5 ஜூலை, 2010

தமிழருக்காக துடித்த இதயம்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு காலணா கொடுப்பார். காலணா என்பது 80 வருடங்களுக்கு முன்பாக கொஞ்சம் பெரிய தொகைதான். நான்காவது படிக்கும் அரங்கநாதனின் லட்சியம் தினம் ஒரு காலணாவை சேதுப்பிள்ளையிடம் பெறுவதாக இருந்தது.


இவ்வாறாக விளையாட்டாக குறளை வாசிக்க ஆரம்பித்த அச்சிறுப்பிள்ளை, பிற்காலத்தில் தனது வாழ்க்கையையே குறள் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்டு நாடெங்கும் பிரபலமானார். குன்றக்குடி அடிகளார் என்று சொன்னால் இன்று குழந்தைகளுக்கு கூடத்தெரியும்.


ஐம்பதுகளில் குன்றக்குடி மடத்தின் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட காலக்கட்டம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க காலக்கட்டம். இந்து சமயம் மீதான தாக்குதல்கள் இறைமறுப்புக் கொள்கையின் பால் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. தமிழின்றி சமய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடிகளார், சமயத்தையும் தமிழையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சமயம், சமுதாயம் இரண்டுக்குமாக தன் பணிகளை சரிசமமாக பகிர்ந்தளித்தார்.


உலகம் முழுவதும் தமிழகத்தின் தூதுவராகச் சென்றார். தமிழ் பரப்பினார். மேடைப் பேச்சில் மட்டுமன்றி, எழுத்திலும் அடிகளாரின் கைவண்ணம் சிறப்பானது. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு என்று குறள்தொடர்பான ஏராளமான நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்து நூல் எழுதியிருக்கிறார். ஏராளமான சமயநூல்களும், சிலம்புநெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் என்று இலக்கிய ஆய்வு நூல்களும் உண்டு. பாரதியுக சந்தி, பாரதிதாசனின் உலகம் என்று சமகால நூல்களையும் படைத்திருக்கிறார்.


நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி மணிமொழி, தமிழகம், அருளோசை என்று இதழ்களையும் நடத்தியிருக்கிறார். எதிர்ப்புகளையும் மீறி தமிழ் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் முன்னின்று போராடிய பெருமை இந்த சமயத்தலைவருக்கு உண்டு.


சமூகத்துக்கும், சமயத்துக்கும், தமிழுக்கும் காலமெல்லாம் போராடிய அடிகளாரின் இதயம் 1995 ஏப்ரல் 15 அன்று தன்னுடைய துடிப்பை நிறுத்திக் கொண்டது.





வ.உ.சி. என்றாலே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப்போராளி. அப்புறம்?
அவர் ஒரு தமிழறிஞரும் கூட என்பதை ஏனோ வரலாறு ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக மொத்தம் 16 நூல்களை எழுதியிருக்கிறார். மேடைத்தமிழ் என்று இன்று வழங்கப்படுகிற தமிழுக்கு அவரே முன்னோடி.
அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை ஆங்கில மூலங்களிலிருந்து எளிமையான தமிழ் நடையில் எழுதியவர். தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் வாழ்வியல் நூல்களுக்கு இந்நூல்களை முன்னோடி எனலாம்.
திருக்குறள் மீது பெரியளவிலான மரியாதையும், பற்றும் வ.உ.சி.க்கு இருந்து வந்தது. ராஜாஜியே கூட வ.உ.சி.யிடம் திருக்குறள் பயின்றதாக குறிப்புகள் இருக்கிறது. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலாக பதிப்பித்தவரே இவர்தான். வ.உ.சி.யும் கூட திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தன்னை திருக்குறள் அன்பன் என்றே அவர் சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபோது தன்னுடைய சுயசரிதத்தை கவிதை வடிவில் வடித்தார். அனேகமாக தமிழில் கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை அது. மரபுக்கவிதைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் செய்யுள்கள் பலவும் அவருக்கு மனப்பாடம்.
கண்ணனூர் சிறையில் அவர் இருந்தபோது தன்னுடைய சக கைதிகளுக்கு தமிழ் நீதிநூல்களை போதித்தார். இவற்றை பாடல்களாக எழுதிக் கொடுத்தால் மனப்பாடம் செய்து திரும்ப திரும்ப வாசிக்க முடியும் என்று சில கைதிகள் அபிப்ராயப்பட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று நன்னூல், நீதிமுறை ஆகிய நூல்களிலிருக்கும் கருத்துகளை 100 வெண்பாக்களாக, பத்து அதிகாரங்களில் எழுதினார். இது ‘மெய்யறிவு என்ற பெயரில் நூல் ஆனது.
ஒரு போராளியாக அறியப்பட்டதால் அவரது தமிழறிவும், தமிழ்ச்சேவையும் பரவலாக அறியப்படவில்லை. வ.உ.சி. தொகுத்த, எழுதிய நூல்களை திரும்ப பதிப்பித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய தமிழ்ப் பதிப்பாளர்களின் கடமையாகும்.

3 ஜூலை, 2010

எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா?


‘தி கேப்’ என்று அழைக்கப்படும் அந்த மலைமுகடு ஆஸ்திரேலியாவில் ரொம்ப ஃபேமஸ். தற்கொலை செய்துக்கொள்ளும் மகாஜனங்கள் கடைசியாக தரிசிக்கும் புண்ணியஸ்தலம். கிட்டத்தட்ட நம்மூர் ‘சூசைட் பாயிண்ட்’ மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்.

புன்னகை மன்னன் கமல் சாடையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு குதிக்கத் தயாராகிறான். இளைஞன் என்பதால் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியாக தானிருக்கும். குதிக்க தயக்கம். பெற்றோர்களின் நினைவு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சோகம் மனதை அப்ப நீச்சல் வீரனின் பாணியில் கைகளை பின்னுக்கு இழுத்து கால்களைத் தூக்க முயற்சிக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! என்னோடு ஒரு கப் காபி சாப்பிடமுடியுமா?” ஒரு வயதான குரல் கேட்கிறது.

ஏதோ சினிமாவில் வரும் இறுதிக்காட்சி இதுவென்று நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சிட்னி துறைமுகத்தின் நுழைவாயிலான ‘தி கேப்’ பகுதியில் இக்காட்சி சகஜம். சராசரியாக வாரத்துக்கு ஒருவர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். காப்பி சாப்பிட அழைக்கும் பெரியவரின் பெயர் டான் ரிட்சீ. இப்போது 84 வயதாகிறது. அந்த ஊர் எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தவராம். எனவேதான் உயிரின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த தற்கொலை முகடுக்கு அருகிலேயே ரிட்சீயின் வீடு அமைந்திருக்கிறது.

“அவருடைய சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. புன்னகையோடு அவர் பேசிய கனிவான மொழிதான் இன்னும் என்னை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் கெவின் ஹைன்ஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்து ரிட்சீயால் காப்பாற்றப்பட்டவர்.

ரிட்சீ கணக்கில் கொஞ்சம் வீக். எனவே எவ்வளவு பேரை காப்பாற்றியிருக்கிறார் என்று துல்லியமான கணக்கெடுப்பு எதுவும் அவரிடம் இல்லை. 160க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் இம்மாதிரியாக மறுஜென்மம் எடுக்க வைத்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தவர்கள் சொல்கிறார்கள்.

காப்பி சாப்பிடும் அந்த மூன்று நிமிட அவகாசம் போதும். எத்தகைய சோகமும் நீரில் உப்பு கொட்டியதைப் போல கரைந்துவிடும். தனது மன அழுத்தங்களை சூடான காபி அருந்தியபடியே, முழுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரிடம் கொட்டினால் மனம் லேசாகிவிடாதா என்ன? – இதுதான் டான் ரிட்சீயின் டெக்னிக்.

“தற்கொலை எண்ணத்தோடு வருபவர்களிடம் மிகக்கவனமாக பேசவேண்டும். குதிக்காதே என்று கத்தினால் உடனே குதித்துவிடுவார்கள். சிலர் தத்துவங்கள் பேசுவார்கள். சிலர் நம்மை திட்டக்கூட செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் நிதானமாகப் பேசுவதின் மூலம், அவர்களது தற்கொலை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். சிலர் நீண்டநேரமாக விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஜன்னலில் இருந்து எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலிசாருக்கு போன் செய்துவிடுவாள். போலிஸை பார்க்கும் யாரும் குதித்து விடுவதில்லை” என்கிறார் ரிட்சீ. இவரது மனைவி மோயாவும் இந்த தற்கொலை தடுப்புப் பணியில் இவருக்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

“இவ்வளவு உயிர்களை காக்கக்கூடிய இந்த அருமையான வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பது அரிதில்லையா?” என்று கேட்கிறது இந்த ஜோடி.

