5 ஜூலை, 2010

தமிழருக்காக துடித்த இதயம்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு காலணா கொடுப்பார். காலணா என்பது 80 வருடங்களுக்கு முன்பாக கொஞ்சம் பெரிய தொகைதான். நான்காவது படிக்கும் அரங்கநாதனின் லட்சியம் தினம் ஒரு காலணாவை சேதுப்பிள்ளையிடம் பெறுவதாக இருந்தது.


இவ்வாறாக விளையாட்டாக குறளை வாசிக்க ஆரம்பித்த அச்சிறுப்பிள்ளை, பிற்காலத்தில் தனது வாழ்க்கையையே குறள் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்டு நாடெங்கும் பிரபலமானார். குன்றக்குடி அடிகளார் என்று சொன்னால் இன்று குழந்தைகளுக்கு கூடத்தெரியும்.


ஐம்பதுகளில் குன்றக்குடி மடத்தின் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட காலக்கட்டம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க காலக்கட்டம். இந்து சமயம் மீதான தாக்குதல்கள் இறைமறுப்புக் கொள்கையின் பால் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. தமிழின்றி சமய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடிகளார், சமயத்தையும் தமிழையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சமயம், சமுதாயம் இரண்டுக்குமாக தன் பணிகளை சரிசமமாக பகிர்ந்தளித்தார்.


உலகம் முழுவதும் தமிழகத்தின் தூதுவராகச் சென்றார். தமிழ் பரப்பினார். மேடைப் பேச்சில் மட்டுமன்றி, எழுத்திலும் அடிகளாரின் கைவண்ணம் சிறப்பானது. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு என்று குறள்தொடர்பான ஏராளமான நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்து நூல் எழுதியிருக்கிறார். ஏராளமான சமயநூல்களும், சிலம்புநெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் என்று இலக்கிய ஆய்வு நூல்களும் உண்டு. பாரதியுக சந்தி, பாரதிதாசனின் உலகம் என்று சமகால நூல்களையும் படைத்திருக்கிறார்.


நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி மணிமொழி, தமிழகம், அருளோசை என்று இதழ்களையும் நடத்தியிருக்கிறார். எதிர்ப்புகளையும் மீறி தமிழ் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் முன்னின்று போராடிய பெருமை இந்த சமயத்தலைவருக்கு உண்டு.


சமூகத்துக்கும், சமயத்துக்கும், தமிழுக்கும் காலமெல்லாம் போராடிய அடிகளாரின் இதயம் 1995 ஏப்ரல் 15 அன்று தன்னுடைய துடிப்பை நிறுத்திக் கொண்டது.





வ.உ.சி. என்றாலே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப்போராளி. அப்புறம்?
அவர் ஒரு தமிழறிஞரும் கூட என்பதை ஏனோ வரலாறு ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக மொத்தம் 16 நூல்களை எழுதியிருக்கிறார். மேடைத்தமிழ் என்று இன்று வழங்கப்படுகிற தமிழுக்கு அவரே முன்னோடி.
அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை ஆங்கில மூலங்களிலிருந்து எளிமையான தமிழ் நடையில் எழுதியவர். தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் வாழ்வியல் நூல்களுக்கு இந்நூல்களை முன்னோடி எனலாம்.
திருக்குறள் மீது பெரியளவிலான மரியாதையும், பற்றும் வ.உ.சி.க்கு இருந்து வந்தது. ராஜாஜியே கூட வ.உ.சி.யிடம் திருக்குறள் பயின்றதாக குறிப்புகள் இருக்கிறது. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலாக பதிப்பித்தவரே இவர்தான். வ.உ.சி.யும் கூட திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தன்னை திருக்குறள் அன்பன் என்றே அவர் சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபோது தன்னுடைய சுயசரிதத்தை கவிதை வடிவில் வடித்தார். அனேகமாக தமிழில் கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை அது. மரபுக்கவிதைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் செய்யுள்கள் பலவும் அவருக்கு மனப்பாடம்.
கண்ணனூர் சிறையில் அவர் இருந்தபோது தன்னுடைய சக கைதிகளுக்கு தமிழ் நீதிநூல்களை போதித்தார். இவற்றை பாடல்களாக எழுதிக் கொடுத்தால் மனப்பாடம் செய்து திரும்ப திரும்ப வாசிக்க முடியும் என்று சில கைதிகள் அபிப்ராயப்பட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று நன்னூல், நீதிமுறை ஆகிய நூல்களிலிருக்கும் கருத்துகளை 100 வெண்பாக்களாக, பத்து அதிகாரங்களில் எழுதினார். இது ‘மெய்யறிவு என்ற பெயரில் நூல் ஆனது.
ஒரு போராளியாக அறியப்பட்டதால் அவரது தமிழறிவும், தமிழ்ச்சேவையும் பரவலாக அறியப்படவில்லை. வ.உ.சி. தொகுத்த, எழுதிய நூல்களை திரும்ப பதிப்பித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய தமிழ்ப் பதிப்பாளர்களின் கடமையாகும்.

11 கருத்துகள்:

  1. இரு முக்கியமான செய்தியை
    சொல்லியிருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. குன்றக்குடி அடிகளார் பற்றி எழுதியமைக்கு நன்றி, சுருக்கமாகவே இருந்தாலும். தமிழ்நாட்டில் படித்த உயர்நிலைப்பள்ளிக்கு அடிக்கடி வந்து பேசுவார். திருக்குறள் முனுசாமிக்கு அடுத்து மாணவர்களை கட்டிப்போடும் பேச்சுத்திறன் அடிகளாருக்கு இருந்தது. நிரந்தரமான ஒரு புன்னகையும். என்னைப் போன்ற பல ஆங்கில வழி மாணாக்கர்களுக்கு தமிழில் ஆர்வம் குறையாமலிருக்க இது போன்ற பெரியவர்களின் பேச்சுகள் உதவின. அடிகளார் 40-50 களில் படித்த சீர்காழி ச.மு. இ உயர்நிலைப்பள்ளியில் 70/80 களில் நானும் படித்தேன்.
    ஆம், அடிகளாரின் பெயர் நடுத்திட்டு அரங்கநாதன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வ.உ.சி பற்றிய அரிய தகவல்கள். நல்பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா8:31 AM, ஜூலை 06, 2010

    ந‌ல்ல‌ இடுகை. எழுத்தாள‌ர் அப்பாதுரை முத்துலிங்க‌ம் அவ‌ர்க‌ளுடைய‌ "த‌ள்ளி நின்றால் போதும்" என்ற‌ க‌ட்டுரையை வாசிக்க‌வில்லையெனில், த‌ய‌வு செய்து வாசிக்க‌வும். அவ‌ர‌து இணைய‌ த‌ள‌ முக‌வ‌ரி amuttu.com

    krishnamoorthy

    பதிலளிநீக்கு
  5. விறுவிறுப்பில்லாத பதிவுகள் என்ன ஆச்சு உங்களுக்கு .......................

    பதிலளிநீக்கு
  6. லக்கி, தனிதனியாக இரு பதிவுகளாக போட்டு இருக்கலாம்.

    மேலும் பெரியாருக்கும் குன்றக்குடியாருக்கும் இருந்த நட்பையும் சொல்லியிருக்கலாம்.

    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. லக்கி,

    மிக அருமையான பதிவு. குன்றக்குடியாருக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த ஆழமான நட்ப்பை பற்றியும் சொல்லியிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  8. குன்றகுடி அடிகளார் சமுதாயத்திற்கு செய்த சேவையும்... தமிழுக்க்கு செய்த சேவையும் கணக்கில் அடங்காதவை...

    1965இல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போரில் பங்கு பெற்று சிறை சென்றவர் அடிகளார்...

    மொழிக்காக போராடி சிறை சென்ற ஒரே சமயத் தலைவர்... அதுவும் தமிழர்களின் சைவ சமய தலைவராக இருந்த அடிகளாரை மட்டுமே சேரும்...

    பதிலளிநீக்கு
  9. Hi krishna,
    After a long time I visited your site today. Its nice seeing you in Semmozhi manaadu.

    Keep up the good work.

    Deepa

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா6:09 PM, ஜூலை 08, 2010

    இவ்வளவு மக்களை திரட்டி மாநாடு நடத்திய கலைஞரால், ஈழத்தமிழனுக்காக மக்களைத்திரட்ட முடியாதா என்ன???இன்னும் கூட வதை முகாம்களில் மக்கள் உள்ளனரே ,உங்கள் தலைவர் கலைஞரிடம் சொல்லக்கூடாதா?

    பதிலளிநீக்கு