9 ஜூன், 2012

ஆபரேஷன் ப்ளாக்‌ஷீப்


“கமாண்டோ”

“யெஸ் கேப்டன்”

“முடிச்சிட்டியா?”

“பாவமாயிருக்கு”

“இந்த வேலைக்கு வந்துட்டு பாவம் புண்ணியமெல்லாம் பார்க்கணுமா?”

“கத்தற சத்தம் சகிச்சிக்க முடியலை”

“அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துலே முடிஞ்சிடும்”

“எனக்கு ரத்தத்தை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி கேப்டன்”

“யூ ஃபூல். ரத்தத்தை பார்க்குறதுதான் நமக்கு வேலையே”

“ஆனாலும் கேப்டன் கழுத்தை வெட்டினதுமே இளஞ்சூடா, வெளிர்சிவப்பா பீய்ச்சுற ரத்தத்தை பார்க்கும்போதெல்லாம் பீதியாகுது”


யூ பிளடி கமாண்டோ. என்னோட தேர்ட்டி இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் எவ்ளோவாட்டி இதே சீனை பார்த்திருப்பேன் தெரியுமா?”

“தட்ஸ் ஒய் யூ ஆர் கேப்டன். எனிவே, நான் உங்க ஆர்டருக்கு ஒபே பண்ணுறேன்”

“தலையை கெட்டியாப் பிடி”

“பிடிச்சுட்டேன்”

”கத்திய பாய்ச்சுறதுக்கு வாகான இடத்தை கழுத்திலே பார்த்து, ஒரே வெட்டு”

”வெட்டிட்டேன். ஓ காட்”

“கழுத்தை சரசரசரன்னு அறுத்து, தலையை தனியா வையி”

“முடிஞ்சது கேப்டன். ஆனா தலையில்லாத முண்டம் துடிக்குதே?”

“ஆமாம். அப்படித்தான் துடிக்கும் கமாண்டோ. கழுத்திலேருந்து வழியற ரத்தத்தை அப்படியே ஒரு பெரிய பாத்திரத்துலே புடிச்சி வையி”

“டன் கேப்டன்”

“அப்புறம் ரெண்டு காலையும் சேர்த்துப் புடிசி ஒரே சேர வெட்டு. ஒரே வெட்டு ரெண்டு துண்டு”

“முடிஞ்சது கேப்டன். இப்போ உடம்பில் எந்த அசைவுமில்லே”

“கொத்துக்கறி போடத் தெரியுமில்லே? பீஸ் பீஸா போடணும். கத்தியிலே தட்டுப்படற எலும்பையெல்லாம் தனியா பொறுக்கி வை கமாண்டோ”

“டன்டனா டன் கேப்டன்”

“இப்போ மொத்தமா எவ்ளோ கிலோ தேறும்?”

“பேக் பண்ணிட்டு, எடை போட்டுப் பார்க்கிறேன் கேப்டன்”

- படுமொக்கையாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த கதைக்கு முடிவு ஒன்றே ஒன்றுதான். அதுவும் நான்காம் லைனிலெயே நீங்கள் யூகித்துவிட்ட அதே படு த்ராபையான முடிவுதான். தலைப்பும் கூட அதைதான் குறியீடாக உணர்த்துகிறது. கேப்டன் கசாப்புக்கடை முதலாளி. கமாண்டோ கசாப்புக் கடையில் புதுசாக ஆடு வெட்ட சேர்ந்த பையன். ஓக்கே? சுபம்.

வேறு முடிவு ஒன்றையும் பரிசீலித்துப் பார்க்கலாம். இராணுவ கேப்டன், சித்திரவதைக் கூடத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் கமாண்டோவுக்கு தொலைபேசியில் உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறான். வெட்டப்படுவன். எதிரிநாட்டுக்கு இராணுவ இரகசியங்களை விலைக்கு விற்றவன். இப்போது இந்தப் பின்னணியை மனதில் விஷூவலாக்கி ஓட்டிக்கொண்டே கதையைப் படித்துப் பாருங்கள். படுமொக்கையாக இருந்த கதை, ஒருவேளை சுமாரான மொக்கை ஆகியிருக்கலாம்.

6 ஜூன், 2012

தடையறத் தாக்க

விளிம்புநிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வை பதிவு செய்யும் உலக சினிமாவெல்லாம் இல்லை. ஹாலிவுட்டுக்கோ, பாலிவுட்டுக்கோ இணையாக தமிழ் திரைப்படங்களை தரமுயர்த்தும் முயற்சியும் நிச்சயமாக இல்லை. படம் பார்ப்பவர்கள் அசந்துப்போய் மூக்கின் மேல் விரலை வைக்கும் பிரும்மாண்ட காட்சிகளும் சத்தியமாக இல்லை. ஆனாலும் மிக முக்கியமான சினிமாவாக பரிணமித்திருக்கிறது தடையறத் தாக்க.

கடைசியாக தமிழில் வெளிவந்த ‘டைரக்டர்ஸ் மூவி’ எதுவென்று பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருங்கே சேர்த்து கசக்கி நினைவுகூர்ந்தாலும் எதுவும் சட்டென்று நினைவுக்கு தோன்றவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்தால் மெளனகுரு, நாடோடி, சுப்பிரமணியபுரம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் சில படங்கள் நினைவுக்கு வருகிறது. தடையறத் தாக்க முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் ஆளுமையை சார்ந்தே வந்திருக்கிறது. சரசரவென்று காட்சிகளையமைத்து பரபர வேகத்தில் தடதடவென பயணிக்கும் தடாலடி த்ரில்லர் எக்ஸ்பிரஸ்.

‘காக்க காக்க’ படத்தில் கவுதமிடம் உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர், கதையின் முக்கியமான விதையை அங்கிருந்தே எடுத்து, ‘தடையறத் தாக்க’வில் விளைச்சல் செய்திருக்கிறார். காக்க காக்க பாண்டியா-வுக்கும், அவருடைய அண்ணனுக்கும் அப்படியென்ன புனிதமான பாசப்பிணைப்பு என்று ஒரு சிறுகதையை எழுதிப் பார்த்திருப்பார் போல. நாயகனுக்கோ, நாயகிக்கோதான் உருக்கமான ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ இருப்பது நம் பண்பாடு. மாறாக வில்லன்களுக்கு அவ்வகையிலான ஓர் ஆச்சரிய ஃப்ளாஷ்பேக்கை முயற்சித்திருக்கிறார். நாயகன் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, அப்பாடக்கர் ஆவதையெல்லாம் அசால்ட்டாக வசனத்திலேயே கடந்துவிடுகிறார். நாயகன் – நாயகி சந்திப்பு, அவர்களுக்கிடையேயான ஊடல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு என்றெல்லாம் ’சீன்’ பண்ணாமல், நேரடியாக அவர்கள் காதலர்கள். நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறான் நாயகன் என்று படாலென்று படம் ஆரம்பிக்கிறது. கந்து வட்டி கொடுமையை எதிர்த்து மெசேஜ் சொல்கிறோம் என்றெல்லாம் கழுத்தறுக்காமல், தன் கதைக்கு தேவைப்பட்டது பயன்படுத்திக் கொண்டேன் என்கிற இயக்குனரின் நேர்மை பாராட்டத்தக்கது. சமூகத்தின் சகலப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வெண் திரையில் எதிர்ப்பார்ப்பதைவிட வேறென்ன பெரிய முட்டாள்த்தனம் இருந்துவிடப் போகிறது?

பதினைந்து, பதினாறு ஆண்டுகளாக அருண்விஜய் நடித்துக் கிழித்தவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி குப்பையில் போடலாம். அவருடைய நிஜமான இன்னிங்ஸ் இப்போதுதான் துவங்குகிறது. இயக்குனரின் நடிகராக மிகச்சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்களின் சப்ஜெக்ட்டை கவனமாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நாளைய திரைவானில் பளிச்சென மின்னும் நட்சத்திரமாகலாம். மாறாக மீண்டும் மசாலா, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று இளையதளபதியாகவோ அல்டிமேட் ஸ்டாராகவோ முயற்சித்தாலோ.. தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்வதாகதான் பொருள்.

முதல் பாதியில் மட்டும் தேவையில்லாமல் இரண்டு பாடல்கள். இன்னமும் பாடல்களின்றி படமெடுக்க நம்மாட்கள் தயங்குவது புரிகிறது. ஒரு சுமாரான டூயட். ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற அளவில் ஒரு குத்துப்பாட்டு. குத்துப்பாட்டில் ஒன்றுக்கு, ரெண்டாக தலைசிறந்த இரண்டு நாட்டுக்கட்டைகளை உருட்டிவிட்டிருந்தாலும், சீக்கிரமா படத்தை காட்டுங்கப்பா என்கிற டென்ஷன்தான் பார்வையாளனுக்கு இருக்கிறது. ‘பெட்டிகோட்’டோடு நாயகியை பார்த்தும் நார்மலாக இருக்கும் நாயகன், அதனால் டென்ஷன் ஆகும் நாயகி. “அப்போ பார்த்தப்போ ஆண்ட்டி மாதிரி பேண்ட்டி போட்டிருந்தே” என்றுகூறி, ஏழு வண்ணங்களில் மாடர்ன் பட்டர்ஃப்ளை பேண்ட்டீஸ் பரிசாக வாங்கித்தரும் நாயகன். பிற்பாடு அவளுக்கு போன் போடும்போது “இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளை?” என்று விசாரிப்பது. தனியாக பெட்ரூமில் இருவரும் இருக்கும்போது, “பதினைஞ்சு நிமிசத்துக்கு யாரும் வரமாட்டாங்க. உனக்கு வேணும்னா அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ” என்று நாயகி, நாயகனிடம் சொல்வது. இவ்வாறாக ‘கல்ச்சுரல் ஷாக்’ காட்சிகள் கொஞ்சம் புதுசு. கொஞ்சம் விரசமாகவே தெரிந்தாலும், இவையெல்லாம் சமகாலத்தில் சகஜம் என்கிற யதார்த்தத்தை ஜீரணித்தே ஆகவேண்டியிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மம்தா நாயகியாக. புற்றுநோயை வென்று உயிர்பிழைத்து, சிறுவயது காதலனை கைப்பிடித்து, கல்யாணத்துக்குப் பிறகு ‘தில்’லாக செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார் என்று அவருடைய பர்சனல் ஸ்டோரியே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனல் சக்ஸஸ் ஸ்டோரியாக இருக்கிறது. மம்தாவின் ப்ரேவ் ஹார்ட்டுக்கு கிரேட் சல்யூட்.

இண்டர்வெல்லுக்கு பிறகு டைரக்டாக க்ளைமேக்ஸ். ரத்தம் தெறிக்கும் ஓவர் வயலன்ஸ்தான் என்றாலும், கதைக்கு தேவைப்படும் அளவிலேயேதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வில்லன்களையும், அடியாட்களையும் எப்படியெல்லாம் போட்டுப் புரட்டியெடுக்கிறார் என்று விலாவரியாக ‘டைம்பாஸ்’ செய்யாமல் சட்டுபுட்டென்று எடிட்டி இருப்பதில் படக்குழுவின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. கடைசிக் காட்சியில் அருண்விஜய் சட்டையைக் கிழித்துக் கொண்டு சிக்ஸ்பேக் காட்டுவாரோ என்கிற அச்சப்பந்து வயிற்றில் இருந்து வேகமாக தொண்டையை நோக்கி எழுகிறது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை. இயல்பாக படமெடுப்பது என்பதே இப்போதெல்லாம் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்துவிட்டது நம் தலைவிதி.

தடையறத் தாக்க தவறாமல் பார்க்க

5 ஜூன், 2012

டாக்டர் வாத்தியார்


“நல்லா இருக்கீங்களா?” ரொம்பநாள் கழித்து பார்ப்பவர்கள் உங்களை கேட்கும் முதல் கேள்வி இது. நீங்கள் நன்றாகவே இல்லையென்றாலும் “நல்லாருக்கேன்” என்றுதான் சம்பிரதாயமாக சொல்வீர்கள்.

சுந்தரம் வாத்தியார் இந்த சம்பிரதாயங்களை கட்டுடைப்பவர். எப்போது யார் கேட்டாலும், “பி.பி. எகிறிடிச்சி. சுகர் கண்ட்ரோல்ல இல்லை. பாதத்தை எடுத்தே வைக்க முடியலை. தலைவலி உசுரு போவுது. ராவுலே நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குது. தூக்கமே இல்லை. காய்ச்சல். சளி. இருமல்” என்று ஏதோ ஒரு சுகவீனத்தை கண்டிப்பாக சொல்லுவார். இவரைப்போய் ஏன்தான் நலம் விசாரித்தோமோ என்று கேட்டவர் நொந்துக் கொள்வார்.

நிஜமாகவே சுந்தரம் வாத்தியார் கொஞ்சம் உடல்நலிவானவர்தான். அவரது ஐம்பது கிலோ உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். எய்ட்ஸைத் தவிர எல்லா வியாதியும் உண்டு. ஒருமுறை இவரை பரிசோதித்த அசோக் டாக்டரே அசந்துப்போனார். “இவ்ளோ வியாதிகளை வெச்சுக்கிட்டு நீங்க உசுரோட இருக்குறதே பெரிய சாதனை வாத்தியாரே!” என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். வாத்தியாரின் வீட்டில் அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு மெடிக்கல் ஷாப்பே உண்டு. டாக்டர் பரிந்துரைக்கும்அலோபதி மருந்துகள் மட்டுமின்றி, நாட்டு மருந்துகளையும் தானே விசாரித்துத் தெரிந்துக்கொண்டு, தனக்கானதை கண்டுபிடித்து பயன்படுத்துவார் வாத்தியார்.

வாழ்க்கை முழுக்க தன் உடலையே பரிசோதனைக் கருவியாக்கி விளையாடிக் கொண்டிருப்பதால், வாத்தியாருக்கு எந்த நோய்க்கு என்ன மருந்து, என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் கன்னாபின்னாவென்று அத்துபடி. எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே ஒரு டாக்டருக்குரிய அறிவு அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது.

தெருமுனை பிள்ளையார் கோயில் அர்ச்சகருக்கு ஒருமுறை தீராத இருமல். எத்தனையோ முறை டாக்டரிடம் போயும் வருடக் கணக்கில் சரியாகவில்லை. யதேச்சையாக இதைக்கேள்விப்பட்ட வாத்தியார், அர்ச்சகர் கேட்காமலேயே இலவச மருத்துவ ஆலோசனையாக ஏதோ நாட்டு மருந்து பரிந்துரைத்தார். ‘ஒருமுறை முயற்சித்துதான் பார்ப்போமே’ என்று அர்ச்சகர் முயற்சிக்க, அதிசயமாய் ஒரே வாரத்தில் அவருடைய பிரச்சினை தீர்ந்தது. கோயிலுக்கு வருபவர்களிடமெல்லாம் அவர் சொல்லி, சொல்லி மாய.. வாத்தியாரின் புகழ் மின்சாரவேகத்தில் ஊருக்குள் பரவியது.

‘மூட்டுவலி’ புகழ் மாமிகள் சிலர் வாத்தியாரிடம் தங்களது நிரந்தரமான இப்பிரச்சினைக்கு தீர்வு உண்டா என்று ஆலோசனை கேட்டார்கள். ஊட்டியிலிருந்து ஏதோ ஒரு தைலத்தை வரவழைத்து அம்மாமிகளுக்கு வழங்கினார் வாத்தியார். என்னே ஆச்சரியம்? தாங்கித் தாங்கி நடந்துக் கொண்டிருந்த மாமிகள் இப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி மாதிரி கம்பீர நடை போட்டு, குளத்திலிருந்து தண்ணீர் பிடித்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஊரில் குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடங்கி, வாலிப-வயோதிக அன்பர்களின் ரகசியப் பிரச்சினை வரை ‘டீல்’ செய்யத் தொடங்கிவிட்டதால் வாத்தியாரை யாரும் இப்போது வெறுமனே வாத்தியார் என்று அழைப்பதில்லை. அடைமொழி கொடுத்து ‘டாக்டர் வாத்தியார்’ என்று அசத்தலாக அழைக்கிறார்கள். தன்னுடைய மருத்துவ ஆலோசனைகளுக்கு ‘பீஸ்’ எதுவும் அவர் வாங்குவதில்லை என்பதால், ஊர்மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு.

வாத்தியாரின் இந்த திடீர் அவதாரத்தால் சைட் எஃபெக்ட் ஒன்றும் உண்டு. ஊரில் ஆஸ்பத்திரி வைத்திருந்த ஒரே டாக்டரான அசோக்கின் கிளினிக் நோயாளிகளின் வருகையின்றி, வருமானமில்லாமல் ஈயடித்துப் போனது. ஊரில் அவரது பிழைப்பு கேள்விக்குறியானது. வாடகை கொடுக்கக்கூட வக்கற்ற நிலைக்குப் போய்விட்ட டாக்டர், பேசாமல் வாத்தியாரிடம் கம்பவுண்டராக வேலைக்கு சேர்ந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.

1 ஜூன், 2012

கல்விக்கடன் - FAQs


கல்விக்கடன் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு

விடையளிக்கிறார் கல்விக்கடன் சேவைப்படையின்

ஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்பு கொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banker’s Association) கல்வி வளர்ச்சிக்கான மாதிரித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, கடன். வட்டியும் உண்டு. +2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்த பொதுத்துறை/தேசிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும் சென்று, அருகிலிருந்து வங்கிக்கு சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.

யார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்?

கல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.

என்னென்ன சான்றிதழ்கள்/ஆவணங்கள் தரவேண்டும்?

+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்தற்கு சான்றாக அட்மிஷன் கார்ட், மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையையும் தந்தாக வேண்டும்.

கடனுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா?

கடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆக இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சொத்துபிணை வைக்கவேண்டியிருக்கும்.

வட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதை பெற என்ன செய்யவேண்டும்?

தொழில்நுட்பம் மற்றும் பணிசார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்?

வங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.

வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன? படிக்கும்போதே செலுத்த வேண்டுமா? படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா?

படிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதத்திற்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.

குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பி செலுத்தியே ஆகவேண்டுமா?

ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.

முதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

இம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியை பெறவேண்டும் என்கிற சமூகநோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சகித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக் கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதைவைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது. இம்மாதிரியான விஷயங்களுக்கு துல்லியமான வரையறைகள் ஏதுமில்லை. ஆனால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

அப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாய்க்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலிஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன். கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தை கூட வங்கி அணுகலாம். கடன் என்றால், அதைத் திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்?



கல்விக்கடன் சேவைப்படை

கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். eltf.in என்கிற இணையத்தளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

31 மே, 2012

பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை

அனேகமாக +2 படிக்கும்போது என்று நினைக்கிறேன். தினத்தந்தியில் அந்த விளம்பரத்தைக் கண்டேன். “கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!” என்று கேப்ஷன் போட்டு, ஆனந்த் தியேட்டரில் வெளியான ஓர் ஆங்கிலப் படத்தின் விளம்பரம் கால்பக்க அளவுக்கு வந்திருந்தது. கான்செப்டே புதுசாக இருக்கிறதே என்று ‘ஏ’வலோடு, ஸ்கூல் கட்டடித்துவிட்டு நண்பர்களோடு ஆனந்த் தியேட்டருக்கு படையெடுத்தோம். படத்தின் பெயர் மறந்துவிட்டது. பெயரா முக்கியம்?

ம்ஹூம்.

ஒன்று. கட்டழகுக் கன்னி என்று விளம்பர வாசகத்தை எழுதிய எழுத்தாளர் நெஞ்சறிந்து பொய் சொல்லியிருந்தார். தினத்தந்தியில் ‘இளம் அழகி’ என்று செய்தியில் குறிப்பிடப்படுபவர், போட்டோவில் பேரன் பேத்தி எடுத்த கிழவியாக இருப்பதைப் போன்ற ‘ஐரனி’ தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்திலும்.

இரண்டு. ஃபாரினிலும் கூட ரேப் சீனை இலைமறை காய்மறையாக – அதாவது இளநீர் வெட்டுவது, மானை புலி வேட்டையாடுவது மாதிரி குறியீடுகளால் உணர்த்துவது – எடுக்கும் பழக்கம் இருக்கிறது போல. ‘பிட்டு’ எதிர்ப்பார்த்து போனவர்கள் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் சாட்டையடி வாங்கிய சிவபெருமான் ரேஞ்சுக்கு புண்பட்டு போனோம்.

ஆனாலும், அந்த விளம்பர வாசகம் மட்டும் இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவடுக்குகளில் இருந்து தொலையாமல் வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

நேற்று ஏதோ ஒரு சேனலில் யதேச்சையாக ஒரு மொக்கைப்படத்தைக் காண நேர்ந்தது. லேசான ‘கில்மா’ காட்சிகள் இருந்ததால், சுவாரஸ்யத்தோடு முழுப்படத்தையும் காண அமர்ந்தேன்.

என்ன ஆச்சரியம்..? ‘கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!’ தான் ஒன்லைனர். படத்தின் பெயர் ‘பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை. படுமோசமான மேக்கிங். அதெல்லாம் பிரச்சினையில்லை. கண்டெண்ட் ஈஸ் த கிங்.

நான்கு கயவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவே எல்லா கெட்ட காரியத்தையும் செய்பவர்கள். திருச்சிக்கு செல்லும்போது ஒரு ஓட்டலில் ‘அந்தமாதிரி’ ஃபிகருக்காக வெயிட் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டலின் அடுத்த அறையில் ஒரு கம்பெனியின் இண்டர்வ்யூ நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த இண்டர்வ்யூக்கு வரும் ஒரு ஃபிகர் தவறுதலாக இவர்களது அறைக்குள் நுழைந்துவிட, கடும்போதையில் இருக்கும் நால்வரும் சேர்ந்து...

அடுத்த காட்சியே ஒரு ட்விஸ்ட். நால்வரில் ஒருவனுக்கு திடீர் திருமணம். மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே தாலி கட்டிவிடுகிறான். முதலிரவில்தான் தெரிகிறது. தான் தாலி கட்டிய பெண், அந்த திருச்சி ஓட்டலில் சின்னாபின்னப் படுத்தப்பட்டவள். வாழ்க்கையே நொந்து கொத்துக்கறி ஆகிறான். போட்டுத் தள்ளவும் முடியாது. புதியதாக மணமான பெண் இறந்துவிட்டால், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரணை நடத்துவார்கள். வெளியே சொல்லவும் முடியாது. ஏனெனில் கற்பழிப்புக் குற்றம். கவுரவமான குடும்பம். இருதலை கொல்லியாக இல்லாமல் பலதலை கொல்லியாக தினம் தினம் மனதளவில் செத்து செத்து விளையாடுகிறான். நெருங்கிய நண்பர்கள் மற்ற மூவருக்கும் இவளை அறிமுகப்படுத்தவும் முடியாது. அவமானம்.

இப்படியாக நாயகனின் மனக்கொந்தளிப்புகளும், அவனுக்கும் அவனது மனைவிக்குமான கேட் & மவுஸ் விளையாட்டும்தான் படத்தின் பிற்பாதி. நாயகனாக நடித்திருப்பவர் எல்.கே.ஜி. பையன் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்திருப்பதைப் போன்ற பிரமாதமான ரியாக்‌ஷன்கள் தருகிறார். பான்பராக்கை வாயில் போட்டு குதப்பி, தலையில் துப்பிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு ஹேர்ஸ்டைலில் கருணாஸ் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அவரே பாடி, ஆடியிருக்கும் ஒரு குத்துப்பாட்டு ஓக்கே. நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் எனும்போது நாற்பதை கடந்த தொப்பை பார்ட்டிகளை நடிக்கைவைக்கும் கலாச்சாரம் என்றுதான் நம்மூரில் ஒழியுமோ. டிவியில் லொள்ளுசபா மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரு விக்கு மண்டையரும் நான்கு இளைஞர்களில் ஒருவர். ஒரே ஒருவர் மட்டும் ஓரளவுக்கு இளைஞர் மாதிரியிருக்கிறார்.

இந்தப் படத்தையே உருப்படியான இயக்குனர் ஒருவர், கொஞ்சம் சுமாரான பட்ஜெட்டில் மீண்டும் ரீமேக் செய்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தரமுடியும். முதல் பாதி நகைச்சுவை, இரண்டாம் பாதி க்ரைம் ட்விஸ்ட்டுகள் என்று நம்மூரின் அச்சு அசல் க்ரைம் ஸ்டோரி ஃபார்முலா. எந்த காலத்துக்கும் ஒர்க் அவுட் ஆகக்கூடிய சப்ஜெக்ட். செண்டிமெண்டுகளை அசைத்துப் பார்க்கும் துணிச்சல் என்று மொக்கைப்படமாக இருந்தாலும் பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கிறது.

படத்தின் பெரிய ஆறுதல் ‘கதை’ என்றால்.. ஆச்சரியம் ஹீரோயின். “சென்னைப் பட்டினம், எல்லாம் கட்டணம்.. கையை நீட்டினா காசுமழை கொட்டணும்” என்றொரு பாடலை பார்த்திருக்கிறீர்களா? ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் அப்பாடலுக்கு பிரபுதேவாவோடு ஆடும் குட்டிப்பெண் கல்யாணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையென்றால் ‘ஜெயம்’ படத்தில் சதாவின் தங்கையாக நடித்த பாப்பையாவது நினைவிருக்கும். அந்த பாப்பாதான் இப்போ பீப்பாயாக மாறி, ஐமீன் பேபி கல்யாணி குமாரி பூர்ணிதாவாக மாறி கவர்ச்சிக் கடலில் குதித்திருக்கிறார். காட்டன் புடவை அவருக்கு மிக பாந்தமாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் புடவை. பாடல் காட்சிகள் சிலவற்றில் ‘பேட்’ வைத்திருப்பது தெரிகிறது. அதற்கான நிர்ப்பந்தமும் புரிகிறது. மாநிறம், களையான முகம். ஹோம்லியான பாடிலாங்குவேஜ். விடிகாலையில் குளித்து, ஈரத்தலையில் டவல் சுற்றி, பூசை முடித்து, தீபாரதனை தட்டோடு ஒரு காட்சியில் எதிர்படும் பூர்ணிதாவை பார்க்கும்போது இவரையே கல்யாணம் கட்டிக்கலாமா என்கிற எண்ணம் நம்மைப் போன்ற ஒவ்வொரு இளைஞருக்கும் தோன்றும். அவ்வளவு தெய்வீகக்களை முகத்தில். கொஞ்சம் குள்ளம் என்பதுதான் பிரச்சினை.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. டிவிடியாவது கிடைக்குமாவென்றும் தெரியவில்லை. எப்போதாவது சன் குழும சேனல்களில் காணும் பாக்கியம் கிடைத்தால் நீங்களும் என்னைப்போல பரமபிதாவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே.