17 மார்ச், 2009

தேர்தல் நிலவரம்!

தேர்தலில் எந்தெந்த கட்சி தேறும் என்பது இன்றுவரை தமிழகத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்போதைக்கு திமுக - காங்கிரஸ், அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்டுகள் என்ற அளவுக்கே கூட்டணி அமைந்திருக்கிறது. பாஜகவோடு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேமுதிக திமுக அணிக்கு வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. எந்த அணி வெற்றிவாகை சூடும் என்று தெரியாததால் திரிசங்கு சொர்க்கத்தில் அள்ளாடுகிறது பாமக.

தேர்தல் ஓராண்டுக்கு முன்பாக நடந்திருக்குமேயானால் மிகத்தெளிவாக சொல்லிவிட்டிருக்கலாம் ரிசல்ட்டை. நாற்பதுக்கு ஜீரோ என்றளவில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும். மின்வெட்டுப் பிரச்சினையை தட்டுத் தடுமாறி சமாளித்தது, வெள்ளமெனப் பாய்ந்த வெள்ள நிவாரணம், ஒரு ரூபாய்க்கு அரிசி, பெரியளவிலான இலவசடிவி, கேஸ் கனெக்‌ஷன் வினியோகம், ஐம்பது ரூபாய் மளிகைப்பொருட்கள், பொங்கலுக்கு பொங்கல் வைக்க இலவசப் பொருட்கள் என்று ஓட்டுக்களை குறிப்பார்த்து வீசப்பட்ட திட்டங்கள் திமுகவை கரையேற்றி இருக்கிறது. இன்றைய நிலையில் இருபதுக்கு இருபது என்றே இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

பாமக, தேமுதிக கட்சிகள் சேரும் அணிகளைப் பொறுத்து ஐந்து முதல் பத்து தொகுதிகளில் ரிசல்ட் மாறலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்பது போன்ற தோற்றம் இருந்தது. இப்போது அதே பிம்பம் திமுக மீது இருக்கிறது. சுலபமாக வெற்றியடைந்து விடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டை விட்டால் திமுகவின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஆட்டம் கண்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது. பிரச்சாரத்தின் போது வழக்கமாக ஏதாவது மேஜிக் செய்வார் கலைஞர். இம்முறை என்ன செய்யப்போகிறார் என்று ஜெயலலிதா ஆவலாக காத்திருக்கிறார்.

பாமகவுக்கு கிட்டத்தட்ட பதிமூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆயினும் தனியாக நின்றால் நாற்பதில் நான்கில் கூட டெபாசிட்டை வாங்க முடியாது. பதிமூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கைப் போலவே விஜயகாந்துக்கு கிட்டத்தட்ட முப்பது தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் எடுக்கப்போகும் கூட்டணி நிலை தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கூட்டணி பலமின்றி வெற்றிக்கனி பறிக்கும் நிலையை திமுகவும், அதிமுகவும் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இழந்துவிட்டன.

கலைஞர் இரு நாட்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம். கொள்கை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லையென்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைகளுக்கு அரசியல் அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இதை எடுத்துக் கொள்ளலாம். தாங்கள் மட்டுமே கொள்கைக்குன்றுகள் என்று இதுவரை திமுகவினர் சொல்லிவந்த நிலை மாறியிருக்கிறது. சிறுத்தைகளுக்கு பலமான எதிர்காலம் இருப்பதை ஒருவேளை கலைஞர் கணித்திருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி சிறுத்தைகள் தங்கள் பக்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஈழப்பிரச்சினை இத்தேர்தலில் பெரிய அலையாக இருக்கக்கூடும் என்று தமிழுணர்வாளர்கள் பேசிவந்தனர். தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக பார்க்கப்போனால் ஈழ உணர்வு எழுச்சியில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள் மதிமுக, பாமக, சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுக - அதிமுக என்று தேர்தல் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஈழப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் தமிழிணையங்களில் ஈழம் தொடர்பாக கூறப்படும் அதீத எழுச்சியின் அளவினை என்னால் இங்கிருக்கும் மக்கள் மனங்களில் காண முடியவில்லை. காசிஆனந்தன் விகடன் பேட்டியில் சொல்லியிருப்பதைப் போன்று 83ஐ விட அதிகமான ஈழ ஆதரவு அலை இங்கே நிச்சயமாக இல்லை. இப்போதிருப்பது அனுதாபம் மட்டுமே. கடந்த சிலமாதங்களாக நேரடியான களப் போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இதை தெளிவாக என்னால் உணரமுடிகிறது.

தமிழன் வாக்களிக்கும்போது தன்னுடைய வாய்க்கால், வரப்பு பிரச்சினைக்கு தான் முன்னுரிமை அளிக்கிறானே தவிர, வன்னிக்கு அல்ல. ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தை தாண்டி காங்கிரஸை புறக்கணிக்கிறோம், அதிமுகவை புறக்கணிக்கிறோம், திமுகவை புறக்கணிக்கிறோம் என்று தங்கள் கட்சி அபிமானங்களை விட்டுத்தர யாரும் தயாராக இல்லை. எனவே இத்தேர்தலிலும் ஈழம் ஓட்டுக்கான அரசியலாக இங்கே முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. ஒருவேளை பாமக, வி.சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் அணி அமைத்துப் போட்டிருந்தால் இது வாக்குக்கான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்திருக்கும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெல்ல முடிந்தது. இத்தேர்தலில் அப்படிப்பட்ட வெற்றியை பெறுவது அசாத்தியமானது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே எந்த அணியும் வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. எந்த அலையோ, எந்தப் பிரச்சினையோ இல்லாமல் விளக்கெண்ணெய் மாதிரி வழ வழா கொழ கொழா என்று நடைபெறப் போகிற தேர்தல் இது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியப் பிறகாவது நிலைமை சூடு பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக