28 ஜூலை, 2010

ஆட்டோ அனுப்பட்டுமா?


தமிழிணையத்தளங்களை பாவிப்பவர்களாக நீங்கள் இருந்தால் அடிக்கடி இதுபோன்ற வசனங்களை ஆங்காங்கே காணலாம். “இன்னும் ஆட்டோ வரலையா?”, “ஆட்டோ வரப்போவுது ஜாக்கிரதை”. இதுமாதிரி ஏராளமான ‘ஆட்டோ’மேட்டிக் டயலாக்குகளை பயன்படுத்துவதில் தமிழிணைய பங்கேற்பாளர்கள் ஆஸ்கர் விருது வாங்குமளவுக்கு திறமைசாலிகள். குறிப்பாக வலைப்பூக்கள் மற்றும் முகப்புத்தகத்தில் இவ்வீர வசனங்கள் அதிகம்.

ஆட்டோ இதுபோல இழிவுபடுத்தப்பட்டு வருவது ஆட்டோக்காரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்தால் பிய்ந்துப்போன செருப்பை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சலில் அட்டாச்மெண்டாக அனுப்பினாலும் அனுப்புவார்கள். ஏனெனில் இருசக்கரவாகனப் பெருக்கம், கால்டாக்ஸி பரவலாதல் போன்ற தொல்லைகளால் அவர்களே சவாரி கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

பொதுவாக இவ்வசனங்கள் எங்கே பிரயோகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். அந்தவார ஜூனியர் விகடனிலோ, குமுதத்திலோ, நக்கீரனிலோ ஏதோ அரசியல்வாதியைப் பற்றி ‘பரபர பதினாறு’ ஸ்டைலில் கிசுகிசுவாக வந்திருக்கும். அதை வாசித்ததுமே நமது இணைய பங்கேற்பாளர்களுக்கு நாடி நரம்பெல்லாம், இரட்சகன் நாகார்ஜூனா மாதிரி துடித்துவிடும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குப் போய் வரிசையில் நின்று ஓட்டுபோட வக்கில்லை என்றாலும், “ஒரு பதிவுக்கு ஆச்சு” என்று பொங்கியெழுந்து விடுவார்கள்.

கூகிளில் ஏதோ சில புகைப்படங்களை தேடியெடுத்து, “இப்படியெல்லாம் நடக்குது. நம்ம நாடு நாசமாத்தான் போகப்போவுது” என்று ஒரு மொன்னையான நடையில் ஒரு மொக்கைப் பதிவையெழுதிவிட்டு, “ஆட்டோ பின்னூட்டம் வருமா”வென்று தேமேவென்று காத்திருப்பார்கள். பின்னூட்டம் கூட வராதவர்களுக்கு ஆட்டோ எங்கிருந்து வரப்போகிறது?

இந்த மாதிரி பின்னூட்டங்களை அடிக்கடி வாசித்தபின் எனக்கும் கூட சில நேரங்களில் கருத்து மயக்கம் ஏற்பட்டு விடுவதுண்டு. ஏதாவது ஒரு மொக்கைப் பதிவை வாசித்ததுமே, இந்த பதிவருக்கு ஆட்டோ அனுப்பலாமா என்று யோசிப்பேன். கட்சி கொடுக்கும் அலவன்சு டீக்கும், பொறைக்கும், தம்முக்குமே சரியாகப் போய்விடுகிறது. தியாகராயநகரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் ரூ.75/- செலவழித்தாக வேண்டும். பேசாமல் நடந்தேபோய் அடித்துவிட்டு வந்துவிடலாமாவென்று யோசிப்பேன். ச்சே.. போயும், போயும் ஒரு மொக்கைப் பதிவுக்கு இவ்வளவு பிரயாசை படவேண்டுமாவென்று யோசித்துவிட்டு, ராஜ் தியேட்டரில் ஏதாவது படத்தை பார்த்துவிட்டு மறுநாள் ஒரு விமர்சனப் பதிவு எழுத உட்கார்ந்து விடுகிறேன்.

அய்யா.. இணையத்தில் தண்டமாய் எழுதுவதால் மட்டும் போராளிகளாக மாறிவிட்டவர்களே.. நீங்கள் ஒரு யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் வாங்கியபின் நம் நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறது. இன்னமும் அரசியல்வாதிகள் ஆட்டோவைதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், நீங்கள் சுத்தமாக அப்டேட் ஆகவில்லையென்று அர்த்தம். டி.என்.சேஷனுக்கு ஆட்டோ அனுப்பிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அரசியல்வாதிகள் டாடாசுமோ, குவாலிஸ் என்று முன்னேறி விட்டார்கள். நீங்களெல்லாம் தெலுங்கு டப்பிங் படங்களை பார்ப்பதே இல்லையா?

நம்மூரு கோயிந்தசாமிகள்தான் ‘ஆட்டோ ஃபீவர்’ பிடித்து அலைகிறார்கள் என்றால் ஃபாரின் தமிளர்கள் இன்னும் மோசம். ஆட்டோவுக்கும், ஆசிட்வீச்சுக்கும் பயந்துப்போய் எழுதுவது போலவே எழுதுவார்கள். பொதுவாக இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை அம்சம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.

ஏனய்யா. ஒரு ஆட்டோவை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கும், துபாய்க்கும், சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வந்து உங்களை அடிக்க ஆகும் செலவு என்ன? அதற்குப் பதிலாக இங்கே ஆளுக்கு ஐநூறு கொடுத்தாலே போதுமே? நீங்கள் எதை எழுதினாலும், தேர்தலில் நாங்கள் ஜெகஜோதியா கும்முகும்முவென்று திருமங்கல கும்மினை கும்மிவிடலாமே?

எந்த இணையப் பதிவாளரிடமாவது பத்திரிகைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் தன்மை இருக்கிறதா? தோழர் சவுக்கு மற்றும் வினவு போன்ற சிலருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு கொடுக்கலாம். களத்திலும் செயல்படும் அவர்களை இணையப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது நியாயமில்லை. அவர்களுக்கெல்லாம் ஆட்டோவென்ன, விமானத்தையே கூட அனுப்பலாம். மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு எல்லாம் ஆட்டோ ஒன்றுதான் கேடு. நம்ம காப்பி & பேஸ்ட் புலிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை கூட எந்த அரசியல்வாதியும் அனுப்பி வைக்குமளவுக்கு யோக்கியதை இல்லை என்பதுதான் இப்பதிவின் அடிநாதம்.

இறுதியாகவும், உறுதியாகவும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிக் கொள்கிறேன் தோழர்களே. தமிழகத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஏழு கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கோடி. இவர்களில் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் தோராயமாக இரண்டு கோடி. இணைய அறிமுகம் பத்து லட்சம் பேருக்கு இருக்கலாம். இவர்களிலும் தமிழிணைய பாவிப்பாளர்கள் ஒரு லட்சம் பேர் இருந்தாலே அதிகம். அதிலும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக் மாதிரி கச்சடாக்களில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் பேர் வரைதான் இருப்பார்கள். இவர்களில் ஆறாயிரம் பேராவது அயல்நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியிருப்பவர்களில் ஆயிரம் பேர் தேர்தல்களில் ஓட்டுபோட்டாலே அதிகம். இப்படிப்பட்ட மொக்கையான ஒரு சமூகம் தினம் ஒரு புரட்சியென்ற பேரில், தினம் ஒரு பதிவு போட்டு, அதற்கு ஆட்டோவையும் எதிர்ப்பார்ப்பது என்பது கொஞ்சமல்ல, நிறையவே ஓவர் இல்லையா?

இனிமேல் எங்காவது ஆட்டோ, கீட்டோவென்று யாராவது பேசட்டுமே? கீசிடுவேன் கீசி...

50 கருத்துகள்:

  1. 1) யாருக்கு இது? லிங்க் குடுத்துட்டு கோச்சுட்டீங்கன்னா எங்களுக்கும் பொழுது போகுமில்ல?

    2) பூஜா சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. பரிசல்!

    1) யாரெல்லாம் ஆட்டோ வராதாவென்று ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறார்களோ அத்தனை மாகானுபாவர்களுக்கும்...

    2) ஸ்லிம் & குள்ளப் ஃபிகர்கள்தான் என்னுடைய டேஸ்ட். உங்களுக்கும் அதுதானென்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:15 PM, ஜூலை 28, 2010

    அண்ணண் லக்கிலுக்குக்கு ஒரு ஆட்டோவ அனுப்பிடுங்கப்பா பாவம்... எவ்ளோ நொந்து போயிருக்காரு... காசில்லண்ணா அவருகிட்டயே மீட்டருக்கு மேல வாங்கிக்கலாம்... அண்ணணுக்கு அவ்வளவு தாராள மனசு....

    பதிலளிநீக்கு
  4. இலங்கையிலிருந்தெல்லாம் ஆட்டோ அனுப்பமுடியாது. அனுப்பினா இந்தியாவிலயே விட்டுட்டுத்தான் வரவேணும். திருப்பி அதை எடுக்க வரி அறவிடுவான்கள். ஆட்டோக்கு இன்னும் வரி குறைக்கவில்லை என்பது உபரித் தகவல்.

    பதிலளிநீக்கு
  5. ஹிஹிஹி..

    அப்படின்னா களத்தில் போராடுபவர்கள்தான் இணையத்தில் போராடணும்ன்னு சொல்றீங்களா?

    //மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு//

    :)))))

    பார்த்து சகா.. புரட்சி பதிவர் யாராவ்து உங்களுக்கு ஆட்டோ அனுப்பிட போறாங்க

    பதிலளிநீக்கு
  6. //தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.//
    :)))

    பதிலளிநீக்கு
  7. //அப்படின்னா களத்தில் போராடுபவர்கள்தான் இணையத்தில் போராடணும்ன்னு சொல்றீங்களா?//

    இன்செப்ஷன் கணக்கா கனவுலே மட்டுமே போராடிக்கிட்டிருந்தா என்னா கணக்கு சகா?

    பதிவுலே எழுதறதை ரோட்டுக்கு வந்து பேச தில்லு இருக்கோணும். அப்போ நாலு பேரு அடிக்கவந்தான்னா அதையும் வாங்குற தெம்பு இருக்கோணும்.

    அதை வுட்டுபுட்டு ஒரு மொக்கைப் பதிவை எழுதிட்டு எனக்கு ஆட்டோ வரும், டாக்ஸி வரும்னு சொல்லிக்கிட்டிருந்தா எப்பூடி?

    பதிலளிநீக்கு
  8. ஈரோட்ல ரெண்டு வருசம் ஆட்டோ ஓட்டியிருக்கேன், என் ஃப்ரெண்ட்ஸுக்கு ஒரு பிரச்சனைன்னா உருட்டை கட்டையோட என் ஆட்டோ தான் பறக்கும், அதுனால இனிமே ஆட்டோ வரும்னு சொல்றதை விட்டுட்டு வால்பையன் வருவான்னு சொல்லி பழகுங்க!

    பதிலளிநீக்கு
  9. @ லக்கி

    ஸாரி ப்ரதர். எனக்கு கொஞ்சம் பூசின மாதிரி இருந்தாத்தான் பிடிக்கும். பூஜா அந்த லிஸ்ட்தான்.

    தமன்னாதான் ஸ்லிம். நாட் மேரா டேஸ்ட்!

    பதிலளிநீக்கு
  10. ஏசி ரூம் எல்லாம் வச்சு என்ஆர்ஐ நிறைய பேரு இந்த மாதிரி எழுதுறோம் தோழர். பார்த்து எடுத்து சொல்லி ஆட்டோ இல்லைன்னா மீன்பாடி வண்டியாவது அனுப்பச்சொல்லுங்க தோழர்.

    பதிலளிநீக்கு
  11. ஃபாரின் தமிளர்கள்

    he he

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா1:09 PM, ஜூலை 28, 2010

    அய்யா லக்கி ! இது என்ன எழவுன்னு எனக்கு புரியல ! நான் கூட ஆட்டோகாரர்கள் அடிக்கும் பகல் கொள்ளையை பற்றிய தொகுப்போ என்று தப்பாக நினைத்தேன் ! 'விளங்க முடிய கவிதை நீர்!! '
    ஈராக் யுத்தத்தை நேரில் நின்று படம் பிடித்த பத்திரிக்கை நண்பர்கள் அங்கே நின்று சண்டை போட வேண்டுமா இல்லை அங்கே நடந்தவைகளை எழுத வேண்டுமா?
    இப்படிக்கு
    மொக்கச்சாமி
    (நீங்க புரிய வெச்ச அந்த எழவு வேண்டாம் என்று தான் இந்த பெயர் ! போதுமா !)

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டம் இட்டால் ஆட்டோ வருமா?

    பதிலளிநீக்கு
  14. Well said Lucky. "Vinavu" vil kalaingar kaditham "Pochcharippin uchcham" mai enakku paduhiradhu. Vinavu nadunilai vaaindhada? enbade en Kelvi.

    பதிலளிநீக்கு
  15. யுவா,

    என்னாச்சு? யாருமேலே கோபம்?

    வெளிநாட்டு பதிவர்ல நானும் வரேனா?

    பின்குறிப்பு: எனக்கும் பூஜா ... மாதிரி .... ரொம்ப புடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. Yuva,

    I really don't understand your today's article... did some body threaten you are you planning to threaten some one.!!
    Specially in your today's article, i don't agree with your final incorrect statistic report of Tamil online users. & Tamil websites.

    Hope you know about 49O in Indian "the Conduct of Elections Rules", this campaign was a Mass Hit in online. Tamil was reached globally and its plays a special and vital role in global websites.

    and i do agree a Online socialist cannot make big changes in world however he can make an impact . And a Man who work in down street for "change" should not be compared with online socialist.

    because there is lot of difference between these two campaign. Online via campaign is to educate people who already educated ,but the real tuff job is educate a person who not educated. This is much more difficult and important to make a change in down street person...and it will give the real changes in our society..


    Thanks
    Rex Remion anthonyswamy

    பதிலளிநீக்கு
  17. செம நக்கல் பதிவு.

    வெளிநாடுகளில், ஏன் நம் நாட்டிலேயே இருந்துகொண்டு எங்காவது நியூஸ் பேப்பரில் ஒரு சின்ன துணுக்கை படித்து உணர்ச்சிவசப்பட்டு அதை பற்றி அதகள கட்டுரை வரைவது வரை சரி.

    அதற்கு ஒரு படி மேலே போய் ஆட்டோ வராதா என்பதெல்லாம் டூ மச்.

    அதுக்கெல்லாம் நாம ஓர்த் இல்லேன்னா புரிஞ்சுகுறாங்களா.

    களத்தில் நின்று புலனாய்வு கட்டுரைகள் எழுதுபவர்களை பாராட்டும் அதே தருணத்தில் தங்களுடைய கருத்தை பதிய நினைக்கும் பதிவர்களையும் நாம் குறை கூறுதல் ஆகாது.

    அவர்கள், கருத்தை எழுதட்டும். ஆனால் அதற்கெல்லாம் ஆட்டோ அனுப்ப முடியாது. வேண்டுமானால் அவர்களே அவர்களுக்கு ஆட்டோ அனுப்பி மகிழ்ந்துகொள்ளட்டும்.

    ஆனா நீ செம ஆளுய்யா!!!

    பதிலளிநீக்கு
  18. || அதுனால இனிமே ஆட்டோ வரும்னு சொல்றதை விட்டுட்டு வால்பையன் வருவான்னு சொல்லி பழகுங்க!||

    @@ வால்
    சனி, ஞாயிறு சர்வீஸ் உண்டா!!!

    பதிலளிநீக்கு
  19. என்னவோ எழுதி இருக்கிங்கனு தெரியிது; ஆனா புரியல.

    பதிலளிநீக்கு
  20. அவுஸ்திரேலிய பதிவர்கள் எவரும் நீங்கள் குறிப்பிடும்படியான பதிவர்கள் இல்லை என்பதை மிகத் தாழ்மையோடு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் தோழரே

    பதிலளிநீக்கு
  21. எல்லோரையும் மொத்தமாக தயிர்வடை என்று சொன்னதற்காக உங்களை மன்னிப்பு கேட்கச்சொல்லலாமான்னு யோசிக்கிறேன். வேணுமானா சைக்கிளில் வந்து உங்க மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைச்சுடலாமா? அதிஷா மண்டையில் கொட்டுறது கஷ்டம், கை வலிச்சுரும்.

    பதிலளிநீக்கு
  22. //சனி, ஞாயிறு சர்வீஸ் உண்டா!!! //


    ஆட்டோவை விட வாலுக்கு எக்ஸ்ட்ரா பெட்ரோல் போட வேண்டியிருக்கும் பரவாயில்லையா!?

    பதிலளிநீக்கு
  23. உடனடியா பிரதமருக்கு கடிதம் எழுதினாதான் சரியா வரும் போலருக்கே!@

    பதிலளிநீக்கு
  24. நன்றி உண்மைத்தமிழன்..(பூஜாவோட எம்.எம்.எஸ் வேணுமா?)

    பதிலளிநீக்கு
  25. கடைசியா அலைபாயுதே ஸ்டைலில் ஒரு புள்ளிவிவரம் கொடுத்து இருக்கீங்களே, சூப்பர்

    பதிலளிநீக்கு
  26. Inime oru padaththa direct panninathukku appuramaa thaan vimarsanam pannuvaar namma inaiya puli yuvakrishna ! kalikaalam vandhu vittadho!!

    பதிலளிநீக்கு
  27. என்ன வில்லத்தனம்
    அத்தனை பதிவர்களையும் தயிர்வடை என்று சொல்கிறாரே,
    அடுத்த ரவுண்டுக்கு பதிவர்கள் ரெடியாக வேண்டாமா என்ன, சுத்த தயிர்வடையாகவே உள்ளார்களே அனைத்து பதிவர்களும்

    பதிலளிநீக்கு
  28. எனக்கு ஆட்டோ எல்லாம் வேண்டாம்..

    என் ரேஞ்சுக்கு உருட்டுற மாதிரி டயர் கிடைச்சாலும் ஒகே தான்..

    என்னது ஆட்டோ எதிர்பார்த்தா தான் டய்ர் கிடைக்குமா..அப்ப எனக்கு வெறும் டுயூப் தானா..

    பதிலளிநீக்கு
  29. உங்க கோவம் புரியுது. அது நியாயமும் கூட.

    இவங்க எல்லாம் சேர்ந்து கடைசியில உங்களையும் என்னைப் போலவே உருப்படியா ஏதோ எழுத வெச்சுட்டாங்க பாருங்க.

    எனிவே, கீப் இட் அப்.

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா11:51 PM, ஜூலை 28, 2010

    நிறைய புது பதிவர்கள், வெளிநாட்டில் வாழ் தமிழர்கள் உன்னை விடவும் நீ சொம்பு தூக்கும் கேனைகளை விடவும் பிரமாதமாகவே பிளாக்கில் எழுதுகிறார்கள். விழுப்புரம் அல்லது அரக்கோணம் தாண்டிகூட நீ போக லாயக்கில்லை.
    ஏன் வெளிநாடுகளில் உள்ள பதிவர்களின் காலில் விழுகிறாய்? 'இலக்கிய கொம்பு ' முளைத்த பதிவர்களை விடவும், 'பத்திரிக்கைக்காரன்' ' என்ற பந்தாவில் உள்ளவர்களைவிடவும் அதிகம் விஷயம் அதிக பரிணாமம் பெற்றவர்கள் அயல்நாட்டு பதிவர்கள். உனக்கு ஆள் வரவில்லையே என்று வயிறு எரிவது தெரிகிறது.நீயும் !உன் மொக்கையும்.!!

    பதிலளிநீக்கு
  31. லக்கி ஒரு தி.மு.க. அனுதாபி என்பதாலும், தி.மு.க. குடும்பத்தின் சொத்து மதிப்பு அதிகரித்து, இப்போதெல்லாம் சுமோ அனுப்புவதாலும், அதற்கேற்றவாறு வார்த்தை பிரயோகம் மாற வேண்டும் என்று எழுதியிருகிறாரோ?

    பதிலளிநீக்கு
  32. அண்ணே ! அந்த பூஜா ஸ்டில் செம..எங்க இருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரியெல்லாம் :)

    பதிலளிநீக்கு
  33. //தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.//
    100 % TRUE :)

    பதிலளிநீக்கு
  34. //தமிழகத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஏழு கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கோடி. இவர்களில் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் தோராயமாக இரண்டு கோடி. இணைய அறிமுகம் பத்து லட்சம் பேருக்கு இருக்கலாம். இவர்களிலும் தமிழிணைய பாவிப்பாளர்கள் ஒரு லட்சம் பேர் இருந்தாலே அதிகம். அதிலும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக் மாதிரி கச்சடாக்களில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் பேர் வரைதான் இருப்பார்கள். இவர்களில் ஆறாயிரம் பேராவது அயல்நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியிருப்பவர்களில் ஆயிரம் பேர் தேர்தல்களில் ஓட்டுபோட்டாலே அதிகம்.//

    லக்கி,

    எப்போ விஜயகாந்த் கட்சிக்கு மாறினீங்க? அறிவிப்பு எதுவும் பார்க்கவே இல்லையே :-)

    பதிலளிநீக்கு
  35. அசோக் மூர்த்தி8:42 AM, ஜூலை 29, 2010

    இன்னா தலிவா .. நீ கீச்சறது எல்லாம் அப்பால இருக்கட்டும் ! மதரசபட்டினம்னு ஒரு அருமையான படம் ரிலீஸ் ஆகி ஒடிகின்னு இருக்கு !நம்ம அதிஷா செல்லம் இன்னாமா எழுதிருக்காரு தெரியுமா ?
    நீ அதுக்கெல்லாம் விமர்சனம் எழுத மாட்டேங்கற ! ஆனா விஜய் அஜித் நடிக்கற மொக்க படத்துக்கு மொத நாலு போயி பாத்துகினு வந்து பத்திபத்தியா எழுதற .. இப்டியே போய்குன்னு இருந்தா உனுக்கு நான் ஆட்டோல வந்து பஞ்சாயத்து வெயப்பேன்..
    இதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல .. எனக்கு ஒரு நியாயம் வேணும் !! இதுக்கு இன்னா சொல்ற ? :-)

    பதிலளிநீக்கு
  36. Mr. அனானி,
    திட்டறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. ஆளு அட்ரெஸ் சொல்லிட்டு திட்டுங்க. அதான் ஆட்டோவெல்லாம் வராதுன்னு உத்திரவாதம் தர்றாரு இல்ல.

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா2:10 AM, ஜூலை 30, 2010

    //மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு எல்லாம் ஆட்டோ ஒன்றுதான் கேடு//


    ஐநூறு இருக்காதுங்க. சும்மா ஒரு ஐம்பது தயிர்வடைகள் வேணுமானால் இருக்கலாம். "ஆட்டோ வரும்" என்று எச்சரிக்கை விடுவது புரட்சித் தயிர்வடைகள் இல்லீங்கோ. "கலி முத்திடிச்சி" புலம்பல் தயிர்வடைகள்.

    இந்த கூத்து எப்படி ஆரம்பித்ததென்றால், மைலாப்பூர், நங்கநல்லூர் தயிர்வடைகள் சோவை ஈயடிச்சான் காப்பியடித்து நெஞ்சுறுதியோடு அநீதியை எதிர்த்துப் போராடுவதைப் போல எழுதுவார்கள். காரணம் பொச்சரிப்பு தான் என்பது வேறு விஷயம். அதற்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் குடியேறிய சகதயிர்வடைகள் "என்ன இப்படி வெளிப்படையா எழுதரேள். ஆட்டோ வரப்போறது" என்று செல்லமாக எச்சரிப்பார்கள். இட்லிவடை, டோண்டு, அன்புடன் பாலா, ரஜனி ராம்கி மாதிரி ஆட்களின் பழைய பதிவுகளைப் பாருங்கள். எக்கச்சக்கமான ஆட்டோ எச்சரிக்கைப் பின்னூட்டங்கள் இருக்கும். அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது மாதிரி அமெரிக்காவில் செட்டிலான ஒரு மாயவரம் அண்ணாச்சி ஆட்டோ, ஆசிடை துணைத் தலைப்பாகவே வச்சுண்டுட்டார்.

    http://mugamoodi.blogspot.com/
    'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

    பதிலளிநீக்கு
  38. //தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.//

    கோவையில் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளாதவன் தமிழனே அல்லன்னு சான்றிதழ் வழங்கிட்டு, தன் பசங்களை ஹிந்தி வகுப்புக்கு ட்யூசன் அனுப்பிவைத்துவிட்டு ஹாய்யாக ஹாலில் உட்காந்து மானாட மயிலாட பார்ப்பாங்க அது போலவா ?

    பதிலளிநீக்கு
  39. லக்கி செம காமெடி! :-))) நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  40. நிகழ்காலத்துக்கு வாங்கண்ணா, இன்னும் எத்தனை நாளைக்குதான் பீட்ஸாவும், பர்கரும்-னுட்டு...

    அதான் இங்கயே, எல்லா டீ கடைலையும் கிடைக்குதே...

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா3:15 PM, ஜூலை 31, 2010

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    தமிழ்நாட்டிலுள்ள கருணாநிதியும் மற்றவர்களும் இலங்கைத் தமிழர்களுக்காக துடிக்க வேண்டும். ஆனால் இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் போய் குடியேறிக்கொண்டு கோட்டும் சூட்டுமாக வலம வந்து கொண்டு, தொலைக்காட்சி சேனல்களை நடத்திக்கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். தன் சொந்த நாட்டில் சக தமிழன் முள்வேலிகளுக்குள் கிடந்தால் இவர்களுக்கென்ன?. அதற்கு கருணாநிதியை திட்டி விட்டால் போச்சு. வார்த்தைகளில் மட்டும் வெட்டித்தனமாக ஆக்ரோஷம் கொப்பளிக்கும்.

    பதிலளிநீக்கு
  42. உங்கள் கூற்றில் உண்மையிருந்தாலும், குறைந்த பட்சம் வலைப்பதிவுகளில் தான் 'பத்திரிக்கைகள்' எழுத முடியாத விஷயம் விவாதத்திற்கு வைக்கப்படுகிறது, இன்றைய பத்திரிக்கைகள் அனைத்தும் ஆள்பவர்கள் அல்லது அவர்க்கு எதிர் குழுவினர் என்கிற முன் முடிவோடு நின்றுவிட்டது.

    இச்சமயத்தில் வலைப்பதிவுகள் (அனைத்தும் அல்ல) வாயிலாக ஒரு விஷயம் அறியும் வாய்ப்புகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  43. ஸ்டார்ட் ம்முசிக்.....
    அப்பாடா, இந்த வாரம் பொழுது போகும்.

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா3:12 PM, ஆகஸ்ட் 08, 2010

    இத்துடன் "மீட்டர்" போடாமல், ஏன், மீட்டரே இல்லாமல், பயணிகளை கொஞ்ச தூரம் செல்வதற்கே ரூ. 100 ரூ 200 என ஆட்டோ டிரைவர்கள் அடிக்கும் கொள்ளையையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும், கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். ராயபேட்டையில் இருந்து நுங்கம்பாக்கம் 3 கி.மீ. தூரத்திற்கு ரூ. 50/ ரூ.60க்கு குறைவில்லாமல் எந்த ஆடோக்களும் வருவதில்லை. இதே தூரத்திற்கு "பெங்களுருவில்" சமீபகமாக திருத்தப்பட்ட கட்டனப்படியே ரூ. 25.50 மட்டுமே ( இதற்க்கு முன்பு ரூ. 21 மட்டுமே). சென்னையில் "மீட்டர்" போட்டு அதன்படியே கட்டணம் வாங்கும் முறை என்பது கனவில்தானா?...
    சென்னைக்கு யார் வந்தாலும் முதலில் சந்திக்கும் அடாவடி கொள்ளை பேர்வழி, ஆடோகாரன் தான். இவர்களை முதலில் சரியாக மீட்டர் வைத்து வண்டி ஓட்ட சொல்ல, எந்த ஒரு அரசியல் வாதிகோ, போலீஸ்சாருக்கோ முதுகெலும்பு உள்ளதா. இவர்களை சரிசெய்தாலே சென்னையின் களங்கம் நீங்கும். மற்ற மாநிலங்களுக்கு சென்றவர்களுக்கு சென்னை ஆட்டோகாரனின் அடாவடி என்ன என்று புரியும்

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா7:12 PM, மார்ச் 21, 2011

    // இவர்களை முதலில் சரியாக மீட்டர் வைத்து வண்டி ஓட்ட சொல்ல, எந்த ஒரு அரசியல் வாதிகோ, போலீஸ்சாருக்கோ முதுகெலும்பு உள்ளதா. //

    ஆட்டோ சர்வீஸ் நடத்துறதே அவங்க தான்... அப்புறம் எப்படி கேப்பாங்க!

    பதிலளிநீக்கு