நீங்கள் புரட்சியாளராக வேண்டுமா? தமிழின உணர்வாளர் ஆக வேண்டுமா? தலித் மக்களின் காவலர் ஆக வேண்டுமா? நவீன இலக்கிய ஆர்வலர் ஆக வேண்டுமா? சுலபம், பெரியார், திராவிட இயக்கம், கலைஞரைத் திட்டினால் போதும். அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம் என்ன? சிம்பிள், பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கைதான். நவீன இலக்கியங்கள் பரவாமல் போனதற்கு காரணம் மு.க.அழகிரிதான் என்று ‘ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி’ யாக ‘ஆய்வாளர்களால்’ பயன்படுத்தப்படுவது திராவிடர் மற்றும் திராவிட இயக்கம்தான்.
சமீபத்தில் நண்பர் தமிழ்சசி பெட்னா விழா பற்றி எழுதியிருந்த இடுகையைக் காண நேர்ந்தது. செம்மொழி மாநாட்டையும் பெட்னாவையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது மாதிரியான நோக்கம் எதுவும் என்னிடமில்லை. ஆனால் ‘இனப்படுகொலையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?’ என்கிற கேள்வி செம்மொழி மாநாட்டிற்கும் பெட்னாவிற்கும் ஒருசேர பொருந்தித்தான் போகிறது என்பதே என் கருத்து.
இருக்கட்டும், இப்போது பதிவின் இறுதியில் சில முடிபுகளாக நண்பர் தமிழ்சசி முன்வைத்திருக்கும் கருத்துகளுக்கு வருவோம். இதுமாதிரியான கருத்துகள் பல சந்தர்ப்பங்களில் பலரால் முன்வைக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். இனி சசியின் கருத்துக்கள்.
’’திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது’’
திராவிட இயக்கம் குறித்து விமர்சனம் செய்வதற்கான காரணங்கள் தமிழ்ச்சூழலில் நிரம்பவே உள்ளன. எல்லா இயக்கங்களையும் போலவே திராவிடர் மற்றும் திராவிட இயக்கங்களும் தமிழ்வெளியில் பல சாதக மற்றும் பாதகமான செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் காரணமாக திராவிட இயக்கத்தின் மீது பழிபோடுவது அறியாமை அல்லது அபத்தம் என்றே சொல்ல வேண்டும். மேலும் எப்போதும் நிலையான அடையாளங்கள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. எனவே ‘இல்லாத திராவிட அடையாளம்’, ‘இருக்கும் தமிழ் அடையாளம்’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. காலந்தோறும் தமிழ் அடையாளங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இன்னமும் தமிழ் அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருளர், படுகர், நரிக்குறவர் மாதிரியான பழங்குடி இனங்கள் தமிழகத்தில்தான் வசித்துவருகின்றனர். இது ‘தமிழ் அடையாளம்’ என முன்வைக்கப்படும் பண்பாடு, வழிபாடு ஆகியவற்றுக்கு மாறாகவே உள்ளன.சொல்லப்போனால் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் ‘திராவிட அடையாளம்’ என்பதற்குத்தான் ஏராளமான அறிவியல்பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறிப்பாக செம்மொழி மாநாட்டில் நமக்கு எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. இவை திராவிட அடையாளம் குறித்த வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளன. மேலும் இந்த வரலாற்றுச் சான்றுகளுக்கு அப்பால் திராவிட இயக்கம் கட்டமைத்த ‘திராவிட அடையாளம்’ இப்போது தமிழ்சசி உள்ளிட்ட தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படும் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் வன்முறை குறைவானது, நெகிழ்வானது.
’’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று”
’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது’ என்று சசி சொல்வதற்கு ஏதாவது அடிப்படைகள் உள்ளனவா என்பதைத் தர்க்கத்தின் அடிப்படையில் யோசித்தால் எவ்வளவு அபத்தம் என்பது தெரியும். கடவுள் மறுப்பு என்பது எப்படி பார்ப்பனியப் பிடியில் தள்ளும்? 1925ல் சுயமரியாதை இயக்கத்தையும் குடியரசையும் தொடங்கிய பெரியார் நாத்திகத்தை அப்போது வலியுறுத்தவில்லை. சிறிதுகாலம் கழித்தே கடவுள்மறுப்பை வலியுறுத்த வேண்டியவரானார். அப்படியானால் சசியின் கருத்துப்படி கடவுள் மறுப்பு வலியுறுத்தப்படுவதற்கு முன்பு தமிழ்மக்கள் பார்ப்பனியப்பிடியில் சிக்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?
ஆனால் கடவுள்மறுப்பைப் பெரியார் இயக்கம் வலியுறுத்தியதை மறுத்து, வெளியேறிய திமுக ஓரிறைக் கொள்கையை முன்வைத்தபோதுதான் அது பெரிதும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்துகொண்டது என்பது வரலாறு. கடவுள் மறுப்பை முன்வைத்த திராவிடர் இயக்கம் மொழி தொடங்கி பல களங்களிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் 80 ஆண்டுகால திராவிடர் மற்றும் திராவிட இயக்கத்தின் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பே.
ஆன்மீகம் மனிதனுக்குத் தேவையான ஒன்றா இல்லையா என்பது தத்துவக் களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தம்மத்தை வலியுறுத்திய பவுத்தம் கடவுளை மறுத்தது. ‘உனக்கு நீயே விளக்கு’ என்றது. அமைப்பாகும்போது ‘தம்மம் சரணம்’ என்றும் ‘சங்கம் சரணம்’ என்றும் சொன்னது. மனிதனுக்கு அற மதிப்பீடுகளை வலியுறுத்த ஆன்மீகமும் மதமும் தேவை என்பது சாதாரண பொதுப்புத்தி. ஆனால் மதத்தின் இடத்தில் அறத்தை வைப்பவர்களுக்கு ‘ஆன்மீகம்’ என்பது அவசியமற்ற ஒன்று. கடவுளையும் மதத்தையும் மறுத்த பெரியார், அறவிழுமியங்களின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பதவி உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்த துறவியாக அவர் இருந்தார் என்பதும் மாபெரும் ஆன்மீகத் துறவியாக சாருநிவேதிதா போன்றவர்களால் முன்னிறுத்தப்படும் ரமணர், தனது சொத்தை சித்தப்பா மகனுக்கு எழுதி வைத்ததும், பெரியார் தனது சொத்து முழுவதையும் இயக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு, ‘’என்னிடம் பணம் எதுவுமில்லை, நான் சாப்பிடுவது இயக்கத்தின் காசு” என்று சொன்னதையும் ஒப்புநோக்கினால் அறமதிப்பீட்டிற்கும், சோ கால்ட் ‘ஆன்மீகத்திற்கும்’ ஒரு தொடர்புமில்லை என்பது விளங்கும். மேலும் ‘ஆன்மீகத்தின்’ தேவையை சசி வலியுறுத்தும் புள்ளியின் பலவீனத்தையும் காண்போம்.
‘’பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது”.
சாதாரண அடித்தட்டு மக்களுக்கு தமிழ்சசி வலியுறுத்தும் ‘ஆன்மீகம்’ குறித்து எதுவும் தெரியாது. வழிபாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், அது குறித்த கதைகள் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்டவர்கள் அடித்தட்டுமக்கள். அவர்களது வழிபாடுகளும் தெய்வங்களும் (’கடவுள்கள்’ அல்ல) சடங்குகளும் அவர்களது வாழ்க்கைமுறையினின்றும் பண்பாட்டிலிருந்தும் உருவானவை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபுகள்’ ஆதிசங்கரருக்கும் தாத்தாச்சார்ய சுவாமிகளுக்கும் ஜெயமோகனுக்கும் தெரியுமே அல்லாது சாதாரண சுப்பனுக்கும் குப்பனுக்கும் தெரியாது. இந்து பார்ப்பனியப் பெருந்தெய்வ மரபுக்கும் அடித்தட்டு மக்களின் நாட்டார்தெய்வங்களுக்குமான நுட்பமான வேறுபாடுகளைப் பெரியாரும் திராவிட இயக்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். இவற்றை மூடநம்பிக்கைகள் என்று கேலி செய்ததும் உண்மைதான். ஆனால் அடித்தட்டு மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நாட்டார்தெய்வ மரபுகளையும் பாதுகாத்துக்கொண்டே திராவிட இயக்கத்துடனுடனான தொடர்புகளை எவ்வாறு பேணினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும்பேச்சு’ என்று சொன்ன பொதுவுடைமை இயக்கத்தை விடவும் ‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன திராவிடர்கழகத்தையும் ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்று நாத்திகம் பேசிய திமுகவையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களின் சுயமரியாதையை அந்த இயக்கங்கள்தான் பேசின. மேலும் பொதுவாக நாத்திகம் பேசினாலும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் ‘போர் தொடுக்கவில்லை’ என்பதும்தான்.
இங்கு இன்னொன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது பார்ப்பனியப் பெருந்தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களுக்குமிடையிலான வேறுபாடுகளைத் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தி விவாதத்தைத் தொடங்கிவைத்தவர்களே கடவுள்மறுப்பாளர்களான இடதுசாரி மற்றும் திராவிட இயக்கச் சார்பாளர்களாகிய நா.வானமாமலை மற்றும் தொ.பரமசிவன் போன்ற ஆய்வாளர்களே. மேலும் இந்த சிறுதெய்வ வழிபாட்டை எந்தவித விமர்சன்முமின்றி நாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யவும் தேவையில்லை. ஏனெனில், சிறுதெய்வ மரபு என்பது பார்ப்பனப் பெருந்தெய்வ மரபுக்கு எதிராயிருக்கும் அதேவேளையில் அது ஒவ்வொன்றும் தனக்கே உரியதான சாதிய மற்றும் நிலப்பிரத்துவக்கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இனி, தமிழ்சசி வலியுறுத்தும் ‘மாற்று ஆன்மீகத்திற்கு’ வருவோம்.
‘பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை;”
என்று சொல்கிற தமிழ்சசி எது ‘மாற்று ஆன்மீகம்’ என்று குறிப்பிடவே இல்லை. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருவாரியான ‘இந்து’க்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய பிரக்ஞையுமில்லை, கவலையுமில்லை. அவர்கள் அதிகமும் பெரியாரோடு முரண்பட்டு உரசும் இடம் கடவுள்நம்பிக்கை தொடர்பானதாக இருக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொண்டே பார்ப்பனியம் மற்றும் சாதியை எதிர்த்தவர்கள் தோற்றுப்போனதற்கான விரிவான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நான் இங்கே பேச முயலவில்லை. ஆனால் தமிழ்சசி மட்டுமில்லாது பலரும் இப்போது வலியுறுத்தும் ‘ஆன்மீகத் தேவை’ குறித்து மட்டும் பேசலாம்.
இப்போது பெருகியுள்ள நவீன கார்ப்ரேட் சாமியார்கள் பெருக்கத்தின் பின்னணியிலேயே இதை அணுகலாம். ஜக்கிவாசுதேவ், நித்யானந்தா போன்றவர்கள் பேசும் ‘ஆன்மீகத்தை’ உற்றுக்கவனித்தால், அவை பெரும்பாலும் பவுத்த மற்றும் ஜென்பவுத்த சிந்தனைகளை உருவியதாக இருப்பதைக் காணலாம். இந்த கார்ப்பரேட் சாமியார்களும் அத்வைதம், துவைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபிலிருந்து’ பேசுவதில்லை. கடவுளை அதிகம் வலியுறுத்தாத, மய்யப்படுத்தாத ஆன்மீகமாகவே இவர்களுடையதும் இருக்கின்றன. நமது தமிழ்மரபில் நீண்டகாலம் தங்கியிருந்த பவுத்த, சமண மரபுகளின் கருத்துக்களையும் தியானம், யோகா போன்ற அவைதீக மரபுகளின் பயிற்சிகளையும் எடுத்து, ‘தியான லிங்கம்’ போன்ற இந்துத்துவக்குறியீடுகளை உருவாக்கி நமக்கே விற்பனை செய்கிறார்கள். இந்த கார்பரேட் சாமியார்களை அதிகமும் நாடிச் செல்பவர்கள் நடுத்தர வர்க்கத் தமிழர்கள்தான்.
நவீன வாழ்க்கை உடல் மற்றும் உளவியல் ரீதியிலாக ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்கள்தான் அவர்களைக் கார்ப்பரேட் சாமியார்களிடம் சரணடையச் செய்திருக்கிறதே அல்லாது, அவர்களின் ‘ஆன்மீக ஈடுபாடு’ அல்ல. இன்னமும் அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் குறிசொல்லும் சாமியார்களிடம் செல்கிறார்களே அல்லாது கார்ப்பரேட் சாமியார்களிடம் அல்ல. ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், அடுத்த மாதம் எப்படி இருக்கும் என்று ‘குறி கேட்கிற’ விருப்பம் மட்டும்தான் அவர்களின் அதிகபட்ச ‘ஆன்மீகம்’. மிஞ்சிப்போனால் இவர்கள் அதிகபட்சம் பங்காரு அடிகளாரைச் சரணடைவார்கள். அதற்குக் காரணம், பூணூல் அற்ற வெற்றுக் கருப்புடல் நோக்கிய தமிழர்களின் விழைவு, சக்தி பூஜை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தாய்த்தெய்வ வழிபாடு, மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் கருவறையில் சென்று பூஜை செய்யும் சுதந்திரம் ஆகியவை. தமிழ்சசி விரும்புகிறபடி நாம் மாற்று ஆன்மீகத்தை வளர்ப்பதாக இருந்தால் அதிகபட்சம் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மய்யத்தில் சேரலாம்.
தமிழ்சசி முன்னிறுத்தம் ‘கொண்டாட்டம்’ பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான். அந்த கொண்டாட்டத்தைத் தமிழர்கள் திராவிடக்கட்சி ஊர்வலங்கள் தொடங்கி டாஸ்மாக் வரை பலவழிகளில் அடைந்துகொண்டுதானிருக்கிறார்கள். எனவே கொண்டாட்டத்திற்கு மதமோ ஆன்மீகமோ அவசியமில்லை. மாறாக வறட்டுத்தனமான நமது இயக்கங்களின் அணுகுமுறையிலிருந்து நெகிழ்வடைந்து நாம் மாற்றுக்கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழ்சசியோ ஆன்மீகம், கொண்டாட்டம், ஆன்மீகத்தேவை போன்ற கருத்தாக்கங்களின் வழி வந்தடையும் முடிவு அபத்தமானது மற்றும் ஆபத்தானது.
'கடவுள் மறுப்பு நம்மை இந்துக்களாக மாற்றி விட்டது.நாம் சைவர்கள் என்பதை சொல்வதையே நான் வலியுறுத்துகிறேன்.' என்கிறார் தமிழ்சசி.
நம்மை ’இந்துக்களாக’ மாற்றியது அரசியலமைப்பின் தன்மையே அல்லாது கடவுள் மறுப்பு அல்ல. இதற்கு விரிவான பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. இருக்கட்டும், ஆனால் வெறுமனே தமிழ் அடையாளம் என்னும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் வந்துசேரும் இடம் இதுவாகத்தானிருக்கும். தமிழ்சசியால் கடவுள் மறுப்பால் அதிருப்தி அடைந்ததாகக் குறிப்பிடப்படும் தமிழர்களில் எத்தனை சதம் பேர் சைவர்கள்? தமிழர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் சைவ மதத்திற்குப் புறம்பானவர்கள். உணவுப்பழக்கம் தொடங்கி வழிபாடு வரை பெரும்பான்மையான தமிழ்ச்சாதிகள் சைவமதத்திற்கு அப்பால் உள்ளவர்கள். தமிழ்சசி சொல்வதைப் போல சைவத்தை வலியுறுத்தத் தொடங்கினால், வைணவ சமயத்தைக் கடைப்பிடிக்கும், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதைத்தான் நாம் ‘வெளித்தள்ளும் அரசியல்’ என்கிறோம்.
இறுதியாக தமிழ்மக்களுக்கு அவர்களது மொழி மற்றும் தேசிய இன அடையாளத்தின் அடிப்படையில் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க வேண்டியதும், அதற்காகத் தமிழின அடையாளத்தை வலியுறுத்த வேண்டியதும் அவசியமானவைதான். ஆனால், அதனூடாக நாம் இதுவரை பயணித்து வந்த ஒரு நெகிழ்வான, மதக்காழ்ப்பற்ற திசையிலிருந்து எதிர்த்திசைக்கு நம்மை நாமே தள்ளிவிடக் கூடாது. திமுக, கருணாநிதி போன்றவற்றின் மீதுள்ள கோபமும் உணர்ச்சியடிப்படையிலான அவசர முடிவுகளும் நமக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும். இதன் பொருள், திராவிட அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்ற பெயரில் கலைஞரின் தமிழின விரோத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், தமிழக அரசை விமர்சனமற்று ஆதரிப்பதுமல்ல. மாறாக, திராவிட இயக்க அடிப்படைகளிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டே தமிழின உரிமைப்பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதுவே.
எழுதியவர் : சுகுணாதிவாகர்
like...like...
பதிலளிநீக்குREALLY A WORTH POST... WOW.. KEEP IT UP.
பதிலளிநீக்குஎதையோ எழுத நினைத்து, உணர்ச்சி தாக்கத்தில்,தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முயற்சித்திருக்கிறார்.
பதிலளிநீக்குஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை பத்திக்கு பத்தி மாற்றி எழுதுயிருப்பது வேடிக்கை...
காலம் கிடைப்பின், நிதானமாக தன் எழுத்துக்களை தானே ஒருமுறை படித்துப் பார்ப்பாராக.....
எனக்கு இந்தப் பகிர்வு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக ஆன்மீகம் குறித்த தமிழ்சசியின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் சுகுணாவின் கருத்துகள் தேர்ந்தவை.
பதிலளிநீக்குகாலம் காலமான தளைகளில் சிக்குண்டு ஏற்கனவே சுயமரியாதை, மானம் போன்றவற்றை இழந்து ஒரு அற்பமாக கிடக்கிறது தமிழினம். அதைச் சொல்லிக்காட்டி கொஞ்சமேனும் சுரணை வரச்செய்தது திராவிட இயக்கங்களே. தொடர்ந்து கொண்டு செல்லாமல் இன்று அவை அதை மறந்துவிட்டது வேறு விஷயம். ஆன்மீகமோ, மாற்று ஆன்மீகமோ.. மனிதனை சுயமரியாதையற்ற பூச்சிகளாக்கவே செய்யும் (வரிகள் தனி, என்பது போல அதன் பிற விளைவுகள் எக்ஸ்ட்ரா).
கலைஞரையும்,திமுகவையும் திட்டுவதற்கு எல்லா விஷயத்தையும் பயன்படுத்துபவர்கள் யார் என்பது தெரிந்த விஷயம் தானே?
பதிலளிநீக்குஅருமையானப் பதிவு!!! நண்பர்களிடம் பேசும் போது
பதிலளிநீக்குஇதிலிருந்துக் குறிப்பெடுத்து விவாதிக்கலாம்
//குறிப்பாக செம்மொழி மாநாட்டில் நமக்கு எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. இவை திராவிட அடையாளம் குறித்த வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளன.//
பதிலளிநீக்குசெவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்ல.
இதற்கு இப்போது ஒரு அவசியமே இல்லை. சாதிகளைப் போல் இயக்கங்களைக் குறைத்து , இருப்பனவற்றை செழிப்பாக்கும் மேம்படுத்தும் , பணிகளை விட்டு விட்டு மாற்று சிந்தனை என இவ்விதம் செயல்படுவது பெரியார் மற்றும் திராவிடக் கழகங்கள் (அதிமுக அல்ல) எந்தக் கட்டமைப்பினை எதிர்த்தனவோ அதற்கு முற்றிலும் துணை போவதாகவும், சாதகமாகவுமே அமையும்.
பதிலளிநீக்கு//ஆனால் ‘இனப்படுகொலையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?’ என்கிற கேள்வி செம்மொழி மாநாட்டிற்கும் பெட்னாவிற்கும் ஒருசேர பொருந்தித்தான் போகிறது என்பதே என் கருத்து.//
பதிலளிநீக்குஇந்த வரிகள்தானே உங்களுக்கு பிடித்தது?
//ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை பத்திக்கு பத்தி மாற்றி எழுதுயிருப்பது வேடிக்கை...//
பதிலளிநீக்குஆருரன் அவர்களே!
அப்படியென்ன முரண்கள் இருக்கின்றன என்று பட்டியலிட்டால் நன்று.
இல்லையேல் டைம்பாஸுக்காக வார்த்தைகளில் குதிரை ஓட்டியவர் தாங்கள் என்று வரலாறு தூற்றும்!
Will this post comes under "teaser" marketing or "Negative" marketing??
பதிலளிநீக்குஅன்பிற்கு நன்றி கிருஷ்ணா, தமிழ் சசியின் பேச்சு சரி என்றோ தவறு என்றோ நான் பேச வரவில்லை. அதற்கு, சுகுணாவின் பதில்களில் தான் எல்லா குழப்பங்களும்.
பதிலளிநீக்கு// காலந்தோறும் தமிழ் அடையாளங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.//
தமிழ் அடையாளங்கள் என்று இவர் சொல்ல வருவது எதை? அவை எப்படி மாறியிருக்கின்றன.
//இன்னமும் தமிழ் அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருளர், படுகர், நரிக்குறவர் மாதிரியான பழங்குடி இனங்கள் தமிழகத்தில்தான் வசித்துவருகின்றனர்.//
தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழரா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் சொல்லும் பழங்குடி இனத்தவர்களின் தாய்மொழி தமிழல்ல.
//‘இல்லாத திராவிட அடையாளம்’, ‘இருக்கும் தமிழ் அடையாளம்’ என்றெல்லாம் ஒன்றுமில்லை//
சொல்லப்போனால் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் ‘திராவிட அடையாளம்’ என்பதற்குத்தான் ஏராளமான அறிவியல்பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன
//திராவிட இயக்கம் கட்டமைத்த ‘திராவிட அடையாளம்’ இப்போது தமிழ்சசி உள்ளிட்ட தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படும் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் வன்முறை குறைவானது, நெகிழ்வானது.//
//டவுள்மறுப்பைப் பெரியார் இயக்கம் வலியுறுத்தியதை மறுத்து, வெளியேறிய திமுக ஓரிறைக் கொள்கையை முன்வைத்தபோதுதான் அது பெரிதும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்துகொண்டது என்பது வரலாறு//
//கடவுள் மறுப்பை முன்வைத்த திராவிடர் இயக்கம் மொழி தொடங்கி பல களங்களிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் 80 ஆண்டுகால திராவிடர் மற்றும் திராவிட இயக்கத்தின் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பே./
80 ஆண்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது என்ன கணக்கில் என்று சொல்ல முடியுமா? கழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பண எதிர்ப்பாய் இன்று வரை என்ன செய்திருக்கிறார்கள்....அண்ணா கூட ஆட்சிக்கு வந்தபின் பார்ப்பண எதிர்ப்பை பேசவில்லை....இன்று வரை கலைஞர் தான் என்ன பேசியிருக்கின்றார்.....
//‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன திராவிடர்கழகத்தையும் ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்று நாத்திகம் பேசிய திமுகவையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்//
அண்ணா காலத்திலேயே கடவுள் மறுப்பு கைவிடப் பட்டு ஓரிறை கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று திமுக சொல்ல வில்லை....
பொதுவாக நாத்திகம் பேசினாலும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் ‘போர் தொடுக்கவில்லை’ என்பதும்தான்.
இப்படி பத்திக்கு பத்தி முரண்பாடுகளை சொல்ல முடியும்.
ஒரு கேள்வியின் பதில் அடுத்த கேள்வியின் பதிலை நகைப்புள்ளாக்கும் விதமாக அமைந்திருப்பதைத்தான் நான் முரண்பாடு என்றேன்......
யார் மீதும், எந்த ஒரு தனிப்பட்ட தாக்கமோ, வெறுப்போ எனக்கு இல்லை.
இந்த இடுகையை தமிழ் சசிக்கான பதிலாக எடுத்துக்கொள்ளாமல், அவற்றை நீக்கிவிட்டு, மீத அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே கட்டுரையாக இணைத்து படித்துப் பாருங்கள். ஒருவேளை வித்தியாசங்கள் புலப்படலாம்.
அன்புடன்
ஆரூரன்
நன்றி ஆரூரன்.
பதிலளிநீக்குமுதலாவதாக ‘தமிழர்’ என்னும் வரையறை காலந்தோறும் மாறிக்கொண்டேதானிருந்திருக்கிறது. ‘மாட்டுமாமிசம் தின்னாதார் தமிழர்’ என்பதும் ‘பறையனொழிந்த தமிழ்ச்சாதியார்’ என்பதும் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வெள்ளாள அடிப்படையிலான தமிழ்த்தேசியத்தின் வரையறைகள். இன்னமும் நீங்கள் சென்னை தவிர்த்த பிற பகுதிகளுக்குச் சென்றால் முஸ்லீம், தமிழாள் என்று பிரித்து பேசப்படுவதைப் பார்க்கலாம். தமிழ் அடையாளம் என்றால் சோழர்நாகரிகம், தஞ்சைப்பெரிய கோயில் என்றால் அதில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன பங்கு இருக்க முடியும்? ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர்கழகம், அண்னாவின் தி.மு.க ஆகியவை பார்ப்பனரல்லாதவர்கள் அனைவரையும் தமிழர்/ திராவிடர் என்னும் வரையறைக்குள் கொண்டுவந்தன. எப்போதும் அவை இறுக்கமான வரையறைகளை முன்வைத்ததில்லை. பார்ப்பனர்களைப் பெரியார் விலக்கி வைத்து இன அடிப்படையிலான இயக்கம் கட்டியபோது, அண்ணா திராவிடநாடு என்று நில அடிப்படையிலான வரையறையை முன்வைத்தார். ‘பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதில்லை” என்று கறாராக இருந்ததில்லை என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் தி.மு.க பெரும்பான்மைப் பார்ப்பனரல்லாத கட்சியாகத்தான் இன்றளவும் இருந்துவருகிறது. காங்கிரஸ், பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போன்றவற்றோடு ஒப்பிடும்போது இன்றளவும் ஒப்பீட்டளவில் தி.மு.கவில் பார்ப்பனர் எண்ணிக்கை குறைவு. பண்புரீதியாக அது பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கமாகத்தானிருக்கிறது. அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் பார்ப்பனர் எதிர்ப்பில் சமரசங்கள் செய்துகொண்டாலும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கலைஞர் பார்ப்பன எதிர்ப்பு பேசத் தவறுவதில்லை. மேலும் பார்ப்பனர்களும் கலைஞரை முதல்நிலை எதிரியாக வைத்துத்தான் மதிப்பிடுகிறார்கள்.
/தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழரா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் சொல்லும் பழங்குடி இனத்தவர்களின் தாய்மொழி தமிழல்ல./
பழங்குடி இனத்தவர்களின் தாய்மொழி மட்டுமல்ல, தமிழகத்தில் 40 சதத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தமிழ் தாய்மொழி அல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பல ஆண்டுகாலம் சிறையிலிருந்த வைகோ, கோவைராமகிருஷ்ணன் ஆகியோரின் தாய்மொழி தமிழ் அல்ல. இன்னமும் ‘தமிழ் பேசும் சாதிகள்தான் தமிழர்கள்’ என்னும் குணா தொடங்கி வைத்த வாதத்திற்கு கணிசமான ஆதரவு உண்டு. தமிழ்சசியின் குரலில் குணாவின் சாயல் ஒலிப்பதும் கூட அதற்கான சான்று. ஆனால், திராவிட இயக்கம் இப்படி பெரும்பான்மையான மக்களை வெளித்தள்ளாமல் அனைவரையும் அரவணைத்ததுதான் அதன் சிறப்பு. தேசியம் என்பதும் அடையாளம் என்பதும் இயல்பானவை அல்ல, அவை கட்டமைக்கப்பட்டவையே என்கிற கருத்தில் கொஞ்சமாவது பரிச்சயம் இருந்தால்தான், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். இல்லை, இதுதான் முதல்வாசிப்பு என்றால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கும்
/தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழரா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் சொல்லும் பழங்குடி இனத்தவர்களின் தாய்மொழி தமிழல்ல./
பதிலளிநீக்குபழங்குடி இனத்தவர்களின் தாய்மொழி மட்டுமல்ல, தமிழகத்தில் 40 சதத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தமிழ் தாய்மொழி அல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பல ஆண்டுகாலம் சிறையிலிருந்த வைகோ, கோவைராமகிருஷ்ணன் ஆகியோரின் தாய்மொழி தமிழ் அல்ல. இன்னமும் ‘தமிழ் பேசும் சாதிகள்தான் தமிழர்கள்’ என்னும் குணா தொடங்கி வைத்த வாதத்திற்கு கணிசமான ஆதரவு உண்டு. தமிழ்சசியின் குரலில் குணாவின் சாயல் ஒலிப்பதும் கூட அதற்கான சான்று. ஆனால், திராவிட இயக்கம் இப்படி பெரும்பான்மையான மக்களை வெளித்தள்ளாமல் அனைவரையும் அரவணைத்ததுதான் அதன் சிறப்பு. தேசியம் என்பதும் அடையாளம் என்பதும் இயல்பானவை அல்ல, அவை கட்டமைக்கப்பட்டவையே என்கிற கருத்தில் கொஞ்சமாவது பரிச்சயம் இருந்தால்தான், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். இல்லை, இதுதான் முதல்வாசிப்பு என்றால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கும்.
80 ஆண்டு பார்ப்பன எதிர்ப்பு என்பது என்ன கணக்கில் என்று கேட்கிறீர்கள். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925. அண்ணா முதன்முதலில் பார்ப்பனரல்லாத அமைச்சரவையை உருவாக்கினார். இது அன்றைய காலத்தில் சாதனை. கலைஞர் பார்ப்பன எதிர்ப்பைப் பேசியதற்கு, பேசிவருவதற்கு லக்கியே பல சான்றுகளைத் தரமுடியும். அண்ணா காலத்தில் தேர்தலுக்காக கடவுள் மறுப்புக்கொள்கை கைவிடப்பட்டாலும் அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத, மதியழகன், கலைஞர், அன்பழகன் போன்ற பல முன்னணித்தலைவர்கள் நாத்திகர்களாகவே கடைசிவரை வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்.
திமுக என்பது பலதளங்களில் சமரசம் செய்துகொண்ட கட்சிதான் என்றாலும் திராவிட இயக்கத்தின் அடிப்படைகள் என்று சொல்லப்படுபவற்றின் பல எச்சங்களைப் பேசுவதிலும் அதைக் கொஞ்சமே கொஞ்சமாவது கடைப்பிடிப்பதாலும் தி.மு.கவை மட்டும்தான் திராவிட இயக்கம் என்று சொல்லமுடியும். பெரியாரியக்கங்களை நான் திராவிட இயக்கம் என்று குறிப்பிடுவதில்லை, திராவிடர் இயக்கங்கள் என்றுதான் குறிப்பிடுகிறேன். அந்த புரிதலில் உள்ள குறைபாடுகள்கூட உங்களது மேற்கண்ட கேள்விகளுக்குக் காரணமாய் இருக்கலாம்
பதிலளிநீக்குஇந்தத் தலைப்புகளில் இன்னும் நிறைய எழுதுங்களேன். ஒரேயடியாக ஊரே திராவிட இயக்கங்களின் சீரழிவுகளை மட்டுமேப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பக்கம் கருணாநிதி இருப்பதாலேயே அது தவறானதாகப் படுகிறது - அவர்களுக்கு வேறு காரணங்கள் தேவை இல்லை. இத்தகையச் சூழலில் இது போன்ற கட்டுரைகளும் காலத்தைப் பின் நோக்கும் ஆய்வுகளும் மறு தரப்பு வாதங்களும் மிகத் தேவை என நான் நினைக்கிறேன். நிறைய இந்தத் தலைப்புகளில் இன்னும் எழுதுங்களேன்.
பதிலளிநீக்கு//ரமணர், தனது சொத்தை சித்தப்பா மகனுக்கு எழுதி வைத்ததும்//
பதிலளிநீக்குகட்டுரையாளர்க்கு ஒரு செய்தி. ரமணர் எந்த காலத்திலும் கையொப்பமிட்டதில்லை. எதையும் தனது என்று சொல்லியதில்லை. நிரூபித்தால் நன்று.