கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 ஆகஸ்ட், 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.

அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்!உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து

விடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.
மாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

 கலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா?’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.

“பள்ளிப் பருவத்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.

மனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.

அன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.

கலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.

“திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!”
(நன்றி : குங்குமம்)

16 ஜூலை, 2018

உலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்!

“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது, ஏகப்பட்ட தொப்பைகளை கண்ட அதிர்ச்சியில் இத்தகைய கண்டிப்பினை அவர் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சட்டென்று வாசித்தால் சிரிக்கக்கூடத் தோன்றும். என்னவோ போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தொப்பை இருப்பதாக நமக்கெல்லாம் எண்ணம். சாலையில் நடக்கும்போது தொப்பையோடு (பெண்களையும் சேர்த்துதான்) நடக்கமுடியாமல் நடந்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்களேன். அதற்காக ரொம்ப உற்றுப் பார்த்து பட்டவர்த்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் கணக்கெடுப்புக்காகதான் பார்க்கிறீர்கள் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

இந்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் தொப்பை வாய்க்காதவர்கள் பாக்கியவான்கள். தொப்பைக்கு சாதி, மதம், வர்க்கம், ஆண் பெண் வேறுபாடு என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படியிருக்க போலிஸ்காரர்களை மட்டும் தனித்து, தொப்பைக்காக குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லைதானே?

போலீஸ்காரர்களுக்கு தொப்பையிருந்தால் குற்றவாளிகளை ஓடிப்பிடிக்க முடியாது என்றுதான் அதிகபட்சமாக காரணம் சொல்ல முடியும். ஒரு போலீஸ்காரர், ‘சிங்கம்’ சூர்யா மாதிரி ரன்னிங் ரேஸ் ஓடி குற்றவாளியை பிடித்த காட்சியை நீங்கள் வாழ்வில் என்றாவது கண்டதுண்டா? அப்படி கண்டிருப்பவர் லட்சத்தில் ஒருவராகதான் இருக்க முடியும்

எனவே, ‘தொப்பை’ என்பதை மட்டுமே ஒரு காவலரின் பணிக்கு தகுதியிழப்பாக கருத முடியாது.

ஆனால் –

‘தொப்பை’யோடு இருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு. அது போலீஸ்காரர்களுக்கு மட்டுமல்ல. போலியோவுக்கு சொட்டுமருந்து கொடுப்பவருக்கும்கூட பொருந்தும்.

என்னவோ, உலகிலேயே இந்தியப் போலீஸுக்குதான் தொப்பை இருப்பதை போல நாமெல்லாம் கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறோம். இது சர்வதேசப் பிரச்சினை சாமி.

உலகின் பழைய மற்றும் மிகப்பெரிய காவல்துறைகளில் ஒன்றாக கூறப்படும் நியூயார்க் காவல்துறையேகூட தொப்பைப் பிரச்சினையால் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் ஜோஸ் வேகாஸ் என்கிற அதிகாரி, தன் துறையின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதற்காக மாதாந்திர நிவாரணம் கோரியது அமெரிக்கா முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 80 கிலோ எடையுடன் சிக்கென்று பணிக்கு சேர்ந்த ஜோஸ், இருபது ஆண்டுகால காவல்துறை சேவையால் தற்போது 180 கிலோ எடையுடன் பூதாகரமாக மாறியிருக்கிறார். மெகா தொப்பையுடன் காட்சியளிக்கும் அவர், இந்த தொப்பைக்கு காரணம், இந்தப் பணியில் கிடைக்கக்கூடிய அழுத்தமே (stress) தவிர, தன்னுடைய உணவுப்பழக்கமல்ல என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார்.

காவல்துறையில் இருக்கும்போது உடல்ரீதியான சேதாரம் ஏற்பட்டால் (disability) அதற்காக மாதாந்திர நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது நியூயார்க் காவல்துறையில் வழக்கம். பணியால்தான் தனக்கு தொப்பை விழுந்தது, எனவே தொப்பையின் சைஸுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே ஜோஸின் வாதம்.

உடல் தகுதியை வைத்தே ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போலீஸ் அகாடமிகள், வேலைக்கு சேர்ந்த பின்னர் அவர்களது உடல்ரீதியான தகுதிகளை வருடாந்திர அடிப்படையில் சோதனை செய்யாத போக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இருக்கிறது. மாறாக ஃபயர் சர்வீஸ் போன்ற ஆபத்துக்கால உதவிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் உடல் தகுதி மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

லண்டன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அடிக்கடி உடல் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனையில் தகுதி பெறாதவர்கள், மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அந்த அவகாசத்தில் உடல் தகுதி பெறாதவர்கள் காவல்துறையின் அலுவல்ரீதியான (clerical jobs) மற்றப் பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

சரி, மற்ற நாட்டுக் கதைகளையெல்லாம் விடுங்கள்.

இந்தியர்கள் ஏன் தொப்பை வளர்ப்பதில் உலகசாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்?

* நம்முடைய முன்னோர் நமக்கு சொத்து, பத்துகளை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. தொப்பை வளத்தையும் சேர்த்துவிட்டே வைகுண்டத்துக்கோ, சிவபாதத்துக்கோ சென்றிருக்கிறார்கள். எனவே, மரபியல் அடிப்படையிலேயே நமக்கு தொப்பை வளரவேண்டும் என்பது நம்முடைய ஜீன்களில், நாம் கருவானபோதே எழுதப்பட்டு விடுகிற விதி.

* நம்முடைய உணவுமுறை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சார்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் உணவு என்பது 70 முதல் 75 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியவை. வாலிப வயதில் செரித்து விடுகிறது. நடுத்தர வயதை எட்டும்போது கூடுதலாக உடலுக்குள் செலுத்தப்படும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆனது போக மீதி கொழுப்பாக மாறி, தொப்பையை பம்மென்று பலூன் ஆக்குகிறது.

* மேற்கண்ட காரணங்கள் தவிர்த்து மது, புகை மாதிரி லாகிரி வஸ்துகளும் கூட தொப்பைக்குக் காரணம்.

* முறையான உடற்பயிற்சியோ, போதுமான உடலுழைப்போ இல்லாத வாழ்க்கை முறைதான் பெரும்பான்மையான மக்களுக்கு வாய்க்கிறது.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு மாதிரியான பிரச்சினைகள் பெரும்பாலும் தொப்பையர்களுக்கே அதிகம் வருகிறது. போலீஸ்காரர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே ‘தொப்பையை ஒழிப்போம்’ என்கிற இயக்கத்தை தொடங்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை.

(நன்றி : குங்குமம்)

14 ஜூலை, 2018

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”

சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.

டெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.

‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.

ஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.

தொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.

இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.

உலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.

அதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.

மாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.

‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.

கொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.

மனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.

மரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.

இந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.

தானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.

அப்படியென்றால் தீயவர்கள்?

அவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.

மரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.

அதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.

உலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

மற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.

சொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.

மனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.

இதுதான் யதார்த்தம்.

பிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.

நம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம்.

அறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.

(நன்றி : குங்குமம்)

3 ஜூலை, 2018

சொரணை இருக்கிறதா நமக்கு?

முன்பொரு காலம் இருந்தது.

நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.

தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.

ஆனால் –

இன்று?

யார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்?

இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.

அரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.

ஆம்.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.

சுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் –

உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.

என்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

(நன்றி : குங்குமம்)

19 ஜூன், 2018

யானை டாக்டர்!

‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.

மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.

ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.

யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?

1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.

சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.

இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.

சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.

கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.

“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.

இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.

(நன்றி : குங்குமம்)

10 மே, 2018

இதுவா பேச்சு சுதந்திரம்?

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.

“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.

இந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

ராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

தரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.

மேலும் –

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.

(நன்றி : குங்குமம்)

தேரா மன்னா! செப்புவது உடையேன்!!

மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த அந்த கொடுமையான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அட்டப்பாடி அருகே உணவுப் பொருட்கள் அடிக்கடி திருடு போனதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

உள்ளூர் காட்டின் அருகில் அரிசி மூட்டையோடு மது என்கிற இளைஞரை பார்த்ததுமே அவர்தான் அரிசி திருடர் என்று கருதி பொதுமக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.

காவல்துறை வந்து பார்த்தபோது அந்த இளைஞர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார்.

சற்றே மனநிலை பாதித்திருந்த பழங்குடி இன இளைஞர் அவர். பொதுமக்களின் கேள்விகளுக்கு கோர்வையாக பதில் சொல்ல முடியாததால், அவரை திருடர் என்று கருதி காட்டுத்தனமாக அடித்திருக்கிறார்கள்.

கேரள முதல்வரையே மிகக்கடுமையாக பாதித்த சம்பவம் இது.

“நாகரிக சமுதாயத்தில் இப்படிப்பட்ட கொடுஞ்செயல்கள் எப்படி நடக்கிறது? கேரளாவுக்கே இந்தச் சம்பவம் இழுக்காகி விட்டதே?” என்று வேதனைப்பட்டார்.

மதுவை மக்கள் அடித்தது செல்போனில் வீடியோ காட்சியாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதாலேயே பெரும் விவாதமாக எழுந்தது. தினமும் தவறாக கருதப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் மதுக்கள் எத்தனை எத்தனை பேரோ?

கடந்த வாரம் கூட ஒரே நாளில் இரண்டு செய்திகள்.

வேலூர் மாவட்டத்தில் ‘தீரன் : அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவதை போல வடமாநில குற்றப் பின்னணி கும்பல் ஒன்று ஊடுருவியிருப்பதாக வதந்தி பரவியது. போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ‘வாட்ஸப்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களே இப்படியொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அந்த கும்பல் நகை, பணம் திருடுவது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போய்விடுவதாக கூடுதல் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் சுண்ணாம்புப் பேட்டை வழியாக முப்பது வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நடந்துச் சென்றிருக்கிறார். அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழ் புரியாததால் அவர் திருதிருவென முழிக்க தர்ம அடி போட்டிருக்கிறார்கள். போலிஸார் வந்து அவரை காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த நாள் அதே வாலிபர் மீண்டும் பரசுராமன்பட்டி என்கிற பகுதியில் பொதுமக்களிடம் மாட்டியிருக்கிறார். “இவன் குழந்தை திருடன். கொள்ளை கும்பலை சார்ந்தவன்” என்று யாரோ கூக்குரலிட கூட்டம் சேர்ந்து மீண்டும் தர்ம அடி போட்டிருக்கிறது.

குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிந்து மீண்டும் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த இளைஞர்.

வடமாநிலத்தில் இருந்து ரயிலில் வந்த அந்த இளைஞர் தவறுதலாக குடியாத்தத்தில் இறங்கி, டவுன் சுற்று வட்டாரத்தில் மொழி தெரியாமல் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த தகவல் மட்டுமே போலீசுக்கு தெரிந்திருக்கிறது. அவர் பெயர் என்ன, ஊர் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று வேறெந்த தகவலும் தெரியவில்லை.

இதை போலவே திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் கிராமத்தில் ஒரு சம்பவம்.

நிஷாந்த் என்கிற சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து மூன்று பெண்கள் அழைத்ததாக தகவல். அந்த மூன்று பெண்களையும் பொதுமக்கள் துரத்த, அவர்களில் ஒருவர் மட்டும் மாட்டினார். கூடிவிட்ட கும்பல் என்ன ஏதுவென்று விசாரிப்பதற்கு முன்பு அடி போடுவதுதானே வழக்கம்?

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தகவலறிந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அடி கொடுத்த பொதுமக்கள், சுமார் 200 பேர் திடீரென மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள். ஐம்பத்து இரண்டு வயதான அவர் கிராமங்களில் ஜோசியம் பார்ப்பது, சுருக்குப்பை விற்பது என்று பணி. அம்மாதிரி கொசவன்பாளையத்துக்கு வந்திருந்த போதுதான் ‘குழந்தை திருடி’ என்று பொதுமக்களாக கருதிக்கொண்டு அடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே பொதுமக்கள் மிகவும் கொந்தளிப்பான ஒரு மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது. வன்முறை செய்ய வாய்ப்பு கிடைத்தால், விளைவுகளை பற்றி கவலைப்படாமல் களமிறங்கி விடுகிறார்கள். இவர்களது உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையிலேயே சில கட்சியினரும், அமைப்புகளும்கூட செயல்படுகின்றனர்.

அர்த்தமற்ற போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களும் ‘ஹீரோயிஸம்’ என்று கட்டமைக்கப்படுகின்றன. சிறு அளவில் நடக்கக்கூடிய கும்பல் வன்முறைகள் கூட செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படுவதும், அவற்றை பல்லாயிரம் பேர் பார்ப்பதுமான போக்கு அதிகரித்து வருகிறது. சட்டத்தின் மீதான மரியாதையும், நியாயமாக இருக்க வேண்டிய குறைந்தபட்ச அச்சமும் அகன்று வருகிறது.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சரிவர விசாரிக்காமல் கோவலனை திருடன் என்றுகூறி கொல்கிறான். கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. தமிழர் காப்பியம் விடுக்கும் இந்த எச்சரிக்கையை, நாம் என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அவசரப்படுபவர்களுக்கும், ஆத்திரப்படுபவர்களுக்கும் அழிவு மட்டுமே நிரந்தரம்.

(நன்றி : குங்குமம்)

19 ஜனவரி, 2018

வாசிப்பு குறைகிறதா?

ஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.

இவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி முழக்குகிறார்கள்.

ஆனால் –

இந்தியாவில் அச்சுப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சொல்கிறது Indian readership survey.

“இப்போல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறா? என் பையனுக்கு தமிழே படிக்கத் தெரிய மாட்டேங்குது. எப்பவும் நெட்டுலேதான் இருக்கான்” என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வாசியுங்கள்.

Readership Studies Research Council of India (RSCI) மற்றும் Media Research Users Council (MRUC) ஆகிய இரு நிறுவனங்களும்தான் IRS கணக்கீடுகளை வெளியிடுகின்றன. 2014க்கு பிறகு 2017ல் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியிட்டிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய பதிப்பு நிறுவனங்களின் அலை வலுவாக வீசுவது தெரியவந்திருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே பதினோரு கோடி புதிய வாசகர்கள் (நகர்ப் புறங்களில் 4 கோடி, கிராமப் புறங்களில் 7 கோடி), இந்திய நாளிதழ்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறது IRS 2017. அடுத்த மூன்றாண்டுகளில் 40 சதவிகித அளவுக்கு இந்த வளர்ச்சி இன்னமும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் கணிக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் அச்சுப் பத்திரிகைகளை வாசிப்பவர் எண்ணிக்கை உயர்வது இயல்புதான். எனினும், தற்போதைய வாசிப்புப் புரட்சிக்கு சொந்தக்காரர்கள் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய கிராமப்புறங்களில் பரவலாக கல்வியறிவு கிடைத்து வருவதால், அச்சுப் பத்திரிகைகளுக்கு கணிசமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.

சராசரியாக இந்தியாவில் நாளிதழ்கள் 105 கோடி பேர்களால் வாசிக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தமிழின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் 44%.

தமிழில் இப்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ஆகிய மூன்று நாளிதழ்கள் மட்டுமே (ஆங்கிலம் தவிர்த்த டாப்-10 பட்டியலில் இவை மூன்றுதான் இடம்பெற்றிருக்கின்றன) சுமார் 4 கோடியே 69 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

நாளிதழ் தவிர்த்து இதழ்களைப் பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளில் வாசிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகி இருக்கிறது. 2014ல் 4 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது 2017ல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

பிராந்திய மொழி இதழ்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2017 டாப்-10 பட்டியலில் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று மூன்று இதழ்கள் பெருவாரியான வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று இதழ்களுக்கும் சேர்த்து தோராயமாக 72 லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் வங்காள இதழ்கள் மட்டுமே முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.

தமிழில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இதழ்களாக ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘புதிய தலைமுறை’, ‘அவள் விகடன்’ ஆகியவை விளங்குகின்றன.

இணையத்தின் தாக்கம்?

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இணையத்தைக் கண்டு அச்சுப் பத்திரிகைகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இணையம், ரேடியோ என்கிற ஊடகத்தோடுதான் இப்போது வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி, சினிமாத்துறையைதான் பெருமளவில் பாதித்திருக்கிறது (இந்த பாதிப்பிலும்கூட ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சினிமாத்துறை வியத்தகு அளவுக்கு – வணிக அடிப்படையில் - வளர்ந்திருக்கிறது).

சென்னை புத்தகக் காட்சியில் வழக்கமான விற்பனை இல்லை. இலக்கிய நூல்கள் விற்கவில்லை என்றெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் எவ்வளவு சதவிகித வாசகர்களை இலக்கியம் பக்கம் தள்ளிக் கொண்டு வரலாமென்று திட்டம் தீட்டி செயல்படுத்தினால் கணிசமான முன்னேற்றம் நிச்சயம். அதற்கு ஊடகத்துறையை தொடர்ச்சியாக கவனித்துவரும் நல்ல media expertகளின் ஆலோசனைகள் அவசியம். என்னிடம் யாராவது பரிந்துரை கேட்டால் வெயிட்டாக ஃபீஸ் கேட்பேன் என்று எச்சரிக்கிறேன்.

18 ஜனவரி, 2018

முதலிரவே போய் வா!

எண்பதுகளின் இறுதியில் ராஜ் வீடியோ விஷனுக்கு போட்டியாக வீடியோ கேசட் துறையில் பெரும் போட்டியாளராக விளங்கியவர்கள் ஏக்நாத் வீடியோஸ்.

வீடியோ கேசட் துறையை சேர்ந்தவர்களும் (இப்போது சேட்டிலைட் சேனல்கள் செய்வது மாதிரி) நிறைய content தேவைக்காக சினிமாவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.

ஏக்நாத் வீடியோஸ், ஒரு கன்னடப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட பிரமாதமாக மார்க்கெட்டிங் செய்தார்கள். அந்த படம்தான் ‘முதலிரவே வா வா’

எண்பதுகளின் இறுதியில் இந்தப் படத்துக்காக மஜாவான ஹோர்டிங் ஒன்றை பிரும்மாண்டமாக மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள். மீசை வளராத அந்த வயதில் படத்தின் டைட்டிலும், மஜாவான ஸ்டில்களும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது இயல்புதான். படமும் ஓரளவுக்கு பரபரப்பாகவே ஓடியது. ஆனால், அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பாவை கேட்க முடியாது.

பிற்பாடு மீசையெல்லாம் லேசாக முளைத்த காலத்தில் ‘முதலிரவே வா வா’ பார்த்தபோது, அப்படியொன்றும் ‘எதிர்ப்பார்த்த அளவு’ பிரமாதமில்லை என்று தோன்றியது. மாப்பிள்ளைக்கு ‘முதலிரவு’க்கு ‘முடியலை’ என்பதுதான் சப்ஜெக்ட். ஏன் ‘முடியலை’ என்பதற்கு பின் ஒரு கிளுகிளுப்பான சதி. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு வெற்றிகரமாக ‘முடிவது’தான் கிளைமேக்ஸ். டயலாக்கெல்லாம் டைரக்ட் மீனிங்.

அந்தப் படத்தின் ஹீரோ நம்மூர் நாகேஷ் மாதிரி வெடவெடவென்று இருக்கும் காசிநாத். அப்போதிலிருந்தே கன்னட சினிமா ஒரு விஷயத்தில் ஆச்சரியத்தை அள்ளித் தரும். ஹீரோவெல்லாம் ரொம்ப சுமாராக இருக்க, இந்திரலோகத்து சுந்தரிகள் கணக்கான ஹீரோயின்கள் எப்படி அவர்களை விரட்டி விரட்டி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிர்.

இட்ஸ் ஓக்கே.

அடிப்படையில் இயக்குநரான காசிநாத், பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ஒருக்கட்டத்தில் அவரே ஹீரோவாகி விட்டார். கன்னடத்து பாக்யராஜ் என்பார்கள். பெரும்பாலும் சில்மிஷமான சப்ஜெக்டுகளைதான் கையில் எடுத்துக் கொள்வார். சினிமாவில் மட்டுமல்ல, எல்லா ஏரியாவிலுமே Yes, sex always sells.

காசிநாத், இந்த ஏரியாவில் கில்லி. எண்பதுகளின் இந்திய நகர்ப்புற இளைஞர்களுக்கு sex கொஞ்சம் ‘இலைமறை காய்மறை’யாய்தான் கிடைத்தது. அந்த பாலியல் வறட்சியை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப தன்னுடைய படங்களுக்கு knot பிடிப்பார். ‘அனுபவா’ என்றொரு படம், காசிநாத்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்திருக்கிறது. எப்போதோ யூட்யூப்பில் பார்த்தேன். செம மஜாவாக இருக்கும். இவருடைய படங்கள் சிலவற்றை ரீமேக்கி தமிழில் பாண்டியராஜன் போன்றவர்கள் (உதா : ‘ஜாடிக்கேத்த மூடி’) இங்கே ஹிட்டடித்திருக்கிறார்கள். உபேந்திரா உள்ளிட்ட இன்றைய கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், காசிநாத்தின் சிஷ்யர்கள்தான்.

கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சகலகலா வல்லவன் காசிநாத், இன்று காலமாகி விட்டார். சுலபத்தில் இட்டு நிரப்பமுடியாத ஆளுமை அவர். கன்னட சினிமாவுக்கு நிஜமாகவே பேரிழப்புதான்.

16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

3 ஜனவரி, 2018

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ ராகங்கள்’ பற்றி என்னுடைய பெரியம்மா சொன்னது இது.

“அப்புறம் எப்படி பெரிம்மா, இவ்ளோ பெரிய ஸ்டார் ஆனாரு?”

“அப்போவெல்லாம் சிவப்பா இருந்தாதான் ஹீரோ. குப்பை பொறுக்குற கேரக்டருலே நடிச்சாகூட நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு ஹீரோ சிவப்பாதான் இருக்கணும். முதல் தடவையா ரஜினிதான் கேரக்டருக்கு ஏத்த தோற்றத்துலே கருப்பா, களையா இருந்தான். ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ படத்துலே எல்லாம் அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி ரஜினி இருப்பான். கிராமத்துப் படத்துலே நடிச்சாகூட கமல், அய்யிரு பையன்தான். ஆனா, ரஜினி அப்படியே நம்மளை மாதிரியே இருந்ததாலே ஜனங்களுக்கு பிடிச்சிப் போச்சு. அதேமாதிரிதான் விஜயகாந்தும்”

ரஜினி, திரையுலகுக்கு அறிமுகமான சூழல் இங்கே குறிப்பிடத்தக்கது. அறுபது வயதை கடந்துவிட்ட எம்.ஜி.ஆர், கட்சி ஆரம்பித்து அரசியலில் மும்முரமாகி விட்டார். அவரைவிட இரண்டு, மூன்று வயது குறைவான காதல் மன்னன் ஜெமினி கணேசன், வண்ணமயமாகிவிட்ட தமிழ் சினிமாவில் தன் முகத்தை குளோஸப்பில்கூட காட்டமுடியாத அளவுக்கு கிழடு தட்டிவிட்டார். இளமையிலேயே முதுமையாக தோற்றமளித்த சிவாஜியும் ஐம்பது வயதை கடந்து நிஜமாகவே முதுமையை எட்டிவிட்டார்.

போட்டியே இல்லாமல் சிவக்குமார்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார், நன்கு நடனமும் ஆடத்தெரிகிறது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்கிற கோதாவில் கமல்ஹாசன் வளரத் தொடங்கியிருந்தார். திரையுலகில் எப்போதுமே இருதுருவ ஆதிக்கம் நிலவ வேண்டும் என்கிற மனோபாவம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் உண்டு. சமூகரீதியாக பார்க்கப் போனாலும் திராவிட ஆட்சி தொடரும் தமிழகத்தில், ஒரு பார்ப்பனரை தலைமீது தூக்கி வைத்து கொண்டாட சமூகம் தயாரில்லை. அதனடிப்படையில் போட்டியே இல்லாமல் கமலுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறார் ரஜினி.

1975ல் திரையுலகுக்கு அறிமுகமான ரஜினிகாந்த், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ என்று நட்சத்திரமாக உருவெடுக்க ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமாரான தோற்றத்தோடு ‘அழகான’ ஹீரோக்களோடு போட்டி போட, தன்னுடைய யதார்த்த நடிப்பையே ஆயுதமாக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ரஜினிக்கு அமைந்த கேரக்டர்கள், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் முழுநீள ஹீரோவாக உருவெடுப்பதற்கே 25 படங்களும், மூன்று ஆண்டுகளும் முழுமையாக தேவைப்பட்டிருக்கிறது.

கைவிட்டு பைக் ஓட்டுவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் பெரும் ஃபேண்டஸியாக கருதிய அந்தகால இளைஞர் கூட்டம் ரஜினியை முரட்டுத்தனமாக கொண்டாடியதில் ஆச்சரியமேதுமில்லை.

தன்னுடைய நூறாவது படம் வரைக்கும் பரிசோதனை முயற்சிகளில் தீவிரமாக இறங்காமல், வணிகரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் கமல்ஹாசன் மும்முரமாக இருந்தார்.

ஆனால் -

ரஜினியோ மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று கலைரீதியான படைப்பாக சினிமாவை கருதக்கூடிய இயக்குநர்களிடம் பணிபுரிவதை விரும்பினார்.

1980ல் ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் அவருடைய மாற்று சினிமா முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. வெற்றியின் ருசி கொடுத்த போதையால் அடுத்தடுத்த பிரும்மாண்ட வணிக வெற்றிகளை நோக்கி ஓடத்தொடங்கினார். இடையிடையே ‘கை கொடுக்கும் கை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ மாதிரி ஆசைக்கு ஏதோ சோதனை செய்து தோல்வியுற்றார்.

‘முரட்டுக்காளை’ மாதிரியே பிரும்மாண்டமான வெற்றியை ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் எட்டினார்.

ஆனால் –

இந்த வெற்றியை கண்டு அவர் பயப்படத் தொடங்கினார். நாலு ஃபைட்டு, ஆறு பாட்டு என்று தன்னை தமிழ் திரையுலகம் முடக்கிவிடுமோ என்று பதறினார்.

இந்த இருவேறு வெற்றிகள்தான் அடுத்த சில பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றின.

வெற்றி மேல் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ரஜினியும், தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாதவை என்கிற பரிசோதனை முயற்சிகளில் கமல்ஹாசனும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1985ல் ரஜினிக்கு நூறாவது படம் அமைந்தது. தன்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர்தான் தன்னுடைய நூறாவது படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். எனினும், அந்தப் படம் ‘தண்ணி, சிகரெட்’ மாதிரி லாகிரி வஸ்துகளுக்கு ஆட்பட்ட ரஜினி படமாக இல்லாமல், வேறொரு ரஜினியை – அதாவது ஆன்மீக ரஜினி – காட்டக்கூடியதாக, தன்னுடைய இஷ்டதெய்வமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ பெருமையை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ரேஸ் குதிரையாக முதலிடத்தில் ஓடி லட்சம் லட்சமாக கொட்டிக் கொண்டிருக்கும் குதிரையை பூட்டி சாமி தேர் இழுத்தால் வேலைக்கு ஆகாது என்று பாலச்சந்தர் மறுத்தார். எனினும் ரஜினிக்காக படத்தை தயாரிக்க முன்வந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ படுதோல்வி. நியாயமாக பார்க்கப் போனால், ஆன்மீகம் தனக்கு வேலைக்கு ஆகாது என்பதை ரஜினி அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.

ரஜினியை ஸ்டைல் மன்னன் ரஜினியாக பார்க்கதான் ரசிகர்கள் விரும்பினார்களே தவிர, அவரிடமிருந்து பொழுதுபோக்கைதான் எதிர்ப்பார்த்தார்களே தவிர வேறொன்றுமில்லை.

உதாரணத்துக்கு 1987 தீபாவளியை சொல்லலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தை சிறப்புக் காட்சியாக ரஜினி பார்க்கிறார்.

“இந்த தீபாவளி கமலோட தீபாவளி. தமிழில் யாருமே பண்ணாத சாதனையை ‘நாயகன்’ மூலமா செஞ்சிருக்காரு. ரொம்ப சாதாரணமான நம்மோட ‘மனிதன்’ எடுபடாது” என்று வெளிப்படையாகவே ‘மனிதன்’ இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடமும், தயாரித்த ஏ.வி.எம்.சரவணனிடமும் சொல்லியிருக்கிறார்.

“அது கமல் படம். இது ரஜினி படம். நீங்க வேணும்னா பாருங்க. ரெண்டுமே நல்லா ஓடும்” என்று சமாதானப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு சமாதானமாகவில்லை.

ஆனால் –

எஸ்.பி.முத்துராமன் சொன்னதுதான் நடந்தது.

கமல்ஹாசனை அறிவுஜீவியாக, பரிசோதனைகளுக்கு தயாரான எலியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கமல்ஹாசனின் படம் ஏதாவது சாதாரண பொழுதுபோக்கு படமாக வந்தால், அவருடைய வெறித்தனமான ரசிகர்களேகூட ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று உதட்டை பிதுக்க ஆரம்பித்தார்கள். இதனாலேயே படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசம் என்று முயற்சித்து மண்டையை பிய்த்துக் கொண்டார் கமல். முன்பாக எவ்வளவோ ஜிமிக்ஸெல்லாம் காட்டி தலைசிறந்த பொழுதுபோக்குப் படமாக அவர் உருவாக நினைத்த ‘விக்ரம்’ கதை இப்படிதான் கந்தலானது.

ரஜினி, ரஜினியாகவே தோன்றினால் போதும். அவர் ஏதாவது முயற்சித்தால்தான் ரசிகர்களுக்கு சோதனை. பீரியட் ஃபிலிமாக அவர் பிரும்மாண்ட செலவில் முயற்சித்த சொந்தப் படமான ‘மாவீரன்’ படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையே தொண்ணூறுகளில் தொடர்ந்தது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் முந்தையப் படத்தின் வசூல்சாதனையை முறியடித்து வந்தன. கமல் கிட்டத்தட்ட கருத்து கந்தசாமியாகவே ஆகிவிட்டார் (இருவருக்கும் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால், இதுவே பொதுவான நிலையாக இருந்தது)

அதாவது –

ரஜினியை மாஸ் மன்னனாகவும், கமலை ஒப்பீனியன் மேக்கர் என்கிற அளவிலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே எம்.ஜி.ஆரின் மறைவு, ரஜினிக்கு ‘தலைவர்’ ஆகும் கெத்தை கொடுத்தது. அவருடைய படங்களில் சோ-வின் உதவியோடு அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘அண்ணாமலை’யில் தொடங்கியது ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து. தொடக்கத்திலிருந்தே ஏனோ ரஜினியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. அவரை மட்டம் தட்டும் விதமாகவே நடந்துக் கொண்டு வந்திருக்கிறார். ‘நதியை தேடி வந்த கடல்’, ‘பில்லா’ படங்களில் ஹீரோ (நம்ம ரஜினிதான்) கருப்பாக இருக்கிறார் என்று நடிக்கவே மறுத்தவர் ஜெயலலிதா.

அப்படிப்பட்டவர் ஆட்சி அதிகாரத்துக்கே வந்த நிலையில், நண்டு சிண்டுகளால் ‘தலைவர்’ என்று அழைக்கப்படும் ரஜினியை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வசூலில் ரஜினியின் மாஸ்டர்பீஸாக ‘பாட்ஷா’ அமைந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக முறை நுழைவு டிக்கெட் கிழிக்கப்பட்ட படம் என்கிற பெருமையை சிவாஜியின் ‘திரிசூலம்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ முறியடித்தது. இரண்டு படங்களின் சாதனையையும் நொறுக்கி, இன்றுவரையிலான மகத்தான சாதனையை ‘பாட்ஷா’வில் செய்தார் ரஜினி.

‘அன்று; தளபதி. நேற்று; மன்னன். நாளை?’ என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்ட ஜெயலலிதா கடுப்பானார். அதற்கு ஏற்ப ‘பாட்ஷா’ வெற்றிவிழாவில் மயில்தோகையால் மெல்ல ஜெ. தலைமையிலான அரசை ரஜினி விமர்சிக்க, முட்டிக் கொண்டது. ‘முத்து’ படத்தில், “நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டிருக்கேன். எதுக்கு தடங்கல் பண்ணுறீங்க” என்று வசனம் வைத்து ஜெ.வை சீண்டினார்.

அடுத்து 1996ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாகவே ஜெ.வுக்கு எதிராக போர்முழக்கம் செய்தார் ரஜினி. அரசியலில் குதித்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆட்சியைப் பிடிப்பார் என்று யூகங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சூழலை சுக்குநூறாக உடைத்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். வேறு வழியின்றி சோ ஆலோசனையுடன் திமுக கூட்டணியை ஆதரித்து, ஜெ.வை பழிதீர்த்துக் கொண்டார்.

ரஜினி படமென்றால் வெள்ளிவிழா என்கிற நிலையை தாண்டி ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ படங்கள் 250 நாட்கள் ஓடி வைரவிழா கண்டன. இதைவிட பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற சுமை அழுத்த, குழப்பத்தில் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் தவிர்த்தார் ரஜினி.

2001ல் மீண்டும் ஜெ. ஆட்சி.

இம்முறை அரசியல் கருத்துகளோடு சுடச்சுட களமிறங்க திட்டமிட்டார் ரஜினி. இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆன்மீக அரசியல், அதையே கருத்தாக்கி ‘பாபா’ எடுத்தார்.

படுதோல்விதான் பரிசு. தன்னுடைய நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை விடவும் கசப்பான அனுபவத்தை ‘பாபா’வில் பெற்றார்.

‘என்னோட சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவ்வளவுதானா?’ என்று ரஜினி புலம்புமளவுக்கான தோல்வி.

ரஜினியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது பொழுதுபோக்கே தவிர, அரசியலோ சமூகக் கருத்துகளோ கிடையாது என்பதை ஆணித்தரமாக ‘பாபா’வுக்கு நேர்ந்த கதி நிரூபித்தது. ஏனெனில் ரஜினியைவிட டீக்கடை பெஞ்சுகளில் ‘தினத்தந்தி’ வாசிக்கும் சாமானியனுக்கே அரசியல் அதிகம் தெரியும். சமூகத்தைப் பற்றிய புரிதலும் அதிகம்.

அரசியல் கருத்துகளால் கீழே விழுந்த குதிரையான ரஜினி, மீண்டும் தன்னுடைய பொழுதுபோக்கு சேணத்தை தட்டிப் போட்டு ‘சந்திரமுகி’யில் வரலாற்று வெற்றியை எட்டினார். அடுத்து ஏவிஎம்மின் ‘சிவாஜி’, ஷங்கரின் ‘எந்திரன்’ படங்களில் வசூல் சாதனை புரிந்தார்.

‘படையப்பா’ வரையில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலைதான் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த கவர்ச்சி அப்படி. ஐம்பது வயதை கடந்தும் அவர் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஜினிக்காக படம் ஓடும் என்கிற நிலை மாறி, ரஜினி நடித்த படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ‘பாபா’, ‘குசேலன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று அடுத்தடுத்த தோல்விகளும், ‘கபாலி’ போன்ற ஆவரேஜ்களும் நியாயமாக ரஜினிக்கு நிலைமையை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது ரஜினியின் கவர்ச்சி காலாவதியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. சினிமாவிலேயே படுதோல்வி அடைந்த ‘பாபா’ கருத்துகளோடு 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ‘2.0’, ‘காலா’ படங்களை ஓடவைப்பதற்கான அவருடைய வழக்கமான விளம்பர யுக்தியா அல்லது நிஜமாகவே ஒருமுறை ஆழத்தில் கால்விட்டு பார்ப்போமா என்கிற அசட்டுத் துணிச்சலா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே தெரிந்துவிடும்.

30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361

20 நவம்பர், 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!

* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.

* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.

* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.

* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.

* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.

* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.


-  மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.

ஆனால்-

‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.

‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்?

தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(

13 நவம்பர், 2017

நேருவின் ரோஜா

கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.

அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.

மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.

“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.

கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.

கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.

கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.

நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.

சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.

இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

11 ஜூலை, 2017

திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!

அதிகாலை இரண்டு மணி.

பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா இந்த நேரத்துலே?”

“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”

அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”

“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”

“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”

“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”

“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.

மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.

பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.

பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.

சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.

சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”

“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”

“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”

தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.

மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.

“என்னய்யா செஞ்சிருக்கே?”

“சார்”

“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”

அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.

பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.

இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.

ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.

1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.

முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.

உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.

வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”

(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)

4 ஜூலை, 2017

கட்டுரை எழுதுவது எப்படி?

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
--------------------

கட்டுரைகள் எழுதுவது எப்படி?
by மாலன்

1. கட்டுரையின் மையம் -focus- என்பதை எழுதத் துவங்கும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கட்டுரை எழுதும் பணி ஒப்படைக்கப்படும் போது அதைக் குறித்துக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணமாக இந்தித் திணிப்புப் பற்றிய கட்டுரையை பல்வேறு விதங்களில் எழுதலாம். இந்திப் போராட்டங்களின் வரலாற்றைப் பற்றி எழுதுவது ஒரு வகை. நாம் current affairs பத்திரிகை. அதில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. வரலாற்றுக் கட்டுரைகளாக வருமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாளிலிருந்து தலைவர்கள் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது ஒரு வகை. ஆனால் அது அரைத்த மாவு.

இந்தத் திணிப்பின் காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மையப்படுத்தி எழுதுவதே சுவையும் பயனும் தரும். அப்படி எழுத விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தனையும் உழைப்பும் இல்லாமல் சிறந்தவை உருவாவதில்லை

2. மையத்தைத் தீர்மானித்த பிறகு அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். உதாரணத்திற்கு இந்திக் கட்டுரைக்கே வருவோம். அந்த ஆணையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் என்ன? அது என்று வெளியிடப்பட்டது போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும்.

3. தரவுகளைத் திரட்டிய பின் அவை அனைத்தையும் மொத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்டுரையில் முன் வைக்கப்படும் கருத்திற்கு ஏற்ப உரிய இடத்தில் தரவுகளிலிருந்து தேவையானவற்றை மட்டும் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும்.

4. தரவுகளைத் திரட்டும் போது புதிய கோணங்களோ, புதிய செய்திகளோ கிடைக்கலாம். அப்படி ஏதும் கிடைக்குமானால் அது மையப்புள்ளியிலிருந்து மாறுபட்டதாக இருக்குமானால் அதை ஆசிரியரிடம் விவாதித்து தெளிவு பெற வேண்டும்

5. கட்டுரைகளை எழுத உட்காரும் முன் அதனுடைய வடிவம் –format- என்ன என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கும் என்ற அடிப்படை விதியை நினைவில் கொள்க. பொருளாதரம், அறிவியல், அரசிடமிருந்து பயனர் பெறுவதற்கான விதிகள் போன்ற எளிதில் விளங்கிக் கொள்ள இயலாத, செய்திகளை கேள்வி பதில் வடிவில் எழுதலாம். உலர்ந்த விஷயங்களை வாசிக்க சுவாரஸ்யமாக கதை வடிவில் எழுதலாம். நச்சென்று முகத்தில் அறைவது போன்ற விஷயங்களை கடித வடிவில் எழுதலாம். விவாதத்திற்குரிய விஷயங்களை முழுவதும் உரையாடலாக எழுதலாம். எல்லாக் கட்டுரைகளும் பள்ளிக் கூட வியாசங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6. எப்படிக் கதைக்கு முதல் வரி முக்கியமோ அதைப்போல கட்டுரையின் துவக்கம் முக்கியம். முதல் வரியின் முக்கியத்துவம், அவற்றின் வகைகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கட்டுரைகளை, சம்பவங்களில் துவக்கலாம். மேற்கோள்களில் துவக்கலாம். உதாரணங்களில் துவக்கலாம். கேள்விகளில் துவக்கலாம் (விஷயம் கேள்விப்பட்டீங்களா? என்று துவங்கும் பழைய முறைதான் தகவல் பரிமாற்றத்தில் இப்போதும் இருந்து வருகிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?) அதிர்ச்சி தரும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். புனையப்பட்ட ஒரு கதையில் துவங்கலாம். மோனை நயம் பொலியும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் போது நம் தலையங்கங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் ஆரம்பங்களை மட்டும் ஆராய்ந்து பாருங்கள். காலத்தின் குரல் நம் நூலகத்தில் இருக்கிறது.

7. கட்டுரைகளின் நடை ஒரு சீராக, ஒரு செய்தியிலிருந்து அடுத்தற்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும். அதற்குரிய transition உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

8. பாக்ஸ் என்பது அட்டிகை ஆறாவது விரல் அல்ல. கட்டுரைக்கு அதில் உள்ள தகவல் அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூடுதல் தகவல் அதற்கு அழகு அல்லது கனம் சேர்க்கும். எனவே எழுதும் போதே அதைப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

9. முடிவு முக்கியம்/ ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முடிவும் முக்கியம் முடிவு என்பது அந்தக் கட்டுரையின் சாரம் முழுவதையும் தொகுப்பதாக இருக்கலாம். கட்டுரையின் மையத்தை நினைவுபடுத்திக் கேள்வி எழுப்புவதாக இருக்கலாம். ’பஞ்ச்’க்கான இடம் அது. ‘காலம்தான் பதில் சொல்ல வேண்டும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ’என்பதோடு முடித்துக் கொண்டார்’ ‘அவரிடமிருந்து விடை பெற்றோம்’ என்பது போன்ற மொக்கை முடிவுகள் வேண்டாம்

10. intro எனப்படும் அறிமுகக் குறிப்பு. கட்டுரையின் மொத்தத்தையும் ஒரு வரியில் சொல்லும் திருக்குறள். இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பரிடம் உரையாடலில் சொல்வதானால் என்ன சொல்வீர்களோ அதுதான் அறிமுகக் குறிப்பு. பாண்டிச்சேரியில் ஆழ்கடல் டைவிங் சொல்லித் தராங்க நான் போயிருந்தேன் என்றோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிப்புக்கு இந்த முறை டிமாண்ட் அதிகமாயிருச்சாமே என்றோ, இருக்கிற வேலையெல்லாம் விட்டு எதுக்கு இப்போ இந்திப் பிரச்சினையை கிளப்பறாங்க என்றோ சொல்வீர்கள் இல்லையா அதுதான் அறிமுகக் குறிப்பு.

11. தலைப்பு மிக மிக முக்கியம். அதுதான் வாசகரைக் கட்டுரைக்குள் இழுக்கும் விஷயம். அதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அது நாளிதழ் தலைப்புப் போல இருக்கக் கூடாது. நாம் பத்திரிகைகள். நாளிதழ்கள் அல்ல. நம் இருவரின் நோக்கமும் சுவையும் வேறு. ஒரே மாவில் இருந்து செய்தாலும் இட்லியும் தோசையும் வேறு வேறு. கேள்விகள், கிண்டல்கள், சீண்டல்கள் ஆச்சரியங்கள் பெருமிதம்,சினம் இப்படி ஏதேனும் ஓர் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் (நாளிதழ் தலைப்புக்கள் வெளிப்படுத்தாது/ வெளிப்படுத்தக் கூடாது) நயமாக இருக்க வேண்டும். நாகரீகமாக இருக்க வேண்டும். கருணாநிதிக்கு சிபிஐ ஆப்பு, பழனிமாணிக்கம் பதவி டர்ர்ர்ர் என்பதெல்லாம் கூடாது.

12. கட்டுரை மட்டுமல்ல, எதை எழுதும் போதும் எழுத்தாளன் வாசகனாகிவிட வேண்டும். ஒரு வாசகனாக இதை நாம் படித்தால்…. என்ற எண்ணம் நினைவில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

முழுமனதோடு முயற்சியுங்கள். நல்ல கட்டுரை நிச்சயம் உருவாகும்.

5 ஏப்ரல், 2017

குறும்பட உலகின் முன்னோடி!

நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.

இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நேருவின் ஆவேசமான முயற்சிகள் இந்த தலைமுறையினருக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி இருந்தது. தங்கள் வாழ்நாளிலேயே பொன்னுலகை கண்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அந்த பொன்னுலகை நிறுவப் போகிறவர்களே தாங்கள்தான் என்கிற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது.

நேரு காலமானதற்கு பிறகான நாட்டின் அரசியல் சூழல் அவர்களுக்குள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திராகாந்தியின் அரசியல் செயல்பாடுகள் ஒருக்கட்டத்தில் அவர்களை கோபக்கார இளைஞர்களாக உருமாற்றியது. எதற்கெடுத்தாலும் ஆவேசமான எதிர்வினை என்பது அவர்களது இயல்பானது. ஏழ்மையை வெறுத்தார்கள். நாட்டில் ஏழ்மையே இருக்கக்கூடாது, ஒரே ஒரு பிச்சைக்காரனைகூட கண்ணில் காணக்கூடாது என்பது அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் கண்ணால் காணாத தேசங்களில் பிச்சைக்காரர்களே இல்லை, அயல்நாடுகள் எல்லாம் சொர்க்கங்கள் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு ஊடகங்களால் விதைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, எமர்ஜென்ஸி.

எழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்கள் லட்சியவேட்கையோடு இருந்தார்கள் என்றால், அவர்கள் எமர்ஜென்ஸியை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் என்பதே முக்கியமான காரணம். இந்திய ஜனநாயகத்தின் மோசமான இன்னொரு பக்கத்தை தரிசித்தவர்கள். ஜெயப்பிரகாஷ் நாராயனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் அவர்களுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை ஊதிப்பெருக்கியது.

இந்த மனோபாவம் கலை இலக்கியத் துறைகளிலும் வெளிப்பட்டது. சந்தத்தோடு மரபுக் கவிதைகள் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களை நிற்கவைத்து, இந்த கவிதைகளால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று கேள்வி கேட்டார்கள். நெஞ்சை நக்கும் சிறுகதைகளாலும், அழகியல் உணர்வோடு வரிக்கு வரி செதுக்கப்பட்ட நாவல்களாலும் புரட்சி எப்படி சாத்தியப்படும் என்று விமர்சனம் வைத்தார்கள்.

குறிப்பாக எழுபதுகளின் இறுதி இந்த இளைஞர்களின் அனல் கக்கும் விமர்சனங்களால் வெப்பமயமாய் இருந்தது. தமிழில் குறும்படம் எடுக்கக்கூடிய முயற்சி இந்த ஆவேச மனோபாவத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், மனோபாலா, ராபர்ட் - ராஜசேகரன், பி.வாசு, பி.சி.ஸ்ரீராம், ருத்ரைய்யா, ஸ்ரீப்ரியா, ஜெயபாரதி என்று கலகக்காரர்கள் சினிமாவை மாற்றியே ஆகவேண்டும் என்று வெறியோடு திரிந்தார்கள். மாற்ற முடிந்ததா என்பதற்கு சமீபத்தில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களே பதில். இலக்கியம் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே, அதைத் தொகுத்து இலக்கியமாக்கி புத்தகமாகக் கொண்டுவந்துவிடலாம்.

அப்போது, எழுத்துலகில் பாலகுமாரன், மாலன், சுப்பிரமணியராஜூ என்று மூவேந்தர்கள். இளைஞர்களான இவர்களுக்கு பதில் சொல்லியே பழம்பெருசுகளுக்கு தாவூ தீர்ந்தது. இலக்கியக் கூட்டங்களில் இந்த மூவரணியைப் பார்த்தாலே ‘ஏதோ கலாட்டா நடக்கப்போவுது’ என்று பயந்தார்கள். ‘நாங்கள்தான் உங்கள் மெசைய்யாக்கள். வாசகர்களே எங்களிடம் வாருங்கள்’ என்று இயேசுமாதிரி அழைப்பார்களாம். அசோகமித்திரனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கணையாழி’ இவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. ஜோல்னாப்பையை துறந்து ஸ்டைலான லுக்கில் வெளிப்பட்ட முதல் தலைமுறை இலக்கியவாதிகள் இவர்கள்தான் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

குமுதத்தில் ஒரு பக்கக் கதை எழுதினால் கூட அதில் சமூகத்துக்கு ஏதோ ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்கள். சிற்றிதழ் மரபுக்கும், வெகுஜன இலக்கிய கலாச்சாரத்துக்குமான இடைவெளியை சரிசெய்ய நினைத்தவர்கள். அர்த்தமற்ற அலங்கார போதனைகளை கடுமையாக வெறுத்தார்கள். ஒருவகையில் பார்க்கப் போனால் முந்தைய தலைமுறையின் அர்த்தமற்ற மதிப்பீடுகளை, நாசூக்கு பார்க்காமல் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்த தலைமுறையினர் இவர்கள்தான்.

‘எப்படி கதை எழுத வேண்டும்?’ என்று பழசுகளுக்கு கிளாஸ் எடுக்கும் விதமாக ‘ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள்’ என்கிற நூலை ‘மாலன்’ நடத்திய ‘வாசகன்’ சிற்றிதழ் கொண்டுவந்தது. இதில் அன்றைய இளைஞர்களான ஆதவன், பாலகுமாரன், வண்ணதாசன், சுப்பிரமணியராஜூ, ஜெயபாரதி, மாலன், இந்துமதி, சிந்துஜா, எம்.சுப்பிரமணியன், கலாஸ்ரீ, அக்ரிஷ் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றன. இந்தத் தொகுதியின் அட்டைப்படத்தை வரைந்தவர் பாலகுமாரன். யெஸ், அப்போது கலைஞன் என்றால் எழுத்து, ஓவியம், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றிலும் மாஸ்டராக இருந்தாக வேண்டும்.

இந்த நூலுக்கான வெளியீடு வித்தியாசமான முறையில் (ஏனெனில் இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?) ஏற்பாடு செய்யப்பட்டது. மனோபாலா (இப்போது சினிமாக்களில் காமெடியனாக நடிக்கும் இயக்குநரேதான்) வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் புத்தகம் வெளியிடப்பட்டது. சுஜாதா, கமல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வித்தியாசமான இந்த விழா முயற்சியை பாராட்டினார்கள்.
இதோடு நின்றுவிடக் கூடாது என்று மாலனுக்கு தோன்றியது. அவருக்கு சினிமா என்கிற ஊடகத்தின் மீது எப்போதுமே கட்டுக்கடங்காத கோபம். காந்தி, ராஜாஜி, பெரியார் போன்றோர் சினிமாவை என்னச் சொல்லி விமர்சித்தார்களோ, அதே விமர்சனங்கள் மாலனுக்கும் உண்டு. தோற்றப்பொலிவு மிக்க இவருக்கு  நடிக்க நிறைய சான்ஸ் நிச்சயமாக கிடைத்திருக்கும். இவருடைய நண்பர்கள் ஏராளமானோர் சினிமாத்துறையில் பணியாற்றி இருந்தும், அத்துறை குறித்த ஒவ்வாமை இவருக்கு ஏனென்று தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் மட்டும் மாலன் நடித்திருக்கிறார். அதுவும் அவரது நண்பர் கமலின் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலனாகவே அவர் நடித்த படம் ‘விருமாண்டி’.

மனோபாலா நடத்திய ‘வித்தியாசமான’ ஓவியங்கள் கணக்காக, வித்தியாசமான படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது மாலனின் கான்செப்ட். மூன்றிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு ஒரு சிறுகதையை (ofcourse, with an strong social message) படமாக எடுப்பது என்று பேசினார்கள். இவரது முயற்சிக்கு நான்கைந்து பேர் ‘ஜே’ போட ஆளுக்கு ஒரு படம் எடுப்பதாக சபதம் செய்தார்கள்.

அப்போதெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதுண்டு. இதுபோல குறும்படங்களை யாரும் எடுத்ததில்லை. அந்த நாட்களில் வீடியோ கேமிராவே புழக்கத்துக்கு வரவில்லை. திரைப்படங்கள் 35 MM ஃபிலிமில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த ஃபிலிம் கொஞ்சம் காஸ்ட்லிதான். பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள் மட்டும் 8 MM ஃபிலிமில் ரெக்கார்ட் செய்யப்படுவது வழக்கம்.

கல்யாணப் படத்துக்கும், சினிமாப் படத்துக்கும் இடையிலான 16 MMல் படம் எடுக்க மாலன் திட்டமிட்டார்.

‘நகரவாழ்க்கையின் இயந்திரத்தனம், அதிலிருந்து விடுபட்டு ஓர் இளைஞன் இயற்கைத்தாயின் மடியில் இளைப்பாறுவது’ என்று ஒன்லைனர் பிடித்தார். இந்த இளைப்பாறுதலும் தற்காலிகமானதுதான், அவன் மீண்டும் இயந்திரமாவான் என்கிற மேசேஜை சொல்லும் திரைக்கதை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடங்கி, கடற்கரை வரை படப்பிடிப்புக்கு லொக்கேஷன். ஹீரோ லுக்கில் இருந்த ஜெயபாரதிதான் இந்த குறும்படத்தின் நாயகன் (பின்னாளில் இவர்தான் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, பாதியில் கழட்டிவிடப்பட்டார். பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சு’ படத்தில் இவரைதான் ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கவைக்க ஆசைப்பட்டார். ஞாநியின் ‘பரிக்‌ஷா’ குழு நடிகர்).

மாலன் எடுத்த அந்த குறும்படம் எங்கெங்கு திரையிடப்பட்டது, யார் யார் பார்த்தார்கள், என்னமாதிரியான விமர்சனங்கள் வந்தது என்பதை போன்ற தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் குறும்படங்கள் எடுத்தார்களா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே டிவியாக இருந்த காலக்கட்டத்தில் இந்த முயற்சிக்கு என்னமாதிரி வரவேற்பு கிடைத்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. எனினும், விடாமுயற்சி வேந்தரான ஞாநி மட்டும் ஏதாவது ட்ரை செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

எனினும், எண்பதுகளின் மத்தியில் இயக்குநர் வாய்ப்பு தேடியவர்கள், தங்களுக்கு தொழில் தெரியும் என்று காட்டுவதற்காக showreel மாதிரி குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.  கமல்ஹாசனேகூட தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் புதுமுக இயக்குநர்களிடம் இதுமாதிரி ஏதேனும் சிறுகதையை showreel எடுத்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது உண்டாம்.

கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி நடந்து, அதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் நான், மாலனின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். இந்த இளைஞர்களை குறித்து மிக ஆர்வமாகப் பேசுவார். அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் மூலம் சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்படலாம் என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார். எனினும், அவர் எடுத்த ஆரம்பகால குறும்பட முயற்சி பற்றி எங்களிடம்கூட ஏனோ சொன்னதே இல்லை.