் சென்னை என்று எதையோ படமெடுத்துக் காட்டும்போது, சென்னைவாசிகளும் ‘நம்ம ஊரா இது? செமையா இருக்கே’ என்று வெறுமனே பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இங்கு பிறந்து வளர்ந்தவனால் சாதி, மதமென்று நுணுக்கமாக சித்தரிக்க முடியாது. அவனுக்கு அவ்வளவு விவரமும் பத்தாது.

7 அக்டோபர், 2014

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

சுமோ வழக்கு

பாருசிவேதிதாவின் சக போட்டி எழுத்தாளரான சுயமோகன் இந்த வழக்கினை தொடர்ந்து இருந்தார். ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கி அக்கவுண்டு எண் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாருசிவேதிதா வாங்கிக் குவித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பாருவுக்கு பரிசாக வந்த செமிமார்ட்டின் மதுபாட்டில்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது அல்ல என்கிற வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

தீர்ப்பு விவரம்

முதல் குற்றவாளியான பாருசிவேதிதாவுக்கு நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், கூடுதலாக அவர் எழுதிய சாமபேத கதைகளை நூறு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்று அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை மிகக்கடுமையானது என்று பாரு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தபோது, சாமபேத கதைகளை நூறு முறை வாசிக்கும் கொடூரமான தண்டனை குறைக்கப்பட்டது. பதிலாக ‘ஓ என் கடவுளே’ என்று ஒரு லட்சம் முறை பாருசிவேதிதா இம்போசிஸன் எழுதவேண்டும்.

அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கியையே இழுத்து மூடவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோர்ட் வாசலில் பரபரப்பு

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்த இலக்கிய வழக்கில் பாருசிவேதிதா எப்படியும் விடுதலை ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் பாருவின் நண்பர் சாபாகத்தி தலைமையில் வாசகர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். தீர்ப்பை கேள்விப்பட்டதும் அவர்கள் சோகமாகி, கையோடு கொண்டுவந்த சரக்கை அங்கேயே தண்ணீர் கலக்காமல் கல்ப்பாக அடித்து வாந்தியெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பாரிஸ் போலிஸார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாந்தியை எல்லாம் கழுவி வாசகர்கள் மீதே ஊற்றி, அவர்கள் மீது சாகஸலீலா புத்தகத்தை வீசியெறிந்து துரத்தினார்கள். ஒன்றரை கிலோ எடையில் கருங்கல் மாதிரி கனமாக இருந்த புத்தகம் மேலே விழுந்ததில் நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. கை கால் எலும்பு முறிவும் பலருக்கும் ஏற்பட்டது.

சுமோ விளக்கம்

இந்த தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த சுயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். இந்திய ஞானமரபிலும், வேதங்களிலும் ஜே.சி.ஜே.சி.ஐ. என்றொரு வங்கியே கிடையாது என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இல்லாத வங்கி மூலமாக பாரு சொத்து குவித்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவரது குரு பத்யநித்ய பூபதி கனவில் வந்து வலியுறுத்தியதாலேயே தான் வழக்கு தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் வழக்கின் தீர்ப்பு இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கட்டுரையை கூகிள் ப்ளஸ்ஸில் ‘ஷேர்’ செய்து, ‘ஆசான் ராக்ஸ்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் பரங்கசாமி.

கை கொடுத்த சாட்சி

வழக்கில் பாருவுக்கு தண்டனை கிடைக்க ராஸ்கர் பாஜாவின் சாட்சியே பிரதானமாக இருந்தது. கி.பி.2011ஆம் ஆண்டு சென்னை பாமராஜா அரங்கில் நடந்த சக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா மிக ஆடம்பரமாக நடந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்துக்கொண்ட அந்த விழாவில் பாருவின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தவர் ராஸ்கர் பாஜா. அந்த பீருக்கு காசு எப்படி வந்தது என்று தோண்டி துருவி விசாரிக்கப்பட்டதிலேயே நடந்த குற்றம் தெளிவாக தெரிந்தது. ராஸ்கர் பாஜா அரசுத்தரப்பு சாட்சியாக அப்ரூவர் ஆகி அளித்த சாட்சியமே வழக்கில் உறுதியாக நின்று, இன்று பாரு உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

கருத்து மோதல்

பாருவுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து இருவேறு நேரெதிர் கருத்துகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய எழுத்தாளர் பாநி, “சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது” என்றார். அவருக்கு பதிலடி கொடுத்த கவிஞர் கனுஷ்ய முத்திரன், “பாரதியாருக்கு வளைந்த சட்டம் பாருவுக்கு வளையாதது ஏன்?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். இதே விவாதத்தில் கலந்துக்கொண்ட சிந்தனையாளர் சத்ரி, “வழக்கின் தீர்ப்பு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி பக்கங்களுக்கு பிரெஞ்சில் இருக்கிறது. அதை மேற்கு பதிப்பக மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழுக்க படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்” என்று கருத்து சொல்லியிருக்கிறார். இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் “மாங்கா காமிக்ஸ் : ஓர் அறிமுகம்!” என்று எழுத்தாளர் ரஸ்.ஏமகிருஷ்ணன் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் எங்கே தீர்ப்பு பற்றிய கருத்து இருக்கிறது என்று வாசகர்கள் தேடித்தேடி அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் மிமலாதித்த வாமல்லன் ‘இலக்கிய சிலுக்கு என்னாச்சி வழக்கு?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விளக்கம் கேட்ட வாசகர்களிடம், “எழுதின எனக்கே புரியலை. உனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிலளித்தார் வாமல்லன். மாலச்சுவடு இதழும் ‘அறம் மீறும் இலக்கியம்’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான மா.வணிகண்டன், “இப்படித்தான் 1979லே பாப்பநாயக்கன் பாளையத்திலே” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வலுக்கிறது போராட்டம்

பாருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றுகூறி அவருடைய வாசகர்கள் சீலே, பிரஸீல், அர்ஜெந்தினா, கூபா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை வாசல் ஒன்றில் ச்யோவ்ராம் வேந்தர் எனும் பாரு அபிமானி மொட்டையடிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். டாஸ்மாக்கின் உள்ளே கணிஜி உள்ளிட்ட பாருவின் தீவிரவாத வாசகர்கள் சாகும்வரை குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி பாட்டிலை ஓபன் செய்திருக்கிறார்கள். இவர்களது வசதிக்காக போராட்டம் நடக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. சச்சைக்காரன், சவகிருஷ்ணா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பதினெட்டு பேர் பார்க்குவேஸ், மார்த்தர், ஷெமிங்வே, சுயமோகன், வலைஞர், மணிமொழி ஆகியோரின் கொடும்பாவியை பாரிஸ் கார்னரில் எரித்து போராட்டம் நடத்தி கைதானார்கள். பாருவின் வழக்கை சீலே நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் எழுத்தாளர் முருக விநாயகன் தலைமையில் “துக்கம் தொண்டையை அடைத்தது” என்று கோஷம்போட்டு பாரிஸ் நீதிபதியை கண்டித்து தொண்டையில் அடித்துக் கொண்டு கதறும் போராட்டம் நடந்தது.

சென்னை மே.மே.நகர் பிஸ்லெரி புக் பேலஸ் வளாகத்தில் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இலக்கியவாதி சமிர்தம் ஆர்யா தலைமையில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் கவிஞர் சுமா பக்தி, நத்மஜா பாராயணன், மஜய விகேந்திரன் உள்ளிட்டோர் காரசாரமாக பாரிஸ் நீதிபதியை பேசினார்கள்.

பாரு விடுதலை ஆகும்வரை புறநாழிகை புத்தக உலகத்தில், பாரு எழுதிய நூல்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று புறநாழிகை வெண். பாசுதேவன் அறிவித்திருக்கிறார். விஷயம் அறிந்த வாடிக்கையாளர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.

கருப்புச்சட்டை வழக்கு

போராட்டக்காரர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் தங்கள் யூனிஃபார்மை பயன்படுத்துவதா என்று திகவினர் கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி திகவினரை தவிர வேறு யாரும் கருப்பு உடை அணிய தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு 2027ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளி வைத்திருக்கிறது.

கொண்டாட்டம்

ஒரு பக்கம் போராட்டம் என்றால், மறுபக்கம் கொண்டாட்டமும் நடக்கிறது. பாருசிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் அதன் ஆதரவாளர்கள் ஜாக்கி ஜட்டி அணிந்து வருவோர் போவோருக்கெல்லாம் ‘கட்டிங்’ வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று அவ்வமைப்பின் தீவிர ஆதரவாளரான சுமாசகேஸ்வரன் லாவோ தாசு நம்மிடம் சொன்னார். “மற்றவர் சோகத்தை நாம் கொண்டாடுவது தவறு” என்று அவ்வமைப்பின் அமைப்பாளர் இந்த கொண்டாட்டங்களை கடிந்துக் கொண்டாலும், ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் அவரும் இந்த அவலமான தீர்ப்பை கொண்டாடி வரிசையாக ஸ்டேட்டஸ்கள் போட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : தினபிந்தி)

29 செப்டம்பர், 2014

மக்களுக்கு தண்டனையா?

பெங்களூர் தீர்ப்பு கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.

நீதித்துறைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் இடையேயான மோதல் என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. லல்லு, ஜெ தண்டனைகளுக்குப் பிறகு நீதித்துறையின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஏராளமான குழப்பங்களை எதிர்காலத்தில் நாம் சந்திக்க நேரிடும். ஜனநாயக நாட்டில் ’மக்கள்தான் மகேசர்கள்’ என்று சொல்லப்படும் கூற்று வெறும் வார்த்தைஜாலமாக உருமாறக்கூடும். நீதித்துறையினை நடத்துபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் அரசு தலைமை ஏற்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையான வேறுபாட்டை நாம் அறிய வேண்டும். நேரடி மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத இந்திய ஜனாதிபதி, தன்னிச்சையாக தன்னுடைய சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்குகிறார் என்று கற்பனை செய்து பார்ப்போம். விளைவு என்னவாகும்? அதுவேதான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

ஊழல் ஒழிப்பு, ஊழல் தடுப்பு ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமானவை. ஆனால் ஊழலுக்கே வாய்ப்பில்லாத மெக்கானிஸத்தை நம் அரசியலமைப்பு உருவாக்குவதுதான் ஊழலை ஒழிக்கக்கூடிய நிஜமான நடவடிக்கையாக இருக்கும். நடந்துவிட்ட ஊழல்களுக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டோம் என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வது நமக்கு எவ்விதத்திலும் பெருமையல்ல. சர்வதேச அரங்கில் நாம் தலைகுனியக்கூடிய நிகழ்வுகள்தான் இவை.

மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிட முடியாது என்கிற நிலையை எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் என்று நாம் நினைக்க இடமேயில்லை. ஏனெனில் பக்கத்து வீடு எரிந்தால், தன் வீடு என்னவாகும் என்பது அவர்களுக்கும் தெரியும். எதிர்காலத்தில் ஒரு தலைவரின் மீதோ, கட்சியின் மீதோ பொய்வழக்கு புனையப்பட்டு - ஆனால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகள் உருவாக்கப்பட்டு - தண்டனைகள் கிடைக்கும் பட்சத்தில் அது ஜனநாயகத்துக்கு நல்லதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு செப்.27 அன்று கோபாலபுரம் வீட்டுக்கு கல்லெறியச் சென்றவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கல்லெறியச் சென்றவர்கள் தந்த புகாரின் பேரில் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. டிகுன்ஹா மாதிரி ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கினால் அது சரியான நீதியாக அமையுமா?

