16 டிசம்பர், 2008

பாவி ஆசிரியர் குழுவின் கும்தலக்கடி கும்மாங்குத்து!


ஒவ்வொரு இஷ்யூ முடிக்கறதுக்குள்ளேயும் தாவூ தீர்ந்து டவுசர் கிழிந்துவிடுகிறது மன்னனுக்கு. மன்னன் பாவியின் ஆசிரியர். தமிழ் சமூகத்தின் முழுசாக ஃபில் அப் ஆகாத முகவரி பாவி. குவளவிழா கண்ட வார இதழ். வாராவாரம் யாரையாவது வாரும் ஒரு வார இஷ்யூவை தயார் செய்ய மன்னன் குழு குத்தாட்டம் போடும் நாக்க முக்கா...

மன்னன் : என்னத்தை தலையங்கம் எழுதி.. என்னத்தை கிழிக்கிறது? போனவாரம் வரைக்கும் தலைவரை காய்ச்சிக்கினு இருந்தோம். இந்த வாரம் யூ டர்ன் அடிக்கச் சொல்லி மேலிடத்து ஆர்டர்...

கவிப்ரகாஷ் : பேசாம வழுக்கைத் தலையர்கள் திருப்பதியில் மொட்டை அடிப்பது சம்பந்தமா தலையங்கம் எழுதிருவோமா? ஜாவியில் இருந்தப்போ இப்படித்தான் ஒரு தடவை வழுக்கை ஸ்பெஷல் போட்டோம். கலைஞர், சோன்னு எல்லாரோட இண்டர்வ்யூம் நைண்டீன் எய்ட்டி நைனிலே நான் தான் எடுத்தேன்.

சதன் : சூப்பர் ஐடியா. சோ சுருள் சுருள் முடியோட மொட்டை அடிக்க சலூன்லே உட்கார்ந்திருக்கிறா மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டு தந்துடறேன். (வெத்தலையை குதப்பிக்கொண்டு கிஜய் டிவி ஆபிஸுக்கு கெளம்புகிறார்)

(சதன் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு) கரன் : அவுரு ஏற்கனவே மொட்டை தான் சார். வேணுமின்னா கலைஞருக்கு மொட்டை போட்டு நான் வரைஞ்சி தள்ளிடறேன்.

சூச்சூப்பையன் : ஓக்கே. ஒரு சலூன்கடைக்கு கலைஞர், ஜெயலலிதா, பாரதிராஜா, வைகோ, மணிரத்னம், முடிவெட்டிக்க வர்றாங்க. சலூன்லே ரண்டக்கா.. ரண்டக்கா தான். அவசரமா கெளம்பணும். அம்பத்தூர்லே ஒரு ப்ரொடியூசரை பார்க்கணும்.

மன்னன் (டென்ஷனாகி) : எதையாவது சென்சேஷனலா பண்ணனும்யா. ஜல்லியடிச்சி, ஜல்லியடிச்சி ஜன்னி வந்துடும் போலிருக்கே. எவ்ளோ நாளைக்கிய்யா படத்தை போட்டு பைசா பண்ணுறது?

சீ.ரிவக்குமார் : கீழ்ப்பாக்கத்துலே நரிக்குறவர்கள் கேம்ப் போட்டிருக்காங்க. அவங்களோட ஒருநாள் வாழ்க்கையை பதிவு செய்வோமா?

உ.ஆ.க்களில் ஒருவர் : பதிவு செய்யறதுக்கு இதென்ன வாரணம் ஆயிரம் பாட்டா?

சாரதிதம்பி : மீனவர்கள் அவலத்தை படம் புடிச்சி காட்டுவோம்.

காஜசேகரன் : ஆமா. அந்தமான் போயி அட்டகாசமா துள்ளிக் குதிக்கிற மீனையெல்லாம் படம் புடிச்சிட்டு வந்துடறேன். அலவுன்ஸ் கொடுங்க பாஸூ.

சுமேஷ் சைத்யா : திண்டுக்கல் சாரதி ஆடியோ சிடி ஓசியிலே அனுப்பியிருக்கானுங்க. எவ்ளோ நாளைக்கு தான் ஆடியோவையே கேட்டு கேட்டு ஆய் போறது. உருப்படாத பய புள்ளைங்க எழுதற ப்ளாக்குங்களை ஒருநாளைக்கு நானூறு வாட்டி பார்க்குறேன். ஏதாவது அஜக்கு மஜக்கா வேலை கொடுங்கய்யா. அசத்திப்புடறேன்.

”ஆளாளுக்கு வூடு கட்டுறானுங்களே?” மன்னன் நொந்துப்போய் யோசனையில் ஆழ்கிறார்.

கா.நதிர்வேலன் : புதுசா ஒரு பொண்ணை ஆனந்தம் ஆரம்பமிலே இண்ட்ரட்யூஸ் பண்ணுறாங்க. நேர்லே போய் பார்த்து ஜொள்ளிட்டு 'டக்கரு ஃபிகரு, டிக்கரு ஷாட்'னு கலர் கலரா கட்டுரை போட்டுடலாமா பாஸ்?

பை.மாரதிராஜா : மொக்கைப்பட ஹீரோ ஒருத்தன் மாட்டியிருக்கான். காஜசேகரன் அண்ணன் கூட வந்தாருன்னா ‘மொக்கைப்பட ஹீரோ ஆல்பம்'னு நாலு பக்கத்தை ரொப்பிடுவேன்.

உ.ஆ.க்களில் மற்றொருவர் : ரொப்புறதுக்கு இதென்னா பக்கெட்டா?

குருமாவேலன் : கேப்டனோட தமிழ்நாட்டை சுத்தி போரடிக்குது. ராகுல்காந்தியோட அமேதிக்கு போவட்டுமா?

மன்னன் : அடுத்த வாரம் சுமுதம் என்னா எக்ஸ்க்ளூசிவ் போடுறான்னா யாராவது விசாரிச்சீங்களாய்யா?

சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவர் : அவங்களுக்கின்னா கே செக்ஸு, லெஸ்பியன் செக்ஸு, அனிமல் செக்ஸுன்னு ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் இருக்கு. மூஞ்சை மட்டும் மறைச்சி போட்டோ போட்டு.. போட்டு தாக்கிடுவாங்க..

மார்க்கெட்டிங்கில் இருந்து மன்னன் சாருக்கு போன் : சார் தங்கம் விலை உசந்துடிச்சி. பளிச் கமெண்டுக்கெல்லாம் இனிமே தங்கக்காசு கட்டுப்படி ஆவாது. பித்தளைக் காசு தான்னு அறிவிச்சிடுங்க.

மன்னன் : அதெல்லாம் பிரச்சினையில்லை. அலுமினியக் காசுன்னு சொன்னாக்கூட ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துரும்.

டென்ஷனோடு டீமை நோக்கி திரும்ப, ஏரியாவில் டென்ஷன் எக்கு தப்பாகிறது.

சுமேஷ் சைத்யா : புள்ளிகள் மாதிரி ஜல்லிகள் ஆரம்பிக்கலாம். எங்க வீட்டு முன்னாடி கார்ப்பரேஷன் நிறைய ஜல்லி கொட்டியிருக்கான்.

குருமாவேலன் : திராவிடம் நீர்த்தது, திராவகம் இனித்ததுன்னு எட்டு பக்கத்துக்கு எடக்கு மடக்கா எழுதறேன்.

பா.வி. விமர்சனக் குழு : தேவி தியேட்டருலே புதுசா இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கிற பெப்பர் கார்ன் சூப்பர். விலைதான் கொஞ்சம் அதிகம்.

கவிப்ரகாஷ் : மெலட்டூர் நடராசன் முப்பது பக்கத்திலே ஒரு சிறுகதை அனுப்பியிருக்காரு..

சீ.ரிவக்குமார் : பழங்குடி மக்களின் வாழ்வியல் தொடர்பா...

கந்தினி : எங்க ஊர்லே ஒரு வேப்பமரம் இருந்தது. அய்யோ.. அதோட இலையெல்லாம் பச்சையா இருக்கும்...

உ.ஆ.க்களில் இன்னொருவர் : சருதனோட பாஸ்போர்ட் வந்துருக்கு.

மன்னன் : வெரிகுட். இந்த வாரம் என்ன மேட்டர் எழுதியிருக்காரு?

அதே உ.ஆ. : நாசமாப் போச்சி. மனுஷன் ஏதோ ஞாபகத்துலே போனவருஷம் பாஸ்போர்ட் ஆபிஸில் அவரெடுத்த பாஸ்போர்ட்டையே அனுப்பி வெச்சிருக்காரு.

மன்னன் கொஞ்ச கொஞ்சமாக டர்ராகிக் கொண்டிருக்கும் போது எம்.டி. ரீனிவாசனிடமிருந்து போன் : ஜாநிக்கு சுமுதத்துலே லீசு முடிஞ்சிருச்சாம். மறுபடியும் நம்மகிட்டே லீசு எடுத்து 'சோ' பக்கங்கள் எழுதட்டுமான்னு கேட்குறாரு...

'க்ரீம்ஸ் ரோடு ஆத்தா என்னை காப்பாத்து!' என்று கதறியபடியே ஆளுக்கொரு திசையாய் தெரிக்கிறார்கள்.


அருஞ்சொற்பொருள் விளக்கம் : உ.ஆ = உதவி ஆசிரியர் என அறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக