
4 நவம்பர், 2008
சிந்தக்கைலா ரவி!

3 நவம்பர், 2008
சுண்டக்கஞ்சி வித் பானு!

29 அக்டோபர், 2008
இட்லிவடை - இப்போது இத்துப்போன கடை!

எனக்குப் பிடித்த நாஷ்டா இட்லிவடையும், ஜமாவான வடகறியும். ஆட்டுக்கால் பாயாவோடு யாராவது இட்லிவடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உலகின் எந்த நாட்டு சிற்றூண்டியும் இந்த காம்பினேஷனிடம் பிச்சையெடுக்க வேண்டும். இட்லிவடை பெயரைக் கேட்டதுமே ஏதோ சமையல் குறிப்பு எழுதப்படும் இணையம் என்று உடனடியாக நினைத்தேன். அதில் ஏதோ அரசியல் கட்டுரை வந்ததும் ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். விகடன், குமுதம், தந்தி, தினமலர், துக்ளக், தினமணி என்று தமிழகத்தின் பத்திரிகைகள், நாளேடுகளில் இருந்து முக்கியச் செய்திகளை சுட்டுப் போட்டு வந்தது அப்போது தான் தெரிந்தது. அவ்வப்போது அதிரடி நகைச்சுவைக் கட்டுரைகளும், பதிவர்வட்ட பதிவுகளுமாக பட்டாசாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இட்லிவடை மீது அப்போது எனக்கு நடுநிலையான ஒரு பார்வை இருந்தது. ஆனாலும் இட்லிவடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல தன்னுடைய அதிமுக - பாஜக - இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவான சிந்தனைகளை பரப்பி வருகிறதோ என்ற சந்தேகமும் ஒரு புறத்தில் இருந்தது.
தொடர்ந்து இட்லிவடை துக்ளக் மற்றும் தினமணி கார்ட்டூன்களையே தன்னுடைய அடைப்பலகையில் இடம்பெறச் செய்துக் கொண்டிருந்த வேளையில் இட்லிவடைக்கு ஒரு மடல் அனுப்பினேன். முரசொலி கார்ட்டூனெல்லாம் வராதா என்று கேட்டேன். நான் கேட்டதற்காக ஒன்றோ இரண்டோ முரசொலியிலும், தினகரனிலிருந்தும் போட்டிருந்தார். வாசகர் குரலுக்கு அப்போதைக்கு இட்லிவடை நல்ல மதிப்பு கொடுப்பவர்(கள்) என்பதற்கு இது ஒரு சான்று. இட்லிவடையோடு எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது ஒரு பதிவர் சந்திப்பின் போது. இட்லிவடை ஒரு உளவாளியை அச்சந்திப்புக்கு அனுப்பி போட்டோக்களாக சுட்டுத்தள்ளி சென்சேஷனல் ஆக்கியது. அந்நேரத்தில் பல பதிவர்கள் போலி பிரச்சினை காரணமாக தங்கள் படங்கள் எங்கேயும் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னுடைய புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் இடம்பெறச் செய்ததும் இட்லிவடை தான். அதுவரை தொடர்ந்து இட்லிவடையை வாசித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்த நான் அதன்பிறகு இட்லிவடைக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தினேன். அப்பிரச்சினைக்கு பிறகு அனேகமாக ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே தவிர்க்க இயலாத நேரங்களில் இட்டிருப்பதாக நினைவு.
இட்லிவடையின் கருத்துக்கணிப்புகள் ஆஹா.. ஓஹோ..வென்று புகழுபவர்கள் நிறைய. என்னைப் பொறுத்தவரை இட்லிவடையின் வாசகர்கள் 95 சதவிகிதம் 'சாம்பார்' பார்ட்டிகள் தான். சாம்பார்கள் மெச்சிக்கொள்ளும் விதமான செய்திகளும், கணிப்புகளும் தான் இட்லிவடையில் வெளிவருகிறது. உதாரணத்துக்கு 2006ல் இட்லிவடை எடுத்திருந்த இந்தக் கருத்துக் கணிப்பை சொல்லலாம் - http://idlyvadai.blogspot.com/2006/01/blog-post_30.html. இக்கணிப்பு எந்தளவுக்கு நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். இட்லிவடையின் கருத்துக் கணிப்புகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளின் கணிப்பாக கொள்ளலாம்.
இட்லிவடையின் நகைச்சுவையுணர்வு அபாரமானது. ஒருமுறை பதிவர்களை சினிமாப்படங்களோடு ஒப்பிட்டு எழுதிய பதிவு, உலகம் அழிந்தால் பதிவர்கள் என்ன ஆவார்கள் என்று எழுதிய பதிவெல்லாம் நான் பலமுறை படித்து மகிழ்ந்தது. இட்லிவடையின் ஜிமெயில் ஹாக் செய்யப்பட்ட சம்பவம் ஒரு அட்டகாசமான க்ரைம் நாவலுக்கு உரித்தான மர்ம முடிச்சுகள் நிறைந்தது. யார் ஹாக் செய்தார்கள் என்று கண்டறிந்துவிட்டதாகவும், அதுகுறித்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இட்லிவடையார் சொல்லியிருந்தார். ஆனால் வழக்கம்போல லீஸில் விட்டுவிட்டார்.
இட்லிவடை ஒரு குழு என்றும் அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் கிளம்புவதுண்டு. எனக்கு இந்த கிசுகிசுக்களில் அதிக ஆர்வம். இட்லிவடைக்கு ஓரிரு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கலாம். பல பதிவர்கள் அனுப்பும் விஷயங்களை தன் பாணியில் இட்லிவடை வெளியிடலாம் என்பது தான் என் கணிப்பு. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ஹரன்பிரசன்னா இருக்கலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் வெளிப்படையாக தெரியும் கருணாநிதி வெறுப்புக்கு அவர் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் கலைஞரை பாராட்டிவரும் செய்திகளுக்கு கிருபாஷங்கர் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக பாஸ்டன் பாலாவுக்கு பங்கிருக்கும் என்று நம்புகிறேன். பெனாத்தல் இருப்பதாக சொல்லப்படுவது அநியாயம்.
இதெல்லாம் எனது கணிப்புதான். உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இட்லிவடை மெயிலை ஹாக் செய்தவராக நம்பப்படுபவர் தேசிகன் தான் இட்லிவடை என்று சொல்லுவதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. பத்ரி கூட இட்லிவடை குழுவில் இருப்பதாக சொல்லப்படுவது நல்ல நகைச்சுவை. வேண்டுமானால் பாரா இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் கூட இட்லிவடைக்கு அவ்வப்போது செய்திகளை பார்வேர்டு செய்திருக்கிறேன். இதனால் நானும் இட்லிவடை குழுவில் ஒருவனா என்று தெரியவில்லை. ஆனால் இக்குழுவில் இணைய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் ‘இட்லிவடையிலும் திராவிடக்குரல்' எழும்பும். என்றாவது இட்லிவடையில் கருணாநிதி வாழ்க என்று கோஷம் கேட்டால் லக்கியும் இட்லிவடைக் குழுவில் இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பிக்கலாம்.
இட்லிவடையின் முகமூடி (பதிவர் அல்ல) நிஜமாக கிழிந்தது என்றால் அது 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக என்று சொல்லலாம். கலைஞர் மீண்டும் அரியணை ஏறிய எரிச்சல் அதன்பிறகு தொடர்ந்து இட்லிவடை பதிவுகளில் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தன்னை வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவோடு இட்லிவடை வெளிப்படுத்திய காலமென்று 2008ஐ சொல்லலாம். திரட்டிகளில் இருந்து விலகுவது என்று இட்லிவடை எடுத்த முடிவு மிகச்சரியானது. ஆனால் அதற்கு பின்னால் என்ன என்ன காரணத்தை இட்லிவடைக்குழு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. முன்பெல்லாம் தினமும் எனக்கு இட்லிவடை பார்க்கும் வழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் இட்லிவடை என்ன சொல்லுவார் என்பதை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இருப்பதில்லை. இட்லிவடை ஒரு வெப் போர்ட்டலாக இன்னமும் மாறாதது ஆச்சரியம். ஆனால் இப்போதைய பாணியையே இட்லிவடை தொடர்ந்து கொண்டிருந்தால் வர வர மாமியார் கதை தான் ஆகும். உடனடியாக இட்லிவடைக்குழுவில் பழைய ஆட்களை தூக்கிவிட்டு வேறு ஆட்களை போடவேண்டும். ஈழப்போராட்டத்தைப் பற்றிய இட்லிவடையின் ஒருதலைபட்சப் பார்வை கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் விஷமமும் நிறைந்தது.
ஐந்தாண்டுகளை ஒரு வலைப்பூ துடிப்புடன் நிறைவு செய்வது என்பது இன்றைய தமிழ் வலையுலகைப் பொறுத்தவரை பெருத்த சாதனை. இவ்வகையில் திமுகவோடு இட்லிவடையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒரு பிராந்தியக்கட்சி உலகளவில் அரைநூற்றாண்டை கடந்தது ஒரு சாதனை என்பதால். இட்லிவடை கால்நூற்றாண்டு காலத்தையாவது நிறைவு செய்ய இந்த ஐந்தாண்டு நிறைவு காலத்தில் ஒரு எதிர்விமர்சகனாக வாழ்த்துகிறேன்.
28 அக்டோபர், 2008
ஆணாதிக்கம்!

சேவல்! - திரை விமர்சனம்!!
புள்ளையாண்டான் பரத் மொதல்லே எம்பெருமான் ஷேத்திரமான 'பழநி' பேருலே நடிச்சாரு. இப்போ முருகப் பெருமானோட வாகனமான சேவலா மாறி கொண்டையை சிலிர்த்துக்கிட்டு தீபாவளிக்கு வந்திருக்காரு. டைரக்டரோட பேரு ஹரி. பேரைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியுது. ஆனா படத்துலே ஏகப்பட்ட சேட்டை செஞ்சிருக்காப்பல. ஹரி தனக்குன்னு ஒரு சக்ஸஸ் பார்முலா வெச்சுண்டிருப்பா போலிருக்கு. ஒரு பொறுக்கி ஹீரோ. வயசுக்கும், வளர்ச்சிக்கும் மீறி தாவணி போட்ட ஹீரோயினு. ரெண்டு பேர் ஃபேமிலிக்கும் சம் ட்ரெடிஷனல் வேல்யூஸ். இண்டர்-கல்ச்சர் லவ். வில்லன். ப்ராப்ளம்ஸ். க்ளைமேக்ஸ்லே எல்லாம் சால்வ். இதுதான் ஹரியோட பார்முலா. இதுவரைக்கும் தோத்ததில்லைன்னு அதையே இப்பவும் ஃபாலோ பண்ணியிருக்கா.
படம் 2008க்கும் 1989க்கும் அடிக்கடி ஜம்ப் ஆவுது. ஆயுள் தண்டனை முடிச்சிண்டு 2008லே பரத் ரிலீஸ் ஆவுறான். ஏன் ஜெயிலுக்கு போனான்னு பிளாஷ்பேக் தான் கதை. ஹரி இன்னும் 1980ஸ்லேயே வாழ்ந்துண்டுருக்கார். பூக்கார பொறுக்கிப் பையனுக்கு அக்ரஹாரத்து பொண்ணு மேலே லவ்வு வந்துடுது. கருமம். கருமம். இவன் தங்கையை லவ்வு பண்ணுறது தெரியாம கல்யாணம் ஆகி மாட்டுப்பொண்ணா வேறிடத்துக்குப் போன அக்காளை தான் லவ்வு பண்ணுறான்னு அக்கா நெனைச்சி, அவ கனவுலே ப்ளாக் & ஒயிட்லே "அதிசய ராகம்னு" பாட்டு பாடறா. கேவலம். கேவலம். ஹீரோயினுக்கு அக்காவா சிம்ரன். மாமி வேஷத்துக்கு நல்ல பொருத்தம். ஜெயா டிவி சீரியல்லே வந்தமாதிரியே அச்சு அசல் அக்ரஹாரத்து மாமி. பேஷ், பேஷ்.. ரொம்ப நன்னாருக்கா.. இந்த ரெண்டு பொண்ணுக்கும் அப்பாவா அப்பாவி பிராமணனா ஒய்.ஜி.மஹேந்திரன் அருமையா நடிச்சிருக்கர்.
சிம்ரன் ஒரு குழந்தையை பெத்துப் போட்டுட்டு புத்துநோய்லே செத்துப்போக, ஹீரோயினை சிம்ரனோட ஆம்படையானுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்க, அவனும் வில்லனோட சதியிலே அசந்தர்ப்பமா மண்டையப் போட, ஹீரோயின் விதவையா நிக்க, ஹீரோ அவளை மறுமணம் கட்டிக்க வற்புறுத்த, பெரியவா எல்லாம் சேர்ந்து அவளுக்கு மொட்டை அடிச்சி மூலையிலே உட்கார வைக்க.. அய்யய்யோ.. எடையிலே ஒரு காமாந்தக வில்லன். அவனுக்கு ஹெல்ப் பண்ண ஒரு அக்ரஹாரத்து அம்பி. ரெண்டாவது ஹாஃப் செம இழுப்பு இழுத்திருக்கா. ஆனா தியேட்டர்லே படம் பார்த்த மொத்த மாமிங்களும் தாரைதாரையா கண்ணீர் வடிக்கிறா. ரெண்டே கால் மணி நேரப் படத்துக்கு இருநூறு, இருநூத்தம்பது சீன். டைரக்டரும், அவாளோட டீமும் மொத்தமா ரூம் போட்டு யோசிச்சிருப்பாளோ?
ஹீரோயின் மதமதன்னு வளர்ந்துருக்கா. ரெட்டை ஜடை, ஒத்தை ரோஜா, தாவணி - இதெல்லாம் ஹரியோட ரெகுலர் டேஸ்ட் போலிருக்கு. பரத் துரத்துக்கிட்டு ஓட ஆத்து மணல்லே அவ விழுந்து அவ பாவாடையும், தாவணியும் முழங்காலுக்கு மேலே தூக்குறப்போ.. ச்சீ.. எனக்கே வெட்கமா போயிடுத்து. ஆளு அழகா அம்சமா இருக்காளேன்னு பார்த்தா ஆக்டிங்லே சொதப்பிட்டா. ஹீரோவைப் பத்தி சொல்லணுமா? அதான் படத்தோட டைட்டிலே சொல்றதே? படத்தோட பர்ஸ்ட் சீனுலேர்ந்து கொண்டையை சிலிர்த்துக்கிட்டு ஓடிண்டிருக்கான். மத்தவாளோட அடிவாங்குறதே காமெடின்னு ஆயிப்போச்சி வடிவேலுக்கு. பரவால்லை. அவர் நடிக்க கொஞ்சம் சீன் கொடுத்திருக்கா. நல்லாதான் நடிச்சிருக்கார். ராஜேஷ், யுவஸ்ரீ ஹீரோவோட பேரண்ட்ஸா நடிச்சிருக்கா. படத்தோட பல கேரக்டர்ஸை பல படங்கள்லே ஏற்கனவே பார்த்துண்டதால அடுத்தடுத்து அவா அவா என்ன பேசப்போறா, என்ன சீன் வரப்போவுதுன்னு ஈஸியா கெஸ் பண்ண முடியுது.
பாட்டெல்லாம் படுமோசம். ஜி.வி.பிரகாஷ் இதுக்கு முன்னாடி மியூசிக் போட்ட குசேலனே பரவால்லைன்னு தோணுது. சேவல்னு படத்துக்கு பேரை வெச்சிட்டு ரெண்டே ரெண்டு சண்டை சீனு தான். ஆனா படம் முழுக்க இரத்தம் தெறிக்குறாப்புலே ஒரு ஃபீலிங். என்னன்னே தெரியலை. அக்ரஹாரத்து அம்பிங்க இருவது பேரை மொரடன் மாதிரி இருக்குற ஹீரோ பந்தாடுறான். அம்பிங்களை காமெடி ஃபைட்டுக்கு யூஸ் பண்ணிண்டிருக்கா மாபாவிகள். டோண்டு சார் இந்த சீனை பார்த்திருந்தா மனசு சங்கடப்பட்டிருப்பர். படம் ஃபுல்லா கமர்சியல் ஆட்டு ஆட்டிண்டு க்ளைமேக்ஸ்லே பெரியாரோட மெசேஜை கையில் எடுத்துண்டா, மறுமணம், பெண் விடுதலைன்ட்டு. வெறுத்துப் போயிட்டேன். இந்த சினிமாக்காராளுக்கு நம்ம கல்ச்சரை கிண்டலடிக்குறதே வழக்கமா போச்சி. க்ளைமேக்ஸ் பார்த்த பாவத்தோட தீட்டுக்கழிய வீட்டுக்கு வந்து ரெண்டு சொம்பு ஜலம் எடுத்து தலையில் ஊத்திண்டேன்.
சேவல் - புலிப்பாய்ச்சல்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)