20 அக்டோபர், 2008

சாரு டிகிரி - வேற்றுக்கிரக வாசி!


அன்பில்லாத வாசுகி!

வா சுகி என்று உன்னை அழைக்க ஆசைதான், செருப்பால் அடிப்பாயோ என்று பயந்து 'வா'வுக்கும் 'சு'வுக்கும் இடைவெளி விடாமல் வாசுகி என்றே அழைக்கிறேன். நீ இப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்னை கட்டியணைத்து உதடுகளில் முத்தமழை பொழிய நினைத்திருக்கலாம். முதுகில் கத்தியால் குத்த நினைத்திருக்கலாம். உன்மத்தம் பிடித்து என் தலைமுடியை உலுக்கி தவடையில் அறைய நினைத்திருக்கலாம். நீ தோழியா இல்லை காதலியா என்று பாட்டுப்பாடி பெண்ணிடம் தன் உள்ளத்தினை திறந்தவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. எக்சிஸ்டெண்சியலிஸ்ட் முனியாண்டியின் பிரதிகளை ஒன்பதாவது நூற்றாண்டு செத்த மூளை கலைத்துப் போட்டதைப் போல என்னுடைய பிரதிகளையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பழுதடைந்த கிட்னி சீட்டுக்கட்டின் சீட்டுகளைப் போல சிதறவிட்டிருக்கிறது. சரியாக ஒன்பது சீட்டுகள். மீதி எங்கே? நல்லவேளை பூக்கோ அயல்நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துவிட்டார். பூக்களே பூக்களே என்று மரத்தை சுற்றி டூயட் பாடும் தமிழ்பட கதாநாயகன்களை பார்த்து ஏன் தெலுங்குகாரர்கள் சிரிக்கிறார்கள். பூக்கு என்ற வார்த்தைக்கு தெலுங்கில் என்ன பொருள் என்று யாராவது அழகிய இளம் தெலுங்குப் பெண்ணிடம் கேட்டுப்பார்த்தால் நாணுவாளா? சினம் கொள்ளுவாளா? சிணுங்குவாளா?. இவ்வார்த்தைக்கு என்ன பொருளென்று பொதுவெளியில் தமிழில் எழுதினால் என்னை தமிழர்கள் கல்லெடித்து அடிப்பார்களா? பூவால் வருடுவார்களா? நான் ஏன் மனநோயாளியாக படைக்கப்படவில்லை? உலக மகிழ்ச்சியையெல்லாம் ஒரு கோப்பை மதுவில் அடக்கி ஒரே மூச்சில் குடித்து கள்வெறி கிளர்த்தெழ ஆனந்த தாண்டவம் ஆடியிருக்கலாமே? எல்லாம் சரி. எழுத்துக்களை எழுத்துக்களால் எழுத்தாய் எழுத முயற்சித்து எழுத இயலாமல் எழுத்தை பயிற்சித்து எழுத்தை பரிட்சீத்து எழுத்துக்களாய் நானே மாறினாலும் எழுத முடியாமல் தோற்று வெட்கி தலைகுனிந்து எழுதி எழுதி செத்துக்கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி. யாராவது எழுத்தாய் மாறி எழுத்துக்களை எழுதுங்கள். வாசிக்க மட்டும் செய்கிறேன்.


* - * - * - * - * - * - * - *


சாருவை நான் பதிவர் சந்திப்புக்கு சாட்டிங் மூலமாக அழைத்திருந்ததால் ஏற்பட்ட சர்ச்சையின் போது சாருவே போன் செய்திருந்தார். 'நான் அழைத்ததில் என்ன தவறென்று' நான் கேட்டிருந்ததை பார்த்து ரொம்ப பாவமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். 'அழைப்பு' குறித்த மரபுகள் குறித்தும் போதித்தார். அவர் வாழ்வில் நடந்த சில பல உதாரணங்களை சுட்டியும் காட்டினார். நான் உங்களை எதற்காகவாவது அழைப்பதாக இருந்தால் நான் கடைப்பிடிக்கும் தார்மீக மரபுகளை கடைப்பிடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படியே கடந்த சனிக்கிழமை நடந்த ஜீரோ டிகிரி ஆங்கில பதிப்பின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொலைபேசி அழைத்தார். நிகழ்ச்சிக்கு இருதினம் முன்பாக தொலைபேசி இன்னொரு முறை நினைவுறுத்தவும் செய்தார். ஒரு வாசகனுக்கு எழுத்தாளன் தரும் உயர்ந்தபட்ச கவுரவம் இதுவென்றாலும் அவரை பதிவர் சந்திப்புக்கு அழைத்தபோது நான் செய்த தவறு எதுவென்பதை அவரது செயலால் செருப்பால் அடித்தது மாதிரி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏற்கனவே அவரது எழுத்துக்களுக்கு ரசிகன். இப்போது அவருக்கும் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன், ஆத்திகம் - திராவிடம் மாதிரியான விஷயங்களில் அவரது கருத்துக்கள் பிடிக்கவில்லையென்றாலும் கூட.


ஒரு காலத்தில் டிகிரி என்ற சொல்லைக் கேட்டதுமே டிகிரி காப்பி தான் நினைவுக்கு வரும். அம்மாவழி சின்னப் பாட்டனார் சிறுவயதில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு அய்யர் மெஸ்ஸில் டிகிரி காப்பி வாங்கித் தருவார். அவரும் அனுபவித்துக் குடிப்பார். தஞ்சையில் பிறக்கவேண்டிய உல்லாசவாசி. தப்பித்தவறி உத்திரமேரூருக்கு அருகில் பிறந்து தொலைத்தார். அவரால் நானும் காஃபி பிரியனானேன். வீட்டில் அனைவருக்கும் தேநீர் பிடித்தாலும், எனக்கு மட்டும் எப்போதும் காஃபி தான். காஃபியை குடிக்கும்போது கசப்பாக உணரவேண்டும். குடித்து முடித்தபின் உதடுகளை நாக்கால் தடவினால் லேசாக தித்திக்க வேண்டும். எனக்குப் பிடித்த காஃபிக்கான இலக்கணம் இது. எனக்காகவென்று அம்மா ஸ்பெஷலாக ஃபில்டர் கூட வாங்கி வைத்திருந்தார். இப்போது இன்ஸ்டண்ட் காஃபிக்கு மாறி சில ஆண்டுகளாகிறது.


எனவே இப்போதெல்லாம் டிகிரி என்ற வார்த்தையைக் கேட்டால் காஃபிக்குப் பதிலாக சாரு நினைவுக்கு வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் ஸீரோ டிகிரியை முதல்முறை வாசித்தபோது மனநிலை சில வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. மூளை லட்சம் தடவை கிறுகிறுத்தது. ஒரு கோடி அபின் வில்லைகள் தரக்கூடிய போதையை அப்பிரதி தந்தது. இதன் ஆங்கில மொழியாக்கமும் அதே வாசனையோடு, அதே போதையோடு, அதே கிறுகிறுப்பை அட்சரம் பிசகாமல் தருகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஸீரோ டிகிரியை வாசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலைகிறேன் என்று சொன்னார். சாருவை புதியதாக வாசிக்க நினைப்பவர்கள் ராஸலீலாவை முடித்துவிட்டு ஸீரோ டிகிரிக்கு வருவது நலம். மனதளவில் யதார்த்த அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு தயாராக முடியும். அதிர்ச்சி = ஷாக். புத்தகம் ஷாக்கடிக்குமா என்று கேட்டால் ஸீரோ டிகிரி ஷாக்கடிக்கும் என்றே சொல்லுவேன். அப்போது ராஸலீலா? சில சமயம் தலையை தடவிக் கொடுக்கும். சில சமயம் தலையை நீருக்கடியில் அழுத்தி மூச்சு திணறவைக்கும்.


ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் பிளாஃப்ட் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஸீரோவும் சூன்யம் தான். சூன்யத்தின் நிறம் கருப்பு. அதனாலோ என்னவோ நிகழ்ச்சியின் தீமும் கருப்பு. மேடையில் 'நெப்போலியன்' பாட்டிலில் செடியோடு மலர்ந்திருந்த ரோஜாவின் நிறமும் கருப்பு. மேடையின் பேக்டிராப் கருப்பு. சாரு அணிந்திருந்த சட்டையும் கருப்பு. ஐம்பத்தி நான்கு வயதான கமலஹாசனின் இளமைத்தோற்றத்துக்கு சிலிர்க்கிறோம். அவரை விட மூன்று வயது அதிகமான சாரு கமலை விட இளமையாக தெரிகிறார். இன்னும் ஏன் இவரை சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தைப் போன்ற பாத்திரங்களில் சாரு நடித்தால் அள்ளிக்கொண்டுப் போகும்.
புத்தகத்தின் சில அத்தியாயங்களை தமிழில் எழுதிய சாருவும், மலையாளத்தில் எழுதியவரும், ஆங்கிலத்தில் எழுதியவர்களும் வாசித்துக் காட்டினார்கள். மொழிமாற்றமாக (Translation) இல்லாமல் மொழியாக்கமாக (Transcreation) செய்யப்பட்டிருப்பதாக விழாவுக்கு வந்திருந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டார்கள். கலாஸ்ரீ, நிலாஸ்ரீ அத்தியாயத்தை வாசிக்கும்போதெல்லாம் சாரு சரியான பிக்கப்பில் இல்லை. சாருவின் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற சிம்மக்குரல் அவருக்கு இல்லையோ என்ற தோற்றம் எழுந்தது. மனிதர் மென்மையாக, மெதுவாகப் வாசித்தார். சாரு ரசிகர்கள் பட்டா போட்டு அடிக்கடி வாசிக்கும் அந்த 'எலக்ட்ரிக் சுடுகாடு' அத்தியாயம் வந்தபோது குரலை உயர்த்தி ஏற்ற இறக்கத்தோடு தமிழின் புனிதவார்த்தைகளை சாரு உச்சஸ்தாயியில் வாசித்தபோது அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. அந்த அத்தியாயத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்கள். Pussy, Bastard, pitch, fuck, மானே, தேனே போட்டு எப்படியோ அசல் பிரதியில் இருந்த அம்சங்களை கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். அந்த அத்தியாயத்துக்கு மட்டும் மூன்று பாட்டில் ரம் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. அதுபோலவே 1930களின் பிராமண குடும்பத்து தமிழை மலையாளம் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்வதற்குள் டவுசர் கிழிந்திருக்கிறது.


ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பை மட்டும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேத் ஆக்கருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ் பதிப்பை அவரது 'அம்முவுக்கு' சமர்ப்பித்திருந்தார் என்பதாக நினைவு. கேத் ஆக்கர் தன் உடலையே பரிசோதனையாக்கி, விளைவுகளை எழுத்தாக்கியவர் என்று சாரு குறிப்பிட்டார். ராஸலீலா படித்தவர்கள் சாருவும் அத்தகைய எழுத்தாளர் தான் என்பதை உணர முடியும். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பிரதியை வாசித்த அமெரிக்கர்கள் சிலர் சாரு நிவேதிதா ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்பிரதி மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள் நூற்றி சில்லறை தான் இருந்ததாம். ஸீரோ டிகிரி மலையாளத்தில் வந்தபின் தீவிர இலக்கிய வெறி கொண்ட மலையாளிகள் தமிழிலும் தீவிர இலக்கியம் குறித்த சில முயற்சிகள் நடந்து வருவதாக அறிந்தார்களாம். ஸீரோ டிகிரிக்கு பின்னர் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை நூற்றாண்டு கால மொழிமாற்ற நூல்களை விட அதிகம் என்று மலையாள எழுத்தாளர் சக்காரியா குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தில் சாருவுக்கான இடம் எதுவென்பதை சக்காரியாவின் அந்த கருத்து திடமாக வெளிப்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக