17 ஆகஸ்ட், 2012

ஆந்திர ஜோதி


ஆச்சரியத்தில் இயல்பாக நாம் மூக்கின் மேல் விரல்வைத்து கேட்கும் எந்த ஒரு வெற்றிக்கதையின் பின்னணியிலும் விவரிக்க முடியாத சோகமும், வலியும் இழையோடுவது வழக்கம்தான். சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கதை என்று நாம் நினைப்பது, சிலரின் வாழ்வில் நிஜமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நம் கற்பனைக்கும் சாத்தியமில்லாதது. ஜோதிரெட்டியின் கதையும் அப்படித்தான். ஒரு சாதாரணப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் இத்தனை திருப்பங்களா என இவரின் கதையைக் கேட்கும்போது வாய்பிளக்கிறோம்.

ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தில் ஹனுமகொண்டா மண்டலத்தில் அமைந்திருக்கும் நரசிம்மலாகூடம் என்கிற ஊரில் பிறந்தார் ஜோதிரெட்டி. நான் குழந்தைகளில் இவர்தான் மூத்தவர். அப்பா சாதாரண விவசாயப் பணியாளர். எமர்ஜென்ஸி கால நெருக்கடியில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்த சிரமப்பட்டவர் வெறுத்துப் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆனாலும் குடும்பம் மீதிருந்த பாசம் காரணமாக தன் பணியை தொடரவில்லை. இராணுவப் பயிற்சியிலிருந்து பாதியிலேயே ஊர் திரும்பினார். குடும்ப வறுமை தொடர்ந்தது. அம்மா இல்லாத குழந்தை என்றுகூறி அருகிலிருந்த ‘பாலசதன்’ என்கிற ஆதரவற்றோர் இல்லத்தில் ஜோதியை சேர்த்தார் அவருடைய தந்தை.

ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை ஜோதி அந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார். வாழ்வின் மிக மோசமான கட்டம் அது. குளிர்க்காலங்களில் போர்வைகூட இல்லாமல் கொடிய வறுமை. ஏதேனும் அதிசயம் நிகழும், தன் வாழ்வு மாறும் என்று தினம் தினம் கற்பனையிலேயே நாட்களை கடத்தினார். கோடை விடுமுறையின் போது குழந்தைகள் தங்கள் ஊருக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்வதுண்டு. ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட ஜோதி தனது வீட்டுக்குச் சென்றதில்லை. வார்டனின் இல்லத்திலேயே தங்கிவிடுவார். அந்த நாட்களின் நினைவுகள் இன்னும்கூட ஜோதிக்கு கொடுங்கனவுதான். அன்னை தெரசாவின் வார்த்தைகளோடு அந்தநாளை நினைவுகூர்கிறார். “வறுமையோ, வேறு எந்த விஷயமோகூட இளமையில் கொடிது அல்ல. நம்மைப் பற்றி யாருக்குமே அக்கறையில்லை என்று உணர்வதைவிட மோசமான விஷயம் உலகில் இல்லை”
பத்தாம் வகுப்பில் எல்லோரும் பாராட்டும் விதமாக நல்ல மதிப்பெண்களோடு தேர்ந்தார் ஜோதி. படிப்பைத் தொடரவேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவரது அப்பாவுக்கு வேறு திட்டமிருந்தது. சிறுவயதிலேயே தன் மகளை ஆதரவற்றோர் இல்லத்தில் அனாதரவாக விட்ட குற்றவுணர்வின் காரணமாக, அவளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும் என நினைத்தார். முடிந்தவரை சீக்கிரமாக தன்னுடைய கடமைகளை முடித்தாகவேண்டும் என்று அவருக்கு அவசரம். பதினாறு வயதிருந்தபோதே ஜோதிக்கு திருமணம் செய்வித்து நன்றாக வாழவைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். அப்பாவின் ஆசைப்படியே ஜோதிக்கு திருமணம் ஆனது. கணவர் சங்கிரெட்டி.

திருமணம் குறித்த பெரிய ஆர்வமோ, புரிதலோ இல்லாத வயது. பதினெட்டு வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் ஜோதி. துரதிருஷ்டவசமாக பிறந்த வீட்டு வறுமை புகுந்த வீட்டிலும் இருந்தது. தன் குழந்தைகளை காப்பாற்ற சிரமப்பட்டார். மாமியாரின் பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு, விவசாயக்கூலியாக பணியாற்றத் தொடங்கினார். தினமும் ஐந்து ரூபாய் கூலி. படித்த பெண் ஒருவர் தங்களோடு வேலை செய்வது, அவருடன் பணியாற்றவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

1986ஆம் ஆண்டிலிருந்து 89ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தார் ஜோதி. படிக்கும்போது ஏதோ ஓர் அதிசயம் நிகழும் என்று தினம் தினம் அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அதிசயம் குறித்த கனவெல்லாம் இப்போது இல்லை. ஆனாலும் விதி சிரித்தது. இம்முறை நல்லவிதமாகவே சிரித்தது. ஜோதி எதிர்பாராத அந்த அதிசயமும் நிகழ்ந்தது. நேரு யுவகேந்திரா திட்டம் மூலமாக அந்த கிராமத்தில் வயது வந்தோருக்கு கல்வி போதிக்கும் மையம் ஒன்று உருவானது. அதில் பயிற்றுநராக ஜோதிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் நூற்றி ஐம்பது ரூபாய்தான் சம்பளம். விவசாயக் கூலிவேலையில் கிடைக்கும் அதே பணம்தான் என்றாலும், இது அவரது படிப்புக்கு மரியாதை செய்யும் கவுரவமான வேலையாக இருந்தது. தன்னோடு வேலை செய்தவர்களுக்கே ‘டீச்சர்’ ஆனார் ஜோதி. டீச்சர் என்பதால் கண்டிப்பு காட்டாமல், விளையாட்டாக பாடம் நடத்தினார். நல்ல பலன். ஓராண்டு கழித்து ஆய்வுக்கு வந்த குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். ஜோதியின் தன்னார்வத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் ஹனுமகொண்டா மண்டலத்துக்கே அவரை பயிற்றுநராக தரம் உயர்த்தினார்கள்.

இந்தப் பதவிக்கு உயர்ந்தபிறகு வாரங்கல் மாவட்டம் முழுக்க அவர் பயணிக்க வேண்டியிருந்தது. பல்வேறு மனிதர்களை சந்தித்துப் பேசியபோது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ‘கல்வி’ என்பது எத்தனை மகத்தான முன்னேற்றத்தை ஏற்படுத்துமென கண்டுகொண்டார். தானும் இனி முன்னேற வேண்டுமானால், கல்விரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தார். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடித்தார். பி.எட் முடித்து அரசுப்பணியில் ஆசிரியராக வெற்றிகரமாக சேர்ந்தார்.

மிக சுலபமாக அவரது இந்தப் பயணத்தை வார்த்தைகளில் கடந்துவிட்டோம். ஒரு குக்கிராமத்துப் பெண், தன் கிராமத்தை விட்டு வெளியே வந்து பணிக்காக தங்குவதும், கணவர்-குழந்தைகள் என்று குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதையும் வெறுமனே வெற்றியாகவோ, சாதனையாகவோ சொல்லிவிட முடியாது. இவற்றைத் தாண்டிய வார்த்தைகள் தேவை. ஜோதியின் கதை அவர் ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததோடு முடிந்துவிட்டால், மிகச்சாதாரண வெற்றிக்கதைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கும். ஆனால் இன்னும் தொடர்கிறது.

ஜோதியின் உறவினர்களில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க வருமானம் அந்த குடும்பத்தை எப்படி தரமுயர்த்தியது என்பதை நேரில் கண்டார். உறவினரின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், வாழ்க்கைத் தரமும் கிடைத்தது. தன் குழந்தைகளுக்கும் அதை வழங்கவேண்டுமென்ற ஆசை ஜோதியின் நெஞ்சில் தீயாய் பற்றியெரியத் தொடங்கியது. கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார். அமெரிக்கா செல்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கத் தொடங்கினார். ஆனால் விசா கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. எப்படியோ அடித்துப் பிடித்து ‘விசா’ வாங்கி, சொற்பப் பணத்தோடு அமெரிக்கா பறந்தார். அமெரிக்கா சென்றவுடன் தான் தெரிந்தது, அங்கே வாழ்வது அத்தனை சுலபமல்ல. யாரெல்லாம் தன்னை ஆதரிப்பார்கள் என்று நினைத்து அமெரிக்காவுக்குப் போனாரோ, அவரெல்லாம் கைகழுவி விட்டார்கள்.

