25 மார்ச், 2009
விகடன் - விமர்சனம்!
யூத்ஃபுல் நியூ ஜெனரேஷன் விகடன் வடிவத்தில் தான் ஏமாற்றம் தந்தது. இப்போது உள்ளடக்கத்திலும் பெரியளவில் ஏமாற்றம் தந்துவருகிறது. குமுதத்தின் மீதான விமர்சனமே பத்து ரூபாய் விலையுள்ள பத்திரிகையை பத்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது என்பதுதான். விகடன் பதினைந்து ரூபாய். எனவே பதினைந்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றபோதிலும் கூட இன்பாக்ஸ் என்ற பெயரில் பெரிய பெரிய படங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புவதை ஜீரணிக்கவே முடியவில்லை.
இருவாரங்களாக விகடன் வெளியிட்டு வரும் சர்வே முடிவுகள் கொஞ்சம் கூட மக்களின் எண்ணவோட்டத்தோடு தொடர்பில்லாததாகவே இருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே சர்வே எடுக்கிறார்களா அல்லது டெஸ்க் ஒர்க்கா என்ற சந்தேகமும் எழுகிறது. மன்மோகன் மீதும், காங்கிரஸ் மீதும் அதிருப்தி மக்களுக்கு அதிகமாக இருக்கிறதாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பிரதமர் பட்டியலில் அவருக்கு தன் முதலிடமாம். நன்றாகவே காதுகுத்துகிறார்கள் விகடன் குழுவினர். இந்த சர்வே தொடர்பாக எழுதப்படும் கட்டுரை நல்ல நகைச்சுவை. ஷங்கர் படங்களில் டிவி மைக் முன்பாக பேசுபவர்கள் மாதிரி மக்கள் பேசுகிறார்கள். விகடன் நிருபர்களின் எண்ணவோட்டம் மக்களின் எண்ணவோட்டமாகி விடாது.
கார்ட்டூன்களும் முன்புமாதிரி ஷார்ப்பாக இல்லை. ஹரனும், மதனும் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக தோன்றுகிறது. சினிமாவை வாசிக்க பலருக்கும் ஆர்வமிருப்பினும் விகடன் ஒரு சினிமாப் பத்திரிகையல்ல என்பதால் ஓவர்டோஸாக இருக்கிறது. கதைகளுக்கான இடம் ரொம்ப ரொம்ப குறைவு. இன்னமும் கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்குண்டு. ஒருவேளை கதைசொல்லிகள் குறைந்துவிட்டார்களோ? நாஞ்சில் நாடனின் ‘தீதும், நன்றும்’ கூட ஏமாற்றத்தையே தருகிறது. பேசாமல் அவரை தொடர்கதை எழுதச் சொல்லலாம். டாபிக்கல் மேட்டர்களை எழுத வேறு எழுத்தாளர்களை ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.
அதுபோலவே சினிமா விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இப்போது இல்லை. வில்லு படத்துக்கும் காஞ்சிபுரம் படத்துக்கும் நான்கைந்து மதிப்பெண்களே வித்தியாசம் என்பதை யாராலும் நம்பமுடியவில்லை. விமர்சனத்தில் தாங்கு, தாங்குவென்று தாங்கப்படும் படங்களுக்கு கூட நாற்பத்தி ஐந்துக்கு மேல் விகடன் மதிப்பெண் தருவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.
கண்கள் பனித்து, இதயம் இனித்து விட்டாலும் இன்னமும் தயாநிதி ஃபீவர் விகடனுக்கு மட்டும் தீரவில்லை. கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்பு நடுநிலையாளர்களை(?) வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். ரெகுலர் விகடன் வாசகர்கள் விரும்புவது விகடனின் சீரியஸ்லெஸ் ட்ரேட்மார்க் கட்டுரைகளையே. திருமாவேலனின் கட்டுரைகள் உக்கிரமாக, அற்புதமாக வருகிறது. இவையெல்லாம் வரவேண்டிய இடம் ஜூனியர் விகடனே தவிர்த்து சீனியவர் விகடனில் அல்ல. ஆடிக்கொருமுறை, அமாவசைக்கொரு முறை இதுபோன்ற சீரியஸ் கட்டுரைகளோ, பேட்டிகளோ வரலாம். சென்ற இதழில் வெளிவந்த ம.க.இ.க. செயலர் மருதையனின் பேட்டி அபாரம். இதுபோன்ற பேட்டிகளை மாதத்துக்கு ஒருமுறை போடலாம். ரெகுலராக இங்கேயே வந்துவிட்டால் ஜூ.வி.க்கு என்ன வேலை? மொத்தத்தில் அரசியலுக்கான அளவை விகடன் கொஞ்சம் குறைக்க வேண்டும்.
பாராட்டும்படியாக இருக்கும் விஷயங்களும் நிறைய இருக்கின்றன. குறிப்பாக இதழ் முழுக்க தூவப்பட்டிருக்கும் இளமை. அந்த இளமைக்கு சப்போர்ட் செய்யும் கலக்கல் கலர்ஃபுல் லே-அவுட். விகடனை வாங்கியதுமே நான் முதலில் வாசிப்பது லூசுப்பையனை. ஆனால் லூசுப்பையன் கூட பயாநிதி பற்றி அதிகமாக எழுதுவதில்லை என்பது வருத்தம் தான். நா.கதிர்வேலனின் சினிமாக்கட்டுரைகளை சொற்சுவைக்காக தவறாமல் வாசிப்பதுண்டு.
சில கவனிக்கத்த இளைஞர்களும் விகடனில் உண்டு. பாரதித்தம்பி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பத்தாண்டுகள் கழித்து இவர் இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருக்கப் போகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சென்ற வார மருதையனின் பேட்டி ஒன்றே போதும். பாரதித்தம்பியின் முதிர்ச்சியை எடுத்துக்காட்ட. அடுத்ததாக மை.பாரதிராஜா. இவரை ஏன் தான் சினிமாவுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்களோ என்று நொந்துப் போகிறேன். மற்ற விஷயங்களுக்கும் பாரதிராஜாவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். டைமிங் சென்ஸ் நிறைந்தவர். ஜூவியில் பரக்கத் அலியும், ஆராவும் கவர்கிறார்கள்.
விகடன் விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும், வடிவ ரீதியாகவும் மாறவேண்டியது அவசியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக