9 ஜூலை, 2010

என்ன செய்யலாம்?

’காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

திண்டுக்கல் டிராஃபிக் சிக்னலில் ஒரு மனநோயாளி அலைந்து திரிந்துக் கொண்டிருப்பார். அவரைக் கண்ட ஒரு சாமானியர், அவருடைய பராமரிப்பில் மனநோயாளியைக் கொண்டு செல்வதாக படம் முடியும். மனநோய் அவருக்கு ஏற்படுவதற்கு காரணமான பெண்ணின் கணவர்தான் அந்த சாமானியர்.

படம் பார்த்தவர்கள் கைத்தட்டி அச்சாமானியரை பாராட்டினார்கள். கைத்தட்டிய லட்சக்கணக்கானவர்களில் நாமும் இருக்கக்கூடும். அன்று நாம் கைத்தட்டியது தவறோ என்று எண்ணக்கூடிய வகையில் ஒரு கட்டுரையையும், அக்கட்டுரை எழுத நேர்ந்ததற்கு ஆதார வினையான ஒரு அறிக்கையையும் நேற்று வாசிக்க நேர்ந்தது.

சாலைகளில் அனாதரவாகத் திரிபவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு மனநலம், உடல்நலம் சரிசெய்து பராமரிப்பது என்ற திட்டத்தை இரு மாதங்களுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி செயல்படுத்த தொடங்கியது.

நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வகையில் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு அவர்களில் சிலர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏதோ ஒரு உலகமயச் செயல்பாடு இருப்பதாக அறிந்த உண்மை அறியும் குழு ஒன்று களத்தில் இறங்கி ‘உண்மையை’ அறிந்து ஒரு அறிக்கையினையும் வெளியிட்டிருக்கிறது. நாற்பதாண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்’ ஏன் தோல்வி அடைந்தது? என்ற நெடுநாள் கேள்விக்கான விடை இப்போதுதான் நமக்கு கிடைக்கிறது.

முதலில் நாம் முன்பு வாசித்த கட்டுரைக்கு வருவோம்.

“பிச்சைக்காரர்களை இல்லாமலாக்குவது என்ற நோக்கத்தையும் உண்மையிலேயே அது நிறைவேற்றுமானால், அதை ஒரு இன அழிப்பு (ethnic cleansing) என்கிற வகையில்தான் பார்க்க முடியும்” என்பதாக மாற்றுச்சிந்தனையோடு கட்டுரை ஆசிரியர் ரோஸாவஸந்த் குறிப்பிடுகிறார்.

நமக்கு உண்மையிலேயே புரியவில்லை. “பிச்சைக்காரன் என்பது ஒரு இனமா?” என்று சுந்தரராமசாமியின் ஜே.ஜே. தனக்குள்ளே அடிக்கடி ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டதைப்போல நாமே ஒருமுறை நம்மை கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுமேரியம், திராவிடம், ஆரியம், எகிப்து கலாச்சாரம் மாதிரி இதற்கு ஏதேனும் பண்பாடு இருக்கிறதா என்றும் புரியவில்லை.

‘வறுமை கொடிது’ என்பதை பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருக்கிறோம். அதை ஒழிக்க வேண்டும் என்றும் வர்க்கம், சாதி, இத்யாதி வேறுபாடின்றி உறுதி கொள்கிறோம். வறுமையின் கீழான நிலையான பிச்சை எடுக்கும் நிலையை ஒழிப்பது எவ்வகையில் இனஒழிப்பு என்று நிஜமாகவே தெரியவில்லை. பொதுப்புத்தி, தனிப்புத்தி, மாற்றுப்புத்தி என்று எந்த புத்தியை பயன்படுத்தி யோசித்தாலும் எந்த நியாயமும் நமக்கு உடன்படவில்லை.

அடுத்ததாக, “அரசினால் மேற்கொள்ளப் படும் இப்படிப்பட்ட ஒரு பணி, நாய்களை இல்லாமலாக்கும் அதே மனநிலையுடனேயே நிகழ வாய்ப்பிருக்கிறது. ” என்றும் கட்டுரையாசிரியர் தொடர்கிறார். இந்த ஒப்புமையை எவ்வகையிலும் ஏற்க இயலாது. அதேநேரத்தில் கட்டுரையாசிரியர் இரவு 12 மணி வேளையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலையை கடக்க வேண்டும். கொலைவெறியோடு குதற ஓடிவரும் தெருநாய்களை எதிர்கொண்டுவிட்டு ‘நாய் ஒழிப்பு’ குறித்த தன்னுடைய சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கிறோம்.

நீங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் இத்தலைப்பில் வாசித்திருக்கலாம். “புழுதிவாக்கத்தில் 15 பேரை கடித்த குதறிய தெருநாய்!”. இவ்வகையிலான தெருநாய்களை கட்டுப்படுத்த கட்டுரையாசிரியரிடம் ஏதேனும் சீரியத் திட்டம் இருக்கிறதாவென்று தெரியவில்லை. இப்போதைக்கு இந்நாய்களை பிடித்துச் சென்று நகராட்சி குடும்பக்கட்டுப்பாடு செய்து அனுப்புகிறது. அரசால் முடிந்த அதிகபட்ச ஜீவகாருண்யம் இதுதான்.

அடுத்ததாக பிச்சைக்காரர்களை உருவாக்கும் ‘மாஃபியா’ கும்பலை ஒழிக்கவேண்டும் என்று கட்டுரையாசிரியர் கோருகிறார். மிக நியாயமான கோரிக்கை. ஆனால் இப்படி ஒரு கும்பல் இருப்பது ஆதாரப்பூர்வமாக, வெளிப்படையாக தெரியாத நிலையில் போலிஸ் வெறுமனே காற்றில் கத்தியை சுழற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

ஓக்கே, இந்த கட்டுரையை அலசியது போதும். ஆதார வினையான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்கு வருவோம்.

மனநலம் சரியில்லாதவர்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் பலரும் நல்ல மனநலத்தோடு இருக்கிறார்கள் என்பதே அக்குழு கொடுத்திருக்கும் அறிக்கையின் மையக்கருத்தாக எடுத்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு குழுவில் ஒரு மனநல மருத்துவர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். மாறாக மனித உரிமைப் போராளிகள் இருவரும், முன்னாள் கல்வி முதல்வரும், மென்பொருள் பணியாளர் ஒருவரும் குழுவின் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் அறிக்கையோ பிச்சைக்காரர்களைப் பிடித்து வந்த குழுவில் மனநல மருத்துவரோ, மருத்துவரோ இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. வேடிக்கையாக இல்லையா? மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் எத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப்படையை உண்மை அறியும் குழு அறியத் தவறி விட்டதா?

இக்குழு மூன்று நாட்களில் தொற்றுநொய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம், மேல்பாக்கம் பிச்சைக்காரர்கள் அரசு பாதுகாப்பு முகாம் ஆகியவற்றிற்குச் சென்று விசாரித்திருப்பதாக அறிக்கையில் தெரியவருகிறது. அறிக்கையின் படி பிடித்துவரப்பட்டவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் இக்குழு விசாரணை நடத்தியிருக்கிறது. பெரிய எண்ணிக்கையிலான ஆட்களோடு முழுமையான விசாரணையை மூன்றே நாட்களில் செய்யக்கூடிய திறன் நிச்சயமாக நான்கு பேர் கொண்ட ஒரு குழுவுக்கு இருக்க வாய்ப்பேயில்லை என்பதை இங்கே ஒரு சவாலாகவே குறிப்பிடுகிறோம்.

ஒரு மனநல மருத்துவர் கூட இல்லாத ஒரு குழு, பிடித்து வரப்பட்டவர்கள் நல்ல மனநிலையோடு இருக்கிறார்கள் என்ற உறுதியை எப்படித் தரமுடியும்? கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இவர்களை in-patient ஆக சேர்த்துக்கொண்ட மருத்துவர்கள் எல்லாம் கோயிந்தசாமிகளா?

ஒரு மனநோயாளியைப் பார்த்து “நீங்கள் மனநோயாளியா?” என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? நம் குழு விசாரித்து அறிந்த ‘உண்மை’ இந்தவகையில்தான் இருக்கிறது.

சாலையில் அனாதரவாகத் திரியும் மனநோயாளிகளால் சமீபகாலமாக நகரில் தொடர்ந்து வந்த குற்றங்களின் அடிப்படையிலும் நாம் மாநகராட்சியின் இத்திட்டத்தைப் பார்க்க வேண்டும். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகள் எரிக்கப்படுவது, வாட்ச்மேன்கள் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்வது மாதிரியான குற்றங்களை கைதேர்ந்த குற்றவாளிகளா செய்வார்கள்?

இந்த உண்மை அறியும் குழு, திட்டம் செயல்படுவதற்கு முன்பாக சாலைகளில் அனாதரவாக திரிபவர்கள் பற்றி விசாரித்து, அவர்களது அவலங்களைப் போக்க ஏதேனும் பரிந்துரைகளை அரசுக்கு தந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. மாறாக திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு நவசக்தியில் வந்த எண்ணிக்கை வேறு, மேயர் மேடையில் பேசும் எண்ணிக்கை வேறு என்று பிரச்சினையை வேறுமாதிரியாக ZOOM செய்து, திட்டத்தை முடக்க எதையாவது கிளப்பிவிடுகிறார்களா என்று தெரியவில்லை. பிடித்துவரப்படுபவர்களை மனநலக் காப்பகத்தில் சேர்க்கக்கூடாது என்று கோரிய வழக்கினை மாநகராட்சி சட்டப்பூர்வமாக கையாண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று.

இத்திட்டத்தின் மூலம் காணாமல் போனவர்களாக அறியப்பட்டவர்கள் சிலர் தத்தம் இல்லங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள் போன்ற ஏராளமான ‘பாசிட்டிவ்’ கோணங்கள் எதையும் நாம் இக்கட்டுரையில் முன்வைக்கவில்லை. அவற்றை ஏற்கனவே ஊடகங்கள் பிரசுரித்து வந்து கொண்டிருக்கின்றன என்பதால்.

மேலும், சமூகநல வாரியத்தின் தலைவராக எழுத்தாளர் சல்மா இருக்கிறார். அவரது கோரிக்கையின் படியே இத்திட்டத்தை சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. எனவே இதற்குள் ஏதாவது ‘உள்ளரசியல்’ இருக்கிறாவென்றும் தெரியவில்லை.

மனித உரிமைகளுக்கு எதிரானது என்று குழு சொல்லும் மாநகராட்சியின் இத்திட்டம் தேவையில்லை என்றே வைத்துக் கொள்வோம். நம் முன் இருப்பது ஒரே ஒரு கேள்விதான். “சாலைகளில் அனாதரவாகத் திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகளை என்ன செய்யலாம்?” அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் குழுவின் அறிக்கையை வாசிப்பவர்களுக்கு தோன்றும்.

10 கருத்துகள்:

  1. இந்த மன நோயாளிகளை காக்க என்ன உங்கள் அபிமான அரசு/மாநகராட்சி என்ன திட்டம் வைத்து இருக்கிறது என்பதையும் விளக்கி இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. வெற்றி!

    முழுக்க இராமாயணம் கேட்டுவிட்டு சீதை இராமனின் பாட்டியா என்று கேட்கிறீர்களே? :-(

    பதிலளிநீக்கு
  3. லக்கி,உண்மையிலேயே மேயருக்கு நல்லது செய்யனும்னு எண்ணமிருக்கு.ஆனா
    இவங்க பண்ற கூத்து பெருஙுகூத்து.

    பதிலளிநீக்கு
  4. லக்கி...இவ்ளோ தானா? ரோசாவின் கட்டுரையைப் புரிந்து கொள்ள மறுத்தீர்களா? அல்லது கட்டுரையை முழுதும் படிக்கவே இல்லையா? இன்றைக்கு என்னால் சேலஞ்ச் பண்ண முடியும் எந்த ஒரு நாட்டிலும்/நகரத்திலும் ஹோம்லெஸ் அல்லது பிச்சைக்காரர்கள் இல்லாமல் ஆக்குவது மிகவும் கடினம் அல்லது முடியவே முடியாது. நோர்வே வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். ரோசா சொல்லவந்ததின் கருத்தே வேறு. மீள் வாசிப்பு செய்யவும்...இன்னமுமா உங்களுக்கு கொ ப செ கொடுக்காம இருக்காங்க?

    பதிலளிநீக்கு
  5. பொட்டீ!

    நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். ரோசா சொல்ல வந்த கருத்து என்ன என்பது அப்போதாவது தெளிவாகிறதா என்று பார்க்கலாம் :-(

    பதிலளிநீக்கு
  6. லக்கி :(

    ஒருவர் பிடித்து வரப்பட்டால் அவர் மனநிலை பிறண்ட்வர் ,அவருக்கு மருத்துவ சான்று இல்லாவிடினும் அவர் லூசுன்னு ஒத்துக்கவா போறார்? அப்போன்னா அவர் பித்து பிடித்தவர் தானே என்பது போல் எழுதியுள்ளீர்கள்.

    புள்ளி விவரங்களுக்கு பதில் , பதில் புள்ளி விவரங்களே தவிர மேம்போக்கான வாதமில்லை.

    113 பேர்களின் 14 பேருக்கு மட்டுமே மாஜிஸ்ட்ரேட் ஆடர் உள்ளது.மற்றவர்களுக்கு? ( எனக்கு சட்டம் தெரியாது , அவர்கள் சொல்லும் சட்டம் சரியென நம்பி சொல்கிறேன்.உங்களுக்கு இது தவறு என்று தெரிந்தால் மறுக்கவும்)

    பிடித்து வரப்பட்டவர்களில் 40% வேற்று மொழி பேசுபவர்கள்.Migrant workers ஆக இருக்கலாம்.அவர்களை எப்படி விசாரித்து மன நிலை பிறண்டவர்கள் என முடிவுக்கட்டப்பட்டது? மொழி பேசத்தெரியாதவர்களிடம் எதுவுமே விசாரிக்காமல், இவன் பைத்தியம்ன்னு ஒத்துகவா போரான் என்பது போன்ற வாதம் ஒப்புக்கொள்ளக்கூடியதா?

    ரோசா சொன்னதில் குலோபல் உண்மை பிச்சைக்காரர்கள் இல்லாமல் ஆக்குவது என்பது இந்தியா/பாக் போன்ற நாடுகளில் வன்முறையின் ஊடாக தான் நிறைவேற்றப்படும் என்கிறார்.அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் , செய்யும் வழிமுறையில் சமூகத்தின் அடித்தளத்தில் இருப்போருக்கு பாதிப்பு வந்தால் ( வர அனைத்து வாய்ப்புகளும் உள்ளன) அதற்காகவே இது போன்ற அறிக்கைகள் உண்மையானவை.இதையே அவர் சொன்னதின் சாரமாக நான் பார்க்கிரேன்.உங்களுக்கு புரியவில்லை என்பதில் உணமையில்லை.புரிந்தும் இப்படி எழுதுவதில் நியாயமில்லை.

    பதிலளிநீக்கு
  7. //ஒரு மனநோயாளியைப் பார்த்து “நீங்கள் மனநோயாளியா?” என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? நம் குழு விசாரித்து அறிந்த ‘உண்மை’ இந்தவகையில்தான் இருக்கிறது.//

    சரி தான்

    பதிலளிநீக்கு
  8. தினம் தினம் வீட்டிலிருந்து விரட்டப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.

    அவர்கள் கோவில்களிலும், பிற பொது இடத்திலும் தங்கள் வாழ்க்கையை நகர்த்தவேண்டிய காலக் கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

    இதை தடுக்க ஒரு கடுமையான சட்டம் தேவையில்ல கொஞ்சம் அன்பே போதும்!.

    பதிலளிநீக்கு
  9. லக்கி சார்,

    ////கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இவர்களை in-patient ஆக சேர்த்துக்கொண்ட மருத்துவர்கள் எல்லாம் கோயிந்தசாமிகளா?////

    கோவிந்தசாமி என்ற பெயர் கொண்டவர்கள் சார்பாகக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!

    நிற்க ! சீரியசாகப் பேச வேண்டுமென்றால் , இந்த மாதிரி அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளை (அது எந்தக் கட்சி அரசாக இருந்தாலும் சரி ) எல்லாம் குறை சொல்வதற்கென்றே பல கோஷ்டிகள் உண்டு என்பது தெரிந்ததுதானே ! காணாமல் போன பையனோ பெண்ணோ திரும்பக் கிடைத்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும் இத்திட்டத்தின் அருமை!

    நன்றி!

    சினிமா விரும்பி

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    பதிலளிநீக்கு