பலமான கூட்டணியே வெற்றிக்கு அடித்தளம்
என்பதை நிரூபித்துள்ளது 1967 முதல் நடந்த தேர்தல்கள்...
தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் தேர்தல் மட்டுமே பலமுனை தேர்தலாக அமைந்திருந்தது. சென்னை மாகாணமாக இருந்தபோது சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன. இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ‘ஆட்சியில் பங்கு’ ஆசை காட்டி, சில கட்சிகளை உள்ளே வாரி போட்டுக் கொண்டு, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல் தேர்தலிலேயே ‘குதிரை பேரம்’ தமிழகத்துக்கு அறிமுகமாகி விட்டது.
1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. மொழிவாரிப் பிரிவினையின் காரணமாக சென்னை மாகாணத்தில் இம்முறை 206 இடங்களே இருந்தன. காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தமாகவே 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். மாநில கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுகவினர், 15 இடங்களில் வென்றனர்.
1962 தேர்தல்தான் முதன்முறையாக தமிழகத்தில் நடந்த இருமுனை தேர்தல். அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. இத்தனைக்கும் அக்கட்சியில் இருந்து ராஜாஜி பிரிந்துபோய் சுதந்திரா கட்சியை நிறுவி போட்டியிட்டார். இம்முறை காங்கிரஸுக்கு பலத்த போட்டியை கொடுத்த கட்சி திமுக. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 50 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.
திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தல்தான், இன்றைய கூட்டணி கலாசாரத்துக்கு வித்திட்ட தேர்தல். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்த காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தி ஒன்றினை கைக்கொண்டார் அண்ணா. சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் மெகா கூட்டணியாக உருவாக்கினார். இந்த ஒற்றுமைக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலன் கிடைத்தது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மேலும் அக்கட்சியின் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், பூவராகன், கக்கன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவுமளவுக்கு இந்த கூட்டணியின் வீரியம் இருந்தது.
1971ல் நடந்த தேர்தலை ஒருமுனை தேர்தல் என்றே சொல்லலாம். 1962ல் காமராஜர் பெற்ற வெற்றியை போன்றே கலைஞரும் வென்றார். காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பெயரில் காமராஜர் இயங்கினார். முந்தைய தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதந்திரா கட்சி அவரை ஆதரித்தது. திமுக கூட்டணியில் இம்முறை சுதந்திராவுக்கு பதிலாக இந்திரா காங்கிரஸ் இணைந்தது. எனினும் தொகுதி எதுவும் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட, அந்த இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வந்து சேர்ந்தது. இம்முறையும் திமுக கூட்டணியே அபார வெற்றியை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மகத்தான சாதனையாக ஒரு தனிக்கட்சி வென்ற அதிக இடங்கள் (184 எம்.எல்.ஏ.க்கள்) என்கிற இன்றுவரை உடைக்க முடியாத சாதனையை திமுக படைத்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த 1977 தேர்தல் நான்கு முனை தேர்தலாக அமைந்தது. இத்தேர்தலில் நெருக்கடி நிலையை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவோடு அமைத்த கூட்டணிதான் தமிழகத்தின் முதல் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி என்று அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘சர்க்காரியா கமிஷன், திமுக தலைவர்களை ஊழல் புகார்களுக்காக விசாரித்துக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்க முடியாது’ என்கிற சப்பைக் கட்டை மா.கம்யூ தலைவர்கள் முன்வைத்தார்கள். ஆனால் இந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே திமுகவோடுதான் கூட்டணி அமைத்து மா.கம்யூ போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா கமிஷன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசாரணை நடத்திக் கொண்டுதான் இருந்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது திமுக. காங்கிரஸ் –- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணி, அதிமுக -– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு அணி, மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி தனி என்று நடந்த நான்குமுனை போட்டியில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.
1980 தேர்தலில் திமுக - இ.காங்கிரஸ் கூட்டணி உருவானது. காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், திமுக 112 தொகுதிகளிலும் ஏனைய சிறு கட்சிகளுக்கு மீதி தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சி, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்போம் என்று கூறப்பட்ட தெளிவில்லாத அறிவிப்புக்கு வாக்காளர்களிடையே வரவேற்பில்லை. மாறாக அதிமுகவோ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குமரி ஆனந்தனின் காமராஜர் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறனின் காமராஜர் காங்கிரஸ் என்று பலமான கட்சிகளை கூட்டணிக்கு வைத்திருந்தாலும் 168 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் கண்டதால் மும்முனை போட்டியே நடந்தது. அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்கிற தெளிவு இருந்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. 129 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.
எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்தபடியே 1984 தேர்தலை சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு, மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உறவு மலர்ந்திருந்தது. அதிமுக –- இ.காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியை எதிர்த்து திமுக, மா.கம்யூ, இ.கம்யூ, ஜனதா, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக், காமராஜ் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை பலமாக அணி திரண்டன. இருப்பினும் இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் உடல்நலமின்மை போன்றவற்றால் ஏற்பட்ட அனுதாப அலைக்கு முன்பு திமுக கூட்டணியால் சமாளிக்க முடியவில்லை. திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று முதன்முறையாக ‘ஊழல் ஒழிப்புக் கூட்டணி’, அதிமுகவில் இருந்து பிரிந்திருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் இந்த தேர்தலில் களமிறங்கி காணாமல் போனது. இதே காரணத்தை சொல்லி இப்போதைய தேர்தலில் களமிறங்கி இருக்கும் மக்கள்நல கூட்டணிக்கு இதுவே முதல் முன்னுதாரணம் என்று சொல்லலாம்.
1989 தேர்தலில் திமுக, மா.கம்யூ, ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு அணி. இரண்டாக அதிமுக பிளவு பட்டிருந்தது. ஜெயலலிதா பிரிவு அதிமுகவோடு இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி. வி.என்.ஜானகி பிரிவு அதிமுகவோடு, சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி. காங்கிரஸ் இம்முறை இரு திராவிடக் கட்சிகளோடு இணையாமல் தனி அணியாக நின்றது. அவ்வகையில் நான்கு முனை போட்டியாக நடந்த இத்தேர்தலில் 146 இடங்களில் வென்று திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
1991 தேர்தலில் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டது. அக்கட்சியோடு கூட்டணி வைத்த காங்கிரஸின் தலைவர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். திமுக கூட்டணியில் மா.கம்யூ, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்.திருநாவுக்கரசின் அண்ணா புரட்சித்தலைவர் திமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் தேர்தல் இதுதான். ராஜீவ் கொலை அனுதாப அலை வீசியதால் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 164 தொகுதிகளில் வென்று எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளை வாரி சுருட்டியது.
1996ல் வித்தியாசமான களம். அதிமுக பலவந்தமாக காங்கிரஸோடு கூட்டணி வைக்க முயல, அக்கட்சி உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சி மூப்பனார் தலைமையில் உதயமானது. இக்கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக, தமாகா, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக் ஆகியவை பலமான கூட்டணியை அமைத்தன. திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய அவரோடு மா.கம்யூ கூட்டணி கண்டது. இவர்களோடு ஜனதாதளமும் சேர்ந்துக் கொண்டது. முதலில் திமுக கூட்டணியோடு, பிற்பாடு மதிமுக கூட்டணியோடு பேசி உடன்பாடு காண முடியாத பாமக தனித்து நின்றது. நான்கு முனை தேர்தலாக நடந்ததில் எதிர்க்கட்சிகள் அத்தனையையும் முறியடித்து பிரும்மாண்ட வெற்றியை ருசித்தது திமுக. அக்கட்சி போட்டியிட்ட 182 இடங்களில் 173 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா, வைகோ போன்ற தலைவர்கள், அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்தனர். பாஜக, தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கணக்கை துவக்கிய தேர்தல் இதுதான். மதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக வென்றார். பிற்பாடு ‘புதிய தமிழகம்’ கட்சியை உருவாக்கினார்.
2001ல் நடந்த முந்தைய தேர்தலை போன்ற பலமான கூட்டணியை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தனித்துப் போய் நின்றது. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தமாகாவில் இருந்து பிரிந்து புதுக்கட்சி கண்ட ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி என்று இக்கூட்டணி வலுவில்லாததாக அமைந்தது. மாறாக அதிமுகவோ காங்கிரஸ், தமாகா, பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலமான கூட்டணியை அமைத்து வென்றது. 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வென்றது.
2006ல் முதன்முறையாக தேமுதிக தனித்து களமிறங்கியது. இரு கட்சிகளுக்கும் மாற்று என்று விஜயகாந்த் முழங்கினார். திமுக, காங்கிரஸ், பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலம் வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, கடைசி நேரத்தில் போயஸ் தோட்டத்துக்கு போய் பொக்கே கொடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகளும் அதிமுக அணியில் சேர்ந்தார்கள். பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. கடுமையான பொட்டியில் 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. 1952க்கு பிறகு தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அமைத்தது.
2011ல் அதிமுகவோடு தேமுதிக, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் கூட்டணி அமைத்தன. கடைசிநேர தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ஒற்றை இலக்க சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள் என வெறுத்துப்போய் இக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினாலும், அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என்று தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது. திமுகவோடு காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக தனித்துவிடப்பட்டது. அதிமுக - திமுக கூட்டணி சமபலத்தோடு மோதுவது போன்ற தோற்றம் தெரிந்தாலும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது.
இதோ 2016 தேர்தல் வந்துவிட்டது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம்லீக் கூட்டணி உறுதிப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிகிறது. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று இதுவரை முழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்கு தயார் என்று சமீபமாக சிக்னல் காட்டியும் பலமான கட்சிகள் எதுவும் அவரோடு சேர விருப்பமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் திமுக - அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி அமைத்து எப்படியோ சட்டமன்றத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கட்சிகள், இப்போது இரு கட்சிகளுக்கும் மாற்று என்று களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சிகளுடனான கடந்தகால தேர்தல் உறவுகளே, அவர்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை.
1967ல் தொடங்கி பார்த்தோமானால், தேர்தலில் பல பிரச்சினைகள் எதிரொலித்தாலும் கூட பலமான கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.
(நன்றி : தினகரன்)