இப்பணியில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒருமுறை இதுபோல ஒரு இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தபோது, திடீரென அவள் இவரையும் கட்டிக்கொண்டு குதிக்க முயற்சித்திருக்கிறாள். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரிட்சீ உயிர் தப்பினார்.

சோகம் என்னவென்றால் டான் ரிட்சீ இப்போது கேன்சரோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். “என்னுடைய மனநிலையோடு ஒருவன் கூடவா இந்த உலகில் இல்லாமல் போவான்? என் காலத்துக்குப் பிறகு அவன் வந்து இந்த தற்கொலைத் தடுப்புப் பணியை திறம்பட செய்வான்!” என்று நம்பிக்கையோடு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்.

2 ஜூலை, 2010

ஒரு கோடி ரூபாய் நூலகம்!

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அரசுப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்திருக்கிறார்கள்!” என்று நாம் கேள்விப்பட்ட செய்தியே ஆச்சரியமளித்தது. ‘அவ்வளவு பணத்தில் எவ்வளவோ செய்யலாமே, ஏன் குறிப்பாக நூலகம்?’ என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்குள் நுழைந்தோம்.

பேரூராட்சி நிர்வாகத்திலிருக்கும் ஊத்தங்கரையின் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு போர்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வூரின் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஊர்வளர்ச்சிக்கு அரசையே எதிர்பாராமல், நாமாகவே நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று மக்களை அழைக்கிறது அந்த போர்டு. வேறு சில தெருமுனைகளிலும் இதே போர்டை திரும்ப, திரும்ப பார்க்க முடிகிறது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி விசாலமான, தூய்மையான வளாகத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தூய்மையான பள்ளி என்று சான்றளிக்கப்பட்டு, யூனிசெஃப் அமைப்பின் தங்க மெடலை வென்றிருக்கிறது. 1957ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவருவதால் அக்கம், பக்கம் ஊர்களில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி மேனிலை வகுப்புகளில் ஒருவகுப்புக்கு தலா நூறு பேர் படிக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளியில், ஆசிரியர் பணிக்கு ஐந்து காலியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழி வகுப்புகளுக்கு இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து நடத்த வேண்டியிருக்கிறது. முன்னூறு மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பது என்பது கொஞ்சம் சோதனையான விஷயம்தான்.

ஆனாலும், சிறப்பான கற்பித்தலின் மூலமாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் எண்பத்தியெட்டு சதவிகிதமும், பண்ணிரண்டாம் வகுப்பில் எண்பத்தியிரண்டு சதவிகித தேர்ச்சியையும் எட்டியிருக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி.

இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இதுவரை நான்கு முறை நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார்கள். இங்கே படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியிலும், இன்னொரு மாணவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகிறார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே செயல்படும் இக்கழகம் மாவட்டத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறது. கற்பித்தலில் ஆசிரியர்களும், கற்றுக்கொள்வதில் மாணவர்களும் சிறப்பாக செயல்படுவதால் பெருமைக்கு மேல் பெருமையாக வந்து சேர்கிறது ஊத்தங்கரை அரசுப் பள்ளிக்கு.

விளையாட்டிலும் மாணவர்கள் கில்லி. மாநில அளவிலான சிறப்பான பங்கேற்பு இருக்கிறது. நான்கு பேர் தேசிய அளவில் மாநிலத்துக்காக கோ-கோ விளையாடுகிறார்கள். கோ-கோவில் தமிழக அணிக்கு கேப்டனாக இருக்கும் ரஞ்சித்குமார், இப்பள்ளியில் +1 படிக்கிறார். இந்திய அளவில் முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோ-கோவில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்திருப்பது இவரது தலைமையில்தான்.

இதுபோல ஏகப்பட்ட சிறப்புகள் அமைந்திருந்தாலும், சிறப்புக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் சுழல்வடிவ மின்னணு நூலகம் ஒன்றினை, ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியிலும் இவ்வளவு நவீன நூலகம் இருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளியின் பொன்விழாக் காலத்தின் போது ஒரு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது, இந்த மின்னணு நூலகம் அமைப்பது குறித்த யோசனைகள் வந்திருக்கிறது.

ஊத்தங்கரை பகுதியிலிருந்து ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ்-கள் உருவாவதில்லை என்ற குறை இப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது.

ஏராளமான நூல்களும், தங்குதடையில்லா இணையவசதியும் கொண்ட நவீன நூலகம் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய மாணவர்களை இங்கிருந்து தயார் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்துக்காக செலவினைப் பற்றி கவலைப்படாமல் இந்நூல் நிலையத்தை உருவாக்க முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டார்கள்.

அரசுப்பள்ளிகளை வசதிபடைத்தவர்கள் தத்தெடுத்துக் கொண்டு, வேண்டிய வசதிகளை செய்துத்தரலாம் என்று ஏற்கனவே அரசு சொல்லியிருக்கிறது. இவ்வகையில் ஊத்தங்கரைப் பள்ளியை தத்தெடுத்திருப்பவர், அங்கிருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் வே.சந்திரசேகர். அவரது தலைமையின் கீழ் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டது. சந்திரசேகரும் தன் பங்காக முப்பது லட்சரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஊத்தங்கரையில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் இவரது பங்கு நிச்சயமுண்டு என்பதை ஊர்க்காரர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதால் ஊரே சேர்ந்து, அவரவர் பங்களிப்பை மனமுவந்து தந்து இந்நூலகத்தை கட்டியிருக்கிறது.

கண்ணை கவரும் சுழல்வடிவ கட்டிடம். எட்டுலட்ச ரூபாய்க்கு பதிமூன்றாயிரம் புத்தகங்களை வாங்கி வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். முப்பது கணினிகள் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வசதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஊத்தங்கரை பொதுமக்களும் இந்நூலகத்தை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் இலவசமாகவே நூல்களை மட்டுமன்றி இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘UPSC - முயலகம்’ என்று தனியாக ஒரு அறையே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சிவில் சர்வீஸுக்கு தயார் செய்யும் மாணவர்கள், எந்த தொந்தரவுமின்றி இங்கே படிக்கலாம். நூலகத்தில் சிவில் சர்வீஸுக்கு தயார் செய்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் தனி அடுக்கில் அடுக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் அறை நீளமாக, வசதியாக இருக்கிறது.

பாடுபட்டு உருவாக்கிய நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா? அதற்காக பத்துலட்ச ரூபாய் மதிப்பில் வைப்புநிதி ஒன்றினையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நூலகரை பணிக்கு அமர்த்தி இந்நிதியிலிருந்தே சம்பளமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

“எங்களை உருவாக்கிய பள்ளிக்கு நாங்கள் தந்த பொன்விழாப் பரிசு இந்த நூலகம்!” என்கிறார் முன்னாள் மாணவரான வி.செல்வராஜ். பெங்களூர் தொழிலதிபரான இவர் மட்டுமே நூலகம் அமைக்க இருபது லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

தங்கள் ஊரில் இருந்து ஐ.ஏ.எஸ். / ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற கனவோடு ஊர்கூடி தேர் இழுக்கிறது. உன்னதமான முயற்சிகள் எதுவும் தோற்றதில்லை என்பது வரலாறு. கனவு நனவாக ஊத்தங்கரையை வாழ்த்துவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

’செம்மொழி மாநாடு - முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்த என்னுடைய 6 பக்க கட்டுரை, இன்று கடைகளில் விற்பனையாகும் (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அரசியல் கலக்காமல் ஊடகங்களில் மாநாடு குறித்து வெளிவந்திருக்கும் ஒரே கட்டுரை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். மாநாட்டில் இரண்டே இரண்டு இடத்தில் திமுக கொடி காணப்பட்டது என்று சகபத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் ஒரு கொடி வைத்திருந்தவரை நம் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருந்தார். அப்படம் லே-அவுட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வலைப்பதிவில் கட்டுரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஒருவாரம் கழித்து பதிந்தால் ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி பழைய நியூஸ் ஆகிவிடும். எனவே படிக்க விரும்புபவர்கள் கடையில் வாங்கிப் படிக்கலாம்.

1 ஜூலை, 2010

காமிக்ஸ் வடிவில் இலக்கியங்கள்!


செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளில் அரசும், தமிழார்வலர்களும் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிந்த நேரத்தில், சத்தமில்லாமல் செம்மொழி இலக்கியங்களை நடைமுறைத் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது கிழக்கு பதிப்பகம்.

மாநாட்டையொட்டி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை நாவல் வடிவிலும், குழந்தைகளுக்கான படக்கதை (காமிக்ஸ்) வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். அனேகமாக தமிழிலக்கியம் இந்த வடிவங்களில் வருவது இதுவே முதன்முறை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இந்த காப்பியங்களுக்கு உரைநூல்கள் ஏற்கனவே நிறைய உண்டு. உரைநூல்கள் பெரும்பாலும் பண்டித மொழியில், பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடையில் இல்லாததால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் கிழக்கு பதிப்பகத்தார்.

இப்புதிய வடிவங்களால் சங்க இலக்கியத்தின் வீச்சு நீர்த்துப் போய் விடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியோடு கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனை சந்தித்தோம்.

“உரைநூல்களற்ற சங்க இலக்கியங்கள் மிகவும் குறைவு. அவற்றின் அர்த்தம், கவித்துவம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரை எழுதுபவர்கள் மிக அடர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்கள். நம்முடைய சமகால வாசகர்களின் வாசிப்புக்கு இந்த அடர்த்தி இடையூறு செய்யும்.

பாரதியில் தொடங்கிய நவீன உரைநடை, பிற்காலத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சியால் எளிமை, அழகு, சுவாரஸ்யத்தோடு வளர்ந்தது. எனவே இந்த உரைநடை வசீகரம், பண்டித தமிழ் மற்றும் பழங்கால இலக்கியங்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தை வாசகர்களிடம் குறைத்துவிட்டது. இதையடுத்து தமிழிலக்கிய வாசிப்பு என்பது ஆர்வம் சார்ந்ததாக மாறிவிட்டது. கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கூட சில செய்யுள்களையும், இலக்கியத்தின் சில பகுதிகளையும் நாம் கட்டாயத்தின் அடிப்படையில்தான் மாணவப் பருவத்தில் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் பண்டிதர்களின் கையில் இருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது பாமரர் வசம் வந்திருக்கிறது. இந்நிலையில் நம்முடைய பேரிலக்கியங்கள் கடுமை மொழி சார்ந்த பிரச்சினையால் சமகால, எதிர்கால வாசகர்களுக்கு கிட்டாமல் போய்விடக் கூடாது என்று யோசித்தோம். எனவே நாவல் வடிவில் காப்பியங்களை கொண்டுவருவது என்ற திட்டத்துக்கு வந்தோம். இதிகாசங்கள் குழந்தைகளுக்கு படக்கதைகளாக தரப்படுவதைப் போல இலக்கியங்களையும் தந்தால் என்ன என்றொரு கூடுதல் யோசனையும் வந்தது.

ஏற்கனவே நாவல் வடிவம் என்பது வாசிப்பவர்களுக்கு நன்கு பழகிய வடிவமாக இருக்கிறது. சமகாலத் தமிழில் அப்படியே மீண்டும் இலக்கியங்களை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறோம். எதையும் கூட்டவோ, குறைக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எனவே இலக்கியம் நீர்த்துப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நம் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் உலகுக்கு உரத்துச் சொல்லும் வகையில் உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மாநாட்டையொட்டி இந்நூல்களை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.

இவற்றை வாசிப்பவர்கள் சுவையுணர்ந்து மேலதிக வாசிப்புக்கு மூலநூல்களை தேடிப்போகக் கூடிய வாசலை நாங்கள் திறந்துவைக்கிறோம்” என்றார்.

வெகுவிரைவில் ‘முத்தொள்ளாயிரம்’ நூலையும் கொண்டுவர இருக்கிறார்கள். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி வித்தியாச வடிவங்களில் கொண்டுவரும் முயற்சியில் கிழக்கு பதிப்பகம் முனைப்பாக இருக்கிறது.