1996ல் பதியப்பட்ட ஒரு வழக்குக்கு 2014ல் தீர்ப்பு என்பதே இந்திய நீதித்துறையின் பலவீனத்தைதான் காட்டுகிறது. 1991-96 ஆட்சிக்காலத்தில் அவர் குற்றமே செய்திருக்கட்டும். பதினெட்டு ஆண்டு காலம் கழித்து, வயதுமுதிர்ந்த நிலையில் இருப்பவருக்கு சிறைத்தண்டனை என்பது மனிதாபிமான பார்வையிலும் சரியானதாக இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றால், அதற்கு உரிய காலத்தில் தண்டனை தந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய நீதி மட்டுமல்ல, காலம் தாழ்த்திய தண்டனையும் கூட சரியானதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்தினார் என்று சால்ஜாப்பு சொல்லப்போனால் அதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. வாய்தா கொடுத்ததும் நீதிமன்றங்கள்தானே? விலக்கு கேட்கும்போதெல்லாம் கொடுத்த நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தானே தாமதத்துக்கு காரணம்? கண்டிப்பு காட்டி வழக்கை விரைவாக நடத்தவேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம்?

91-96 ஆட்சிக்காலத்தில் செய்த ஊழலால் அவர் 2014ல் தொடங்கி அடுத்து பத்தாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகிறார். ஆனால் இடையில் 2001-06 மற்றும் 2011-14 அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருமுறை பொறுப்பேற்றிருக்கிறார். இப்போது தேர்தலிலேயே நிற்க தகுதியற்றதாக நீதிமன்றம் கருதக்கூடிய ஒருவர் இருமுறை மக்களால் பெருவாரியாக ஆதரவளிக்கப்பட்டு முதல்வராக இருந்திருக்கிறார் என்பது இந்திய நீதிபரிபாலனத்தின் போதாமையா? தகுதியற்ற ஒருவர் என்று நீதிமன்றம் இன்று கருதுபவர், மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மக்களும் குற்றவாளிகளா? இதனால் தமிழக மக்கள் மீதும் வழக்கு தொடர்ந்து, விசாரித்து அவர்களுக்கும் இந்திய நீதித்துறை தண்டனை வழங்கப் போகிறதா?

8 செப்டம்பர், 2014

பாம்புக்கு பயப்படலாமா?


பாம்பாட்டியும் வேண்டாம். மகுடியும் வேண்டாம்.
முதலுதவி செய்ய பயிற்சி இருப்பதைப் போல பாம்பை பிடிக்கவும் பயிற்சி இருக்கிறது ...


ஆறரை அடி நீளம் இருக்கும். சாரைப்பாம்பு. அசால்டாக கையில் பிடித்து தெருவில் நடந்துச் சென்றவரைப் பார்த்து திருநின்றவூரே ஆச்சரியப்பட்டது. நாமும்தான். சுற்றி நின்ற மக்கள் அச்சத்தோடு பார்த்தது அவரையா அல்லது பாம்பையா என்று தெரியவில்லை.

“சார் நீங்க பாம்பாட்டியா?”

“இல்லைங்க நான் ஷங்கர்” என்றவாறே பிடித்த பாம்பை ஒரு கருப்புநிற பையில் அடைத்தார்.

“என்ன சார் செய்யப்போறீங்க?”

“இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தாருன்னா யாராவது விஷயம் தெரியாம அடிச்சி கொன்னுடுவாங்க. பாதுகாப்பான வேற இடத்தில் விட்டுட்டு வந்துடுவேன்” என்று பைக் டேங்கில் பாம்பு இருந்த கருப்புப்பையை வைத்துக்கொண்டு கிளம்பினார். நாமும் கூடவே கிளம்பினோம். ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரிக்கரைக்கு போனார். பையைத் திறந்தார். சுதந்திரக் காற்றை சுவாசித்த சாரையார் சர்ரென்று நெளிந்து வளைந்து மறைந்தார்.

சங்கரிடம் பேசினோம்.

“எனக்கும் பாம்புன்னா ரொம்ப பயம் சார். சினிமாவிலே ரஜினிகாந்த் பயப்படுவாரே அதுமாதிரி ஆரம்பத்துலே பயந்துக்கிட்டிருந்தேன். பிறந்ததிலிருந்தே நகரத்தில் வளர்ந்து நகர நரகம் அலுத்திடிச்சி. அதனாலேதான் கொஞ்ச வருஷம் முன்னாடி சென்னையிலிருந்து இடம்பெயர்ந்து இவ்வளவு தூரம் திருவள்ளூர் பக்கம் வந்து கிராம வாழ்க்கைக்கு தயாரானோம். நான், மனைவி, இரண்டு குழந்தைகள், அம்மா, அப்பா.

அழகான தோட்டம். நிறைய செடி கொடி. சுத்தமான காத்து. வாகன சத்தங்களோ, நகர சந்தடியோ சற்றுமில்லை. நாங்களே இயற்கை முறையில் தோட்டத்தில் விளைவிக்கிற காய்கறிகள்னு வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமாதான் போயிக்கிட்டிருந்தது. இந்த அழகான சூழலில் பாம்புகளும் தவிர்க்க முடியாதவைன்னு தெரிஞ்சிக்கிட்டோம்.

விதவிதமான வண்ணங்களில் அரை அடியிலிருந்து ஏழு அடி வரைக்கும் வித்தியாசமான பாம்புகள் அடிக்கடி கண்ணில் மாட்டும். பகலில் கூட பரவாயில்லை. இரவு வேளைகளில் நிலவொளியில் மினுமினுப்பாக நமக்கு பக்கத்திலேயே ஊர்ந்துப் போறப்போ அடிவயிற்றிலிருந்து ஒரு பயபந்து மேலெழும்பி நெஞ்சுக்கு வரும். அதுமாதிரி பாம்பை பார்த்த நாட்களில் நானும், மனைவியும் தூக்கம் வராம அமைதியா தூங்கிக்கிட்டிருக்கிற எங்க குழந்தைகளை பார்த்தவாறே கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டிருப்போம்.

கொஞ்ச நாட்களில் எங்களுக்கு பாம்புகள் பழகிடிச்சி. நம்ம வீட்டுக்குள்ளே பாம்புகள் வருவதில்லை. அதுங்க இருக்கிற இடத்துக்குதான் நாம வந்திருக்கோம் என்கிற புரிதல் ஏற்பட்டுடிச்சி. நல்லா கவனிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். கொசுக்கடியால் நோய் வந்து சாகும் மக்களைவிட, பாம்பு கடிச்சி செத்தவங்க ரொம்ப ரொம்ப குறைவுதான். நம்மை கடிக்கணும்னு கொசு மாதிரி, பாம்புக்கு வேண்டுதல் எதுவும் கிடையாது. நம்ம வீட்டுக்குள்ளே எல்லாம் வருதுன்னு பாம்பை வெறுக்கிறதைவிட, அதை புரிஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்.

கண்ணில் படும் பாம்புகளின் பழக்க வழக்கங்களை கவனிக்க தொடங்கினேன். பாம்புகள் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாங்கி படிச்சேன். வீட்டில் இருக்குறவங்க கிட்டேயும் இதையெல்லாம் பகிர்ந்துக்கிட்டேன். குறிப்பா என்னோட குழந்தைகள் கிட்டே பாம்புகளோட குணாதிசயங்களையும், தன்மைகளையும் பத்தி விலாவரியா பேசிட்டேன். அவங்களும் பாம்புகளை ஃப்ரெண்ட்ஸா ‘ட்ரீட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனால், படிப்பு வேற அனுபவம் வேற இல்லைங்களா. ஒரு நாள் திடீர்னு ஹாலில் இருந்து சரசரவென வேகமா வந்த அந்த பாம்பார் சட்டுன்னு கிச்சனுக்குள்ளே புகுந்துட்டார். என்னோட அம்மா பயந்துப்போய் ‘வீல்’னு கத்திட்டாங்க. சமையலறையில் அவ்வளவு பொருட்களுக்கு நடுவிலே அவரு எங்க ஒளிஞ்சிக்கிட்டிருக்காருன்னு தெரியலை. நடுவுலே ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கிட்டு நீண்ட தடி ஒண்ணை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பாத்திரமா உருட்டி தேட ஆரம்பிச்சேன். எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் அடியிலே சுருண்டு பத்திரமா படுத்துக்கிட்டிருந்தாரு. கை நடுங்க நடுங்க அவரை எப்படியோ ஒரு டப்பாவுக்குள்ளே அடைச்சிட்டு, நேரா காரை எடுத்துக்கிட்டு கிண்டி பாம்பு பண்ணைக்கு வந்தேன்.
நான் கொண்டு போன பாம்பு கொம்பேறி மூக்கனாம். இதைப்பற்றி ஏராளமா கட்டுக்கதைகள் மக்களிடம் இருக்கு. ஒரு சினிமாவுக்கு கூட ‘கொம்பேறி மூக்கன்’னு பேரு வெச்சிருக்காங்க. ஆக்சுவலா அவரு ஒரு அப்பிராணி. விஷமே கிடையாதுன்னு அங்கிருக்கிற அலுவலர் ஒருவர் எனக்கு புரிய வெச்சாரு. அவரு கையிலே நாம கொண்டுபோன கொம்பேறி மூக்கன், ஒரு குழந்தையை மாதிரி நெளிஞ்சி நெளிஞ்சி விளையாடிக்கிட்டிருந்தது. பாம்புகள் பற்றி பல விஷயங்களை அவர்தான் விளக்கினாரு. எனக்கு நல்ல புரிதல் கிடைச்சிச்சி. அன்னியிலேருந்து பாம்புகளை நேசிக்கவே ஆரம்பிச்சேன். அவர் பரிசளித்த புத்தகம் ‘Snakes of India : The Field Guide’. இந்த புத்தகத்தை வாசிக்கறப்போ நம்முடன் புவியில் வாழ்கிற பாம்புகள் பற்றிய நல்ல அறிதல் கிடைத்தது. இப்போ இதே மாதிரி வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல புத்தகம் அங்கே அறுபத்து அஞ்சு ரூபாய்க்கு கிடைக்குது. நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ச.முகமது அலி எழுதிய ‘பாம்பு என்றால்’ புத்தகமும் பாம்பு பற்றிய நம்முடைய மூடநம்பிக்கைகளை தோலுரிக்குது.

இதையெல்லாம் படிச்சபிறகு பாம்புகளை அடையாளம் காண ஓரளவுக்கு தெரிஞ்சது. முக்கியமான விஷயம், எதுவெல்லாம் விஷப்பாம்புன்னு பார்த்ததுமே கண்டுபிடிக்கிற அளவுக்கு நாலெட்ஜ் வளர்ந்தது. தோட்டத்தில் ஒரு பாம்பு வந்துச்சின்னா, அதுக்கு விஷமில்லைன்னு தெரிஞ்சா கண்டுக்காம அப்படியே ஜாலியா விட ஆரம்பிக்கிற அளவுக்கு பெருந்தன்மை ஏற்பட்டுடிச்சி. முக்கியமா என்னோட பசங்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க ரொம்ப மெனக்கெட்டேன்.

சமீபத்தில் ஒரு நல்ல பாம்பு பக்கத்து வீட்டிற்குள் புகுந்திடிச்சின்னு சொன்னாங்க. அதை எப்படி அப்புறப்படுத்துறதுன்னு தெரியலை. அதற்குரிய சரியான பொருட்கள் நம்மிடம் இல்லைன்னு தோணுச்சி. அன்னைக்கு அந்த பாம்பு எப்படியோ அங்கிருந்து தப்பிடிச்சின்னு வெச்சிக்குங்க. ஆனாலும் மறுபடியும் ஒருமுறை அது வர்றதுக்கு நிறைய சாத்தியக்கூறு இருக்கறதா மனசுக்கு பட்டுச்சி. இந்த பாம்பை யாரும் அடிச்சி சாகடிச்சிடக்கூடாது, அதை எப்படி பிடிச்சி காப்பாத்துறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

டிஸ்கவரி சேனலில் பாம்பு பிடிக்கிறவங்க நீளமா ஒரு ஸ்டிக் வெச்சிருப்பாங்க. அதுமாதிரி ஒண்ணு வாங்கிடலாம்னு விசாரிச்சப்ப, அது நல்லா பாம்பு புடிக்க தெரிஞ்சவங்கதான் பயன்படுத்த முடியும், சரியா பயன்படுத்தலைன்னா பாம்பு செத்துடும்னு ஊட்டியில் வசிக்கும் பாம்புகளின் தோழரான வனவாழ்வு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி சொன்னார். பொதுமக்களின் வசிப்பிடத்தில் மாட்டிக்கொள்ளும் பாம்புகளை பத்திரமா அப்புறப்படுத்தும் சேவையை இவர் செய்துவருகிறார். அதைவிட சுலபமான ஒரு சாதனத்தை அவர் எனக்கு கொடுத்து, எப்படி பயன்படுத்தனும்னு டிப்ஸ் கொடுத்தார். நீலகிரி டி.எஃப்.ஓ. பத்திரசாமி சின்னச்சாமியும் எனக்கு இதுபற்றி நிறைய சொன்னார்”
கையில் இருக்கும் அந்த கருவியை காட்டியபடியே நமக்கு விளக்குகிறார் ஷங்கர்.

“இதுதான் அது. இரண்டு கம்பிகள் கொண்ட எளிமையான கருவி. ஒரு கம்பியின் முனையில் வளைவு உள்ள ஸ்டிக். இன்னொரு கம்பியின் முனையில் சாக்ஸ் வடிவில் கருப்புத்துணி. வளைவான கம்பி கொண்டு பாம்பை லாவகமா ஒரு மூளைக்கு தள்ளி, இன்னொரு கம்பியில் இருக்கிற துணிக்குள் செலுத்தி பாதுகாப்பா அப்புறப்படுத்த முடியும். பாம்புக்கோ, அதை கையாளுகிற நபருக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. இதை பயன்படுத்த நினைக்கிறவங்க அதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட ஆட்களையோ, நிறுவனங்களையோ சந்தித்து பயிற்சி எடுக்கறது நல்லது.

ஆச்சரியமா இந்த கருவி கிடைச்ச நாளிலிருந்து பாம்பு கண்ணில் மாட்டவே இல்லை. ஏதாவது விஷப்பாம்பு மாட்டினாதான் இதை பயன்படுத்தனும்னு முடிவெடுத்திருந்தேன். ஆனா இன்னிக்கு மாட்டினது ஆபத்தில்லாத சாரைப்பாம்புதான். ஆறரை அடி நீளம் என்பதால் தெருவாசிகள் ரொம்ப பயந்துட்டாங்க. அடிக்க வேற வந்துட்டாங்க. அவங்களை சமாதானப்படுத்துறதுக்குதான் புடிச்சி பாதுகாப்பா இங்கே விட்டிருக்கேன்.

பொதுவா பாம்புகளை பிடிச்சோம்னா அருகிலிருக்கும் வனத்துறை அலுவலரிடம் அதை சமர்ப்பிக்கணும். அவர் அதோட உடல்நிலையை சோதிச்சி, மக்கள் நடமாட்டமில்லாத அரசாங்கத்துக்கு சொந்தமான இடத்தில் விட்டுடுவாரு. நம்ம ஊரு சுற்றியும் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு வனத்துறை அலுவலகம் எங்கிருக்குன்னே தெரியலை. தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ளே புடிச்ச பாம்புக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா? அதனாலேதான் சாதிக் அலி அவர்களிடம் பேசி, அவரோட வழிகாட்டுதல்படி இங்கே எடுத்துவந்து விட்டுட்டு அதை மொபைல் கேமிராவில் வீடியோவும் புடிச்சிட்டேன்” என்றார்.

