3 ஜூலை, 2010

எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா?


‘தி கேப்’ என்று அழைக்கப்படும் அந்த மலைமுகடு ஆஸ்திரேலியாவில் ரொம்ப ஃபேமஸ். தற்கொலை செய்துக்கொள்ளும் மகாஜனங்கள் கடைசியாக தரிசிக்கும் புண்ணியஸ்தலம். கிட்டத்தட்ட நம்மூர் ‘சூசைட் பாயிண்ட்’ மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்.

புன்னகை மன்னன் கமல் சாடையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு குதிக்கத் தயாராகிறான். இளைஞன் என்பதால் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியாக தானிருக்கும். குதிக்க தயக்கம். பெற்றோர்களின் நினைவு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சோகம் மனதை அப்ப நீச்சல் வீரனின் பாணியில் கைகளை பின்னுக்கு இழுத்து கால்களைத் தூக்க முயற்சிக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! என்னோடு ஒரு கப் காபி சாப்பிடமுடியுமா?” ஒரு வயதான குரல் கேட்கிறது.

ஏதோ சினிமாவில் வரும் இறுதிக்காட்சி இதுவென்று நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சிட்னி துறைமுகத்தின் நுழைவாயிலான ‘தி கேப்’ பகுதியில் இக்காட்சி சகஜம். சராசரியாக வாரத்துக்கு ஒருவர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். காப்பி சாப்பிட அழைக்கும் பெரியவரின் பெயர் டான் ரிட்சீ. இப்போது 84 வயதாகிறது. அந்த ஊர் எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தவராம். எனவேதான் உயிரின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த தற்கொலை முகடுக்கு அருகிலேயே ரிட்சீயின் வீடு அமைந்திருக்கிறது.

“அவருடைய சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. புன்னகையோடு அவர் பேசிய கனிவான மொழிதான் இன்னும் என்னை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் கெவின் ஹைன்ஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்து ரிட்சீயால் காப்பாற்றப்பட்டவர்.

ரிட்சீ கணக்கில் கொஞ்சம் வீக். எனவே எவ்வளவு பேரை காப்பாற்றியிருக்கிறார் என்று துல்லியமான கணக்கெடுப்பு எதுவும் அவரிடம் இல்லை. 160க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் இம்மாதிரியாக மறுஜென்மம் எடுக்க வைத்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தவர்கள் சொல்கிறார்கள்.

காப்பி சாப்பிடும் அந்த மூன்று நிமிட அவகாசம் போதும். எத்தகைய சோகமும் நீரில் உப்பு கொட்டியதைப் போல கரைந்துவிடும். தனது மன அழுத்தங்களை சூடான காபி அருந்தியபடியே, முழுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரிடம் கொட்டினால் மனம் லேசாகிவிடாதா என்ன? – இதுதான் டான் ரிட்சீயின் டெக்னிக்.

“தற்கொலை எண்ணத்தோடு வருபவர்களிடம் மிகக்கவனமாக பேசவேண்டும். குதிக்காதே என்று கத்தினால் உடனே குதித்துவிடுவார்கள். சிலர் தத்துவங்கள் பேசுவார்கள். சிலர் நம்மை திட்டக்கூட செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் நிதானமாகப் பேசுவதின் மூலம், அவர்களது தற்கொலை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். சிலர் நீண்டநேரமாக விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஜன்னலில் இருந்து எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலிசாருக்கு போன் செய்துவிடுவாள். போலிஸை பார்க்கும் யாரும் குதித்து விடுவதில்லை” என்கிறார் ரிட்சீ. இவரது மனைவி மோயாவும் இந்த தற்கொலை தடுப்புப் பணியில் இவருக்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

“இவ்வளவு உயிர்களை காக்கக்கூடிய இந்த அருமையான வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பது அரிதில்லையா?” என்று கேட்கிறது இந்த ஜோடி.

இப்பணியில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒருமுறை இதுபோல ஒரு இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தபோது, திடீரென அவள் இவரையும் கட்டிக்கொண்டு குதிக்க முயற்சித்திருக்கிறாள். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரிட்சீ உயிர் தப்பினார்.

சோகம் என்னவென்றால் டான் ரிட்சீ இப்போது கேன்சரோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். “என்னுடைய மனநிலையோடு ஒருவன் கூடவா இந்த உலகில் இல்லாமல் போவான்? என் காலத்துக்குப் பிறகு அவன் வந்து இந்த தற்கொலைத் தடுப்புப் பணியை திறம்பட செய்வான்!” என்று நம்பிக்கையோடு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்.

15 கருத்துகள்:

  1. காஃபியுடன் தன்னம்பிக்கையும் தருகிறார். அவரின் நம்பிக்கைக்கு ஏற்ற ஒருவர் அவருக்கு கிடைப்பார்..

    பதிலளிநீக்கு
  2. நெகிழ்ச்சியான பகிர்வு

    வாழ்க ரிட்சீ

    பதிலளிநீக்கு
  3. இந்த மனிதர் ஒரு அதிசயம்

    பதிலளிநீக்கு
  4. Schindler's list படத்தில் வரும் ஓர் வாசகம் நினைவுக்கு வருகிறது.
    "Whoever saves one life saves the world entire." -அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான நல்பதிவு.
    அருமை

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12:32 PM, ஜூலை 04, 2010

    லக்கி அண்ணா!

    சில நாட்கள் முன்பு ஒரு பத்திரிக்கையில் வந்த்துதானே இது?

    அப்போ அந்தப் பத்திரிக்கையில் வந்தது உங்கள் எழுத்துதானா?

    பதிலளிநீக்கு
  7. லக்கி, ஒரு நாள் லன்ச் சாப்பிடணும்..

    பதிலளிநீக்கு
  8. வியப்பாகத்தான் இருக்கிறது. உண்மையிலேயே இப்படிப்பட்ட மானுடத்தொண்டர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். சக மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு இதே போல் மனிதநேய சேவகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிற இவரைப் புற்று நோயால் என்ன செய்துவிட முடியும்?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா8:24 PM, ஜூலை 04, 2010

    Its a wonderful article.
    -vibin

    பதிலளிநீக்கு
  10. மிக அற்புதமான பகிர்வு.. நெகிழ்ச்சியாக உள்ளது

    பதிலளிநீக்கு
  11. ஒரு வார்த்தை கூட மாறாமல் இதை நான் படித்திருக்கிறேன். எங்கே என்று தான் ஞாபகம் வரவில்லை. அதையும் நீங்களே சொல்வதுதானே முறை. புதிய தலைமுறை கட்டுரை அல்ல இது.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா12:45 AM, ஜூலை 07, 2010

    thala,
    dont write like this. en ipdi kaappi adikkireenga nu bangalore la irunthu periya ezhuthalar kelvi kepparu...

    பதிலளிநீக்கு
  13. நண்பர்களே!

    பதிவின் கீழே நன்றி : புதியதலைமுறை என்று குறிப்பிட மறந்துவிட்டேன். அதற்காக இவ்வளவு அக்கப்போரா? :-(

    பதிலளிநீக்கு
  14. ந‌ல்ல‌ ப‌திவு.டான் ரிட்சீ குண‌ம‌டைய‌ பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  15. "ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!"
    எழுதியவர் யுவகிருஷ்ணா

    இதுவும் உயிர்களை காக்கக்கூடிய வழிகாட்டும்

    பதிலளிநீக்கு