1 டிசம்பர், 2008

“சமீபத்தில்...” ஸ்கீஸோஃப்ரீனியா!

சில பெருசுகள் 1970களில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூட 'சமீபத்தில்' என்று சொல்லுவது வழக்கம். இது ஒரு வியாதி. மனப்பிறழ்வு. இந்த மனப்பிறழ்வுக்கு பெயர் ஸ்கீஸோஃப்ரீனியா. முரட்டு வைத்தியங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த கருமாந்திர நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. எந்த காரணத்தால் இந்த மனோவியாதி வந்து தொலைத்ததோ அந்தக் காரணத்தை தவிர்த்தால் இதில் இருந்து வெளிப்படலாம். அல்லது மனதுக்கு ப்ரீத்தியான காரியங்களில் ஈடுபட்டாலும் ஸ்கீஸோஃப்ரீனியாவிலிருந்து வெளிவரலாம். இல்லையேல் நாக்கு நமைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு 1008 முறை 'ஸ்கீஸோஃப்ரீனியா' என்று உச்சரித்துப் பழகலாம்.

* - * - * - * - * - * - * - * - * - * - *

தீவிரவாதிகள் குறித்து ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் மிக அதிகமாக இப்போது விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 26க்கு பிறகாக. மிக மிக எளியமுறையில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் அடக்கும் வழியிருக்க ஏன் தான் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் தன் பதவியை ராஜினாமா செய்தாரோ தெரியவில்லை.

எங்காவது தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களை ஒட்டநறுக்க ஆயிரம் யானை பலம் கொண்டவர் தமிழகத்தில் இருக்கிறார். எங்கள் தங்கம் கேப்டன். இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை. தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள். நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு. வீரப்பனை தமிழக போலிசார் சுட்டுக் கொல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிமனிதராக பிடித்த சாதனைக்கும் கேப்டன் சொந்ந்தக்காரர். இப்படிப்பட்ட ஆல்-இன்-ஒன் கமாண்டோ இருக்கிறார். அவரை புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேப்டன் பிஸியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆக்சன் கிங் அர்ஜூனையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒற்றன் படத்தில் கூட ஒண்டியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தவர் அவர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

பூ

"தங்கச்சி மவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னே பொண்ணா பெத்துட்டே. கங்கிராட்ஸ்"
 
"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு கட்ட தங்கச்சியும் ஒரு பொண்ணு பெத்து தரணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்ப வழக்கம்"
 
* - * - * - * - * - * - * - *
 
"ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"
 
"ம்ம்ம்ம்... கொமாரைத் தான் கட்டிப்பேன்!"
 
"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"
 
"பெருசானப்புறம் கொமாரு மாமாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்!"
 
கொமாரு மாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அவளை அடிக்கத் துரத்தினான். அத்தைகள், சித்திகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்ட அவளைப் பிடிக்க இயலாத இயலாமையில் அழுதுகொண்டே, "ம்ம்ம்.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அவளை அதுமாதிரி பேசாம இருக்கச் சொல்லு!"
 
அவனது அழுகை சொந்தங்களுக்கு சிரிப்பை தந்தது, குதூகலத்தை தந்தது. அடிக்கடி அவளை "யாரைக் கட்டிப்பே?" என்று கேட்டு அவனை வெறுப்பேற்றி விளையாடினார்கள்.
 
* - * - * - * - * - * - * - *
 
கொருக்கலிக்கா முந்திரிக்கா விளையாடும்போது சத்தத்தோடும், ராகத்தோடும், "கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ!"
 
நாலு பேர் எதிரில் அவமானப்படுத்தப்பட்ட சீற்றத்தில், "ச்சீ போடி மூக்குச்சளி. உன்னைப் போயி எவன் கட்டிப்பான்?"
 
* - * - * - * - * - * - * - *
 
தென்னை ஓலைகளுக்கு இடையே அவளைப் பார்த்தபோது புதிதாய் தெரிந்தாள். முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் நாணத்தால் சிகப்பிட்டிருந்தது. "கொமாரு மாமா என்னைக் கட்டிக்கோ!" என்று இப்போது அவள் கேட்கமாட்டாளா என்று முதல் தடவையாக ஏங்கினான்.
 
* - * - * - * - * - * - * - *
 
"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"என்ன பேசுறது?"

"சும்மா ஏதாவது பேசேன்"

"ம்ம்ம்ம்... உங்கிட்டே யாராவது 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?"

"செருப்பால அடிப்பேன்"

"............... :-( "

"ஆனா அது என் அத்தை பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்"
 
* - * - * - * - * - * - * - *
 
"அதெப்படி? பெரியவங்களுக்குள்ளே பிரச்சினைன்னா உறவு விட்டுப் போயிடுமா? என் அத்தைப் பையனுக்கு என்னை தூக்கிட்டு போயி கட்டிக்கக் கூட உரிமையிருக்கு!"
 
* - * - * - * - * - * - * - *
 
கடைசியாக அவளை அவளது திருமண வரவேற்பில் பார்த்தான். குமாரு மாமாவை தனியாக கூப்பிட்டு மணமகள் அறையில் ஏதோ பேசினாள். அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தாள். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்ததால். அவள் சோகமாக ஏதோ பேசினாள் என்றாலும் என்ன பேசினாள் என்பது இப்போது அவனுடைய நினைவில் இல்லை. அன்றைய அவனது இரவை மது ஆக்கிரமித்தது.
 
இப்போதும் இதே நகரத்தில் தான் வசிக்கிறாள். அவளது கணவனோடு சவுக்கியமாக. எங்கிருந்தாலும் வாழ்க!
 
* - * - * - * - * - * - * - *
 
தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?
 
கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழ் சினிமா சூழல் 'பூ' போன்ற திரைப்படங்கள் வணிகரீதியிலான வெற்றியினை அடைந்தால் ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப இயலும். இப்படத்தை வெற்றியடையச் செய்வது சினிமா ரசிகர்களின் கடமை. விமர்சிக்க சில விஷயங்கள் இருந்தாலும் பூமாலையை, உன்னதப் படைப்பை கொத்துப்பரோட்டா போட மனதுக்கு இஷ்டமில்லை. உணர்வு குன்றாமல் உணர்ச்சிகளால் தவசிரத்தையோடு நெய்திருக்கிறார் இயக்குனர் சசி.
 
பூ - செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட முழுநீள காதல் கவிதை

28 நவம்பர், 2008

பெய்யெனப் பெய்திடும் மாமழை!

சென்னை முடங்கிக் கிடக்கிறது. ஒருநாள் மழையையே தாங்கமுடியாத லட்சணத்தில் இருக்கும் மாநகரத்தில் நான்கு நாட்கள் பேய்மழை பெய்தால் என்னவாகும்? வழக்கம்போல மடிப்பாக்கமும், வேளச்சேரியும் வெனிஸ் ஆகிவிட்டது. எப்போதும் அரசியல்வாதிகளை கண்டமேனிக்கு திட்டும் சென்னைவாசிகளுக்கு இப்போதுதான் அரசியல்வாதிகளின் அருமை புரிகிறது. குறிப்பாக திராவிட அரசியல்வாதிகள். அரசு எந்திரங்களை நம்பாமல் தன்னார்வலர்களாக மீட்புப்பணிகளில் அவர்கள் காட்டும் வேகம். இந்த மீட்புப்பணிகளுக்கு பின்னே அவர்களுக்கு ஆயிரம் அரசியல் ஆதாயங்கள் இருக்கட்டும். பசித்த வாய்க்கு சரியான நேரத்தில் சோறுபோடுகிறார்களே? வாழ்க. வாழ்க. வடசென்னையை அதிமுகவும், தென்சென்னையை திமுகவும் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றநாட்களில் அரிவாளும், ஆசிட்டுமாக ஒருத்தரையொருத்தர் துரத்திக் கொள்பவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தளபதி எங்கே எப்போது திடீரென்று ரெயின்கோட்டில் பிரசன்னமாவார் என்று தெரியாமல் திமுகவினர் 24 மணிநேரமும் ஆக்‌ஷனில் இருக்க வேண்டிய நிலை. அம்மா வருவாரா வரமாட்டாரா என்று தெரியாவிட்டாலும் ‘அம்மா வெள்ளநிவாரணம்' என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டுகளோடு அதிமுகவினர். புறநகர் பகுதிகளில் காங்கிரஸாரும், பாஜகவினரும் குத்தும் கோமாளிக்கூத்து. தேசியக்கட்சிகளில் பதவி வாங்குவது மிக சுலபம். பேரிடர் காலங்களில் பத்திரிகையில் போட்டோ வந்தால் போதும். தேமுதிக சென்னையில் காணவே காணோம். கேப்டன் படப்பிடிப்பில் பிஸியோ? வாராவாரம் ஆனந்தவிகடனில் மட்டும் நாற்று நடுகிறார், நெசவு இயந்திரத்தை மிதிக்கிறார், காய்கறி கடையில் வியாபாரம் செய்கிறார். திருமாவேலரே நியாயம்தானா? கேப்டனை மடிப்பாக்கத்துக்கு படகில் கூப்பிட்டு வந்து போட்டோ எடுத்திருக்கக் கூடாதா? கோயம்பேடு - கத்திப்பாரா நூறடி சாலை இவ்வளவு வெள்ளத்தை இதுவரை கண்டதில்லை. ஜி.என்.செட்டி ரோடு ஸ்விம்மிங் பூலை விட ஆழமாக இருக்கிறது. நகரின் மழைநீர் வடிகால்கள் இரண்டுமாதங்களுக்கு முன்பு தான் தூர் வாரப்பட்டது. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு வெள்ளம்? கடல்நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் வெள்ளம் வடிவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். க்ளோபல் வார்மிங்? சில பெருசுகள் அமாவாசை நெருங்கும் நேரத்தில் கடல்நீர் மட்டம் உயர்வது சகஜம் என்று சால்ஜாப்பு சொன்னாலும் பயமாக இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டில் மாலத்தீவு இருக்காதாம். சென்னை இருக்குமா? * - * - * - * - * - * - * ஹாலிவுட் படங்களில் பார்த்தது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் இரண்டு மூன்று நாட்களாக பார்க்க முடிகிறது. மும்பை! போனவாரம் வாசித்த ‘என் பெயர் எஸ்கோபர்' நூலில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. தீவிரவாதம் ஏன்? தீர்வு என்ன? என்று பா.ராகவன் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது இந்தியில் மொழிபெயர்த்து டெல்லியில் விற்றால் தேவலை. நேற்று மும்பை மேரி ஜானும், வெட்னஸ்டேவும் டிவிடியில் பார்த்தேன். * - * - * - * - * - * - * சன் பிக்சர்ஸின் ‘தெனாவட்டு' படத்தில் ஒரு காட்சி. கைலாசம் சென்னையில் நெ.1 தாதா. அவரது மகன் சந்தோஷ் பார்க்கும் பெண்களையெல்லாம் பெண்டாளத் துடிப்பவன். ஹீரோ ஜீவாவின் ஃபிகர் மீதே கையை வைக்கும் சந்தோஷை கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் போட்டு மழையில் புரட்டியெடுக்கிறார் ஜீவா. நூற்றுக்கணக்கான பொதுமக்களோடு ஏ.சி.பி. சாய்குமாரும் வேடிக்கை பார்க்கிறார். ஒரு ஆட்டோக்காரர் ஏ.சி.பி.யை பார்த்து “இப்படி போட்டு ஒரு ஆளை புரட்டியெடுக்கிறானே? தடுக்கக்கூடாதா?” என்று கேட்கிறார். “தப்பு நடந்தா தட்டிக் கேட்குறது மட்டுமில்லை, நல்லது நடந்தா அதை தடுக்காம கண்டும், காணாமலும் போறது கூட போலிஸ்காரன் வேலைதான்!” என்கிறார் ஏ.சி.பி. :-))))) படத்தில் இதுபோல Current Affairsகளுடன் பொருத்திப் பார்க்க ஏராளமான காட்சிகள் உண்டு. எச்சரிக்கை : படம் செம மொக்கை. அரவாணிகளை நல்லவிதமாக காட்டுகிறேன் பேர்வழி என்று இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்திருக்கிறார் இயக்குனர். * - * - * - * - * - * - * முந்தாநாள் மாலை, வெள்ள மீட்புப்பணிகளில் (?) தீவிரமாக ஈடுபட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தேன். சோஃபாவில் அப்படியே விழுந்தபோது தாகம் எடுத்தது. மின்வெட்டு. அருகில் மிரண்டா பாட்டிலில் தண்ணீர் இருந்தது. மூடியை திறந்து அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டேன். இதுவரை என் நாக்கு சுவைத்திராத தீவிர உப்பு. அமில நெடி. மார்பெல்லாம் எரிந்தது. ஓடிச்சென்று பாத்ரூமில் வாந்தியெடுத்தேன். அமிலநெடி வயிற்றுக்குள் தீயாய் பரவியதை உணர்ந்ததால் கையை விட்டு அம்மாவிடம் குடித்த பால் உட்பட மொத்தமாக வாந்தியெடுத்தேன். தலையெல்லாம் கிறுகிறுத்தது. ஒரு ஃபுல் ஓல்டுமாங்கை அப்படியே கல்பாக அடித்தது போல போதை. முகம் கழுவிவிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டில் விசாரித்தேன். பாட்டிலில் வைத்து இருந்தது துணிதுவைக்க பயன்படுத்தும் ‘ஆலா' மாதிரியான ஏதோ ஒரு வஸ்துவாம். நல்லவேளை பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட், கீசிட் எதையும் அங்கு வைத்திருக்கவில்லை.

26 நவம்பர், 2008

என் பெயர் எஸ்கோபர்!

எஸ்கோபரை உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளலாம். தில் - திகில் - திடுக்கிடலான ஆசாமி. சர்வதேச போதை நெட்வொர்க்கின் காட்ஃபாதர். சுண்டக்கஞ்சி காச்சப்படுவதிலும் அவருக்கு பங்கிருந்ததா என்று தெரியவில்லை. கொலம்பியா அவரது வேர். தென்னமெரிக்கா முழுவதும் அவரது விழுதுகள். அகில உலகத்துக்கும் ‘கோகெய்ன்' சப்ளை செய்த புண்ணியவான். உயிரோடிருந்திருந்தால் சந்திரயன் மூலமாக சந்திரனுக்கும் போதையை கடத்தியிருப்பார். மாஃபியாக்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தருவதாக இருந்தால் முதலில் இவருக்கு தந்திருக்க வேண்டும். நூலாசிரியர் பாரா நூல் முழுக்க 'அவன்', ‘இவன்' என்று ‘ன்' விகுதியிலேயே குறிப்பிடுகிறார். 'என் பெயர் எஸ்கோபர்' நூலை வாசித்த வாசகனுக்கோ எஸ்கோபர் மீது ஏற்படும் ப்ரேமையால் ‘ன்'னென்று விளித்த பாரா மீது பெருங்கோபம் ஏற்படுகிறது. பாருங்கள் எஸ்கோபர் என்ற பெயரில் கூட ‘ர்' விகுதி இயற்கையாகவே அமைந்திருக்கிறது. 1989ஆம் ஆண்டு உலகின் ஏழாவது பெரிய பணக்காரனாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காட்டப்படுபவர் பாப்லோ எமிலியோ எஸ்கோபர். அப்போது அவருக்கு வயது ஐம்பதையெல்லாம் கடந்துவிடவில்லை ஜெண்டில்மேன். ஜஸ்ட் ஃபார்ட்டி. பில்கேட்ஸெல்லாம் கஷ்டப்பட்டு சாஃப்ட்வேர் விற்று சம்பாதித்தார். எஸ்கோபர் மிக எளிதாக போதையை விற்றார். பணம் சம்பாதித்தார். இன்றைய தேதியில் பல போதைபொருள் மாஃபியாக்கள் எஸ்கோபரை விட அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இந்த பிசினஸை இண்டர்நேஷனல் லெவலில் ஒரு கார்ப்பரேட் பிசினஸ் மாதிரி கட்டுக்கோப்புடன் நடத்திய முதல் ‘தொழில்' அதிபர் எஸ்கோபர் என்பதாலேயே அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம். கார்திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் எஸ்கோபர். திருட்டு அலுத்தது. சீக்கிரம் பணக்காரனாக துடித்தார். அப்போது கொலம்பியாவில் அறிவிக்கப்படாத தேசியத்தொழிலாக இருந்த கோகெய்ன் விற்பனையை கையில் எடுத்துக் கொண்டார். ஒரு மாஃபியாவிடம் அடியாளாக சேர்ந்தவர், குறுகிய காலத்தில் அமைதிப்படை அமாவாசை மாதிரி தடதடவென முன்னேறினார். முப்பது வயதுக்குள்ளாகவே உலகின் நெ.1 போதை மாஃபியா. நாற்பத்து மூன்று வயதிலேயே எல்லா புகழையும் தனக்குள் புதைத்துக்கொண்டு ஒரு துப்பாக்கித் தோட்டாவில் மண்டையைப் போட்டார். எஸ்கோபர் ஆட்டையில் இருந்த அந்த இருபது வருடங்களும் கொலம்பியாவின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத வருடங்கள். ”என் பெயர் எஸ்கோபர்” நூல் ஒரு க்ரைம் நாவலுக்கே உரித்தான த்ரில்லோடு தொடங்குகிறது. வரலாற்றை இதுபோல க்ரைம்நாவல் சுவாரஸ்யத்தோடு தொடங்கக் கூடாதென்று இ.பி.கோ.வில் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? கோழி குருடா இருந்தாலென்ன, முடமாயிருந்தாலென்ன? பிரியாணி டேஸ்ட்டா இருந்தால் போதாதா? 'கையிலே காசு, வாயிலே கோகெய்ன்' மாதிரியான பாராத்தன டயலக்குகள் மண்வாசனை தருகிறது. பிதாமகன் கஞ்சா வில்லனின் கதையை படிப்பதுபோல நேட்டிவிட்டி டச்சோடு நூலில் ஒன்றமுடிகிறது. த்ரில் மற்றும் திகிலோடு தொடங்கும் முதல் அத்தியாயம் சடக்கென்று கொலம்பியாவின் வரலாற்றைப் பேசும்போது திடுக்கிட வைக்கிறது. அமெரிக்காவுக்கு யாருமே ஆப்பு வைக்க வேண்டியதில்லை, அதுவே சி.ஐ.ஏ. மூலமாக வைத்துக்கொள்ளும். கொலம்பியாவின் போதை பிசினஸ் விவகாரத்திலும் அமெரிக்கா தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டதை புன்முறுவலோடு ரசிக்க முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் முழுக்க நகைச்சுவை சுலபா புயல் மழை மாதிரி கொட்டோகொட்டுவென்று கொட்டி தீர்க்கிறது. நம்புங்கள். சத்தியமாக நூறு சதவிகிதம் எந்த கலப்புமில்லாத அக்மார்க் நகைச்சுவை. ஒருகட்டத்தில் நொந்துப்போன அமெரிக்க அதிபர் கொலம்பிய அரசுக்கு எழுதுவதாக பாரா சித்தரிக்கும் கடிதம் சரவெடி. ரீகன் எழுதும் அக்கடிதம் இப்படித் தொடங்குகிறது. “ஐயன்மீர்! உமக்கு சர்வமங்களம் உண்டாகட்டும்”. இப்படி முடிக்கிறார். “நமது நட்பு காலம் கடந்து நிற்க எல்லாம் வல்ல எம்பெருமான் இயேசுகிறிஸ்து அருள் பாலிப்பாராக. ஆமென்!” இம்சை அரசன் தனது வாயிற்காப்பாளனுக்கு தரும் தண்டனைகள் உங்களுக்கு அதிர்ச்சியை தந்ததா? இல்லை ரசிக்க வைத்ததா? எஸ்கோபர் செய்த கொலைகளை நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ரசிக்க செய்வான். நம் சட்டக்கல்லூரி சம்பவமெல்லாம் எஸ்கோபரை பொறுத்தமட்டில் ஜூஜூபி. வழிக்கு வந்தவரை வாழவைப்பதும், சரிபடாதவரை போட்டுத்தள்ளுவதும் எஸ்கோபரின் பாணி. எத்தனை பேரை சாகடித்திருப்பான் என்ற லிஸ்ட் சித்திரகுப்தனிடம் தான் இருக்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுபோட்டு, எமதர்மனிடம் அனுமதி வாங்கி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி மாதிரி போதை மாஃபியாக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து போதைக்கூட்டணி அமைத்தது, அரசியலில் குதித்து அதகளப்படுத்தியதெல்லாம் எஸ்கோபர் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள். எஸ்கோபருக்கு இருந்த மக்கள் செல்வாக்குக்கு அவர் அந்நாட்டின் அதிபராகவே ஆகியிருக்க முடியும். நாயகன், காட்ஃபாதர் மாதிரியான கேரக்டர். சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கு அவரை அந்நாட்டு மக்கள் மதித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் கொலம்பிய போலிசாரிடம் எஸ்கோபர் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே எஸ்கோபரை அரணாக சுற்றி நின்று பாதுகாத்தது என்பது வரலாற்றில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய பெட்டிச்செய்தி. மேலவை உறுப்பினராக வலுக்கட்டாயமாக மாறிய எஸ்கோபர் மேலவையில் பேசிய முதல் பேச்சில் “போதை வர்த்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று பேசுவது டென் தவுசண்ட் வாலா. நம்மூரு மாதிரியே கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது மாதிரி 1970களில் துப்பாக்கியெடுத்த எஸ்கோபர் 1992ல் சுட்டுக்கொல்லப்படுகிறார். கிராதகன் ஒழிந்தான் என்று வாசகனின் மனம் துள்ளாது. மாறாக நேசித்த ஒரு சிநேகிதனை என்கவுண்டரில் இழந்த சோகம் மனதை கவ்வுகிறது. சம்பிரதாயமாக கொலம்பியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் சீரியஸாக சொல்லி நூல் முடிகிறது. இந்நூலுக்காக நூலாசிரியர் பா.ராகவன் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்? எத்தகைய உழைப்பை முதலாக்கியிருப்பார் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம். எப்போதோ ஒருமுறை ‘இன்று தமிழில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்' என்று இவரைக் குறிப்பிட்டிருந்தேன். பாராவின் ஒவ்வொரு எழுத்தும், அதன் பின்னால் இருக்கும் உழைப்புக்காக கொண்டாடப்பட வேண்டியதும், விற்கப்பட வேண்டியதும் நியாயமானதே. கொலம்பியா மேப்பை இந்நூலில் அசால்ட்டாக போடிநாயக்கனூருக்கு வழிசொல்வது மாதிரி கையாண்டிருக்கிறார். போதை பிஸினஸில் புழங்கும் பணம், எந்தெந்த நாடுகளில் புழக்கம் அதிகம் போன்ற செய்திகள் அட்சரம் பிசகாத அபார புள்ளிவிவரங்கள். ஒரு திரைக்கதைக்கான சுவாரஸ்யம் நூலின் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. பின்னிணைப்பில் இப்புத்தகம் எழுத ரெஃபரென்ஸுக்கு பாரா எடுத்துக்கொண்ட புத்தகங்களையும், இணைப்புகளையும் நாம் யாராவது வாசித்திருந்தால் இன்னேரம் கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தீவிர வாசிப்பாளரென்றால் மூன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சாக இப்புத்தகத்தை வாசித்துவிடலாம். ஒவ்வொரு இல்ல நூலகத்திலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய நூல். அடாதமழை விடாது அடித்துக்கொண்டிருந்த நேற்றைய இரவை இந்நூல் எனக்கு சுவாரஸ்யமாக்கியது. தடங்கலின்றி நூலை வாசிக்க வகைசெய்த ஆற்காட்டாருக்கு கோடி நன்றி. நூலின் பெயர் : என் பெயர் எஸ்கோபர் நூல் ஆசிரியர் : பா.ராகவன் விலை : ரூ.90 பக்கங்கள் : 224 வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும். நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப்பி 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

25 நவம்பர், 2008

இரும்பு குதிரைகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக இந்நாவலை வாசித்தபோது பாலகுமாரன் மீது செம கிறுகிறுப்பு இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை சிலாகித்து படித்தேன். காதலன், பாட்ஷா மாதிரியான சூப்பர்ஹிட் படங்களுக்கு வேறு வசனம் எழுதி பாலகுமாரன் என்னை ஆக்கிரமித்திருந்தார். ஒரு மனிதருக்கு ஒன்றுதான் மாஸ்டர்பீஸாக இருக்கமுடியும். பாலகுமாரனுக்கோ இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள் என்று இரண்டு மாஸ்டர்பீஸ்கள். என்னைப் பொறுத்தவரை 'பழமுதிர்க் குன்றம்' அவரது மாஸ்டர்பீஸ்களுக்கெல்லாம் மாஸ்டர்பீஸ். துரதிருஷ்டவசமாக அது சூப்பர்ஹிட் ஆகவில்லை. ஏதோ ஒரு ஆங்கிலநாவலை தழுவி எழுதியிருந்தார்.
பாலகுமாரனிடம் சிருங்கார வர்ணனைகள் குறைவு. எழுத்துக்கள் எளிமை. இந்த இரண்டையும் ப்ளஸ் பாயிண்டென்று சொன்னால், பெய்யெனப் பெய்யும் அவரது அட்வைஸ் மழையை மைனஸ் பாயிண்ட் என்று சொல்லலாம். கருத்து கந்தசாமி மாதிரி வாழ்க்கையைப் போதிக்க பாலகுமாரன் ஆரம்பித்தால் சரியாக இரண்டு பக்கங்களை இரக்கமேயின்றி திருப்பிவிடுவேன். டீனேஜில் இருந்தது போலவே இப்போது அட்வைஸ் என்றால் கசக்கிறது. ஏற்கனவே ஏதாவதொரு நாவலிலோ, தொடரிலோ சொன்னதை தான் வேறு வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லுவார். திடீரென யோகா, ஆன்மீகம் என்று நியூஸ் ரீல் பாணியில் டாக்குமெண்டரியும் ஓட்டிவிடுவார்.
ஏனோ இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் பாலகுமாரனை வாசித்தேயாக வேண்டும் என்றொரு வெறிவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக கூட மெர்க்குரிப்பூக்களை மீள்வாசிப்பு செய்திருந்ததால் இம்முறை இரும்பு குதிரை. இரும்புக்கு பக்கத்தில் 'க்' இருக்காது. 'க்' போட்டால் ஸ்லோ ஆகிவிடுமாம். குதிரையென்றால் அசுரவேகத்தில் பறக்க வேண்டுமென்பதால் 'க்' மிஸ்ஸிங்.
கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்ட் தான் பாலகுமாரனின் பலம். நாயக்கர், முதலியார், ராவுத்தர், காந்திலால், விஸ்வநாதன், தாரிணி, கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய், வடிவேலு, நாணு அய்யர், காயத்ரி என்று ஏகப்பட்ட கேரக்டர்களை சரம் சரமாக இரும்புகுதிரைகளில் தொங்கவிட்டிருப்பார். ஒவ்வொரு கேரக்டரையும் சிற்பியின் நுணுக்கத்தோடு பேனாவால் செதுக்கு செதுக்கென்று செதுக்கியிருப்பார். விஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை ஒரு சில அத்தியாயங்களிலேயே உணர்ந்துவிட முடியும்.
மனிதர் டாஃபேயில் இருந்தபோது நேர்ந்த அனுபவங்களை இரும்பு குதிரைகளாக ஓடவிட்டிருப்பார். லாரியும், லாரியை சார்ந்த மனிதர்களும், சம்பவங்களும் தான் கதை. இது கல்கியில் தொடராக வந்தது என்று அப்பா ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு. ஒரு தொடருக்குரிய அம்சங்கள், தொடரும் போடும்போது வைக்கவேண்டிய குட்டி சஸ்பென்ஸ் எதுவுமே இரும்பு குதிரைகளில் இல்லை. தொடர்கதை என்று சொல்ல இதில் தொடர்ச்சியான கதை கூட கிடையாது. ஒட்டுமொத்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட சாருவின் ராஸலீலா மாதிரி.
விஸ்வநாதன் கேரக்டரை ரொம்ப புனிதனாக காட்டியிருப்பார். விஸ்வநாதனுக்கு கிடைத்தமாதிரியான வாய்ப்புகள் கிடைத்தால் நான் கூட அயோக்கியனாகி விடுவேன். பாலியல் சேவகரான வசந்தாவோடு ஓரிரவில் பேசிக்கொண்டேயிருப்பார். நெற்றியில் லேசாக முத்தமிடுவார். 'இந்த குழந்தை வாழ்வில் எல்லா வளமும் பெறவேண்டும்' என்று இறையை வேண்டுவார். அடிக்கடி குதிரை கவிதை எழுதுவார். 'பனிவிழும் மலர்வனம்' பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார். அலுவலகத்தில் நல்ல அதிகாரி. யோசித்துப் பார்த்தால் ஆர்ட்ஃபிலிம் ஹீரோ மாதிரியான கேரக்டர்.
நாவலில் அடிக்கடி வரும் குதிரைகவிதைகளை முதல்தடவை படித்தபோதே பொருள்புரியாமல் நொந்துவிட்டேன். அது மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற குழப்பம் வேறு. இம்முறை வாசிக்கும்போது கவனமாக குதிரைக்கவிதைகளை தவிர்த்தே வாசித்தேன். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இத்தனைக்கும் குதிரைக்கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம்.
ஒரேநாளில் இரண்டு லாரிகளை இழந்துவிடும் ராவுத்தர், லாரித்தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் நஷ்டமடையும் காந்திலால், பாலியல் சேவகர் வசந்தா, இன்னொரு பாலியல் சேவகர் கவுசல்யா, வடிவேலு என்று எல்லா கேரக்டர்களையுமே லேசாக கோடுபோட்டுக் காட்டாமல் பின்னணிக் கதைகளை நேரில் பார்ப்பதுபோல படம்பிடித்துக் காட்டும் ஆற்றல் அப்போது பாலகுமாரனுக்கு இருந்திருக்கிறது. நாணு அய்யர் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவளது இரண்டாவது மகள் காயத்ரி அவருடைய ஜெராக்ஸ். கல்யாணம் வேணாம், எனக்கு குழந்தை மட்டும் குடு என்று விஸ்வநாதனை தைரியமாக கேட்பவள். மகளுடைய ஆசை நியாயமானதுதான் என்று நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். பாலச்சந்தர் ஏன் இந்த கேரக்டர்களை சினிமாவில் கொண்டுவராமல் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.
லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை எளிமையாக எழுதியிருப்பார். ஒரு லாரித் தொழிலாளி கூட இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம். பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகே இவ்வளவு நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். இவ்விஷயத்தில் பாலகுமாரனின் உழைப்பு கொண்டாடப்பட வேண்டியது.
இரும்பு குதிரைகள் - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு எக்ஸ்பிரஸ்.