24 பிப்ரவரி, 2016

நூத்தி பத்து... அம்மா.. அம்மா...!

அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
பட்டிமன்றத் தலைப்பு, ‘டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனையாக விஞ்சி நிற்பது தமிழகமெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களா? அல்லது உலகமே வியந்து போற்றும் நூத்திப்பத்து அறிவிப்புகளா?’

நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

தனபால் : அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.

முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலமான கைத்தட்டல்)

சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.

சரத்குமார் : மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”

தனபால் : வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.

வளர்மதி : சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.

(ஆவேசமாக)

செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.

(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)

சரத்குமார் : நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?

தனபால் : நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.

நத்தம் விஸ்வநாதன் : சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.

ஓ.பன்னீர் செல்வம் : சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.

நத்தம் விஸ்வநாதன் : இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.

தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?

வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா

ஓ.பன்னீர்செல்வம் : டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)

தனபால் : அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..

(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)

நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.

(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)

நன்றி : தினகரன் தேர்தல் களம்

22 பிப்ரவரி, 2016

வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் 26,000த்துக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 8,000 மனுக்கள் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரும் விருப்பமனுக்கள்.

உலக வரலாற்றிலேயே எந்த கட்சியோடும் ஒப்பிட முடியாத வித்தியாசமான கட்சியான அதிமுகவில் விருப்பமனு போட்டவர்களுக்கு, ‘நேர்காணல்’ என்றொரு சம்பிரதாயம் நடக்கும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை ‘அம்மா’ தேர்வு செய்துவிட்டிருப்பார் (அந்தப் பட்டியலைதான் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்கிறார்கள்). இருந்தாலும் ஒப்புக்குச் சப்பாணியாக, ஊருக்கு ஒப்பேற்ற அதிமுக தேர்தல் குழுவினர் நடத்தும் நேர்காணல் எப்படியிருக்கும் என்றொரு ஜாலி கற்பனை. ஓவர் டூ லாயிட்ஸ் ரோடு அதிமுக தலைமைக் கழகம்...
நேர்காணலுக்கு வந்தவர் : புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க. அகிலாண்டேஸ்வரி வாழ்க. அகிலம் காக்கும் அன்னிபெசண்ட் அம்மையார் வாழ்க. அன்னை தெரசா வாழ்க. அம்மா வாழ்க.


ஓ.பன்னீர்செல்வம் (இடைமறித்து) : கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. சொல்லுற நீங்க பூஸ்ட் அடிச்சாமாதிரி தெம்பா இருக்கீங்க. கண்டினியூ யுவர் கபடி கபடி.

நே.கா. வந்தவர் : கழகத்தின் நிரந்தப் பொதுச்செயலாளர் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க. நாளைய பாரத பிரதமர் வாழ்க. நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் வாழ்க. உலகத் தலைவி வாழ்க. அண்டசராசரங்களை ஆளும் தைரியலட்சுமி வாழ்க.

நத்தம் விஸ்வநாதன் : போதுங்க... போதுங்க... பொதுஅறிவு உங்களுக்கு பிரமாதமா இருக்கு. ஆனா சட்டசபைக்கு போறதுக்கு வேற சில தகுதிகள் வேணுமே?

நே.கா. வந்தவர் : எங்க ஊர்லே இஞ்ச் இடுக்கு பாக்கியில்லாமே எல்லா இடத்துலேயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேனுங்க. ரோட்டுலே நடந்தாகூட அம்மா ஸ்டிக்கரை மிதிச்சமாதிரி ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க.

தப்பித்தவறி மிதிச்சிட்டா காலை எடுத்துடுவோமில்லே? அவ்வளவு ஏனுங்க. ஜனங்க முதுகுலே கூட ஏப்ரல் ஃபூல் முத்திரை அடிக்கிற மாதிரி அம்மா படத்தை பெருசா ஒட்டிட்டேனுங்க. பிய்க்கவே முடியாதபடி அமெரிக்கன் டெக்னாலஜி பசை போட்டு ஒட்டிட்டேன். என் முதுகை கூட பாருங்க.

(சட்டையை கழற்றி திரும்புகிறார். 20 இன்ச் விட்டத்துக்கு ரவுண்டாக ஒட்டப்பட்டிருக்கும் அம்மா ஸ்டிக்கர் பளபளப்பாக பர்மணெண்ட் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது)

ஓ.பன்னீர்செல்வம் : வெரி இண்டரெஸ்டிங். சட்டைய மாட்டிக்குங்க. அப்புறம்?

நே.கா. வந்தவர் : செம்பரம்பாக்கத்துலே வெள்ளம் வந்தப்போ கூட எங்க ஊருக்குள்ளே பொட்டுத்தண்ணி வராம இருந்ததுக்கு காரணம், ஊரை சுத்தி பாதுகாப்பா இடைவெளியே இல்லாம சீனப்பெருஞ்சுவர் கணக்கா நான் வெச்ச அம்மா பேனருங்க தானுங்க. வெள்ளத்தை தடுத்ததாலே மக்களெல்லாம் அம்மாவை மனசார பாராட்டினாங்க. ‘நானும் வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!’ன்னு அதுக்கும் ஒரு பேனர் வெச்சேன்.

வளர்மதி (உணர்ச்சிவசப்பட்டு) : சுனாமியே எங்க அம்மா கட்டவுட்டை பார்த்துட்டு சுருட்டிக்கிட்டு போயிடிச்சி. செம்பரம்பாக்கம் வெள்ளம் எங்கம்மாவுக்கு எம்மாத்திரம்?

(சட்டென்று ஒரு கற்பூரத்தை கையில் ஏற்றி அப்படியே வாயில் போட்டு பபிள்கம் மாதிரி மெல்ல ஆரம்பிக்கிறார் வளர்மதி. நேர்காணல் எடுக்கும் அத்தனை அதிமுக தலைவர்களும் பேச்சு மூச்சின்றி பயபக்தியோடு எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

மதுசூதனன் : தியரி டெஸ்டுலே நீ டபுள் ஓக்கேப்பா. பிராக்டிக்கலா எப்படின்னு தெரியணுமே?

(நேர்காணலுக்கு வந்தவர் சட்டென்று எழுந்து நிற்கிறார். நாற்பத்தைந்து டிகிரி முதுகு வளைத்து, அந்நிலையிலேயே கையை மேலே தூக்கி, இராணுவ வேகத்தில் கும்புடு போட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் எகிப்து பிரமிடுகளில் பதம் செய்யப்பட்ட மம்மி கணக்காக உடம்பை விரைப்பாக்கி தூண் போல நிற்கிறார். இரண்டே நொடிகளில் அனாயசமாக அப்படியே தொம்மென்று தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறார். ஹெலிகாஃப்டர் பறப்பதை போல மிமிக்ரி செய்துக்கொண்டே, கோபுரதரிசனம் பார்க்கும் பக்தனை போல வானத்தை பார்த்து கச்சிதமான கும்பிடு போடுகிறார். சட்டென்று நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை ‘கிங்காங்’ பாணியில் படபடவென்று தட்டுகிறார். அறைக்குள் சடக்கென்று சட்டசபை அட்மாஸ்பியர் தோன்றுகிறது. தேர்வுக்குழுவினர் அத்தனை பேரும் இந்த வித்தைகளை கண்டு பிரமை பிடித்த நிலையில் படபடவென்று கை தட்டுகிறார்கள்)

கோகுல இந்திரா : தேர்தல் பிரச்சாரத்துலே என்ன பேசுவீங்க?

நே.கா. வந்தவர் : இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லேன்னா இரண்டாம் உலகப் போர் நடத்தி மக்களை கொன்ற ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவீங்களான்னு ஜனங்களை கேட்பேன்.

கோகுல இந்திரா : இரண்டாம் உலகப்போரா? அதை நடத்தினது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆச்சே?

வளர்மதி : இருந்துட்டு போவட்டுமே. அவர் பேரும் ஸ்டாலின்தானே? அதுக்கும் கருணாநிதிதான் பொறுப்பேத்துக்கணும்.

நத்தம் விஸ்வநாதன் : நீங்க செஞ்ச மக்கள் பணிகளில் வேறெதாவது குறிப்பா சொல்ல முடியுமா?

நே.கா. வந்தவர் : அம்மா பேனரை கிழிப்பேன்னு டிராஃபிக் முனுசாமின்னு ஒரு கிழவரு வந்தாரு. அவரை ஓட ஓட விரட்டி ரத்தம் தெறிக்க அடிச்சி துரத்துனேன். அதே பேனரை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு எடுத்துட்ட இன்ஸ்பெக்டரை போனில் கூப்பிட்டு கழுவி கழுவி ஊத்தினேன். அம்மாவை பொய்வழக்குலே பெங்களூர் ஜெயில்லே கருணாநிதி வெச்சப்போ அதை கண்டிச்சி நீளமா தாடி வளர்த்தேன். அம்மா ரிலீஸ் ஆனப்போ மொட்டை அடிச்சி காது குத்திக்கிட்டேன். கூணாளம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்தினேன். தீச்சட்டி ஏந்தினேன். தீ மிதிச்சேன். மண்சோறு சாப்பிட்டேன். காவடி தூக்கினேன்...

ஓ. பன்னீர் செல்வம் : ஆஹா... ஆஹா... பக்தா உன் பக்தியை மெச்சினோம். நீ எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமில்லே. அமைச்சர் பதவிக்கே லாயக்கான ஆளுதான். அம்மா கிட்டே அப்படியே சொல்லிடறோம். அம்மா நல்ல முடிவா எடுத்து கடுதாசி போடுவாங்க. காத்திருங்க.

(புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க என்று மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே கிளம்புகிறார் நேர்காணலுக்கு வந்தவர்)

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

15 பிப்ரவரி, 2016

விசாரணையின் மறுபக்கம்!

‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

21 ஜனவரி, 2016

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”

9 ஜனவரி, 2016

குரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்!!


வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புபவர்கள் ஏதேனும் பாலங்களை கடக்கும்போதே மூக்கைப் பொத்திக்கொண்டு முணுமுணுப்பார்கள். “அங்கெல்லாம் ஆறு என்னம்மா ஓடுது தெரியுமா? நம்மூர்லேயும் கெடக்குதே கூவம் கழுதை...” அவர் வாயிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு கூவத்துக்கு அர்ச்சனை நடக்கும்.

பாவம். ஆறு என்ன செய்யும். ஆற்றை அசிங்கப்படுத்திய நம்மை அல்லவா நாமே காறித்துப்பிக் கொள்ள வேண்டும்?

கூவத்தை குடித்தார்கள்

நம்புங்கள்.

எல்லா நதிகளையுமே போலவே கூவமும் புனிதமான நதிதான். நதியென்றாலே புனிதம்தான். கூவம் ஆற்றின் நீரை நம் முன்னோர் குடித்திருக்கிறார்கள். குளித்திருக்கிறார்கள். வேளாண்மை செய்திருக்கிறார்கள். இந்நதியின் காரணமாக நாகரிகம் வளர்ந்திருக்கிறது. நகரங்கள் பிறந்திருக்கின்றன.

வள்ளல் பச்சையப்பா முதலியாரை தெரியும் இல்லையா? புகழ்பெற்ற சென்னை பச்சையப்பா கல்லூரி இவர் பேரில்தான் அமைந்திருக்கிறது. அந்த பச்சையப்பா முதலியார், கூவம் கரையோரம் அமைந்திருந்த கோமளீஸ்வரம்பேட்டையில்தான் (இன்றைய சிந்தாதிரிப்பேட்டை பகுதி) வசித்தார். அவர் காலத்தில் செல்வந்தர்கள் கூவம் கரையில்தான் பங்களா கட்டி வசித்தார்கள். கூவம் நதி கொடையாக தந்த குளிர்ந்த காற்றையும், அதன் கரைகளில் வளர்ந்த காட்டுச்செடி மலர்களின் சுகந்தத்தையும் அனுபவித்து வாழ்ந்தார்கள். பச்சையப்பா முதலியார் தினமும் காலையில் கூவத்தில் குளித்து சுத்தபத்தமாக கோமளீஸ்வரன் கோயிலுக்கு போய் இறைவனை வணங்கிவிட்டுதான் தன் அலுவல்களை தொடங்குவாராம். இதெல்லாம் ஏதோ கி.மு.வில் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைதான்.

வெள்ளையர்களை கவர்ந்த ஆறு

கூவம் நதி கடலில் சேரும் பகுதி ஓர் இயற்கை ஆச்சரியம். அதில் கவரப்பட்டதால்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே, சரக்குக் கப்பல்களை நிறுத்த இதைவிட வாகான இடம் கிடைக்காது என்று கருதி, அப்பகுதியின் வடக்கில் இருந்த பகுதிகளை விலைக்கு வாங்கி வணிக மையம் அமைத்தார். அப்பகுதியில் செயற்கை துறைமுகம் உருவாக்கப்பட்டு, அதைச்சுற்றி குடியிருப்புகள் உருவானது. கோட்டை எழுப்பப்பட்டது. நகரம் உருவானது. அவ்வகையில் மதறாஸ் (சென்னை) உருவானதற்கு கூவமும் ஒருவகையில் காரணம்.

இந்தியா, வெள்ளையர்களின் ஆளுகைக்கு உட்படவும் மறைமுகமான காரணமாக இந்நதியே இருந்திருக்கிறது எனும்போது, வரலாற்றில் எத்தகைய மகத்தான இடத்தை நாம் கூவத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.

கூவம் ரூட் மேப்

கூவம் என்கிற பெயர் ‘கூபம்’ என்கிற பழந்தமிழ் சொல்லில் இருந்து மருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூபம் என்றால் ஆழமான குளம் என்று பொருள். அக்காலத்தில் நீரியல் அறிவு கொண்ட வல்லுநர்களை ‘கூவாளன்’ என்றே அழைத்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் கூவம் கிராமம்தான் இந்த ஆறு உருவாகும் இடம். அங்கிருந்து சிறு ஓடையாக ஓடி, ஐந்து கி.மீ தூரத்தில் இருக்கும் சட்டறை என்கிற கிராமத்தில் நதியாக உருவெடுக்கிறது. திருவள்ளூர், பூந்தமல்லி நகரங்களை ஒட்டி சுமார் 60 கி.மீ பாய்ந்து, சென்னைக்குள் கோயம்பேடு அருகில் நுழைகிறது. அரும்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையை எட்டுகிறது. அங்கே இரண்டாக பிரிந்து சென்னைக்குள் ஒரு தீவினை உருவாக்குகிறது. பிரிந்த நதி மீண்டும் நேப்பியர் பாலம் அருகே இணைந்து, முகத்துவாரம் வாயிலாக வங்கக்கடலில் கலக்கிறது.

ஆவடிக்கு அருகில் பருத்திப்பட்டு அணைக்கட்டு வரை சராசரி ஆறாகவே இருக்கிறது கூவம். ஆக்கிரமிப்புகள், மணல் சுரண்டல் என்று எல்லா ஆறுகளுக்கும் நேரும் அவலம் கூவத்துக்கும் நேர்கிறது. இன்னமும் நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும், விவசாயத்துக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவத்தை நம்பி பல கிராமங்கள் இருக்கின்றன.
சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் அப்படியே விடப்பட்டு நம் பாவங்களை சிலுவையாக சுமந்து சாக்கடையாக கடனே என்றுதான் கடலுக்கு போய் சேர்கிறது. நகருக்குள் நரம்பாக செல்லக்கூடிய சுமார் 20 கி.மீ. தூரம்தான் கூவத்துக்கு நரகம். ஆற்றுநீர் கருப்பாக, துர்வாசனையோடு வேண்டாத விருந்தாளியாகதான் நகருக்குள் நகர்கிறது.

எப்போது மாசுபட்டது?

வெள்ளையரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஓன்றிரண்டு ஆண்டுகளில் நடந்த ஆய்வில், சென்னை மாநகருக்குள் கூவம் நதியில் சுமார் ஐம்பது வகை மீன் இனங்கள் வாழ்ந்ததாக தெரியவருகிறது. பழைய புகைப்படங்களை காணும்போது மீனவர்கள் மீன்பிடித்தொழிலை கூவம் ஆற்றில் செய்து வந்தது உறுதியாகிறது.

ஆனால் -

அடுத்த பத்தாண்டு காலத்துக்குள்ளேயே கூவத்தில் உயிர்வாழும் மீன் இனங்களின் எண்ணிக்கை வெறும் இருபதாகி இருக்கிறது. இன்று நீர்வாழ் உயிரினங்கள் வசிக்க லாயக்கற்ற ஆறு அது.

வெள்ளையர் நம்மை சுரண்டியிருந்தாலும், நம்மூர் ஆற்றின் மீது அவர்கள் அக்கறையாகதான் இருந்திருக்கிறார்கள். இந்நதியின் கரைகளில்தான் பெரும் மாளிகைகளை எழுப்பி, முக்கிய அதிகாரிகளையும், ஆளுநர்களையும் தங்க வைத்தனர். கூவத்தை கொன்ற பெருமை நம்மையே சாரும். 1960களின் தொடக்கத்திலேயே கூவம், முழுமையான சாக்கடையாக மாறிவிட்டது.

அண்ணாவின் கனவு

1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றபோது, ஒரு கோடியே பதினெட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியை சீரமைக்க ஒரு திட்டம் தீட்டினார். அப்போது, “லண்டன் மாநகருக்கு தேம்ஸ் நதியை போல சென்னைக்கு கூவம் பெருமை சேர்ப்பதாய் அமைய வேண்டும்” என்று தன்னுடைய கனவினை வெளிப்படுத்தினார்.
அண்ணாவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி கூவத்தில் படகுகளை விட்டு சுற்றுலாவை ஈர்க்க முயற்சித்தார். கடையேழு வள்ளல்கள் பெயரில் படகுத் துறைகளையும் கட்டினார். இன்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் அந்த படகுத்துறைகளை கூவம் கரைகளில் காணலாம்.

அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நதியை சீர்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு திட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, திமுக அரசு 2000ஆம் ஆண்டு ரூ.720 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை அறிவித்தபோது கூவம் மணக்கும் என்றே உறுதியாக எண்ணப்பட்டது.

ஆனால், சாபக்கேடு கூவத்துக்கா அல்லது சென்னை மக்களுக்கா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் அம்பேல் ஆனது. அதன் பிறகும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளிவந்தாலும் மக்களும், கூவமும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றுவரை அண்ணாவின் கனவு நிறைவேறவில்லை.

பொறுத்த கூவம் பொங்கியது

இயற்கையை மனிதன் என்னதான் நாசப்படுத்தினாலும், அது ஒரு கட்டம் வரைதான் பொறுக்கும். பின்னர் தன்னையே ஒரு உலுக்கு உலுக்கி மனித நாசங்களை உதிர்க்கும். தன்னுடைய நாற்றத்தை தானே சகிக்க முடியாமலோ என்னவோ, சமீபத்திய பெருமழையில் கூவம் நம் பாவங்களை மொத்தமாக கழுவிக் கொண்டது. கால்வாய்கள் வழியாக வந்த வெள்ளநீர் நிரம்பி, சாக்கடைகளை ஒட்டுமொத்தமாக கடலுக்குள் கொண்டுச் சென்று கொட்டி தன்னைதானே அந்த ஆறு புதுப்பித்துக் கொண்டது. தெளிவான நீரோட்டம் இயல்பாக அமைந்தது.

ஆனால் அந்த சுத்தத்தின் ஆயுள் ஒரு மாதம் கூட முழுமையாக நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலைக்கே நீரின் நிறம் கருப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?
நம் பயன்பாட்டுக்கு இயற்கை அளித்த கொடையான நீர்நிலைகளை கூவம் மாதிரி விஷமாக்கிவிட்டு குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விவசாயத்துக்கு, இதர பயன்பாடுகளுக்கு எல்லாம் லாயக்கற்றதாக செய்துவிட்டு இமயமலை பனியை உருக்கி பயன்படுத்தப் போகிறோமா?
நதி ஓடுவது மனித சமூகம் உருவாக்கும் கழிவுகளை சுமப்பதற்கல்ல. நதியோரங்கள் தொழிற்பேட்டைகளோ அல்லது வேறு பயன்பாட்டுகளுக்கோ ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் அல்ல. இதை நாம் மறந்ததால்தான் இன்று குடிநீருக்கு அவதிப்படுகிறோம். எதிர்காலத்தில் மூச்சுவிடவும் சிரமப்படுவோம்.

நதிகள் இணைப்பைவிட, நதிநீர் சீரமைப்புதான் இப்போது அவசிய அவசரபணி. நாம் இப்போது தொடங்காவிட்டால் வேறு எப்போதுதான் செய்யப் போகிறோம்?



சிங்கப்பூர் வழிகாட்டுகிறது!

சென்னையில் கூவம் மாதிரிதான் சிங்கப்பூரிலும் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

1819ல் சிங்கப்பூர் ஒரு நகரமாக உருவானதிலிருந்தே, அந்நகரின் வணிக நடவடிக்கைகளின் முதுகெலும்பாக சிங்கப்பூர் ஆறு இருந்து வந்தது. வேகமான நகரமயமாக்கல் அந்நதியையும் சாக்கடை ஆக்கியது. நம்மூர் கூவத்துக்கு என்ன நடந்ததோ, அதுவே அங்கும் நடந்தது.

1970களில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கத் தொடங்கிய சிங்கப்பூருக்கு நடுவே மாபெரும் சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது. தவளைகள் கூட வாழ லாயக்கற்ற கருப்பான நீர் துர்நாற்றத்தோடு சீறிக்கொண்டிருக்க, சிங்கப்பூரில் கலை அழகை காண உலகின் கடைக்கோடியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.

சகித்துக்கொள்ள முடியாத இந்த காட்சிக்கு ஒரு முடிவுகாண சிங்கப்பூர் அரசு முடிவெடுத்தது. செத்துப்போன நதிக்கு உயிர் கொடுக்க திட்டம் தீட்டியது.

1977ல் ‘ஆக்‌ஷன் ப்ளான்’ அமலுக்கு வந்தது.

· ஆற்றை ஒட்டி அமைந்திருந்த பதினாறாயிரம் குடும்பங்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

· போலவே ஆற்றின் கரைகளில் அமைந்து, நதிநீரை மாசுபடுத்திக் கொண்டிருந்த சுமார் மூன்றாயிரம் தொழில் நிலையங்கள், நகரின் வேறு இடத்தில் அமைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்டுகளுக்கு இடம்பெயர்ந்தன.

· ஆற்றோரத்தில் இறைச்சி தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பன்றி மற்றும் வாத்து பண்ணைகளை வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்றார்கள்.

· மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘ஓவர்டைம்’ வேலை பார்த்து நதியில் யாரெல்லாம் அசுத்தங்களை கலக்குகிறார்களோ, அவர்களது வயிறு கலங்கும் வண்ணம் எச்சரிக்கை நோட்டீஸ்களை கத்தை கத்தையாக வழங்கினார்கள். கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளை கட்டாயமாக நிறுவ வகை செய்தார்கள்.

· இவையெல்லாம் முடிந்ததும் நதியை தூர்வாறத் தொடங்கினார்கள். பல்லாண்டுக் கணக்கில் சேர்ந்த மாசுகளை அகற்றினார்கள். நதியோரங்களில் பூங்காக்களை அமைத்தார்கள். மரக்கன்றுகள் நட்டார்கள். வாக்கிங் போக வசதியாக பாதைகள் உருவாக்கப்பட்டன. கரையோரத்தில் இருந்து ஆற்றை ரசிக்க வசதியாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட பார்வையிடங்கள் உருவாகின.

· சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் இந்த பணியை முன்னெடுத்தது. இதன் தலைமையில் அரசின் எல்லா பிரிவுகளுமே அவை அவை செய்யமுடிந்த பணிகளை செய்தது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், சிவில் அமைப்புகளும் பங்கெடுத்துக் கொண்டன.
அவ்வளவுதான். 1987ல் சிங்கப்பூர் நதி மீண்டும் உயிர்பெற்றது. வெறும் பத்தாண்டுகளில் சிங்கப்பூர் அரசு, தன் மக்களோடு இணைந்து செய்திருக்கும் இந்த சாதனை ஒரு மகத்தான வரலாறு. நதிகளை சாகடித்துக் கொண்டிருக்கும் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமான பாடம்.

திட்டமிட்டோம். முடித்துவிட்டோம். என்றெல்லாம் சிங்கப்பூர் அரசு கழண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் உயிர்ப்பித்த ஆற்றை, அதே உயிரோட்டத்தோடு ஓடவைக்க என்னென்ன கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டுமோ, அத்தனையையும் செய்து அவை முறையாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

நதியில் கழிவை கலப்பது என்பது நகரமயமாக்கல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத செயல்பாடுதான். ஆனால் கலக்கப்படும் கழிவு அதிகபட்சம் எவ்வளவு மாசு கொண்டதாக இருக்கலாம் என்று தரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது அந்த அரசு. கழிவுநீர் கலக்கப்படும் முகத்துவாரங்களில் இவற்றை கண்காணிக்க அமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பையும் மீறி ஆற்றில் சேரும் குப்பைக் கூளங்கள் அப்போதே அகற்றப்படவும் ஆட்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். ஆற்றை அழகாக வைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நிரந்தரமாக அரசு மக்களிடையே நிகழ்த்தி வருகிறது.

ஆற்றை மாசுபடுத்துவது சட்டரீதியான குற்றம் என்கிற நிலையை கண்டிப்போடு அமல்படுத்துகிறது சிங்கப்பூர். தொழில் நிலையங்களில் அடிக்கடி சோதனை நிகழ்த்தப்பட்டு அவர்களது கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா, ஆற்றில் கலந்துவிடும் நீர் அரசு விதித்திருக்கும் தரக்கட்டுப்பாட்டு அளவுக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ‘நேர்மையாக’ சோதனை செய்கிறார்கள் அதிகாரிகள்.

கூவத்தை தேம்ஸ் ஆக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் சிங்கப்பூர் செய்துக் காட்டியிருக்கிறது. அட்சரசுத்தமாக அதை நாம் பின்தொடர்ந்தால் மட்டுமே போதும்.

சில ஆயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டும். செலவழிப்போம். மனித நாகரிகத்தை தோற்றுவித்த நதிகளுக்கு அதைகூட செய்யாவிட்டால் எப்படி?

(நன்றி : தினகரன் 09-01-2016)