இலக்கியவாதியான எஸ்.ராமகிருஷ்ணன் கைவலிக்க ஒரு பெரிய புத்தகப் பையோடு வளைய வந்துகொண்டிருந்தார். அவருடைய வாசகர் ஒருவர் அவரை சந்தித்து தான் வாங்கிய புத்தகங்களை எல்லாம் காட்டி பேசிக்கொண்டிருந்தார். "நீங்க என்னவெல்லாம் சார் புத்தகங்கள் வாங்கியிருக்கீங்க?" வாசகர் ஆவல் மேலிட, எழுத்தாளர் காட்டப்போகும் இலக்கியப் பொக்கிஷங்களை காண முற்பட்டார்.
எஸ்.ராமகிருஷ்ணன் அமைதியாக தனது பையை திறந்துகாட்டினார். பைமுழுக்க காமிக்ஸ் எனப்படும் சித்திரக்கதைப் புத்தகங்கள். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்று கிட்டத்தட்ட அறுபது, எழுபது புத்தகங்கள்.
வாசகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "உங்க பையனுக்கா சார்?"
"ஏன்? நானே கூட விரும்பிப் படிப்பேனே?"
சமகாலத் தமிழின் மிகப்பெரிய எழுத்தாளுமையான எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னதை அந்த வாசகர் நம்பினாரா என்று தெரியவில்லை. ஆனாலும் அது உண்மைதான். எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமல்ல. ஓவியர் டிராட்ஸ்கி மருது, நடிகர் பொன்வண்ணன், இயக்குனர்கள் மிஸ்கின், சிம்புதேவன் என்று நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.
எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் (தூயத்தமிழில் வரைக்கதை) சக்கைப்போடு போட்ட காலக்கட்டத்தில் இவர்களைப் போல லட்சக்கணக்கானவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள். சொல்லப்போனால் பலருடைய முதல் வாசிப்பே கூட ஒரு காமிக்ஸ் புத்தகமாகதான் இருக்கும். இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லாரன்ஸ் டேவிட், ஜேம்ஸ்பாண்ட், டெக்ஸ்வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, மாயாவி வேதாளன், சூப்பர்மேன், லக்கிலுக், ஸ்பைடர்மேன், சுட்டிக் குரங்கு கபீஷ் – இவர்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடியுமா?
காமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக எளிமையாக சொல்கிறோம். தின, வார இதழ்களில் 'கார்ட்டூன்' பார்க்கிறீர்கள் இல்லையா? இது ஒரே ஒரு கட்டம். ஒரு நூல் முழுக்க ஒரு தொடர்ச்சியான கதையோடு இதுபோல நூற்றுக்கணக்கான படங்கள் வரையப்பட்டால் அதுதான் காமிக்ஸ். 1961ல் தொடங்கி, தினத்தந்தியில் அரைநூற்றாண்டு தாண்டியும் தொடர்ச்சியாக இன்றும் இரண்டாம் பக்கத்தில் வெளியாகும் 'கன்னித்தீவு' தொடர், காமிக்ஸ்களின் வெற்றிக்கு நல்ல அத்தாட்சி!
காமிக்ஸ் என்றதுமே பலரும் குழந்தைகளுக்கான விஷயம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். உங்களுக்கு ஒரு ரகசியம். இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்களின் சராசரி வயது 25 என்பது தெரியுமா? நேற்றைய் குழந்தைகள்தான் காமிக்ஸ் படிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய குழந்தைகளில் சிலர் ஆங்கில காமிக்ஸ்களை படிக்கிறார்கள். தமிழில் படிப்பது மிகக்குறைவு. பலருக்கு பள்ளிப்புத்தகங்களைத் தவிர்த்து வேறெதையும் படிப்பதற்கு வாய்ப்பே வழங்கப்படுவதில்லை.
பலவகை தொழில்நுட்பங்களிலும் முன்னேறிய நாடான ஜப்பானில் இலக்கியங்கள் கூட காமிக்ஸ் வடிவங்களாகவே இன்றும் படிக்கப் படுகின்றன. நாவல்கள் கூட காமிக்ஸ்களாக வெளிவருகின்றன. ஏனெனில் வெறும் வரிகளை வாசிக்கும் அனுபவத்தினைக் காட்டிலும், படங்களோடு வரிகளை வாசிக்கும் அனுபவமென்பது அலாதியானது. எனவேதான் தமிழ்ச்சூழலில் நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான டிராட்ஸ்கி மருது, "அடிப்படையில் அச்சு ஊடகமாக இருந்தாலும், ஒலி-ஒளி ஊடகங்களுக்கு ஒப்பான ஊடகம் காமிக்ஸ்" என்கிறார்.
குறிப்பாக திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு காமிக்ஸ் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம். கேமிரா கோணங்கள், காட்சி வடிவமைப்பு, லொக்கேஷன் அமைத்தல் போன்ற தொழில்நுட்ப விஷயங்களுக்கு காமிக்ஸில் சித்தரிக்கப்படும் காட்சிகள் அடிப்படையான கருத்துருவாக்கத்தை உருவாக்கும். கமல்ஹாசன் கூட தன்னுடைய சில படங்களின் திரைக்கதை வடிவத்தை காமிக்ஸ் காட்சிகளாக (திரைத்துறையில் ஸ்டோரி போர்ட் என்பார்கள்) உருவாக்கிப் பார்த்து மெருகேற்றுவாராம். கமல் மட்டுமல்ல, பல இயக்குனர்கள் இந்த ஸ்டோரி போர்ட் தொழில்நுட்பத்தை இப்போது பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஹாலிவுட் படங்களில் ஸ்டோரி போர்ட் உருவாக்குவது அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள் கூட படப்பிடிப்புக்கு முன்பாக ஸ்டோரி போர்டுகளாகவே உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெறப்படும்.
சினிமா, விளம்பரத்துறை என்றில்லை. பல்வேறு துறைகளிலும் படம் காட்டும் விளையாட்டு கட்டாயம் உண்டு. நீங்கள் புதியதாக கனவு வீடு கட்ட விரும்புகிறீர்கள். இன்ஜினியர் உங்கள் கனவை படமாக வரைந்துதானே ஒப்புதல் பெறுகிறார்? வாஷிங் மெஷினோ, டிவியோ, வேறு ஏதேனும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நினைத்தால் என்ன செய்கிறீர்கள்? பத்திரிகைகளிலோ, டிவியிலோ வாங்க விரும்பும் பொருளின் 'படம்' பார்த்துதானே முடிவு எடுக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள். காமிக்ஸ் சிறுபிள்ளை விளையாட்டா? நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் 'காமிக்ஸ்' என்று தெரியாமலேயே, அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இல்லையா?
மேலைநாடுகளில் இன்றைக்கும் புதிய காமிக்ஸ் வெளியீடுகள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நம்மூரில்தான் பிசினஸ் கொஞ்சகாலமாக 'டல்'. ஆனால் ஒரு காலத்தில் இங்கும் 'காமிக்ஸ் கோலாகலம்' திருவிழாவாக நடைபெற்றதுண்டு. அந்த பிளாஷ்பேக்கை கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றி திரும்பிப் பார்ப்போமா?
1955ல் தொடங்கி 1957 வரை தொடர்ச்சியாக 32 பக்க முழுநீள படக்கதைகளை குமுதம் இதழ் வெளியிட்டதுதான் தமிழ்காமிக்ஸின் அதிகாரப்பூர்வ தொடக்கம் எனலாம். இதற்கு முன்பே கூட பல முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும் இதுதான் பிரபலமான முதல் தொடக்கம். 1956ல் ஆனந்த விகடன், ஓவியர் மாயா உருவாக்கத்தில் 'ஜமீன்தார் மகன்' என்ற படக்கதை தொடரை வெளியிட்டது. 'தமிழ்ப்பத்திரிகை உலகில் முதன்முறையாக படக்கதை' என்று இச்சம்பவத்தை ஆனந்தவிகடனின் பொக்கிஷம் குறிப்பிடுகிறது.
வாசகர்களிடையே கிடைத்த பலமான வரவேற்பைத் தொடர்ந்து குமுதம், விகடன் இதழ்கள் தொடர்ச்சியாக காமிக்ஸ்களை வெளியிட்டு வந்தன. குழந்தைகளுக்கு என்றில்லாமல், பெரியவர்களுக்கான காமிக்ஸ்களை விகடன் பெருமளவில் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1964ஆம் ஆண்டு இந்திய புராண, வரலாற்று நிகழ்வுகளை காமிக்ஸ் வடிவில் 'அமர் சித்திரக்கதா' என்ற பெயரில் 117 புத்தகங்களை வெளியிட்டார்கள். இவை சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. பின்னாளில் பிரபலமான முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ்களை வெளியிட்ட நிறுவனம் இதுதான்.
65ஆம் ஆண்டில் இந்திரஜால் காமிக்ஸ் (ஐநூறுக்கும் மேற்பட்ட இதழ்கள்), 68ல் ஃபால்கன் காமிக்ஸ் (22 இதழ்கள்), 69ல் பொன்னி காமிக்ஸ் (1992 வரை 192 இதழ்கள்) என்று ஏராளமான இதழ்கள் பிரத்யேகமாக காமிக்ஸ்களுக்கு என்றே தொடங்கப்பட்டன.
1972ஆம் ஆண்டு சவுந்தரபாண்டியன் என்பவரின் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் 'முத்து காமிக்ஸ்' வெளியிடத் தொடங்கியது. இன்றுவரை முத்துகாமிக்ஸ் 300க்கும் மேற்பட்ட இதழ்களோடு தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. இதே ஆண்டு குமுதம் நிறுவனம் 'மாலைமதி' என்ற பெயரில் தனிப்புத்தகமாக காமிக்ஸ் கொண்டுவந்தது. சுமார் 176 இதழ்கள் காமிக்ஸ்களாக வெளிவந்தபின்னர், மாலைமதி வார இதழாக்கப்பட்டு நாவல்களை வெளியிடத் தொடங்கியது.
1984ஆம் ஆண்டு 17 வயது எஸ்.விஜயனை ஆசிரியராகக் கொண்டு 'லயன் காமிக்ஸ்' தொடங்கப்பட்டது. தினத்தந்தி குழுமம் மாதமிருமுறை இதழாக 'ராணி காமிக்ஸ்' தொடங்கியது. தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் அதுதான். ஒரு லட்சம் பிரதிகள் வரை லயன் காமிக்ஸ் விற்ற காலம் அது. ராணி காமிக்ஸும் வாசகர்களிடையே பலமான வரவேற்பை பெற்றிருந்தது. பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாலேயே திகில், ஜூனியர் லயன், மினி லயன் என்று ஏராளமான தனித்தனி காமிக்ஸ் இதழ்கள் கொண்டுவரப்பட்டன. இந்த பொற்காலம் 90களின் முற்பகுதி வரை நீடித்திருந்தது.
உலகமயமாக்கலின் விளைவாக யாருக்கு நஷ்டமோ இல்லையோ, தமிழ் காமிக்ஸுகளுக்கு பெருத்த நஷ்டம். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கைமுறை அடியோடு மாறியது. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிப்பதை பெற்றோர் விரும்புவதில்லை. போதாக்குறைக்கு புற்றீசல்களாய் படையெடுத்த சேட்டிலைட் சேனல்கள். குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து ஒளிபரபரப்பப்படும் கார்ட்டூன் சேனல்கள். மக்களுக்கு ஆங்கில மோகமும் சேர்ந்துகொள்ள, கருப்பு வெள்ளையில் படக்கதையாக தமிழை வாசிப்பது குறித்த ஆர்வம் குறைந்தது. பிரபலமான காமிக்ஸ்கள் மூடுவிழா காண முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் ஆகிய இரண்டு மட்டும் இன்னமும் ஒருகாலத்தில் மின்னிய நட்சத்திரத்தின் எஞ்சிய பழம்பெருமையாக தள்ளாட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆயினும் நேற்றைய குழந்தைகள் தங்கள் பால்யகாலத்து நினைவுகளை கிளறிப்பார்க்க இன்றும் காமிக்ஸ் வாசிக்கிறார்கள். அஞ்சல்தலை, நாணயங்கள் சேகரிப்பதைப் போல தேடித்தேடி பழைய காமிக்ஸ்களை சேகரிக்கிறார்கள். 1972ல் வெளிவந்த மாலைமதி காமிக்ஸின் ஒரு இதழின் விலை 75 காசு. இன்று அதை ரூ.4000 வரை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள். 1987 லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளிவந்த சூப்பர் ஸ்பெஷலின் அன்றைய விலை ரூ.10. அதை இன்று 10,000 ரூபாய் வரை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுக்க குறைந்தபட்சம் 3000 பேர் தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளர்களாக இருக்கிறார்கள். தமிழ் காமிக்ஸ் வரலாற்றை ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார் காமிக்ஸ் ரசிகரான கிங் விஸ்வா. உலகமெங்கும் இருக்கும் வாசகர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ் காமிக்ஸ் உலகம் (tamilcomicsulagam.blogspot.com) என்றொரு வலைப்பதிவையும் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் காமிக்ஸ் தொடர்பான ஏராளமான தகவல்களையும், படங்களையும் தேடித்தேடி சேகரித்து பதிவேற்றுகிறார்.
இன்று குழந்தைகளிடம் போதிய வரவேற்பு இல்லையென்றாலும், அன்று காமிக்ஸ் படித்தவர்கள் இன்றும் புதிய காமிக்ஸ்களை நம்பிக்கையோடு வரவேற்கிறார்கள். எனவேதான் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இந்த தீபாவளிக்கு ரூ.200/- விலையில் 854 பக்கங்கள் கொண்ட ஒரே மெகாகதையை லயன் காமிக்ஸில் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவிலேயே இவ்வளவு பெரிய காமிக்ஸ் முயற்சி இதுவரை நடந்ததே இல்லை. சுமார் 800 இதழ்களை முன்பதிவிலேயே விற்றுத் தீர்த்து சாதனை புரிந்திருக்கிறது லயன் காமிக்ஸ்.
குழந்தைகளை கவரும் வகையில் காலத்துக்கேற்ற மாற்றங்களோடு, முழுவண்ணத்தில், அயல்நாட்டுத் தரத்தில், அடுத்தடுத்து காமிக்ஸ்களை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன். கார்ட்டூன் சேனல் பார்க்கும் நேரத்தை குறைத்து, காமிக்ஸ் பக்கமாக கருணைப் பார்வையை குழந்தைகள் காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :
வாண்டு மாமாவை மறக்க முடியுமா?
தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான வாண்டுமாமாவை ஒதுக்கிவிட்டு காமிக்ஸ் பற்றி பேசவே முடியாது. கெளசிகன் என்று இலக்கிய, பத்திரிகை உலகிலும் வாண்டுமாமா என்று தமிழ் குழந்தைகளாலும் அன்போடு அழைக்கப்பட்டவர். இவர் சுமார் 28 சித்திரக்கதைகளை எழுதியிருக்கிறார். பிரபல பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று இனி குழந்தைகளுக்காகவே எழுதுவேன் என்று 'பூந்தளிர்' பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். வாண்டுமாமாவுக்கு இப்போது 85 வயதாகிறது. முதுமை காரணமாக முன்புபோல எழுத முடிவதில்லை.
எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :
தமிழ் காமிக்ஸ்களின் தந்தை!
முல்லை தங்கராசனை தமிழ் காமிக்ஸ் உலகின் தந்தை என்றே குறிப்பிடலாம். அதிகம் படிக்காதவர். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர். லாரி, கார் டிரைவராக பணியாற்றியவர். நிறைய குழந்தைப் பத்திரிகைகளில் பணிபுரிந்து தன் எழுத்தாற்றலை பெருக்கிக் கொண்ட இவர் 60களில் காமிக்ஸ்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
இவர் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகமான 'ஸ்ரீ வெங்கடேஸ்வரர் புராண சித்திரங்கள்' தமிழ் காமிக்ஸின் மைல்கல். 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது. இன்றும் வெளிவரும் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆசிரியராக இருந்தவர் முல்லை தங்கராசன்.
1976ல் மணிபாப்பா என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதே நேரத்தில் மாயாவி காமிக்ஸ் என்ற ஒரு இதழையும் தொடங்கி சில இதழ்களை வெளியிட்டார். 79ல் பிரபலமான 'ரத்னபாலா' இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். பின்னர் சிறுவர் ரத்தினக் குவியல் என்ற பெயரில் 16 பக்க சித்திரக்கதைகளை மதிநிலையம் பதிப்பகத்தோடு சேர்ந்து வெளியிட்டார். 84ல் மேத்தா காமிக்ஸ் தொடங்கினார். பின்னர் மதி காமிக்ஸில் பணியாற்றினார். இன்னும் ஏராளமான இதழ்களிலும் முல்லை தங்கராசனின் பங்களிப்பு இருந்தது. அவர் நிலையாக ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதாக தகவல் இல்லை.
சுமார் முப்பதாண்டு காலம் சிறுவர் இலக்கியத்தோடு இலக்கியமாக வாழ்ந்த முல்லைதங்கராசனின் நண்பர்கள் அனைவருமே இலக்கிய ஜாம்பவான்கள். சிற்பி, ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் இவருடைய நெருங்கிய நண்பர்கள்.
80களின் இறுதியில் (86 என்று சிலரும் 89 என்றும் சிலரும் சொல்கிறார்கள்) காமிக்ஸ் உரிமை தொடர்பாக பேசுவதற்கு மும்பைக்கு சென்றிருந்தபோது, ஓட்டல் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அவர் ஒரு காமிக்ஸை திரைப்படமாக எடுக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும், அதற்காக மும்பையில் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றதாகவும் சிலர் சொல்கிறார்கள்.