கையிருப்புக் கறைந்துக் கொண்டிருந்த நேரத்தில், நியூஜெர்ஸி நகரில் ஜோதிக்கு வேலை கிடைத்தது. ’மூவி டைம்’ என்கிற வீடியோ கடையில் விற்பனைப் பணி. ஒரு குஜராத்திக் குடும்பத்தில் ‘பேயிங் கெஸ்ட்’ ஆக தங்கினார். வீடியோக் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வாரங்கல்லைச் சேர்ந்த ஒரு இந்தியர் பழக்கமானார். ஜோதியின் கதையைக் கேட்ட அவர், தன்னுடைய தம்பிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். சி.எஸ்.அமெரிக்கா என்கிற நிறுவனத்தில் பயிற்றுநராக பணியாற்ற, ஜோதியின் பொருளாதாரக் கனவுகள் நிஜமாகத் தொடங்கின. சிறிது காலத்திலேயே ஐ.சி.எஸ்.ஏ என்கிற பெரிய நிறுவனம் தனது கதவுகளை, கவர்ச்சிகரமான சம்பள உறுதியோடு ஜோதிக்கு திறந்து வைத்தது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தது என்று நிம்மதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு அடுத்து ஒரு திடீர் இடி.

அவரது விசா பணியாற்றுவதற்கு அங்கீகரிக்கப் படாதது என்பதால் எச்-1 விசா வாங்கும்படி நிறுவனம் வற்புறுத்தியது. எச்-1 விசா சுலபமாக கிடைக்கவில்லை என்பதால் நிறுவனத்தில் இருந்து ஜோதி வெளியேறினார். மீண்டும் நாட்டுக்கு திரும்புவதை விட எச்-1 விசாவை போராடி வாங்குவதையே அவர் விரும்பினார். ஒரு மணி நேரத்துக்கு ஐந்து டாலர் சம்பளம் கிடைக்கும் சிறு சிறுவேலைகளை செய்தார். தன்னுடைய விசாவை உறுதியாக்க மெக்ஸிகோ வரை அவர் செல்ல வேண்டியிருந்தது. இந்த அலைச்சல்தான் ஜோதியை ஒரு நிறுவனம் துவக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கியது. அமெரிக்காவில் விசா பிரச்சினைகளால் அவதிப்படும் வெளிநாட்டவருக்கு உதவி, அதன் மூலம் சிறு கமிஷனை பெறும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினால் என்ன என்கிற ஐடியா அவருக்கு தோன்றியது. ‘கீ சொல்யூஷன்’ நிறுவனம் உருவான கதை இதுதான். ‘தீர்வுகளுக்கு சாவிஎன்கிற பெயர் பொருத்தமானதுதான் இல்லையா?

2000ஆம் வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கு திரும்பிய ஜோதி, 2001 செப்டம்பரில் தன் நிறுவனத்தைத் தொடக்கினார். சாஃப்ட்வேர் தொழில் தெரிந்த தன்னுடைய உறவினர் ஒருவரையும் பங்குதாரர் ஆக்கி ‘கீ சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’ என்கிற பெயரில் தொழிலை விரிவுப்படுத்தினார். இரட்டை கோபுரத் தாக்குதலால், செப்டம்பர் 2001 அமெரிக்காவே அலறிய மாதம். ஆனால் அம்மாதத்தில் தொழில் தொடங்கி, மிகக்குறைந்த கால அவகாசத்தில் ஜோதி உயர்ந்தார். அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகத் தொடங்கியது. தன்னுடைய குழந்தைகளுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வழங்க முடிந்தது. இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அமெரிக்க வாழ்க்கை அமைந்துவிட்டாலும் ஜோதிக்கு தன்னுடைய வேர்களை மறக்கமுடியவில்லை. வருடத்துக்கு ஒருமுறையாவது இந்தியாவுக்கு வருகிறார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் செல்கிறார். பொருள் உதவி செய்கிறார். இவரது கதையை தங்கள் மாணவ, மானவிகளிடம் நேரில் சொல்லவைக்க ஆந்திர கல்லூரிகள் போட்டாபோட்டி போடுகிறது. இந்தியப் பெண்களுக்கு கல்வி அடிப்படையில் உதவும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பினை உருவாக்குவது அவரது இன்றைய லட்சியம். விடாப்பிடியாக தான் விரும்பியதை சாதித்தவர், லட்சியத்தை எப்பாடு பட்டாவது நிச்சயமாக அடைவார். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் ஜோதியின் வாழ்க்கையை படிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கான படிப்பினை இவரது வாழ்க்கையில் இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

14 ஆகஸ்ட், 2012

கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை


உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?

கலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.

பிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர்முரசொலிவார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடுமுரசொலிவாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.

கலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், தொலைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

வெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.

இன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.

இப்போது உரையாடலுக்கான இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.

7 ஆகஸ்ட், 2012

மூன்று குறுநாடகங்கள்


சமீபத்தில் ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட மூன்று குறுநாடகங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.  எழுத்தாளர் ஆனந்த்ராகவின் மடிநெருப்பு, அந்தரங்கம், இரண்டாவது மரணம் ஆகிய சிறுகதைகளை நாடகவடிவில் சென்னையில் மேடையேறின. ஆனந்த்ராகவின் சில நாடகங்களை ஏற்கனவே கண்டிருக்கிறோம். ‘கிரிக்கெட் பெட்டிங்’ குறித்த அவரது ஒரு நாடகம் அரங்க அமைப்பில் ஓர் அதிசயம். நாடக மேடையிலேயே புத்திசாலித்தனமாக கிரிக்கெட் மைதானத்தை காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார்.

மடிநெருப்பு
சமகால நிலஅபகரிப்புப் பிரச்சினையை கையாண்டிருக்கும் கதை. அரசியல் செல்வாக்குள்ள ரியல் எஸ்டேட் குண்டர்கள் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். வயதான மூன்றே மூன்று நண்பர்கள் மட்டும் தங்கள் இடங்களை அவர்களுக்கு தர மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது வெறும் நிலம் மட்டுமல்ல. உழைப்பும், உணர்வும் கலந்து பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. கடைசிக்காலத்தை தங்கள் சொந்த வீட்டில் கழிக்க விரும்பும் அப்பாவி நடுத்தர முதியோர். அவர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மீதியிருக்கும் இருவர் மனரீதியாக அடையும் உளைச்சல்கள்தான் கதை. காத்தாடி ராமமூர்த்தி ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்து இயக்கியிருக்கிறார்.

அந்தரங்கம்
இரண்டே இரண்டு பாத்திரங்கள் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு மேல் பேசி அலுப்பூட்டும் நாடகம். விகடனிலோ, குமுதத்திலோ இதை சிறுகதையாக வாசித்திருப்பதாக நினைவு. சிறுகதையாக கவர்ந்த கதை ஏனோ நாடகமாக்கலில் அவ்வளவாக பிடிக்கவில்லை. யாருக்கோ அனுப்பவேண்டிய மெயிலை தன்னுடைய கணவனுக்கு அனுப்பி விடுகிறாள் இளம் மனைவி. அந்த மெயிலை தன் கண்முன்னே அழிக்குமாறு கணவனை வேண்டுகிறாள். கணவன் மனைவிக்குள் வெளிப்படைத்தன்மை வேண்டாமா என்று அவன் கேள்வி எழுப்புகிறான். மனைவிகளுக்கான ‘ப்ரைவஸி’ உரிமையை அவள் போதிக்கிறாள். இப்படியாக நீளும் உரையாடலில் இறுதியில் கணவன், மனைவி இருவருமே பெருந்தன்மை காட்டுவதாக நாடகம் முடிகிறது. ஆனால் அது போலி பெருந்தன்மை என்பதை க்ளைமேக்ஸில், அந்த தம்பதியினருக்குத் தெரியாமலேயே ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். “என் அம்மாவோட பேங்க் அக்கவுண்டை கூட அப்பாதான் ஆப்பரேட் பண்ணாரு. அவரே கையெழுத்து போட்டு காசு எடுப்பாரு” போன்ற வசனங்களில் தலைமுறை மாற்றங்களை போகிறபோக்கில் கூர்மையாக பதிந்திருக்கிறார்கள்.

இரண்டாவது மரணம்
இந்த நாடகம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் அப்படியே இருக்கிறது. இறுதிக் காட்சியில் விழியோரம் நீர் கோர்க்கவில்லை என்றால், நீங்கள் இடிஅமீனாகதான் இருக்க வேண்டும். அப்பா ஐ.சி.யூ.வில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அடுத்த ஒரு மாதத்தில் மகன் எதிர்கொள்ளும் மனப்போராட்டம்தான் கதை. அப்பாவுக்கு ப்ரெய்ன் டெட். “வெறுமனே அவரது இதயம் மட்டும் துடிச்சிக்கிட்டிருக்கு. அதுவும் மெஷினோட உதவியாலே. இப்படியே வெச்சிக்கிட்டிருந்தா நிறைய செலவாகும். நிறுத்திடலாமா?” என்கிறார் டாக்டர். முப்பத்தொன்பது ஆண்டுகள் வளர்த்தெடுத்த அப்பாவை அப்படியே விட்டுவிட மகனுக்கு சம்மதமில்லை. ஆஸ்பிட்டலே கதியென்று கிடக்கும் மகனால் தன் குடும்ப, அலுவலகக் கடமைகளை சரியாக செய்ய முடியவில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், கடைசியாக அவனெடுக்கும் முடிவு என்று உருக்கமான, உலுக்கிப் போடும் நாடகம். பிரதானப் பாத்திரத்தில் நடித்திருக்கும் க்ரிஷ் என்கிற நடிகரின் திறமை நாடகத்தை தாங்கிப் பிடிக்கிறது. பேஷண்டின் பல்ஸ் காட்டும் மானிட்டரை நாடகத்துக்கு பேக்கிரவுண்டாக யோசித்தது அபாரம்.


நில அபகரிப்பு, கணவன் மனைவிக்கு இடையேயான எல்லை, அப்பா செண்டிமெண்ட் என்று மூன்று வெவ்வேறு பிரச்னைகளை எடுத்துக் கொண்டாலும் மூன்றையும் இணைக்கும் பிணைப்பாக, நடுத்தர மனங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்போக்கினை விசாரிக்கிறார் ஆனந்த்ராகவ். நாட்டாமையாக மாறி, இதற்கு தீர்வாக எதையும் சொல்லாவிட்டாலும் இவையெல்லாம் ஏற்படும் சூழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

சினிமா தரும் அனுபவத்தை நாடகம் தராது என்கிறார்கள். எனக்கென்னவோ நாடகங்கள் தரும் காட்சியனுபவம் சினிமாவில் கிடைப்பதில்லை. நமக்கு முன்பாக தோன்றுபவர்கள் ரத்தமும், சதையுமானவர்கள் என்கிற நம்பிக்கை மேடையில்தான் கிடைக்கிறது. திரையில் கிடைப்பதில்லை. வெண்திரையில் கிடைக்கும் லொக்கேஷன், கிராபிக்ஸ் மாதிரியான விஷயங்கள் நாடகங்களில் கிடைக்காதுதான். ஆனந்த்ராகவ் போன்றவர்கள் இந்த குறையை அரங்க அமைப்பினை நவீனப்படுத்தி, ஒலி-ஒளி துல்லியத்தைக் கூட்டி சரிசெய்கிறார்கள்.

ஆனால் சென்னையில் நாடகம் பார்ப்பது என்பது காஸ்ட்லியான பொழுதுபோக்காக மாறிவருகிறது. ஒரு தலைக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் மாதிரி டிக்கெட் கட்டணம். ஒரு மினிமம் மெம்பர் குடும்பம் டிக்கெட்டுக்காக மட்டுமே ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். குறைவான ரசிகர்களே வருகிறார்கள். நாடகச் செலவை, அரங்க வாடகையை ஈடுகட்ட டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்பது நாடகம் போடுபவர்கள் சொல்லும் காரணம். இருநூறு ரூபாய் கொடுத்து நாடகம் பார்ப்பதற்கு பதிலாக, ஐம்பது ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கலாம் என்பது ரசிகர்கள் சொல்லும் காரணம். கோழி-முட்டை கதைதான்.

ஒருமுறை மேடைநாடகத்தை ஒருவன் பார்த்துவிட்டால், திரும்பத் திரும்ப நிறைய நாடகங்களை பார்க்க விரும்புவான். துரதிருஷ்டவசமாக எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்த ஒரு தலைமுறைக்கு நாடகம் என்றாலே இன்று டிவியில் காணக்கிடைக்கும் மெகாசீரியலாகதான் தெரிகிறது. நாடகம் போடுபவர்கள்தான் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். தெருக்கூத்து மாதிரியான நிலைமை மேடை நாடகங்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

4 ஆகஸ்ட், 2012

டெசோ – என்ன பேசப்போகிறது?


ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ‘டெசோ’ மாநாட்டில் கீழ்க்கண்ட சில விஷயங்கள் விலாவரியாக பேசப்படவிருக்கின்றன என்று தெரிகிறது. தமிழகம், ஈழம் தவிர்த்து குறிப்பிடத்தக்க இந்தியத் தலைவர்களும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பு, இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி சுட்டிக் காட்டியிருக்கும் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவராமல் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மீதான சிங்கள அரசின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இப்படியான சூழலில் போரால் நிலைகுலைந்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச மறுவாழ்வுத் திட்டங்கள் வெறும் கண்துடைப்பாகவே முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் இலங்கையில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினை தெற்காசிய மனித உரிமைப் பிரச்சினையாக பாவிக்கப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு இந்தியாவில் நிம்மதியான வாழ்க்கைக்கான உறுதியை ஏற்படுத்த முடியும்.

பாரம்பரியத் தமிழ் பெருமை கொண்ட மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடங்கள் ஈழத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அவசியம். தம் இனத்துக்கான பிரத்யேக அடையாளம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழந்து எந்த ஒரு இனமும் உலகில் நீடிக்க முடியாது. தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. மாறாக அவற்றை அழிக்கும் பணியிலேயே சிங்கள அரசு மும்முரமாக இருந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை சிறைகளில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். முறையான சட்ட விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கல்விநிலையங்கள் பழுதின்றி செயல்படுவது தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய அவசியம்.

போர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்வி, மருத்துவ உதவிகளை வழங்கிட பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் தாமாக முன்வந்திருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளில் இவ்வசதிகளை மேம்படுத்த இவர்களை அரசு அனுமதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக போரால் மனநலரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், உற்றார் உறவினரை இழந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மன-உடல்நல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்ய வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஒத்த கருத்துடைய சகநாடுகளுடன் இணைந்து, இதுதொடர்பான பொருளாதார அழுத்தங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்த வேண்டும். தம் நிலங்களை தமிழர் திரும்பப் பெறவும், இழந்த பழைய வாழ்வை மீட்கவும் உறுதி செய்யும் விதமாக இந்தியா பல்வேறு நாடுகளோடு இணைந்து ஒரு குழுவினை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற அதேவேளையில், இந்திய தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தால் சந்திக்க நேரிடும் தொடர் உயிரிழப்பு, பொருட்சேதம் ஆகியவற்றையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக இந்தியக் கடற்படை தனுஷ்கோடியிலோ அல்லது மண்டபம் முகாமிலோ நிலைகொண்டு கண்காணிக்க வேண்டும்.

போரால் நாடு, வீடு இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்மண்ணுக்கு சுலபமாக வந்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

உடனடியாக பேசப்பட வேண்டிய பிரச்சினைகளாக இவற்றை ‘டெசோ’ அமைப்பினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்பிரச்சினைகளைத் தீர்க்க டெசோ எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், குறிப்பாக இந்திய அரசை நெருக்க என்ன வழிவகை வைத்திருக்கிறது என்பதெல்லாம் மாநாடு நடந்த பின்னர்தான் தெரிய வரும்.

ஈழம் என்றாலே வழக்கமாக பாடப்படும் ‘வாழ்க, வீழ்க’ கோஷங்களின்றி, அங்கிருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் அறிவார்ந்த வகையில் டெசோ செயல்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுகளாக இல்லாமல், செயல்பாடுகளுக்கு அடிகோலினால் மட்டுமே ‘டெசோ’ வெற்றியடையும்.

டெசோ இணையத்தளம் : http://teso.org.in

3 ஆகஸ்ட், 2012

மதுபானக்கடை

இதிகாசக் காலத்திலிருந்தே பாரதத்தில் ஒழுக்கத்துக்குப் பேர் போனவர்கள் ஸ்ரீராமரும், அவரது சீடர் ஆஞ்சநேயரும். இருவரும் ஒரு மதுபானக்கடையில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். இராமருக்கு சைட் டிஷ்ஷாக மூளைக்கறி. ஆஞ்சநேயருக்கு மிளகாய் தூக்கலாகப் போட்ட ஆம்லெட். பார் பையனிடம், “ஒரு கட்டிங் கடனா கொடேன். நாளைக்கு இன்னொரு கட்டிங் சேர்த்து போட்டு கொடுக்கறேன்” என்று டீலிங் பேசுகிறார். பார் பையன் மறுத்துச் சென்றுவிட ஆஞ்சநேயர், இராமரிடம் கூறுகிறார். “அவங்க சமூகத்துலே வட்டி வாங்குறது தப்பு”

நீண்டகாலம் கழித்து தமிழ் சினிமாவில் ஆண்மையான இயக்குனர் ஒருவரை பழமையான ஸ்ரீநிவாசா திரையரங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட வெண்திரை பிரசவித்துக் கொண்டிருந்த அதிசயத்தை நேரில் காணும் சாட்சிகளானோம்.

“இந்தத் திரைப்படத்தில் கதை என்று ஏதேனும் இருப்பதாக நீங்கள் கருதினால், அது உங்களுடைய கற்பனை” என்று ஸ்லைட் போட்டுதான் படத்தையே தொடங்குகிறார் இயக்குனர் கமலக்கண்ணன். படத்தில் கதை மட்டுமல்ல, கதாநாயகனோ, நாயகியோ கூட இல்லை. எந்த அம்சங்கள் எல்லாம் சினிமா என்கிற கற்பிதம் இருக்கிறதோ, அந்த அம்சங்கள் எதுவும் மருந்துக்குக் கூட இலை. இன்னும் சொல்லப் போனால் இதை திரைப்படம் என்று வகைப்படுத்தியதே கூட இயக்குனரின் கற்பனைதான். மதுபானக்கடை என்கிற களத்தின் ஒரு நாள் ‘டயரி’ தான் ஒட்டுமொத்த ஒன்றரை மணிநேரப் படமுமே.

நான்கைந்து முக்கியமான பாத்திரங்கள். பாத்திரங்களின் பின்னணி அறிமுகம். காதல், பாசம், நட்பு, அன்பு, வன்மம் என்று நவரச கலவையான உணர்வுகளை கலந்த காட்சிகள். ஏதேனும் இரண்டு மூன்று பாத்திரங்களுக்கு இடையேயான பாசமோ, காதலோ, முரணோ அல்லது விரோதமோ. நாலு சண்டை காட்சிகள். ஐந்து, ஆறு பாடல் காட்சிகள். இடைவேளைக்கு முன்பாக ஒரு பிரதான சிக்கல் முடிச்சு. பிற்பாடு அந்த சிக்கலை வளர்த்தோ, அல்லது படிப்படியாக அவிழ்த்தோ இறுதியில் சுபம் அல்லது அசுபமான க்ளைமேக்ஸ்... இவ்வாறாகதான் சினிமா நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. மதுபானக்கடை திரைப்படக் குழுவினர் ஒரு சினிமாவைக்கூட பார்த்ததில்லை போலிருக்கிறது. இயக்குனர் ஒருவேளை மொடாக்குடியராக இருக்கலாம். தான் கண்ட, கேட்ட, அனுபவித்த விஷயங்களை சினிமாவாக்க முயற்சித்திருக்கிறார். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் புதிய genre ஒன்றினை தோற்றுவிக்கும் பெருமைக்குள்ளாகுகிறார்.

கிட்டத்தட்ட ஒரே செட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி ‘ரிபீட்’ காட்சிகள் தோன்றுவதைப் போல ஒரு சலிப்பு ஏற்படுவதால், உடனடியாக படத்தில் ஒன்றமுடிவதில்லை என்பதுதான் ஒரே குறை. போகப்போக பழகிவிடுகிறது. படம் தொடங்கியதிலிருந்து ஏராளமான பாத்திரங்கள். ஒரு காதலன். ஒரு காதலி. டாஸ்மாக் ஊழியர். பார் உரிமையாளர். பாரில் பணிபுரியும் தொழிலாளர்கள். பாருக்கு வரும் நுகர்வோர் அவர்கள் ஒவ்வொருவரும் யூனிக் கூலித் தொழிலாளர்கள், பாடகர், உரிமைகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர், ஆலைத் தொழிலாளர்கள், சாதிசங்கப் பிரமுகர், இத்யாதி.. இத்யாதி.. திரையில் காட்சியாக விரியும் இப்பாத்திரங்களுடைய ஒருநாள் வாழ்க்கையின் சில மணித்துளிகளை மட்டும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துகிறார் இயக்குனர். எவருடைய பின்னணிக் கதையையும் நேரடியாக கேமிராவின் பார்வையில் சொல்லாமல், அவற்றை ரசிகனே தன் கற்பனையில் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தை மதுபானக்கடை வழங்குகிறது. காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனும் புத்திசாலி என்று நம்பும் தமிழின் முதல் இயக்குனராக கமலக்கண்ணனை பார்க்க முடிகிறது.

இந்திய-தமிழ் சினிமாவுக்கு பாடல் காட்சிகள் தேவையா என்கிற பட்டிமன்றத்துக்கு வயது நூறு. இப்படத்தில் பாடல் காட்சிகள் யாவுமே இடைச்செருகலாக இல்லாமல் திரைக்கதையினூடே காட்சிகளாய் பயணிப்பதால் அந்தப் பட்டிமன்றத்தின் விவாதமே இப்படத்தைப் பொறுத்தவரை பொருளற்றதாகிறது. பாடல்கள் தொடங்கும்போது ஸ்டெடியாக இருக்கும் ஆடியன்ஸ், ஒவ்வொரு பாடல் முடியும்போது ‘கேர்’ ஆகுவதைப்போல உணர்ந்தே எடுத்திருக்கிறார்கள். வாழ்வில் ஒரு முறையாவது டாஸ்மாக் பாரில் குடித்தவர்கள் படம் பார்க்கும்போது இந்த உணர்வினை தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு பாடல் காட்சியில் மூன்று திருநங்கைகள் நுழைந்ததுமே, அவர்கள் சரக்கு போட்டுவிட்டு குமுக்காக ஒரு குத்துப் போடுவார்கள் என்று வழக்கமான சினிமா பார்வையில் எதிர்ப்பார்க்கிறோம். நஹி. இதுமாதிரி படம் முழுக்கவே நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமே நஹி என்றாலும், படம் முடிந்ததும் மனசு முழுக்க பல்வேறு உணர்வுகளால் நிறைகிறது.

குடியின்றி அமையாது உலகு என்றுகூறி ‘குடி நல்லது’ என்று பேசவில்லை. அதேநேரம் குடிக்கலாச்சாரத்தால் சமூகம் எப்படி சீரழிகிறது பாருங்கள். குடும்பம் எப்படி குட்டிச்சுவராகிறது பாருங்கள் என்று கழிவிரக்கம் கோரி, குடிவெறிக்கு எதிரான பிரச்சாரமுமில்லை. நல்லது, கெட்டது என்கிற விவாதத்துக்குள்ளேயே நுழையவில்லை. எட்ட நின்று, ஒரு பீர் அருந்தியபடியே இன்றைய தமிழகத்தின் தவிர்க்க முடியாத சங்கதியான மதுபானக்கடையை, லேசான போதையில் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார் இயக்குனர். “நாம தள்ளாடினாதான் கவர்மெண்டு ஸ்டெடியா இருக்கும். நாம ஸ்டெடி ஆயிட்டோமுன்னா கவர்மெண்டு தள்ளாடிடும்” நிஜத்தை பிரதிபலிக்கும் இந்த ஒரு வசனம் போதாதா?

பரபரப்பான க்ளைமேக்ஸும் படத்தில் இல்லை. ஒரு நாளில் அதிகபட்சமாக என்ன நடக்குமோ, அதுதான் படத்தில் ஒன்றரை மணி நேரமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. எதையுமே மிகைப்படுத்த இயக்குனர் விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் ஒரு ஃபாரின் டூயட் எடுத்திருக்க முடியும். குறைந்தபட்சம் ஆக்ரோஷமான, ரத்தம் தெறிக்கும் மூன்று சண்டைக்காட்சிகளை அமைத்திருக்க முடியும். கண்கள் சிவக்க யாரையாவது பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்க முடியும். டூப்ளிகேட் சரக்கு சாப்பிட்டு, அந்த பாரில் குடித்தவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்று கதறக் கதற இறுதிக் காட்சியில் சீரியஸ் டிராமா ஆடியிருக்க முடியும். இது எதையுமே செய்யாமல் ‘போங்கடா போக்கத்தவனுங்களா’ என்றுகூறி, இந்தப் படத்தைப் பார்த்தாப் பாரு, பார்க்காட்டி போ என்று அதுப்பு காட்டியிருக்கிறார். அடுத்து தனக்கு கதை சொல்லச் சொல்லி விஜய்யோ, அஜித்தோ, சூர்யாவோ அழைக்க வேண்டும் என்கிற அக்கறை இயக்குனருக்கே இல்லாதபோது, நமக்கென்ன வந்தது?

படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் மிகக்குறைவு. நாயகி மாதிரி தோன்றும் காதலி சினிமாத்தனமின்றி தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரமொன்றின் கல்லூரி யுவதியாக அச்சு அசலாகத் தெரிகிறார். எடுப்பான மார்புகள், ஆழமான தொப்புள், ஆப்பிள்நிற மேனி, செர்ரி சிகப்பு லிப்ஸ்டிக் இதெல்லாம் மிஸ்ஸிங். எனவேதான் லிப்-டூ-லிப் கிஸ்ஸிங் இருந்தும், நமக்கு வழக்கமாக சினிமா பார்க்கும்போது ஏற்படும் காமவெறி ஏதும் ஏற்படுவதில்லை. இன்னொரு பெண் பாரில் துப்புரவுப்பணி செய்யும் மூதாட்டி. இன்னும் இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் கணவரோடு வந்து லைட்டாக ஒரு ‘கட்டிங்’ விட்டுச் செல்லும் குடிமகள்கள். மதுபானக்கடை முழுக்க முழுக்க சேவல் பண்ணை.

மதுசபையிலும் சாதி பார்க்கும் குடிமகனிடம், சாக்கடை அள்ளும் தொழிலாளி பேசும் வசனங்கள் சாட்டையடி. “சாராயம் எங்க குலசாமி. எங்க சாமியை தொலைக்க வெச்சுட்டீங்களேய்யா. நீங்கள்லாம் சந்தோஷத்துக்கும், துக்கத்துக்கும் குடிக்கறீங்க. நாங்க வேலை பார்க்கவும், அதோட வலிக்கும் குடிக்கிறோம்” அவரது ஆதங்கத்தின் நியாயத்தை ‘மார்பியஸ்’ அருந்தும் நம்மால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் துல்லியமாக புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஒருவேளை சினிமாவாக மதுபானக்கடை தோல்வி அடையலாம். ஆனாலும் கலைப்படைப்பாக மாபெரும் வெற்றியை எட்டியிருக்கிறது.