22 டிசம்பர், 2010

டிசம்பர் 26 - இன்னொரு சுனாமி

2004ல் வந்த சுனாமி மாதிரியில்லை இது. கொஞ்சம் நல்ல சுனாமி.

நண்பர்கள் நர்சிம், நிலாரசிகன், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள் இந்த நாளில் உயிர்மை வெளியீடாக வெளியிடப்பட இருக்கின்றன.

நர்சிம் - தீக்கடல் - விலை ரூ.40

நிலாரசிகன் - வெயில் நின்ற மழை - விலை ரூ.50

பொன்.வாசுதேவன் - ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

என்னைப் பொறுத்தவரை 'கவிதை' என்றாலே கெட்டவார்த்தை. இருந்தாலும் நண்பர்கள் எழுதிய கவிதைகள் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை. நண்பர் சரவண கார்த்திகேயனின் சமீபத்திய கவிதை நூலான 'பரத்தை கூற்று' வாசித்ததில் இருந்து ஓரளவுக்கு கவிதை மீதான அலர்ஜி குறைந்திருக்கிறது. கவிஞர்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள் என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. எனவே நானும் புதுவருடத்தில் கவிதை, கிவிதை எழுதலாமா என்று அபாயகரமாக யோசித்து வருகிறேன்.

நர்சிம்மின் இரண்டாவது நூல் இந்த 'தீக்கடல்'. முதலாவதாக அகநாழிகை வெளியீடாக வந்திருந்தது 'அய்யனார் கம்மா' சிறுகதைத் தொகுதி. ஆக்சுவலி, யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அய்யனார் கம்மா-வுக்கு முன்பாக நர்சிம்மின் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாக இருந்தது. அந்த புரொடக்‌ஷன் டீமில் சுறுசுறுப்புக்குப் பெயர்போன நானும், மாடசாமி என்கிற என்னுடைய நண்பரும் இன்வால்வ் ஆகியிருந்ததால் அம்முயற்சி குறைப்பிரசவமாக லே-அவுட்டோடு நின்றுவிட்டது. இதுபோல நர்சிம்மின் முதல் முயற்சி நின்றுபோனது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை எல்லாம் வல்ல இலக்கியமாதா தான் முடிவு செய்யவேண்டும்.

நண்பர் நிலாரசிகனோடு எனக்கு பெரியளவில் பரிச்சயமில்லை. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் அடிக்கடி பார்ப்போன். 'ஹாய்' சொல்லிக் கொள்வோம். நீண்டகாலமாக தமிழிணையத்தில் இயங்கி வருபவர். ஸ்விட்ச்சு போட்டால் பேன் சுற்றுவதைப் போல, சொடக்குப் போட்டதுமே கவிதைகளை கொட்டக்கூடிய ஆற்றல் பெற்ற கவிஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சில கவிதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு திரிசக்தி பதிப்பகத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.

பொன்.வாசுதேவனைப் பொறுத்தவரை என்ன சொல்வது? வழக்கறிஞர். அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இலக்கியத்தோடு இருபதாண்டு பரிச்சயம் கொண்டவர். பத்திரிகையாளர். அகநாழிகை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். இதுபோல எண்ணற்ற முகங்கள். சர்வநிச்சயமாக இவர் ஒரு சகலகலா வல்லவர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை'தான் இவருடைய முதல் நூல்.

கடைசியாக மச்சி சார்.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புது வலைப்பதிவர் வலைபதிய வந்திருந்தார். எடக்கு முடக்கான மொழியில் தீவிர இலக்கியம் பேசுபவராக இருந்ததால் ட்விட்டர், பிளாக் போன்ற தளங்களில் அவரோடு தொடர்பினை வளர்த்துக்கொண்டேன். சோம்பலான ஒரு ஞாயிறு மதியத்தில் போன் செய்தார். "நான் தாம்பா விமலாதித்த மாமல்லன் பேசுறேன்" என்று ஆரம்பித்தார். ஒரு மணிநேர உரையாடல். அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் காதுகளை விரியவைத்து கேட்டுக்கொண்டே இருந்தேன். முன்பின் தெரியாதவர்களிடம் - குறிப்பாக ஒரு ஞானசூனியத்திடம் - அன்னியோன்னியமான உரையாடலை ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நிகழ்த்த முடிகிறதென்றால் அது கின்னஸ் சாதனையை விட சிறப்பானது.

ஆரம்பத்தில் சார் போட்டு பேசினால் கோபப்படுவார். "யோவ் நானும் யூத்துதான். உங்க சாருவை விட பத்து வருஷம் யூத்து. மாமு, மச்சின்னே கூப்பிடு" என்றார். அவரது வேண்டுக்கோளுக்கிணங்க மச்சி என்று கூப்பிட்டாலும், மரியாதைக்காக 'சார்' போட்டு 'மச்சி சார்' என்று அழைக்கிறோம். இன்று தமிழிணையத்துக்கே செல்லமான 'மச்சி சார்' அவர்.

80களில் தொடங்கி, 90களின் மத்தி வரையிலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக இயங்கிய இலக்கியவாதி அவர். 35 வயதிலேயே இலக்கியத்தில் இருந்து வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். அவரது இருபத்து சொச்சம் வயதுகளிலேயே அமரப்புகழை இலக்கியத்தில் பெற்றுவிட்டவர். அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வாசகர்கள் 'விமலாதித்த மாமல்லன்' என்ற பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவரது புகழுக்கு சான்று. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று யார் பட்டியலிட்டாலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' கட்டாயம் இடம்பெறும். இந்தக் கதையை விட சிறந்த கதைகளை இவர் எழுதியிருந்தாலும் கூட, சிங்கத்தை ஏனோ சிறுமிக்குள்ளேயே அடக்கி வைக்கிறார்கள்.

சுந்தரராமசாமி அவருக்கு உயிர். அதனால்தான் என்னவோ இன்று தனது தோற்றத்தையும் கூட 'சுரா' பாணியிலேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா வழியும் ரோமுக்கே என்பது மாதிரி என்ன பேசினாலும் கடைசியாக 'சுரா'வில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். "எனக்கும், ராமசாமிக்கும் இடையிலே எவனையும் விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு பி.எஸ்.வீரப்பா பாணியில் கடகடவென சிரிப்பார்.

மச்சி சார் இலக்கிய உலகத்துக்குள் தொபுக்கடீரென்று தவளைக்காய் குதி குதித்து, ஆமை மாதிரி அவசரப்படாமல் பொறுமையாய், ஆழத்தில் நீந்தி மிகச்சரியாக இவ்வருடத்தோடு முப்பதாண்டுகள் ஆகிறது. ஒரு நாவல் கூட எழுதியதில்லை. அவருக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். இரண்டு மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறார். மீதியெல்லாம் சிறுகதைகள். தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத சக்திகளில் ஒருவரான இவரது மொத்தப் படைப்புகள் மொத்தமே முப்பதுதான்.

'விமலாதித்த மாமல்லன் கதைகள் - முழுத்தொகுப்பு', 30 படைப்புகளும், 300க்கும் மேற்பட்ட பக்கங்களில், ரூ.180/- விலையில் அதே டிச. 26ல், அதே விழாவில் வெளியிடப்படுகிறது. சுனாமியைக் கொண்டாட இதுவும் ஒரு காரணம். விமலாதித்த மாமல்லனின் இந்தத் தொகுப்பு நிச்சயம் பல விருதுகளை அள்ளிக் குவிக்க தகுதியானது. ஆனால் விருதுகளுக்குப் பின்னாலான அரசியல் அவருக்கு தெரியாது என்பதால், வாசகர்கள்தான் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர்கள் : அழகிய பெரியவன், சுகுமாரன், மணா, இந்திரன், ஜே.பி.சாணக்யா, ந.முருகேச பாண்டியன், ஷாஜி, சுப்ரபாரதி மணியன், அ.ராமசாமி, ந.முத்துக்குமார், பவா.செல்லத்துரை, ஸ்ரீநேசன்

நாள் : 26-12-2010, ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.30 மணி

இடம் : தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. பில்டிங்,
735, அண்ணா சாலை, சென்னை.

குறிப்பு : முன்னதாக 25-12-2010 அன்று மாலை இதே அரங்கில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இருக்கிறது. சாரு இம்முறை பேசப்போகிறார். எந்தப் புத்தகத்தையும் கிழிக்காமல் சினிமா, அரசியல், இலக்கியத் தளங்களில் நடைபெறும் ஊழல்களை கிழிக்க இருக்கிறார். பல கனவான்களின் (கணவன்களின் அல்ல) முகமூடியை டார் டாராக கிழித்தெறியப் போகிறார்.

21 டிசம்பர், 2010

பேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு!


'அறிஞர் அண்ணா - 100 அரிய தருணங்கள்' நூல் வெளியீட்டு விழா

இடம் :
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.

நாள் :
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு

வரவேற்புரை :
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்

நூல் வெளியீடு, தலைமை :
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

நூல் பெறுதல், சிறப்புரை :
தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்

ஜி. விஸ்வநாதன்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

தமிழச்சி தங்கபாண்டியன்,
கவிஞர்


நன்றியுரை :
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்

20 டிசம்பர், 2010

நாகவல்லி!


நம்ம வீட்டு கல்யாணத்துலே நிச்சயமா இந்த 'மேட்டர்' நடந்திருக்கும். பந்தி பரிமாறி சரக்கெல்லாம் தீர்ந்துட்டிருக்கும். கடைசியா ஒரு பத்து, பதினைஞ்சி பேருக்கு சாம்பார், பொறியல், ஊறுகாய் எதுவுமே மிச்சமிருக்காது. சோறு மட்டும் ரெண்டு, மூணு கூடை எக்ஸ்ட்ராவா இருக்கும். சமையல்கார மாமா சட்டுபுட்டுன்னு ஒரு வேலை செய்வாரு. மீதமிருக்கிற கத்தரிக்காய், லொட்டு, லொசுக்கையெல்லாம் போட்டு ஒரு இண்ஸ்டண்ட் வத்தக்குழம்பு வெச்சுத் தருவாரு. டேஸ்ட் பிரமாதப்பட்டு விடும்.

நாகவல்லி அந்த வகை. பொன் வைத்த இடத்தில் பூ வைத்தமாதிரி சூப்பர்ஸ்டார் கேரக்டருக்கு வெங்கடேஷ். ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்காவென்று கிடைத்த ஆட்களைப் போட்டு ஒருமாதிரியாக படத்தை தேத்திவிட்டார் இயக்குனர். பி.வாசுவுக்கு சமகாலப் போக்கில் படங்களை எடுக்க முடியவில்லையே தவிர, சந்திரமுகியை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பக்காவாக ரீமேக்க முடியுமென்று தோன்றுகிறது.

வெங்கடேஷ், ரஜினியை மேனரிஸம், உடையலங்காரம் என்று எல்லாவிதத்திலும் 'பிட்' அடித்திருக்கிறார். இருந்தாலும் சூப்பர்ஸ்டாரின் கம்பீரமும், வேகமும், ஸ்டைலும் வந்துவிடுமா என்ன? இரண்டாம் பாதியில் வரும் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் டேன்ஸ். என்னதானிருந்தாலும் சந்திரமுகி ரஜினியை ரசித்தவர்களுக்கு, வெங்கடேஷை பார்க்க கொஞ்சம் பாவமாகதானிருக்கிறது. வேட்டையனைப் பார்த்துவிட்டு வெங்கடேஷைப் பார்க்க கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது.

அம்புலிமாமா கதைதான் என்பதால் லாஜிக் ஓட்டைகளை மன்னித்து விட்டுவிடலாம். இருந்தாலும் சில ஓட்டைகள் ஓஸோன் ஓட்டை மாதிரி அடைக்கவே முடியாத லெவலுக்கு ரொம்ப பெருசு. சாமியார் வரும் காட்சிகளையும், பேசும் வசனங்களையும் கண்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு பி.பி. எகிறி, அப்போலாவில் போய் அட்மிட் ஆகவேண்டியதுதான்.

அருந்ததியில் அட்டகாசப்படுத்தியதால் 'சந்திரமுகி' கேரக்டர் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது அழகான அம்சமான சுழி கொண்ட வெண்ணிலவின் நிறம் கொண்ட பளீர் தொப்புளைத் தவிர்த்து வேறெதுவும் கவரும் அம்சம் இல்லை. அவரது காதலராக வரும் குணசேகரனை எங்கே போய் தேடிப் பிடித்தார்களோ தெரியவில்லை. செம த்ராபை.

க்ளைமேக்ஸுக்கு முந்திய அரைமணிநேரப் படம் திடுக் திருப்பங்களால் அசுரவேகம். இந்திரா சவுந்தர்ராஜன் கதை மாதிரி சற்றும் எதிர்பாராத 'கேரக்டர்' ஒன்று திடுமென்று உள்நுழைந்து படம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறது. அதே பழைய சந்திரமுகி டெக்னிக்தான் என்றாலும், இதற்காகவே இலக்கில்லாமல் முதல் பாதியை ஓட்டிய பி.வாசுவை மன்னித்துவிடலாம்.

ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பழைய சந்திரமுகியின் சாதனையை சர்வசாதாரணமாக முறியடித்திருக்கலாம். இருந்தாலும் ஓக்கே. நாகவல்லி நாராசமான படமல்ல. இரண்டரை மணி நேரம் களைப்படையாமல் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.

நாகவல்லி - சந்திரமுகி ரிப்பீட்டேய்!

18 டிசம்பர், 2010

சாரு நிவேதிதாவின் தேகம்!


சினிமாவில் எந்திரனுக்கு என்ன 'ஹைப்' இருந்ததோ, அதே அளவில் சாருவின் 'தேகம்' நாவலுக்கும் இலக்கிய வட்டத்தில் 'ஹைப்' நிச்சயமாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் சாரு எழுதிய முதல் நாவல் இதுவென்று தோன்றுகிறது. முப்பது வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் சாரு இதுவரை நான்கு நாவல்கள்தான் எழுதியிருந்தார். தேகம் ஐந்தாவது. ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட நாவல். இந்த அவசரம் கதையின் போக்கில் நன்றாகவே வெளிப்படுகிறது.

நிச்சயமாக இது முழுக்க 'வதை'யைப் பற்றிய நாவல்தான். நாவலின் தொடக்கம் உடல் வதை குறித்ததாக இருக்கிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலமாக 'மனவதை' குறித்த சித்தரிப்புகளுக்கு மாறிவிடுகிறது. வதையும், அதன் விளைவான வாதையும் நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் முன்னுக்குப் பின்னாக நான்லீனியராக சொல்லப்படுகிறது. வழக்கமான சாருவின் 'கொண்டாட்டம்' இதிலும் உண்டு. ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி அல்லது பட்டர்ஃப்ளை விளைவு அல்லது ஏதோ ஒரு கருமம்.

புரொபஷனல் கில்லர் மாதிரி, நாயகன் தர்மா புரொபஷனல் டார்ச்சர். 'நாய்' பாஸ்கருக்காக வேலை பார்க்கிறான். இந்த வேலையை தர்மா ஏன் விரும்பி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் உன்னிப்போடு முழுவீச்சில் செய்கிறான்? பிளாஷ்பேக். சமூகத்தால் 'டார்ச்சர்' செய்யப்பட்டவன் தர்மா. டிரான்ஸ்ஜெண்டராக, ஜிகிலோவாக, ஜேப்படித்திருடனாக, அடியாளாக, எழுத்தாளனாக.. எப்படி எப்படியோ வதைப்பட்டிருக்கிறான். மற்றவர்களை வதைத்திருக்கிறான். எக்சிஸ்டென்ஷியலிஸமும், ஃபேன்ஸி பனியனும் சூர்யாதான் தேகத்தின் தர்மா. பாத்திரம் மட்டுமல்ல. பல சித்தரிப்புகளும் கூட (குறிப்பாக மலம் அள்ளும் பிளாஷ்பேக்) ஏற்கனவே சாருவின் படைப்புகளில் பலமுறை வாசித்ததுதான். எனவே ஒரு புதிய நாவலை வாசிக்கும் அனுபவம் கைகூடவில்லை.

சாரு சித்தரித்திருக்கும் பிரான்ஸ் செலின் பாத்திரம் ஓர் அற்புதம். செலின் - தர்மா தொடர்புடைய அத்தியாயங்களில் என்ன வதை இருக்கமுடியும், கவிதையான ரொமான்ஸ்தானே பிரதானமாக இருக்கிறது என்று முதல் வாசிப்பில் தோன்றியது. குறிப்பிட்ட அந்த சில அத்தியாயங்களை மீள்வாசித்ததில் செலின், தர்மாவை செய்யும் ரிமோட் டார்ச்சர் பளிச்சிடுகிறது. தன்னை ஆண் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய வதையாக என்ன இருக்க முடியும்? பாலியல்ரீதியாக ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாததுதான். செலின் அந்த வதையை தர்மாவுக்கு செய்கிறாள். அவளது உடல் தர்மாவுக்கு 'எழுச்சி'யை ஏற்படுத்துவதில்லை. வேறு வகை பாலியல் உத்திகளால் அவளை திருப்திபடுத்த நினைக்கிறான் தர்மா. அதற்கு செலின் ஒப்புக்கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியால் குன்றிப்போகும் தர்மாவின் வாழ்வில் இருந்து திடீரென்று காணாமல் போகிறாள் செலின்.

முதல் நூறு பக்கங்கள் நிச்சயமாக சுவாரஸ்யம். அடுத்த 80 பக்கங்கள்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்கள், நண்பிகள். நண்பிகளின் நண்பர்கள். மது, மாது, மங்கை, மயக்கம், இத்யாதி, இத்யாதி.

செலினால் தனக்கு கிடைத்த வதைகளை நேஹாவுக்கு தருகிறான் தர்மா. நேஹா தர்மாவுக்கு எழுதும் காம-காதல் ரசம் சொட்டும் ஈ-மெயில்கள் அச்சு அசல் காமரூபக் கதைகள். தர்மாவின் 'புறக்கணிப்பு' என்ற வதையால், மனம் பிறழ்கிறாள் நேஹா. அந்த அத்தியாயம்தான் நாவலின் ஹைலைட். கத்தியின்றி, ரத்தமின்றி உச்சபட்ச வாதையை தரும் வதை. சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.

காமரூபக் கதைகள் தவிர்த்து, சாருவின் வேறு எந்த நாவலையும் விட சிறப்பாக 'தேகம்' வந்துவிடவில்லை. அதே நேரத்தில் ராஸலீலாவுக்குப் பிறகு கொஞ்சம் சவசவ என்று (சில சிறுகதைகள் தவிர்த்து) புனைவு எழுதிக்கொண்டிருந்த சாரு மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர 'தேகம்' உதவியிருக்கிறது. இந்த ஃபார்ம் அடுத்து அவர் எழுதவிருக்கும் நாவல்களை மாஸ்டர்பீஸ்களாக மாற்ற உதவும். அவரது பழைய சாதனைகளை அவரே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்பதுதான், அவரது வாசகர்களின் விருப்பம்.

ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளே அரங்கில் 65,000/- ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக கேள்விப்பட்டேன். நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் 'தேகம்' நிச்சயமாக அவரது மற்ற நூல்களை விட அதிகம் விற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற நூல்களை விட எந்த விதத்திலும் 'தேகம்' சிறந்ததில்லை.

நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை

17 டிசம்பர், 2010

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!


ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)