அவரை வாழ்த்தி விடைபெற முனைந்தபோது, “பாம்பை பார்த்தீங்கன்னா அடிச்சி கொன்னுடாதீங்க சார். சட்டப்படி குற்றம். மானை சுட்டதுக்காக சல்மான்கான் மேல் கேஸ் போட்டமாதிரி உங்க மேலயும் போட்டு ஜெயிலில் அடைக்க முடியும். பாம்பை பிடிப்பதும், அடிப்பதும் வீரசாகசமில்லை, கோழைத்தனம். அதே மாதிரி பாம்புகளை பற்றிய போதிய அறிவில்லாமல் அதை அணுகுவதும் தவறு” என்று எச்சரித்தார்.


பாம்புக்கு படையெல்லாம்
நடுங்க வேண்டாம்!


பாம்பைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட கதைகள் தொண்ணூறு சதவிகிதம் பொய். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்பு கதைகளை நம்பவே நம்பாதீர்கள். மனித இனம் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாம்புகள் தோன்றிவிட்டன. எனவே நம்மைவிட அவற்றுக்கு பூமியில் வாழும் உரிமை கூடுதல்.

நம் நாட்டில் வாழக்கூடிய பாம்புகளில் கொடிய விஷம் கொண்டவை நான்கே நான்குதான். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ராஜநாகம் ஆகியவற்றுக்கு மட்டுமே விஷமுண்டு. நாம் காணும் பாம்புகளில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பாம்புகள் விஷமற்றவையே. ராஜநாகம் மழைக்காடுகளில் மட்டுமே வசிக்கும். மற்ற மூன்றுவகை பாம்புகளும் வயல்கள் அதிகமிருக்கும் இடங்களில் காணப்படலாம். நகரங்களில் விஷமுள்ள பாம்பு வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத விஷயம். கண்ணாடி விரியன் தவிர்த்து மற்ற வகை பாம்புகள், மனித நடமாட்டத்தை கண்டால் அஞ்சி ஓடி ஒளிந்துவிடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை காட்டிலும், பாம்புகளுக்கு நம் மீது பயம் அதிகம். விரியன் வகை பாம்புகள் நம்மை கண்டால் ஓடி ஒளியாமல் அதே இடத்தில் சுருண்டுக் கொள்ளும். அதற்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே தாக்க முயலும். பெரும்பாலும் பாம்பு கடியில் இறப்பவர்கள் விஷத்தினால் அல்ல. பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தினால் ‘ஹார்ட் அட்டாக்’ வந்துதான் இறக்கிறார்கள்.


பாம்பை பாதுகாக்கும் சட்டம்!

இந்திய வனப்பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, அரிய உயிரினமாகிவிட்ட ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வகைகள். இவற்றை கொல்வது, வீட்டில் வளர்ப்பது, துன்புறுத்துவது போன்றவை ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றங்கள். இதற்காக மற்ற பாம்புகளை அடித்துக் கொல்லலாமா என்றால் அதுவும் கூடாது. வனச்சட்டம் பாம்புகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.


பாம்பை புரிந்துகொள்ள...

பாம்புகளை புரிந்துகொள்ள கீழ்க்கண்ட அமைப்புகளை நாடலாம்.

வனவாழ்வு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு
(Wildlife & Nature Conservation Trust)
எண். 97, ஊட்டி காப்பி ஹவுஸ் பில்டிங் (இரண்டாவது தளம்),
கமர்சியல் ரோடு, ஊட்டி - 643 001. போன் : 0423-2442000 மொபைல் : 9655023288
மின்னஞ்சல் : info@wnct.in இணையத்தளம் : www.wnct.in

சென்னை பாம்பு பூங்கா
ராஜ்பவன் அஞ்சல்,
சென்னை – 600 022.
போன் : 044-22353623
மின்னஞ்சல் : cspt1972@gmail.com இணையத்தளம் : www.cspt.in

(நன்றி : புதிய தலைமுறை)