6 செப்டம்பர், 2016

இரண்டு படங்கள்!

ரொம்பநாள் கழித்து ஒரே நாளில் வெளியான இரண்டு படங்கள் நன்றாக இருந்தது என்பதே தமிழ் சினிமா தட்டுத் தடுமாறி தேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி (‘தகடு’ பார்க்கவில்லை. அது நன்றாக இருக்குமென்றும் தோன்றவில்லை). ‘கிடாரி’, ‘குற்றமே தண்டனை’ இரண்டுமே வழக்கமான பாதையில் திரைக்கதை ஓட்டும் பாதுகாப்பான பயணமில்லை என்பதால், ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள் பிரசாத் முருகேசன், எம்.மணிகண்டன் இருவருக்குமே சில காலமாய் யாருக்கும் தராமல் ஞாநி தன் கையிலேயே வைத்திருக்கும் பூங்கொத்துகளை வாங்கி பரிசளிக்கலாம்.
---
‘காட்ஃபாதர்’, ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ போன்ற படங்களின் கதையை சாத்தூரில் கற்பனை செய்துப் பார்த்திருக்கிறார்கள். துக்கடா கேரக்டராக வரும் மு.ராமசாமிதான் படத்தின் கதை சொல்லும் பாத்திரம். ‘இன்று - அன்று’ கணக்காக (இதை ‘நான்லீனியர்’ என்றெல்லாம் இங்கிலீஷில் சொல்லி கோட்பாட்டாளர்கள் குழப்புவார்கள்) சுவாரஸ்யமான திரைக்கதை. ‘அன்று’ சசிக்குமாருக்கும், நிகிலாவுக்கும் நடந்த செம பிரைவஸியான சூடான ‘லிப்லாக்’ சமாச்சாரமெல்லாம் கதைசொல்லியான மு.ராமசாமிக்கு எப்படி தெரியும் என்றெல்லாம் லாஜிக்கலாக கேள்வி கேட்டால் நீங்கள்தான் அடுத்த சூனாகானா.

கராத்தே செல்வின், காட்டான் சுப்பிரமணியம் போன்ற பெயர்களை எல்லாம் நீங்கள் வாழ்நாளில் கேட்டதே இல்லை என்றால் லூஸில் விட்டு விடுங்கள். ‘கிடாரி’ உங்களுக்கு படுமொக்கையாக படலாம். ஒருவகையில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரும் கூட. மதியம் லஞ்சுக்கு தயிர்சாதமும், வடுமாங்காயும் சாப்பிடும்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ‘ததாஸ்து’ சொல்லி உங்களை வாழ்த்துவார்கள்.

உங்களுடைய கேரக்டரை நிர்ணயிப்பது பிறப்பா, வளர்ப்பா என்கிற அலசலை செய்கிறது ‘கிடாரி’. பலி கொடுக்கப்பட வேண்டுமென்றே வளர்க்கப்படும் ஆடுதான் சசிக்குமார். ஆனால், ட்விஸ்ட்டாக வம்சம் தழைக்கவென்றே வளர்க்கப்படும் வசுமித்ர வெட்டப்படுகிறார். கசாப்புக் கடைக்காரரான வேல.ராமமூர்த்தியின் கதி என்னவாகிறது என்பதுதான் கிளைமேக்ஸ்.

கதை எண்பதுகளின் இறுதியில் நடக்கிறது. இதை நேரடியாக சொல்லாமல் குடும்பமே ‘வருஷம் 16’ பார்ப்பது, காட்சியின் பின்னணியில் ‘கார்த்திக் ரசிகர் மன்றம்’ காட்டுவது மாதிரி, ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் இயக்குநர். நாடார்களுக்கு காய்கறி மண்டி, தேவர்களுக்கு ஆட்டுதொட்டி என்று சமூகக் குணங்களை மிக துல்லியமாக வரையறுத்ததிலும் சபாஷ் பெறுகிறார்.

தமிழ் திரைப்படங்கள் என்பது ஹாலிவுட்டின் தழுவலாகவோ, இந்திய இதிகாச மரபின் தொடர்ச்சியாகவோதான் இருந்தாக வேண்டும் என்கிற விதியை பாரதிராஜாவில் தொடங்கி, பாலாஜி சக்திவேலில் தொடர்ந்து நேற்றைய சீனுராமசாமி வரை தங்கள் படைப்புகளின் வாயிலாக அடுத்தடுத்து மறுத்து வருகிறார்கள். இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பிரசாத் முருகேசன்.

---
ஹீரோயினே இல்லாமல் படம் என்பதெல்லாம் தயாரிப்பாளர் தமிழில் எடுக்கக்கூடிய மிகப்பெரிய ரிஸ்க். ஹீரோவுக்கு இறுதியில் ஜோடி ஆகிறவர், ஒரு துணை பாத்திரமாகதான் வந்து போகிறார். ஒரு குற்றம் நடக்கிறது. அதற்கு சாட்சியான ஹீரோ தன்னுடைய கையறுநிலைக்கு அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற ஒன்லைனர் இந்தப் படத்தை தமிழ் சினிமா கலாச்சாரத்தில் இருந்து முழுக்க வேறுபடுத்துகிறது. ஆனால், இறுதிக் காட்சிகளில் அந்த குற்றத்தோடு ஹீரோவையும் சம்பந்தப்படுத்தி ஒட்டுமொத்தமாக அதுவரை கொடுத்துக் கொண்டிருந்த காட்சியனுபவங்களை நாசமாக்கி விட்டார் மணிகண்டன்.

கோர்ட் காட்சி முடிந்ததுமே, பொய்சாட்சி சொல்லுவதற்காக தான் வாங்கிய ஒரு லட்ச ரூபாயை சோமசுந்தரத்திடம் வேகமாக விதார்த் திருப்பிக் கொடுத்துவிடும் காட்சியிலேயே படம் முடிந்துவிட்டது. கொல்கத்தா வரை படத்தை இழுத்துப் போனது எல்லாம் தேவையற்ற பிற்சேர்க்கை. மிகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய ‘குற்றமே தண்டனை’, இதனால் ‘சிறந்த’ கேட்டகிரியை மட்டுமே எட்டுகிறது.

விதார்த், படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேன்சர் ஒரு தீர்க்க முடியாத வியாதி என்பது தெரியும். அடுத்ததாக எய்ட்ஸ், ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மாதிரி விதவிதமான நோய்களை அறிந்திருக்கிறார்கள். நமக்கு முன்னுதாரணமே இல்லாத 'tunnel vision’ என்கிற பார்வைக் குறைபாடு நோயை அறிமுகப்படுத்தி, நமக்கே tunnel vision வந்துவிட்டதோ என்கிற பிரமையை விதார்த், உருவாக்கியிருப்பது நடிப்பில் ஒரு சாதனை.

விதார்த்தின் அந்த tunnel vision பாய்ண்ட் ஆஃப் வியூ காட்சிகளில் ஏதேனும் ஒன்றையாவது இயக்குநரோ, எடிட்டரோ கோட்டை விட்டுவிடுவார்கள், ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு லைக்கு அள்ளலாம் என்று பைனாகுலர் வைத்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. Well done!

இந்தப் படத்திலும்கூட இளையராஜாவின் இசையை குறை சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல ENT டாக்டர் அமையவேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்.

16 ஆகஸ்ட், 2016

23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!

ஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...
“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம் கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.

அப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.

நாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

கும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.

பள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே?
“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.

அமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.

ஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.

1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.

“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.

‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”

“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா?”

“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம் வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.

திடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி! கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.

அவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”
“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா?”

“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.

நாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.

தஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”

“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா?”

“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.

மருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.

அப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசியோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”
“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா?”

“அதெப்படி தணியும்? எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன்? தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.

உங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”
“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே?”

“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”

“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்?”

“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே? பொன்னியின் செல்வி!”

படங்கள் : பி.பரணிதரன்

(நன்றி : தினகரன் வசந்தம்)

1 ஜூலை, 2016

ஏக் தோசை ஹை!

எஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்பில் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ பார்த்தபிறகு, கிட்டத்தட்ட அவரது அனைத்து நாடகங்களையும் சென்னை அரங்குகளில் நேரிலேயே கண்டிருக்கிறேன். பிற்பாடு ஆடியோ கேசட்டுகளாக அவை வந்தபோது அத்தனையையும் வாங்கினேன். ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் அவரது நூல்கள் எல்லாமே என்னிடம் உண்டு. எஸ்.வி.சேகர் நடித்த சினிமாப்படங்களையும் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே பார்த்திருக்கிறேன். ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிம்லா ஸ்பெஷல்’ படங்களில் அழுத்தமான நடிப்பில் கலக்கியிருப்பார். இராம.நாராயணன் படங்களில் எஸ்.வி.சேகர் நடித்த காலம் தமிழ் சினிமா காமெடியின் பொற்காலம். எந்தளவுக்கு எஸ்.வி.சேகரை பிடிக்குமென்றால், அவரது மகன் நடித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக ‘வேகம்’ என்கிற ரொம்ப சுமாரான படத்தைகூட முதல் நாளே தியேட்டருக்கு போய் பார்த்தேன்.

நிற்க.

நியூஸ்7 தொலைக்காட்சிக்காக சுவாதி கொலைகுறித்து அவர் கொடுத்த ஆவேசமான நேர்காணலினை யூட்யூப்பில் காண நேர்ந்தது. இந்த படுசோகமான சூழலிலும் அவருக்கு காமெடி மட்டும்தான் வருகிறது என்பது கொடுமை. சுவாதி கொலைக்கும், இந்திக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால், இந்தி தெரியாததால் சரவணபவனில் தோசைகூட வாங்க முடியவில்லை என்று உளறிக் கொட்டியிருக்கிறார். சுவாதி கொல்லப்பட்டதற்கே கூட காரணம், அவருக்கு இந்தி தெரியாததுதான் என்று சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடே அந்த நேர்காணலை முழுமையாக பார்த்தேன். இன்னும் அந்தளவுக்கு எஸ்.வி.சேகரின் நகைச்சுவை முதிர்ச்சி அடைந்துவிடவில்லை.

எழுபதுகளின் இறுதியில் பிறந்தேன். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இந்தித் திணிப்பின் கொடுமையை நேரடியாக அனுபவம் பெறக்கூடிய வாய்ப்பு பள்ளிப் பருவத்தில் அமையவில்லை. எண்பதுகளின் இறுதியில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஓர் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது ஹைஸ்கூல் அண்ணன்கள் எங்கள் பள்ளிக்கு வந்து, “எல்லாரும் வீட்டுக்குப் போங்கடா...” என்று துரத்தியடித்து மறைமுகமாக எங்கள் அனைவரையும் அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அதைத்தவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பில் எனக்கு வேறெந்த பங்குமில்லை. ‘தம்பி எழடா, எடடா வாளை’ என்று கலைஞர் அழைத்தபோதுகூட வாளை எடுத்துக் கொண்டு, இந்தி அரக்கியை வெட்ட கிளம்பியதுமில்லை. ஏனெனில், என்னிடம் வாளுமில்லை.

என்ன, தூர்தர்ஷன்தான் ஆரம்பத்தில் இந்தி நிகழ்ச்சிகளாக போட்டு தாலியறுத்தது. அதையும்கூட கொஞ்சநாளில் குன்ஸாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு பழகிக் கொண்டேன்.

ஏழு கழுதை வயதான நிலையில் இந்தி கற்க நான் டியூஷனுக்கு கூடச் சென்றேன். கூட படித்த சக மாணவர்கள் ஒண்ணாவது, ரெண்டாவது படிக்கிற வயதில் இருந்தார்கள். அவர்கள் எதிரில் டீச்சரிடம் ஹோம்வொர்க் செய்யவில்லை என்று திட்டு வாங்குவதில் ஏற்பட்ட சங்கடத்தால்தான் ‘ஏக், தோ, தீன்’ கற்றுக் கொள்வதை ஆரம்பத்திலேயே விடவேண்டி இருந்தது. என் மனைவியின் விருப்பப்படி என் குழந்தைகள் இப்போது ஆர்வமாக தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியும் பயில்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு சமஸ்கிருதமோ, பிரெஞ்சு மொழியோ கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டால் அதற்கு தடையேதும் போடப்போவதில்லை.

இந்தி என்கிற மொழி மீது எனக்கோ, தமிழ்நாட்டில் வேறு யாருக்குமோ வெறுப்பு என்பது இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். தமிழகத்தில் இப்போது விருப்பப்பட்டவர்கள் இந்திப்படம் பார்க்கிறோம். இந்திப் பாடல்களை கேட்கிறோம். 'ஜவானி கி’ ரக படங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் என்ன ஓட்டம் ஓடியது என்று மறக்க முடியுமா. ஒரு மொழி மீது விரோதம் கொள்ளுமளவுக்கு தமிழனுக்கு மூளை பிசகிவிடவில்லை. “எந்த மொழி கற்றால் நீ பிழைக்க முடியுமோ, அந்த மொழியை கற்றுக்கொள்” என்றுதான் முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்கிய தந்தை பெரியாரேகூட சொல்லியிருக்கிறார்.

பிரச்சினை, திணிப்புதான். எனக்கு எஸ்.வி.சேகர் நடித்த ‘சகாதேவன் மகாதேவன்’, ‘தங்கமான புருஷன்’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘எங்க வீட்டு ராமாயணம்’ படங்களை பார்க்கதான் விருப்பமாக இருக்கிறது. இதற்கு மாறாக பவர்ஸ்டாரின் ‘லத்திகா’, ஜே.கே.ரித்தீஷின் ‘நாயகன்’ மாதிரி படங்களைதான் நான் பார்த்தே ஆக வேண்டும் என்று அரசு ஆணை போட்டு வற்புறுத்தினால் கடுப்பாகவே செய்வேன்.

இந்தி தெரியாததால் என் வாழ்க்கையே போயிற்று என்று ஒருவன் சொன்னால் அது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப்பொய். அந்த சோம்பேறி கற்றுக்கொள்ளவில்லை என்பது அவனுடைய பிரச்சினை. தமிழகத்தில் இந்தி கற்க எப்போதும் தடை இருந்ததில்லை. விருப்பப்பட்டவர்கள் கற்கலாம் என்றுதான் திராவிட இயக்கமும் சொல்கிறது. இந்தி கற்கக்கூடாது என்று யாரும் யார் கையையும் பிடித்து இழுத்ததில்லை. இந்தி கற்பிக்கிறார்களே என்று பண்டிதர்களின் குடுமியை அறுத்ததுமில்லை.

ஒருவனுடைய சிந்தனை அவனுடைய தாய்மொழியில்தான் அமைகிறது. நான் தமிழில்தான் சிந்திக்கிறேன் என்பதால், தமிழ் கற்பது அடிப்படையாகிறது. என் பிழைப்புக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் அதையும் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறேன். உலகம் முழுக்க பணி செய்து சம்பாதிக்கவோ, மேற்படிப்புகள் படிக்கவோ உலகமொழியான ஆங்கிலம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆங்கிலத்தையே பத்தாம் வகுப்பு தேர்வில் தட்டுத் தடுமாறிதான் பார்டரில்தான் பாஸ் செய்து வந்திருக்கிறோம். இந்த லட்சணத்தில் மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயமாக திணித்தால் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் பணி செய்ய செல்பவர்களுக்கு இந்தி பேசவும், எழுதவும் தெரியவேண்டியது அவசியம்தான். அம்மாதிரி இங்கிருந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர் மிகக்குறுகிய காலத்திலேயே சரளமாகப் பேசுகிறார்கள். எழுதவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்தி மட்டுமல்ல. சீனாவுக்கு போய் பணி செய்யக்கூடியவர்கள் மண்டாரின் கற்றுக் கொள்வதும், வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் அரபி பேசுவதும் இயல்பாகவேதான் நடந்துக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் போய் பார்த்தால் கடலை / மோர் விற்பனை செய்பவர்கள் கூட சுற்றுலாப் பயணிகளிடம் பேசிப்பேசி இந்தி, ஆங்கிலத்தில் விளாசுவதை காணலாம்.

ஒரு வாரம் டெல்லியில் இருந்தபோது இந்தியில் நானும் சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு சமாளித்தேன். ஆறு மாதம் இருந்திருந்தால் ஐஸ்வர்யாராயையே கரெக்ட் செய்திருப்பேன். மொழி தெரியாததால் சொல்லிக் கொள்ளும்படி எந்தப் பிரச்சினையுமில்லை. இன்னும் சொல்லப் போனால், எனக்கு புரியவைக்க வேண்டுமே என்றுதான் அங்கிருந்த இந்திக்காரர்கள் ரொம்ப மெனக்கெட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க சரவணபவனில் தோசைகூட வாங்கி சாப்பிடமுடியவில்லை என்று எஸ்.வி.சேகர் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. 1930களின் இறுதியில் ராஜாஜி, இங்கே இந்தியை திணிக்க முயற்சித்ததற்கு காரணமே, பார்ப்பனர்களோடு தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு அரசுத்துறைகளுக்கு வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தால்தான். திராவிட இயக்க எழுச்சி காரணமாக பிற்படுத்தப்பட்டவர்களும் / தாழ்த்தப்பட்டவர்களும் பள்ளி, கல்லூரி என்று படிக்க ஆரம்பித்து அரசுவேலைகளில் பங்கு கேட்டு நிற்பதற்கு முட்டுக்கட்டை போடவே இந்தியை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். தமிழர்கள் ஒன்றுசேர்ந்து அந்த முயற்சியை முறியடித்தார்கள்.

சுதந்திரத்துக்கு பிறகு இங்கே இந்தியைத் திணிப்பது என்பது வடக்கத்தியர்களுக்கு கவுரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அரசுவேலை என்கிற மசால்வடையை காட்டி தமிழனை இந்திமயமாக்க நினைத்தார்கள். அறுபதுகளில் நடந்த இரண்டாம் கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டு நேருவின் மும்மொழி திட்டம் படுதோல்வி அடைந்தது.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இந்தி கற்றுக் கொள்ளாததால் எங்களுக்கு அரசுவேலை கிடைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், இந்திக்காரர்களே இப்போது வேலைக்கு தமிழகம் நாடிதான் வந்துக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது, சரவணபவனில் தோசைகூட கிடைக்கவில்லையென்றெல்லாம் தினுசு தினுசாக முகாரி பாடுகிறார்கள்.

அவர்களது நோக்கம் இந்தியை பரப்புவது அல்ல. அதைத் திணித்து தமிழனின் பிழைப்பில் மண்ணைப் போடுவதே. எப்போதும் பிழைப்புவாதமே அவர்களது குறிக்கோள். பூணூலை அறுத்துப் போட்டால்தான் அமெரிக்காவில் க்ரீன்கார்டு என்று அறிவித்தால், அதை ஆச்சாரிகள் எதிர்ப்பார்கள். இந்த ஆச்சாரியார்களோ அறுத்துப் போட்டுவிட்டு மவுண்ட்ரோடு தூதரகம் வாசலில் வரிசையில் நிற்பார்கள். இந்த உண்மையை தமிழன் புரிந்துக் கொள்ளாததால்தான் அவர்களுக்கு அடிவருடியாக மாறி, ‘இந்தி கற்காததால் ஒரு தலைமுறையே கெட்டது’ என்று ஆதாரமில்லாமல் குடிகாரன் மாதிரி எஸ்.வி.சேகர்களின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான்.

30 ஜூன், 2016

விஜயமகேந்திரன் படைப்புகள்

விஜயமகேந்திரனை எனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து தெரியும். அந்த நூல் மிகச்சிறப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது என்று அவரிடம் பாராட்டுதல்களை தெரிவித்தேன். அதற்கு பிறகு அவர் எந்த நூலையும் இதுவரை ஏன் அச்சிடவில்லை என்பது தெரியவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது அந்நூலை அச்சிட்டவர்கள் உயிர்மை பதிப்பகத்தார் என்று. உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர்தான். அவரை தேடிச்சென்று இதற்காக பாராட்டினேன். இந்த பாராட்டுதல்கள் எனக்குரியவை அல்ல. அந்நூலை அச்சிட்ட மணி ஆப்செட்டாருக்கு போய் சேரவேண்டும் என்று பெருந்தன்மையாக அவர் ஒதுங்கிக் கொண்டார். இந்த பெருந்தன்மை ஏற்படுத்தும் முரண்தான் இலக்கியப் புனைவின் சுவாரஸ்யமே. அதனால்தான் நாமெல்லாம் இலக்கியத்தில் இருந்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது. மணி ஆப்செட்டாரின் முகவரி என்னிடம் இல்லாததால் அவர்களுக்கான என் பாராட்டுதல்களை ஏழு வருடமாக அப்படியே காத்து வருகிறேன்.

ஒருமுறை சென்னை அசோக்பில்லர் வழியாக நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு டீக்கடை இருந்தது. டீக்கடை வாசலில் விஜயமகேந்திரனும் இருந்தார். “டீ சாப்பிடலாமா?” என்று அவர் கேட்டார். “சாப்பிடலாமே” என்று நான் சொன்னேன். இருவரும் சாப்பிட்டோம். எனக்கு சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக வேண்டும். அவரோ கொஞ்சம் சர்க்கரை குறைவாக போட்டு குடித்தார். அப்போது ஒரு டீயின் விலை நான்கு ரூபாய்தான். விஜயமகேந்திரன் டீக்கடைக்காரருக்கு பத்து ரூபாய் தந்தார். நான் மீதம் இரண்டு ரூபாயை கொடுத்தேன். டீக்கடைக்காரரோ அதை மறுத்து, நான்தான் உங்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக எங்கள் இலக்கிய நட்பு ஆழமாக வளர்ந்தது.

2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிற்றேடுகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எழுதிவரும் விஜயமகேந்திரனுக்கு இலக்கியத்தில் இது பத்தாம் ஆண்டு. ஆனால் அவரை 1978லிருந்தே சிற்றேடு வட்டாரம் அறியும். ஏனெனில் அவர் அப்போதுதான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பே புதுமைப்பித்தன் மறைந்துவிட்டார்.

எனினும் புதுமைப்பித்தனின் வரிசையில்தான் விஜயமகேந்திரனையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. இருவரும் சிறுகதை மரபின் வேர்கள் என்கிற அடிப்படையில் இந்த ஒப்பீட்டை நான் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் இதை ஒப்புக் கொள்ளலாம். பலர் இதை மறுக்கலாம். ஆனால், உண்மை என்பது உண்மைதான்.

விஜயமகேந்திரனின் படைப்புகள் பெரும்பாலும் பெண் புனைவை அடிப்படையாக கொண்டவை. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண் புனைவும் உண்டு. பேய் புனைவும் உண்டு. அவ்வகையில் பார்க்கப் போனால் நகுலனின் சுசிலாவே விஜயமகேந்திரனின் பாத்திரவார்ப்புகளுக்கு முன்னோடி என்பது பூடகமாக அவரது ‘நகரத்திற்கு வெளியே’ தொகுப்பில் தொக்கி நிற்கிறது.

நகுலனுக்கும், விஜயமகேந்திரனுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் திருவனந்தபுரத்தில் வசித்தார். இவர் சென்னையில் வசிக்கிறார். இருவரையும் ஒப்பிட வேண்டுமானால், இருவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள் என்கிற அம்சத்தைதான் குறிப்பிட வேண்டும்.

அசோகமித்திரனின் தாக்கம் விஜயமகேந்திரனுக்கு உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனை நான் பிறந்தபோதே அறிவேன். ஏனெனில் நான் பிறந்தபோதே அசோகமித்திரனுக்கு என்னுடைய தாத்தா வயது ஆகியிருந்தது. அவர் அப்போது கணையாழியில் நிறைய எழுதிக் கொண்டு இருந்தார்.

அசோகமித்திரனின் மிகப்பெரிய பிரச்சினையே அவர் அறுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். சுமார் முன்னூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த கதைகளின் தலைப்பை மட்டுமாவது மனப்பாடம் செய்துக் கொண்டு கூட்டங்களில் பேசுவதற்குள்ளாகவே விஜயமகேந்திரன் யாரென்பதே மறந்துவிடும்.

மாறாக மெளனியும், மாமல்லனும் நம்முடைய ஆட்கள். இவர்களை குறிப்பிட்டு கூட்டங்களில் பேசுவதோ, சிற்றேடுகளில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதோ சுலபம். இருவருமே தலா முப்பது கதைகள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு துண்டுச் சீட்டில் எல்லாக் கதைகளின் தலைப்பையும் எழுதி கையில் மறைத்து வைத்துக் கொண்டோமானால், கூட்டங்களில் பேசும்போது அப்படியே பார்த்து கதைகளின் தலைப்பை ஒப்பித்து கைத்தட்டல்களை அள்ளிவிடலாம்.

மெளனியின் கதை புரியாது என்பதே மெளனியின் பிரச்சினை. மெளனியே அதை வாசித்துப் பார்த்தாலும் அவருக்கே புரியாது என்றுதான் கருதுகிறேன். மாறாக மாமல்லனின் கதைகள் எளிதில் புரிந்துவிடுகிறது என்பதே மாமல்லனின் பிரச்சினை. மெளனியோ மாமல்லனோ என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறார்கள் என்பதே இலக்கிய உலகத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயமகேந்திரனையும் நாம் இதே மரபில் கொண்டு நிறுத்தலாம். ஆனால், அவர் கவிதையும் எழுதியிருக்கிறார். மெளனியோ மாமல்லனோ கவிதை புனைந்ததாக எனக்கு நினைவில்லை. அப்படி எழுதியிருப்பார்களேயானால் அதை நான் வாசிக்கவில்லை. வாசித்த வாசகர்கள் என்ன ஆனார்களோ என்றும் தெரியவில்லை.

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். அவர் முறைத்தார். நான் பதிலுக்கு முறைக்கவில்லை. ஏனெனில் இதுதான் இலக்கிய பண்பாடு. இப்படிதான் ந.பிச்சமூர்த்தியும், க.நா.சு.வும், சிலம்பொலி செல்லப்பாவோ எழுத்து செல்லப்பாவோ யாரோ ஒருவரும் இருந்தார்கள். நாம் மட்டும் ஏன் வேறுமாதிரி இருக்க வேண்டும்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் மரபில் வந்தவர் விஜயமகேந்திரன் என்பதை நிறுவுவதற்காக நான் இந்தப் பெயர்களை இங்கே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கொடியும், வானம்பாடியும் இருவேறு துருவங்கள். உயிர்மையும், காலச்சுவடும் கூட அதே மாதிரிதான். விஜயமகேந்திரன் உயிர்மையில் எழுதினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

பிரமிளை எனக்கு நேரடியாக தெரியாது. அவரை எனக்கு தெரியாது என்கிற செய்தி அவருக்கு தெரிவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார். ஒருவேளை தெரிந்திருந்தால் ஆத்மாநாம் அகாலமரணம் அடைந்திருக்க மாட்டார். ஆத்மாநாம் அம்பத்தூரில் வசித்த கவிஞர். ‘ழ’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. ஆனால், இங்கே எதையாவது குறிப்பிட நினைத்தால் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இதுவும் இலக்கியம் ஏற்படுத்தும் சுவாரஸ்யமான புதிர்தான். என் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆத்மாநாமை பிடிக்கும். சுந்தரும் அம்பத்தூரில்தான் வசிக்கிறார் என்பதால் இருக்கும்.

