8 ஜூலை, 2013

சிங்கம்-2

ஜேம்ஸ்பாண்டு மாதிரி, சங்கர்லால் மாதிரி ஒரு யூனிக்கான கேரக்டர் என்பது தமிழ் சினிமாவுக்கு கனவு. தமிழ் சினிமாவுக்கு என்றில்லை. பொதுவாக இந்திய சினிமாவிலேயே தொடர்திரைப்படங்களை எடுக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை வெற்றிகரமாக நம் படைப்பாளிகளால் உருவாக்க முடியவில்லை. சினிமாவில் சீக்குவல் என்பதும்கூட தமிழில் அரிதிலும் அரிதான நிகழ்வுதான். ஜெய்சங்கர் காலத்தில் சாத்தியமாகியிருக்கக்கூடிய இதையும் அந்த காலத்திலேயே கோட்டை விட்டுவிட்டோம். உலகம் சுற்றும் வாலிபன் ‘ராஜூ’ கேரக்டரை வைத்தே, சீக்குவலாக ‘ஆப்பிரிக்காவில் ராஜூ’ எடுக்க எம்.ஜி.ஆருக்கு எண்ணம் இருந்தது. உ.சு.வா. படத்தின் எண்ட் கார்டாக ‘எமது அடுத்தத் தயாரிப்பு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்றும் அறிவித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் சர்வசக்தி படைத்த சக்கரவர்த்தியான எம்.ஜி.ஆரால் கூட அதை செய்ய முடியவில்லை. தரை டிக்கெட் டைரக்டரான ஹரி இதை சாதித்திருக்கிறார்.

‘சிங்கம்’ தயாரிப்பில் இருந்தபோது ஹரிக்கு இந்த சீக்குவல் சிந்தனை வந்திருக்க வாய்ப்பேயில்லை. ‘துரைசிங்கம்’ பாத்திரம் நண்டு சிண்டுவில் தொடங்கி தாத்தா, பாட்டி வரை அனைவரையும் கவர்ந்துவிட்டதாலும், படத்தின் அதிரிபுதிரி வசூலும்தான் இந்த எண்ணத்தை அவருக்கும், துரைசிங்கமான சூர்யாவுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். அடுத்து இன்னும்கூட நான்கைந்து பாகங்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு சிங்கம்-2 மிரட்டுகிறது.

சிங்கத்தை நமக்கு ஏன் பிடிக்கிறது?

ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டு என்பது மட்டுமில்லை. சிறுவயதிலேயே கூட நம் அனைவருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘பேசாம போலிஸ் ஆயிட்டா என்ன?’ என்றொரு லட்சியம் இருந்திருக்கும். காக்கி உடுப்பும், மிடுக்கும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நேர்மையான போலிஸாக மட்டுமில்லாமல் துரைசிங்கம் லவ்வர் பாயாகவும் இருக்கிறார். அவராக விரும்பாவிட்டாலும் பேரழகியான அனுஷ்காவே துரத்தித் துரத்தி அவரை காதலிக்கிறார். மட்டுமின்றி பரம்பரையாக தொடரும் நம் தமிழ் குடும்ப மதிப்பீடுகளுக்கு உருவம் கொடுத்தால் அது துரைசிங்கமாகவே இருக்கும். அப்பா மீது அளவு கடந்த மரியாதை. அம்மா, அக்கா, அப்பத்தா மீது பாசம். உற்றம், உறவு, ஊர் மீது செண்டிமெண்டலான பிணைப்பு. நவரச உணர்வுகளும் கொண்டவர். டயலாக் பேசினால் ரைமிங்காக ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார். இன்னும் காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சிங்கம்-2 ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கிறது. குடும்பப் பிரச்சினைகளால் தமிழுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி அதிரடியாக ஆ(ட்)டுகிறார். அவ்வப்போது அஞ்சலியோடு ஆடிக்கொண்டு, பாடிக்கொண்டும் மியூசிக் வரும் கேப்பில் பைனாகுலரை வைத்துக்கொண்டு கடற்கரையை வேடிக்கை பார்க்கிறார் துரைசிங்கம். எடுத்தவுடனேயே துரைசிங்கம் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அண்டர்காப் ஆபரேஷனில் இருக்கும் ஆபிஸர் இப்படியெல்லாம் பைனாகுலர் வைத்துக்கொண்டு புதர்மறைவை தேடி திரிந்துக் கொண்டிருப்பாரா என்று மல்ட்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் நாம் சுலபமாக லாஜிக் தேடலாம். ஏ, பி, சி என்று மூன்று சென்டர்களிலும் பட்டையைக் கிளப்பவேண்டிய நிர்ப்பந்தம் இயக்குனருக்கு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவனுக்கு சிங்கத்தின் வேலை இதுதானென்று தெளிவாக புரியவைக்க வேண்டியது இயக்குனரின் கடமை. அவனிடம் போய் அண்டர்காப், ஹோம் மினிஸ்டர் ஸ்ட்ராட்டஜி என்றெல்லாம் அவனுக்குப் புரியாத மொழியில் ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளை அடுக்கி, பாடமெடுக்க முடியாது (இதையெல்லாம் கமல்ஹாசன் பார்த்துக் கொள்வார்). ‘சி’ சென்டர் ரசிகனை ஒரு படைப்பாளி திருப்திபடுத்த வேண்டுமா என்கிற கேள்வி, இந்த விமர்சனத்தை இண்டர்நெட்டில் வாசிக்கும் உங்களுக்கு வருகிறதா?  அப்படியாயின் அக்கேள்விக்கான விடை ஜூலை மாத ‘காட்சிப்பிழை’ இதழில் குட்டிப்புலி ஏன் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்று ராஜன்குறை எழுதியிருக்கும் விமர்சனக்கட்டுரையில் கிடைக்கும். எனவே இப்படத்தில் லாஜிக் பார்க்காமல் மேஜிக்கை பார்த்து மட்டும் வாய்பிளந்து நிற்பது சாலச்சிறந்தது.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சிங்கம்-1ல் துரைசிங்கத்துக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்து நம் கல்மனம் கூட இளகிவிடுகிறது. எனவே அவருக்கு ஒரு புதுகாதலியாக ஹன்சிகா. எம்.ஜி.ஆர் ஃபார்முலா நாயகனான சிங்கம் அந்த காதலை நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறான். அனுஷ்காவும் அவரது குடும்பமும் சிங்கம்-1ல் உருவான தெய்வீகக்காதலை காக்க அவர்களது உயர்ந்த அந்தஸ்தை விட்டு இறங்கி, மாபெரும் தியாகவேள்வி நடத்துகிறார்கள். இந்தச் சிக்கலுக்கு காரணம் சென்னையில் ஏ.சி.பி.யாக முதல் பார்ட்டில் அதகளம் செய்த சிங்கம் வேலையை ரிசைன் செய்ததுதான். அவர் வேலையை ரிசைன் செய்ததும் அவரது வேலையில் ஒரு அங்கமே. அவ்வாறு செய்தது எதற்காக என்று அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலமாக வரிசையாக செங்கல் வைத்து முதல் பாதியில் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார் ஹரி. குட்டி குட்டியான கேள்விகளை எழுப்பி, உடனே அதற்கு ஒன்லைனில் ஆன்ஸர் வைக்கும் க்யூ & ஏ ஃபார்மேட்தான் ஹரியின் திரைக்கதை பாணி.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான ஆக்‌ஷன் எண்டெர்டெயின்மெண்ட். கை சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு கண்டவனை எல்லாம் போட்டுத் துவைக்கிறார் துரைசிங்கம். அவர்தான் பாய்ந்து அடித்தால் பத்து டன் வெயிட் ஆயிற்றே. இண்டர்நேஷனல் டானே கூட சுனாமி தாக்கியதைப் போல நிலைகுலைந்துப் போகிறான். சிங்கத்தை பார்த்து பயந்து பயந்து பதுங்குவதைத் தவிர்த்து தூத்துக்குடி வில்லன்களுக்கு வேலையே இல்லை. இடையில் மத்திய ஹோம் அமைச்சர் இண்டர்நேஷனல் டானை பாதுகாக்க நினைப்பது, அதை ஓவர்டேக் செய்து உள்ளூர் ஹோம் மினிஸ்டரின் உதவியோடு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று கமர்சியல் அதலெடிக்காக அமர்க்களம் செய்கிறார் சிங்கம். இண்டர்நேஷனல் லெவலில் இந்தியன் போலிஸின் மதிப்பை பறைசாற்றுகிறார். படம் முடிகிறது. அனேகமாக சிங்கம்-3 டெல்லியில் நடக்கும். அங்கிருக்கும் ஹோம் மினிஸ்டரோடும், இந்தி டான்களோடும் துரைசிங்கம் கபடி ஆடக்கூடும்.

தமிழில் டாக்கி ஆரம்பித்த ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளிலேயே எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டு போலிஸ் திருடன் கதைதான் என்றாலும் அதை எடுக்கும் ஹரியின் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்தான் மேட்டர். தேவையான இடங்களில் பாடல்கள், கவர்ச்சி, ஃபைட்டு, காமெடி என்று அவர் கலக்கும் மசாலா விகிதம்தான் அவருடைய ஹிட் ஃபார்முலா. இது ஒன்றும் சீக்ரட் ஃபார்முலா இல்லை, எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஹரி கலக்கும்போது மட்டும் டேஸ்ட் அதிரிப்போகிறது. ‘வாழைக்காய் நறுக்குபவனிடம் பார்த்து சேர்த்து வெட்டிடப் போறே’ என்று போகிறபோக்கில் பச்சையாக சந்தானம் டயலாக் அடித்தாலும், ஹரியின் குடும்பப் பிராண்டு படங்களில் அது வக்கிரமாகவோ, ஆபாசமாகவோ தெரிவதில்லை. குடும்பம் குடும்பமாக கைத்தட்டி கும்மாளம் போடுகிறார்கள்.

நமக்கு ஒரே ஒரு கவலைதான். அனுஷ்காவுக்கு வயசாயிடிச்சி. ஹன்ஸிகாவுக்கு என்ன ஆச்சி? முதல் பாகத்தில் இருந்த கவர்ச்சி எலிமெண்ட் இதில் மிஸ்ஸிங்தானென்றாலும், சிங்கத்தின் கர்ஜனை முன்பைவிட கம்பீரம்.

சிங்கம் டூ : ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்டுக்கான வாரண்டு

12 கருத்துகள்:

  1. எதிர்பார்த்த யுவாவின் நகைச்சுவை மிஸ்ஸிங் :-)

    பதிலளிநீக்கு
  2. படம்...பரபர...நச் விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா5:30 AM, ஜூலை 09, 2013

    Yes. This is more important now, than Ilavarasan, Diyva saga.

    பதிலளிநீக்கு
  4. பயங்கர காமடி விமர்சனம். நன்கு சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. I was looking for your review for Singam II, as usal in Yuva's style.... super...... I guess MGR was not able to film the sequel of USV because of his political commitments....

    பதிலளிநீக்கு
  6. Excellent Review Yuva sir.....Today I have seen it Hyderabad IMAX - Excellent Movie...Here also same response from Audience.

    பதிலளிநீக்கு
  7. கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன் சீக்குவல் தானே?

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் பிரசன்னா. ஆனா அது ஃபெய்லியர்

    பதிலளிநீக்கு
  9. இந்த படம் இலங்கயிலும் ஓடும் வண்ணம் அதில் சேக்கபட்ட சிங்கள அழுக்கை பற்றி ஒண்ணுமே சொல்லலயே

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:37 AM, ஜூலை 11, 2013

    At last, I found a review praising the movie!!! Truly disappointed with you. Please do not support these kind of cheap masala movies. This is nothing compared to part 1. If Hari wants to satisfy B&C centres then he better not release it in A centres...

    பதிலளிநீக்கு
  11. Dear Lucky, we are expecting your opinion or voice against the death of Ilavarasan...

    பதிலளிநீக்கு
  12. சிங்கம்-2 ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கிறது. குடும்பப் பிரச்சினைகளால் தமிழுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி அதிரடியாக ஆ(ட்)டுகிறார். அவ்வப்போது அஞ்சலியோடு ஆடிக்கொண்டு, பாடிக்கொண்டும் மியூசிக் வரும் கேப்பில் பைனாகுலரை வைத்துக்கொண்டு கடற்கரையை வேடிக்கை பார்க்கிறார் துரைசிங்கம். எடுத்தவுடனேயே துரைசிங்கம் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அண்டர்காப் ஆபரேஷனில் இருக்கும் ஆபிஸர் இப்படியெல்லாம் பைனாகுலர் வைத்துக்கொண்டு புதர்மறைவை தேடி திரிந்துக் கொண்டிருப்பாரா என்று மல்ட்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் நாம் சுலபமாக லாஜிக் தேடலாம். ஏ, பி, சி என்று மூன்று சென்டர்களிலும் பட்டையைக் கிளப்பவேண்டிய நிர்ப்பந்தம் இயக்குனருக்கு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவனுக்கு சிங்கத்தின் வேலை இதுதானென்று தெளிவாக புரியவைக்க வேண்டியது இயக்குனரின் கடமை. அவனிடம் போய் அண்டர்காப், ஹோம் மினிஸ்டர் ஸ்ட்ராட்டஜி என்றெல்லாம் அவனுக்குப் புரியாத மொழியில் ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளை அடுக்கி, பாடமெடுக்க முடியாது (இதையெல்லாம் கமல்ஹாசன் பார்த்துக் கொள்வார்).
    யுவக்ருஷ்ணா அவர்களே நீங்கள் படத்தைப் பார்க்கவில்லை அல்லது 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்று படம் பார்த்திருக்கிறீர்கள். படத்தின் முதல் காட்சியே தமிழக உள்துரை அமைச்சர் (நடிகர் விஜயகுமார்) துரைசிங்கத்திடம் எவ்வளவு நாட்கள் தேவையோ அத்தனை நாட்கள் டி.எஸ்.பி தூத்துக்குடியாகச் சேரவேண்டாம் என்றும் அண்டர்கவர் ஆப்பரேஷன் நடத்துங்கள் என்றும் கூறிவிடுகிறார். சிங்கம் ஆப்பிரிக்கா போவதுகூட லாஜிக்கோடு விசா, பர்மிஷனுடன் போகிறார் என்றே காண்பிக்கப்படுகிறது. இடையில் கமலஹாசனை வேறு வம்புக்கு இழுத்திருக்கிரீர்கள். – கு.வை. பாலசுப்பிரமணியன்

    பதிலளிநீக்கு