"தங்கச்சி மவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னே பொண்ணா பெத்துட்டே. கங்கிராட்ஸ்"
"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு கட்ட தங்கச்சியும் ஒரு பொண்ணு பெத்து தரணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்ப வழக்கம்"
* - * - * - * - * - * - * - *
"ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"
"ம்ம்ம்ம்... கொமாரைத் தான் கட்டிப்பேன்!"
"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"
"பெருசானப்புறம் கொமாரு மாமாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்!"
கொமாரு மாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அவளை அடிக்கத் துரத்தினான். அத்தைகள், சித்திகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்ட அவளைப் பிடிக்க இயலாத இயலாமையில் அழுதுகொண்டே, "ம்ம்ம்.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அவளை அதுமாதிரி பேசாம இருக்கச் சொல்லு!"
அவனது அழுகை சொந்தங்களுக்கு சிரிப்பை தந்தது, குதூகலத்தை தந்தது. அடிக்கடி அவளை "யாரைக் கட்டிப்பே?" என்று கேட்டு அவனை வெறுப்பேற்றி விளையாடினார்கள்.
* - * - * - * - * - * - * - *
கொருக்கலிக்கா முந்திரிக்கா விளையாடும்போது சத்தத்தோடும், ராகத்தோடும், "கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ!"
நாலு பேர் எதிரில் அவமானப்படுத்தப்பட்ட சீற்றத்தில், "ச்சீ போடி மூக்குச்சளி. உன்னைப் போயி எவன் கட்டிப்பான்?"
* - * - * - * - * - * - * - *
தென்னை ஓலைகளுக்கு இடையே அவளைப் பார்த்தபோது புதிதாய் தெரிந்தாள். முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் நாணத்தால் சிகப்பிட்டிருந்தது. "கொமாரு மாமா என்னைக் கட்டிக்கோ!" என்று இப்போது அவள் கேட்கமாட்டாளா என்று முதல் தடவையாக ஏங்கினான்.
* - * - * - * - * - * - * - *
"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"
"என்ன பேசுறது?"
"சும்மா ஏதாவது பேசேன்"
"ம்ம்ம்ம்... உங்கிட்டே யாராவது 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?"
"செருப்பால அடிப்பேன்"
"............... :-( "
"ஆனா அது என் அத்தை பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்"
"என்ன பேசுறது?"
"சும்மா ஏதாவது பேசேன்"
"ம்ம்ம்ம்... உங்கிட்டே யாராவது 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?"
"செருப்பால அடிப்பேன்"
"............... :-( "
"ஆனா அது என் அத்தை பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்"
* - * - * - * - * - * - * - *
"அதெப்படி? பெரியவங்களுக்குள்ளே பிரச்சினைன்னா உறவு விட்டுப் போயிடுமா? என் அத்தைப் பையனுக்கு என்னை தூக்கிட்டு போயி கட்டிக்கக் கூட உரிமையிருக்கு!"
* - * - * - * - * - * - * - *
கடைசியாக அவளை அவளது திருமண வரவேற்பில் பார்த்தான். குமாரு மாமாவை தனியாக கூப்பிட்டு மணமகள் அறையில் ஏதோ பேசினாள். அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தாள். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்ததால். அவள் சோகமாக ஏதோ பேசினாள் என்றாலும் என்ன பேசினாள் என்பது இப்போது அவனுடைய நினைவில் இல்லை. அன்றைய அவனது இரவை மது ஆக்கிரமித்தது.
இப்போதும் இதே நகரத்தில் தான் வசிக்கிறாள். அவளது கணவனோடு சவுக்கியமாக. எங்கிருந்தாலும் வாழ்க!
* - * - * - * - * - * - * - *
தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?
கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழ் சினிமா சூழல் 'பூ' போன்ற திரைப்படங்கள் வணிகரீதியிலான வெற்றியினை அடைந்தால் ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப இயலும். இப்படத்தை வெற்றியடையச் செய்வது சினிமா ரசிகர்களின் கடமை. விமர்சிக்க சில விஷயங்கள் இருந்தாலும் பூமாலையை, உன்னதப் படைப்பை கொத்துப்பரோட்டா போட மனதுக்கு இஷ்டமில்லை. உணர்வு குன்றாமல் உணர்ச்சிகளால் தவசிரத்தையோடு நெய்திருக்கிறார் இயக்குனர் சசி.
பூ - செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட முழுநீள காதல் கவிதை
A Good Love Story By SASI.
பதிலளிநீக்கு