15 ஜூலை, 2010

முன்கதை சுருக்கம்!

இவ்வளவு உற்சாகமாக இதற்கு முன்பாக இருந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்று விடியற்காலை இரண்டு மணியிலிருந்து தன்னம்பிக்கை கொப்பளிக்கும் ஊற்றாய் பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது. உறக்கமின்றி இரவெல்லாம் விழித்து கண்கள் எரிய இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னைப்போலவே ஒரு மனிதன் இங்கே வாழ்கிறான். தவறுகள் இழைத்திருக்கிறான். பொய் சொல்லியிருக்கிறான். காமாந்தகனாக திரிந்திருக்கிறான். சில நேரங்களில் சோம்பித் திரிந்தான். சில நேரங்களில் கடுமையாக உழைத்தான். சாதித்தான். உலகம் ஏற்கும் மகத்தான வெற்றி கண்டான். தன்னுடைய தவறுகளை பகிரங்கமாக அறிவித்தான். தன்னைப் பற்றி கர்வம் கொண்டான். தற்புகழ் பேசினான். நாற்பது வயதில் சுயசரிதை எழுதினான். ஆஹா! இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் முந்தைய பாராவில் சொல்லியிருக்கும் உணர்வை கொடுக்கிறானே? ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே? பாலகுமாரா நீ தெய்வம்!

நேற்றைய தினம் என் வாழ்க்கையின் மிக மோசமான தினங்களில் ஒன்று. நானே என் மீது அக்கறை கொள்ளாத நிலையிலும், என் எதிர்காலம் குறித்து கவலைப்படும் சில நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்லிதயம் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நேற்று குரூரமாக கொன்றிருந்தேன். நேற்று மட்டுமல்ல. இரண்டாண்டுகளாகவே நான் இப்படித்தான் இருக்கிறேன். என் சூழல் அப்படி. பொருளாதார அடிப்படையில் மரண அடி வாங்கியிருக்கிறேன். குடும்பம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் சரியாக பொருந்திபோக முடியாத சுயநலமியாக இருக்கிறேன். நொடியில் கோபப்படுகிறேன். உணர்ச்சிவயப்படுகிறேன். சுயகழிவிரக்கத்தால் தோற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறூட்டும் அம்மா மாதிரி நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். இல்லையேல் ஒருவேளை இன்னேரம் நான் மனநலக்காப்பகம் ஒன்றினில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பேன்.

இவ்வாறான ஒரு மனக்கொந்தளிப்பான சூழலை வாசிப்பு மட்டுமே தணிக்கும். நேற்று இரவு பதினோரு மணிக்கு முன்கதை சுருக்கத்தை கையில் எடுத்தேன். டீனேஜில் இதே புத்தகத்தை வாசித்தபோது வெறும் தற்புகழ்ச்சியாகவும், உபதேசமாகவும் தெரிந்த விஷயங்கள் இப்போது வேறொரு பரிணாமத்தில் மனதில் பதிகிறது. எழுத்துகளுக்கிடையே பாலகுமாரன் வைக்கும் ‘கண்ணி’யை வயதும், அனுபவமும் கூடகூடத்தான் புரிந்துகொள்ள இயலுகிறது.

பாலகுமாரன் தனது சிறுவயது தீபாவளியில் தொடங்குகிறார். அப்பாவின் சுயநலம் குறித்து பிரஸ்தாபிக்கிறார். இருபது ஆண்டுகள் கழித்து அயன்ராண்டை வாசித்து ‘எல்லோருமே சுயநலமிகள்’ என்று தெளிகிறார்.

அம்மா. அப்பா. பதிமூன்று வயதில் பொன்னியின் செல்வன். எதிர்பால் ஈர்ப்பு. கதைகள். நாவல்கள். தமிழ்வாணன். பழந்தமிழ் இலக்கியங்கள். டாஃபேயில் டைப்பிஸ்ட். கவிஞனாக முயற்சி. கணையாழியில் கவிதை. பக்தி இலக்கியங்கள். யோகா கற்க முயற்சி. மக்குப் பார்ப்பான் என்று மற்றவர்களின் ஏளனம். சுப்பிரமணிய ராஜூவோடு நட்பு. இலக்கியக் கூட்டங்கள். தொழிற்சங்க செயல்பாடுகள். வேலைநிறுத்தம். டாஃபே லாக்-அவுட். ஒரு வயது மூத்தப் பெண்ணோடு காதல். சோற்றுக்குப் பிச்சை. கசடதபற. ஞானக்கூத்தன். முத்துச்சாமி. சிறுகதை எழுத முயற்சி. இலக்கியச் சிந்தனை. ப.சிதம்பரம். வண்ணநிலவனின் கதையை தன் பெயரில் குமுதத்தில் வெளியிடுதல். சுஜாதாவின் அறிமுகம். கதை எழுத கற்றல். தொடர் காதல்தோல்வி.

எஸ்.ஏ.பி. குமுதம். சாவியில் ரிப்போர்ட்டிங். சினிமா. காமத்தேடல். கல்யாணம். எழுத்து. குழந்தை. ரசிகை. இரண்டாம் கல்யாணம். தொடர். மெர்க்குரிப் பூக்கள். இரும்புக் குதிரைகள். போஸ்டரில் போட்டோ. விகடன். பச்சைவயல் மனது. தொடர்கள். புத்தகங்கள். பரிசுகள். – இதுதான் முன்கதை சுருக்கம். இப்போதிருக்கும் மனநிலையில் தமிழின் மிகச்சிறந்த தன்னம்பிக்கை நூலாக இதை மதிப்பிடத் தோன்றுகிறது.

இப்போதைய என்னுடைய வயதில் பாலகுமாரனும் ரிப்போர்ட்டிங்தான் செய்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய ஏனோ சிறிய மனக்கிளர்ச்சி தோன்றுகிறது. வீடும், ஊரும், உறவும் காறி உமிழ அடுத்தடுத்து எவ்வளவு தவறுகளை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட பாலகுமாரனே வென்றிருக்கிறார். மிகக்குறைவான மைனஸ் பாயிண்டுகள் கொண்ட என்னால் முடியாதா?

சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்புத்தகத்தின் அசுரபலம்.

சுஜாதா : “என்னய்யா.. சினிமாக்கார ரிப்போர்ட்டா பண்ணிக்கிட்டு இருக்க. உருப்படியா ஏதாவது செய்”

பாலகுமாரன் (ஃபுல் போதையில்) : “உங்களைவிட நான் உருப்படியா பண்ணுவேன். நான் யார் தெரியுமா? என்னோட பவர் என்னன்னு தெரியுமா? நீங்க பாப்புலர்னு எனக்கு உபதேசம் பண்றீங்களா? உங்களை அடிச்சுக் காட்டறேன் சார்”

சாவி : பாலகுமாரன் உங்களுக்கு ஜாஸ்தி ஆயிடிச்சி. வெளியே போய் நில்லுங்க.

இன்னொரு சம்பவம்.

சுப்பிரமணிய ராஜூ : “பாலா, உனக்கு எழுதத் தெரியலைடா. நான் உனக்கு சொல்லித் தரேன்”

பாலகுமாரன் : “சாவி கேட்கறது தர நான் ஆளில்லை. நான் ஒரு ரைட்டர், ரிப்போர்ட்டரில்லை”

ராஜூ : “பாலா.. ரிப்போர்ட்டிங் பண்ணு, ரைட்டிங் தானே டெவலப் ஆகும். நான் உனக்கு கத்து தரேன்”

பாலகுமாரன் : “ராஜூ, எனக்கு தண்ணி ஊத்திக் கொடுத்துட்டு கத்த விடாதே. என் பலவீனம் புரிஞ்சுக்கிட்டு அடிக்காதே”

மாலனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘திசைகள்’ முப்பதாண்டுகளுக்கு முன்பாக உள்ளடக்க ரீதியாக தமிழ் பத்திரிகையுலகில் நிகழ்த்தப்பட்ட பெரும் புரட்சி. சர்க்குலேஷன் சரியாகப் போகவில்லை என்று அதை சாவி நிறுத்த, மாலன் சாவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்ற ஒரு தகவல் போகிற போக்கில் கிடைக்கிறது.

இப்படி உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள் புத்தகம் நெடுக நிறைய உண்டு. 240 பக்க புத்தகத்தை 3 மணிநேரங்களில் இடைவிடாமல் படிக்க இதுபோன்ற ‘வரலாற்று நிகழ்வுகள்’ முக்கியக் காரணியாக இருக்கிறது.

‘பதிப்பகம் எழுத்தாளனை நம்பி நிற்கும் வியாபாரம். எழுத்தாளன் பதிப்பகத்தை நம்பி நிற்கும் படைப்பாளி’ ஸ்டைலில் நிறைய ‘பாலகுமாரன் டச்’ வசனங்களும் உண்டு.

“பெரிய மயிரு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம் என்று எழுதுகிறார். திமுகவின் பார்ப்பனத் துவேஷம் அச்சுறுத்தினாலும், தமிழை அவர்கள்தான் வாழவைத்தார்கள். தமிழ் எழுத்தாளர்கள் இதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். புத்தகத்தில் அரசியல் எட்டிப் பார்க்கிற இடம் இதுமட்டுமே. பொதுவாக பாலகுமாரனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட் ஆக முயற்சித்து இளம்வயதில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பியிருக்கிறார்.

பாலகுமாரனின் நாவல்களில் காணப்படுவதைப் போலவே சுயசரிதையிலும் பெண் குறித்த பிரமிப்பு அதிகம். மறுபடி இன்னொரு ‘முன்கதை சுருக்கம்’ சில வருடங்கள் கழித்து வரும் என்று சொல்லி முடிக்கிறார். கடந்த இருபத்து இரண்டு வருடங்களில் வெளிவந்தமாதிரி எனக்கு நினைவில்லை. பாலகுமாரனுக்கு அனுபவங்கள் மூலமாக 40 வயதில் கிடைத்த நிதானத்தை ஒரே புத்தகத்தில் அவரது வாசகன் அடைந்துவிட முடியும் என்பதுதான் அவர் அடைந்த உச்சபட்ச வெற்றி!

பின்கதைச் சுருக்கம் :

முன்கதை சுருக்கம் எழுதும்போது பாலகுமாரன் அடைந்திருந்த உயரம் அவரது பின்கதைச் சுருக்கத்தில் இல்லையென்பதை பாலகுமாரனின் தீவிர வெறிபிடித்த ரசிகனாக வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

90களின் தொடக்கத்தில் பாலகுமாரன் சினிமாவில் மிக முக்கியமான ஆளாக மாறினார். அவர் இயக்கியதாக கூறப்பட்ட ‘இது நம்ம ஆளு’ பெரும் வெற்றி பெற்ற படம். ஜெண்டில்மேன், காதலன் என்று அடுத்தடுத்து அவரது வசனங்கள் பெரிதாகப் பேசப்பட்டன.

ஆனால் அவரது சினிமா அறிவு குறித்து இன்று சினிமாக்காரர்கள் கொஞ்சம் ஏளனமாகவே பேசுகிறார்கள். குளோஸ்-அப் எடுக்க வேண்டிய காட்சியில் ஹீரோவுக்கு செருப்பில்லைன்னு கண்டினியூட்டி பார்த்தவர் என்று கிண்டலடிக்கிறார்கள்.

தன் வாழ்நாளிலேயே தன் எழுத்து செத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் எழுத்தாளர் அவர் என்று மற்றொரு எழுத்தாளர் அவரை விமர்சிக்கிறார். கிட்டத்தட்ட உண்மைதான். ஒரு பத்திரிகையின் உதவியாசிரியரை பார்த்து அன்றைய பாலகுமாரன் சொன்னாராம். “என்னய்யா சர்க்குலேஷன் ரொம்ப டவுன் போலிருக்கே? நீ ஒண்ணு பண்ணு. பாலகுமாரன் தொடர் எழுதுகிறார்னு என்னோட போட்டோவைப் போட்டு போஸ்டர் அடி. சர்க்குலேஷன் பிச்சுக்கும்”. நிச்சயமாக இன்று இந்த நிலை இல்லை.

‘உடையார்’ எழுதிய பாலகுமாரனை நானே கூட நிராகரிக்கிறேன். பாலகுமாரனின் ரசிகர்கள் விரும்புவது மெர்க்குரிப் பூக்களையும், இரும்புக் குதிரைகளையும்தான். இன்றும் அவர் நினைவுகூறப்படுவது இதுபோன்ற ஃபிக்‌ஷன்களினால்தான் தவிரவே ஒரு சிந்தனையாளராகவோ, சினிமாக்காரராகவோ அவரை உணரமுடிவதில்லை.

முன்கதைச் சுருக்கத்துக்குப் பிறகு பாலகுமாரன் ஆன்மீகம் பக்கமாக செலுத்திய நாட்டம் அவருடைய பின்னடவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆன்மீகம் வென்றது. பிரியத்துக்குரிய பாலகுமாரன் தோற்றார்.

37 கருத்துகள்:

  1. FANTASTIC...

    உங்கள் எழுத்து நடை பிரமாதம்.

    மனோ

    பதிலளிநீக்கு
  2. //திமுகவின் பார்ப்பனத் துவேஷம் அச்சுறுத்தினாலும், தமிழை அவர்கள்தான் வாழவைத்தார்கள். தமிழ் எழுத்தாளர்கள் இதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். புத்தகத்தில் அரசியல் எட்டிப் பார்க்கிற இடம் இதுமட்டுமே.//

    தமிழ் = கலைஞரின் குடும்பம் ?

    பதிலளிநீக்கு
  3. //பாலகுமாரா நீ தெய்வம்!//

    அப்படியா...?

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு.

    // ஆன்மீகம் வென்றது. பிரியத்துக்குரிய பாலகுமாரன் தோற்றார்.//

    வாஸ்த்தவம்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்ல அலசல் லக்கி. குறிப்பாக பின்னே எழுதிய பகுதியை பால குமாரன் மீது பித்து பிடித்து திரிந்தவர்களுள் ஒருவன் என்ற வகையில் ஒப்பு கொள்கிறேன்; எனக்கு அவர் மீது இருந்த பிம்பம் அவரை சந்தித்த பின் சுக்கு நூறானது. இது பற்றி எழுத பல நாளாக எண்ணுகிறேன். விரைவில் எழுத வேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. யுவ கிருஷ்ணா, சரியான நேரத்தில் சரியான புத்தகம்...
    இதுதான் பால குமரனின் பலம், அவரின் புத்தகங்கள் பலரின் வாழ்கையை சிறப்படைய செய்தது நிஜம் (அவருக்கு தெரியாத நிஜம்) இன்னும் கடலோர குருவிகளும், சிநேகமுள்ள சிங்கம், அப்பா, வில்வ மரம், நெல்லுக்கு இரைத்த நீர் ( சிறுகதை) படித்து பாருங்கள், இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும், பால குமரனை அல்ல உங்களை...

    நான் படித்து பலநாள் யாருடனும் பேசாமல் என்னை பற்றியே யோசித்து இருந்திருக்கிறேன், என்னுள் மாறி இருக்கிறேன், அவ்வளவு ஆழமான தாக்கங்கள், உணர்ந்து கொள்ள உங்கள் மன பக்குவமும் அனுபவமும் உதவி செய்யும்

    பதிலளிநீக்கு
  7. //முன்கதைச் சுருக்கத்துக்குப் பிறகு பாலகுமாரன் ஆன்மீகம் பக்கமாக செலுத்திய நாட்டம் அவருடைய பின்னடவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆன்மீகம் வென்றது. பிரியத்துக்குரிய பாலகுமாரன் தோற்றார்.//

    உண்மை...
    உண்மை... !!!

    பதிலளிநீக்கு
  8. முன்கதைச் சுருக்கம் முதலில் படித்தபோது இருந்த கருத்து இப்போது மாறியிருப்பது போல உடையார் பற்றிய கருத்து இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு மாறலாம்.அவரது ஆன்மீக நாவல்கள் முன்கதைச் சுருக்கத்தின் பரிணாம வளர்ச்சியே.அவர் இன்னமும் பிறன்மனை விழைவதை பற்றியே கதை எழுதிக் கொண்டிருந்தால் 'புரட்சி எழுத்தாளராய்'இருந்திருப்பாரோ என்னவோ..

    பதிலளிநீக்கு
  9. குழப்பமான பதின்ம வயதில் மட்டுமல்ல, தன்னைப் பற்றி அறிந்து கொள்ளாத எவர்க்குமே பாலகுமாரன் எழுத்துக்கள் வரப்ரசாதம், கடலோரக் குருவிகள் மட்டும் என் இருபது வயதில் கிடைக்கவில்லை என்றால் இப்போது வாங்கிய அடிகளை விட ஆழமான அகற்ற முடியாத அடிகளையும் வாங்கியிருப்பேன்,

    //எனக்கு அவர் மீது இருந்த பிம்பம் அவரை சந்தித்த பின் சுக்கு நூறானது.//

    நீதி: பாலாகுமாரனின் எழுத்துக்களில் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, பாலகுமாரன் என்கிற தனி மனிதனை விட்டுவிட்டால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. 1993 ஆகஸ்ட் மாதம்... சென்னை மெரினாவில் ஒரு பாசிசவாதி உண்ணா விரதம் என சொல்லி அடாவடி செய்த போது... மதுரை வானொலி நிலையத்தை பாசிசவாதியின் தொண்டர்கள் உடைதெறிந்த போது... தன் பிள்ளையோடு... போய் பார்த்து ஆசி வாங்கி வந்த பாலகுமாரன்... அடுத்த வார குமுதத்தில் கத்தியின்றி... ரத்தமின்றி என பாசிசவாதியை புகழ்ந்தாரே அன்று தொடங்கியது... பாலகுமாரனின் சரிவு...

    பதிலளிநீக்கு
  11. முன்கதை சுருக்கம் வாசித்ததில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

    ஆனால் மெர்க்குரி பூக்களும், இரும்பு குதிரைகளும் இப்பொழுது எடுத்தால் நிறைய aberrations தென்படும் என்றே நினைக்கிறேன்.

    பாலகுமாரன் உணர்வுநிலை எழுத்தாளர் என்றே நான் நினைக்கிறேன். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவரை ‘ஜாலகுமாரன்’ என்று சொல்வார்.

    அவருடைய தாயுமானவன், கரையோர முதலைகள், பச்சை வயல், அகல்யா, பயணிகள் கவனிக்கவும், ஏதோ ஒரு நதியில் போன்ற பல ஆக்கங்களிலும் அவர் சம்பவங்களை பதிவு செய்கிற நேர்த்தி மிகவும் அருமை. ஆனால் அதைத்தாண்டி வாசகர்களுக்கு அவர் எதுவும் கடத்தவில்லை. அறிவுத்தளத்தில் அவருடைய ஆக்கங்கள் சற்றே சோபையிழந்து இருக்கின்றன என்பது எனது அவதானிப்பு.

    அவர் ஆன்மிகத்தில் எழுதிய கதைகளில் ‘என் கண்மணித் தாமரை’ மிகவும் முக்கியமானது. அதன் வடிவமும் அது சொன்ன செய்தியும் நன்றாக வந்திருந்தது.

    ’உடையார்’ புனைவாக சற்றே சறுக்கியிருந்தாலும், வரலாற்று ஆக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சிதான். நான் ஒரு பாகம் மட்டும் படித்தேன்.

    உங்களது பத்தியின் முதல் பகுதியில் பாலகுமாரனின் ஜாலம் அப்படியே.

    நல்ல பகிர்வு. நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  12. Hi, your review helped me gain the gist of this book and now it induces me to read it. A very good post.

    Regards

    R Gopi

    பதிலளிநீக்கு
  13. After being impressed greatly for first few books, I always felt his writing had an aura of 'being fake' around it . May be everyone felt it causing his downfall!

    பதிலளிநீக்கு
  14. நேற்றுதான் ஒரு பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்... இருவருக்கும் பிடித்தது ஆன்மிக இல்லாத அந்த பழைய பாலகுமாரன் என...

    அழகான பகிர்வு லக்கி
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. பல வருடங்களுக்கு முன்னால் அவரது கதைகளை பித்து பிடித்து படித்து இருக்கிறேன். ஆனால் இப்போதோ, அவற்றை சீண்டுவது கூட இல்லை. இதற்க்கு காரணமாக நான் நினைப்பது அவரின் ஸ்டீரியோ டைப் கதைகளே. தொடக்கத்தில் அவைகள் அவரை முன்னிறுத்தி இருக்கலாம், ஆனால் காலத்திற்கு ஏற்ப அது மாறி இருந்தால், வெற்றிகள் தொடர்ந்து இருக்கும். எப்படி பாக்கியராஜும், பாரதி ராஜாவும் வித்தியாசமான கதைகளை கொடுத்து முன்னேறி வந்து, அதையே தொடர்ந்து கொடுத்து போரடிக்க வைத்து வெளியேறினார்களோ அது போல் தான் இதுவும். இது அவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  16. Lucky,

    Ungal eluthil mun iruntha nermai ippothu therivathillai..Athu Lucky Yuvakrishna aana pothil irunthu thodangiyathaga thonrugirathu..

    Athu image and perception sampantha pattatho enru thonrukirathu..Avvapothu nalla journalistic articles vandaalum nampagathanmai paathivituthaga thonrugirathu..

    Thani manitha politics'kaga sila nerangalil eluthu migavum insensitive(this is a mild representation) aaga therigirithu!

    I wanted to say all this..But I wonder sometimes may be I am the one who was mistaken, with who the real Lucky is..

    Regards,
    Ronin

    பதிலளிநீக்கு
  17. எந்த மேடையிலும் எப்போதும் நான் உறக்க சொல்வேன்... என் வளர்ச்சி பாலகுமாரனால் இது சாத்தியம் என்று... அப்படி கொண்டாடிய பாலகுமாரனை இப்போது எழுதும் எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை...

    நல்லா சொல்லி இருக்கிங்க...

    பதிலளிநீக்கு
  18. பச்சை வயல் மனது எனக்கு மிகவும் பிடித்த நாவல்.. அதில் நாயகி சொல்லும் கீளீன் சிலேட் வசனம் நியாபகத்துக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  19. நானும் அவரின் தீவிர வாசகன் தான்...அவருடைய முந்தைய நாவல்களை கண்ணில் நீர் கசிய வாசித்திருக்கிறேன்...எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்துப் பின் தெளிவெதென்பது இயலாது... சில கதைக் களங்களைத் தேர்வு செய்து ,தனது வாழ்வானுபவத்தின் அடிப்படையில் விளைந்த சிந்தனைகளை , மிக நேர்த்தியான சொல்லாடலின் மூலம் பல்லாயிரம் வாசகர்களுக்கு புதினங்களாக வழங்கியவர் பாலகுமாரன்....
    எழுத்தாளனது மிகப் பெரிய பலம் கதை சொல்லும் தந்திரத்தில் தான் உள்ளது....எதற்குப் பின் எதைச் சொல்ல வேண்டும், எந்த இடத்தில் எந்த வார்த்தை வர வேண்டும் போன்ற நகாசு வேலைகளே வாசகர்களின் மனம் கவர்ந்த படைப்பு உருவாகக் காரணமாகும்..... பாலகுமாரனது ஆகச் சிறந்த படைப்புகள் எல்லாம் அவர் அந்த தந்திரத்தை மிக நேர்மையான முறையில் கையாண்ட போது உருவானவை....காலப்போக்கில் அவருள் ஏற்பட்ட ஆன்மீக மலர்ச்சி அந்தத் தந்திரம் ஏதுமின்றி உள்ளது உள்ளபடியே அவரை எழுதச் செய்கிறது...இதை அவரது தீவிர வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
    இதுதான் உண்மை...மாலன் ஒரு முறை சொன்னது போல் , ஒரு தலைமுறையே பாலகுமாரனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  20. //மாலன் ஒரு முறை சொன்னது போல் , ஒரு தலைமுறையே பாலகுமாரனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது...//
    கொஞ்சம் ஓவராத்தான் போறீங்களோ? சுஜாதாவுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். பாலகுமாரனுக்கு, சான்சே இல்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை,சுஜதா பல வகைகளில் முயற்ச்சித்தவர் கம்யூட்டர் பிரபலபடுத்தியவர்.( பொது மக்கள் மத்தியில்) பாலகுமாரன் பல கதைகள் விக்கிபீடியா வை ( இதிகாசம்,புராண,) அப்படியே கதை யாக்கினார் அதற்க்கு அவர் உடல் பலவீனம் அடைத்தது ஒரு காரணம்.

      நீக்கு
  21. நல்லா எழுதி இருக்கீங்க லக்கி...

    நானும் தீவிர பாலகுமாரன் ரசிகன் தான்...

    நான் இன்றும் விரும்பி படிப்பது சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களையே...

    //மோகன் குமார் said...
    எனக்கு அவர் மீது இருந்த பிம்பம் அவரை சந்தித்த பின் சுக்கு நூறானது. இது பற்றி எழுத பல நாளாக எண்ணுகிறேன். விரைவில் எழுத வேண்டும்..//

    எழுதுங்களேன்... தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  22. என் இளம் வயதில் அந்த பாலகுமாரனின் எழுத்துகள் பிடித்தது..

    தற்போது ஆன்மீக எழுத்துகள் அதைவிட அதிகம் பிடித்தது..

    பதிலளிநீக்கு
  23. மிக அருமையான பதிவு

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  24. அட்டகாசமான பதிவு லக்கி. பல இடங்களில் ரொம்ப ஒன்றிப் போய் எழுதினீர்களோ என்ற எண்ணத்தை வரவழைத்தது. மறுபடி அந்த புத்தகத்தை மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்து விட்டீர்கள்.

    ஒரு புனைவாய் உடையார் தோற்றுப் போயிருந்தாலும், வரலாற்றுப் பதிவாய் அதன் எக்ஸ்ட்ரீமிசத்தையும் தாண்டி முக்கிய இடம் பெறத் தகுதியானது என்பது என் எண்ணம். உடையார் என்றில்லை. அவரது எல்லாப் புத்தகங்களிலும் இப்படி சில பகுதிகளை தவிர்த்து விட்டுத்தான் அந்த புத்தகத்தை உள் வாங்க வேண்டி இருக்கிறது.

    மொத்தத்தில் கலக்கலான பதிவு.

    பதிலளிநீக்கு
  25. நாயகன் வசனம் மறக்கமுடியாது.

    "மேய்ச்சல் மைதானம்" படித்திருபீர்கள் தானே.

    பதிலளிநீக்கு
  26. /ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே?/
    இது பாலகுமாரன் கதைகளைப் படிக்கும் போது அடிக்கடி நிகழ்வது!

    பதிலளிநீக்கு
  27. பத்தாம் வகுப்பு விடுமுறையில் பயணிகள் கவனிக்கவும், மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகளை வாசித்தவுடன் கிடைத்த பரவசமும், நான் தனித்துவமானவன் என்ற கர்வமும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு வேறு எந்த தருணத்திலும் கிடைக்க வில்லை.. இப்பொழுது ஆயிரம் தர்க்கங்கள் பாலகுமாரனை அந்நிய படுத்தினாலும், இந்த மனிதர் அந்த வயதில் ஏற்படுத்திய பாதிப்பினை மறுப்பதற்கில்லை

    பதிலளிநீக்கு
  28. //1993 ஆகஸ்ட் மாதம்... சென்னை மெரினாவில் ஒரு பாசிசவாதி உண்ணா விரதம் என சொல்லி அடாவடி செய்த போது... மதுரை வானொலி நிலையத்தை பாசிசவாதியின் தொண்டர்கள் உடைதெறிந்த போது... தன் பிள்ளையோடு... போய் பார்த்து ஆசி வாங்கி வந்த பாலகுமாரன்... அடுத்த வார குமுதத்தில் கத்தியின்றி... ரத்தமின்றி என பாசிசவாதியை புகழ்ந்தாரே அன்று தொடங்கியது... பாலகுமாரனின் சரிவு...//

    அட பாவிங்களா என்னடா ஒரே அக்கபோரா இருக்கே? கருணாநிதியை பார்த்துவிட்டு வந்தால் அவர் மீண்டும் பெரிய அளாய் ஆகிவிடுவார்ரோ? உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு? அவருக்கும் போரடிக்கல? பாராட்டுர உங்களுக்கும் போரடிக்கல்? இப்பா நான் ஒத்துக்கரன் பா? கடவுள் ஒருத்தர் இப்ப இல்லபா.

    பதிலளிநீக்கு
  29. அவருடைய நாவல்கள் படித்துப் பித்துப் பிடித்திருக்கையில், திண்டுக்கல்லில் அவரை ஒரு விழாவில் நேரில் பார்த்த கணம் இன்னும் நினைவிலிருக்கிறது.

    ”வலியையும் அவமானத்தையும் பழகிக்க கத்துக்கோ ” - என்று அவர் சொன்னதன் முக்கியத்துவம் இப்போதும் புரிகிறது.

    அவரை திரும்பவும் வாசிக்க ஆவல் வருகிறது.

    நன்றி லக்கி.

    அன்பு நித்யன்

    பதிலளிநீக்கு
  30. நித்யா!

    அந்த சனிக்கிழமை நீங்கள் உள்ளிட்ட நண்பர்களோடு நடத்திய உரையாடலுக்குப் பிறகே மீண்டும் முன்கதை சுருக்கத்தை மீள்வாசிப்பு செய்யும் எண்ணம் தோன்றியது.

    எனவே உங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  31. Excellent article. May I know about the Book name. Interest to read the Book which you have mentioned. Thanks n Takecare.

    பதிலளிநீக்கு
  32. நல்ல அலசல், வாழ்த்துக்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  33. விகடன் குமுதம் தவிர்த்து தேடி தேடி வாங்கி படித்தது பாலகுமாரன் மட்டும் ஆனால் அது படித்த காலம் என்பதே யோசிக்க வேண்டியது. 22வயதில் திருப்பூந்துருத்தி படித்தது எல்லா நாவல்களிலும் பெண்ணை ஆர்த்தி எடுக்க தெய்வம் போல காட்சிப் படுத்தியது இதெல்லாம் அந்த வயதுக்கு தாங்காது. பாலா படிக்க வயது 30, 35 கடந்து வரவேணும் என்பது சரி. எண்ண ஓட்டம் மாறிப் போக உலகத்தை இன்றய உலகத்தை அணுக சிரமப்படுகிறார்கள்...

    பதிலளிநீக்கு