வைத்தீஸ்வரனின் கவிதைகளில் கதைத்தன்மை இருக்கும். விஜயமகேந்திரனின் கதைகளில் கவிதைத்தன்மை இருக்கும். இந்த பொதுவான புள்ளியே இருவரும் இணைக்கும் நேர்க்கோடாக அமைகிறது.

ஞானக்கூத்தனின் கவிதைகளை ‘யாத்ரா’வில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் யாத்ராவில் எழுதியிருக்கிராறா என்று தெரியவில்லை. அவரது கவிதைகள் higher standard என்பார்கள். அவர் ஐயரா, ஐயங்காரா என்று தெரியாமல் எப்படி ஐயர் ஸ்டேண்டர்டில் அவர் கவிதைகளை reposition செய்ய முடியும் என்கிற கேள்வி எனக்கு தொக்கி நிற்கிறது. எனினும் அவரது கவிதைகளில் நுணுக்கமும், நுட்பமும் பூடகமாக செயல்படும் என்பதே வாசகர்களுக்கு முக்கியமானது. நுணுக்கத்துக்கும், நுட்பத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியாது. இரண்டுமே சிற்றேடுகளில் அதிகம் பிரயோகிக்கப்படும் சொற்கள் என்பதால் நூதன சிருஷ்டியாக இதை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது.

இந்த நுட்பமும், நுணுக்கமும் நகுலனுக்கு அலாதி. அவர் இறந்துவிட்டார். இருந்திருந்தால் இப்படியொரு கவிதை எழுதியிருப்பார்.

விஜயமகேந்திரன்

--

வி




கே

ந்

தி


ன்

--

ன்


தி

ந்

கே




வி

--

இது நானாக நகுலன் எப்படி எழுதியிருப்பார் என்று கருதி புனைந்த கவிதை. பிரமிள் உயிரோடு இருந்திருந்தால் இது கவிதையா என்று கேட்டு என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பார். இது ஏன் கவிதையில்லை என்று பதிலுக்கு நான் கேட்டிருப்பேன். வெங்கட்சாமிநாதன் என்னை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பார். அவரை டெல்லியிலேயே நான் அறிவேன். பிற்பாடு மடிப்பாக்கத்தில் வசித்தார். கடைசிக்காலத்தில் பெங்களூரில் இருந்தார். நல்ல மனிதர். சிறந்த விமர்சகர். இறந்துவிட்டார்.

விஜயமகேந்திரன் இப்போது ‘ஊடுருவல்’ என்றொரு நாவலை ஏழு ஆண்டுகளாக எழுதிவருகிறார். அது வாசகர்களை எப்போது ஊடுருவும் என்பதை விஜயமகேந்திரனும் அறிய மாட்டார். நானும் அறியமாட்டேன். பிரமிளோ, நகுலனோ, ஆத்மாநாமோ, ந.பிச்சமூர்த்தியோ, புதுமைப்பித்தனோ, சுந்தரராமசாமியோ, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்த அறியாத்தன்மை இலக்கிய உணர்வின் இன்னொரு வெளிப்பாடு.

ஒட்டுமொத்தமாக விஜயமகேந்திரனின் இலக்கிய வாழ்வையும், படைப்புகளையும் ஒருவரியில் எப்படி சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவரியில் அவரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால், ‘விஜயமகேந்திரன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

9 ஜூன், 2016

சுந்தர ராமசாமியை அறிய...


மறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.

இந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.

என் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலுக்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)

சுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.

சாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.

ஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.

மிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.

நீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் காட்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.

‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.
நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி
எழுதியவர் : அரவிந்தன்
பக்கங்கள் : 128
விலை : ரூ.50
வெளியீடு : சாகித்திய அகாடமி,
குணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),
எண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018. போன் : 044-24311741