நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கில் ‘கொத்த பங்காரு லோகம்’ வெளிவந்தது. ப்ளாக் பஸ்டர் ஹிட். புதுமுக இயக்குனரான ஸ்ரீகாந்த்
அடாலாவுக்கு ஏகத்துக்கும் கிராக்கி. டோலிவுட்டின் எல்லா முன்னணி நடிகர்களும் அவரது
இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட, ஸ்ரீகாந்தோ எங்கிருக்கிறார் என்றே யாருக்கும்
தெரியவில்லை.
முன்பாக ஒரு சிறிய ப்ளாஷ்பேக். 2004ல் ‘ஆர்யா’
திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். சுறுசுறுப்பான இவரது
வேலையைப் பார்த்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. படம்
முடிந்ததுமே ஒன்பதாயிரம் ரூபாயை அட்வான்ஸாக ஸ்ரீகாந்திடம் தந்தார். “ஒரு நல்ல கதை
ரெடி பண்ணிக்கிட்டு வாப்பா” என்றார். பிறகு ஸ்ரீகாந்த் சொன்ன கதைகள் ராஜூவுக்குப்
பிடித்திருந்தாலும், அவர் மேலும் திரைமொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
எனவே ‘பொம்மரிலு’ படத்தின் போது துணை இயக்குனராக ஸ்ரீகாந்தை பணியாற்றச் சொன்னார்.
அது முடிந்ததும் ஸ்ரீகாந்த் சொன்ன கதைதான் ‘கொத்த பங்காரு லோகம்’. இப்போது
ராஜூவுக்கு ஸ்ரீகாந்த் மீது முழு நம்பிக்கை பிறந்திருந்தது. அவரது நம்பிக்கையை
ஸ்ரீகாந்த் காப்பாற்ற, படம் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பு. ஆந்திரத்
திரையுலகின் கவுரவமான நந்தி விருதுகளும், ஃபிலிம்பேர் விருதுகளும் ஸ்ரீகாந்தின்
வீட்டு வரவேற்பறையை அலங்கரித்தன.
மாபெரும் வெற்றிக்குப் பிறகுதான் மீண்டும் ஸ்ரீகாந்த்
காணாமல் போனார். பொதுவாக இதுபோல முதல்பட வெற்றியை மூலதனமாகக் கொண்டு அட்வான்ஸ்
வாங்கிபோட்டு கல்லா நிரப்புவதுதான் எல்லோருடைய வழக்கமும்.
இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியுலகத்துக்கு வந்தார். இப்போது
அவரிடம் இன்னொரு ‘ஸ்க்ரிப்ட்’ இருந்தது. நேராக தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளர்
தில் ராஜூவிடமே மீண்டும் போனார். கதையை சொன்னார். அதுதான் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி
செட்டு’ (தமிழில் மொழிபெயர்த்தால், சீதா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி).
தயாரிப்பாளருக்கு ஓக்கே. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். தெலுங்கில் கடைசியாக இதுபோல பெரிய
ஹீரோக்கள் இருவர் இணைந்து நடித்து இருபது ஆண்டுகளாகிவிட்டது.
நேராக விக்டரி வெங்கடேஷிடம் போய் கதையை சொன்னார். உலகிலேயே
அதிக ஹிட்டுக்கள் கொடுத்த ஹீரோ வெங்கடேஷ்தான் (ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹிட்).
வெங்கடேஷுக்கு கதை பிடித்துப் போனது. இன்னொரு ஹீரோவாக பவர் ஸ்டார் பவன்கல்யாண்
நடித்தால் நன்றாக இருக்குமென்று வெங்கடேஷ் விருப்பப்பட்டார். விக்டரி ஸ்டாரும்,
பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று டோலிவுட் பரபரப்பானது. யார் கண்
பட்டதோ தெரியவில்லை, திடீரென்று பவன்கல்யாண் இப்படத்தில் நடிக்க மறுத்தார்.
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைக்க ஸ்ரீகாந்துக்கு விருப்பமில்லை. பெரிய ஹீரோக்கள் இணையாவிட்டால் இந்தப் படமே எடுக்க வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தார்.
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைக்க ஸ்ரீகாந்துக்கு விருப்பமில்லை. பெரிய ஹீரோக்கள் இணையாவிட்டால் இந்தப் படமே எடுக்க வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தார்.
ஒருநாள் மகேஷ்பாபுவோடு யதேச்சையாக தயாரிப்பாளர் தில் ராஜூ
பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்த பிராஜக்ட் பற்றிய பேச்சு வந்தது. பவன் நடிக்க
மறுத்துவிட்டதால் படம் அப்படியே நின்றுபோய்விட்டது என்று ராஜூ வருத்தப்பட,
மகேஷ்பாபு கதையை கேட்டுவிட்டு “நான் வேண்டுமானால் நடிக்கட்டுமா?” என்று
பெருந்தன்மையாக முன்வந்தார். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் தானே முன்வந்து இதுபோல
கேட்டதை ராஜூவால் நம்ப முடியவில்லை. ஆனால் மகேஷ்பாபு ஒரு முக்கியமான நிபந்தனையை
விதித்தார். “இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களை வைத்து படமெடுக்கிறீர்கள். பட்ஜெட்
எகிறும். எனவே இப்போது மார்க்கெட்டில் எனக்கு தரும் சம்பளத்தில் பாதி சம்பளம்
மட்டுமே நீங்கள் எனக்கு தரவேண்டும். அதற்கு மேல் ஒரு பைசா கொடுத்தால் கூட நான்
ஒப்புக்கொள்ள மாட்டேன்”. பழம் நழுவி பாலில் விழுந்தால் தயாரிப்பாளர் வேண்டாமென்றா
சொல்வார்?
உடனடியாக விஷயம் வெங்கடேஷின் கவனத்துக்குப் போனது. “எனக்கு
தம்பியாக நடிக்க மகேஷ் ஒப்புக்கொண்டாரா?” என்று உணர்ச்சிவசப்பட்டவர், பதிலுக்கு அவரும்
ஒரு கண்டிஷன் போடுகிறார். “மகேஷைப் போலவே எனக்கும் பாதிசம்பளம்தான் தரவேண்டும்”.
இம்முறை பழத்தோட்டமே பாலில் விழுகிறதே என்று ராஜூவுக்கு நம்பமுடியாத அதிர்ச்சி.
இரண்டு ஹீரோக்கள் நடித்தாலும், டைட்டில் ரோல் ஹீரோயினுக்குதான். இருந்தும் டைட்டிலை மாற்றச்சொல்லி இருவருமே அடம்பிடிக்கவில்லை. ஹீரோ ஓக்கே. அடுத்து ஹீரோயின்கள். மகேஷ்பாபுவோடு அப்போது ‘தூக்குடு’ படத்தில் சமந்தா நடித்துக் கொண்டிருந்தார். எனவே இதிலும் அவரையே ஜோடியாக்கிவிட்டார்கள். டைட்டில் ரோலான சீதாவாக நடிக்க யாரை பிடிப்பது என்று தேடுதலை தொடங்கினார்கள். நயன்தாரா ரெண்டரை கோடி கேட்டாராம். பூமிகா, அனுஷ்கா, ஸ்நேகா என்று பலரையும் முயற்சித்தார்கள். மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தால், பின்னர் பாலகிருஷ்ணா மாதிரி ஹீரோக்களுக்கு கூட அக்கா, அண்ணியாகதான் நடிக்கக் கூப்பிடுவார்கள் என்று பலருக்கும் அச்சம். த்ரிஷாவின் பெயர்கூட ஆரம்பத்தில் அடிபட்டது. ஒருவழியாக அமலாபால்தான் சீதா என்றார்கள். அவரும் இல்லை என்றானபோது அஞ்சலி, வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இரண்டு ஹீரோக்கள் நடித்தாலும், டைட்டில் ரோல் ஹீரோயினுக்குதான். இருந்தும் டைட்டிலை மாற்றச்சொல்லி இருவருமே அடம்பிடிக்கவில்லை. ஹீரோ ஓக்கே. அடுத்து ஹீரோயின்கள். மகேஷ்பாபுவோடு அப்போது ‘தூக்குடு’ படத்தில் சமந்தா நடித்துக் கொண்டிருந்தார். எனவே இதிலும் அவரையே ஜோடியாக்கிவிட்டார்கள். டைட்டில் ரோலான சீதாவாக நடிக்க யாரை பிடிப்பது என்று தேடுதலை தொடங்கினார்கள். நயன்தாரா ரெண்டரை கோடி கேட்டாராம். பூமிகா, அனுஷ்கா, ஸ்நேகா என்று பலரையும் முயற்சித்தார்கள். மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தால், பின்னர் பாலகிருஷ்ணா மாதிரி ஹீரோக்களுக்கு கூட அக்கா, அண்ணியாகதான் நடிக்கக் கூப்பிடுவார்கள் என்று பலருக்கும் அச்சம். த்ரிஷாவின் பெயர்கூட ஆரம்பத்தில் அடிபட்டது. ஒருவழியாக அமலாபால்தான் சீதா என்றார்கள். அவரும் இல்லை என்றானபோது அஞ்சலி, வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
ஹீரோ, ஹீரோயின்கள் ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு,
படப்பிடிப்பு தொடங்கியதும் இன்னொரு பிரச்னை. வெங்கடேஷுக்கும், மகேஷுக்கும்
அப்பாவாக நடித்த பிரகாஷ்ராஜுக்கு தயாரிப்பாளரோடு ஏதோ பிரச்னை. நடிக்கமாட்டேன்
என்று திடீரென்று முறுக்கிக்கொண்டு அவரும் கிளம்பிவிட தலைமேல் கைவைத்து
உட்கார்ந்துக் கொண்டார் இயக்குனர் ஸ்ரீகாந்த். பிரகாஷ்ராஜ் கேரக்டரில் அனுபம்கெர்
நடிப்பார் என்று சொல்லப்பட்டது. பின்னணியில் என்னானதோ, ஏதானதோ பிரகாஷ்ராஜ்
முறுக்கிக் கொண்டார் என்று சொல்லப்பட்டது பொய் என்று தயாரிப்பாளர் அறிவிக்க..
கலாட்டா கல்யாணம் மாதிரி இது ஒரு கலாட்டா சினிமா.
போனவருடம் செப்டம்பரில் படத்தை வெளியிட
திட்டமிட்டிருந்தார்கள். சமந்தாவுக்கு ஏதோ சருமநோய் என்று படப்பிடிப்பு
தள்ளிப்போனது. எனவே டிசம்பரில் வெளியிட்டுவிடுவேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பு
நடத்தி தயாரிப்பாளர் உறுதியளித்தார். ஸ்ரீகாந்தோ செதுக்கி, செதுக்கி படமெடுக்க
டிசம்பரிலும் வெளியிடமுடியவில்லை. ஒருவழியாக சங்கராந்திக்கு (அதாவது தெலுங்கு
பொங்கல்) வெளியாகியிருக்கிறது.
பட்ட பாடுகளுக்கு எல்லாம் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
ஆந்திராவே கொண்டாடுகிறது சீத்தம்மாவை. பஞ்ச் டயலாக், ஓபனிங் பில்ட் அப் சாங்
என்றெல்லாம் இல்லாமல் பந்தாவை விட்டுக் கொடுத்து ஹீரோக்கள் இருவரும் போட்டி போட்டு
நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டாதவர்களே இல்லை. முன்பு பாலிவுட்டில் ‘ஹம்
ஆப்கே ஹைன் கோன்’ நிகழ்த்திய மேஜிக்கை, இன்று டோலிவுட்டில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ
ஸ்ரீமல்லி செட்டு’ நிகழ்த்தியிருக்கிறது. வசூலிலும் அபாரம். ஆந்திராவின் அத்தனை
ரெக்கார்டுகளையும் சீத்தம்மா உடைத்துவிடுவாள் என்று கணிக்கிறார்கள். ஓவர்சீஸிலும்
அங்கிருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா உணர்வை ஏற்படுத்துவதால் பணம் கொட்டோ
கொட்டுவென்று கொட்டுகிறது.
படத்தின் ஒன்லைனர் ரொம்ப சிம்பிள். ‘மனிதர்களாக
பிறந்தவர்கள் நல்லவர்களாக மட்டுமே இருக்க முடியும்’.
பிரகாஷ்ராஜ் அப்பா. இரண்டு மகன்கள். பிரகாஷ்ராஜின்
தங்கையும், தங்கை வீட்டுக்காரரும் இளம்வயதிலேயே இறந்துவிட, அவர்களது மகளை இவர்களே
வளர்க்கிறார்கள். அதுதான் சீதா. மகன்கள் இருவரும் நல்லவர்கள்தான். ஆனால் உலகத்தின்
பார்வையில் அவர்களுக்கு சமர்த்து போதாது. மற்றவர்களைப் போல கார், பங்களா என்று
வாழமுடிவதில்லை. இதனால் வசதியான உறவினர்கள் பிரகாஷ்ராஜ் குடும்பத்தை கொஞ்சம்
மட்டமாகவே நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் கதை நகர்கிறது. படத்தின் கடைசி
பத்து நிமிட காட்சிகளுக்கு கண்கலங்காதவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களது இதயம்
இரும்பால் ஆனதாக இருக்கும். பழைய பீம்சிங், கொஞ்ச காலத்துக்கு முந்தைய விக்ரமன்.. இருவரையும்
கலந்துகட்டிதான் ஸ்ரீகாந்த் அடாலா.
சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி செட்டு : இந்திய
குடும்பங்களை கவுரவப் படுத்தியிருக்கிறது.
(நன்றி : cinemobita.com)
(நன்றி : cinemobita.com)