7 மே, 2016

24

‘டைம் மெஷின்’ என்பதே காதில் பூ சுற்றும் ஐடியாதான். அறிவியல்ரீதியாக காலத்தின் முன்னும் பின்னும் நகரவேண்டுமென்றால் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடிய ஏதோ ஒரு சமாச்சாரத்தை நாம் கண்டறிய வேண்டும். அடுத்த நூறாண்டுக்குள் இது சாத்தியமாகும் வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.

எனவே, இப்போதைக்கு டைம்மெஷின் கான்செப்ட் என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும் கிளியின் கண்களில் மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்பது மாதிரி லாஜிக்கில்லாத ஃபேன்ஸி கதைதான். அப்படிப்பட்ட மகா காதுகுத்தல் கதையை எடுத்துக் கொண்டு, திரையில் தெரியும் காட்சிகளை சாத்தியம் என்று மக்கள் நம்பும்படியான திரைக்கதையை எழுதுவது என்பது டைம்மெஷினை கண்டுபிடிப்பதைவிட சவாலான விஷயம். இயக்குநர் விக்ரம்குமார் இந்த சவாலை மிக சுலபமாக கடந்திருக்கிறார்.

“அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே”

என்று நடிகர் திலகம் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடும்போது அப்படியே உலக இயக்கம் freeze ஆகி நிற்கும் காட்சியை ஏ.பி.நாகராஜன் புனைந்திருப்பாரே நினைவிருக்கிறதா?

மீண்டும்-

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று அவர் தொடரும்போது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்த காட்சியை திரையில் பார்த்து நம் தாத்தாக்களும், அப்பாக்களும் எப்படி அசந்திருப்பார்களோ, அதே அசத்தலை மீண்டும் சாத்தியமாக்கி இருக்கிறது ‘24’. இந்தப் படத்தில் freeze ஒரு கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தோடு இயங்குகிறது.

ஷங்கரின் ‘ஐ’ ஒப்புக் கொள்வதற்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘24’ படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் முடிவெடுத்திருந்தார். ‘யாவரும் நலம்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் குமார் இதை இயக்க திட்டமிட்டிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையென்று ஆடம்பரமாக ஆரம்பித்தார்கள். “சிக்கலான கதை. ஆனால், 6 வயது முதல் 60 வயது வரை இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றெல்லாம் விக்ரம் பேட்டி கொடுத்தார். பிற்பாடு திரைக்கதை விவாதத்தில் நடிகர் விக்ரமுக்கும், இயக்குநர் விக்ரமுக்கும் முரண்பாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டது என்று சொன்னார்கள்.

இதே கதையை தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு சொன்னார் இயக்குநர் விக்ரம். தமிழில் பெரும் வெற்றி பெற்ற sci-fi கதையான ‘நியூ’வில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த வேடத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுதான் நடித்திருந்தார். படம் அட்டர் ப்ளாஃப். எனவே, ‘தூக்குடு’வாக மசாலாவில் எகிறி அடித்துக் கொண்டிருந்த மகேஷ்பாபுவுக்கு அப்போதைக்கு அறிவியல் புனைகதையில் ஆர்வமில்லை. அது சரிதான். இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ‘நேனொக்கடினே’ என்கிற sci-fi த்ரில்லரில் நடித்தபோது அந்த படமும் அட்டர்ப்ளாப்தான் ஆனது.

வெறுத்துப்போன இயக்குநர் விக்ரம்குமார், ‘இதயத்தை திருடாதே’ பாணியில் செம ரொமான்ஸாக ‘இஷ்க்’ படத்தை தெலுங்கில் இயக்கி, பிரும்மாண்ட வெற்றி பெற்றார். ஆனாலும் காலத்தில் முன்னும் பின்னும் நகரும் ஆர்வம் அவரை தூங்கவிடவில்லை. அப்போது நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறையும் சேர்ந்து நடிக்கக்கூடிய கதை ஒன்றினை இயக்குநர்களிடம் நாகார்ஜூனா கேட்டுக் கொண்டிருந்தார்.

விக்ரம்குமார் தான மனசில் நினைத்திருந்த ‘24’ பாணியில் ‘காலத்தை ஏமாற்றும்’ கதை ஒன்றின் ஒன்லைனரை பிடித்து நாகார்ஜூனாவிடம் சொன்னார். நாகேஸ்வரராவின் ஆலோசனையின் பேரில் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ‘மனம்’ எழுதப்பட்டது. விக்ரம் மீது நம்பிக்கை வைத்து வேறெதையும் விசாரிக்காமல் கோடிகளை கொட்ட தயாரானார் நாகார்ஜூனா. ‘மனம்’, ஆந்திர மனங்களை மயக்கியது. போட்ட காசை பன்மடங்காக திருப்பி எடுத்தனர் நாகார்ஜூனா குடும்பத்தினர். படம் வெளியாகும்போது நாகேஸ்வரராவ் உயிரோடு இல்லை. தெலுங்கு சினிமாவின் legendக்கு மகத்தான tribute செய்துக் கொடுத்தார் விக்ரம்குமார்.

ஒருவகையில் விக்ரமுக்கே மீண்டும் தன் ‘24’ மீது பூரண நம்பிக்கை ஏற்பட ‘மனம்’ அடைந்த சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிதான் காரணம். நடிகர் விக்ரமுக்கு முன்பு தயார் செய்திருந்த கதையை தூசு தட்டினார். திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து சூர்யாவுக்கு சொன்னார். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். பெரிய பட்ஜெட் கோரும் கதை. தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரை காம்ப்ரமைஸ் செய்ய முடியாது. எனவே, தானே தயாரிக்க முன்வந்தார். அவருக்கு இந்தப் படத்தில் நடிப்புரீதியாக எதிர்கொண்ட சவால்கள்தான் ஆர்வத்தைத் தூண்டியது. கொஞ்சமென்ன நிறையவே காஸ்ட்லியான ஆர்வம்தான். எனினும் ‘நந்தா’வில் தொடங்கி, அடுத்தடுத்து சூர்யா நிகழ்த்திப் பார்த்த பரீட்சார்த்த முயற்சிகள் புதிதல்லவே. ‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்று எம்.ஜி.ஆர் கணக்காக தானே தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்தார்.

‘24’ படத்தின் பின்னணிக்கதை இதுதான்.
முன்பு தான் ஒளிப்பதிவு செய்யவிருந்த இந்தப் படத்தினை இப்போது திரு எப்படி செய்திருக்கிறார் என்று பார்த்துவிட்டு அசந்துப்போன கேமிரா பேரரசன் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் நெகிழ்ந்துப் போய் பாராட்டுகிறார். இன்று ‘24’ பார்த்துவிட்டு, இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் பொழியும் பாராட்டுமழையில் நனைய இயக்குநர் விக்ரம்குமாருக்கு எவ்வளவு அருகதை இருக்கிறதோ, அதே அருகதை இந்த கதையை நம்பி வாழ்க்கையை பணயம் வைத்த சூர்யாவுக்கும் இருக்கிறது.

‘ஆத்ரேயாடா’ என்று சர்ச்சில் சாத்தானாக மாறி விஸ்வரூபம் எடுக்கும் வில்லன் சூர்யா, ‘டேய் பெரியப்பா’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டும் இளைய சூர்யா, ‘சாதிச்சிட்டேன் ப்ரியா’ என்று யுரேகா கூச்சலிடும் விஞ்ஞானி சூர்யாவென்று தன் நடிப்பு வாழ்வின் அடுத்த பரிமாணத்துக்கு அசத்தலாக நகர்ந்திருக்கிறார். பரபரவென்ற த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தில் சண்டைக் காட்சிகளே திரைக்கதையில் இல்லை என்கிற பலவீனத்தை புத்திசாலித்தனமான காட்சிகளால் அசால்டாக கடந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம்குமார்.

24 மணி நேரம் முன்னும் பின்னும் நகரலாம் என்கிற அதிசயப் பொருள் கிடைத்தவுடன் சாமானியனான வாட்ச் மெக்கானிக், அதை எதற்கு எப்படி பயன்படுத்துவான் என்று தரைலோக்கலுக்கு சிந்தித்து, ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மைண்ட்வாரில் ரசிகர்களின் இதயத்தை ‘திக்’கிடவைத்து, இந்தியத் திரையுலகத்துக்கே கதை சொல்லும் பாணியில் புதிய வாசல்களை திறந்து கொடுத்திருக்கிறது விக்ரம்குமார் - சூர்யா கூட்டணி. சூர்யாவைப் பொறுத்தவரை இது ‘கஜினி’க்கும் மேலே.
இந்தப் படத்தைப் பார்ப்பதே கூட ஒரு வகையில் டைம் டிராவல்தான். நாம் மூன்று மாதம் காலத்தில் முன்னோக்கிப் போய் பார்க்கிறோம். ஏனெனில் கதை நடப்பது ஆகஸ்ட்டு 2016ல்.

‘24’ கொடுப்பது அனுபவம். அதை 626 வார்த்தைகளில் இதுபோல விமர்சனமாக எழுதியோ, வாயால் ஹெலிகாஃப்டர் ஓட்டியோ யாருக்கும் புரியவைத்துவிட முடியாது. தவறவிடாமல் நீங்கள் முதலில் போய் படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் குடும்பத்தோடு இன்னொரு முறை போய் பாருங்கள். வேறென்ன சொல்லமுடியும்?

4 கருத்துகள்:

  1. தகவல் பகிர்வுகளுடன் படத்தை பார்க்க ஆவலை கிளப்பிவிட்டீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. சிவக்குமார்11:44 PM, மே 07, 2016

    லக்கி ஆன்-லைனில் மட்டுமே என் எழுத்து பரிணாமத்தை பயன் படுத்துவேன் என யுவா அடம் பிடித்து எழுதுவது வடிவேல் பாணியில் ஏய் என்னப்பா சின்னபுள்ள தனமா இருக்கே என்பதுதான். லக்கி-ஆன் என்னை பற்றி சொன்ன கருத்து நான் அளபிரந்தவன் அவசர் பட மாட்டேன் என்பதன் உள்குத்து முகநூலில் தெறித்து விழுகிறது.கும்மாம் குத்து அவசர அடியை எல்லாம் தாண்டி அண்டர் பிளே அரசியலில் எதுவும் நடக்க கூடும் ..! ரூட்டை மாத்து என மனம் சமீபமாய் சொன்னாலும் உள்ளூர் கணிதன் எழுத்தாணியை தந்து உசுப்பியும் கிண்டியும் மனதை எழுத்தின் பால் தள்ளுவதேன். யுவா..! நல்ல ரசனையும் அது தரும் எழுத்தும் யுவாவை பிரகடன படுத்தும் ஆய்தம். தூற்றி வாரும் அரசியல் அல்ல..! எழுத்துக்கே வந்தனம்..!

    பதிலளிநீக்கு
  3. வருகின்ற படங்களின் மோசமான இளைவுகளால் பாதிக்கப் பட்டு திரையரங்கு பக்கம் நகராமல் இருந்த என்னை உங்கள் விமர்சனம் 24 ஐ பார்க்க தூண்டி விட்டது.

    பதிலளிநீக்கு
  4. // தவறவிடாமல் நீங்கள் முதலில் போய் படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் குடும்பத்தோடு இன்னொரு முறை போய் பாருங்கள். வேறென்ன சொல்லமுடியும்? // யுவா' வோட விமர்சனமா இது? ...:(((( படம் ரொம்ப சுமார்,அநியாய இழுவை, படு மோசமான படங்களில் கூட, கொடுத்த காசுக்கு உக்காந்துட்டு வரலாம் னு நினைப்பேன், ஆனால் இதில், இழுவை தாங்க முடியாமல் எழுந்து ஓடிவந்துவிடலாமான்னு தோணியது.

    நேற்று இன்று நாளை' இதே கதை.. திரைக்கதையில் வெளுத்து வாங்கியிருப்பார்கள். நன்றாக இருந்தது.

    இன்னும் சுருக்கி, காதல் கருமம் இழுவைகளை குறைத்து, பாடல்களை குறைத்திருந்தால் ஒருவேளை நன்றாக இருந்திருக்கலாம்.

    ஒரு மாதம் கழித்து நெட்டில் டவுன்லோடி பாத்துத்தொலைத்திருக்க வேண்டியப்படம்... உங்களின், இன்னும் சில திரை விமர்சனங்களை நம்பி தியேட்டர் சென்றது தப்பாப்போச்சி...

    பதிலளிநீக்கு