18 மார்ச், 2009
யாவரும் நலம்!
பிரசாந்த், மீனா நடித்த ‘ஷாக்’ என்ற திகில் படத்தை பார்த்தபோது முடிவுசெய்தேன். இனி தமிழில் தயாரிக்கப்படும் திகில் படங்களை பார்ப்பதில்லையென்று. நன்றாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்றெல்லாம் நண்பர்கள் ஹைப் கொடுத்து தொலைத்ததால் யாவரும் நலம் பார்த்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேசாமல் பதினைந்து ரூபாய் கொடுத்து ‘ஆவிகளின் அலறல்’ டிவிடி வாங்கிப் பார்த்திருக்கலாம்.
மாதவன் குடும்பம் 13-பி என்ற பிளாட்டில் குடியேறுகிறது. அங்கே சில அமானுஷ்ய விவகாரங்களை மாதவன் மட்டும் உணர்கிறார். உதாரணத்துக்கு அங்கே இருக்கும் லிஃப்ட் மாதவனுக்கு மட்டும் வேலை செய்வதில்லை. பி.சி.ஸ்ரீராமின் கேமிரா ஒரு நூறுமுறையாவது லிஃப்ட் கேபிளை வெவ்வேறு ஆங்கிள்களில் காட்டியிருக்கும். இசை கூட பயமுறுத்த மறுக்கிறது என்பதுதான் கொடுமை.
இவர்கள் வீட்டு டிவியில் மட்டும் எடக்குமடக்கான ஒரு மெகாசீரியல். அந்த சீரியலில் வரும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் இவர்கள் குடும்பத்தில் அப்பட்டமாக நடக்கிறது. டிவிக்கு ஆவி பிடித்திருக்கிறதாம். இண்டர்வெல் வரை இப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாதவனுக்கு ஜோடி நீதுசந்திரா. படத்தில் எனக்கு இருந்த ஒரே எண்டெர்டெயிண்மெண்ட் இவர்தான். ஹோம்லி ஃபிகர். வாத்ஸ்யாயனர் எழுதிய சமையல் புத்தகம் ஒன்றை மனைவிக்கு பரிசளிக்கிறார் மாதவன். புத்தகத்தில் இருப்பது மாதிரி சிக்கன் சிக்ஸ்டி நைன் செய்யச்சொல்லி இரவுகளில் வற்புறுத்துகிறார். அடுத்த கமல்ஹாசன். மாதவன் ஜோடியின் அன்னியோநியத்தை இன்னும் நெருக்கமாக காட்டியிருக்கலாம். கொஞ்சம் ‘சீன்’ சேர்த்திருந்தால் மஜாவாக இருந்திருக்கக் கூடும்.
இண்டர்வெலுக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. 1977ல் நடந்த எட்டு கொலைகள். கொலையாளி யாரென்ற மர்ம முடிச்சு. கொலை செய்யப்பட்ட பெண் டிவி ஆவியாக வந்து கொலையாளியை பழிவாங்குவது என்று இரண்டாம் பாதியின் பரபரப்பு ஓக்கே. ஒரு ஆவி தன்னைக் கொல்லவந்தவனை 32 ஆண்டுகள் கழித்துதான் பழிவாங்க வேண்டுமா என்று லாஜிக்கலாக கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவர் படம் பார்க்க வருபவர்கள் காதில் வைத்துக்கொள்ள இரண்டு ரோஜாப்பூக்களை இலவசமாக கொடுக்கிறார். பிளாக் & ஒயிட் டோனிங்கில் அந்த 1977 பிளாஷ்ஃபேக் படமாக்கப்பட்ட விதம் அபாரம். இந்தப் படத்துக்கு 1977 நடந்தது என்ன? என்று பெயர் வைத்திருக்கலாம்.
பேயையே காட்டாத பேய் படம் என்பது ஒன்றுதான் இப்படத்தின் சிறப்பு. டீசண்டான மெகாசீரியல் என்று சொல்லலாம். விஜய் டிவியின் ’நடந்தது என்ன?’ கூட இப்படத்தை விட சிறப்பாக எடுக்கப்படும் தொடர். மைடியர் லிசா, ஆடிவெள்ளி படங்கள் கூட இதைவிட அதிக திகிலை தரும். இது பகுத்தறிவுக்கு எதிரான படம் என்று சொல்லி என் டவுசரை நானே கிழித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நாளை பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்தவரான இராம.நாராயணன் ‘அருந்ததி’ ரிலீஸ் செய்கிறார்.
யாவரும் நலம் - ஒரே ஒருமுறை பார்ப்பது நலம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக