28 அக்டோபர், 2008

சேவல்! - திரை விமர்சனம்!!

புள்ளையாண்டான் பரத் மொதல்லே எம்பெருமான் ஷேத்திரமான 'பழநி' பேருலே நடிச்சாரு. இப்போ முருகப் பெருமானோட வாகனமான சேவலா மாறி கொண்டையை சிலிர்த்துக்கிட்டு தீபாவளிக்கு வந்திருக்காரு. டைரக்டரோட பேரு ஹரி. பேரைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியுது. ஆனா படத்துலே ஏகப்பட்ட சேட்டை செஞ்சிருக்காப்பல. ஹரி தனக்குன்னு ஒரு சக்ஸஸ் பார்முலா வெச்சுண்டிருப்பா போலிருக்கு. ஒரு பொறுக்கி ஹீரோ. வயசுக்கும், வளர்ச்சிக்கும் மீறி தாவணி போட்ட ஹீரோயினு. ரெண்டு பேர் ஃபேமிலிக்கும் சம் ட்ரெடிஷனல் வேல்யூஸ். இண்டர்-கல்ச்சர் லவ். வில்லன். ப்ராப்ளம்ஸ். க்ளைமேக்ஸ்லே எல்லாம் சால்வ். இதுதான் ஹரியோட பார்முலா. இதுவரைக்கும் தோத்ததில்லைன்னு அதையே இப்பவும் ஃபாலோ பண்ணியிருக்கா.
படம் 2008க்கும் 1989க்கும் அடிக்கடி ஜம்ப் ஆவுது. ஆயுள் தண்டனை முடிச்சிண்டு 2008லே பரத் ரிலீஸ் ஆவுறான். ஏன் ஜெயிலுக்கு போனான்னு பிளாஷ்பேக் தான் கதை. ஹரி இன்னும் 1980ஸ்லேயே வாழ்ந்துண்டுருக்கார். பூக்கார பொறுக்கிப் பையனுக்கு அக்ரஹாரத்து பொண்ணு மேலே லவ்வு வந்துடுது. கருமம். கருமம். இவன் தங்கையை லவ்வு பண்ணுறது தெரியாம கல்யாணம் ஆகி மாட்டுப்பொண்ணா வேறிடத்துக்குப் போன அக்காளை தான் லவ்வு பண்ணுறான்னு அக்கா நெனைச்சி, அவ கனவுலே ப்ளாக் & ஒயிட்லே "அதிசய ராகம்னு" பாட்டு பாடறா. கேவலம். கேவலம். ஹீரோயினுக்கு அக்காவா சிம்ரன். மாமி வேஷத்துக்கு நல்ல பொருத்தம். ஜெயா டிவி சீரியல்லே வந்தமாதிரியே அச்சு அசல் அக்ரஹாரத்து மாமி. பேஷ், பேஷ்.. ரொம்ப நன்னாருக்கா.. இந்த ரெண்டு பொண்ணுக்கும் அப்பாவா அப்பாவி பிராமணனா ஒய்.ஜி.மஹேந்திரன் அருமையா நடிச்சிருக்கர்.
சிம்ரன் ஒரு குழந்தையை பெத்துப் போட்டுட்டு புத்துநோய்லே செத்துப்போக, ஹீரோயினை சிம்ரனோட ஆம்படையானுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்க, அவனும் வில்லனோட சதியிலே அசந்தர்ப்பமா மண்டையப் போட, ஹீரோயின் விதவையா நிக்க, ஹீரோ அவளை மறுமணம் கட்டிக்க வற்புறுத்த, பெரியவா எல்லாம் சேர்ந்து அவளுக்கு மொட்டை அடிச்சி மூலையிலே உட்கார வைக்க.. அய்யய்யோ.. எடையிலே ஒரு காமாந்தக வில்லன். அவனுக்கு ஹெல்ப் பண்ண ஒரு அக்ரஹாரத்து அம்பி. ரெண்டாவது ஹாஃப் செம இழுப்பு இழுத்திருக்கா. ஆனா தியேட்டர்லே படம் பார்த்த மொத்த மாமிங்களும் தாரைதாரையா கண்ணீர் வடிக்கிறா. ரெண்டே கால் மணி நேரப் படத்துக்கு இருநூறு, இருநூத்தம்பது சீன். டைரக்டரும், அவாளோட டீமும் மொத்தமா ரூம் போட்டு யோசிச்சிருப்பாளோ?
ஹீரோயின் மதமதன்னு வளர்ந்துருக்கா. ரெட்டை ஜடை, ஒத்தை ரோஜா, தாவணி - இதெல்லாம் ஹரியோட ரெகுலர் டேஸ்ட் போலிருக்கு. பரத் துரத்துக்கிட்டு ஓட ஆத்து மணல்லே அவ விழுந்து அவ பாவாடையும், தாவணியும் முழங்காலுக்கு மேலே தூக்குறப்போ.. ச்சீ.. எனக்கே வெட்கமா போயிடுத்து. ஆளு அழகா அம்சமா இருக்காளேன்னு பார்த்தா ஆக்டிங்லே சொதப்பிட்டா. ஹீரோவைப் பத்தி சொல்லணுமா? அதான் படத்தோட டைட்டிலே சொல்றதே? படத்தோட பர்ஸ்ட் சீனுலேர்ந்து கொண்டையை சிலிர்த்துக்கிட்டு ஓடிண்டிருக்கான். மத்தவாளோட அடிவாங்குறதே காமெடின்னு ஆயிப்போச்சி வடிவேலுக்கு. பரவால்லை. அவர் நடிக்க கொஞ்சம் சீன் கொடுத்திருக்கா. நல்லாதான் நடிச்சிருக்கார். ராஜேஷ், யுவஸ்ரீ ஹீரோவோட பேரண்ட்ஸா நடிச்சிருக்கா. படத்தோட பல கேரக்டர்ஸை பல படங்கள்லே ஏற்கனவே பார்த்துண்டதால அடுத்தடுத்து அவா அவா என்ன பேசப்போறா, என்ன சீன் வரப்போவுதுன்னு ஈஸியா கெஸ் பண்ண முடியுது.
பாட்டெல்லாம் படுமோசம். ஜி.வி.பிரகாஷ் இதுக்கு முன்னாடி மியூசிக் போட்ட குசேலனே பரவால்லைன்னு தோணுது. சேவல்னு படத்துக்கு பேரை வெச்சிட்டு ரெண்டே ரெண்டு சண்டை சீனு தான். ஆனா படம் முழுக்க இரத்தம் தெறிக்குறாப்புலே ஒரு ஃபீலிங். என்னன்னே தெரியலை. அக்ரஹாரத்து அம்பிங்க இருவது பேரை மொரடன் மாதிரி இருக்குற ஹீரோ பந்தாடுறான். அம்பிங்களை காமெடி ஃபைட்டுக்கு யூஸ் பண்ணிண்டிருக்கா மாபாவிகள். டோண்டு சார் இந்த சீனை பார்த்திருந்தா மனசு சங்கடப்பட்டிருப்பர். படம் ஃபுல்லா கமர்சியல் ஆட்டு ஆட்டிண்டு க்ளைமேக்ஸ்லே பெரியாரோட மெசேஜை கையில் எடுத்துண்டா, மறுமணம், பெண் விடுதலைன்ட்டு. வெறுத்துப் போயிட்டேன். இந்த சினிமாக்காராளுக்கு நம்ம கல்ச்சரை கிண்டலடிக்குறதே வழக்கமா போச்சி. க்ளைமேக்ஸ் பார்த்த பாவத்தோட தீட்டுக்கழிய வீட்டுக்கு வந்து ரெண்டு சொம்பு ஜலம் எடுத்து தலையில் ஊத்திண்டேன்.
சேவல் - புலிப்பாய்ச்சல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக