27 அக்டோபர், 2008

ஏகன்!

'அட்டகாசம்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு அப்புறம் தலைக்கு தீபாவளி களைகட்டியிருக்கிறது. தாடி, லைட்டான தொந்தி, மங்கி கேப் என்று அதகள கெட்டப்பில் அன்புமணிக்கு சவால் விட்டவாறே தம்மோடு ஹாங்காங்கில் அதிரடி ஓபனிங் டென் தவுசண்ட் வாலா. அடுத்தடுத்த காட்சிகளில் திடீரென ஸ்லிம்மாகி, ஸ்மார்ட்டாகி ஸ்டூடண்ட் ஆவது வான வேடிக்கை. நயனைப் பார்த்த முதல் காட்சியிலேயே ‘உன்னைப் பார்த்த பின்பு நான்' என்று ஆடிப்பாடி மகிழ்வதைப் பார்த்தால் காதல் மன்னன் காலத்து ஆட்டம் பாம். நகைச்சுவையில் ஆங்காங்கே சரம் வெடிக்கிறார். தல தல தான். சோகம் என்னவென்றால் 'தல' ரசிகர்களைத் தவிர வேறு யாருமே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு படத்தின் ரிசல்ட் வந்திருப்பதுதான். ‘மே ஹூ நா' என்ற இந்திப்படத்தின் தழுவல் அல்ல இது. இது சுத்தமான தமிழ் படம்' என்று படம் வருவதற்கு முன்பாக அறிக்கை விட்டார் இயக்குனர் ராஜூ சுந்தரம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. இதுபோல அட்டு படம் எடுக்கும் இயக்குனர்களையெல்லாம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தினால் என்ன? எட்டு ரீல் படத்தில் ஆறு பாட்டு, நாலு ஃபைட்டு இருந்தால் படமெடுத்த படக்குழுவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்திருந்த ‘மே ஹூ நா' சூப்பராக இல்லாவிட்டாலும் சுமாராக இருந்தது. அதை கொத்துப்பரோட்டா போடுகிறோம் என்ற பெயரில் கைமா ஆக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி சுத்தமாக ஏகனில் மிஸ்ஸிங். யுவன்ஷங்கர் ராஜா ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சரக்கில் தரம் குறைகிறது. உஷார் மே தேகோ. குழப்படியான ஆரம்பக்கட்ட காட்சிகளில் எடிட்டர் தானும் குழம்பி படம் பார்ப்பவர்களையும் குழப்பித் தள்ளியிருக்கிறார். வில்லன் கொடூரமானவனா காமெடியனா என்பது இயக்குனருக்கும் தெரிந்திருக்காது போலிருக்கிறது. சுமன் பாவம். சுமனின் அல்லக்கையாக வரும் ஸ்ரீமன் ரொம்ப பாவம். படத்தில் ஹீரோயின் தேவைப்படுமே என்று நயன்தாராவின் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். ராசாத்தி நைட்டி மாடல் மாதிரி வந்துப் போகிறார். நாளுக்கு நாள் நயன்தாராவின் முதுகு சிக்ஸ் பேக் பாடி மாதிரி செம்ம ஷேப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறது. நாசரை இப்படியா வீணடிக்க வேண்டும். இவ்வளவு பெரிய மூக்கு அவருக்கு இருக்கிறது. இதுபோல மொக்கை கேரக்டர் கொடுப்பவர்கள் மீது மூக்குக்கு மேல் கோபம் வரவேண்டாமா? நல்ல நடிகரான ஜெயராமை கூட கோமாளி ஆக்கியிருக்கிறார்கள். கொடுமை. ஜான் சின்னப்பா ஒரு பெரிய டான். அவருடன் இருந்த ராம்பிரசாத் போலிஸ் அப்ரூவராக மாறிவிடுகிறார். ராம்பிரசாத்தை போலிஸ் கஸ்டடியிலேயே தீர்த்துக்கட்ட ஜான் சின்னப்பா முயற்சிக்கிறார். ராம்பிரசாத் எஸ்கேப். ராம்பிரசாத்தின் பெண் ஊட்டிக் கல்லூரியில் படிக்கிறார். அப்பெண்ணை பார்க்க ராம்பிரசாத் எப்படியும் வருவார். அவரைப் பிடித்துவிடலாம் என்று போலிஸ் கமிஷனர் திட்டம் தீட்டுகிறார். அப்பெண் படிக்கும் கல்லூரிக்கு ஸ்டூடண்டாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டரும், தன்னுடைய மகனுமான சிவாவை அனுப்புகிறார். ராம்பிரசாத்தை பிடிக்கும் சிவா ஜான் சின்னப்பாவையும் தீர்த்துக் கட்டுகிறார். இடையில் ஒரு அம்மா - தம்பி செண்டிமெண்ட். ப்ரொபஸரை காதலிக்கும் ஸ்டூடண்ட் என்று ஆங்காங்கே மசாலா தூவல். இதுதான் கதை. சில பல கோடிகள் செலவழித்து, ராஜூ சுந்தரத்தை இயக்குனராக்கி தில்லாக இந்த கதையை ஐங்கரன் இண்டர்நேஷனல் படமாக்கியிருக்கிறது. பில்லா ஸ்டைலை அப்படியே கொண்டுவந்து ஸ்டைலான மேக்கிங் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும் படத்துக்கு அவசியமான கதை, திரைக்கதை, இத்யாதிகளில் சூப்பர் கோட்டை விட்டிருக்கிறார்கள். தலைக்கு மட்டும் ஏனிப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதோ தெரியவில்லை. ஒரு படம் சுமாராக ஓடினால் அடுத்தடுத்து பத்துப்படம் ஆப்பு அடித்துவிடுகிறது. ஏகன் - சோகன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக